World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Antigovernment protests spread across Northern Africa and Middle East

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பரவுகின்றன

By Barry Grey
24 January 2011

Back to screen version

கடந்த வார இறுதியில் இடைக்காலதேசிய ஐக்கியஅரசாங்கத்திற்கு எதிராக துனிசியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அல்ஜீரியா, யேமன் மற்றும் ஜோர்டான் நாடுகளிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பரவின.

அல்ஜீரியா மற்றும் யேமனில் அரசாங்க படையினர் ஆர்ப்பாட்டங்களை கடுமையான வன்முறையுடன் எதிர்கொண்டன. அல்ஜீரியாவில் சனிக்கிழமை அன்று தலைநகரான அல்ஜீயர்ஸில் பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி வந்த ஆர்ப்பாட்டத்தை பொலிசார் தடுத்தபோது அரை டஜனுக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 300 பேர் நகரத்தின் Place de la Concorde இல் இருந்து பாராளுமன்றத்திற்கு அணிவகுத்துச் செல்ல முற்பட்டவர்கள் உடனடியாக பொல்லுகள், கண்ணீர்ப்புகைக் குண்டுக்கள் இன்னும் பல ஆயுதங்களைக் கொண்ட பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குறைந்தது 42 எதிர்ப்பாளர்களாவது காயமுற்றனர் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. RCD எனப்படும் கலாச்சார, ஜனநாயக அணி என்னும் எதிர்ப்பாளர்களின் தலைவரான சையத் சாடி, கட்சியின் செய்தித் தொடர்பாளர் மொஹ்சென் பெலப்ஸ் ஆகியோரும் காயமுற்றவர்களில் அடங்குவர். அக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரான ஒதமனே அமஸௌஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

LADDH எனப்படும் அல்ஜீரிய மனித உரிமைகள் பாதுகாக்கும் குழு சனிக்கிழமையன்று அமைதியான எதிர்ப்பிற்கு அரசாங்கத்தின் ஒட்டுமொத்தமான தடை ஒரு சமூக வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றது. LADDH, RCD, நான்கு தொழிற்சங்கங்கள், FFS எனப்படும் சோசலிசக்திகள் முன்னணி ஆகியவை வெள்ளியன்று ஜனநாயகத்திற்கான ஒரு தேசிய இயக்கம் அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை வெளிவிட்டிருந்தன.

வேலையின்மை மற்றும் உயரும் வாழ்க்கைச் செலவுகள் பற்றிய பெருகிய மக்கள் சீற்றம், அல்ஜீரியாவில் இம்மாதம் முன்னதாக எதிர்ப்புக்களைத் தூண்டி அதனால் ஐந்து பேர் இறந்ததுடன், 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கடந்த இரு வாரங்களில் எட்டுப் பேர் நாட்டில் வேலையின்மை, வறுமை, சமூக சமத்துவமின்மை மற்றும் அரசாங்க ஊழல் ஆகியவற்றை எதிர்த்து தங்களை தீமூட்டிக்கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாக சர்வாதிகாரியாக ஆட்சி நடத்திய ஜேன் எல் அபிடைன் பென் அலியை சவுதி அரேபியாவிற்கு ஓடச்செய்த துனிசியாவின் வெகுஜன எதிர்ப்புக்களைத் தூண்டிவிட்ட வேலையின்மை மற்றும் அரசியல் அட்க்குமுறை ஆகிய அதே சூழ்நிலைகள்தான் இப்பொழுது மக்ரெப்பின் அண்டை நாடுகளிலும் மற்றும் கிழக்கேயுள்ள நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களுக்கு எரியூட்டுகின்றன.

மேலை ஏகாதிபத்தியத்தின் முன்னாள் காலனித்துவநாடுகளான இந்நாடுகள் அனைத்தும் இன்றும்கூட அதே சக்திகளின் பொருளாதார காலனிகளாக உள்ளன. அமைதின்மையைத் தூண்டும் மிக வெடிப்புத்தன்மை உடைய சமூகக் காரணியாக இளைஞர்களிடையே வெகுஜன வேலையின்மை என்பது உள்ளது. அல்ஜீரியாவில் மொத்த மக்கள்தொகை 36 மில்லியனில் 15 மில்லியன் பேர் 30 வயதிற்கும் உட்பட்டவர்கள் ஆவர்.

அரபு உலகில் யேமன் மிக வறிய நாடு ஆகும். மொத்த மக்கட்தொகையான 23 மில்லியனில் கிட்டத்தட்ட பாதிப்பேர் நாள் ஒன்றிற்கு $2 க்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கின்றனர். 32 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜனாதிபதி அலி அப்துதல்லா சாலேக்கு எதிராக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆர்ப்பாட்டங்கள் அவ்வரசாங்கத்தின் வரலாற்றிலேயே முதல்முறையான அத்தகைய அரசியல் நடவடிக்கைகள் ஆகும்.

சனிக்கிழமை சானா பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 2,500 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, 30 பேரைக் கைது செய்தனர். எதிர்ப்புக்கள் தென்புறத் துறைமுக நகரமான ஏடெனிலும் நிகழ்ந்தன. அங்கு பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாகிச் சூடு நடத்தியதில் 4 பேர் காயமுற்றனர், 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராணுவத்தினர் ஒரு நாள் முன்னதாக அருகில் தெற்கு மாநில லஹ்ஜில் நான்கு நகரங்களில் இரு அதேபோன்ற எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்கும் வகையில் மோட்டர் குண்டுகளைச் சுட்டதில் ஒரு பெண்மணி இறந்துபோனார்.

ஆங்காங்கே அதிருப்தி வெளிப்பட்டுப் பரவிய நிலையில், கடந்த புதன்கிழமை தெற்கு மாநிலமான பைடாவில் ஒரு வேலையில்லா இளைஞர் தற்கொலை செய்து கொண்டதும் அடங்கும். ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு வரம்பு உள்ளங்கலான சீர்திருத்தங்கள் சிலவற்றை  யேமன் அரசாங்கம் அறிவித்தது. எதிர்ப்புக்கள் இத்திட்டங்களை வெறும் போலி நடவடிக்கைகள் என்று நிராகரித்தன. சானா பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பாளர்கள்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர், நீங்களாகவே விலகி விடுங்கள்என்ற கோஷ அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஞாயிறு காலையில் அரசாங்கம் ஒரு முக்கிய செய்தியாளரும் இஸ்லாமியக் கட்சியான இசையாவின் (Isiah) உறுப்பினருமான தவாகுல் கார்மனைக் கைது செய்தது; அவர் செய்தித் தகவல்கள், மின்னஞ்சல்கள் மூலம் எதிர்ப்புக்களை அமைத்திருந்தார். அன்றே பின்னர் சானாவில் உள்ள பொலிசார் 18 பிற நடவடிக்கையாளர்களை கார்மனைக் காவலில் வைத்தது பற்றி நடக்கவிருந்த கூட்டத்திற்குச் செல்லுகையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுள் யேமனின் இரு பெரும் மனித உரிமைகள் அமைப்புக்களின் தலைவர்களும் இருந்தனர்.

இக்கைதுகள் சானா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு பெற்ற ஒரு புதிய ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்தது. “கைதிகளை விடுதலை செய்க என்று கோஷமிட்டு, கார்மானுடைய படங்களையும் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது குற்றவிசாரணைகள் அதிகாரி அலுவலகத்திற்குச் செல்ல முற்பட்டனர். கைத்தடிகள் ஏந்திய சுமார் 50 பொலிசார் அவர்களை அடித்து விரட்டி விட்டனர்.

பெருகும் அமைதியின்மையைக் குறைக்கும் முயற்சியில், ஞாயிறன்று சலே அரசாங்கத் தொலைக்காட்சியில் தோன்றி அரசாங்க ஊழியர்கள், இராணுவ படையினரின் ஊதியங்களை உயர்த்தும் திட்டங்களை அறிவித்தார்.

ஜோர்டானில் 5,000 பேருக்கும் மேலாக தலைநகர் அம்மான் மற்றும் பிற நகரங்களில் வாரந்திரப் பிரார்த்தனைகளுக்குப் பின்னர் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மக்கள் திரண்டு, “ரொட்டியும், சுதந்திரமும்வேண்டும், அரசாங்கம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரினர்.

“(பிரதம மந்திரி சமீர்) ரிபேயே வெளியேறுக, வெளியேறுக. ஜோர்டான் மக்கள் அடிபணிய மாட்டார்கள்என்று மத்திய அம்மானில் இருந்த அல்-ஹுசைன் மசூதியில் இருந்து மாநகரசபை கட்டிடத்திற்கு அணிவகுத்துச் செல்கையில் எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர்.

கிட்டத்தட்ட 4,000 பேர் அம்மானில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) மற்றும் அதன் அரசியல் பிரிவான இஸ்லாமிய செயற்பாட்டு முன்னணி ஏற்பாடு செய்திருந்த அமைதியான எதிர்ப்பில் பங்கு பெற்றனர். மற்றும் ஒரு 1,400 பேர் ஜோர்டானின் மற்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். முக்கியமாக வடக்கு நகரங்களான ஜார்க்கா மற்றும் இர்பிட்டில் இவை இடம்பெற்றன.

ஜோர்டானில் உத்தியோகபூர்வ வறுமை விகிதம் 25 சதவிகிதம் ஆகும். உத்தியோகபூர்வமாக வேலையின்மை 14 சதவிகிதம் என்றாலும் மற்ற மதிப்பீடுகள் வேலையற்றோரின் எண்ணிக்கையை 30 என்ற உயர்ந்த சதவிகிதத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளன.

சனி, ஞாயிறு இரு நாட்களிலும் பென் அலியின் பொலிசால் கொல்லப்பட்டவர்களுக்கான இரண்டாம், மூன்றாம் துக்க நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் துனிசியாவில் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். சனிக்கிழமை துனிசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கு பெற்றவர்கள் இடைக்கால பிரதம மந்திரி மஹ்மத் கன்னொச்சி, இன்னும் அகற்றப்பட்ட சர்வாதிகாரியின் பிற முன்னாள் எடுபிடிகளும் ராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரினர். இதில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் சேர்ந்து கொண்டு உயர் ஊதியங்கள் மற்றும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றை கோரினர்.

ஞாயிறன்று ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதம மந்திரி கன்னொச்சியின் அலுவலகத்திற்கு வெளியே திரண்டு அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரினர். பாதுகாப்பு வளையங்களை மீறி கட்டிடத்தின் கதவுகளை அடையவும் முற்பட்டனர்.

இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள், நகரத்தின் வறிய பகுதிகளில் இருந்து, “விடுதலைத் தொடரணிஎன்று அழைக்கப்பட்ட வகையில் பங்கு கொண்டனர். தொடரணியில் இருந்த பலரும் சிடி பௌஜிட் என்னும் இருண்ட சிறுநகரத்தில் இருந்து வந்திருந்தனர்; அங்கு அரசாங்க எதிர்ப்பு ஒரு மாதம் முன்பு ஒரு வேலையில்லாத கல்லூரிப் பட்டதாரியின் தற்கொலையால் தூண்டப்பட்டிருந்தது. “சர்வாதிகாரத்தின் மிச்சம் இருப்பவர்களையும் வீழ்த்துவதற்கு நாங்கள் வந்துள்ளோம்என்று தொடரணியில் ஒருவராக இருந்த வயதான மஹ்மத் லயனி கூறினார்.

ஆட்சித்துறை ஊழியர்களும் வேலை செய்ய மறுப்பதுடன் பணியிட எதிர்ப்புக்களை இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக நடத்துகின்றனர்.

வெள்ளியன்று கன்னொவ்ச்சி துனிசிய அரசாங்கத் தொலைக்காட்டிக்கு ஒரு பேட்டி கொடுத்தார்: இதில் தான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்து, புதிய சட்டமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களை நடத்திய பின்னர் விலகுவதாக உறுதியளித்தார். அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கான தேர்தல் 60 நாட்களுக்குள் நடைபெற வேண்டும், ஆனால் கன்னொச்சி எப்பொழுது தேர்தல்கள் நடத்தப்படும் என்பதைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை.

மக்கள் அமைதியன்மையை சீர்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் ஞாயிறன்று பென் அலியின் செய்தித் தொடர்பாளரும் தலைமை ஆலோசகருமான அப்தல்லெசஸ் பின் தியா மற்றும் பாராளுமன்ற மேல்பிரிவின் தலைவர் அப்தல்லா கல்லால் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. ஜனவரி 10ல் இருந்து மூடப்பட்டுள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் திங்களன்று திறக்கப்படும், விளையாட்டு நிகழ்வுகளும் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தது.

ஆனால், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் ஒருகால வரையற்ற வேலைநிறுத்தம்நடத்தப்போவதாகவும், அரசாங்கத்தை ராஜிநாமா செய்ய அது அழைப்பு என்றும் துனிசிய பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (UGTT) செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிரெஞ்சு செய்தி நிறுவனமான AFP இடம் கூறினார்.

UGTT எதிர்ப்பு இயக்கத்தின்மீது கட்டுப்பாட்டைக் கொள்ள முற்படுகிறது. அதையொட்டி அதை அடக்கி துனிசிய முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு அதை அரசியல்ரீதியா அடிபணிய செய்யவும் முனைகிறது. நீண்டகாலம் பென் அலிக்கு ஆதரவு கொடுத்த வகையில், UGTT ஆரம்பத்தில் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து அதன் பிரதிநிதிகளையும் மந்திரிகளாகப் பணி புரிய அனுமதித்திருந்தது.

ஆனால் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுக்கையில், தொழிற்சங்கம் அதன் பிரதிநிதிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால் இது மக்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை பென் அலியின் முன்னாள் எடுபடிகளை அரசாங்கத்தில் இருந்து நீக்கிவிடுதல் என்பதுடன் தன் ஆதரவை நிறுத்திக் கொண்டு, தற்போதுள்ள சமூக, அரசியல் வாழ்வை அடிப்படையில் அப்படியே தொடர்வது என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

இதற்கிடையில், இடைக்கால அரசாங்கம் இரவுநேரத்தில் ஊரடங்கு உத்தரவைச் செயல்படுத்தி வருவதுடன் இராணுவமும் அனைத்து முக்கிய நகரங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆளும் உயரடுக்கு UGTT உதவியுடன் வெகுஜன இயக்கத்தை அடக்குவதில் வெற்றி அடைந்தால், ஜனநாயக சீர்திருத்தம் பற்றிய பேச்சுக்கள் விரைவில் பாரிய அடக்குமுறைக்கும் புதிய சர்வாதிகாரத்திற்கும் வழிவகுத்துவிடும்.

அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் சமீபத்திய கருத்துக்கள் ஜனநாயக சீர்திருத்தத்திற்கு உத்தியோகபூர்வ போலித்தன ஆதரவிற்குப் பின்னால் அமெரிக்க ஆளும் வர்க்கமும் ஒபாமா நிர்வாகமும் கொண்டுள்ள விரோதப் போக்கை பிரதிபலிக்கின்றன. நீண்ட காலம் அமெரிக்க சொத்து போல் செயல்பட்ட ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு அவற்றின் விரோதப் போக்கு காணப்படுகிறது.

ஜனவரி 18ம் திகதி வலதுசாரி வாஷிங்டன் டைம்ஸில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் டேனியல் பைப்ஸ் (மத்திய கிழக்கு அரங்கின் இயக்குனரும் ஸ்டான்போர்ட் ஹூவர் நிறுவனத்தின் அங்கத்தவரும் ஆவார்) துனிசிய நிகழ்வுகளைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:

விரைவாகப் பார்த்தால் எளிதாக நடத்தப்படும், ஒப்புமையில் குருதி கொட்டுதல் இல்லாத ஆட்சிசதி உலகெங்கிலும் இஸ்லாமியவாதிகளுக்கு அவர்களுடைய சர்வாதிகாரிகளை அகற்ற ஊக்கம் அளிக்கக்கூடும். [ஆசிரியர் குறிப்பு: உண்மையில் இஸ்லாமியவாதிகள் பென் அலியை அகற்றிய வெகுஜன எதிர்ப்புக்களில் ஒரு பங்கையும் கொண்டிருக்கவில்லை.] நான்கு வட ஆபிரிக்க நாடுகளான மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியா மற்றும் எகிப்து ஆகியவையும், சிரியா, ஜோர்டன் மற்றும் யேமன் என்று கிழக்கில் உள்ள நாடுகளும் இந்த விவரிப்பில் அடங்கியுள்ளன. பெல் அலி சவுதி அரேபியாவில் அடைக்கலம் நாடியுள்ளார் என்பது அந்நாட்டையும் இதில் இணைக்கும். பாக்கிஸ்தானும் இதற்குள் பொருந்தும்….

ஒரு இலத்தின் அமெரிக்க சர்வாதிகாரி பற்றி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் கூறியதாகஅவர் ஒரு விலைமாதின் மகன், ஆனால் நம் சார்பு கொண்ட விலைமாதின் மகன்என்பது பென் அலிக்கும் மற்ற அரபு ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும். இது அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையை குழப்பம்மிக்கது போல் தோற்றமளிக்க விட்டுவிடலாம்.”

இன்னும் நிதானமான-தாராளவாத அமெரிக்க ஏகாதிபத்திய பிரிவைப் பிரதிபலிக்கும் ரோபர்ட் டி.காப்ளான், அடிப்படையில் இதே உணர்வுகளை ஞாயிறு நியூ யோர்க் டைம்ஸில்  தெரிவித்தார்:

மற்றொன்றும் நினைவில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும். அமெரிக்க நலன்கள் மற்றும் பிராந்திய அமைதியை பொறுத்தவரை, ஜனநாயகத்திற்கு இன்னும் பேராபத்து உள்ளது. ஜனநாயகவாதிகள் அல்லாது அரபு சர்வாதிகாரிகளான எகிப்தின் அன்வார் சதத், ஜோர்டானின் ஹுசைன் மன்னர் ஆகியோர்தான் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கையைக் கொண்டனர்ஜனநாயகம்தான் தீவிரவாதிகளான ஹமாசை காசாவில் பதவிக்கு கொண்டுவந்தது. எனவே நாம் உண்மையிலேயே ஒப்புமையில் அறிவு ஒளி சான்ற தலைவரான ஜோர்டான் அப்துல்லா போன்றோர் பரந்த தெரு ஆர்ப்பாட்டங்கள் மூலம் கீழிறக்கப்பட விரும்புகிறோமா? மத்திய கிழக்கில் நமக்கு எது வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.”