World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Wisconsin struggle and collective bargaining

விஸ்கான்சன் போராட்டமும், கூட்டு பேரம்பேசலும்

Jerry White
22 February 2011
Back to screen version

ஏற்கனவே 20,000த்திற்கும் மேலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்றிருந்த, விஸ்கான்சன் மாநில தலைநகரில் நடந்த பாரிய ஆர்பாட்டங்கள் ஏழாவது நாளாக திங்களன்றும் தொடர்ந்தது. பொதுமக்கள் நலத்திட்ட செலவினங்களைக் குறைக்கவும் மற்றும் மாநிலத்தின் 175,000 அரசு பணியாளர்களின் உரிமைகள் மற்றும் கூலிகள்மீது தாக்குதல் நடத்தவும் குடியரசு கட்சி ஆளுநர் ஸ்காட் வால்கர் முன்மொழிந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென கோரி ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டங்களை மட்டுப்படுத்த முயன்றுவரும் விஸ்கான்சன் கல்வி கூட்டமைப்பு கழக (WEAC) தலைவர்களால், வேலைக்குத் திரும்ப கோரும் கட்டளையை எதிர்த்து, ஆசிரியர்களால் ஒரு தொடர்-வெளிநடப்பு செய்யப்பட்டது. விஸ்கான்சன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் உதவியாளர்கள் வகுப்புகளை இரத்து செய்ய வாக்களித்துவிட்டு, இன்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

அதிகரித்துவரும் போராட்டங்கள், தொழிலாள வர்க்கத்திற்கும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல்-பொருளாதார அமைப்புமுறைக்கும் இடையிலான ஓர் அடிப்படை முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. நாடுமுழுவதிலும் உள்ள அரசின் ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் வெட்டப்படும் சமூக திட்டங்களோடு, அரசு தொழிலாளர்கள் நெருக்கமாக தொடர்புபட்டு இருப்பதால், குறிப்பாக அவர்கள் தான் இலக்காக்கப்பட்டுள்ளனர்.

போராட்டதினூடாக, தொழிலாளர்களின் நலன்களுக்கும் போராட்டத்தின் உத்தியோகபூர்வ தலைவர்களின் நலன்களுக்கும் இடையில் இருந்த அடிப்படை முரண்பாடுகள் வேகமாகவே வெளிப்பட்டுள்ளன. அரசு பணியாளர்கள்மீது, ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவநல கட்டணங்களை நடைமுறைப்படுத்தும் ஆளுநரின் கோரிக்கைக்கு உடன்படுவதாகவும், ஆனால் கூட்டு பேச்சுவார்த்தையை கைவிடுவதை அவர்களால் ஏற்க முடியாதென்றும், WEAC மற்றும் விஸ்கான்சன் மாநில பணியாளர்கள் சங்கத்தின் ஒவ்வொரு அறிக்கைகளிலும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கே ஒரு பெரிய பேரம் அம்பலமாகிறது. “கூட்டு பேரம்பேசலுக்கு" தொழிற்சங்க அதிகாரிகள் கூறும் காரணங்கள் முற்றிலும் எரிச்சலூட்டுவதாக உள்ளன. பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் முறையீடுகளுக்கு எதிராக போராடும் தொழிலாளர்கள், உரிமை என்ற இந்த வரிகளில் சிறிதாவது அர்த்தம் இருக்கிறதென்றால், முன்வைக்கப்பட்டிருக்கும் எந்த விட்டுகொடுப்புகளுக்கும் உடன்பட தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்து, அவர்கள் கூட்டு பேச்சுவார்த்தையையும் விட்டுவிட்டிருப்பார்கள். ஆனால் தொழிலாளர் வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக அவலத்தில் விட்டுவிட்டு, தொழிற்சங்கங்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் பேரம்பேசி விட்டன.

கூட்டு பேச்சுவார்த்தைமீது ஆளுநரின் தாக்குதலைத் தொழிற்சங்கங்கள் நிராகரிப்பதென்பது, குறிப்பாக உறுப்பினர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் முறைக்காக, அவர்களின் சொந்த சுயாதீனமான நலன்களை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.

இந்த பிரச்சினை ஒரு வரலாறைக் கொண்டுள்ளது. 1930கள் மற்றும் 1940களில் தொழிற்சங்கங்கள் ஆரம்பகட்டத்தில் உருவாகி வந்தபோது, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெருநிறுவனங்கள் இரக்கமில்லாமல் கோபம் காட்டி வந்ததால், தொழிற்சங்கங்கள் ஸ்திரப்பாட்டை எட்டுவதில் பிரச்சினையை முகங்கொடுத்தன. முதலாளித்துவத்தின்கீழ் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அமைப்புரீதியிலான பாதுகாப்பைத் தக்கவைத்து கொள்வதற்காகவும் மற்றும் பெரு-வணிகங்களின் தொழிற்சங்க-உடைப்புகளை எதிர்க்கவும் தேவைப்பட்ட கருவிகளாக, சங்க உறுப்பினர்களை மட்டும் வேலைக்கு எடுக்கும் முறையும், தொடர்ந்து உறுப்பினர்களிடமிருந்து பணம் சேகரிக்கும் முறையும் தோன்றியது.

இருந்தபோதினும், உறுப்பினர் சந்தா வசூலிக்கும் முறையில் ஓர் உள்ளார்ந்த அபாயம் இருந்தது. ஒரு தொழிலாளி அவர் பங்கிற்கு உறுப்பினர் சந்தா அளிக்க வேண்டுமானால், அதற்கு முன்னர் அந்த தொழிலாளியின் குறைபாடுகளை அந்த தொழிற்சங்க பிரதிநிதி தீர்க்க வேண்டும் என்ற காலமெல்லாம் போய்விட்டன. தொழில்வழங்குனரால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொழிற்சங்க கட்டமைப்பின் ஸ்திரப்பாடும் மற்றும் வசூல் பணத்தின் சீரான ஓட்டமும், தொழிற்சங்கங்கள் அவற்றின் சொந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், மற்றும் சாமானிய உறுப்பினர்களை அவை எந்தளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதையும் சார்ந்திருந்தது.

அதேநேரத்தில், உறுப்பினர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் நிர்வாக முறையானது முதலாளித்துவ அமைப்புமுறையை ஏற்றுக்கொள்வதோடு பிணைந்திருந்தது. உறுப்பினர் சந்தா தொகைக்காக தொழிலாளர்களின் கூலிகளில் இருந்து ஒரு பகுதியைப் பிடித்தம் செய்ய தொழில்வழங்குனரின் உடன்படிக்கை தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் இருக்கும் என்பதால், சங்கங்கள் தான் உடன்படிக்கையின் விதிகளைத் தீர்மானிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒரு அரசியல் போராட்ட வழிவகையினூடாக சுயாதீனமான தொழிற் கட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டும் தான் புரட்சிகரமான வகையில் முதலாளித்துவத்தை தூக்கிவீச முடியும் என்ற அரசியல் போராட்ட வழியை AFL-CIO சங்கங்கள் நிராகரித்தன.

யுத்தத்திற்கு பிந்தைய காலகட்ட விரிவாக்கத்தின் போது, முதலாளித்துவத்திற்கு ஆதரவான அதிகாரத்துவ நிலைநோக்கு இருந்தபோதினும், தொழிற்சங்கங்களிற்கூடாக கணிசமான வெற்றிகளை தொழிலாளர்களால் வெற்றி பெற முடிந்தது. அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியோடு சேர்ந்து, 1960களின் தொடக்கத்திலும், 1970கள் மற்றும் 1980களின் வேகமான வளர்ச்சிகளின் போதும், முதலாளித்துவத்தை காப்பாற்ற முனைந்த சங்கங்களின் போக்கு ஒரு புதிய வடிவத்தை எடுத்தது. படிப்படியாக, தொழிலாள வர்க்க போராட்டங்களை ஒடுக்குவதும், அவர்களின் சொந்த உறுப்பினர்கள் மீதே விட்டுகொடுப்புகளைத் திணிப்பதுமே அவற்றின் முக்கிய செயல்பாடாக மாறியது. அதிகாரத்துவத்தின் நலன்கள், உறுப்பினர்களின் நலன்களிலிருந்து முற்றிலுமாக விலகிச் சென்றது.

இந்த நிகழ்முறை, விஸ்கான்சனின் தற்போதைய நிலைமையில் ஓர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தொழிலாளர்களின் பொருளாதார தேவைகளைப் பாதுகாப்பதை வெளிப்படையாகவே கைவிட்டுவிட்ட நிலையில், அரசு பணியாளர்கள் சங்கம் கூட்டு பேச்சுவார்த்தையை பணயத்தில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக அறிவிப்பதென்பது, சாமானிய தொழிலாளிர்களின் நலனுக்கும், சங்கங்களின் நலனுக்கும் இடையில் உள்ள நேரடியான பகைமையை தான் அடிக்கோடிடுகிறது.

ஜனநாயக கட்சியைப் பொறுத்த வரையில், மில்லியன் கணக்கான உறுப்பினர் சந்தா பணம் அவர்களின் கருவூலங்களில் போய் சேர்கிறது என்பதற்காக மட்டுமல்ல, மிக முக்கியமாக, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதிலும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதிலும் சங்கங்கள் வகிக்கும் பாத்திரத்திற்காகவே அவை அவற்றிற்கு அவசியமான உடைமைகளாக உள்ளன.

அதனால் தான் மாநிலத்தின் வரவு-செலவு கணக்கு நெருக்கடிக்காக, தொழிலாளர்கள் "சமாளித்து கொள்ள" வேண்டும் என்று வலியுறுத்திய ஒபாமா, கடந்த வாரம் ஊடகத்திற்கு அளித்த அறிவிப்புகளில் விஸ்கான்சனில் "சங்கங்கள் மீதான தாக்குதல்களுக்கு" வெறுப்பைக் உமிழ்ந்தார்.

ஆனால் கூட்டு பேச்சுவார்த்தை மீதான வால்கரின் தாக்குதலுக்கு, தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் ஒரு நியாயமான கோபம் உள்ளது. தொழிலாளர்கள் நலன்களை தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாகவே பிரதிநிதித்துவப்படுத்தாததால், இந்த அமைப்புகளுடன் கையாளுவது தொழிலாளர்களில் தங்கியுள்ளதே தவிர பிற்போக்கான பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அவற்றின் கால்களில் விழுந்துகிடக்கும் வால்கர் போன்றவர்களுடைய பொறுப்பு அல்ல. தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர்களுக்கு மாறாக, தமது "கூட்டு பேச்சுவார்த்தை" என்பதனூடாக பெருநிறுவனங்களுக்கு எதிரான தங்களது உரிமைக்காக போராடுவதாலும் மற்றும் சுயாதீனமாக ஒழுங்கமைப்பதற்கான தங்கள் உரிமையை பெற முடியும் என்று புரிந்துகொண்டுள்ளனர்.

தரமான வேலை, மருத்துவ கவனிப்பு, ஒரு நல்ல ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான அவர்களின் உரிமையைக் காப்பாற்றும் போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து உடைத்துக் கொள்ள வேண்டும்; அவர்களின் நலன்களுக்கு ஒரு நியாயமான வெளிப்பாட்டைக் காட்டக்கூடிய புதிய அமைப்புகளைஅதாவது ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒன்று திரட்டும் சாமானிய குழுக்களைஸ்தாபிக்க வேண்டும்.

எவ்வாறிருந்த போதினும், முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலைமைகளின்கீழ், தொழிலாளர்களின் நலன்களையும் உரிமைகளையும் கூட்டு பேச்சுவார்த்தை மூலமாக, நீண்டகாலமாக தொழிலாளர்கள் அமைப்புகள் என்றிருக்கும் இந்த அழுகிப்போன அமைப்புகளின் கட்டமைப்புகளுக்குள்ளாக காப்பாற்றிவிட முடியாது.

விஸ்கான்சனில் நடக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களும், நாடு முழுவதிலும் பரவிவரும் இந்த போராட்டங்களும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்திற்கான தேவையையும், சோசலிச பாதையில் சமூகத்தை மறுகட்டமைப்பதையும் முன்னிறுத்துகிறது.