WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The mass uprising in
Tunisia and the perspective of permanent revolution
துனிசிய மக்கள்
எழுச்சியும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்
World Socialist Web Site editorial board
17 January 2011
துனிசியாவின் நிகழ்வுகள் உலக விவகாரங்களில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. பல
தசாப்த காலங்கள் வெற்றிகரமான பிற்போக்குத்தனமும் மற்றும் வர்க்கப் போராட்டத்தின்
மீதான ஒடுக்குமுறையும் நிகழ்ந்திருந்த பின்னர்,
மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதும் சைன் எல் அபிடின் பென் அலியின் 23 ஆண்டு கால
அடக்குமுறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதும் புரட்சிகர எழுச்சிகளின்
ஒரு புதிய சகாப்தம் எழுந்துள்ளதை அடையாளப்படுத்துகிறது.
ஆயினும்
துனிசிய மக்கள் தங்களது போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே உள்ளனர். புதிய
இடைக்கால ஜனாதிபதியின் கீழும் இராணுவ வன்முறை தொடர்வதில் இருந்து தொழிலாள வர்க்கம்
தீவிரமான அபாயங்களுக்கு முகம் கொடுக்கிறது என்பது ஏற்கனவே தெளிவாகி இருக்கிறது.
புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் தலைமை குறித்த அதிமுக்கிய கேள்வி இன்னும்
தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. ஒரு புரட்சிகரத் தலைமை உருவாக்கப்படாமல்,
இன்னொரு எதேச்சாதிகார ஆட்சி தான் தவிர்க்கவியலாமல் பென் அலியின் இடத்தை நிரப்பும்.
பென்
அலியைக் கீழிறங்கச் செய்த வெகுஜன இயக்கம் திடீரென அதிரடியாக மலர்ந்தது தான் பெரும்
புறநிலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரபு ஆட்சிகளில் மிகவும்
ஸ்திரப்பட்டதானதாகவும்,
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் முதலாளித்துவத்தின் மற்றும் அமெரிக்க
மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களின் அரணாகவும் மேற்கினால் தொடர்ந்து
போற்றப்பட்டு வந்த ஒரு நாடு உண்மையில் தனிமைப்பட்டு,
பலவீனமாக,
அடிவரை இற்றுப் போயிருந்த ஒன்றாய் இருந்தது என்பது ஒரு சில வாரங்களுக்குள்ளாக
வெளிப்பட்டது.
ஒரு
சரியான வேலை கிடைக்காத ஒரு கல்லூரிப் பட்டதாரி இளைஞன்,
காய்கறிகள் விற்று சொற்ப வருமானம் கிட்டக் கூடிய வாழ்வாதாரத்தையும் அதிகாரிகள்
இல்லாது செய்த நிலையில் தன்னை கொளுத்திக் கொண்ட சம்பவம் அரசியல் வாழ்க்கை என்னும்
மேற்பரப்பிற்கு கீழான சமூகக் கட்டிடக் கிடங்கில் பற்றவைத்த வத்திக்குச்சியாக சேவை
செய்தது. நீக்கமற நிறைந்திருக்கும் வேலைவாய்ப்பின்மை,
வறுமை,
சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொடுங்கோன்மை மற்றும் ஊழல்
ஆகியவற்றின் மீது மில்லியன்கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் கொண்டிருந்த கோபத்தை
இத்துயரகரமான சம்பவம் ஒருமுகப்படுத்தியது.
துனிசியாவில் வெடிப்புக்கு இட்டுச் சென்ற சமூக நிலைமைகள் தான் மெஹ்ரேப் மற்றும்
மத்திய கிழக்கு முழுவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அத்துடன் ஒரு உலகளாவிய
பொருளாதார நெருக்கடி மற்றும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மூலமான ஒரு
மிருகத்தனமான தாக்குதல் ஆகிய நிலைமைகளின் கீழ் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில்
இந்த சமூக நிலைமைகள் தான் பெருகிய முறையில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டு
நிற்கின்றன.
இஸ்லாமிய சக்திகள் பரந்த எதிர்ப்புப் போராட்டங்களில் ஏறக்குறைய எந்த
பாத்திரத்தையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதம்,
இனம் மற்றும் தேசிய அடையாளம் ஆகிய இரண்டாம்பட்ச மற்றும் மூன்றாம்பட்சமான
பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு பொருளாதார மற்றும் அரசியல்
வாழ்க்கையை ஆதிக்கம் செய்யக் கூடிய அடிப்படையான சமூக மற்றும் வர்க்கப் பிரச்சினைகள்
உலகெங்கும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
பென்
அலியின் வீழ்ச்சி துனிசியா மற்றும் அரபு உலகின் எஞ்சிய பகுதிகளைச் சேர்ந்த
முதலாளித்துவத்திற்கும்,
அத்துடன் அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு அதிர்ச்சியாய்
இறங்கியுள்ளது. அருகிலுள்ள அல்ஜீரியாவிலும் இன்னும் கிழக்கே ஜோர்டானிலும் வெகுஜன
ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளது அவர்களை இன்னும் கூடுதலான கவலைக்கு
ஆட்படுத்தியுள்ளது.
துனிசின் தலைநகரை முற்றுகையிடவும் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான
கோரிக்கையிலும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் இராணுவத்தையும்
போலிசையும் எதிர்த்து நின்றதான காட்சிகள் நியூயோர்க்,
பாரிஸ்,
பிராங்க்ஃபர்ட் மற்றும் ஏகாதிபத்திய நிதியின் மற்ற மையங்களில் உள்ள வங்கியாளர்கள்
மற்றும் ஊக வணிகர்களின் முதுகுத் தண்டுகளில் சிலிர்ப்புடன் கூடிய நடுக்கத்தை
ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழல் மோசடிகளிலும் செல்வத்தை
பகட்டாய் காட்டிக் கொள்வதிலும் எந்த ஆளும் உயரடுக்கும் அமெரிக்காவுக்குப் பிந்தைய
இருக்கைக்கு ஒப்புக் கொள்வதில்லை.
துனிசிய
நிகழ்வுகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டின் பதிலிறுப்புமே முற்றுமுதலாய்
சிடுமூஞ்சித்தனமானதாகவும் கபடவேடமிடுவதாயும் உள்ளன. பென் அலி ஆட்சியின்
ஒட்டுமொத்தமான ஊழல் குறித்து ஏகாதிபத்திய மூலதனங்கள் அனைத்தும் நன்கு அறிந்தே
இருந்தன.
துனிசிய
ஆட்சியை கொள்ளைக்கார ஆட்சி என்றும் சர்வாதிகாரம் என்றும் கடுமையான வார்த்தைகள்
மூலம் விவரித்து அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்த ஆவணங்கள்
விக்கிலீக்ஸ் மூலம் வெளியானதும் இந்த போராட்டங்கள் பரவியதில் பங்களித்த காரணிகளில்
ஒன்றாகும். துனிசியாவில் சமூகப் போராட்டங்களின் வெடிப்பில் விக்கிலீக்ஸ் கசிவுகள்
ஆற்றியிருக்கும் பங்கு விக்கிலீக்ஸ் அம்பலமாக்கல்களுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம்
ஏன் வெறிபிடித்தது போல் பதிலிறுக்கிறது என்பதை விளக்க உதவுகிறது.
துனிசிய
ஆட்சியின் கொள்ளையை தங்களது பொருளாதார மற்றும் பூகோள-மூலோபாய நலன்களுக்கு அடிபணியச்
செய்வதற்கே அமெரிக்காவும் சரி ஐரோப்பாவும் சரி முடிவு செய்திருந்தன. ஐரோப்பிய
ஒன்றியமும்,
குறிப்பாக முன்னாள் காலனியாதிக்க சக்தியான பிரான்சும்,
துனிசியாவுடன் விரிவான பொருளாதார உறவுகளை ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றன. தனது
“பயங்கரவாதத்தின் மீதான போரின்” பின்னால் அணிவகுத்ததற்குப் பிரதிபலனாக
இச்சர்வாதிகாரத்திற்கான இராணுவ மற்றும் அரசியல் உதவியை அமெரிக்கா
அதிகப்படுத்தியிருந்தது.
மனித
உரிமைகளைப் பாதுகாப்பதாயும் ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாயும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
போடும் வேடங்களின் வெற்றுத்தனத்தை இந்த அரசியல் மற்றும் இராணுவ உறவுகள்
அம்பலமாக்குகின்றன. மிக சமீபத்தில் அதாவது சென்ற வார சமயத்தில் கூட,
அரபுத் தொலைக்காட்சி ஒன்றின் பார்வையாளர்களிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை
அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் கூறுகையில்,
துனிசிய நெருக்கடியில் அமெரிக்கா “எந்தப் பக்கத்திலும்” நிற்கவில்லை என்றார்.
தசாப்த காலங்களுக்கு அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்தவர் வெளியேறுவது உறுதி என்பது
தெளிவான பின் தான் அமெரிக்க அரசாங்கம் தனது ராகத்தை மாற்றியது.
ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரிப்பதாகக் கூறியதோடு மிதமிஞ்சிய வன்முறைக்காக அந்த
ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தது.
தணிக்கவியலாத குரோதம் தான் துனிசிய வெகுஜன இயக்கத்தை நோக்கிய அமெரிக்க ஆளும்
வர்க்கத்தின் உண்மையான மனோபாவம் என்பதை வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளின்
ஆசிரியர் குழுவின் ஒரு உறுப்பினரான ஜேக்சன் டீலின் ஒரு வருணனை சுட்டிக் காட்டியது.
டீல் வெள்ளியன்று எழுதினார்: “மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு மிக உடனடியான
அச்சுறுத்தலாக இருப்பது போர் அல்ல,
புரட்சி தான்”.
அவர்
மேலும் கூறினார்: “வன்முறை ஏற்கனவே அல்ஜீரியாவுக்குள் சென்று விட்டது. ’துனிசியா
காட்சி’ அடுத்து எங்கு தோன்றும்,
எகிப்திலா?
ஜோர்டானிலா?
லிபியாவிலா?
என்று அரபு ஊடகங்கள் ஆருடம் கூறிக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து நாடுகளுமே
துரிதமாய் உயரும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் அச்சுறுத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை சென்ற வாரத்தில் ”உணவு விலை அதிர்ச்சி”
குறித்து எச்சரித்தது.”
சென்ற
வாரத்தில் துனிசியாவில் நடந்த நிகழ்ச்சிகள் தொழிலாள வர்க்கத்தின் செறிந்த சமூக
சக்தியையும் புரட்சிகர சாத்தியத்திறனையும் மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டியுள்ளன.
ஆனால் ஒரு தெளிவான புரட்சிகர முன்னோக்கும்,
வேலைத்திட்டமும் மற்றும் தலைமையும் இல்லாமல் இருப்பதென்பது வெகுஜன இயக்கத்தின்
மையமான பலவீனமாக உள்ளது.
தேசிய
முதலாளித்துவமும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் சுதாரித்துக் கொள்வதற்கும் வெகுஜன
எதிர்ப்பை நசுக்கி துனிசிய முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான புதிய வழிகளை
உருவாக்குவதற்கும் இது ஏதுவாக்கி விடுகிறது. பென் அலி ஓடி விட்டதன் மூலம் வெகுஜன
வெறுப்பின் மிக நேரடியான இலக்கு ஏற்கனவே அகன்று விட்ட நிலையில்,
துனிசிய ஆட்சி ஏற்கனவே ஒரு எதிர்த்தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒரு
“ஐக்கியப்பட்ட அரசாங்கம்” மற்றும் தேர்தல்களுக்கான வாக்குறுதி ஆகிய மறைப்புகளின்
கீழ்,
அவசர நிலையும் ஊடரங்கும் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதோடு போலிசாரும் படையினரும்
ஆட்சியின் எதிர்ப்பாளர்களைக் கைது செய்வதையும் சுட்டுத் தள்ளுவதையும் தொடர்ந்து
கொண்டிருக்கின்றனர்.
புரட்சிகரப் போராட்டம் எழுந்துள்ளதானது அரசியல் நனவு,
முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் கேள்வியை ஆக முக்கியமானதாக ஆக்கியுள்ளது.
துனிசியா மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் வரலாறுமே நிரந்தரப் புரட்சி
முன்னோக்கின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் படைக்கப்பட்ட
உலகப் புரட்சிகர மூலோபாயத்தை அழுத்தம்திருத்தமாய் உறுதிப்படுத்துவதாக உள்ளன.
ஸ்ராலினிசம்,
சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான வகையில் ட்ரொட்ஸ்கி
விளக்கியதைப் போல,
ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில்,
தாமதப்பட்டு
முதலாளித்துவ அபிவிருத்தி கண்ட நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்கள் ஜனநாயகப்
புரட்சியின் அடிப்படைக் கடமைகளில் எதனையும் ஆற்றுவதற்கு திறனற்றதாய் இருக்கின்றன.
பலவீனமாகவும் சார்பு கொண்ட நிலையிலும்,
அத்துடன் அந்நிய ஏகாதிபத்தியம் மற்றும் பூர்விக நிலவுடைமை சக்திகளுடன் எண்ணிலடங்கா
தளைகள் மூலம் கட்டப்பட்டுள்ள நிலையிலும் இருக்கிற துனிசியா போன்ற நாடுகளின்
முதலாளித்துவ வர்க்கங்கள் அவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு காட்டுவதை விடவும் ஆயிரம்
மடங்கு கூடுதலான அச்சத்தையும் குரோதத்தையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர
சக்தியை நோக்கிக் காட்டுகின்றன.
இந்த
வரலாற்று ஆய்வுமுடிவின் சரியான தன்மைக்கு ஒரு பாடப்புத்தக உதாரணமாகவே 1957ல்
சுதந்திரம் பெற்றது முதலான துனிசியாவின் வரலாறு அமைந்துள்ளது. இரும்புக் கரம்
கொண்டு ஆட்சி செய்து வந்திருக்கக் கூடிய தேசிய முதலாளித்துவ வர்க்கம் வெகுஜனங்கள்
மீது வறுமையைத் திணித்த அதே சமயத்தில் துனிசியப் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய
வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாடில்லாத சுரண்டலுக்குத் திறந்து
விட்டது. அல்ஜீரியா விடயத்திலும் இது உண்மையாக இருக்கிறது. இங்கு 1960களில்
காலனியெதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்த தேசிய விடுதலை முன்னணி இன்று
போராட்டம் நடத்தும் தொழிலாளர்களைத் தாக்குவதோடு ஊழல்படிந்த ஆளும் உயரடுக்கு மற்றும்
அந்நிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களுக்காக “சுதந்திரச் சந்தை”
கொள்கைகளைத் திணிக்கிறது.
பல்வேறு
தேசிய இயக்கங்கள் அனைத்தும் (முன்னதாக தங்களை ஒரு பாதி-சோசலிஸ்டாக காட்டிக்
கொண்டிருந்தவர்களும் இவற்றில் உண்டு) இன்று தங்களது சொந்த மக்களை ஒடுக்குவதில்
ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வேலை செய்கின்றன. பா’த்யிசம் (Ba'athism),
நாசரிசம்,
பாலஸ்தீன விடுதலை அமைப்பு அல்லது எந்த லிபிய வகையும் ஏகாதிபத்தியம்,
வேலைவாய்ப்பின்மை,
வறுமை மற்றும் பொருளாதாரப் பின்தங்கிய நிலை ஆகியவற்றில் இருந்து உண்மையான விடுதலை
பெறுவதற்கான கேள்விகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை.
”அமைதி
காக்க” மற்றும் “ஸ்திரநிலை காக்க”,
அதாவது வெகுஜன இயக்கம் ஒடுக்கப்படுவதற்கு,
வலியுறுத்துவது தான் துனிசிய நிகழ்வுகளுக்கு அரபு லீக்கின் பதிலிறுப்பாய் உள்ளது.
லிபியாவின் கடாபி,
போராட்டக்காரர்களுக்கு எதிராக பென் அலியை பாதுகாத்துப் பேசியதோடு ஒரு புதிய
போல்ஷிவிக் புரட்சி குறித்தும் எச்சரித்தார்.
”ஜனநாயகப் புரட்சி” என்று அழைக்கப்படுவதான ஒன்றுக்கு (ஐரோப்பிய போலி-இடது
குழுக்களால் பல்வேறு வடிவங்களில் இது முன்னெடுக்கப்படுகிறது) அழைப்பு விடுவதென்பது
ஒரு முட்டுச் சந்தாகும். உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளுக்கும்
தொழிற்சங்கங்களுக்கும் கூடுதல் செல்வாக்கை வழங்குவதற்கு ஆட்சிக்கு தொழிலாளர்கள்
நெருக்குதலளிக்க இந்த அமைப்புகள் விரும்புகின்றன. ஆயினும் ஆட்சிக்கு எதிராகவோ
அல்லது அதன் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராகவோ ஒரு போராட்டத்தை முன்நிறுத்த இந்த
அமைப்புகளில் எதுவும் முனையவில்லை. துனிசிய தொழிலாளர்களுக்கான பொதுச் சங்கம் (UGTT)
சென்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் பென் அலியை ஆதரித்ததோடு அவரது சுதந்திரச்
சந்தை “சீர்திருத்தங்களை” உத்தியோகபூர்வமாய் வழிமொழிந்தது.
துனிசியா மற்றும் ஒட்டுமொத்த மெஹ்ரேப் மற்றும் மத்திய கிழக்கின் தொழிலாள வர்க்கம்
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரே உகந்த வேலைத்திட்டம் என்பது நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்படும் சோசலிசப் புரட்சிக்கான
வேலைத்திட்டம் ஆகும். தேசிய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் இரண்டிற்கு
எதிராகவும் சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்கும் தலைமையேற்று தொழிலாள
வர்க்கத்தால் சுயாதீனமாக நடத்தப்படும் போராட்டத்தின் மூலமாக மட்டுமே ஜனநாயக மற்றும்
சமூக உரிமைகள் வெல்லப்பட முடியும்,
அத்துடன் சமூக சமத்துவத்தை அரசியல் வாழ்வின் அத்திவாரமாய் ஸ்தாபிக்க முடியும்.
இந்த
போராட்டம் வெறுமனே ஒரு தேசிய அளவில் நடத்தப்பட முடியாது. உலக சோசலிசப் புரட்சியின்
பகுதியாக மத்திய கிழக்கு மற்றும் மெஹ்ரேப்பின் சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்கிற
பதாகையின் கீழ் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு வட ஆபிரிக்கா மற்றும்
மத்திய கிழக்கு முழுவதிலும் ட்ரொட்ஸ்கிசக் கட்சிகள் கட்டப்பட வேண்டும்.
இந்தப்
போராட்டம் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முன்நிற்கும் தொழிலாளர்
போராட்டங்களுடன் (இப்போராட்டங்களில் பலவற்றிலும் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய
கிழக்கில் இருந்தான அரபு தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்) நனவான
முறையில் இணைக்கப்பட வேண்டும்.
இந்த
சர்வதேசிய அடிப்படையில் மட்டுமே,
ஏகாதிபத்தியத்தாலும் முதலாளித்துவத்தாலும் இடைவிடாது தூண்டிவிடப்படும் மத,
தேசிய மற்றும் இனப் பிளவுகள் வெல்லப்படவும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட
தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தி அணிதிரட்டப்படவும் முடியும்.
உலகெங்கிலுமான அரசியல் அபிவிருத்திகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கும் மற்றும்
பகுப்பாய்வு செய்வதற்கும் அத்துடன் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின்
போராட்டங்களுக்கு அவசியமான முன்னோக்குகளை வழங்குவதற்குமான ஒரு அன்றாட அங்கமாக உலக
சோசலிச வலைத் தளத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உருவாக்கியுள்ளது.
துனிசியா மற்றும் மத்திய கிழக்கு எங்குமான உ.சோ.வ.த. வாசகர்கள் எங்களது வலைத்
தளத்தைத் தொடர்பு கொள்ள நாங்கள் அழைக்கிறோம். துனிசியாவிலும் மற்றும் ஒட்டுமொத்தப்
பிராந்தியத்திலும் சர்வாதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும் முடிவு காண முனையும்
அனைவருக்கும் நா.அ.அ.கு. பிரிவுகளைக் கட்டுவதற்கான போராட்டத்தை கையிலெடுக்க அழைப்பு
விடுகிறோம். |