World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Middle East and North Africa feel repercussions of Tunisian revolution

துனிசியப் புரட்சியின் விளைவுகளை மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் உணர்கின்றன

By Ann Talbot
21 January 2011

Back to screen version

துனிசியப் புரட்சி ஒன்றும் நம்மிடம் இருந்து தொலைவில் இல்லை என்று அம்ர் மௌசா எகிப்தியச் சுற்றுலாத் தலமான ஷர்ம் எல் ஷேக்கில் ஓர் உச்சி மாநாட்டிற்காகக் கூடியிருந்த அரபு லீக்கின் 33 உறுப்பினர்களிம் கூறினார். அவருக்கு எகிப்திய விருந்தளித்தவர்கள் துனிசிய நிகழ்வுகள் பற்றி எந்த விவாதத்தையும் தவிர்க்க முற்பட்டபோது, “அரபுக் குடிமகன் ஒரு முன்னோடியில்லாத சீற்றம் மற்றும் ஏமாற்ற நிலைக்குள் நுழைந்தான் என எச்சரித்தார்.

சில எதிர்த்தரப்பினர் ஒரு வார கடுஞ்சினக் காலத்திற்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில், முன்னாள் ஐ.நா. அணுவாயுத ஆய்வாளரான மஹ்மத் எல்பரடெய் எகிப்தும்ஒரு துனிசிய மாதிரியான வெடிப்புத் தன்மையை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரித்தார்.

துனிசியாவில் நடந்துள்ளது வியப்பை அளிக்கவில்லை, சர்வாதிகாரங்களுக்கு ஆதரவு அளிக்கும் எகிப்து மற்றும் மேற்கில் இருக்கும் அரசியல் உயரடுக்கினருக்கு இது படிப்பினையைத் தரும். அடக்குமுறை மூலம் உறுதிநிலை என்பது வந்துவிடாது, சர்வாதிகார ஆட்சிகள்தான் அமைதியைக் காக்க சிறந்த வழிவகை என்று எவரேனும் நினைத்தால், அவர்கள் தங்களைத்தான் ஏமாற்றிக் கொள்கின்றனர் என்று கார்டியனிடம் எல்பரடெய் கூறினார்.

இவை தக்க முறையில் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும். இருக்கும் முறைக்குள்ளேயே மாறுதல்களைக் கொண்டுவரக்கூடிய வழிவகைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். அதாவது அரசியல் சீர்திருத்தம் தேவை என்று கோரும் மனுவை நாம் பெற்றுவருவது போல். மக்களுக்கு அரசாங்கம்ஆம், உங்களை நாங்கள் புரிந்துகொள்ளுகிறோம் என்ற தெளிவான தகவலை அனுப்ப வேண்டும். அப்படியும் நிகழ்வுகள் சரியாக நகரவில்லை என்றால்தான் நாம் எதிர்ப்புக்கள், ஒரு பொதுவேலைநிறுத்தம் என்பவை அடங்கிய மாற்று விருப்புரிமைகளைப் பயன்படுத்த வேண்டும்.”

மாற்றம் ஒரு ஒழுங்கான வகையில் வரவேண்டும், துனிசிய மாதிரியில் அல்ல என்றுதான் நான் இன்னமும் நம்புகிறேன் என எல்பரடெய் கூறினார்.

வட ஆபிரிக்க நாடுகளில் எகிப்து அதிக மக்கள் தொகையைக் கொண்டது என்பதுடன் மூலோபாய வகையில் மிகவும் முக்கியமானதுமாகும். 2011ல் இது அமெரிக்காவிடம் இருந்து 1.3 பில்லியன் டொலர் நிதி உதவி பெறும். இஸ்ரேலை அடுத்து மத்திய கிழக்கில் அமெரிக்காவில் இருந்து நிதி உதவியை மிகப் பெரிய அளவில் பெறும் இரண்டாவது நாடாகும் இது.

எகிப்திய வெளியுறவு மந்திரி அஹ்மத் அகௌல் கெயிட் எகிப்திலும் ஒரு துனிசிய-மாதிரியிலான எழுச்சி வெடிக்கலாம் என்ற கருத்துமுற்றிலும் அபத்தமானது என்று உதறித்தள்ளினார். ஆனால் அப்பகுதி பற்றிய வல்லுனர்கள் 82 வயதான ஜனாதிபதி ஹொஸ்னி முபாராக் ஆட்சி தப்பிப் பிழைக்கும் வாய்ப்புக்கள் பற்றி அவ்வளவு உறுதியாக இல்லை.

Carnegie Endowment for International Peace ஐச் சேர்ந்த Michelle Dunne, “முதலில் இளைஞர் வேலையின்மை போன்ற பரந்த பொருளாதாரக் குறைகள் விரைவில் அரசியல் மாற்றத்திற்கான குறிப்பான கோரிக்கைகளாக மாறக்கூடும், இரண்டாவதாக இது வலுவான எதிர்ப்பு அமைப்புக்கள் இல்லாவிடினும் நடக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

துனிசிய மல்லிகைப் புரட்சியின் மூன்றாவது படிப்பினை அனைத்திலும் நினைவிற் கொள்ளத்தக்கது எனலாம். நீண்ட காலமாக ஒத்திவைக்கப்படும் மாற்றம் இறுதியாக வரும்போது, அது நடப்பதற்கு ஒப்புமையில் எவ்வளவு குறைந்த முயற்சியும் நேரமும் தேவைப்படலாம் என்பது பலநேரமும் வியப்பைத் தரும்.”

துனிசியாவைப் பொறுத்தவரை, வாஷிங்டன் ஜனாதிபதி ஜின் அல் அபிடைன் பெல் அலியை அவருடைய அடக்குமுறை ஆட்சி எழுச்சியைக் கட்டுப்படுத்தமுடியாது என்பது தெளிவானவுடனேயே பதவியை விட்டு விலகுவதற்கு வாஷிங்டன் விரைவில் செயல்பட்டு அவரை வலியுறுத்தியது. அந்தக் கட்டம் வரை வாஷிங்டன் வட ஆபிரிக்காவில் அதன் மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவராகத்தான் பென் அலியைத் தொடர்ந்து ஆதரித்து வந்தது.

பிரெஞ்சு அங்கத ஏடான Le canard enchaine கருத்துப்படி, அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பல நேமும் துனிசியத் தளபதிகளுடன் நேரடியாகப் பேசினர். ஜனாதிபதிக்கு ஆதரவைத் தருவதில்லை என்ற அவர்களுடைய முடிவுதான் அவரை நாட்டை விட்டு ஓட வேண்டும் என்ற முடிவிற்குத் தள்ளியது. பிரெஞ்சுத் தூதர்களும் அதிகாரிகளும் முற்றிலும் எதிர்பாராத் திகைப்பில் ஆழ்ந்தனர். கடைசிக் கணம் வரை அவர்கள் பென் அலிக்கு உதவியை அளித்து வந்தனர். வெளியுறவு மந்திரி Michle Alliot-Marie தனிப்பட்ட முறையில், “அமெரிக்கா நிலைமையைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. முழுக் காலத்திலும் நாம் குழப்பம் என்ற பனிமூட்டத்தில் இருந்தோம். நமக்கு இவை பற்றி அமெரிக்கர்கள் தெரிவிக்கவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை என்று அவர் புகாராகக் கூறினார்.

துனிசிய எழுச்சி உலக நிகழ்வுகளில் ஒரு திருப்பு முனையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரான்ஸ் மட்டும் இதை எதிர்பாராத நிலையில் இல்லை. புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய தசாப்தம் வெளிப்பட்டு நீண்டகாலமாக உறுதி உடையவை எனக் கருதப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க ஆட்சிகளை அச்சுறுத்துகிறது.

துனிசியாவில் ஆழ்ந்த சமூக அழுத்தங்கள் வெடித்து எழுந்து 23 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தியது. இதேபோன்ற அழுத்தங்கள் அப்பகுதி முழுவதும் உள்ளன. உயரும் உணவுப் பொருட்களின் விலைகள் இந்த அழுத்தங்களை இன்னும் தீவிரமாக்கின. பொருளாதார வல்லுனர்கள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் 2011ல் உயர்ந்த தர வளர்ச்சி ஏற்படும் என்று கணித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவு செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே  பிளவை அதிகரித்துள்ளன. கிட்டத்தட்ட எகிப்தின் 80 மில்லியன் மக்களின் பாதிப்பேருக்கும் மேல் நாள் ஒன்றிற்கு 2 டொலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.

சமீபத்திய நாட்களில் ஆறு எகிப்தியர்கள் தங்களையே மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளனர், அரபு உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை 10 ஆக உள்ளது. இவை துனிசியப் பொலிஸ் அதிகாரிகள் அவர் வாழ்வதற்கு ஒரே ஆதாராமாக இருந்த அவருடைய பழ, காய்கறிக் கடையை பறிமுதல் செய்ததை அடுத்து தன்னையே தீக்கிரையாக்கிக் கொண்ட மஹ்மத் பௌசஜிஜியைப் பின் பற்றியதற்கு ஒப்பாகும். பிராந்தியம் முழுவதும் பெரும் திகைப்பைக் கொடுக்கும் நிலைமையை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான மக்களிடையே இத்தகைய பெரும் திகைப்பு நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

அரசாங்கங்கள் விரைவில் செயல்பட்டு சில வாரங்களுக்கு முன்புதான் IMF உத்தரவிட்டிருந்த உணவு மற்றும் எரிபொருள் உதவிகளை நிறுத்துதல் என்பதை பழையபடி கொண்டுவந்துள்ளன. ஆனால் IMF அவற்றை காலவரையறையற்று நீடிக்க அனுமதிக்காது. உணவுப் பொருட்களின் விலைகள் ஐயத்திற்கு இடமின்றி மீண்டும் உயரும். உணவு, எரிபொருள், ஆகியவற்றிற்கான உதவி நிதிகளை அகற்றும் ஒரு IMF திட்டத்தை எகிப்து ஏற்றுள்ளது. இது தற்போதைய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகிதம் என்று உள்ளது.

சிரிய அரசாங்கம் தான் நாட்டின் மிக வறிய குடும்பங்களுக்கு மாதம் ஒன்றிற்கு 11 டொலர் தர இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் துனிசி எழுச்சியை எதிர்கொண்ட நிலையிலும், IMF சிரியாவை உணவுப் பொருட்களுக்கான உதவி நிதியளித்தலைக் கைவிடுமாறு அழுத்தம் கொடுக்கிறது. வெளிநாட்டு முதலீட்டிற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், பாத்திஸ்ட் ஆட்சி பொருளாதார மறுகட்டமைப்பு பற்றி ஒரு முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது. Economist கருத்துப்படி இதன் பொருள்உதவி நிதிகளில் பெரும் வெட்டுக்கள் மற்றும் சிரியாவின் செல்வமற்ற வெகுஜனத் தொகுப்பிற்கு இன்னும் வேதனை தரும் வயிற்றை இறுக்கிப்பிடித்து வாழும் நிலைதான் என்று உள்ளது.

கடந்த ஆண்டு யேமன் IMF இடம் இருந்து பெற்ற 369.8 மில்லியன் டொலர் கடனுக்கு ஈடாக ஒரு பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்திற்கு ஒப்புக் கொண்டது. அத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நிதியப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, எரிபொருள் உதவித் தொகைகள் மற்றும் பொதுச் செலவுகளில் மற்ற கூறுபாடுகள் பாதியாகக் குறைக்கப்படும். எதிர்ப்பாளர்களுக்கும் பொலிசுக்கும் இடையே முக்கிய தெற்கு நகரமான ஏடெனில் இரு இரவுகள் மோதல்கள் நிகழ்ந்தன. துனிசியா போல் இல்லாமல் இதைப்பொறுத்தவரை பிரிவினைவாதக் கூறுபாடு ஒன்றும் அடங்கியுள்ளது. ஆனால் சமூகப் பிரச்சினைகளின் அடித்தளத்தில் உள்ள காரணங்கள் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. அரபு நாடுகள் முழுவதும் வறியவர்கள் நிலை இவைதான். அப்பகுதியில் பல ஆட்சியாளர்களை போல் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேயும் யேமனை 30 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறார்.

லிபியாவில் எதிர்ப்புக்கள் பல நகரங்களில் சமூக வீடுகள் அளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து நடந்துள்ளன. Bani Walid இல் எதிர்ப்பாளர்கள் ஒரு சமூக வீடுகள் திட்டத்தில் காலி வீடுகளில் புகுந்தனர். பல ஆண்டுகளாக வீடுகளைப் பெறுவதற்குத் தாங்கள் காத்திருப்பதாக அவர்கள் கூறினர். பென்கசி, பிடா, தமா மற்றும் சபா ஆகிய நகரங்களிலும் இதே போன்ற எதிர்ப்புக்கள் நடைபெற்றன.

ஜோர்டானில் இர்பிட், கரக், சால்ட், மான் ஆகிய நகரங்களில் விலையுயர்வு, வேலையின்மை ஆகியவற்றை எதிர்த்து எதிர்ப்புக்கள் நடைபெற்றன. உலகில் மிக அதிக வேலையின்மை விகிதங்கள் சிலவற்றை அரபு நாடுகள் கொண்டுள்ளன என்று அரபு தொழில் அமைப்பு தெரிவிக்கிறது. ஜோர்டானிய அரசாங்கம் சமீபத்தில் 225 மில்லியன் டொலர் மதிப்பில் உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் குறைப்பை அறிவித்துள்ளது. ஆனால் இச்சலுகையும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதில் தோல்வியுற்றுள்ளன. சில எதிர்ப்பாளர்கள் பிரதம மந்திரி சமீர் ரிபை இராஜிநாமா செய்யவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்.

சூடானில் பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை தலைநகரம் கார்ட்டமிற்கு அருகேயுள்ள அல் கம்லீன் நகரத்தில் வீசினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்ட்டமிற்குச் செல்லும் முக்கிய பாதையை தடுப்பிற்கு உட்படுத்தினர். அல்-கீஜிரா மற்றும் கார்ட்டம் பல்கலைக்கழக மாணவர்ளும் உணவு, எரிபொருளுக்கான அரசாங்கத்தின் உதவி நிதிகளைக் குறைக்கும் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். இஸ்லாமிய எதிர்க்கட்சியின் தலைவரான ஹசன் அல்-துரபி கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்ட்டம் அரசாங்கம் ஒரு பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கிறது. இதன் வெளிநாட்டு மாற்று நாணய இருப்புக்கள் விரைவில் சரிந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் எண்ணெய் வளம் மிக்க தெற்குப் பகுதி, மேற்கு நாடுகளின் ஆதரவுடன் பிரிவினைக் கட்டத்தில் உள்ளது.

எத்தியோப்பியாவில் வணிகத்திற்கான அரசாங்க மந்திரி அஹ்மத் துசா துனிசியா மாதிரியிலான எழுச்சி எத்தியோப்பியாவில் வெடிக்கக்கூடும் என்னும் தன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஆனால் அடிப்படைப் பொருட்களின் விலைகள்எத்தியோப்பியாவின் கீழ்மட்ட, மத்தியதர வர்க்கங்களில் வாங்கும் திறனுக்கு அப்பால் பெரிதும் சென்றுள்ளன என்று துசா கூறியுள்ளார்.

துனிசியாவில் நடைபெற்றது எத்தியோப்பியாவில் நடக்கக் கூடாது என்றார் துசா. ஆனால் ஜனாதிபதி மெலிஸ் ஜெனவனிமோசமான நிலை வரக்கூடும் என்று அஞ்சுகிறார்.

இந்த இயக்கங்கள், முழுப் பிராந்தியத்திலும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு தீவிர சவாலைக் கொடுக்கின்றன. வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் பெரிதும் நம்பியுள்ள ஆட்சிகள் பென் அலி ஆட்சியைப் போல் விரைவில் சரிந்துபோகலாம். துனிசிய தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான ஆதரவு நிலைமையை மறு உறுதி செய்வதற்கு மேற்குடன் தொடர்ந்து ஒத்துழைக்க தயாராக இருக்கும் எதிர்க்கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான முயற்சிதான். ஆனால் இந்த தந்திரோபாயத்திற்கும் துனிசியாவிற்குள் கணிசமான எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக முந்தைய ஆளும் கட்சியான பென் அலியின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி (RCD) யின் உறுப்பினர்களை அரசாங்கத்தில் சேர்ப்பது பற்றி.

இது UGTT என்னும் துனிசிய பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பில் இருந்து வந்த மூன்று மந்திரிகளை FDLT எனப்படும் தொழிலாளர், சுதந்திர ஜனநாயக அரங்கின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான முஸ்தாபா, சுகாதார மந்திரியாக நியமிக்கப்பட்டவர் உட்பட, அரசாங்கத்தில் இருந்து விலகும் கட்டாயத்தை ஏற்படுத்தியது.

RCD மந்திரிகள், இப்பொழுது தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள், கட்சியில் இருந்து விலகினர். இவர்களுள் பிரதம மந்திரி மஹ்மத் கன்னொச்சியும் அடங்குவார். RCD யின் மத்திய குழு கலைக்கப்பட்டுவிட்டது.

அனைத்துத் தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளையும் அங்கீகரிக்கும் முடிவையும் அரசாங்கம் எடுத்துள்ளது. இதில் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட இஸ்லாமியக் கட்சியான என்னடாவும் (Ennahda) அடங்கும். அதன் பணிகளைப் பயன்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியாகும் இது.

ஆனால் RCD கலைக்கப்படுதல் என்பது, புதிய ஆட்சியின் வர்க்கத் தன்மையையோ அல்லது உயர்மட்டத்தில் அவ்வித மாற்றத்தின் அடிப்படையையோ துனிசியாவில் அல்லது மற்ற இடங்களில் ஏகாதிபத்திய நலன்களைக் காப்பாற்றுவதிலோ மாற்றத்தைக் கொடுக்காது. தொழிலாளர்களும் அடக்கப்பட்டுள்ள விவசாயிகளும் தங்கள் நலன்களை காப்பதற்கு ஒரே வழி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைத்து, ஏகாதிபத்தியம் மற்றும் அதனுடைய உள்ளூர் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கு எதிராக ஒரு சர்வதேச போராட்டத்தை நடத்துவதுதான்.