World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Uprising spreads to Libyan capital

லிபியத் தலைநகருக்கு எழுச்சி பரவுகிறது

By Ann Talbot
22 February 2011
Back to screen version

லிபிய எழுச்சியானது நாடு முழுவதும் பரவுகையில், கேணல் முயம்மர் கடாபி ஆட்சியினால் கொல்லப்படும், காயமுறும் எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கின்றன. சில தகவல்களின்படி தலைநகர் ட்ரிபோலி உட்பட எதிர்ப்பாளர்கள் மீது ஜெட் விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்படுகின்றன. போர் விமானங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதாகவும், இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்திற்கு வரும் சாலைகளில் குண்டு பொழிந்தன என்றும் கூறப்படுகிறது.

அல் ஜசீராவுடன் தொலைபேசியில் நேரடியாகப் பேசிய ஒரு ட்ரிபோலி வாசியான அடெல் மஹ்மத் சலே என்ன நடக்கிறது என்பது பற்றி விவரிக்கிறார்:

இன்று நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கற்பனையும் செய்ய முடியாதது ஆகும். போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பொறுப்பில்லாத முறையில் ஒவ்வொரு பகுதியின் மீதும் குண்டுவீசிக் கொண்டிருக்கின்றன. பலர், மிகப் பலர் இறந்துவிட்டனர்.”

எங்கள் மக்கள் இறந்த கொண்டிருக்கின்றனர். இது நிலத்தைச் சுட்டெரிக்கும் போக்காகும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை குண்டுகள் வீசப்படுகின்றன.”

இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. எவர் நகர்ந்தாலும், அவர்களுடைய கார்களில் அவர்கள் இருந்தாலும், (அரசாங்கத்தினரால்) தாக்கப்படுகின்றனர்.”

ஞாயிற்றுக் கிழமை இரவு எழுச்சியானது டிரிபோலிக்குப் பரவியது. அப்பொழுது 4,000 எதிர்ப்பாளர்கள் பசுமைச் சதுக்கத்தில் ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று அழைப்புக் கொடுத்துக் கூடினர். அரசாங்கத்தின் குண்டர்கள் அவர்களைத் தாக்கினர். பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோதல் விடியும் வரை தொடர்ந்தது. அதிக ஆயுதம் தாங்கிய கூலிப்படையினர் தெருக்களில் கார்களில் சென்றுகொண்டு கண்டவர்களையெல்லாம் சுட்டுவிடுவதுடன் மக்களை ஓட ஓட விரட்டவும் செய்கின்றனர். அந்தந்த இடங்களில் இருந்து வரும் தகவல்கள் கூலிப்படையில் ஆபிரிக்கர்கள் மட்டும் இல்லாமல் இத்தாலியர்களும் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

கடாபியின் மகன், செய்ப் அல்-இஸ்லாம் கடாபி அரச தொலைக்காட்சியில் ஞாயிறு இரவில் தோன்றி உள்நாட்டுப் போர் அச்சறுத்தலை கொடுத்தார். “நாங்கள் கடைசி நிமிடம் வரை போரிடுவோம், கடைசித் தோட்டா இருக்கும் வரைஎதிர்ப்புக்கள் தொடர்ந்தால் லிபியாவில்குருதி ஆறுகள்ஓடும் என்றும் அவர் கூறினார்.

தலைநகரில் குடிமக்கள் படுகொலை செய்யப்படுவது என்பதுதான் பெருகும் எதிர்ப்புக்களுக்கு ஆட்சியின் விடையிறுப்பாக உள்ளது. விமானப் படையை குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்பது இரக்கமற்ற தன்மை மற்றும் கடாபியின் பெருந்திகைப்பு ஆகியவற்றின் சமிக்ஞையாக உள்ளது. அவரைச் சுற்றியுள்ள ஆளும் உயரடுக்கு லிபிய மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை தொடக்கியுள்ளது.

குறைந்தது இரு விமானிகள் சாதாரணக் குடிமக்கள் மீது குண்டு போட வேண்டும் என்ற உத்தரவை மறுத்து தங்கள் விமானங்களை மால்டாவிற்குச் செலுத்தினர். அங்கு அவர்கள் தஞ்சம் கோரியுள்ளனர். ஸ்டாக்ஹோம், சீனா, இந்தியா இன்னும் பல நாடுகளிலுள்ள மற்றும் ஐ.நாவிலுள்ள லிபிய தூதர்கள் டிரிபோலி மீதான தாக்குதலைத் தொடர்ந்து இராஜிநாமா செய்துள்ளனர்.

இக்குற்றங்களுக்கு கடாபி ஆட்சியை மட்டுமே குறைகூற முடியாது. ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள், பிரஸ்ஸல்ஸில் கூடி முறையாக சாதாரண மக்கள் மீது வலிமையான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது பற்றி கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் கூட்டம் முடிந்த பின் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கைத் துறையின் உயர் பிரதிநிதி சீமாட்டியார் கத்தரின் ஆஷ்டன்அனைத்துத் தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்என்று ஏதோ ஒரு நவீன இராணுவ இயந்திரத்திற்கும் மக்களுக்கும் இடையே சக்திகளின் வல்லமைச் சமநிலை இருப்பது போல் அழைப்பு விடுத்துள்ளார்.

அவருடைய சொற்கள் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் கடாபியின் ஆட்சிக்கும் இடையேயுள்ள கூட்டுச் செயலின் தரத்தை வெளிப்படுத்துகின்றன. அனைத்து EU நாடுகளும் 2004ல் சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டதிலிருந்து லிபியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்க ஆவலாக உள்ளன. அத்தகைய தடைகள் பிரிட்டனில் டோனி பிளேயர் மற்றும் முன்னாள் காலனியாக இருந்த இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோர் வழிநடத்திக் கொண்டு வந்தவை ஆகும்.

இங்கிலாந்தின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் தொலைபேசியில் செய்ப் அல்-இஸ்லாம் கடாபியுடன் அவர் லிபிய மக்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுவதற்கு சற்று முன்பு பேசினார். எழுச்சி தொடங்கியதிலிருந்து பிரிட்டன் லிபியாவிற்கு ஆயுதங்கள் அனுப்பும் உரிமங்களை எட்டு நிறுவனங்களுக்கு இரத்து செய்துள்ளது. ஆனால் பிரிட்டிஷ் தயாரிப்பில் ஏராளமான தளவாடங்கள் ஏற்கனவே லிபாயாவிற்கு அனுப்பப்பட்டு, அவை எதிர்ப்பாளர்களின் மீது பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டு பிரிட்டனிலிருந்து லிபியாவிற்கு அனுப்பப்பட்ட இராணுவத் தளவாடங்களில் கண்ணீர்ப்புகை குண்டுகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வெடிமருந்துகள், கண்காணிப்புக் கருவிகள்,சிறு ஆயுதங்கள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், கண்காணிக்கும் கருவிகள், கட்டுப்பாட்டு வாகனங்கள், வானொலி பரப்புதலைச் சேதப்படுத்தும் கருவி ஆகியவை அடங்கியிருந்தன. லிபிய பொலிஸ் படைகளுக்கு பயிற்சி அளிப்பதிலும் பிரிட்டன் தொடர்பு கொண்டிருந்தது. இது அதன் மிருகத்தன முறைகளுக்கு பெயர் பெற்றது ஆகும்.

பிரிட்டனுக்கும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் லிபியாவில் எழுச்சி என்பது ஒரு பேரழிவு ஆகும். இங்கிலாந்தின் அரசாங்கம் கடாபியுடன் பிணைப்புக்களை பிரிட்டிஷ் நிறுவனங்களான BP போன்றவற்றிற்கு எண்ணெய்த்துறையில் ஒப்பந்தத் தொடர்புகளைப் பெறுவதற்காக வளர்த்துள்ளது. லிபியாவின் எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 79 சதவிகிதம் இங்கிலாந்திற்குச் செல்லுகிறது. இது ஐரோப்பாவை லிபியாவின் மிகப் பெரிய வாடிக்கையாளர் பகுதியாக ஆக்கியுள்ளது.

நோர்வே, ரஷ்யாவிற்கு அடுத்தாற்போல் மூன்றாவது இடத்தில்  ஐரோப்பா என்ற நிலையில் பெருமளவில் எண்ணெய் வழங்குவதில் சௌதி அரேபியாவை லிபியா இப்பொழுது விஞ்சியுள்ளது. இத்தாலியானது லிபியாவின் எண்ணெயில் 32 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது, ஜேர்மனி 14 சதவிகிதம், மற்றும் பிரான்ஸ் 10 சதவிகிதம் இறக்குமதி செய்கின்றன. எஞ்சிய ஐரோப்பியப் பகுதிகளுக்கு மீதி 23 சதவிகிதம் செல்லுகிறது.

இத்தாலிய அரசாங்கம் நேரடியாக அடக்குமுறையில் ஒத்துழைப்பது பற்றி சில ஆர்ப்பாட்டக்காரர்கள் புகார் கூறியுள்ளனர். கடாபியைப் பற்றி வார இறுதியில் பெர்லுஸ்கோனி கூறினார், “இல்லை. நான் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. நிலைமை இன்னும் அங்கு சீராக இல்லை, எனவே நான் எவருக்கும் தொந்திரவு கொடுப்பதற்கு என்னையே அனுமதியேன்என்றார். நேற்றுத்தான் அவர் பெயரளவிற்கு வன்முறையைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

சில நாட்களுக்கு முன்புதான் இத்தாலிய எண்ணெய் நிறுவனமான ENI லிபியாவில் தான்வழக்கம்போல் வணிகத்தைக் கொண்டுள்ளதாகமுதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தது. திங்களன்று அது தன்னுடைய பணியாளர்களை அங்கிருந்து வெளியேற்றத் தொடங்கியது. நோர்வேயின் Statoil நிறுவனம், கூட்டாக பிரான்சின் டோட்டல் மற்றும் ஸ்பெயினின் Repsol உடன் செயல்படுவது தான் தன் டிரிபோலி அலுவலகங்களை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரியாவின் OMV நிறுவனம் மிக இன்றியமையாத ஊழியர்களைத் தவிர மற்றவர்ளை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.

மாபெரும் Sirte எண்ணெய் வயலில் எண்ணெய் தோண்டும் முன் நடவடிக்கைகளை தொடக்கும் தன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. Sirte பெங்காசிக்கு மிக அருகே ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் உள்ளது. பெங்காசியோ ஆட்சி எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இப்பொழுது உள்ளது.

ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் லிபியாவிற்கும் இடையே உள்ள உறவுகள் எண்ணெயுடன் நின்றுவிடவில்லை. லிபியா ஐரோப்பாவில் பரந்த முறையில் முதலீடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலியில். இதைத்தவிர, கடாபி மிக அதிக வெளிநாட்டு நாணய இருப்புக்களை, 70 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதை குவித்துள்ளார். செல்வாக்கைப் பயன்படுத்த அவர் இதை உபயோகிக்கிறார். அவருடைய கடைசி மகன் ஹானிபல் கடாபி ஸ்விட்சர்லாந்தில் வீட்டு ஊழியர்களைத் தவறாக நடத்தியதற்குக் கைது செய்யப்பட்டபோது, கடாபி எண்ணெய் அளிப்புக்களை நிறுத்தி ஸ்விஸ் வங்கியில் இருந்து அனைத்துப் பணத்தையும் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அச்சுறுத்தினார். அதிகாரிகளிடம் இருந்து உடனடியாக மன்னிப்புக் கோரிக்கையை அவர் பெற்றார்.

லிபியாவில் வெகுஜன எழுச்சி ஐரோப்பிய அரசாங்கங்களால் நீண்டகாலமாக ஆதரவைநாடும் ஒரு கொடுங்கோலரை வீழ்த்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அவர் ஐரோப்பாவிற்கு எண்ணெய் வழங்கலை உறுதி செய்ய நம்பகமான பங்காளி என்று காணப்படுவதுடன், அவருடைய குடும்பத்தினர் லிபிய மக்களைக் கொள்ளையடித்து பெற்ற செல்வக்குவிப்புக்களை ஐரோப்பிய வங்கிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் முதலீடு செய்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் சீமாட்டி ஆஷ்டன் வட ஆபிரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்கள் மண்டலத்தின் ஒரு பகுதிக்குள்தான் இருக்கிறது என்று வலியுறுத்தியுள்ளார். “இது நம் அண்டைப்பகுதி. ஐரோப்பா தன் அண்டைப்பகுதிக்கு ஏற்ப நடக்கும் திறனைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்என்று அறிவித்தார்.

அடுத்த வாரம் எகிப்திற்கு ஆஷ்டன் பயணிக்கவுள்ளார். இது இங்கிலாந்து பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் வருகைக்கு பின் நடக்கும். ஐரோப்பியத் தலைவர்கள் வட ஆபிரிக்காவில் நட்புரிமை உடைய ஆட்சிகளை நிறுவப் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அவைதான் அகற்றப்படும் சர்வாதிகாரங்களுக்குப் பின் தொடர்ச்சியை சுமூகமாக்கும்.

தன்னை ஜனநாயகத்தின் விளக்காக காமெரோன் காட்டிக் கொண்டார். ஆனால் இப்பகுதியிலுள்ள மிக அடக்குமுறை ஆட்சிகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது வேறு கதையைத்தான் கூறுகிறது. “நம் இரு நாடுகளின் உறவுகள் பல தசாப்தங்கள் கடந்து, பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றனஎன்று காமெரோன் எகிப்தைப் பற்றிக் கூறுகையில், புதிய இராணுவ அரசாங்கத்திற்கு உதவிப் பொதியை உறுதியளிக்கையில் கூறினார்.

1882 வரை இப்பகுதியில் பிரிட்டின் முக்கிய காலனி சக்திகளில் ஒன்றாக இருந்தது. பிரிட்டனும் பிரான்ஸும் அப்பொழுது அலெக்சாந்திரியா மீது குண்டுத்தாக்குதலை நடத்தப் போர்க் கப்பல்களை அனுப்பியிருந்தன. துனிசியா, மொரோக்கோவின் சில பகுதிகள்மீது பிரான்ஸ் காலனி ஆதிக்க முறையைச் செலுத்தியுள்ளது. அல்ஜீரிய மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பிரான்ஸிடமிருந்து பெறுவதற்கு 1954ல் இருந்து 1962 வரை கடுமையாகப் போரிட்டனர். ஸ்பெயின் இன்றும் கூட மொரோக்கோப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ஜனநாயகத்திற்கான தங்கள் உற்சாகத்தைக் கூறுவதிலும் வளைந்து கொடுக்கும் அரசாங்கங்களை உருவாக்குவதிலும் வாஷிங்டனை விட ஒரு படி மேலே செல்ல ஆர்வமாக உள்ளன. வனப்புரைக்கு முற்றிலும் மாறி ஐரோப்பிய ஒன்றியம் திறமையுடன் பொதுமக்களை கடாபி ஆட்சி படுகொலை செய்வதற்கு ஒத்துழைக்கிறது.

வார இறுதியில் பைனான்சியல் டைம்ஸ் ஒரு கேலிப்படத்தில் பெர்லுஸ்கோனி, துனிசியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா என்னும் முத்திரையிடப்பட்டுள்ள டாமினோக்கள் சரிவதால் நசுங்குவதைக் காட்டும் வகையில் சித்திரிக்கப்பட்டார். ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் பிரஸ்ஸல்ஸில் கூடுகையில், இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டினி தன்னுடைய எச்சரிக்கையை வெளியிட்டார்: “ஒரு இஸ்லாமிய அரபு எமிரேட் ஐரோப்பிய எல்லைகளில் வருவதை நீங்கள் கற்பனை செய்யமுடியுமா? இது மிகத் தீவிர அச்சுறுத்தல் ஆகும்என்றார் அவர்.

உண்மையில் இஸ்லாமியவாதிகள் இப்பொழுது லிபிய எழுச்சியில் ஒரு சிறு பங்கைத்தான், வட ஆபிரிக்காவின் மற்ற பகுதிகள் போல், கொண்டுள்ளனர். துனிசியா, எகிப்து எழுச்சிகளின் ஆரம்பத்தில் இருந்து புரட்சி இயக்கம் பெரும்பாலும் மதச்சார்பற்ற தன்மையைத்தான் கொண்டுள்ளது, வேலையின்மையில் வாடும் இளைஞர்கள், தொழிலாளர்கள், உயரும் விலைவாசியில் வாழமுடியாத வறியவர்கள் ஆகியோரின் குறைகளைத்தான் பிரதிபலித்துள்ளது.

பிரட்டன் அஞ்சுவது ஓர் உண்மையான மக்கள் அரசாங்கம் பற்றியது ஆகும். ஐரோப்பிய அரசாங்கங்கள் சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய ஆட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் இடர்களைக் காணவில்லை. அவர்களுக்குத் தேவையானது தன் மக்களை அடக்கும் திறனுடைய ஆட்சிதான். இதைத்தான் துல்லியமாக கடாபி அவற்றிற்குக் கொடுத்தார். இப்பொழுது அவருடைய மகன்கள் தாங்களும் அதையே செய்ய முடியும் என்று நிரூபிக்க முற்படுகின்றனர். அதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக்கூட ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி படுகொலை செய்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டவில்லை.

லிபிய மக்கள் கடாபியின் அச்சுறுத்தல்களால் சிறிதும் கலங்கவில்லை. ஒரு மில்லியன் மக்கள் டிரிபோலியில் பசுமைச் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்றதற்கான அழைப்பு சுற்றில் உள்ளது. திங்கள் காலையில், டிரிபோலியில் மக்கள் அரங்கம் மற்றும் பிற அரசாங்கக் கட்டிடங்கள் தீக்கிரையாயின என்று கூறப்படுகிறது. அரச தொலைக்காட்சி நிலையமான Jamahiriya 2 TV மற்றும் அல் ஷபாபியா வானொலி ஆகியவை சூறையாடப்பட்டன. குறைந்தபட்சம் ஒரு பொலிஸ் நிலையம் தீ வைக்கப்பட்டது. திங்கள் இரவு இரு தொலைக்காட்சி நிலையங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டன.

டிரிபோலியில் வெடித்துள்ள எதிர்ப்புக்கள் பெங்காசி என்னும் கிழக்கு லிபியாவில் ஆர்ப்பாட்டங்களும் மோதல்களும் நடந்த ஒரு வாரத்திற்குப்பின் வந்துள்ளன. முந்தைய இரவு நடந்த மோதல்களில் 60 பேருக்கும் மேலாகக் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வந்துள்ள நிலையில் திங்களன்று பெங்காசியில் நடந்த களிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எதிர்ப்பாளர்கள் இப்பொழுது நகரத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அல்-ஜவியா நகரம் இப்பொழுது ஆட்சி-எதிர்ப்புச் சக்திகளிடம், பொலிசார் எதிர்ப்பாளர்களிடம் இருந்து தப்பயோடிய பின்னர், வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. Ras Lanuf எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோகெமிக்கல் வளாகம் என்று நாட்டின் கிழக்கே இருக்கும் சிர்டே வளைகுடாவில் மோதல்கள் நிகழ்கின்றன எனக் கூறப்படுகிறது. எண்ணெய்த் துறையிலுள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலைமையில் தொழிலாளர் வர்க்கம் நுழைவது எழுச்சியில், முன்னதாக எகிப்தில் நடந்தது போல், ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது.

கெய்ரோவில் லிபிய தூதரகத்தின் முன்பும் எகிப்தின் வடக்கு துறைமுக நகரான அலெக்சாந்திரியாவிலும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, “கொலைகாரன் வீழ்க, கடாபி வீழ்க”, “கடாபி லிபியிர்களைக் கொல்ல ஆபிரிக்க கூலிப்படையை அமர்த்தியுள்ளார்என்று எழுதிய கோஷ அட்டைகளை அசைத்தனர்.

உதவிப் பொருட்கள் கொண்டுவரும் வாகன அணிவரிசைகள் எகிப்திய லிபிய எல்லை வழியே அனுப்பப்பட்டுள்ளன. பத்து எகிப்தியர்கள் டோப்ருக்கில் சுட்டுக் கொல்லப்பட்டதாக எகிப்திய மருத்துவர் செய்ப் அப்தெல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை ஐக்கியப்படுத்தி புரட்சிகர இயக்கத்தை நிறைவு செய்ய இயலும். சர்வாதிகார ஆட்சிகளை அகற்ற முடியும். சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் என்று வட ஆபிரிக்காவை பெரும் இலாபத்திற்கு குறி வைத்துள்ளவற்றை அகற்ற முடியும். அவர்களுக்கு மிகப் பெரிய ஆதரவு  உலகெங்கிலும் உள்ள மற்ற தொழிலாளர்களிடம் இருந்து, குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து கிடைக்கும்.

ஏற்கனவே விஸ்கான்சனில் எதிர்ப்புத் தெரிவிக்கும் தொழிலாளர்கள் தங்கள் அனுபவங்களுக்கும் வட ஆபிரிக்க மத்திய கிழக்கு மக்கள் அனுபவிக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே இணைத் தன்மையைக் கண்டுள்ளனர். இன்னும் மில்லியன்கணக்கானவர்களும் இதைக் காண்பர். துனிசியாவில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய புரட்சிகர எழுச்சி ஒரு புதிய புரட்சிகர சகாப்தத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. உலகின் எப்பகுதியும் இதன் பாதிப்பு இல்லாமல் இராது.