World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Great power rivalries over oil animate Sudan secession referendum

பெரும் போட்டிச் சக்திகள் எண்ணெய்க்காக சூடான் பிரிவினை குறித்த  பொதுவாக்கெடுப்பிற்கு ஊக்கம் கொடுக்கின்றன

By Jean Shaoul
8 January 2011
Back to screen version

ஞாயிறன்று நாட்டில் நடக்க ஆரம்பிக்கவுள்ள பொதுவாக்கெடுப்பில் தெற்கில் பிரிவினைக்காகப் பெரும் ஆதரவு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “வேண்டும் என்ற வாக்கு சுடானைப் பிரித்து, ஜூலை 9, 2011 அன்று தெற்கு சூடான் என்னும் புதிய நாட்டைத் தோற்றுவிக்கும்.

நீண்ட காலமாகப் பிரிவினையை எதிர்த்து வந்துள்ள ஜனாதிபதி ஒமர் அல்-பஷிர் இப்பொழுது விளைவைத் தான் ஏற்க உள்ளதாகக்கூறி, தெற்கின் தலைவர் சால்வா கீரிடம்உங்களுக்குத் தேவையானதை அளிக்கத் தயார் என்றும் கூறுகிறார்.

இப்படி பஷிர் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துள்ளபோதிலும்கூட, அனைத்து அறிகுறிகளும் சூடானில் அமைதி, செழிப்பு இவை தொலைவில்தான் வரும் என்று காட்டுகின்றன. இந்த நாடு ஐ.நா.வின் உலகின் வறிய நாடுகள் பற்றிய குறியீட்டில் கீழிருந்து 15தாவது இடத்தில் உள்ளது. பிரிவினையானது அரசியல் அழுத்தங்களையும், மோதல்களையும் அதிகப்படுத்தும். இரு ஆளும் உயரடுக்குகள் இடையேகார்ட்டமிலுள்ள தேசிய காங்கிரஸ் கட்சி (தேசிய இஸ்லாமிய முன்னணியின் வழித்தோன்றல் - NCP ), மற்றும் ஜுபாவிலுள்ள தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் (SPLM) –மற்றொரு யுத்தத்தை இது தூண்டிவிடக்கூடும்.

NCP மற்றும் SPLM இரண்டுமே நாட்டின் செழுமையான எண்ணெய், தாதுப்பொருட்கள் மற்றும் நீர் இருப்புக்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் பெரும் சக்திகளின் பரந்த போராட்டத்தில் பகடைக் காய்கள்தான். பொதுவாக்கெடுப்பின் மிக உடனடியான தாக்கம் அது இப்பொழுதுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான கார்ட்டமின் எண்ணெய் ஒப்பந்தங்களை இரத்து செய்துவிடும்.

சுடானின் எண்ணெய் இருப்புக்கள் 6.7 பில்லியன் பீப்பாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளன. அதே நேரம் நாட்டில் மாபெரும் முற்றிலும் ஆராயப்படாத தாதுப் பொருட்களின் செழிப்பும் உள்ளது. இந்தச் செல்வத்தைச் சுரண்டும் திறனையொட்டி தவிர்க்கமுடியாத மோதல்கள் ஏற்பட்டுள்ளனஅதாவது நைல் நதியை அடைதலுக்குஇது ஒவ்வொரு ஆண்டும் 149 பில்லியன் கன மீட்டர் நீர் இருப்புக்களை அளிக்கிறது. புதிதாகத் தோற்றுவிக்கப்படவிருக்கும் தெற்கு சூடான் கிட்டத்தட்ட நாட்டின் 80 சதவிகித எண்ணெய் இருப்புக்களை உரிமையாகப் பெறும். அவற்றுள் நைல் ஆற்றுப்படுகையும் அடங்கியிருக்கும். ஆனால் சூடானிடம் சுத்திகரிப்பு ஆலைகளும் உள்ளன. அது சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனம் (CPNC) கட்டமைத்துள்ள1,500 கிலோமீட்டர் நீள குழாய்த் திட்டத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இதன் மூலம் எண்ணெயானது, ஏற்றுமதி துறைமுகமான சூடான் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அமெரிக்கா தலையிட்டு சூடான் அரசாங்கத்திற்கும் SPLM க்கும் இடையே ஜனவரி 2005ல் கொண்டுவந்த விரிவான அமைதித் திட்டத்தின் (CPA) விளைவுதான் இந்த பொதுவாக்கெடுப்பு ஆகும். நாட்டில் 22 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரை இந்த CPA முடிவிற்குக் கொண்டுவந்ததுஆபிரிக்காவிலேயே இது நீண்ட போர் ஆகும். இது வடக்கேயுள்ள அதிகமான அரேபியர்களுக்கும் தெற்கேயுள்ள கிறிஸ்துவ/அனிமிஸ்ட்களுக்கும் இடையே நடந்தது. போர், பஞ்சம் மற்றும் நோய்கள் ஆகியவற்றின் விளைவாக இரண்டு மில்லியன் மக்கள் இறந்து போயினர். 4 மில்லியன் மக்கள் பல தடவைகள் இடம் பெயர நேரிட்டன.

இந்த உடன்பாட்டின் முக்கிய பகுதி சூடானின் எண்ணெய் வளம் தெற்குடன் பகிர்ந்து கொள்ளப்படலாம் என்பதாகும். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு தெற்கேயுள்ள பெரிய எண்ணெய் வயல்களை அணுகும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இதுகாறும் இவை சீனா, பாக்கிஸ்தான், மலேசியா மற்றும் பிரான்சினால் அதிகம் கட்டுப்படுத்தப்பட்டன. சீனாவிற்கு இதில் மிக அதிக பங்கு உண்டு. ஏனெனில் அது எண்ணெய் உற்பத்தியில் 60 சதவிகிதத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளது.

ஆனால் உடன்பாடு இருந்தபோதிலும், இரு புறத்தாரும் மோதலில்தான் உள்ளனர். ஆயுதம் பயன்படுத்தப்படும் மோதல்கள் இரு புறத்திலுமுள்ள போராளிகளுக்கு இடையே நடைபெறுகின்றன. CPA விதிகளை மீறியவகையில் கார்ட்டம் ஒரு பொதுவாக்கெடுப்பைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. எண்ணெய் வருவாய்கள் தெற்கே செல்லாமல் தடுத்தது. அரசாங்க ஆதரவுடைய போராளிக் குழுக்களைக் கலைக்க மறுத்தது. அவையோ தெற்கே செயல்பட்டு இனரீதியான மற்றும் வகுப்புக்களுக்கு இடையேயான மோதல்களுக்கு எரியூட்டின.

1998க்கும் 2008க்கும் இடையே பொருளாதாரத்தில் ஐந்து மடங்கு வளர்ச்சியைத் தோற்றுவித்த எண்ணெய் வருவாய்கள், மக்களின் பரந்த பிரிவுகளுக்கு என்பதற்குப் பதிலாக வடக்கேயுள்ள ஒரு சிறு அடுக்கிற்கு மட்டும் செல்வச் செழிப்பைக் கொடுத்துள்ளது. இந்த வருமானங்கள் தெற்கிற்கு மிகவும் தேவையான உள் கட்டமைப்பு மற்றும் பொதுநல வசதிகளுக்குப் பயன்படுத்தப்படவில்லை.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத் தகவல் ஆவணங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வக்கீல், ஜனாதிபதி அல்-பஷிர் நாட்டிலிருந்து கிட்டத்தட்ட 9 பில்லியன் டொலரை எடுத்து வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று, அவற்றில் பெரும்பாலானவற்றை இங்கிலாந்து வங்கிகளில் சேமித்து வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றன. இது உண்மையானால், இது சூடானின் ஆண்டு வருமானத்தில் பத்தில் ஒரு பங்கிற்குச்  சமம் ஆகும். இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபருடையது 1,200 டொலர் என்றுதான் உள்ளது.

தேசிய காங்கிரஸ் கட்சி ஏராளமான நிதியைஅதைத்தவிர மலைபோல் கடன்களையும் கொண்டுள்ளதுபெரும் விழைவுடன் கூடிய ஆனால் பிரச்சினைக்கு உரிய அணைக்கட்டு பிற திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இவை விவசாயத் துறையைப் புதுப்பிக்கும் நோக்கம் கொண்டவை, சீனா மற்றும் வளைகுடா நாடுகளை வடக்கு சூடானில் நிலத்தை வாங்குவதற்கு ஊக்கம் தருபவை.

பயங்கரவாதத்திற்கு ஆதரவுகொடுக்கிறது என்று காரணம் காட்டி 1993ல் இருந்து பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியதால் ஒதுங்கியுள்ள அமெரிக்கா தெற்கேயுள்ள ஆளும் குழுவுடன் நட்புறவை வளர்த்துள்ளது. சமீபத்தில் அது கார்ட்டமுடன் உறவுகளை மீட்க முயன்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஒபாமா நிர்வாகம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் பெயரை அங்குள்ள அரசாங்கம் ஒரு நம்பகத்தன்மை உடைய, உரிய நேரத்தில் வாக்கெடுப்பை தெற்கின் சுதந்திரத்திற்கு நடத்தி, வாக்கெடுப்பிற்குப் பின் வரும் உடன்பாடுகளின் முடிவைச் செயல்படுத்துவதாக இருந்தால், நீக்குவதாகக் கூறியுள்ளது. அவற்றில் எல்லைகள் குறிக்கப்படுதல், எண்ணெய்-வருமானப் பகிர்வு, நாணயம் மற்றும் குடியுரிமை ஆகியவை அடங்கும்.

ஆனால் இப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் சிக்கல்கள் நிறைந்தவை, ஒரு சமாதானமான பிரிவினையை அடைவதை கடினமாக்கி கிட்டத்தட்ட இயலாதது என்றுகூடச் செய்துவிடும். SPLM இன்னும் மோதல்கள் வரலாம் என்ற எதிர்பார்ப்பில், மீண்டும் ஆயுதரீதியாகத் தன்னை அண்டையிலுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகளின் ஆதரவுடன் வலிமைப்படுத்திக் கொண்டு வருகிறது.

உருவாகக்கூடிய அரசுகளின் எல்லைகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம்--கிழக்கு ஆபிரிக்காவிலேயே மிக நீளமானவைஇன்னும் குறிக்கப்படவில்லை. எண்ணெயச் செழிப்புடைய பகுதிகள் எவருக்கு உரிமை என்பதும் முடிவெடுக்கப்படவில்லை. அப்யே எனப்படும் முக்கிய எண்ணெய் வளம் மிகுந்த பகுதி பற்றிய ஏற்பாடுகள் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இப்பகுதி வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே உள்ளது. சீற்றமான மோதல்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே நடந்த இடம் ஆகும். இந்த இடம் பற்றிய தனி வாக்கெடுப்பு ஒருவேளை பிரிவினை ஏற்பட்டால் இது எப்பகுதியுடன் சேரும் என்பதை நிர்ணயிக்கும். ஆனால் எவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்பது பற்றிக்கூட இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. தெற்கு நிரந்தரமாக அங்கு வசிக்கும் மக்கள் தான் வாக்களிக்காலம் என்று கூறுகிறது. ஆனால் வடக்கோ நாடோடிகளான மிசிரியா மக்களும் வாக்களிக்கலாம், அவர்கள்தான் அங்கு வரண்ட காலத்தில் வாழ்வர் என்று கூறுகிறது.

குடியுரிமையும் பெரும் மோதலுக்குரிய பிரச்சினையாக உள்ளது. சூடான் அரசாங்கம், கடந்த காலத்தில் 2 மில்லியன் தென்பகுதி மக்கள், ஒருவேளை பிரிவினைவேண்டும் என்று வாக்கு வந்தால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. தொடக்கத்தில் வடக்கு தென்புலத்தவர்களுக்கு வசித்தல், உழைத்தல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லுதல், சொத்துரிமை என்று சூடானில் எகிப்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை மறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தெற்கை வடக்கின் புல்வெளிப்பகுதி நாடோடிகள் பருவகாலத்தில் வருவதைத் தடுக்கத் தூண்டும். அவர்கள் ஆண்டின் ஒரு பகுதியைத் தெற்கில் கழிக்கின்றனர்.

மேலும் இதுவரை எண்ணெய் வருவாய்கள் எப்படி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியும் உடன்பாடு இல்லை. எண்ணெய் வருவாய்கள் வடக்கின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேல் என்று உள்ளது. தெற்கில் இது 98 சதவிகிதமாகும். அனைத்து எண்ணெய்ச் சலுகைகளும் மீண்டும் தெற்கு சூடானுடன் பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப்படும். அதன் ஆளும் உயரடுக்கு சீனாவை வடக்கின் நிதிய ஆதரவாளர் என்று கருதுவதோடு, அமெரிக்காவுடன் நெருக்கமான நட்பையும் உடையது. இதுதான் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆனால் மீண்டும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டால், போட்டித் தெற்கு குழுக்கள் சீன தேசிய பெட்ரோல் நிறுவனத்தின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிவிடக்கூடும்.

பைனான்சியில் டைம்ஸ்  ஜனவரி 6ம் தேதி எழுதிய தலையங்கத்தில், “.நா. அமைதிக் காப்பாளர்கள் எல்லைக் கண்காணிப்பு, வடக்கு மற்றும் தெற்கு சூடான் மக்கள் மற்ற பகுதியில் பாதுகாப்புடன் உள்ளனரா என்று கண்காணிக்கத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எழுதியதுடன், “பிரிவினைச் சக்திகள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மற்றுமொரு சிக்கல் பொதுவாக எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது பற்றி எவருக்கும் தெரியாது. ஏனெனில் 2008ல் செய்தது போல் கார்ட்டம் உபயோகமான தகவல்கள் அதிகம் வெளியிடுவதில்லை. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஊழல் எதிர்ப்பு அமைப்பான Global Witness சூடான் அரசாங்கம் அறிவித்துள்ளதை விட கூடுதலாக 26 சதவிகிதம் உற்பத்தி செய்திருக்கக்கூடும் என்ற தகவலைக் கொடுத்துள்ளது. ஆனால் பைனான்சியில் டைம்ஸின் கருத்துப்படி 21 சலுகைகளில் மூன்றில் ஒரு பகுதிதான் உண்மையில் எண்ணெயை உற்பத்தி செய்கின்றன, இத்தொகுப்புக்களில் ஒன்று முற்றிலும் வடக்கைச் சேர்ந்தது என்று கூறுகிறது.

அரசாங்கத்தின் மதிப்பீடுகள் சூடான் இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தேவையான வியாபாரரீதியான உற்பத்தியைத்தான் கொண்டுள்ளது. கார்டியன் கருத்துப்படி ஸ்வீடிஷ் லுண்டின் நிறுவனமும் இந்தியாவில் OVL ம் வரண்ட கிணறுகளைப் பல இடங்களில் தோண்டியபின் அகன்றுவிட்டன. பிரெஞ்சு நிறுவனமான டோட்டல் அதன் எண்ணெய் சலுகைகளில் பெரிதாக எதையும் இன்னும் எடுத்துவிடவில்லை. இவையனைத்தும் சூடானில் எண்ணெய் இருப்புக்கள் முன்பு நம்பப்பட்டதை விட மிகவும் குறைவாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கின்றன.

2005 ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஏற்படும் வரை, தெற்கிற்கு வருவாயில் பங்கு ஏதும் இல்லை ஆறு சலுகைகளில் இருந்து வருமானத்தைப் பிரிக்கும் CPA உடன்பாட்டிற்கு பின்னர் கிட்டத்தட்ட 10 பில்லியன் டொலர் தெற்கு உயரடுக்கிற்குச் சென்றுள்ளது. அவர்கள் இதை தங்கள் சொந்தச் சொத்துக் குவிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளனர், பிரியமான திட்டங்களில் செலவழித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் ஷரியா சட்டம் பற்றிய அச்சங்களையும் தூண்டியுள்ளனர். அதையொட்டி வடக்கிற்கு விரோதம் வளரும், பிரிவினைக்கு மக்கள் ஆதரவு பெருகும்.

தெற்கு சூடான் பெரிதும் வறுமையில் இருப்பதுடன் பிளவுகளையும் கொண்டுள்ளது. நில மீட்புக்கள், வெளியே செல்லும் பாதைகள் பற்றி மோதல்கள் உள்ளன என்பதுடன் வளர்ச்சியும் குறைவு ஆகும். பல தசாப்தங்களாக உதவிநிதி  பெரும் தேவையைக் கொண்ட மனிதாபிமானச் செயல்களுக்குத்தான் கொடுக்கப்பட்டதே ஒழிய பொருளாதார வளர்ச்சிக்கு அல்ல. அறக்கட்டளையான World Visio கருத்துப்படி தெற்கு சூடானிலுள்ள குழந்தைகள் வடக்கில் இருப்பவற்றை விட மூன்று மடங்கு இறந்து போகக்கூடும், அதே நேரத்தில் 90 சதவீதமானவர்கள் நாள் ஒன்றிற்கு 1 டொலருக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்.

SPLM உடைய ஆயுதப் பிரிவான SPLM/A பல பிரிந்து செல்லும் குழுக்களைக் கொண்டுள்ளது. இதையொட்டி எண்ணெய் வயல்கள் பற்றிய கட்டுப்பாட்டில் உட்பூசல்களுக்கான அச்சங்கள் வெளிப்பட்டுள்ளன. போட்டிப் பிரிவினர் கீர் அரசாங்கத்தை ஊழல் மற்றும் மக்களைக் காப்பாற்றுவதில் தோல்வியுற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளன. இப்பொழுது ஒரு தளபதியான ஜோர்ஜ் ஆதருடன் போர்நிறுத்த உடன்பாட்டில் கீர் கையெழுத்திட்டுள்ளார். ஆதர் தெற்கு இராணுவத்திலிருந்து வெளியேறிய பின் தெற்கின் மிகப் பெரிய மாநிலத்தில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போய், கீருக்கு எதிராகப் கிளர்ச்சி செய்தார். ஆதரின் போராளிக் குழு இப்பொழுது தெற்கு இராணுவத்துடன் இணைத்துக் கொள்ளப்படும்.

வடக்கைப் பொறுத்தவரை, சூடானின் ஏற்றுமதி வருவாய்களில் 80 சதவிகிதம் அன்றாடம் 500,000 பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து வருகிறது. பிரிவினையானது பொருளாதாரச் சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது. புதன்கிழமை அன்று பாராளுமன்றம் அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்திற்கு ஒப்புதல் முத்திரை கொடுத்தது. இதில் வணிகம், விவசாயத் தொழிற்சங்கங்கள் பற்றிய உடன்பாடு உள்ளன. இவை சர்க்கரை (உணவில் முக்கியம்), பெட்ரோலியப் பொருட்கள் மீதான உதவித் தொகையில் குறைப்புக்களை ஏற்படுத்தும், அதையொட்டி விலைவாசி உயர்வுகள் 33ல் இருந்து 50 சதவிகிதம் வரை இருக்கும்.

அரசாங்கக் கூற்றின்படி, பணவீக்கம் 2011ல் 14 சதவிகிதம் என்று இருக்கும். ஆனால் பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் அது இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். கடந்த நவம்பர் மாதம் அரசாங்கம் இன்னும் கூடுதலான வெளிநாட்டு நாணயத்தை ஈர்ப்பதற்கும் கறுப்புச் சந்தையை அழிப்பதற்கும் பவுண்டின் மதிப்பைக் குறைத்தது. ஆனால் இதில் அதிக வெற்றி அடையவில்லை.

நுபா மலைகள் மற்றும் தெற்கு நீல நைல் பகுதிகளிலும் பெரும் சிறுபான்மைக் குழுக்கள் உள்ளன. இங்கு SPLM ஆனது NCP உடன் 2005ல் இருந்து ஆட்சியை நடத்தியுள்ளன. அதன் போராளிகளை இன்னும் கலைத்துவிடவில்லை. அதற்கு தெற்கில் வலுவான பிணைப்புக்கள் உள்ளன. அரசாங்கம் இன்னமும் இப்பகுதிகளில் வாக்கெடுப்பிற்கு ஏற்பாடு செய்யவில்லை.

மேற்கு சுடானில் டார்பர் பகுதியில் பல பிரிவுகள் சூடானிய அரசாங்கப் படைகளுடன் போரிடுகின்றன. புதிய தென்பகுதி நாட்டில் இருந்து தங்கள் செல்வம்-அதிகாரப் பகிர்விற்கான கோரிக்கைகளுக்கு ஆதரவைப் பெறலாம் என்று நம்புகிறது. மேலும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்றும் நம்புகிறது.

இத்தகைய நிபந்தனைகள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் மரபியம் ஆகும். அதேபோல் அமெரிக்க மற்றும் பிற முக்கிய சக்திகளின் பேராசைகளின் மரபியமும் ஆகும். இவை பல உள்ளூர்க் குழுக்களுடைய அதிகாரப் போராட்டத்திற்கு தங்கள் நலன்களை ஒட்டி ஆதரவைக் கொடுத்திருந்தன. இவை சூடானிய தேசிய முதலாளித்துவத்தின் கைக்கூலித் தன்மைக்கு நிரூபணம் ஆகும். அவற்றின் போட்டிக் குழுக்கள் போரின் மூலம் தங்கள் முன்னேற்றத்தைத்தான் காண முயல்கின்றன. இதற்காக பெரும் சக்திகளின் பகடைக் காய்களாகத் தங்களை அளித்துக் கொள்கின்றன.