World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One-sided war in Wisconsin

விஸ்கான்சனில் ஒருதலைபட்சமான யுத்தம்

Patrick Martin
25 February 2011

Back to screen version

விஸ்கான்சனில் நடந்துவரும் மக்கள் போராட்டங்களோடு இணைந்த இரண்டு நிகழ்வுகள், அம்மாநிலத்தில் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதிலுமே தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளைக் கீழே தள்ள தீர்மானித்திருக்கும் ஆளும் வர்க்கத்தின் முழு கொடூரத்தை எடுத்துக்காட்டுகின்றன.

விஸ்கான்சன் போராட்டங்களுக்கு பிரதிபலிப்பாக, "சுடும் ஆயுதங்களை'' பயன்படுத்த விரும்புவதாக, இண்டியானாவின் குடியரசு கட்சி இணை அரச வழக்குதொடுனர் ஜெஃப் காக்ஸ், தாராளவாத இதழான Mother Jonesக்கு சமீபத்தில் கூறினார். சமூகநல வெட்டுக்கள் மற்றும் தங்களின் சட்ட உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராடிவரும் தொழிலாளர்களை, அவர் "அரசியல் எதிரிகள்" என்றும், “குண்டர்கள்" என்றும் அழைத்துடன், "உங்களுக்கு சரியாக விளங்கும். கொலை செய்யும் ஆயுதங்களை பயன்படுத்துவதே என் ஆலோசனை,” என்றும் அவர் தெரிவித்தார். எட்டு ஆண்டுகளாக ஒரு மாநில முதன்மை நீதிபதியாக இருந்துவரும் காக்ஸ் பகிர்ந்துகொண்ட இக்கருத்தை இதழ் பிரசுரித்ததும், புதனன்று அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

நியூயோர்க்கிலிருந்து வெளிவரும் தொழிற்சங்க-ஆதரவு வலைத்தளம் Buffalo இல் இருந்து ஒரு வலைப்பதிவாளர், சங்கங்களில் சேர விடாமல் தடுக்கும் பெருநிறுவனங்களுக்கும், அதி-வலது Tea Party இயக்கத்திற்கும் ஆதரவளிக்கும் முக்கியமானவர்களில் ஒருவருமான பில்லீனியர் டேவிட் கோச்சை போல தன்னைக்காட்டிக்கொண்டு விஸ்கான்சன் ஆளுநர் ஸ்காட் வால்கரை செவ்வாயன்று தொடர்பு கொண்டார். அய்ன் மர்பி என்ற அந்த வலைப்பதிவாளர் அவருடனான தொலைபேசி அழைப்பைப் பதிவு செய்ததுடன், புதனன்று அதன் ஒலிப்பதிப்பையும் பிரசுரித்தார்.

அந்த ஒரு 20-நிமிட உரையாடலின் போது, குடியரசு கட்சி ஆளுநரிடமிருந்து பல ஆத்திரமூட்டும் கருத்துக்களை மர்பி வெளிக்கொணர்ந்தார். மாநிலத்தை விட்டு வெளியேறி, தம்முடைய தொழிற்சங்க எதிர்ப்பு சட்டமசோதாவைக் கொண்டு வர முடியாமல் செய்த ஜனநாயக கட்சி செனட்டர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வரப்போவதாகவும், அவருடைய எதிர்தரப்பினரோடு ஒரு பேஸ்பால் மட்டையைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்த அவர், மாநிலத்தின் தலைமை செயலகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்து வரும் கூட்டத்திற்குள் "குழப்பம் உண்டாக்கும் சிலரை விதைப்பதில்" உள்ள சாதக-பாதகங்களையும் விவாதித்தார்.         

போலி கோச் உடனான வால்கரின் விவாதத்தின் இறுதியில் மிகவும் குறிப்பிட வேண்டிய, அதேவேளை மிகவும் குறைவாகவே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இங்கே அவர் பெப்ரவரி 6இல் அவருடைய மந்திரிசபையில் நடந்த ஒரு விவாதத்தை இங்கே நினைவுகூர்கிறார், அதாவது ரோனால்ட் ரேகனின் 100வது பிறந்தநாளைக் குறிப்பிட்டதோடு, “ரேகனின் ஜனாதிபதி பதவி காலத்தில் மட்டுமல்ல, அவருடைய அரசியல் வாழ்விலேயே, அவர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை வேலையை விட்டு நீக்கியது தான், மிகச்சிறந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது,” என்று வால்கர் குறிப்பிட்டார். விஸ்கான்சனில் வரவிருக்கும் மோதல் நம்முடைய காலத்தில் வரலாற்று போக்கை மாற்றுவதாக இருக்கும்,” என்று வால்கர் அவருடைய மந்திரிசபையில் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு வெளிப்பாடுகளும் வெறுமனே இரண்டு தனிநபர்களின் கருத்தல்லாத்துடன், மாறாக ஒட்டுமொத்த சமூக வர்க்கத்தின் கொடூரமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் உள்ள இந்த வெளிப்பாடுகள் அமெரிக்க ஊடகங்கள் பெயரளவிற்கு காட்டும் அரசியல் யதார்த்தத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. காக்ஸூம், வால்கரும் அவர்களைக் குறித்து மட்டும் பேசவில்லை, மாறாக தங்களது தீர்மானங்களை எட்ட வன்முறையைப் பயன்படுத்தவும் தயாராக உள்ள சலுகை படைத்த நிதியியல் மேற்தட்டிற்காக பேசுகிறார்கள். இந்த மாதிரியான வார்த்தைகளைத் தான், ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்கு தயாரான போது எகிப்தில் முபாரக்கும், லிபியாவில் கடாபியும் பயன்படுத்தி வந்தார்கள்.

அரசு தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை வால்கர் குழுமம், ஒரு தொடர் அத்தியாயங்களின் தொடர்ச்சியாக பார்க்கவில்லை, மாறாக தொழிலாளர் வர்க்கத்தை நசுக்க ஒரு பரந்துபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், அவர்களின் சமூக உரிமைகளை நூற்றாண்டுகள் பின்திருப்பிவிடவும் பார்க்கிறார்கள். இந்த தாக்குதல் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களாலும், அத்துடன் மத்திய அரசாங்கத்தாலும், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி தலைமைகள் இரண்டின் கீழும் நடத்தப்படவுள்ளது.

தொழிலாளர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளின் இயல்பை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் யுத்த பிரகடனம் செய்த ஓர் ஆளும் மேற்தட்டை முகங்கொடுத்துள்ளனர். ஆளும் வர்க்கம், அதன் தீர்மானங்களை எட்டுவதற்காக நனவுபூர்வமாக வேலை செய்யும் இரண்டு கட்சிகளுடன் அரசியல்ரீதியாக ஒன்றுதிரண்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், பெரும்பான்மை மக்களின் நலன்களை முன்னிறுத்தும் வகையில், பரந்தமக்கள் அமைப்புகளை இனிமேல்தான் உருவாக்க வேண்டியுள்ளது.

அமெரிக்க தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை மட்டுமல்ல, அவர்களையுமேயே காப்பாற்றிக் கொள்ளவும் இலாயக்கற்று போய்விட்டன. விஸ்கான்சினில் உள்ள 'அரசு தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின்' நிர்வாகிகள், தொழிலாளர்களின் வருமானம், நலன்கள் மற்றும் பணியிட உரிமைகளில் வால்கரால் கோரப்படும் எல்லா வெட்டுக்களையும் வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் அவர்களின் சொந்த வருவாய்களை அச்சுறுத்தும் கோரிக்கைகளை மட்டும் தான் அதாவது, உறுப்பினர் சந்தா வசூலை முடிவுக்கு கொண்டு வருவது, சங்கங்களுக்கு தானாகவே அங்கீகாரம் வழங்குவது போன்றவற்றை மட்டுமே எதிர்க்கிறார்கள்.  

பல தசாப்த தொழிலாளர்-நிர்வாக கூட்டுழைப்பு, கம்யூனிச-எதிர்ப்பு, வர்க்க போராட்டத்தை நிராகரிப்பு ஆகியவை இதில் "தொழிலாள வர்க்கம்" என்ற சொல்லே தடுக்கப்பட்டு, “மத்தியதட்டு வர்க்கம்" என்று மாற்றப்பட்டுவிட்ட நிலையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களிலிருந்து தொழிற்சங்க நலன்களைப் பிரித்து வைத்துள்ளன.

ஆளும் வர்க்கம், அது சுரண்டி-கொழுத்த அதன் செல்வவளத்தைப் பாதுகாக்க ஓர் இரக்கமற்ற போராட்டத்தை நடத்தி வருகின்ற நிலையில், நிதியியல் பிரபுத்துவத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்து தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதை அடித்தளமாக கொண்ட, ஒரு சோசலிச போராட்டத்தோடு சங்கங்கள் இணக்கமற்ற விரோதத்தில் உள்ளன.

அதற்கு பதிலாக அவர்கள், பெரும் பெருநிறுவனங்களின் இலாபங்களையும், பெரும்-பணக்காரர்களின் செல்வவளத்தையும் பாதுகாக்கும் பிரதிநிதிகளுடன் இருக்கும் ஒரு பெருவர்த்தக கட்சியான ஜனநாயக கட்சியுடன் (குடியரசு கட்சியும் இதற்கு எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை), தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக இணைத்து வைப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்தடுத்து, வால்கர் கோரிய அதே கோரிக்கைகளை தான் அரசு தொழிலாளர்கள் மீது ஜனநாயக கட்சி ஆளுநர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் தொழிலாளர்களிடம் இருந்து விட்டுகொடுப்புகளைப் பெற உதவியாக, சங்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.

உண்மையில், தொழிலாளர்கள்மீது நிதியியல் பிரபுத்துவம் தொடுக்கும் யுத்தத்தின் முக்கிய தரகர்களில் ஒன்றாக ஒபாமா நிர்வாகம் இருக்கிறது. அந்த நிர்வாகம் வங்கி பிணையெடுப்பிற்கும் வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகளின் கொடுப்பனவுகளுக்கும் ட்ரில்லியன் கணக்கில் வாரியிறைக்கும் அதேவேளையில், திவாலாகிப்போன மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகளுக்கு உதவ விடாபிடியாக மறுக்கிறது. உழைக்கும் மக்களுக்கு குழிபறிக்கும் நோக்கில் நூறு பில்லியன் கணக்கான டாலர்களை வரவு-செலவு கணக்கில் வெட்டும் தயாரிப்புகளைச் செய்யும் அதேவேளையில், மத்திய தொழிலாளர்களின் கூலி உயர்வு நிறுத்தத்தையும் அவர் திணித்து வருகிறார்

பெருமந்த நிலைமை ஏற்பட்ட பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறை சிக்கி கொண்டிருக்கும் மிகப் பெரிய நெருக்கடி தொடங்கி மூன்று ஆண்டுகளில், அமெரிக்க அரசியல் அமைப்புமுறை அதன் வர்க்க குணத்தை சாத்தியப்பட்ட அளவிற்கு மிகவும் உறுதியானவிதத்தில் வெளிக்காட்டி உள்ளது. பாடசாலை ஆசிரியர்களும், தெரு துப்புரவாளர்களும் "அதிக சம்பளம்" பெறுவதாகவும், “தனிச்சலுகை" பெற்றிருப்பதாகவும் ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் பிரஸ்தாபம் செய்து கொண்டு, பில்லினியர்களையும், பெருநிறுவனங்களையும் காப்பாற்றி வருகின்றனர்.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையில், விஸ்கான்சன் சம்பவங்கள் அவர்களைத் தூக்கத்திலிருந்து தட்டியெழுப்பியுள்ளது. தொழிலாள வர்க்கம் ஓர் ஆழமான, காலங்கடந்த போராட்டத்தை முகங்கொடுத்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்-அதன் எதிரிகள் நிச்சயமாக அதை புரிந்துகொள்வார்கள். விஸ்கான்சனிலும், நாடு முழுவதிலும் உள்ள ஏனைய மாநிலங்கள் மற்றும் நகரங்களிலும் உள்ள முரண்பாடுகள், தனித்த தொடர்பற்ற சம்பவங்கள் அல்ல, மாறாக அவை நடந்துவரும் வர்க்க யுத்தத்தின் ஒரு பாகமாகும்.  

இந்த போராட்டத்தை வென்றெடுக்க வேண்டுமானால், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கும், போராடும் புதிய அமைப்புகளும் தேவை. தொழிலாளர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தை நனவுபூர்வமாக கையெடுக்க வேண்டும். கல்வி, வீட்டுத்துறை, மருத்துவ நலன் போன்ற அத்தியாவசிய அடிப்படை சமூக தேவைகளுக்கு "பணமில்லை" என்ற முறையீடுகளுக்கு பதில்களையும், அத்தோடு பில்லியனயர்களின் செல்வவளத்தை பறிமுதல் செய்வதற்கான மற்றும் பெரிய பெருநிறுவனங்களை பொதுமக்கள் உரிமைக்கு மாற்றுவதற்கான கோரிக்கைகளையும் அவர்கள் வைத்திருக்க வேண்டும்

இது, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளிலிருந்து அரசியல்ரீதியில் உடைத்துக் கொண்டு, சோசலிசம் மற்றும் சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்திற்காக, தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச சமத்துவ கட்சியை ஒரு பரந்த மக்கள் கட்சியாக கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது