World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European Union and freedom of the press

ஐரோப்பிய ஒன்றியமும், பத்திரிகை சுதந்திரமும்

Peter Schwarz
6 January 2011
Back to screen version

ஜனவரி 1இல், அடுத்த ஆறு மாதங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஹங்கேரி ஏற்றது.

அதேநாளில், அரசு மற்றும் தனியார் ஊடகங்களை அரசு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும் ஒரு புதிய சட்டமும் ஹங்கேரியில் கொண்டு வரப்பட்டது. மறைமுகமாக, இது பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரேநாளில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கருத்து சுதந்திரமும், ஜனநாயகமும் பொதுவாகவே ஐரோப்பா முழுவதிலுமே சிதைந்து வருகிறது.

வலதுசாரி ஹங்கேரிய அரசாங்கம் அதன் அதிகாரத்தை ஊடகத்திடம் காட்டுவதற்கு எந்த நேரத்தையும் வீணடிக்கவிரும்பவில்லை. புதியதாக ஊடகங்களுக்கான ஆணையம் (Media Council) உருவாக்கப்பட்ட போது இருந்ததைவிட, புதிய சட்டம் வந்த உடனேயே அது சிறிய இடது-தாராளவாத வானொலி நிலையமான Tilos Radio க்கு எதிராக ஒரு வழக்குத் தொடர்ந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னால் ராப் பாடகரான Ice-Tஇன் ஒரு பாடலை ஒலிபரப்பியதற்காக அது குற்றஞ்சாட்டப்பட்டது. அமெரிக்க ராப் பாடகர்களின் தொனியை மிக குறைந்த ஹங்கேரியர்களால் தான் புரிந்து கொள்ள முடியும் என்ற போதினும், அது குழந்தைகளை முறையற்ற விதத்தில் பாதிக்கும் என்பதை எடுத்துக்காட்ட ஊடகங்களுக்கான ஆணையம் அதன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஹங்கேரிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

ஊடகங்களுக்கான ஆணையத்தின் அடுத்த இலக்காக, தொலைக்காட்சி சேனல் RTL Klub இருந்தது. இந்த ஒளிபரப்பு நிறுவனமும் சார்புரீதியில் தாராளவாத மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒன்றாக கருதப்பட்டது. “ஒரு தெற்கு ஹங்கேரிய கிராமத்தில் ஒரு சகோதரர் இன்னொருவரை கொடூரமாக கொலை செய்தது" குறித்து அது அளித்த செய்தியிலிருந்த "சென்சேஷனலிசத்திற்காக" (புலனுணர்ச்சியின் அடிப்படையிலேயே கருத்துக்கள் தோன்றுகின்றன என்ற கோட்பாடு) அது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அது வெளியிட்ட ஓர் இரத்தக்கறைப்படிந்த மெத்தையின் புகைப்படம், “இளைஞர்களையும், விடலைப்பருவத்தினரையும் கூட பாதிக்கக்கூடியதாக இருப்பதாக" கூறப்பட்டது.

இந்த புதிய சட்டமானது மறைமுகமாக ஏதாவதொரு போலிக்காரணத்திற்காக, ஊடக நிறுவனங்களை மௌனமாக்க அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு வெற்று காசோலை என்பதையே இரண்டு வழக்குகளும் எடுத்துக்காட்டுகின்றன. குறிவைக்கப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, “வன்முறையை ஊதிப்பெருக்கிக் காட்டுவது," “இளைஞர்களை அபாயத்திற்குள் தள்ளுவது" மற்றும் "ஆபாசம்" போன்ற ஒழுக்கநெறி குற்றச்சாட்டுக்களை ஊடகங்களுக்கான ஆணையம் முன்கொண்டு வருகிறது. ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒளிபரப்பாளர்கள், ரோமா, யூதர்கள், ஓரினபாலுறவு மற்றும் "கம்யூனிசம்" ஆகியவற்றிற்கு எதிராக தினந்தோறும் வெறுப்பூட்டும் கருத்துத்துரைகளைச் சமூக சூழ்நிலைகளுக்குள் கலந்து வருகிறார்கள், அவர்கள் எந்த வழக்குகளுக்கும் அஞ்ச வேண்டியதாக இல்லை.

இதுவரையில், Tilos Radio மற்றும் RTL Klub இன் மீது எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை. ஆனால் தாங்கொணாத அளவுக்கு அபராதங்களை விதித்து, அவற்றை திவாலாக்கும் அல்லது அவற்றின் உரிமங்களைப் பறிக்கும் அதிகாரம் ஊடகங்களுக்கான ஆணையத்திற்கு இருக்கிறது. ஆளும் கட்சி மற்றும் பெடெஸ்ஜ் (Fidesz) கட்சியின் உறுப்பினர்களைத் தான் முழுவதுமாக அந்த ஆணையம் உள்ளே கொண்டிருக்கிறது. அதன் தலைவராக இருக்கும் அன்னா மாரியா ஸ்ஜாலாய், பிரதம மந்திரி விக்டொர் ஆர்பனின் நீண்டகால நம்பிக்கைக்குரிய ஒரு பெண்மணி ஆவார்.

பல மாதங்களாகவே புதிய ஊடக சட்டத்தின்மீது அங்கே விவாதங்கள் நடந்து வந்தன என்ற போதினும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே தனியாக சில விமர்சன குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும் கூட, ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பான ஐரோப்பிய கமிஷனும், ஹங்கேரியில் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்க இதுவரையில் வெட்கக்கேடான விதத்தில் எதிர்வினைகளைக் காட்டியுள்ளது.

கிறிஸ்துமஸிற்கு சற்றே முன்னால், தொலைதொடர்பு மற்றும் ஊடகத்துறை கமிஷனர் நீலி கிரோஸ் ஹங்கேரிய அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார், அதில் அவர் ஊடகங்களுக்கான ஆணைய முறை தற்போதிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு ஒத்திருக்கிறதா என்ற கவலையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இப்போது வரைக்கும், கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் பரிமாற்ற சுதந்திரம் ஆகியவற்றிற்கு உத்தரவாதமளிக்கும், அடிப்படை உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய சட்டவரைவுடன் அந்த சட்டம் பொருந்தியிருக்கிறதா என்பதை ஆராய அவர் மறுத்து வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் பிரதிபலிப்பு காட்டாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஹங்கேரி ஏற்றிருப்பதன்மீது ஒரு கேள்விக்குறி இடப்படுவதை எப்பாடுபட்டாவது அது தவிர்க்க விரும்புகிறது. செலாவணி மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் கசப்பான மோதல்களைக் கருத்தில் கொண்டு, ஹங்கேரியின் தலைமையின்மீது எழுப்பப்படும் ஒரு சவாலானது தவிர்க்க இயலாமல் ஒரு புதிய நெருக்கடியைத் தூண்டிவிடக்கூடும்.

ஆனால் மிக அடிப்படையாக, இது ஹங்கேரிக்கு மட்டுமே பொருந்தும் பிரத்யேக விஷயமல்ல என்பது தான் உண்மை. ஐரோப்பிய ஒன்றியத்தால் ஹங்கேரியிலும், கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் ஏனைய பிற நாடுகளிலும் கொண்டுவரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளும் ஜனநாயக உரிமைகளோடு பொருந்தி நிற்க முடியாது.

பல ஐரோப்பிய நாடுகளிலும், பத்திரிக்கை சுதந்திரம் என்பது பெரும்பாலும் வெறும் எழுத்தளவில் தான் உள்ளது. இத்தாலியில், சில்வியோ பெர்லஸ்கோனி ஏறத்தாழ அனைத்து தனியார் ஊடக வடிகால்களையும் உடமையாக கொண்டிருக்கிறார் அல்லது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்; அத்துடன் அரசாங்கத்தின் தலைவராக இருந்து அரசுத்துறை ஒளிபரப்புகளையும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார். ஸ்பெயினிலும் கூட, பெர்லஸ்கோனியின் Mediaset தான் ஆண்டு தொடக்கத்திலிருந்தே மிகப்பெரிய தொலைக்காட்சி ஒளிப்பரப்பு நிறுவனமாக இருந்து வருகிறது.

பிரான்ஸில் நிக்கோலா சார்க்கோசி, பிரபல நாளிதழ்களின் உரிமையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்; அத்துடன் அரசுத்துறை ஊடகத்தையும் ஜனாதிபதி இறுக்கப் பிடித்து வைத்திருக்கிறார். ஆழமாக விமர்சிக்கும் இதழாளர்கள் அவர்களின் வேலைகளை இழக்கக்கூடும் என்ற விதத்தில், அவர் அதை தனிப்பட்ட விதத்தில் கையாள்கிறார். பெர்லஸ்கோனியும், சார்கோசியும் ஹங்கேரிய பிரதம மந்திரி ஆர்பனுக்கு அரசியல் முன்னுதாரணமாக மதிக்கப்படுகிறார்கள்.

ஏனைய நாடுகளில், நிதியியல் சக்திவாய்ந்த ஊடக பெருமகன்கள் தான் அரசாங்க கொள்கைகளை வரையறுக்கிறார்கள். பிரிட்டனில், டோனி பிளேயர் வரையில் எந்த பிரதம மந்திரியும் முர்டோச் பேரரசின் விருப்பத்தோடு முரண்பட துணிந்ததில்லை.

ஹங்கேரியின் ஊடக தளத்தில் ஜேர்மன் நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. வலதுசாரி Axel Springer நிறுவனம் தான் அந்நாட்டில் மிகப் பெரிய செய்தியிதழ் வெளியீட்டாளராக உள்ளது. சமூக ஜனநாயக கட்சியின் வலதுசாரிக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஜேர்மனியின் WAZ குழுமமும், தொலைக்காட்சி நிலையங்கள் Pro Sieben, Sat 1 மற்றும் RTL ஆகியவையும் ஹங்கேரியில் வலுவாக உள்ளன. இவர்கள் அனைவருமே புதிய ஊடக சட்டம் குறித்த அவர்களின் விமர்சனத்தில் மிகவும் அடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஹங்கேரிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு முறைமைக்கு ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் பிரதிபலிப்பு காட்டியுள்ளது. அது பத்திரிக்கை சுதந்திரத்தை ஒழிப்பதையும் விட மிகவும் கொடுமையாக உள்ளது. கடந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில், வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை மட்டுப்படுத்த, ஆர்பன் அரசாங்கம் 'நெருக்கடி வரி' என்றழைக்கப்படும் ஒன்றை கொண்டு வந்தது. இது முக்கியமாக வர்த்தகம், நிதியியல், தொலைதொடர்பு மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் உள்ள பெருநிறுவனங்களுக்குப் பொருந்தும். இது ஜேர்மனியிலும், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியாவின் பெருநிறுவன தலைமையிடங்களிலும் கடுங்கோபத்தைத் தூண்டிவிட்டது. ஹங்கேரியில் அதிகளவில் முதலீடு செய்திருக்கும் இவை, பல ஆண்டுகளாக வரிச்சலுகைகள் மற்றும் மானியங்களால் இலாபம் அடைந்து வருகின்றன.

டிசம்பரின் மத்தியில்தோச் டெலிகாம், அலெயன்ஸ் காப்பீட்டு குழுமம், E.oN, RWE மற்றும் EnBW ஆகிய எரிசக்தி நிறுவனங்கள், மற்றும் Rewe சில்லறை விற்பனை குழுமம் உட்பட—13 நிறுவனங்களின் தலைவர்கள், "தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதுகின்மீது" வரவு-செலவு திட்டத்தைச் சமன்படுத்தும் முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றிய கமிஷனுக்கு கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கடிதத்தை அனுப்பினர். ஹங்கேரிய அராசங்கம் "எதிர்கால முதலீட்டிற்கான, நம்பிக்கையின் எல்லா அடித்தளங்களையும்" அழித்து வருகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் உடனடியாக இதற்கு எதிர்வினை காட்டியது. ஏற்கனவே அக்டோபரில், புதிய வரி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், அது ஹங்கேரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தக் கூறி அதற்கு அழைப்பு விடுத்தது. டிசம்பரில், பெருநிறுவன செயலதிகாரிகளின் கடிதத்திற்குப் பிரதிபலிப்பாக, ஓர் உத்தியோகப்பூர்வ புலன்விசாரணை தொடங்கப்பட்டது.

ஜேர்மன் அரசாங்கமும் இந்த விஷயத்திற்குள் குதித்தது. தம்முடைய "கவலையை" வெளியிட்ட சுதந்திர ஜனநாயக கட்சியின் பொருளாதாரத்துறை மந்திரி Rainer Brüderle, வெளிநாட்டு நிறுவனங்களை முதன்மையாக பாதிக்கும் கட்டணங்கள் "அடிப்படையில் மிகவும் சிக்கலானவையாகும்" என்று எச்சரித்தார்.

ஒரு வலதுசாரி வெகுஜன மற்றும் தேசியவாத பிரச்சாரத்தின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்த ஆர்பன் அரசாங்கம், அதன் சொந்த அரசியல் அடித்தளத்தை அமைதிப்படுத்தவே முதன்மையாக இந்த வெளிநாட்டு பெருநிறுவனங்கள் மீதான வரிவிதிப்பைப் பயன்படுத்தி வருகிறது. அடுத்த மாதவாக்கில், வரவு-செலவு திட்டத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான ஒரு திட்டத்தை அந்த அரசாங்கம் சமர்பிக்க வேண்டும். சர்வதேச நிதியியல் சந்தைகள் சமாதானமடையவில்லை என்றால், பட்டியலிடும் அமைப்புகள் அந்த நாட்டின் கடன்மதிப்பை "மதிப்பற்ற" நிலைக்கு இறக்கக்கூடும். “தற்போது நாம் படுகுழிக்கு வெகு நெருக்கத்தில் இருக்கிறோம்,” என்று கூறி, புதபெஸ்ட் (Budapest) பொருளாதார நிபுணர் கியோர்ஜி பார்தா நிலைமையைத் தொகுத்து அளித்தார்.

அதன் தேசியவாத வாய்ஜாலங்களுக்கு இடையில், ஆர்பன் ஆட்சி முழுமையாக சர்வதேச நிதி சந்தைகளைச் சார்ந்துள்ளது. ஹங்கேரியின் மொத்த முதலீடுகளில் சுமார் 80 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகிறது; இதன் கால்பகுதி ஜேர்மனியிலிருந்து மட்டும் வருகிறது.

பத்திரிகை சுதந்திரத்தை ஒழித்தல் மற்றும் ஏனைய சர்வாதிகார முறைமைகளுடன் அது அதன் மக்கள்விரோத சிக்கன திட்டங்களை தொழிலாளர் வர்க்கத்தின் முதுகில் சுமத்த தயாராகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய கமிஷனுக்கும், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் இது நன்றாகவே தெரியும் என்பதுடன், வெகுஜன மக்களின் எதிர்ப்பை ஒடுக்க தேவையான அனைத்துவிதமான முறைமைகளுக்கும் அவை உதவியும் வருகின்றன.

ஹங்கேரியின் சமூக நிலைமை ஏற்கனவே பேரழிவுமிக்கதாக உள்ளது. அந்நாட்டின் 10 மில்லியன் குடிமக்களில் 1 மில்லியனுக்கும் மேலானவர்கள் அவர்களின் மின்சாரம், எரிவாயு மற்றும் நேரத்திற்கு நேரம் அதிகரிக்கும் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருப்பதாக ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது. அவர்கள் மூன்று மாதங்கள் நிலுவைகளில் மாட்டிக் கொண்டால், அவர்களின் வாழ்க்கையே போய்விடும்.

பத்திரிகை சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளின் பாதுகாப்பிலிருந்து பிரிக்க முடியாததாக உள்ளது. இதற்கு பெருநிறுனவங்கள் மற்றும் வங்கிகளின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு புரட்சிகர சோசலிச திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டம் தேவையாகும்.