World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan bank workers strike to demand pension rights

இலங்கை வங்கி ஊழியர்கள் ஓய்வூதிய உரிமையை கோரி வேலை நிறுத்தம் செய்தனர்

By Saman Gunadasa
18 February 2011

Back to screen version

இலங்கையில் 20,000க்கும் மேற்பட்ட அரச வங்கி ஊழியர்கள், 1996ம் ஆண்டுக்குப் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை கோரி கடந்த வெள்ளிக்கிழமை அரை நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச வங்கிகள் ஸ்தம்பிதமடைந்ததோடு ஏறத்தாழ அவர்களது முழு தொழிற்படையும் வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டது.

கடைசி நிமிடத்தில் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்ததன் மூலம் வேலை நிறுத்தத்தை கிழறுக்க முயற்சித்த இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (....) தலைவர் அமரபால கமகேயை பங்குபற்றியவர்கள் நிராகரித்தார்கள்.

வங்கி ஊழியர்கள் பல வராங்களாக நடத்திய மதிய நேர மறியல் போராட்டங்களைத் தொடர்ந்தே பெப்பிரவரி 11 அன்று இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. தனியார் வங்கிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் இந்த மறியல் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

வேலை நிறுத்தத்தின் போது, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள் தலைநகர் கொழும்பு, மத்திய மாகாணத்தில் கண்டி, யுத்தத்தால் சேதமாகியுள்ள வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா, மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

அழிவுக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து தமிழ் பேசும் வங்கி ஊழியர்கள் பங்குபற்றியது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தற்போதைய தமிழர்-விரோத பிரச்சாரத்தோடு சேர்ந்து, பிரதேசத்தில் ஒரு அச்சுறுத்தும் இராணுவ ஆக்கிரமிப்பு இருந்த போதிலும் அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டனர். கொழும்பு அரசாங்கத்தின் இனவாத தாக்குதலானது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற யுத்தத்தை தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் ஒரு முயற்சியாகும்.

இன்னுமொரு அச்சுறுத்தும் நடவடிக்கையில், பெருந்தொகையான ஊழியர்களைக் கொண்டுள்ள மக்கள் வங்கியின் முகாமைத்துவம், பெப்பிரவரி 11 அன்று ஊழியர்கள் விடுமுறை எடுப்பதை தடை செய்தது. ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தால் அவர்களை பதவிவிலக்குவதாகவும் அந்த வங்கி அச்சுறுத்தியிருந்தது. பின்னர் வேலை நிறுத்தத்துக்கு தலைமை தாங்கியதும் அதில் இணைந்துகொண்டதும் யார் யார் என தகவல் திரட்டுவதற்காக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிய அது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் இரண்டரை நாள் சம்பளத்தை வெட்டுவதாக அறிவித்தது.

அரச சார்பு இ.வ.ஊ.ச. தலைவர்கள் தயக்கத்துடனேயே வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பின்னர் அதை பெப்பிரவரி 10 மாலை இரத்துச் செய்ய முயற்சித்தது. அரசாங்கத்தின் திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவை சந்தித்ததை அடுத்து, இ.வ.ஊ.ச. தலைவர் கமகே, ஒரு அரசாங்க சார்பு நாளிதழான ஜலண்ட் பத்திரிகைக்கு வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மாணிப்பதற்காக இ.வ.ஊ.ச. நிர்வாகக் குழு கூடும் என கமகே தெரிவித்தார்.

தொழிற்சங்க உறுப்பினர்கள் கமகேயை அலட்சியம் செய்து வெளியேறிய போது, அவர் ஜலண்ட் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கவில்லை என மறுத்தார். ஆயினும், தனது செய்தியின் நம்பகத் தன்மையை அந்த செய்தித்தாழ் வலியுறுத்தியிருந்தது.

உலக வங்கியின் வேண்டுகோள்களுக்கு இணங்க செயற்பட்ட, இராஜபக்ஷவின் முன்னோடியான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 1996ல் உள்ளீர்க்கப்பட்ட புதிய அரச வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை இரத்துச் செய்தார். அது ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, அவர்களது சேவையின் கால எல்லையைப் பொறுத்து, அவர்களது சம்பளத்தில் 75 முதல் 90 வீதம் வரையான மாதாந்த ஓய்வூதியத்தை வழங்கியது.

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக, ஓய்வூதிய நன்மைகளை மீண்டும் பெறுவதற்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடனும் வங்கி நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதும் அவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதும் அவற்றை புரிந்துணர்வுக்கு கொண்டுவரும் என்ற மாயையை இ.வ.ஊ.ச. காட்டி வந்துள்ளது. உறுப்பினர்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியில் இருந்து தலையை காத்துக்கொள்ளும் முயற்சியாக அவர்கள் அதிகாரிகளுக்கு கடிதங்கள் எழுதியதோடு அடிக்கடி மறியல் போராட்டங்களையும் ஏற்பாடு செய்தனர்.

2008ல், மோசமாக வெட்டிக் குறைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஒன்றுக்கான வங்கி நிர்வாகத்தின் பிரேரணை ஒன்றை ஒரு வெற்றி என- ஆரம்பத்தில் தொழிற்சங்கம் ஏற்றுக்கொண்டது. ஒரு ஊழியர் ஒரு ஓய்வூதிய நிதிக்கு 8 வீதம் பங்களிப்பு செய்யும் அதே வேளை வங்கிகள் 5 வீதத்தை மட்டுமே கொடுக்கும் (1996க்கு முன்னரான திட்டத்தில், தொழிலாளர்கள் பங்களிப்பு செய்யத் தேவையில்லை). ஓய்வு பெறும் போது, 35 ஆண்டுகால சேவையின் பின்னர் தமது கடைசி சம்பளத்தில் வெறும் 60 வீதத்தையே தொழிலாளர்கள் ஓய்வூதியமாக பெறுவர். தொழிலாளர்கள் மத்தியிலான எதிர்ப்பு, இந்த கொடுக்கல் வாங்கலை கைவிட சங்கத்தை நெருக்கியது.

கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, 2009 டிசம்பரில், சகல அரச வங்கி ஊழியர்களதும் ஓய்வூதிய உரிமையை மீள் ஸ்தாபிதம் செய்வதாக இராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். அது, சம்பள உயர்வு வாக்குறுதிகளோடு சேர்த்து, அவரது பல மோசடியான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

வேலை நிறுத்தத்துக்கு சற்று முன்னதாக இ.வ.ஊ.ச. தலைவர் கமகே திறைசேரி செயலாளர் ஜயசுந்தரவை சந்தித்த போது, அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்னுமொரு வீத வெட்டுக்களை கொண்ட ஓய்வூதிய திட்டத்தை முன்வைத்தனர். வங்கி மற்றும் ஊழியர்கள் ஆகிய இருசாராரும் 2 வீதமே பங்களிப்பு செய்வதாக தெரியவந்தது. இ.வ.ஊ.ச. அலுவலர்கள் இந்த திட்டத்தின் விபரங்களை இன்னமும் விளக்காத போதிலும், இந்த பிரேரணைகள், இராஜபக்ஷ கடந்த நவம்பரில் முன்வைத்த தனது வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளிலான பரந்த கடுமையான வெட்டுக்களை அடியொற்றியே உள்ளன.

வரவு செலவுத் திட்டத்தில், தற்போது அத்தகைய பங்களிப்பை கொடுக்க கடமைப்பட்டிருக்காத சகல புதிய அரசாங்க துறை தொழிலாளர்களுக்கும், இதே போன்ற ஒரு ஓய்வூதிய திட்டத்தின் மூடுதிரையை இராஜபக்ஷ அகற்றினார். 2009 ஜூலையில் ஏற்பட்ட அந்நிய செலாவணி நெருக்கடியை தடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கொடுத்த போது, அது விதித்த நிபந்தனைகளை இட்டு நிரப்புவதற்காக அரசாங்க செலவுகளை வெட்டிக்குறைக்கும் நடவடிக்கையின் பாகமே அவரது ஓய்வூதிய திட்டமாகும். அடிப்படை பொருட்களுக்கான மானியங்களை வெட்டுதல், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை திணித்தல், பெரும் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை கொடுத்தல் மற்றும் அரசாங்க நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது போன்றவை சர்வதேச நாணய நிதியம் திணித்துள்ள ஏனைய நிபந்தனைகளாகும்.

இராஜபக்ஷவின் வாக்குறுதிகளை மீறி, அரசாங்க துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிறுத்தத்தையும் அரசாங்கம் பேணி வருகின்றது. இந்த சம்பள அதிகரிப்பு நிறுத்தமானது புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்துக்கு அத்தியாவசிய நிதியுதவி செல்வதற்காக, 2006ல் இருந்தே அமுலில் இருந்ததாகும். 2009 மே மாதம், உச்சகட்டமாக புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அரசாங்க ஊழியர்கள் இன்னமும் ஒரு அற்ப கொடுப்பணவையே பெறுகின்றனர். இது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு கொஞ்சமும் போதாது.

வங்கி ஊழியர்களால் இ.வ.ஊ.ச. மீது நம்பிக்கை வைக்க முடியாது. அடிப்படை உரிமைகள் மற்றும் நிலைமைகளை காத்துக்கொள்ள தமது உறுப்பினர்கள் போராடுவதை சகல தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் எதிர்க்கின்றன. இதற்கு இ.வ.ஊ.ச. கொண்டுள்ள காட்டிக்கொடுப்பு பட்டியல் ஒரு வெளிப்படையான உதாரணமாகும். கமகே அரச அச்சுக் கூட்டுத்தாபனத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவருக்கு கைம்மாறு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தின் தலைவராக அவருக்கு முன்னர் இருந்த எம்.ஆர். ஷா, அவரது ஓய்வுக்கு பின்னர் அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை மேர்சன்ட் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வெறுமனே தொழிற்சங்க தலைவர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. ஒட்டு மொத்த தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தையே அமுல்படுத்துகின்றன. இப்போதும் மற்றும் மீண்டும் மீண்டும், அவர்கள் வேலை நிறுத்தங்களை கீழறுப்பார்கள் அல்லது இரத்துச் செய்வார்கள். தொழிலாளர்களை சாந்தப்படுத்தவும் சீற்றத்தை தணிக்கவும் திட்டமிடப்பட்டு அவ்வப்போது எதிர்ப்பு போராட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்ட வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதலை ஒரு தொழிற்சங்கம் கூட எதிர்க்கவில்லை.

அரச வங்கியொன்றில் கண்டி கிளையொன்றில் வேலை செய்யும் புஷ்ப குமார உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்ததாவது: இராஜபக்ஷ எங்களது ஓய்வூதிய கோரிக்கையை இட்டு நிரப்புவார் என வலியுறுத்தி இராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு இந்த தொழிற்சங்கம் எங்களை ஊக்குவித்தது. எங்களது தொழிற்சங்கம் அரசாங்கத்தை மக்களுக்கு சினேகமான அரசாங்கம் என வருணித்தது. உண்மை அதற்கு நேர்மாறானது என்பதை நாம் இப்போது புரிந்துகொண்டுள்ளோம்.

கொழும்பில் இலங்கை வங்கி ஊழியரான சந்திரன், “தொழிற்சங்கத் தலைவர்கள், பிரச்சினை அரசாங்கத்திடம் இல்லை திறைசேரியிடமே பிரச்சினை இருக்கின்றது எனக் கூறி, இன்னமும் அரசாங்கத்தை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இது நகைப்புக்கிடமானது. பணப்பெட்டிக்குள் நிதியை குவிப்பதற்காக தொழிலாளர்களை நெருக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு உள்ளதால் அதுவே இதனை இயக்குகின்றது, என்றார்.

அரச வங்கிகளின் இலாபங்கள் அதிகரித்தாலும் கூட, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாக எங்களது வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து வருகின்றன. நாங்கள் வீட்டுக் கடன்களை பெறும் போது, எங்களது சம்பளம் மிகவும் குறைந்து விடுகின்றது. எங்களால் மேலதிக வேலை செய்யாமல் பிழைக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் எங்களது வேலைச் சுமைகளையும் அதிகரித்துள்ளன. வங்கிகளைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறி தொழிற்சங்கங்கள் அதனையும் ஆதரித்தன, என சந்திரன் மேலும் கூறினார்.

அம்பலத்துக்கு வந்திருப்பது என்னவெனில், வங்கி ஊழியர்கள் உட்பட தொழிலாளர்களால், தொழிற்சங்கங்கள் ஊடாக தமது நலன்களுக்காகப் போராட முடியாது என்பதேயாகும். உழைக்கும் மக்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தமது நலன்களுக்காக போராடுவதற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். ஓய்வூதியம், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதானது, இலங்கை மற்றும் சர்வதேச நிதி தட்டுக்களின் நலன்களுக்காக சேவை செய்யும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்துடன் பிணைந்துள்ளது. அதாவது, உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, சிறுபான்மை செல்வந்தர்களுக்கு பதிலாக மக்களில் பரந்த பெரும்பான்மையினரின் நன்மைக்காக, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்காக போராடுவதாகும்.