WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்திய "தொழில் வளர்ச்சி" நகரில்
ஆடைத்தொழிலாளர்களின் தற்கொலை அலை
By M. Kailasam and K. Sundaram
31 December 2010
Use this version to print | Send
feedback
இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான தமிழகத்தின்
பெயர்பெற்ற தொழில் வளர்ச்சி நகரான திருப்பூரைச் சுற்றி,
ஏறக்குறைய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அல்லது
அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கடந்த இரண்டாண்டுகளில் தற்கொலை
செய்துகொண்டுள்ளனர். அழுத்தும் வறுமை,
அதிகப்படியான வேலை,
நிரந்தரமற்ற வேலை அல்லது வேலை இழப்பு,
நசுக்கும் கடன்கள்,
மற்றும் வட்டிக்கு கடன்கொடுக்கும் தனியார்கள்
மற்றும் அவர்களது அடியாட்களின் துன்புறுத்தல்கள் போன்றவற்றால்
இவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
தமிழக தலைநகரான சென்னையிலிருந்து வடமேற்கில்
500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருப்பூர்,
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய
ஆடைத்துறையின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின்
சுமார் 90 சதவிகித பருத்தி பின்னலாடை ஏற்றுமதியை
திருப்பூர்தான் உற்பத்தி செய்கிறது. 1988 லிருந்து ஆண்டுக்கு
30 சதவிகிதம் என்ற விகிதத்தில் அதிகரித்து வரும் திருப்பூரின்
மக்கள் தொகை,
அந்நகரை தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும்
நகர்ப்புற பகுதியாக உருவாக்கியுள்ளதோடு,
திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்ப்புற
பகுதியின் மக்கள் தொகையை ஒரு மில்லியனுக்கும்
அதிகமாக்கியுள்ளது.
திருப்பூரின் வருவாய் கொட்டும் ஆடைத்
தொழிற்சாலைகளிலிருந்து பெருஞ்செல்வம் ஈட்டப்படுகிற நிலையில்,
2008ல் 80 பில்லியன் ரூபாயாக ($1.9
பில்லியன் அமெரிக்க டாலர்) இருந்த அதன் வருவாய் 2009ல் 120
பில்லியன் ரூபாயாக ($2.6
பில்லியன்
அமெரிக்க டாலர்) அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ஆடை ஏற்றுமதி மூலமாக கிடைக்கும் மொத்த வருவாயில்
நான்கில் ஒரு பங்கு,
திருப்பூர் மூலமாக கிடைக்கிறது.
ஆனால் இந்த அபார வளர்ச்சி எட்டுவதற்கு காரணமான,
கடும் உழைப்பினை கொடுத்த நூறு ஆயிரக்கணக்கான
ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
நம்பிக்கையற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மிகப்பரிதாபகரமான நிலையில் வாழ்வதால்,
அவர்கள் தற்போது மாதம் ஒன்றுக்கு 40 முதல் 50
என்ற விகிதத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
2010
செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாண்டுகளில்,
910 திருப்பூர் ஆடைத் தொழிலாளர்கள்,
அவர்களது மனைவிகள் அல்லது குழந்தைகள் தற்கொலை
செய்துகொண்டுள்ளதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது. தற்கொலை
செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர்,
அவர்களது வாழ்க்கையின் பிரதானமான வயதான 20
முதல் 40 வயதுடையவர்களாகவே இருந்துள்ளனர்.
கடந்த ஆண்டில்,
நிலைமை மேலும் மோசமடைந்தது. 2009ல் 495 ஆடைத்
தொழிலாளர்களும்,
அவர்களது குடும்பத்தினரும் தற்கொலை செய்துகொண்ட
நிலையில்,
2010ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 350 பேர்
தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் 2010 ஜூன் முதல் ஆகஸ்ட்
வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 250 தொழிலாளர்கள்
தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்த அதிகரிப்பு நிச்சயம் ஆடைத்
தொழிற்சாலைகளில் அதிகரித்து வரும் நெருக்கடியுடன்
தொடர்புடையதாகவே உள்ளது. கடந்த அரையாண்டில் மட்டும் திருப்பூர்
தொழிலாளர்கள் 25,000
பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதோடு,
பின்னலாடை உற்பத்தியில் 20 சதவிகிதம்
வீழ்ச்சியடைந்து,
வேகமாக வேலைசெய்யவும் மற்றும் சம்பள
குறைப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதே இதற்கு காரணமாக
அமைந்தது.
நூல் விலை உயர்வுதான் வேலை மற்றும் உற்பத்தி
குறைப்பிற்கு காரணமாகிவிட்டதாக குற்றம்சாட்டும் ஆடைத்
தொழிற்துறையின் பேச்சாளர்கள்,
கச்சா பருத்தியையும்,
நூலையும் அளவில்லாமல் ஏற்றுமதி செய்ய காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ)
அரசு அனுமதித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று
கூறுகிறார்கள்.
பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான "தடையற்ற
சந்தை" கொள்கைகள் என்ற பெயரில் பருத்தி மற்றும் நூல்
ஏற்றுமதிகளுக்கான அனைத்து வரம்புகளையும் நீக்கும் அரசின்
முடிவு,
ஆடைத் தயாரிப்பாளர்களின் புகார்கள் காரணமாக
தற்போது ஓரளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2010-11 ஆம் இந்திய
நிதியாண்டில் நூல் ஏற்றுமதி 720 மில்லியன் கிலோ கிராமுக்கு
மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் என்று டிசம்பர் தொடக்கத்தில்,
ஐ.மு.கூ
அரசாங்கம் அறிவித்ததது.
எதிர்பார்த்தபடியே,
ஆடை முதலாளிகள் இந்த மாற்றியமைப்புக்கு
வரவேற்பு தெரிவித்த அதேவேளை,
நூல் தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் கசப்பான உண்மை என்னவெனில்,
2009ல் திருப்பூரில் உற்பத்தி விரைவாக
அதிகரித்தபோதிலும்,
விரக்தியுற்ற நூற்றுக்கணக்கான ஆடைத்
தொழிலாளர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர் என்பதுதான்.
உலகின் முன்னணி சில்லரை விற்பனையாளர்களுக்கான
குறைந்த கூலியில் நீண்ட நேரம் வேலை பார்க்கும் தொழிற்சாலைகள்
திருப்பூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த ஆடைத்
தொழிற்சாலைகள் குழந்தைகள்,
பெண்கள் மற்றும் ஆண்களின் உள்ளாடைகள்,
டி சேர்ட்டுகள்,
இரவு உடைகள் மற்றும் விளையாட்டு ஆடைகள்
உள்ளிட்ட அனைத்து வகையான பின்னலாடைகளையும் உற்பத்தி
செய்கின்றன.
8,000
க்கும் அதிகமான பிரிவுகளை,
அவற்றில் சுமார் மூவாயிரம் சிறிய பிரிவுகளை
கொண்டுள்ள அதில்,
குறைந்தளவு தொழிலாளர்கள் மட்டுமே வேலை
பார்க்கின்றனர்.
இந்த பிரிவுகளில் தயாரிக்கப்படும் ஆடைகள்
முக்கியமாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி
செய்யப்படுகின்றன. அவைகள் அங்கே உள்ள வால்மார்ட்,
பிரிமார்க்,
டீசல்,
ஆர்மி,
மற்றும் டோமி ஹில்ஃபிகெர் உள்ளிட்ட உலகின்
மிகப்பெரிய சில்லரை விற்பனையாளர்களால் விற்கப்படுகின்றன.
உற்பத்தி செயல்முறையில் புதிய தொழில்நுட்பமுறை
மூலம்,
ஆடை உருவாக்கத்தில் பல்வேறு பணிகளை குறைப்பதில்
தொழில் வழங்குனர்கள் வெற்றியடைந்துள்ளதால்,
சிறிய எண்ணிக்கையிலான தகமைவாய்ந்த தொழிலாளர்கள்
மட்டுமே தேவையாக உள்ளது. வேலையின் பெருபகுதியான வழக்கமாக ஒரே
மாதிரியாக செய்பவற்றை குறைந்த பயிற்சி அல்லது பயிற்சியே இல்லாத
தொழிலாளர்களிடம் கொடுக்க முடிகிறது.
கிராமப்புற இந்தியா நெருக்கடியில் பின்தங்கி
இருக்கும் சூழ்நிலையில்,
உடலுழைப்பு தொழிலாளர்கள்-கிராமப்புற
தொழிலாளர்கள் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும்
படையெடுத்துவிட்ட சந்தை பொருளாதாரத்தில் உயிர்தப்ப ரொக்க
வருவாயை கொடுக்காததால் வேளாண்மையை கைவிட்டுவிட்ட சிறிய
விவசாயிகள் ஆகியோரது உழைப்புசக்தி ஆடை தயாரிப்பாளர்களுக்கு
மிகப்பெரிய அளவில் குவிந்துகிடக்கின்றது.
தங்களது செலவினத்தை மேலும் குறைப்பதற்காகவும்,
தொழிலாளர்கள் சக்தியை பிரிக்கவும் மிகப்பெரிய
தயாரிப்பாளர்கள் தங்களது பெரும் பகுதி வேலையை,
சாயம்போடுதல்,
சுருக்கம் நீக்குதல்,
அல்லது தையல் போன்ற ஒற்றை வேலைகளில் தனித்துவம்
வாய்ந்த சிறிய நிறுவனங்களுக்கு துணை - ஒப்பந்த அடிப்படையில்
கொடுத்துவிடுகிறர்கள்.
உற்பத்தி முறைகளை பல பகுதிகளாக பிரிப்பது
இந்தியாவில் எந்த ஒரு நிகழ்விலும் வழக்கமாக
அலட்சியப்படுத்தப்படுவதுபோல் அரசாங்கத்தின் வேலை தரங்களை
திட்டமிட்டு மீறுவதாகும்.
இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள்,
எட்டு மணி நேர வேலைக்குப் பின்னர் மேலதிக கூலி
கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன என்றாலும்,
திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் 12
மணி நேரம் மற்றும் 16 மணி நேரம் சுழற்சி முறை வேலைகளில் கூட
வழக்கமான சம்பள விகிதத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
வெட்டுதல்,
தைத்தல் மற்றும் இஸ்திரிபோடல் போன்ற
பணிகளுக்கான 12 மணி நேர சுழற்சி முறை வேலைகளுக்கான வழக்கமான
சம்பளம் ரூ.190 ($4.22)
ஆக உள்ளது. வில்லை இடுதலுக்கு சம்பளம் ரூ.132 ($2.93);
ஆயத்த ஆடைகளை மடிப்பதற்கு ரூ.131 ($2.93);
முடிக்கப்பட்ட ஆடைகளை சோதிப்பதற்கு ரூ.119 ($2.64)
மற்றும் தயாரான ஆடைகளை பொதிகட்டலுக்கான சம்பளம் வெறும் 106 ($2.35)
ரூபாயாக மட்டுமே உள்ளது.
தொழிலாளர்கள் சொற்பமான சம்பளத்திற்காக நீண்ட
நேரம் கடுமையாக உழைக்கும் அதேவேளை,
முதலாளித்துவ விரைவுவளர்ச்சியடையும் ஒரு நகரின்
அனைத்து பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்நோக்கவேண்டியதுள்ளது.
ஆடைத் தொழிலாளரின் குடியிருப்புகள்
ஆடைத் தொழிலாளரின் குடியிருப்பு பகுதியிலுள்ள
வீடுகள் பற்றாக்குறைவாகவும்,
விலை மிகுந்ததாகவும் உள்ளது. அதிகப்படியான
வாடகை காரணமாக ஏராளமான தொழிலாளர்கள்,
தங்களது குடும்பத்தினருடன் வெறும் எட்டடிக்கு
எட்டடி கொண்ட அறையில் வசிக்கின்றனர். மேலும் பெரும்பாலான
குடித்தனக்காரர்களுக்கு வீட்டில் கழிப்பறை வசதி கிடையாது.
உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின்
விலைகள் திருப்பூரை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை விட
திருப்பூரில் மிக அதிகமாக -எப்படியோ 50 சதவிகிதம் வரை அதிகமாக-
உள்ளன.
திருப்பூரில் மருத்துவ வசதிகளுக்காக அரசாங்கம்
எதுவுமே செய்யவில்லை என்பதால்,
தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் தங்களது
சொந்த பணத்தைத்தான் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த
கிராமத்தில் -அங்கிருந்துதான் அவர்கள் திருப்பூருக்கு
வேலைக்காக இடம்பெயர்ந்தார்கள்- வசிக்கும் தங்களது
உறவினர்களுக்கு உதவவும் கூட முயன்று வருகிறார்கள்.
இந்திய கிராமபுறங்களில் உள்ளது போன்றே,
திருப்பூர் ஆடைத் தொழிலாளர்களின் தற்கொலைக்கு
முக்கிய காரணமாக கடன் உள்ளது. தங்களது சொற்ப சம்பளத்தை
வைத்துக்கொண்டு அல்லது வேலை இழப்பு போன்ற திடீர் நெருக்கடி
அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவரின் மருத்துவமனை செலவு
போன்றவற்றை சமாளிக்க முடியாமல் வட்டிக்கு கடன் கொடுக்கும்
தனியார்களிடமிருந்து கடுமையான வட்டிக்கு தொழிலாளர்கள் கடன்
வாங்குகின்றனர். அதன்பின்னர் அவர்கள் பழைய கடனை அடைப்பதற்காக
மேலும் அதிகமான வட்டிக்கு கடன் வாங்கும் கொடுமையான சுழற்சியில்
அடிக்கடி சிக்கிக்கொள்கிறார்கள். கடன் அதிகமாகிவிட்டதால்,
தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும்
கடன் கொடுத்தவர்கள் வேட்டைநாய்களாக துரத்துகின்றனர். இறுதியாக,
இதிலிருந்து விடுபட ஒரே வழியாக தற்கொலையை சிலர்
பார்க்கிறார்கள்.
பிரியா மற்றும் கவுதம்
கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட
திருப்பூர் ஜோடிகளான பிரியா மற்றும் கவுதமிற்கு என்ன நடந்தது
என்னவென்றால் இதுதான். கடந்த மாதம் இந்தியாவின் பின்னலாடை
தலைநகருக்கு கடந்த மாதம் உலக சோசலிச வலைதள நிருபர்கள் விஜயம்
செயதபோது,
அவர்களது உறவினர்களிடம் பேசினார்கள். (பார்க்க:
"திருப்பூர் தற்கொலைகள்: இந்தியாவின் முதலாளித்துவ
விரிவாக்கத்தின் மனித விலை")
திருப்பூரில் ஏற்பட்டுள்ள தற்கொலை அலை,
இந்திய முதலாளித்துவத்தின் மீதான அழிவுகரமான
குற்றச்சாட்டாக உள்ளது. வேகமாக அதிகரித்து வரும் கோடீஸ்வரர்கள்
மற்றும் இந்தியா உலக சக்தியாக திகழ்வதாக அமெரிக்க அதிபர் ஒபாமா
கூறியது ஆகியவை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி குறியீட்டு எண்
உயர்ந்துள்ளதை ஐ.மு.கூ
அரசாங்கம் மற்றும் நிறுவன ஊடகங்கள் கொண்டாடி வரும் அதேவேளை,
இந்தியர்களில் 70 சதவிகிதத்திற்கும்
மேலானவர்கள் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான தொகையிலேயே
வாழ்வதோடு,
நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வளர்ச்சி
குன்றியோ அல்லது ஊட்டச்சத்துக் குறைவுடனோ உள்ளனர்.
ஒரு தசாப்தகாலத்தின் சிறந்த பகுதிக்காக,
கிராமப்புற இந்தியா,
அல்லது குறைந்தபட்சம் அதன் பெரும்பகுதி
நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதோடு,
விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகளும் அதன் ஒரு
வெளிப்பாடாக உள்ளது என்பதை இந்திய ஊடகங்களும்,
அரசாங்கமும் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அரசாங்க புள்ளிவிவரப்படி,
1997 மற்றும் 2009 க்கு இடையே,
கடனுக்குள்ளான மற்றும் வறிய நிலைக்கு
தள்ளப்பட்ட குறைந்தது 216,500
விவசாயிகளாவது,
2009 ல் 17,368
பேர் உள்பட,
தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் உண்மையான சமூக பிளவு
கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே இல்லை,
ஆனால் இந்தியாவின் முதலாளித்துவ
விரிவாக்கத்தின் பலன்களை ஏகபோகமாக அனுபவிப்பவர்களுக்கும்,
இந்திய பெரும்பான்மை மக்களுக்கும் இடையேதான்
சமூக பிளவு உள்ளது என்பதை திருப்பூர் தற்கொலைகள்
வலியுறுத்துகின்றன. நடுத்தரவர்க்கத்தினர் மற்றும் மேலாளர்கள்,
வழக்கறிஞர்கள்,
ஊடகவியலாளர்கள் மற்றும் கடுமையான ஏமாற்றல்கள்
மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட அரசியல்வாதிகளின் வருவாய்
மற்றும் செல்வ அதிகரிப்பு,
இங்கிலாந்தில் தொழில் புரட்சி காலத்தில்
நடந்ததைப்போன்று,
இந்தியாவின் பழைய மற்றும் புதிதாக
உருவெடுத்துள்ள தொழில் மையங்களில் மேலோங்கி காணப்படுகின்றன.
திருப்பூர் நிலைமைகள் இந்திய ஸ்ராலினிச
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி அல்லது சிபிஎம் கொள்கைகளின்
கண்டனத்திற்குரிய வெளிப்பாடாகவும் கூட உள்ளன. ஏனெனில் சிபிஎம்
மற்றும் அதன் பாராளுமன்ற கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இடது
முன்னணியின் முதல் மற்றும் பிரதான முக்கிய ஆதரவு,
இந்திய முதலாளித்துவத்திற்கு அதன் இருபது
ஆண்டுகால "புதிய பொருளாதார கொள்கை",
அதாவது அரசாங்க கட்டுப்பாட்டை விலக்கிக்
கொள்ளுதல்,
தனியார்மயமாக்கல் மற்றும் பொதுச் சேவைகளை
குறைப்பது போன்றவை மூலமாக உலக முதலாளித்துவத்திற்காக குறைந்த
கூலி உற்பத்தி நாடாக இந்தியாவை மாற்றியதை அமல்படுத்துவதற்கு
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பலவீனமாக இருப்பதாக கருதிக்கொண்டு
திருப்பூரில் சிபிஎம் ஆற்றிய வெட்ககேடான பங்கு தொழிலாளர்களை
மேலும் வலுப்படுத்திதான் உள்ளது என்பதையும் கூட குறிப்பிட்டாக
வேண்டும்.
சிபிஎம் மற்றும் இடது முன்னணி எம்.பி.க்கள்,
சந்தை சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்வதில்
வலியுறுத்தும் தற்போதைய ஐ.மு.கூ
அரசாங்கத்திற்கு மே 2004 முதல் ஜூன் 2008 வரையில் ஆதரவளித்தது
உள்பட மத்திய அரசாங்கங்களுக்கு,
தொடர்ந்து ஆதரவளித்துள்ளனர். அதற்கும் மேலாக,
இடது முன்னணி ஆட்சியிலுள்ள மாநிலங்களில்,
மிக முக்கியமாக மேற்குவங்கம்,
சோசலிசம் "காலாவதியான கூப்பாடு" என்று
பகிரங்கமாக நிராகரித்ததோடு,
தகவல்தொழில்நுட்பத்துறையில் வேலைநிறுத்தத்தை
சட்டவிரோதமாக்கியதோடு,
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக தங்களது
நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை
சுட்டு வீழ்த்தியது உள்ளிட்ட "முதலீட்டாளர்களுக்கு ஆதரவான"
கொள்கைகளை அமல்படுத்தின.
திருப்பூரில்,
ஆடை முதலாளிமார்களுடன் சிபிஎம் பகிரங்கமாகவே
கூட்டணி வைத்துள்ளனர். சிபிஎம் கூறியதன்படி,
திருப்பூர் சட்டசபை தொகுதிக்காக
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.கோவிந்தசாமி என்பவர்,
2008 ல் ஆடை முதலாளிகளுக்கும்,
தமிழக தொழில்துறை அமைச்சருக்கும் இடையே இலஞ்ச
இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். மாநில அரசாங்கத்தின்
மேலதிகவேலைநேர விதிமுறை மீறல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும்
நோக்கத்தில் 2.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் தருவதாக
கூறப்பட்டுள்ளது.
ஆனால் கோவிந்தசாமியின் நடவடிக்கைகள்
அம்பலமானபோது,
சிபிஎம் அவரை சட்டமன்ற தலைவர் பதவியிலிருந்து
மட்டுமே நீக்கியது. ஆடை முதலாளிமார்களின் இந்த நம்பகமான ஏவலாளி
சிபிஎம் சட்டசபை அங்கத்தவராக தொடர அனுமதிக்கப்பட்டார். வெகு
நாட்களுக்கு பின்னரே,
திமுக தலைமையிலான அரசாங்கத்தை
(வலதுசாரி
அரசாங்கமான இதனை தேர்ந்தெடுக்க உதவிய சிபிஎம் தற்போது
எதிர்க்கிறது)
புகழ்ந்து கோவிந்தசாமி தொடர்ந்து கட்சியின்
முடிவுகளை பலமுறை மீறியதால்,
விருப்பமே இல்லாமல் அவரை கட்சியைவிட்டு
நீக்கியது. "நீண்ட அவகாசம் கொடுத்த பின்னரும் அவர் தனது
அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள மறுத்ததால்தான்,
அவரை நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் தங்களுக்கு
ஏற்பட்டது" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.
ராமகிருஷ்னன் தெரிவித்தார்.
திருப்பூரில் நடந்துள்ள அண்மைய நிகழ்வுகளான
முதலாளித்துவ சுரண்டலின் குரூரமான தன்மை மற்றும் ஸ்ராலினிச
சிபிஎம் கட்சியின் முற்றிலும் அழுகிப்போன வலதுசாரி குணாதிசயம்
இந்திய மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களை
திரட்டுவதற்காக சோசலிச மற்றும் ஜனநாயக கோரிக்கைகளுடன் இந்திய
உழைக்கும் வர்க்கத்தினரை ஆயுதபாணியாக்குவதற்கு புரட்சிகர கட்சி
ஒன்றை உருவாக்குவதன் அவசரதேவை வெளிப்படையாக முன்னுள்ளது.
|