World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The flood crises in Sri Lanka and Australia

இலங்கையிலும், ஆஸ்திரேலியாவிலும் வெள்ள நெருக்கடிகள்

Mike Head
15 January 2011
Back to screen version

இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் லா நினா (La Niña) எனும் ஒரேமாதிரியான பிராந்திய வானிலை நிலைமைகளால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், இரு நாடுகளுமே பேரழிவுமிக்க விளைவுகளைப் பெற்றுள்ளன. இலங்கையில், குறிப்பாக மட்டக்கிளப்பு மற்றும் அம்பாறையின் கிழக்கு மாவட்டங்களில் கொட்டிய பேய்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில், குறிப்பாக வடகிழக்கு மாநிலமான குவின்ஸ்லாந்திலும் அதன் தலைநகர் பிரிஸ்பேனிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் நீரால் சூழப்பட்டுள்ளது.

மேலோட்டமான பார்வைக்கு, நிலைமைகள் வெவ்வேறானவையாக தெரியும். அதாவது, இலங்கை ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாக இனவாத யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, பொருளாதாரரீதியில் பின்தங்கிய, டிசம்பர் 2004இல் ஏற்பட்ட சுனாமியினால் ஒரு பேரழிவைச் சந்தித்த, மிக அடிப்படையான உள்கட்டமைப்பிலும் பின்தங்கிய ஒரு நாடாக உள்ளது. ஆஸ்திரேலியா நவீன வசதிகளுடன், அதிநுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு பெரும் முன்னேறிய நாடாகவுள்ளது.

இருந்தபோதினும் இரண்டு நாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள், முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக இருந்தும் கூட, அந்த பெரும் மோசமான வானிலை நிகழ்வுகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாக்கவும், முன்கூட்டியே எச்சரிக்கவும் முற்றிலும் திறனற்று இருந்ததை நிரூபித்துள்ளன. இந்தளவிற்கான இயற்கைச்சீற்றத்தின் தாக்கம் மற்றும் வலிமை பெரும் சவால்களை முன்நிறுத்துகின்றன என்றபோதினும், நில மேலாண்மை, நகர திட்டமிடல், குடிநீர் வினியோகம், அவசரகால சேவைகள் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் பெருநிறுவன இலாபத்தின் அதிகார ஆணைக்கு பரந்தமட்டத்தில் அடிபணிந்துள்ளதால் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளும் அவற்றோடு பின்னிபிணைந்துள்ளன.

இவற்றிடையே முக்கியமான பொதுவான அம்சங்களும் இருக்கின்றன. அவை: அரசாங்க செலவின வெட்டுக்கள், மோசமான அல்லது சேதமடைந்த உள்கட்டமைப்பு, அடிப்படை சேவைகளின் தனியார்மயமாக்கம் அல்லது வர்த்தகமயமாக்கம், இலாப நோக்கில் வீடு மற்றும் நிலவிற்பனையின் வளர்ச்சி, போதியளவிற்கு அவசரகால சேவைகள் இல்லாமை, உத்தியோகபூர்வ மீட்பு நடவடிக்கைகளிலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரண உதவிகளிலும் காணப்படும் பரிதாபகரமான அளவுகள். இவை வெறுமனே அலட்சியம் மற்றும் புறக்கணிப்பின் விளைவுகள் அல்ல, மாறாக வணிக உயர்தட்டுகளின் நலன்களுக்காக செய்யப்பட்ட முக்கிய முடிவுகளிலிருந்து வெளிவருகின்றன.

பாதிக்கப்பட்ட பலரின் கொடிய ஏழ்மை, முன்கூட்டிய அடிப்படை பாதுகாப்பு முறைமைகள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாதது, தொடர்ச்சியான அரசாங்கங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதயுத்தத்துக்குள் பெரும் ஆதாரவளங்களை திருப்பிவிட்டது ஆகியவற்றால் இலங்கையில் சமூக பேரழிவுகள் மிகவும் வெளிப்படையாக தெரிகின்றன. 25 ஆண்டு யுத்தத்தின் போதும், 2004 சுனாமியின் போதும் 350,000 மக்களில் பலரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி படுமோசமான மீட்பு முகாம்களில் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இடம் பெயர்த்தப்பட்டனர். அழுக்கடைந்த சில முகாம்களும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதால், மக்கள் மீண்டும் அங்கிருந்து வெளியேறி ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மோசமாக பராமரிக்கப்பட்ட ஏரிகள் அவற்றின் கரைகளை உடைத்துக் கொண்டு வயல்களை அழித்து நாசமாக்கின. உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட 23க்கும் மேலான மரணங்கள் நிலச்சரிவுகளில் ஏற்பட்டிருந்தன. அரசாங்கத்தின் முறையான நில திட்டமிடல் இல்லாததால், பொதுவாக மலைச்சரிவுகளில் வீடுகள் கட்டப்படுவதாலும் மற்றும் காடழிப்பு ஆகியவற்றாலேயே உயிரிழப்புகள் ஏற்படும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலைப் புலிகள் வசமிருந்த இடங்களுக்குள் தாறுமாறாக குண்டுவீசியிருந்த இலங்கை அரசாங்கம், அதே பகுதிகளுக்குள் இராணுவத்தை மீண்டும் அனுப்புவதே அடிப்படையில் அதன் பேரழிவு நிவாரணத் திட்டமாக உள்ளது. அந்த குண்டுவீச்சுக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

டிசம்பர் மத்தியில் வெள்ள நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து இதுவரையில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டது பலவழிகளில் இன்னும் வெளிப்படையானதாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்களும், தொலைதொடர்புகளும் இருந்தபோதினும், முறையான எச்சரிக்கைகள் இல்லாமல், சுய உதவி ஆர்வலர்கள் தவிர, போதிய வேறெந்த உதவியும் இல்லாமல் சாதாரண குடிமக்கள் அந்த துன்பங்களை முகங்கொடுக்க விடப்பட்டார்கள். நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய நகரமும், இரண்டு மில்லியனுக்கும் மேலான மக்களைக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய மாநகரான பிரிஸ்பெனின் ஆற்றோர புறநகரங்களின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குவின்ஸ்லாந்தைச் சுற்றியிருக்கும் பெருநகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் சிற்றூர்களும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன அல்லது பல நாட்களாக வெள்ளநீரால் தொடர்பற்று துண்டிக்கப்பட்டுள்ளன. முக்கிய சுரங்கங்கள், தொழிற்சாலைகள், சாலைகள், இரயில்பாதைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் அனைத்தும் பெரும் பொருளாதார மற்றும் சமூக விலையைக் கொடுத்து முடங்கிக் கிடக்கின்றன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், அல்லது உதவியற்று மீட்கப்படாமல் வாகனங்கள் மற்றும் வீட்டுமாடிகளில் இருந்து கதறிக்கொண்டிருக்கும், அல்லது கடைசி நிமிடத்தில் உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு தங்கள் வீடுகளையும் கைவிட நிர்பந்திக்கப்பட்ட மக்களின் கொடூரமான காட்சிகள் அங்கே காணப்படுகின்றன. அதிகபட்ச வெள்ளப்பெருக்கை அணைகள் தாங்காது என்று பல ஆண்டுகளாக நிலவியலாளர்களால் மற்றும் பொறியாளர்களால் முன்வைக்கப்பட்ட எச்சரிக்கைகளையும், அறிக்கைகளையும் அரசாங்கங்கள் புறக்கணித்து, அவற்றை மறைத்து வைத்தது என்பதற்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் குடியிருப்புகளின் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை என்பதற்கும், மற்றும் வெள்ள நிவாரண திட்டங்களில் வெட்டுக்களைச் செய்திருந்தன என்பதற்கும் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. அணைகள், குடிநீர் வினியோகம் மற்றும் வெள்ள நிவாரணம் ஆகியவற்றிற்குப் பொறுப்பான தென்கிழக்கு குவின்ஸ்லாந்து அமைப்பை வர்த்தகரீதியாக இயங்கும், பணம் குவிக்கும் பெருநிறுவனத்திற்கு மாற்றியது உட்பட, முதலீட்டாளர்களின் இலாபங்களை அதிகரிப்பதற்கு சாதகமாக முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

எந்தவிதமான புறநிலை மதிப்பீட்டிலிருந்து பார்த்தாலும், இது அரசாங்கத்தின் மற்றும் தற்போதைய பொருளாதார அமைப்புமுறையின் ஒரு பாரிய தோல்வியையே குறிக்கிறது. வெள்ளப்பெருக்கு இன்னும் கூட நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுடன் நான்கு-மாத மழைகாலம் முடியும் முன்னர் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். மக்கள் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பதற்குள் அளவிடமுடியாத அளவிற்கு சமூக மற்றும் பொருளாதார விலையை கொடுக்க வேண்டியதிருக்கும். பல வீடுகளும், சிறு வியாபாரங்களும் வெள்ளப்பெருக்கு காப்பீடு செய்யப்படாமல் இருக்கின்றன. பல காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்று காப்பீடு அளிக்க மறுக்கின்றன அல்லது அதிகப்படியான கூடுதல் கட்டணத்துடன் மட்டுமே அளிக்கின்றனர். அரசாங்க சலுகைகளின் அற்பத்தனமான பாத்திரத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், பல மக்கள், இலங்கையில் இருப்பதைப் போலவே, தங்களின் சொந்த ஆதாரங்களைக் கொண்டும், தங்களின் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சுயஆர்வ சேவைகளின் சுயநலமற்றதன்மையையுமே சார்ந்திருந்து மீண்டு வர போராடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட், அதேபோல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை போலவே, புனரமைப்பு வேலைகளுக்கு செலவிடப்படும் அனைத்து செலவுகளும் ஏனைய அரசாங்க வெட்டுக்கள் மூலமாக ஈடுசெய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 2008க்குப் பின்னர் ஏற்பட்ட வரவு-செலவு பற்றாக்குறையை 2013க்குள் நிவர்த்திசெய்துவிட நிதியியல் சந்தைகளுக்கு அளித்த தம்முடைய உறுதிமொழி, கூறியபடி நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டிருந்த கில்லார்ட், “கடுமையான நடவடிக்கைகள்" உள்ளடக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். 2009 வரவு-செலவு நிதி பற்றாக்குறை 2012க்குள் பாதியாக குறைக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் முறையீட்டை பூர்த்திச் செய்ய இராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளார். “தேசிய ஐக்கியம்" மற்றும் "ஒன்றாக இணைத்தல்" போன்ற இரண்டு நாடுகளின் உத்தியோகப்பூர்வ பேச்சுக்கள் அனைத்தையும் பொறுத்த வரையில், வெள்ள நெருக்கடியின் சுமையை நேரடியாக உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்தவிருப்பதையே குறிக்கிறது.

இந்த பிரச்சினைகள் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு மட்டும் பொருந்தியதல்ல. தென்கிழக்கு பிரேசிலில் ரியோ டி ஜெனீரோவிற்கு அருகிலுள்ள மலைகள் சூழ்ந்த பகுதிகளிலும், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் இந்த வாரம் 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இங்கெல்லாம் அரசாங்கங்கள் கட்டுமானங்களை முறையாக கட்டுப்படுத்த தவறியிருந்தன. சமீபத்திய வாரங்களில் ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்கா முழுவதும் வெள்ளப்பெருக்கும், அசாதாரணமான குளிரும் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன. பாகிஸ்தானிலும், ஹைட்டியிலும் கைவிடப்பட்ட மில்லியன்கணக்கான மக்கள் 2010இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பூகம்பத்திற்குப் பின்னால் புனரமைப்பு உதவிகளுக்காகவும், நிவாரணத்திற்காகவும் வெறுமனே இன்னமும் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் சாதாரண மக்களுக்கு மிகவும் அடிப்படை பாதுகாப்புகளையும், சேவைகளையும் கூட அளிக்கமுடியாத ஒரு சிதைந்துபோன பொருளாதார மற்றும் சமூக அமைப்புமுறையின் அறிகுறிகளாக இருக்கின்றன. 2008இல் தொடங்கிய உலகளாவிய நிதியியல் பொறிவை உருவாக்கிய வங்கிகளுக்கும், நிதியியல் அமைப்புகளுக்கும் பிணையெடுப்பு அளிக்கப்பட்டன; ஆனால் தற்போது இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அரசாங்கங்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் சிக்கன முறைமைகளைத் திணித்து வருகின்றன. இது நிலைமையை இன்னும் மோசமடைய மட்டுமே செய்யும். மனிதயினம் ஒரு முன்னோக்கிய வழியைக் கண்டறிய வேண்டுமானால், பகுத்தறிவுடன் திட்டமிட்டு, ஜனநாயக மற்றும் சமத்துவவாதத்திற்கு ஒத்த வகையில், பெரும் இயற்கை பேரழிவுகளின் மோசமான விளைவுகளைக் கையாளவும், தடுக்கவும் தற்போதுள்ள அனைத்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளங்களையும் கவசமாக பயன்படுத்தி சமூகத்தை முற்றிலுமாக மறுகட்டுமானம் செய்ய சர்வதேசரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு புரட்சிகர சோசலிச தலைமை தேவைப்படுகிறது