World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Libya and the bankruptcy of Arab nationalism

லிபியாவும், அரபு தேசியவாதத்தின் திவால்நிலைமையும்

Bill Van Auken
23 February 2011
Back to screen version

லிபிய மக்கள் எழுச்சியை இரத்தத்தில் மூழ்கடிக்க கேர்னல் மௌம்மர் கடாபி ஆட்சியால் நடத்தப்பட்ட மூர்க்கத்தனமான முயற்சி, அரேபிய தேசியவாத திவால்நிலைமையின் மற்றொரு காட்டுமிராண்டித்தனமானதும் மற்றும் துன்பியலானதுமான ஆதாரத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து நியாயமான விடுதலையை பெற விரும்பும் மக்களின் விருப்பங்களை, அரேபிய முதலாளித்துவத்தின் எந்த பிரிவும் தீர்க்க இலாயக்கற்றது என்பதை, இது மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக்காட்டியுள்ளது.

பெருந்திரளான மக்கள் ஆதரவுடன் அவர் ஒரு காலனித்துவ-எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக இருந்ததிலிருந்து, அவருடைய சொந்த மக்களுக்கு எதிராக படுகொலையாளராக மாறியது வரையில், நான்கு தசாப்தங்களாக கடாபியின் பரிணாமத்தை லிபிய ஆட்சி கண்டுள்ளது. இது ஏதோ ஒரே இரவில் நடந்துவிடவில்லை.

ஒரு தசாப்தத்திற்கு முன்னராக இருந்திருந்தால், கடாபிக்கு எதிரான ஓர் எழுச்சி வாஷ்டனில், "தீமையின் அச்சு" முறிந்ததாக கருதப்பட்டு, ஒரு வெற்றியாக கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் இன்றோ, ஒபாமா மௌனம் சாதிக்கிறார்; அவருடய வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், திரிபொலி, பென்காசி மற்றும் ஆறரை மில்லியன் மக்கள் கொண்ட அந்நாட்டின் இதர இடங்களிலும் நடக்கும் மொத்த படுகொலைகளையும் மிகவும் எச்சரிக்கையோடு கையாள்கிறார். கடாபி, அப்பிராந்தியத்தில் ஸ்திரப்பாட்டிற்கான ஒரு சக்தியாகவும் மற்றும் இலாபங்களுக்கு உத்தரவாதமளிப்பவராக கடந்த தசாப்தங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். குறிப்பிடத்தக்க வகையில், அவருக்கு எதிரான எழுச்சி தான் வோல் ஸ்ட்ரீட்டில் விற்பனை வீழ்ச்சியை தூண்டிவிட மத்தியகிழக்கில் பரவிவரும் முதல் புரட்சிகர அபிவிருத்தியாக உள்ளது.

நிராயுதபாணியான போராட்டக்காரர்களுக்கு எதிராக விமான தாக்குதலை நடத்தவும், அவரின் சொந்த மக்களுக்கு எதிராக கனரக ஆயுதந்தாங்கிய கூலிப்படைகளை கட்டவிழ்த்துவிடவும், கடாபி அழைப்புவிடுக்கும் அளவிற்கு வந்து முடிந்திருக்கும் இந்த அரசியல் பாதை, அமெரிக்க ஆதரவுடன் அடிமைத்தனமும், ஊழலும் நிறைந்திருந்த ஐட்ரிஷ் அரசரின் முடியாட்சியை கவிக்க அவருடைய (கடாபியின்) தலைமையில் இரத்தமின்றி நடந்த ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்போடு, 1969 செப்டம்பரில் தொடங்கியது.

முற்றிலும் ஊழலில் ஊறிய மற்றொரு முடியாட்சியாக எகிப்தில் இருந்த பரோக் அரசருக்கு எதிராக 1952 எகிப்திய புரட்சியில் நடத்தப்பட்ட இதேபோன்ற ஓர் ஆட்சிகவிழ்ப்பின் மூலம், ஆட்சியை பிடித்த கமால் அப்துல் நாசரின் எழுச்சியிலிருந்து பெரும் தாக்கத்தை கொண்டிருந்த அரசியல் கருத்துக்களோடு இருந்த ஒரு தலைமுறையின் பாகமாக, ஒரு வறுமைநிறைந்த நாடோடி பின்புலத்திலிருந்து வந்த 27 வயது நிரம்பிய ஓர் இராணுவ அதிகாரியாக கடாபி இருந்தார். சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியது, மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை பழித்துரைத்தது, மற்றும் ஒருங்கிணைந்த-அரேபிய ஐக்கியத்திற்கு நாசர் அழைப்புவிடுத்தமை ஆகியவை லிபியாவில் ஒரு சக்திவாய்ந்த உந்துதலாக இருந்தது. 1911இல் இருந்து 1943 வரையில் இத்தாலிய காலனித்துவ ஆக்கிரமிப்பின்கீழ், லிபியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது இத்தாலிய பாசிசவாதிகளால் பட்டினி போடப்பட்டு இறந்தனர்.

அமெரிக்க இராணுவம் மூலோபாயரீதியில் அமைத்திருந்த அதன் முக்கிய வீலஸ் விமானப்படைத்தளத்திலிருந்து அதனை கடாபி வெளியேற்றியமை, மற்றும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியவை, மற்றும் எகிப்திய, சிரியா மற்றும் துனிசியாவுடன் அனைத்து-அரேபிய ஒன்றியங்களையும் ஒன்றுதிரட்ட அந்த ஆட்சியில் செய்யப்பட்ட பெரும் முயற்சிகளுக்கு லிபிய மக்களின் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வுகள், ஒரு பரந்த ஆதரவிற்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.

ஏனைய அனைத்து மத்தியகிழக்கு அரசுகளைப் போலவே காலனித்துவத்திலிருந்து வெளியில் வந்த லிபியாவும், அப்பிராந்திய மக்களின் நலன்களுக்கு அல்லாமல், ஏகாதிபத்திய நலன்களுக்கு உதவ புவியியல்ரீதியிலான எல்லைகள் மற்றும் அரசியல் கட்டுமானங்களை நடைமுறைப்படுத்துவதில் அடித்தளமாக கொண்டிருந்தது. இருந்தபோதினும், இந்த நாடுகள் ஒவ்வொன்றிற்குள்ளும் எழுச்சி பெற்றுவந்த முதலாளித்துவம், இத்தகைய எல்லைகள் மற்றும் அவற்றின் பிரத்யேக அரசுகளை அவற்றின் வர்க்க ஆட்சியின் அஸ்திவாரங்களாக தக்கவைப்பதில் தீர்மானத்தோடு இருந்தன.

தங்களைத்தாங்களே புரட்சிகரமானவை என்று அறிவித்துக் கொண்ட, ஏதோவொரு வகையில் அல்லது மற்றொருவகையில் "சோசலிச" முத்திரையைக் குத்திக் கொண்ட மற்றும் இஸ்ரேலுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான எதிர்ப்பாளர்களாக இருந்த, இத்தகைய காலக்கட்டத்தில் அதிகாரத்திற்கு வந்த இதேபோன்ற பல அரசாங்கங்களில் கடாபியின் ஆட்சியும் ஒன்றாக இருந்தது. இதில் சிரியாவின் ஹபீஜ் அல்-அசாத் மற்றும் ஈராக்கில் சதாம் ஹூசைனின் ஆட்சிகளும் உள்ளடங்கும். இவை 1960களின் பிற்பகுதியில் பாதிஸ்ட் இயக்கத்தின் கன்னைகளால் நடத்தப்பட்ட ஆட்சிசதிகளின் விளைவாக அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

நாசரைப் போலவே அவருக்கு முன்னால் இருந்தவர்களும், அவர்களின் நாடுகளின் எண்ணெய் செல்வவளத்தைப் பயன்படுத்துவதற்காக, ஒரு மக்கள் அடித்தளத்தைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவ நலன், கல்வி மற்றும் வீட்டுத்துறை போன்ற துறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர, குறிப்பாக ஈராக் மற்றும் லிபியாவைப் பொறுத்தவரையில் சிறிதளவாவது விடுதலையைப் பெற அவர்கள் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையில் இருந்த குளிர்-யுத்த (cold war) பதட்டங்களை பயன்படுத்திக் கொண்டனர்.

"வெளிப்படையான ஜனநாயகத்தோடு", தம்முடைய ஆட்சி "சோசலிச மக்கள் லிபியன் அரேபிய ஜமாஹிரியாவாக" இருக்கும் என்று அறிவித்துக் கொண்டிருந்த போதினும், கடாபியின் ஆட்சி நிர்வாகம் அனைத்துவித அரசியல் எதிர்ப்பையும் இரக்கமில்லாமல் ஒடுக்குவதை, குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சுயாதீனமான போராட்டங்களையும் ஒடுக்குவதை செய்து வந்தது. வேலைநிறுத்தங்கள் தடைசெய்யப்பட்டன; அந்நாட்டின் சிறைக்கூடங்கள் அரசியல் கைதிகளால் நிரம்பியது.

உலக அரங்கில், பாலஸ்தீன போராட்டத்தை ஒடுக்க வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட "அமைதி பேச்சுவார்த்தை" என்றழைக்கப்பட்டதை எதிர்த்த, யுத்த்ததை செய்ய இஸ்ரேலின் கைகளை சுதந்திரமாக இயங்கவிட்டதன் மூலம்  அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆளுமையை பாதுகாத்துக்கொள்ள முயன்றதை எதிர்த்த நிராகரிப்பாளர்கள்" என்றழைக்கப்பட்ட அதி-தீவிரம் கொண்டவர்களின் பாத்திரத்தை கடாபி எடுத்துக்கொண்டார்.  

நடைமுறையில், பாலஸ்தீனியர்களுக்கு கடாபியின் ஆதரவு முடிந்தவரைக்கும் குழப்பமாக இருந்தது. அது லிபியாவிலிருந்து பாலஸ்தீன அகதிகளை பெருந்திரளாக வெளியேற்ற PLO இற்கு நிதியுதவி கொடுப்பதில் இருந்து அப்பிராந்தியத்தின் அமெரிக்க செல்வாக்கிற்கு அவரின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் தீவிர தேசியவாத போராட்டங்களுக்கு அவர் அளித்த ஆதரவு (இது வாஷிங்டனில் ஒரு சர்வதேச விரோதியின் அந்தஸ்தை அவருக்கு அளித்தது) ஆகியவற்றிற்கிடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

அந்த ஆட்சியின் மீதிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோபம், ரோனால்ட் ரேகனின் நிர்வாகத்தின்கீழ் ஆயுதந்தாங்கிய தாக்குதல்களுக்கு இட்டுச் சென்றது. அவர் கடாபியை "மத்தியகிழக்கின் வெறிநாய்" என்று குறிப்பிட்டார். 1986இல், அந்நாட்டின் கடற்கரை பகுதியில் அமெரிக்க கடற்படை எரிச்சலூட்டும் உபாயங்களை நடத்தியது. அது ஒரு லிபிய கப்பலை மூழ்கடிக்கும், லிபிய விமானங்களை சுட்டுத்தள்ளும், மற்றும் 35 கப்பலோட்டிகளைக் கொல்லும் அளவிற்கு சென்றது. இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு அடுத்து, திரிபொலி மற்றும் பென்ஜாஜி மீது அமெரிக்க குண்டுவீச்சு வேட்டை தொடர்ந்தது. அதில் 60 லிபியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் கடாபியின் தத்தெடுக்கப்பட்ட மகளும் இருந்தார்.

எவ்வாறிருந்தபோதும், உலக நிலைமைகள் கூர்மையாக மாறிக் கொண்டிருந்ததாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, கடாபி அவருடைய முந்தைய புரட்சிகர பாசாங்குகளைக் கைவிடும் நிலைக்கு அவரை விரட்டிச்சென்ற, லிபிய உள்நாட்டு சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் இருந்த அளவிற்கு, ஏகாதிபத்திய அச்சுறுத்தல்கள் பெரிதாக இருக்கவில்லை.

சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சிதைவு, அமெரிக்க செல்வாக்கிற்கு எதிர்பலமாக, அரேபிய தேசியவாத ஆட்சிகளில் சோவியத் செல்வாக்கை நிறுவ முடியாமல் செய்தது. இது லிபியாவில் எண்ணெய் விலைவீழ்ச்சியையும் மற்றும் கடாபி ஆட்சியைக் கூர்மையாக வலதிற்கு திருப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய முகாமிற்குள் திருப்பிக் கொண்டுவர கணிசமான உள்எதிர்ப்புகளையும் கொண்டு வந்து சேர்த்தன.

1990களின் பிற்பகுதிவாக்கில், கிழக்கின் அருகிலுள்ள பிராந்தியங்களுக்கான வெளிவிவகாரத்துறையின் அப்போதைய அமெரிக்க துணை செயலாளர் மார்ட்டீன் இன்டிக், வாஷிங்டனின் கதவுகளை கடாபி தட்டியபோது பின்வருமாறு எழுத வேண்டியிருந்தது: “லிபியாவும், அமெரிக்காவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து ஒரு பொதுவான அச்சுறுத்தலை முகங்கொடுத்துள்ளனர்என்பதை திரு. கடாபி புரிந்து கொண்டுவிட்டார் என்று கூறியிருப்பதுடன், லிபிய பிரதிநிதிகள் அனைத்தையும் மேஜையின் முன்னால் வைக்க தயாராக உள்ளனர். அவ்வகையில், அல்-கொய்தாவிற்கு எதிரான பிரச்சாரத்தில் லிபியா முழுமையாக ஒத்துழைப்பதாகவும், பாலஸ்தீனிய "நிராகரிப்பாளர்கள்" குழுவினருடனான அனைத்து ஒத்துழைப்புகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாகவும், மத்தியகிழக்கில் அமெரிக்க அமைதி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஆபிரிக்காவில் உள்ள முரண்பாடான உடன்படிக்கையில் உதவுவதாகவும் அவர்கள் கூறினர்.”

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களால் தூண்டப்பட்டு முன்மொழியப்பட்ட அந்த கூட்டணி, கடாபியின் இரகசிய பொலிஸ் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உடைமையாக மாறிய போது, முழுமையடைந்தது.

இது, பாய்ந்துகொண்டிருந்த தனியார்மயமாக்கங்கள், மற்றும் பெரிய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச வங்கிகள், ஆயுத தரகர்கள், மற்றும் பிற பன்னாட்டு பெருநிறுவனங்களை லிபியாவிற்குள் மீண்டும் கொண்டு வருவது ஆகியவற்றை உட்கொண்டிருந்த உள்நாட்டு "சீர்திருத்தங்களுடன்" இணைந்திருந்தது.

மக்கள்தொகையில் 35 சதவீதம் வறுமையிலும், 30 சதவீதம் வேலைவாய்ப்பின்றியும் இருக்கும் ஒரு நாட்டில் உத்தியோகபூர்வ ஊழலும், சமூக சமத்துவமின்மையும் தீவிரமடைந்ததே இதன் விளைவுகளாக இருந்தன.

மத்தியகிழக்கிலும், மொத்த முன்னாள் காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளிலும் கடாபியின் மற்றும் அவரின் அப்பிராந்திய கூட்டினரினதும் பரிணாமம்,  நிரந்தர புரட்சி தத்துவத்தை உறுதியாக மெய்பித்துக்காட்ட உதவியுள்ளது. லியோன் டிரொட்ஸ்கியின் இந்த தத்துவம், தேசிய முதலாளித்துவம்-அதன் மிகவும் தீவிர மற்றும் எண்ணெய் வளமிக்க பிரதிநிதிகளைக் கொண்டிருந்தபோதினும்-காலனித்துவ ஒடுக்குமுறை மற்றும் நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தன மரபைக் கடந்து வருவதில் மக்களை வழிநடத்திச் செல்ல முடியாமல் உள்ளது. அது ஏகாதிபத்தியத்துடனான அதன் வர்க்க நலன்களோடு பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் அது அதன் சொந்த தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் உள்-அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சுகிறது. லிபியாவில் நடந்துவரும் படுகொலைகள் தவிர்க்கமுடியாத விளைவுகளாகும். ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டம் மட்டும் தான், இந்த இரத்தந்தோய்ந்த முட்டுச்சந்திற்கு ஒரு வழியைத் திறந்துவிடும்.