WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
One million affected by Sri Lankan floods
இலங்கை வெள்ளத்தால் ஒரு
மில்லியன் மக்கள் பாதிப்பு
By W.A. Sunil and S. Ajithan
14 January 2011
இலங்கையின்
12 மாவட்டங்களில் இரு வாரங்களுக்கும் மேலாகப் பெய்த பருவமழை காரணமாக ஏற்பட்ட
வெள்ளத்தால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 350,000 க்கும்
அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்டுள்ளதோடு அரசாங்க
கட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் கோயில்கள் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள
இடைத்தங்கள் முகாங்களில் போதுமானளவு உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் மருந்துகளும்
இன்றி தஞ்சமடைந்துள்ளனர். நேற்றுவரை 23 பேர்கள் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளதோடு அநேகமானவர்கள் மண் சரிந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள
பிரதேசங்களாகும். இவை ஏற்கனவே தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தால் சீரழிந்து
போயுள்ளதோடு 2004ல் ஏற்பட்ட சுனாமியினாலும் மோசமாக தாக்கப்பட்டன. வெள்ள நீர்
காரணமாக ஒன்பது கிராமங்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதோடு கடல் மார்க்கமாக
மட்டுமே அங்கு செல்ல முடியும். அப்பிரதேசங்களில் உள்ள பத்தாயிரக்கணக்கான மக்களுக்கு
உணவு மற்றும் மருத்துவ விநியோகங்கள் தேவைப்படுகின்றன. ரயில்பாதைகளும் வீதிகளும்
தண்ணீரில் மூழ்கியிருப்பதால் போக்குவரத்து மற்றும் விநியோக ஏற்பாடுகள் மேலும்
சிக்கலுக்குள்ளாகியுள்ளன.
மட்டக்களப்பு நகரில் வெள்ளம்
அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்படி, கிட்டத்தட்ட 870,000 பேர்
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மட்டும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 தற்காலிக முகாங்களில் 25 முகாங்களுக்குள் வெள்ள
நீர் புகுந்ததால் இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீண்டும் இடம்பெயரத் தள்ளப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு சுமார்
12 பேர் காணாமல் போயுள்ளனர்.
மட்டக்களப்பில் ஏழு ஆஸ்பத்திரிகளுள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின்
சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பரசெடமோல் மற்றும் அன்டிபயடிக்
உட்பட அடிப்படை மருந்துகளுக்கு ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு இருப்பதாக மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். கே. முருகானந்தன் ஊடகங்களுக்குத்
தெரிவித்தார். “வயிற்றுப்
போக்கு நோயாளர்களும் பாம்பு கடித்தவர்களையும் எதிர்பார்க்க முடியும். ஆனால்
நோயாளர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு வருவது பெரும் சிரமம். இன்னமும் கடுமையான மழை
பெய்கின்றது”
என அவர் கூறினார்.
சாதாரண பருவ
மழையைப் போலவே, வட-கிழக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திய அதே
பிராந்திய லா நினா காலநிலை காரணமாகவும் நாடு பாதிக்கப்பட்டுள்ளது என காலநிலை அவதான
நிலையம் விளக்கியது. கிழக்கு இலங்கை மாவட்டங்கள் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ள அதே
வேளை, தீவின் மிகப் பெரும் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் வெள்ளம்
ஏற்படக் கூடும் நிலை உள்ளது. மொத்தமாக 1,727 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு
12,151 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன.
தேசத்தைக்
கட்டியெழுப்பும் ஆய்வு சபையில் மண்சரிவு பகுதிக்கு தலைமை வகிக்கும் ஆர்.எம்.எஸ்.
பண்டார, நாட்டின் 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் நில மற்றும் மண் சரிவு
ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். காணி பற்றாக்குறை மற்றும் அரசாங்கத்தின் திட்டமிடல்
பற்றாக்குறை காரணமாக மலைப் பகுதிகளில் வீடுகளை கட்டுவதும் காடுகளை அழிப்பதுமே மண்
சரிவுக்கான மிகவும் பொதுவான காரணமாக இருக்கின்றன.
ஒரு
பிரமாண்டமான கல் ஏழு சிறிய வீடுகள் மீது சரிந்து விழுந்ததில் மத்திய மலையக
மாவட்டமான கண்டிக்கு அருகில் கெட்டம்பே என்ற இடத்தில் இரு பிள்ளைகள் உட்பட ஏழுபேர்
கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நிலம் அல்லது
மாற்று தங்குமிடங்கள் இல்லாததால் ஏனைய வறிய குடும்பங்களுடன் சேர்ந்து, பல
தசாப்தங்களாக ஒரு கைவிடப்பட்ட கல் உடைக்கும் இடத்தில் வாழ்ந்தனர். அவர்களது வீடுகள்
பலகை அல்லது சீமெந்துக் கற்களால் அமைந்த சிறிய வீடுகள். உயிர்பிழைத்தவர்கள் ஒரு
சனசமூக நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். கண்டிக்கு அருகில் ஏனைய பல பிரதேசங்களில்
இருந்தும் மண் சரிவுச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
மழையும்
வெள்ளமும் பிரதான பயிர்ச்செய்கை நிலங்களை நாசமாக்கியுள்ளன. வட மத்திய மகாணத்தில்
அனுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்கள் உட்பட பல பிரதேசங்களில் பிரமாண்டமான
குளங்கள், அல்லது அணைக்கட்டுகள், உடைத்துக்கொண்டதால் அருகில் இருந்த பயிர்ச்செய்கை
நிலங்கள் மூழ்கிப்போயின. குறைந்தபட்சம் 15,000 ஹெக்டயர் பயிர்கள்
அழிக்கப்பட்டுள்ளதோடு மேலும் 90,000 ஹெக்டயர் பயிர்ச்செய்கை நிலங்கள் தண்ணீரில்
மூழ்கியுள்ளன. கோழி மற்றும் கால்நடை பண்ணைகள் அழிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின்
நெற் பயிர்ச்செய்கையில் குறைந்தபட்சம் 21 வீதம் அழிந்துபோய்விட்டதாக விவசாயத்துறை
அமைச்சு மதிப்பிட்ட போதிலும், இழப்பு மூன்று மடங்காக இருக்கக் கூடும். இந்த
இழப்புக்கள் தவிர்க்க முடியாமல் அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை
அதிகரிக்கச் செய்துள்ளன. “மிகவும்
அடிப்படைப் பொருட்களைப் பெறுவதில் கூட வறியவர்கள் சிரமங்களை எதிர்கொள்வர்”
என கரிடாஸ் தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ஜோர்ஜ் சிகாமனி சீ.என்.என்.
செய்திக்குத் தெரிவித்திருந்தார்.
அழிவு
சம்பந்தமாக அரசாங்கத்தின் பிரதிபலிப்பு முற்றிலும் பற்றாக்குறையாக உள்ளது. அடிப்படை
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை செய்வதற்காக பெருமளவில் இராணுவத்தை அணிதிரட்டுவதன்
மூலம், அடிப்படை பொதுமக்கள் சேவையின் பற்றாக்குறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உணவு, தண்ணீர் தூய்மைபடுத்தும் வில்லைகள், துப்புரவுப் பொருட்கள் மற்றும் படுக்கைப்
பாய்கள் உட்பட சில அத்தியாவசியப் பொருட்களை சர்வதேச உதவி அமைப்புகள் வழங்கின.
உடனடி
நிவாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 25 மில்லியன் ரூபாவும் (227,000 அமெரிக்க
டொலர்) ஏனைய மாவட்டங்களுக்கு மேலும் 25 மில்லியன் ரூபாவும் அரசாங்கம்
ஒதுக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர செவ்வாயன்று
அறிவித்தார். மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொகை
ஒருவருக்கு 50 ரூபா, அல்லது 45 அமெரிக்க சதம் என்ற அற்பத் தொகையாக உள்ளது.
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பயணித்த பின்னர் பொலனறுவை மாவட்டத்தில் புதனன்று
உரையாற்றிய போது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, சுற்று நிரூபங்களை அலட்சியம்
செய்துவிட்டு தமது சொந்த நடவடிக்கைகளில் இறங்குமாறு அரசாங்க ஊழியர்களுக்கு
வேண்டுகோள் விடுத்த போதும், எப்படி அல்லது எங்கிருந்து அத்தகைய சேவைகளுக்கு பணம்
வரும் என்பதை சொல்லவில்லை.
கண்டியில் அகதிகளாக தங்கியுள்ள மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்கள்
மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் 2007ம் ஆண்டு கடைசியாக
வந்த சுற்றறிக்கை, அனர்த்த நிவாரணச் செலவை மட்டுப்படுத்துவதில் முன்னீடுபாடு
கொண்டிருந்தது. வாரத்துக்கான அரிசி மற்றும் பருப்பு போன்ற உலர் நிவாரண விநியோகத்தை,
ஒரு தனி நபருக்கு 245 ரூபாயாகவும் (2.05 அமெரிக்க டொலர்) ஐந்து பேர் கொண்ட
குடும்பத்துக்கு 525 ரூபாயாகவும் (4.06 அமெரிக்க டொலர்) குறைப்பதற்கு அது
வலியுறுத்தியது.
முற்றாக
சேதமடைந்த ஒரு வீட்டுக்கு 50,000 ரூபாவும் பகுதி சேதமடைந்த வீட்டுக்கு 25,000
ரூபாவும் குறைந்தபட்ச நட்ட ஈடாகும். ஒரு சேதமடைந்த விவசாயியின் வீடு மற்றும்
பயிர்களுக்குமான உதவி 50,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சுய தொழிலில்
ஏற்பட்ட அழிவுக்கு 20,000 ரூபாவுமாக வரையறுக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு விலையை
எடுத்துக்கொண்டால் கூட இந்த தொகை முற்றிலும் போதாது.
பரந்தளவிலான
விவகாரம் அரசாங்கத்தாலும் ஊடகத்தாலும் புதைக்கப்பட்டுவிட்டன. பருவமழை இலங்கையின்
பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளத்தை ஏற்படுத்தினாலும், ஆட்சியில் இருந்த
அரசாங்கங்கள், தண்ணீர் அணைக்கட்டுகள் மற்றும் குளங்களை சரியாக பேணுவது மற்றும்
நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்களை திட்டமிடுவது உட்பட எந்தவொரு முன்தடுப்பு
நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளன.
இராஜபக்ஷ
அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை 2006 நடுப்பகுதியில்
மீண்டும் தொடங்கியதோடு அத்தியாவசியமான சரீர மற்றும் சமூக உட்கட்டமைப்பின் செலவில்
இராணுவச் செலவை பிரமாண்டமாக விரிவுபடுத்தியது. 2009ல் புலிகள் தோல்வியடைந்ததில்
இருந்து, சர்வதேச நாணய நிதியம் கோரிய சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தொடங்கிய
அரசாங்கம், உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை திணித்தது. அனர்த்த தடுப்பு
மற்றும் நிவாரணத்துக்கும் மிகவும் குறைந்த முன்னுரிமையே வழங்கப்பட்டது.
அரசாங்கத்தின் நிவாரண முயற்சிகளின் பற்றாக்குறை குறித்து மக்கள் உலக சோசலிச
வலைத் தளத்துடன் உரையாடினர். மட்டக்களப்பில் எஸ். நாதனின் வீட்டை தண்ணீர்
சூழ்ந்துகொண்டுள்ளது. “வழமைக்குத்
திரும்ப எவ்வளவு காலம் எடுக்கும் என எனக்குத் தெரியாது. கையில் இருப்பவை
முடிந்துவிட்டதால் அதுவரை நாம் பட்டினி கிடக்க வேண்டும். அரசாங்க அதிகாரிகள்
பெரிதாக கூறிக்கொண்டாலும், அகதி முகாங்களில் இருக்கும் மக்களுக்கு போதுமான உணவு
நிவாரணம் கிடைக்கவில்லை. மக்கள் துன்பமான நிலையில் இருக்கும் அதே வேளை,
அரசியல்வாதிகள் வெள்ளப்பெருக்கெடுத்த பிரதேசங்களுக்கு ஹெலிகொப்டர் மற்றும் படகுப்
பயணங்களை அனுபவிக்கின்றனர்.
“இங்குள்ள
அநேகமானவர்கள் வறிய விவசாயிகள் அல்லது மீனவர்கள். அவர்களிடம் ஒன்றும் கிடையாது.
எங்களது நிலைமைகளை அழித்த 30 ஆண்டுகால [உள்நாட்டு] யுத்தத்தை நாம் எதிர்கொண்டோம்.
நாம் 2004 சுனாமியையும் எதிர்கொண்டோம். அதில் அநேகமானவர்கள் உயிரையும்
சொத்துக்களையும் இழந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவானோருக்கு
அரசாங்க வீடுகள் கிடைக்கவில்லை. ஏனையவர்களால் அரசாங்கம் கொடுத்த உதவியுடன் தமது
வீட்டை பாதி கட்டிக்கொள்ள முடிந்தது,”
என அவர் தெரிவித்தார்.
கல்முனையில்
இருந்து ஷாமிலா எமது வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது:
“நாங்கள்
வெள்ளத்துக்கு நடுவில் வாழ்கின்றோம். புதிதாக அரைவாசி கட்டப்பட்டுள்ள எங்களது
வீட்டின் ஒரு பகுதி தண்ணீர் மட்டத்துக்கு மேலாக உள்ளது. நாம் அங்குதான்
இருக்கின்றோம். தற்போதைய குளிர் காலநிலை எங்களுக்கு நேயை ஏற்படுத்தும். மற்றும்
எங்களுக்கு மருந்து வசதிகளைப் பெற வழி கிடையாது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளதாக அடிக்கடி அறிவிக்கப்பட்ட போதும், எங்களுக்கு ஒன்றும்
கிடைக்கவில்லை. நாங்கள் சுனாமியில் பல குடும்ப உறுப்பினர்கள் உட்பட சகலதையும்
இழந்தோம். எங்களது நலன் விரும்பிகளின் உதவியுடனேயே நாம் இதுவரை பிழைத்துள்ளோம் |