World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US cable demonstrates Sri Lankan government’s collusion with paramilitary death squads

அமெரிக்க ஆவணங்கள் இலங்கை அரசாங்கம் துணைப்படை கொலைக் குழுக்களுக்கு உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளன

By Sarath Kumara
29 December 2010
Back to screen version

விக்கிலீக்ஸால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்று ஆவணங்கள், இலங்கை அரசாங்கமானது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் போது, ஈழ மக்கள் ஜனநயாகக் கட்சி (.பி.டி.பி.) மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டீ.எம்.வி.பீ) உட்பட பல்வேறு துணைப்படை குழுக்களின் குற்றவியல் நடத்தைகளுக்கு உடந்தையாக இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

2007 மே 18 திகதியிடப்பட்டு இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதர் ரொபட் ஓ. பிளேக்கினால் எழுதப்பட்ட அந்த ஆவணங்கள், ஜனாதிபதி மஹநித் இராஜபக்ஷ மற்றும் அவரது முன்னோடியான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரதும் அரசாங்கங்கள் இத்தகைய கொலைப் படைகளுக்கு உதவியதோடு துணைபுரிந்ததாகவும் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் மறுப்புக்கள் மற்றும் விசாரணைகளை ஒதுக்கிவைத்த பிளேக் பிரகடனம் செய்ததாவது: தலைநகருக்கு வெளியில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கடத்தல்கள், சிறுவர் கடத்தல்கள், கப்பம் பெறுதல் மற்றும் விபச்சாரம் உட்பட மனித உரிமை சம்பவங்கள் தொடர்கின்றன.மனித உரிமை குழுக்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களைப் போலவே, நம்பிக்கைக்குரிய தூதரகத் தொடர்புகளும், பெருமளவில் தனிப்பட்ட ஆபத்துக்களுடன், துணைப்படை குழுக்களுடனான இலங்கை அரசாங்கத்தின் தொடர்புகளின் அளவின் விபரங்களை விவரித்துள்ளன,என அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, புலிகளுடன் செயற்படுபவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை கடத்துதல் அல்லது சிலசமயம் கொலை செய்வதன் மூலம் கொழும்பில் பாதுகாப்பை விரிவுபடுத்தவுமாக பல முன்னேற்றங்களை கொழும்பு அரசாங்கம் துணைப்படை குழுக்களை அனுமதிப்பதன் மூலம் கண்டது, என்றும் துணைப்படை குழுக்களால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட கடத்தல்களின் மூலம் இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சத்துடன் அல்லது வாயை மூடி வைத்திருந்தது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு பிளேக் அனுப்பிய தகவல் குறிப்பிடுகின்றது. ஒரு விதத்தில் மறுப்புத் தெரிவிப்பதற்கான இயலுமையையும் இந்த துணைப்படைகள் கொழும்பு அரசாங்கத்துக்கு கொடுக்கின்றன என அந்த குறிப்பு சுட்டிக்காட்டுகின்றது.

 “சர்வதேச கவனத்தின் காரணமாக இராணுவத்தால் செய்ய முடியாத வேலைகளை அவர்கள் செய்வதனால் வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சட்ட-விரோத கொலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள்- துணைப்படைகளின் விடயத்தில் தலையிட வேண்டாம் என, ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ யாழ்ப்பாண இராணுவத் தளபதிகளுக்கு கட்டளையிட்டதாக அந்த ஆவணம் அறிவிக்கின்றது. துணைப்படைகளுடன் நெருக்கமாக செயற்படும் இராணுவப் புலணாய்வு நடவடிக்கைகளிடும் தலையீடு செய்யவேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சு உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அச்சமயத்தில், பல்வேறு மனித உரிமை அமைப்புக்களுடன், உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் வெளியிட்ட மற்றும் கண்டனம் செய்த விடயங்களையே பிளேக்கின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய குற்றச்செயல்கள் இடம்பெறுவதையிட்டு பிளேக்கும் புஷ் நிர்வாகமும் நன்கு அறிந்திருந்த அதேவேளை, ஒரு இராஜதந்திர அமைதியை கடைப்பிடித்த வாஷிங்டன், புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவளித்தது.

ஈ.பீ.டி.பீ. தலைவர் தேவானந்தாவின் உதவியுடன், 2005 கிறிஸ்மஸ் தினத்தன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை கருணா திட்டமிட்டதாக தான் நம்புவதாக ஒரு தகவல்காரர் தெரிவித்தாக அந்த ஆவணம் கூறுகின்றது. 2006 நவம்பர் 10 அன்று, பிரசித்தி பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொழும்பில் வைத்து கொலை செய்வதற்கு கருணா குழு [டீ.எம்.வி.பீ.] உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் நம்புவதாக அந்த தகவல் கூறுகிறது.

2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ ஒரு குறுகிய வெற்றியைப் பெற்று சில வாரங்களில், புலிகள்-சார்பு பரராஜசிங்கம் கொல்லப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க ஆத்திரமூட்டலாகும். சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களையும் 2002ல் கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் கீழறுப்பதற்கு இராஜபக்ஷ உறுதிகொண்டிருந்தார். இந்த கொலையைத் தொடர்ந்த ஏனைய பேர்போன படுகொலைகள், புலிகளை பதிலடி கொடுக்கத் தூண்டி, அதன் மூலம் யுத்தத்தை புதுப்பிப்தற்கான சாக்குப்போக்கை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டவையாகும்.

2006 ஜூலையில் இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கிய போது, பணச் சிக்கலில் இருந்த அவரது அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க தொடக்கி வைத்த துணைப்படைகளுக்கான நேரடி நிதியளிப்பை நிறுத்தியதோடு, அதற்குப் பதிலாக ஈ.பீ.டி.பீ. மற்றும் கருணாவும் மேற்கொள்ளும் கப்பம் பெறல் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக கண்டும் காணாமல் இருந்தது.

ஆவணத்தின்படி, ஈ.பீ.டி.பீ. மற்றும் கருணாவுக்கு நிதி சேகரிக்கும் ஒரு வழிமுறையாக தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி பணம்பறிக்க கோடாபாய இராஜபக்ஷ அதிகாரமளித்திருந்தார். இரு துணைப்படை குழுக்களும் யுத்த விதவைகளையும் இளம் பெண்களையும் விபச்சாரத்துக்கு பலவந்தப்படுத்தியதோடு 14 வயதேயான இளைஞர்களை சிறுவர் போராளிகளாக சேர்ப்பதிலும் ஈடுபட்டன.

துணைப்படைகளுக்கும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான கூட்டு ஆரம்பத்தில் இருந்தே தெளிவானதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில், பல உயர்மட்ட சம்பவங்கள் இராணுவத்தால் நெருக்கமாக கண்காணிக்கப்படும் பிரதேசங்களில் நடந்திருந்த போதிலும், அவை அனைத்திலும் கொலைகாரர்கள் கச்சிதமாக தப்பிச்சென்றனர்.

அரசாங்கத்தை விமர்சித்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை பிரசித்திபெற்ற உதாரணமாகும். அவர் 2009 ஜனவரி 8 அன்று, கொழும்பு புறநகர் பகுதியில் இருந்து வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போது, பட்டப்பகலில் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை ஒரு உயர் பாதுகாப்பு வலயத்துக்கும் கொழும்பில் ஒவ்வொரு சந்தியிலும் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளுக்கும் அருகில் நடந்த போதிலும், கொலையாளிகள் கண்ணுக்குத் தெரியாமல் தப்பிச் சென்றனர்.

செயற்படும் முறையை அமெரிக்க தூதரகத்துக்கு ஒரு உளவாளி விளக்கியதாவது: ஒருவரை கொல்வதற்கு ஈ.பீ.டி.பீ. முடிவெடுக்கும் போது, அவர்கள் முதலில் இராணுவத்துக்கு தெரிவிப்பார்கள்... ஒரு உடன்பாடுகொண்ட நேரத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் இருக்கும் சகல சிப்பாய்களும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஒரே நேரத்தில் ஓய்வுக்குச் செல்வர்... அச்சமயத்தில், அடிக்கடி மோட்டார் சைக்களில் பயணிக்கும் ஆயுதம் ஏந்திய மற்றும் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள், அந்த வீதியால் சென்று குறிப்பிட்ட நபரை கொலை செய்துவிடுவர். கொலைசெய்யப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர், சிப்பாய்கள் ஓய்வு முடித்து, சம்பவத்தின் அடுத்த கட்டத்துக்காக தமது நிலைகளுக்கு மீண்டும் திரும்புவர். பொலிஸ் விசாரணைகள் பொதுவானதாக இருக்கும் அதே வேளை, அவர்கள் ஏறத்தாழ கைது செய்வதற்கு வழிவகுத்ததே கிடையாது என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

இனவாத யுத்தத்தை கொள்கைரீதியில் எதிர்த்த தால் சோ.ச.க. யும் துணைப்படைகளால் இலக்கு வைக்கப்பட்டது. தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காக கட்சி போராடியதோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற்றுமாறும் போராடுகிறது.

2006 ஆகஸ்ட் 7 அன்று, புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தை இராஜபக்ஷ புதுப்பித்து சில நாட்களின் பின்னர், கிழக்கு துறைமுக நகரான திருகோணமலைக்கு அருகில் உள்ள முல்லிப்பொத்தானை தனது வீட்டில் வைத்து சோ... ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். நகரில் இராணுவ இருப்பு கனமாக இருந்த போதிலும் கொலையாளி தப்பிச்சென்றான். கொலையைப் பற்றி சரியாக விசாரிக்கத் தவறிய இலங்கை அதிகாரிகள், மரியதாஸ் ஒரு புலி ஆதரவாளர் என்ற பொய் கதையை பரப்பினர்.

2007 மார்ச் 22 அன்று, சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும், யாழ்ப்பாண குடாநாட்டுக்கு அருகில் ஊர்காவற்துறை தீவில் வேலணைக்கு அருகில் காணாமல் போயினர். அவர்கள் புங்குடுதீவுக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையிலான நீண்ட கடல்பாலத்தின் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே கடைசியாக காணப்பட்டனர். கடல்பாலத்தின் இரு முனையிலும் சோதனை நிலையங்கள் உள்ளன. சகல ஆதாரங்களும் ஈ.பீ.டி.பீ.யின் உடந்தயுடன் கடற்படை நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டுள்ளதை காட்டின. ஈ.பீ.டி.பீ. இதற்கு முன்னர் சோ.ச.க. உறுப்பினர்கள் மீது வன்முறை அச்சுறுத்தல் விடுத்தமைக்குப் பொறுப்பாளியாகும்.

இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தமான அமெரிக்க நிலைப்பாட்டின் முழுப் பாசாங்குத்தனத்தை 2007 ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. யுத்தத்தை தூண்டுவதற்காக இலங்கை இராணுவம் துணைப்படைகளை பயன்படுத்தியதையிட்டு நன்கு அறிந்திருந்த போதிலும், 2002 யுத்த நிறுத்தத்தை புலிகளே மீறியதாக அரசாங்கம் கூறிக்கொள்வதை அமெரிக்காவும் திருப்பிச் சொல்லியது. 2006 ஜனவரியில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லன்ஸ்டன்ட் பிரகடனம் செய்ததாவது: எவ்வாறெனினும், புலிகள் சமாதானத்தை கைவிடுவதற்கு முடிவெடுத்தால், அவர்கள் ஒரு பலமான, மிகவும் இயலுமைகொண்ட மற்றும் மிகவும் உறுதிப்பாடுகொண்ட இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள நேரும் என்பதை நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். யுத்தத்துக்கு மீண்டும் திரும்பினால் அதற்கு பெரும் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

இரண்டரை ஆண்டுகளாக, அமெரிக்கா இலங்கை இராணுவத்தின் குற்றங்கள் பற்றி மௌனமாக இருந்தது. புலிகளுக்கு தோல்வி நெருங்குவது வெளிப்படையான பின்னரே, இராணுவத்தின் விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட தமிழ் பொது மக்கள் பற்றி வாஷிங்டன் கவலை தெரிவிக்கத் தொடங்கியது. ஐ.நா. புள்ளிவிபரங்களின் படி, 2009 மே மாதம் புலிகள் தோல்வியடைவதற்கு சில மாதங்கள் முன்னதாக குறைந்தபட்சம் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

ஒபாமா நிர்வாகத்தின் பகிரங்க விமர்சனங்களுக்கும் தமிழ் சிவிலியன்களின் ஜனநாயக உரிமகள் மற்றும் வாழ்கையை காப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, அதனது எதிரி சீனாவின் பக்கம் மிகவும் நெருக்கமடைவதாக அமெரிக்காவால் கருதப்படும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காக் கொண்டதாகும். யுத்தத்தின் போது, ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிக்காக மேலும் இராஜபக்ஷ சீனாவில் தங்கியிருந்ததோடு, ஹம்பத்தொட்டையில் பிரதான மூலோபாய துறைமுகம் உட்பட முதலீட்டு வாய்ப்புக்களை பெய்ஜிங்குக்கு வழங்கியது.

எவ்வாறெனினும், கடந்த டிசம்பர் அளவில், இலங்கை: யுத்தத்தின் பின்னர் அமெரிக்க மூலோபாயத்தை மீண்டும் முறைப்படுத்தல் என்ற தலைப்பில் அமெரிக்க செனட்டின் வெளியுறவு கமிட்டி வெளியிட்ட அறிக்கை, மனித உரிமைகள் சம்பந்தமான அமெரிக்க கவனக் குவிப்பு ஒரு எதிர்நடவடிக்கையாகும் என நிறைவு செய்திருந்தது. இந்து சமுத்திர கப்பற் பாதையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முறையில் இலங்கை அமைந்திருப்பதால், அமெரிக்கா அதனை இழக்க முடியாது என்றும், ஒரு தொகை விடயங்களில் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட பிரேரிப்பதாகவும் அந்த அறிக்கை அறிவித்தது. கொழும்பின் குற்றவியல் நடவடிக்கைகள் பற்றிய முன்னைய மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் முழுமையாக கைவிடப்பட்டுள்ளன. பிளேக் இப்போது ஒபாமா நிர்வாகத்தின் மத்திய மற்றும் தெற்கு ஆசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் ஆவார்.

ஈ.பீ.டி.பீ. மற்றும் டீ.எம்.வி.பீ. அமைப்புக்களைப் பொரறுத்தளவில், இத்தகைய துணைப்படைகளின் அரசியல் பிரிவுகள் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுகின்றன. ஈ.பீ.டி.பீ. ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருப்பதோடு அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தற்போது பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருக்கின்றார். 2004ல் கருணாவின் தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கில் புலிகளில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட டீ.எம்.வி.பீ., மீண்டும் பிளவடைந்துள்ளது. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) கருணா இணைந்துகொண்டுள்ளதோடு இப்போது மீள் குடியேற்றத்துக்கான பிரதி அமைச்சராக உள்ளார். கிழக்கில் மாகாண சபையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசாங்க-சார்பு கூட்டணியின் தலைமையில் டீ.எம்.வி.பீ. உள்ளது.

யுத்தக் குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மிக உயர்மட்டத்தினர் பொறுப்பாளிகள் என்பதை வாஷிங்டன் அறிந்திருந்ததை உறுதிப்படுத்தும், கொழும்புக்கான தற்போதைய அமெரிக்க தூதர் பற்றீசியா புடெனிஸ் அனுப்பிய தகவலை முன்னதாக விக்கிலீக்ஸ் 2010 ஜனவரி 15 அன்று வெளியிட்டிருந்தது. இராஜபக்ஷ அரசாங்கம், கொழும்பு ஊடகங்களின் உடந்தையுடன், இராணுவத்தின் அல்லது துணைப்படைகளின் குற்றங்களுக்கான பொறுப்பை தொடர்ந்தும் மறுத்துவருகின்றது. ஒபாமா நிர்வாகமும் ஒரு திட்டமிட்ட மௌனத்தை கடைப்பிடிக்கின்றது.