World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: NSSP prepares new trap for Tamil workers and youth

இலங்கை: நவசமசமாஜக் கட்சி தமிழ் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் புதிய பொறியை தயார் செய்கின்றது

By Athiyan Silva and Antoine Lerougetel
7 January 2011
Back to screen version

கடந்த நவம்பர் மாதம், முன்னாள் தீவிரவாத அமைப்பான நவசமசமாஜக் கட்சியின் (ந.ச.ச.க.) தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன பிரிட்டனுக்கு சென்றிருந்தார். இன்னமும் தான் ஒரு சோசலிஸ்ட்என்று அவர் கூறிக்கொண்டாலும், அவர் பிரித்தானிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான கூட்டணியில் இயங்கிவரும் முதலாளித்துவ தமிழ் அரசியல் குழுக்களுக்கு தனது முழு ஆதரவை வழங்கினார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பெருமளவில் ஈடுபட்டிருக்கும் சக்திகளான பிரிட்டனும் அமெரிக்காவும், இலங்கையின் மனித மற்றும் மூலோபாய வளங்களை சுரண்டுவதற்காக மட்டுமே ஆர்வங் காட்டுகின்றன.

நவசமசமாஜக் கட்சி, 1978ல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, ஒரு இடதுசாரி முகச்சாயலை பேணிக்கொள்ள முயற்சித்த அதே வேளை, இலங்கையின் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகள் இரக்கமின்றி வலதுசாரிப் பக்கம் நகர்ந்த போதெல்லாம் அவற்றுடன் இழிவான சூழ்ச்சிகளை செய்துள்ளது. பிரிட்டனுக்கான தனது பயணம் தனிப்பட்ட ஒன்று என கருணாரட்ன கூறிக்கொண்ட போதிலும், அவர் டிசம்பர் 7 அன்று லண்டனை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக 20 அரசியல் கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றுள்ளார்.

கருணாரட்ன, தமிழ் முதலாளித்துவ தேசியவாத பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவைக் கொண்ட ஒரு அமைப்பான பிரிட்டிஷ் தமிழ் பேரவை (பி.டீ.எஃப்) உடன் ஒரு இடது முன்னணியை அமைக்க உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டார். 2009 மே மாதம் இலங்கை இராணுவம் புலிகளைத் தோற்கடித்ததில் இருந்து, அந்த இயக்கம் பல பகுதிகளாக பிரிந்து போனது. அவற்றில் ஒன்றே இந்த பிரிட்டிஷ் தமிழ் பேரவை.

பி.டீ.எஃப். ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கருணாரட்ன பெரும் ஆர்வத்துடன் பங்குபற்றினார். இலங்கையில் இடதுசாரி முன்னணி என்று சொல்லப்படுவதன் இந்தத் தலைவர் நவம்பர் 25 அன்று சௌத் ஹரோவில் (South Harrow) நடந்த கூட்டத்தில் பிரகடனம் செய்ததாவது: சமூக ஜனநாயக சக்திகள் மற்றும் நவசமசமாஜக் கட்சியின் சார்பில், நாம் எமது நாட்டுக்கு ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக பிரிட்டிஷ் தமிழ் பேரவையுடன் வேலை செய்வதற்கு உடன்பட்டுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போலவே, பி.டீ.எஃப். உம் ஒரு சுயாதீனமான முதலாளித்துவ அரசை உருவாக்கும் ஒரு தேசியவாத வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்ததோடு மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ள பகிரங்கமாக செயற்பட்டது. பாரிஸில் 2009 மே தினத்தன்று, சார்கோஸி அரசாங்கத்தின் சமூக செலவு வெட்டுக்கள் மற்றும் வேலை இழப்புக்கள் மற்றும் வறுமை அதிகரிப்புக்கு எதிராக இலட்சக்கணக்கான பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது, விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தமது வர்க்க அனுதாபம் எங்கிருக்கின்றது என்பதை மீண்டும் வெளிப்படுத்தினர். அவர்கள் எங்களுக்கு உதவுங்கள் என்று எழுதப்பட்ட பதாகையுடன் ஒபாமா, பிரவுன், சார்கோஸி மற்றும் ஜேர்மனியின் அஞ்சலா மேர்க்கலின் படங்களையும் சுமந்துகொண்டு அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர்.

பெப்பிரவரி 24 அன்று, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வைத்து உலகத் தமிழ் பேரவையை (ஜி.டீ.எஃப்) ஸ்தாபிப்பதற்கு பி.டீ.எஃப். முழுப் பொறுப்பையும் எடுத்தது. தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் செல்லுபடியாகும் குரலாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு புதிய அமைப்பே ஜி.டீ.எஃப். ஆகும். அதற்கு முழு பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபனத்தினதும் அமெரிக்க அரசாங்கத்தினதும் ஆசீர்வாதம் இருக்கின்றது.

அப்போதைய லேபர் கட்சியின் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த கோர்டன் பிரவுன் மற்றும் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபன்ட்டும் ஜி.டீ.எஃப். பிரதிநிதிகளைச் சந்தித்தனர். கன்சர்வேடிவ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் வில்லியம் ஹக், மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சியில் அவரது சமநிலையில் இருப்பவரான எட் டெவெரியும் ஜி.டீ.எஃப். மாநாட்டில் உரையாற்றினர். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கமரூனும் (இப்போது இவர் பிரதமர்) மற்றும் இலங்கைக்கான ஒரு முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் இப்போதைய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளருமான ரொபட் பிளேக்கும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். ஜனாதிபதி ஒபாமாவின் நண்பராக அறிமுகம் செய்துகொண்ட பாதிரியார் ஜெஸி ஜக்சனும் ஜி.டீ.எஃப். ஸ்தாபிக்கப்பட்டதை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

நவம்பரில், இலங்கையில் ஜனநாயகத்தை மீண்டும் நிறுவுவதற்காக முதலாளித்துவ சார்பு பி.டீ.எஃப். உடன் தனது உடன்பாட்டை கருணாரட்ன அறிவித்திருந்த நிலையில், மறுபக்கம், கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தால் பிரேரிக்கப்பட்டுவரும், பல்கலைக்கழக கட்டணத்தில் பிரமாண்டமான அதிகரிப்பு மற்றும் தமது உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பதற்காக, லண்டன் உட்பட பிரித்தானியாவின் பெரும் நகரங்களில் உள்ள வீதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முன்னெப்போதுமில்லாதவாறு கொடூரமாக தாக்கப்பட்டார்கள். அரசாங்கம் மாணவர்களைத் தாக்குவதற்காக கலகம் அடக்கும் பொலிசாரை பயன்படுத்தியது. பிரான்ஸ், அயர்லாந்து, கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் இத்தாலியிலுமாக ஐரோப்பா பூராவும் சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களது வேலை நிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலைகளின் பகுதியே பிரிட்டிஷ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாகும்.

கருணாரட்ன இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்கவில்லை. அவர் பி.டீ.எஃப். இன் மற்றும் அதன் ஊடாக ஏகாதிபத்திய சக்திகளின் நல்லெண்ணத்தை பெறுவதில் மட்டுமே ஆர்வங் காட்டினார்.

நவம்பர் 27 அன்று, பி.டீ.எஃப். மற்றும் புலிகளின் ஆதரவாளர்களாலும் மாவீரர் தினத்தை முன்னிட்டு லண்டனில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நவசமசமாஜக் கட்சி தலைவர் ஒரு விசேட அதிதியாக உரை நிகழ்த்தினார். இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிப் போராளிகளை கௌரவிப்பதற்காக என்ற பெயரில் கடந்த 26 ஆண்டுகளாக புலிகளும், அவர்களைச் சார்ந்த குழுக்களும் மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்து வருகின்றன. 2009 மே மாதம் உயிரிழக்கும் வரை, புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் புலிகளின் கொள்கைகளின் புதிய வளைவு சுழிவுகளை தெரிவிப்பதற்காக இந்த வருடாந்த விழாவை பயன்படுத்தி வந்துள்ளார்.

பி.டீ.எஃப்., கருணாரட்னவுடன் ஒரு கூட்டணியை அமைத்து, நவம்பரில் லண்டனில் மாவீரர் தின மேடையில் ஏனையவர்களுடன் கருணாரட்னவையும் முன்னிலைப்படுத்தியமை, நவசமசமாஜக் கட்சி ஒத்துழைக்கும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பகுதியினரை நோக்கிய அவர்களது அணிதிரள்வை சுட்டிக்காட்டுகிறது.

 “இலங்கையில் ஆட்சியில் இருந்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால், கடைசியாக ஆனாலும் அதற்கு முந்தையவற்றுக்கு இரண்டாந்தரமாகாத விதத்தில் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர், என தனது உரையில் கருணாரட்ன பிரகடனம் செய்தார். தமிழர்களுக்கு எதிரான இத்தகைய கொலைகளை முன்னெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட [முன்னாள் இராணுவத் தளபதி] சரத் பொன்சேகாவும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சிறையில் துன்பப்படுவது வரலாற்றில் ஒரு வினைப்பயனாகும், என்று அவர் கூறினார். மற்றும் இந்த யுத்தத்தை முன்னெடுக்க மஹிந்தவுக்கு அழுத்தம் கொடுத்து, முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அதே அரசாங்கத்தால் இப்போது தாக்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருணாரட்ன பொன்சேகாவைப் பற்றியும் சிங்கள பேரினவாத ஜே.வி.பி.யைப் பற்றியும் குறிப்பிட்டது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றாகும். தமிழர்களைப் போல் அதே தோணியில் இருப்பதாக அவர்களைச் சித்தரிப்பதன் மூலம், கொழும்பில் உள்ள எதிர்க் கட்சிகளால், அவற்றின் முழு வரலாறும் முரணானதாக இருந்த போதிலும், தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என்ற ஆபத்தான மாயையை அவர் உருவாக்குகின்றார்.

கடந்த ஜனவரியில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, நவசமசமாஜக் கட்சியும் மற்றும் இடதுசாரி வேசம் பூண்டுள்ள ஐக்கிய சோசலிச கட்சியும் (யூ.எஸ்.பீ.), வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) மற்றும் அதன் முதலாளித்துவச்-சார்பு பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்- மக்கள் முன்னணியுடன் சுதந்திரத்துக்கான மேடையில் இணைந்துகொண்டன. வெற்றிபெற்ற ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக, யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் ஒரு பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தன.

 சுதந்திரத்துக்கான மேடையில் இணைவதன் மூலம், யூ.எஸ்.பீ.யும் நவசமசமாஜக் கட்சியும் தங்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்வதற்கு யூ.என்.பீ. க்கும் மற்றும் அதன் பங்காளிகளுக்கும் உதவி செய்துள்ளதோடு அதன் மூலம், இராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு ஜனநாயக மாற்றீடாக பொன்சேகாவுக்கு ஆதவு தேடும் யூ.என்.பீ.யின் பிரச்சாரத்துக்கும் உதவி செய்துள்ளன. இராஜபக்ஷவுடனும் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுடனும் சேர்ந்து பொன்சேகாவும், யுத்தத்தின் கடைசி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டமை உட்பட யுத்தக் குற்றங்களுக்கு நேரடி பொறுப்பாளியாவார். யுத்தம் முடிந்த பின்னர் இராஜபக்ஷவுடன் பொன்சேகா முரண்பட்டுக்கொண்டதோடு, இராஜபக்ஷ சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் பொன்சேகாவுக்கு தண்டனையளிப்பதன் மூலம் தனக்கிருந்த சாத்தியமான அரசியல் அச்சுறுத்தலை அகற்றிக்கொண்டார்.

கடந்த அக்டோபரில், சரத் பொன்சேகாவுக்கு தீர்ப்பளித்து சிறைவைத்தமைக்கு எதிராக ஜே.வி.பி. கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்களில் யூ.என்.பீ. நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் கலந்துகொண்டன. அதே மாதம், பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு மனுவொன்றை அனுப்புவதில் ஜே.வி.பீ. மற்றும் யூ.என்.பீ. யுடன் நவசமசமாஜக் கட்சியும் யூ.எஸ்.பீ.யும் இணைந்துகொண்டன. மத்திய கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் யூ.என்.பீ.யுடன் கருணாரட்னவும் யூ.எஸ்.பீ. தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும் பங்குபற்றினர். முதலாளித்துவக் கட்சிகளான ஜே.வி.பீ. மற்றும் யூ.என்.பீ.யும் சிங்கள இனவாதத்தில் மூழ்கிப்போனவை. அவை இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்தை ஆதரித்ததோடு இராணுவம் ஜனநாயக உரிமைகளை மோசமாக மீறியதையும் பாதுகாத்தன.

நவம்பர் 25 அன்று, பிரிட்டிஷ் பாராளுமன்ற பொதுச் சபையில் நடந்த கூட்டமொன்றில் யூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவுடன் கருணாரட்னவும் பங்குபற்றினார். இலங்கையின் வடக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடி அவர்களது நிலைமையை மேம்படுத்துவதற்காக தான் ஜயவர்தனவை சந்தித்ததாக அவர் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார். உண்மையில், இந்த சந்திப்பு வலதுசாரி கட்சிகளுடன் தற்போது நவசமசமாஜக் கட்சி கையாளும் தந்திரங்களின் பாகமாகும்.

இப்போது மதிப்பிழந்து, பிளவடைந்து போயுள்ள பிரிட்டனில் உள்ள தமிழ் முதலாளித்துவ அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்கள் மற்றும் விருந்துகளில் கருணாரட்ன பங்கெடுத்துக்கொள்வது தற்செயலானதல்ல. அது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக நான்காம் அகிலம் முன்னெடுக்கும் போராட்டங்களை கசப்புடன் எதிர்க்கும் நீண்ட வரலாற்றைக் கொண்ட பப்லோவாத சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியாகும். இந்தத் துரோகம் இலங்கையில் மட்டுமல்ல, சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய இடது கட்சிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க பங்காளிகளுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட முயற்சிக்கும் பிரான்சில் உள்ள புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (என்.பீ.ஏ.) இன் ஊடாக பிரான்சிலும் தொடர்கிறது.

இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களில் 78 வீதமானவர்கள், தமது வாக்குரிமையை பயன்படுத்தவில்லை. இது புலிகள், இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் தங்களை இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்ளும் கட்சிகள் உட்பட தமிழ் மற்றும் சிங்கள முதலாளித்துவக் கட்சிகள் மீது தமிழ் தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் தீவரமாக அதிருப்தியுள்ளதைத் தவிர வேறொன்றையும் காட்டவில்லை.

இத்தகைய எந்தவொரு முதலாளித்துவக் கட்சியாலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்ற ஆபத்தான பொறியை நவசமசமாஜக் கட்சி தலைவர் உருவாக்குகின்றார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களும், சமூக சமத்துவத்துக்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான போராட்டத்துக்குத் தடையாக உள்ள இத்தகைய வர்க்க-சமரசப்படுத்தும் அமைப்புக்களை அலட்சியத்துடன் நிராகரிக்க வேண்டும். ஒரு அனைத்துலகவாத, சோசலிச வேலைத்திட்டத்தின் மீது வறிய விவசாயிகளின் ஒத்துழைப்புடன் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக புரட்சிகர முறையில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே சமூக சமத்துவத்தையும் ஜனநாயக உரிமைகளையும் அடைய முடியும்.