சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Tunisian president flees the country

துனிசிய ஜனாதிபதி நாட்டுவிட்டு ஓடுகிறார்

By Ann Talbot
15 January 2011

Use this version to print | Send feedback

ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலி துனிசியாவை விட்டு ஓடிவிட்டார். நெருக்கடிக்கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவம் விமான நிலையத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதுடன், மூன்று பேருக்கு மேல் ஒன்றாகக் கூடக்கூடாது என்ற தடை வந்துள்ளது. இராணுவ உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய எவரேனும் மறுத்தால், அவர்கள் சுடப்படுவர் என்று அரசாங்கத் தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பு எச்சரித்துள்ளது. இரவில் நாடு மீண்டும் ஊரடங்கு உத்தரவின்கீழ் உள்ளது. இது உள்துறை அமைச்சரகத்திற்கு வெளியே ஒரு அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு மறுநாள் வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய துனிசில் அவென்யூ பௌர்கிபாவில் அணிவகுத்துச் சென்று அமைச்சரகத்தின் முன் கூடி பென் அலியின் உடனடி இராஜிநாமாவைக் கோரியதுடன் நாள் ஆரம்பமானது. அவர்கள்பென் அலி வேண்டாம், வேண்டாம்; எழுச்சி தொடரும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டம் துனிசியாவின் தலைநகரில் நடப்பது இதுதான் முதல் தடவையாகும். ஜனாதிபதியின் வியாழன் இரவு தொலைக்காட்சி உரையில் தான் 2014 அடுத்த தேர்தலை ஒட்டித் தான் பதவி விலகுவதாக உறுதியளித்திருந்ததையும் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை சுடுவதை நிறுத்துமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டதையும் அடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

துனிசிய பொதுத் தொழிலாளர் சங்கமான UGTT யினால் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது ஒரு இரு மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாகும். பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவும் இராணுவப் பிரிவுகளும் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரகத்தை தாக்குவதை தடுக்க முயன்றன. இறுதியில் அவர்கள் பின்வாங்கி கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு, குறிவைத்துச் சுடுவோர் அருகே இருந்த கட்டிடங்களின் மேற்பகுதியில் நிலையெடு்த்துக்கொண்டனர்.

உள்துறை அமைச்சரகம் பயங்கரவாத அமைச்சரகம் ஆகும் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நிறைந்திருந்த கூட்டம் கூவியது.

உள்துறை அமைச்சரகம் குறிப்பிடத்தக்க வகையில் வெறுப்பிற்கு உட்பட்டிருந்தது; இதற்குக் காரணம் அது உத்தியோகபூர்வ அறிக்கையின்படி 23 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த (ஒருவேளை எண்ணிக்கை சற்று கூடுதலாகவும் இருந்திருக்கலாம்) தாக்குதலின் மையமாக இருந்தது. இது நீண்டகாலமாகவே சித்திரவதை உத்தரவு கொடுக்கும் இடம் என்ற குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.

துனிசியாவில் ஒவ்வொரு 40 குடிமக்களுக்கும் ஒரு பொலிஸ் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் அவர்களுள் மூன்றில் இரு பகுதியினர் சீருடையணியாத சாதாரண உடை அணிபவர்களாவர். பென் அலியின் 23 ஆண்டு ஆட்சி முழுவதும் அவர் அச்சம் என்னும் சூழ்நிலையைத் தோற்றுவித்து, கடுமையான அடக்குமுறை இயந்திரத்தின் மூலம் தனது ஆட்சியை  தக்க வைத்திருந்தார்.

ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் ஒரு களிப்பு நிறைந்த சூழலைக் கொண்டிருந்தது. இதில் தங்கள் உத்தியோக உடையுடன் வக்கீல்கள், டாக்டர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னாள் அரசியல் கைதிகள் ஆகியோர் இருந்தனர். எதிர்ப்பாளர்கள் தேசிய கீதத்தைப்பாடி படையினருடன் கைகுலுக்கிக் கொண்டனர். சாதாரண உடையணிந்த பொலிசார் இருந்தாலும் ஆர்ப்பாட்டக்காரர்களையோ அல்லது செய்தியாளர்களையோ குறுக்கீடு செய்யவில்லை. You Tube போன்ற தடைக்குட்பட்ட இணைய வலைத் தளங்கள் மீண்டும் ஒரு இரவிலேயே கிடைத்தன.

ஒரு மணி நேரத்தில் சூழ்நிலை வியத்தகு முறையில் மாறியது. பிற்பகலை ஒட்டி பொலிஸார் கூடுதலாக வந்து சேர்ந்ததுடன், கண்ணீர்ப்புகை குண்டுகளால் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கத் தொடங்கினர். துப்பாக்கி சூடுகளும் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன.

அதுவரை கூச்சல் இருந்தும் மிகவும் வன்முறையற்ற ஆர்ப்பாட்டம் இப்பொழுது பீதியில் சிதையத் தலைப்பட்டது. மகளிரும் குந்தைகளும் அச்சத்தில் தப்பியோட முற்பட்டனர். ஆனால் கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவு அவர்களை பக்கச் சந்துகளில் துரத்தித் தொடர்ந்து அதிக கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் துரத்தி, தடியால் அடித்து மக்கள் தரையில் வீழ்ந்தபோது கால்களால் உதைத்தனர். சில எதிர்ப்பாளர்கள் கட்டிடக் கூரைகள்மீது கூட விரட்டி அடிக்கப்பட்னர். அப்பகுதியில் இருந்து நிருபர்கள் தொடர்ந்த மோதல்களைப் பற்றிய தவகல்களைக் கொடுத்துள்ளனர். கூட்டத்தில் இருந்த கார்டியனின் பாரிஸ் நிருபர் Angelique Chrisafis ட்வீட்டரில், “இத்திருப்பம் மிக மிக மோசமானது என்று எழுதியுள்ளார்.

இதற்குச் சிறிதுநேரத்தின் பின்னர் அரசாங்கத்தின் செய்தி அமைப்பு, பென் அலி முழு அரசாங்கத்தையும் கலைத்து அவசரகால நிலைமயை அறிவித்துள்ளதாகப் பிரகடனம் செய்தது. இப்பிரகடனம் இன்னும் ஆறுமாத காலத்தில் தேர்தல்கள் வரும் என்று கூறியது. பிரதம மந்திரி மஹ்மத் கன்னோச்சி ஒரு புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதுடன், புதிய தேர்தல்களுக்குப் பொறுப்பாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில மணி நேரத்திற்குள் கன்னோச்சி தான் ஜனாதிபதியின் அதிகாரங்களை எடுத்துக் கொள்ளுவதாக அறிவித்தார்; ஏனெனில் ஜனாதிபதிதற்காலிகமாக உடல் நலம் குன்றியுள்ளார் என்று கூறப்பட்டது. அவசரகால நிலைமை இன்னமும் தொடர்ந்திருந்ததுடன், தேர்தல்கள் பற்றிய பேச்சு ஏதும் இல்லை.

மூன்று பேருக்கு மேல் பொதுச்சாலைகளில் கூடிப் பேசுவது தடை செய்யப்படுகிறது என்று உத்தியோகபூர்வ அறிவிக்கை தெரிவித்தது. “பொலிசும் இராணுவமும் உத்தரவிற்குக் கீழ்ப்படியவில்லை என்று சந்தேகிக்கப்படும் எந்த நபர் மீதும் அல்லது தடுத்து நிறுத்தும்போது நிறுத்த வாய்ப்பு இல்லாமல் ஓடும் நபர்களையும் சுடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன,”

பென் அலி பாரிசுக்குச் செல்லும் வழியில் மால்ட்டாவில் இருக்கக்கூடும் என்ற வதந்திகள் வந்துள்ளன. அவருடைய குடும்பத்தினர் பலர் நேற்றே ஓடிவிட்டனர். அவர்கள் வசித்துவந்த கடற்கரையை ஒட்டிய பெரும் அரண்மனை போன்ற இல்லங்கள் ஹம்மாமெட் சுற்றுலாத்தலத்தில் பொலிசாரை மீறிய ஆர்ப்பாட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்த நிறுவனங்களால் வெளியேற்றப்பட்டனர். அரசாங்கங்கள் துனிசியாவிற்கு எவரும் பயணித்து வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. துனிசியாவிற்கு முக்கியமாக சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் ஏயர் பிரான்ஸ் அதன் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கன்னோச்சி, பென் அலிக்கு நெருக்கமான நண்பர் ஆவார். 1999ல் இருந்து பிரதமராக உள்ளார். பிரதம மந்தரி ஜனாதிபதியினால் தன் கடமைகளைச் செய்ய முடியவில்லை என்றால் அந்த அதிகாரத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் அரசியலமைப்பின் விதியின்கீழ் அவர் இப்பொறுப்பைக் கொண்டுள்ளார். துனிசியாவில் முன்பு காலனித்துவ ஆட்சியை நடத்தி வந்த பிரான்ஸ்இத்தகைய அரசியலமைப்பு முறை மாற்றத்தை விரைவில் அங்கீகரித்தது;

கன்னோச்சியின் நடவடிக்கை ஒரு ஆட்சி சதியின் தன்மையைக் கொண்டுள்ளது போல் தோன்றுகிறது. இராணுவத்தின் பங்கு இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. நிலைமையின் பொறுப்பை ஏற்க தலைநகரின் புறம் இராணுவம் வந்து கொண்டிருக்கிறது என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலைமையை கைமீறிப் போகச் செய்ததற்காக பொலிஸ் மற்றும் உள்துறை அமைச்சரகம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன; ஆனால் கன்னோச்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சி, இராணுவம் துனிஸுக்கு வருவது ஆகியவை ஆளும் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்றுதான் விளக்கப்படுகின்றன. நாட்டின் சொத்தைக் கொள்ளையடித்துக்  கொண்டிருந்த முதல் குடும்பம் இந்த எழுச்சிக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது; அது அதன் சொத்துக்களுக்குச் சேதமின்றி தப்பியுள்ளது. அரசின் மற்ற பிரிவுகளும் தப்பிப்பிழைக்க வேண்டும் என்று முயல்கின்றன. அவ்வாறு செய்வதற்கு அவை அரசாங்கத்தில் எதிர்த்தரப்பினரையும் சேர்த்தாக வேண்டும். வெளியுறவு மந்திரி கமால் மோர்ஜனே பிரெஞ்சு வானொலி Europe1 இடம் இன்று காலை ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

அது செயற்படுத்தக்கூடிய முயற்சியே, இன்னும் சொல்லப்போனால் வழமையானதுதான் என்றார் அவர்.

முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவரான மஹ்மத் நெஜிப் செப்பியை அவர் பாராட்டினார். செப்பி கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் பங்கு பெறுவதற்கு தடை செய்யப்பட்டிருந்தார். எனவே ஓரளவு மக்களிடையே நம்பகத் தன்மையைக் கொண்டுள்ளார்.

கன்னோச்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை செப்பிஆட்சி மாற்றம் என்று விவரித்தார். I-Tele யிடம் பேசிய அவர், “இது ஒரு முக்கியமான கணம் ஆகும். ஆட்சி மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது இது அடுத்த தலைவர் யார் என்பதைப்பற்றியது. இது ஆழ்ந்த சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்க வேண்டும், சட்டம் மாற்றப்பட வேண்டும்-மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கட்டும்.”

பென் அலியின் அடக்கு முறை ஆட்சிக்கு ஏற்ப நீண்டகாலமாக நடந்து வரும் சட்டப்பூர்வ எதிர்க்கட்சி என்ற நிலைப்பாட்டை செப்பி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இது இப்பொழுது இன்னும் சட்டவிரோதம் என்றுள்ள துனிசிய தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCOT) தலைவரான ஹம்மா ஹம்மமியை முக்கிய நபராக மாற்றியுள்ளது. PCOT பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சி (PCOF) உடன் பிணைந்துள்ள ஒரு அல்பானிய மாவோயிசக் கட்சி ஆகும். மேலும் ஸ்ராலினிச கொடுங்கோன்மை மற்றும் என்வர் ஹோக்ஸ்ஹா ஆகியவற்றைப் பெரிதும் பாராட்டுகிறது. இவரும்கூட ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கக் குரல் கொடுத்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இவரை இப்பொழுது கன்னோச்சி விடுவித்துவிட்டார்.

ஹம்மாமி பல முறையும் அரசால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்பட்டுள்ளார். அவருடைய மனைவி, வக்கீல் ரதியா நசரௌவி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, விசாரணைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். ஹம்மாமி மேலைச் செய்தி ஊடகத்தில் முக்கியமாகப் பேசப்படுகிறார். இவ்விருவரையும் எதிர்த்தரப்பாளர்கள் என்று நியூயோர்க் டைம்ஸ் கூறியுள்ளது. தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இவர்கள் பங்கு பெறுவது பழைய ஆட்சியுடன் உறுதியான முறிவு என்னும் தவறான நம்பகத் தன்மை கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும்.

உண்மையில் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் என்னும் பேச்சு அரசாங்க அடக்குமுறையில் எவ்விதக் குறைப்பையும் குறிக்கவில்லை. வியாழனன்று இரவு பென் அலி அரசாங்கத் தொலைக்காட்சியில் ஒரு சமரச உணர்வில்தான் காணப்பட்டார். துனிசிய மொழி பேசி, அவரின் பார்வையாளர்களுக்கு தான் துனிசிய மக்ளை புரிந்துகொள்ளதாக உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, இன்னும் பல ஆர்ப்பாட்டக்ககாரர்கள் கொல்லப்பட்டனர். YouTube இல் வெளிவந்துள்ள ஒளிப்பதிவு காட்சிகள் இறந்த, காயமுற்ற இளைஞர்கள் துனிசியன் தொழிலாள வர்க்க புறநகர் Le Kram ல் உள்ள  l’Hôpital Kheirremedie மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் காட்டுகின்றன.

அவசரகால நிலைமையின் கீழ் பொலிஸ் மற்றும் இராணுவம் மக்களை இன்னும் அச்சுறுத்தும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கும். பென் அலி சென்றது, கன்னோச்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டது என்பது சுதந்திரம் பெற்றதில் இருந்தே உள்ளூர் முதலாளித்துவம், உலக முதலாளித்துவம் ஆகியவற்றின் நலன்களைக் காத்த அரசாங்கத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றப் போவது இல்லை.

ஒவ்வொரு இரவும் மிருகத்தன பொலிஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக தெருக்களுக்கு வந்த இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் நம்பிக்கையை ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தின்மீது வைக்கக்கூடாது. அவர்கள் தங்களை இடது என்று தம்மை கூறிக்கொண்டாலும் அக்கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வேலையின்மையில் உள்ள இளைஞர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இவ்வியக்கம் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு மீறிவிடக்கூடாது என்பதற்காகத் தயக்கத்துடன் உள்துறை அமைச்சரகத்திற்கு அணிவகுத்துச் செல்லுமாறு கூறிய தொழிற்சங்கங்கள்மீதும் நம்பிக்கை வைக்கக் கூடாது.

ஏற்கனவே துனிசிய எழுச்சி மத்திய கிழக்கில் அதன் பாதிப்பைக் கொண்டுள்ளது. வெள்ளியன்று ஜோர்டானில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களுக்கு வந்து பிரதம மந்திரி சமிர் ரிபல் இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அடிப்படை உணவு, எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்னர். “ஜோர்டான் பணக்காரர்களுக்கு மட்டும் அல்ல. ரொட்டி என்பது ஒரு சிவப்புக் கோடு. எங்கள் பட்டினி, சீற்றம் பற்றி எச்சரிக்கிறோம் என்று ஒரு பதாகை கூறியது.

பென் அலி திடீரென வெளியேறியதற்கு மற்றொரு காரணம் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவற்றில் இருந்து வந்த அழுத்தங்கள் ஆகும். துனிசிய இயக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் மற்ற நாடுகளிலும் இது பரவும் என்று அவை அஞ்சுகின்றன.

பைனான்சியல் டைம்ஸில் எழுதிய கட்டுரையாளர் கிடியன் ராஷ்மன், “துனிசியா ஒரு சிறுநாடு-ஆனால் இப்பொழுது அது முக்கியமானது அல்ல என்பதை விட அனைத்தையும் கொண்டுள்ளது என்று எச்சரித்துள்ளார்.

துனிசிய எதிர்ப்புக்கள் ஒவ்வொரு அரேபிய நாட்டுச் செய்தித்தாளின் முதல் பக்கத்திலும் உள்ளன, ஒவ்வொரு அரபு நாடும் இதேபோன்ற அரசியல் சங்கடத்தை எதிர்கொள்ளும் என்று அவர் எழுதியுள்ளார். அல்ஜீரியாவில் ஏற்கனவே வெளிப்பட்ட தெரு எதிர்ப்புக்களையும் அவர் சுட்டிக்காட்டினார். “பெரிய மூலோபாய நாடுகளான எகிப்து, சவுதிஅரேபியா போன்றவற்றின் விதி என்ன என்பதுதான் அவற்றின் மேலை நட்பு நாடுகளின் பெரும் கவலையாகும்.”

தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்கு சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன இயக்கம்தான் தேவைப்படுகிறது. அத்தகைய இயக்கம் உடனடியாக வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், ஐரோப்பாவிலுள்ள தொழிலாளர்கள் இன்னும் உலகின் பிற பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் ஆகியோருடன் பிணைப்புக்களைக் கொள்ள வேண்டும் இப்போராட்டம் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியை அமைப்பதின் மூலம்தான் முன்னேற்றப்பாதையைக் காண முடியும். அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக, நிரந்தரப் புரட்சி முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.