World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Popular uprisings spread across Middle East despite brutal crackdowns

மிருகத்தனமான அடக்குமுறைகளை மீறி மத்திய கிழக்கு முழுவதும் மக்கள் எழுச்சிகள் பரவுகின்றன      

By Mike Head
19 February 2011

Back to screen version

சர்வாதிகார, மேற்கத்தைய ஆதரவு பெற்ற ஆட்சியாளர்கள் மிருகத்தனமான படுகொலைகளை நடத்தியும்கூட, நேற்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும், இராணுவத்தினருடனும் பொலிசுடனும் கடுமையான மோதல்களும் தொடர்ந்தன. கடுமையான தெரு மோதல்களும் பல இறப்புக்களும் நடந்த பஹ்ரைன், லிபியா மற்றும் யேமன் நாடுகளைத் தவிர, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் மற்ற அமெரிக்க வாடிக்கை நாடுகளான சௌதி அரேபியா, குவைத் மற்றும் ஜோர்டானிலும் நடைபெற்றன.

துனிசிய, எகிப்திய எழுச்சிகள் இப்பிராந்தியம் முழுவதும் எதிர்ப்புக்களை தூண்டியுள்ளன. இவை அல்ஜீரியாவிலிருந்து ஈராக் வரை நடைபெறுவதுடன், மூலோபாய வகையில் முக்கியமான, உலகின் எண்ணெய் செழிப்புப் பகுதியிலிருக்கும் பிராந்திய சர்வாதிகாரங்களை நீண்ட நாட்களாக நம்பியிருக்கும் ஒபாமா நிர்வாகம் மற்றும் ஐரோப்பாவின் முக்கிய சக்திகளுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.

தொடர்ச்சியாக ஐந்தாவது நாளன்று, சிறிய தீவு முடியாட்சி நாடான பஹ்ரைனில் குருதி கொட்டிய மோதல்கள் நடந்தன. இங்கேதான் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைப்பிரிவுத் தளம் அமைந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் குறைவான வயது வந்தவர்கள் இருக்கும் நாட்டில் மிக பெரும் கூட்டமாக 25,000 பேர் முந்தைய தினம் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களுக்கு நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

வியாழக்கிழமை அதிகாலையில் பொலிசார் பேர்ல் சந்தியில் தாக்குதல் நடத்தி நான்கு பேரைக் கொன்று கிட்டத்தட்ட 200 பேரைக் காயப்படுத்திய பின், தலைநகர் மனாமாவின் மையப்பகுதியில் இதுதான் முதல் எதிர்ப்பு ஆகும்.

சல்மனியா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் அல் ஜசீராவிடம் மருத்துவமனையில் காயமுற்றவர்கள் நிரம்பியிருந்தனர் என்றார். “எங்களுக்கு உதவி தேவை! எங்கள் ஊழியர்கள் பெரும் சேவை புரிகின்றனர். சுடுபவர்களோ ஆர்ப்பாட்டக்காரர்களின் கால்களில் சுடாமல் தலைகளில் சுடுகின்றனர். மக்களுடைய மூளைகள் சிதறி அடிக்கப்படுகின்றன!”

ஓர் எதிர்ப்பாளர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்: “அவர்களிடத்தில் சிறப்பு இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளன, சாதாரண துப்பாக்கிகளோ அல்லது கைத்துப்பாக்கி ஆயுதங்களோ அல்ல, ஓடுபவர்களையும் அவர்கள் குறிவைத்துச் சுடுகின்றனர்.” ஹுசைன் அலி என்னும் மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர், “பாலத்திலிருந்து எந்த எச்சரிக்கையும் இல்லாமல் சுடத்துவங்கினர், பின் அவர்கள் தங்கள் கார்களிலிருந்தும் சுட்டனர்இது பயங்கரமானது, பயங்கரக் கனவு போன்றது. சிறு குழந்தைகளும் பெண்களும் தடுமாறி விழுந்த வண்ணம் இருந்தனர்.”

வாஷிங்டனுடன் ஐயத்திற்கு இடமின்றி நெருக்கமாக ஒத்துழைக்கும் பஹ்ரைனின் முடியாட்சி தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல்-கலீபா ஒழுங்கு மீட்கப்பட்டவுடன் ஒருதேசிய உரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்தகையஉரையாடல் ஆட்சியை பாதுகாக்கத்தான் உதவுதும்சற்றே திருத்தப்பட்ட வடிவமைப்பு என்றாலும், அதற்கு உத்தியோகபூர்வமாக பொறுத்துக் கொண்டிருக்கும் எதிர்ப்புக் குழுக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு வாரம் முன் வீழ்ச்சியடைந்த ஹொஸ்னி முபாரக்கைத் தொடர்ந்து அதைத்தான் எகிப்திய இராணுவமும் செய்துவருகிறது.

பேர்சிய வளைகுடாவில் சௌதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையேயுள்ள பஹ்ரைன், அமெரிக்க கடற்படைப் பிரிவுகளின் மத்திய கட்டுப்பாட்டிற்கான இருப்பிடமாகும். வாஷிங்டனுக்கு இது முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் வளைகுடா மூலம் உலகின் எண்ணெயில் 40 சதவிகிதம் எடுத்துச் செல்லப்படுகிறது. செல்வம் கொழிக்கும் அரச குடும்பம் மற்றும் அரசைக் கட்டுப்படுத்தும் உயரடுக்கிற்கு தீவிர உதவியை அமெரிக்கா எப்பொழுதும் அளித்து வருகிறது.

ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டனும் நேற்று பஹ்ரைன் மற்றும் லிபியா, யேமனில் ஏற்பட்டுள்ள வன்முறை பற்றிஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளனர். “அமைதியான எதிர்ப்பாளர்கள் மீது இந்நாடுகளில் அரசாங்கங்கள் பயன்படுத்தும் வன்முறைகளை அமெரிக்கா கண்டிக்கிறது, எங்கு இப்படி நிகழ்ந்தாலும் அமெரிக்கா அதைக் கண்டிக்கும் என்று ஒபாமா கூறினார்.

ஆனால் கடந்த டிசம்பர் மாதம் கிளின்டன் பஹ்ரைனுக்கு சென்றிருந்தபோது, அப்பிராந்தியத்தில்ஒரு முன்மாதிரிப் பங்காளி எனப் புகழ்ந்திருந்தார். முக்கிய எதிர்ப்பு அரசியல்வாதிகள் கைது செய்யப்படுதல், சித்திவதைப்படுத்தப்படுதல் பற்றி வினவப்பட்டதற்கு அவர்கிளாஸின் அரைவாசி பகுதி நிரம்பி இருப்பதைத்தான் நான் காண்கிறேன் என்றார். “அரசாங்கம் ஜனநாயகப் பாதையில் கொண்டுள்ள உறுதிப்பாடு பற்றியும் பஹ்ரைன் அப்பாதையில் செல்வது பற்றியும் நான் உவப்பு அடைகிறேன் என்றார் அவர்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பஹ்ரைனில் நடத்தப்படும் அடக்குமுறைக்கு கொண்டுள்ள பொறுப்பானது பாதுகாப்புப் படைகளால் இங்கிலாந்து கொடுத்த ஆயுதங்களை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தின என்று வந்துள்ள தகவல்களினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. Independent செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளபடி, பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கை ஒன்று பிரிட்டிஷ் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு “CS கையெறி குண்டுகள், தகர்ப்பு வெடிகள், புகைத் தொகுப்புக்கள் மற்றும் இடிமுழக்க வெடிகள் ஆகியவை பஹ்ரைனுக்கு விற்க லண்டன் ஒப்புதல் கொடுத்துள்ளது எனத் தெரிவிக்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இஸ்ரேல், எகிப்திய அரசாங்கங்களுக்கு அடுத்து மூன்றாவதாகப் பெரிய அளவில் அமெரிக்க இராணுவ உதவியைப் பெறும் நாடான அண்டைய முடியரசான சௌதி அரேபியாவில் இதன் உட்குறிப்புக்கள் பற்றியும் வாஷிங்டனின்கவலைகள் சற்றும் குறைந்தவை அல்ல. சௌதி அரேபியாவில் அமெரிக்க தூதராக முன்பு இருந்த Chas Freeman, அல் ஜசீராவிடம்சௌதிக்கள் அதிக அமைதியின்மையை பஹ்ரைனில் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்”, ஏனெனில் சௌதி அரேபியாவின் கிழக்கேயுள்ள முக்கிய எண்ணெய் வயல்களுக்கு அருகே அது உள்ளது என்றார்.

இதேபோல் உலக எண்ணெய் நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் முடியாட்சித் தலைவர்கள் ஒருவேளை வீழ்ச்சி அடையக்கூடுமோ என்று உன்னிப்புடன் கவனிக்கின்றனர். தொழில்துறை பற்றிய வலைத் தளமான Platts கூறுவதாவது: “பெரும் எண்ணெய்வள (கோலியாத் போல்) நாடான சௌதி அரேபியா உலகத்திற்கான எண்ணெய் வழங்கலிற்கு தடை ஏற்படுத்தும் திறன் எதையும் சமாளிக்கும் அளவிற்குக் கணிசமான இருப்பு உ6ற்பத்தியைக் கொண்டுள்ளது. அண்டை நாடான பஹ்ரைனில் குருதி கொட்டும் கலகங்கள் நடைபெறுகின்றன, அதன் தெற்கு எல்லையான யேமனிலோ பெருகிய அரசாங்க எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.”

லிபியா

நேற்று ஐந்தாவது நாளாகத் தொடர்ச்சியாக தீவிர மோதல்கள் லிபியா முழுவதும் நடந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் 41 ஆண்டுகால கேணல் முயம்மர் கடாபியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று கோரினார்கள். மேற்கிற்கும் பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் சமீபத்திய ஆண்டுகளில் மிக நெருங்கிய நண்பராக அவர் உள்ளார். செய்தி ஊடகத்தினர் லிபியாவிலிருந்து தகவல்களைச் சேகரிப்பது மிகவும் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆனால் பல ஆதாரங்களும் குறைந்தபட்சம் 25 எதிர்ப்பாளர்களாவது கொல்லப்பட்ட வியாழன்சீற்ற தினத்திற்கு பின்னர் எழுச்சிக் காட்சிகள் அதிகம் என விவரிக்கின்றன.

AFP யிடம் அதிகாரிகளுக்கு நெருக்கமான ஆதாரம் அல் பையெடா நகரத்தை சுற்றிப் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கிறது. இது ஆட்சி எதிர்ப்பாளர்கள் நகரத்தின் கட்டுப்பாட்டை உள்ளூர் பொலிஸ் உதவியுடன் கைப்பற்றிவிட்டனர் என்னும் ராய்ட்டர்ஸ் தகவலை அடுத்து வந்துள்ளது.

You Tube வீடியோக் காட்சிகள் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசித் தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்து அரசாங்க எதிர்ப்புக் கோஷங்களைக் கூறிக்கொண்டு செல்வதைக் காட்டுகின்றன. எதிர்ப்பாளர்கள் பெங்காசியில் ஒரு உள்ளூர் வானொலி நிலையத்தின் மீது தீ வைத்தனர். கட்டிடத்தில் பாதுகாவலர்கள் அகற்றப்பட்டபின் இது நடந்தது. கண்ணால் பார்த்தவர்களும் ஒரு பாதுகாப்பு ஆதாரமும் AFP யிடம் மேற்கூறிய தகவல்களை தெரிவித்தது. பெங்காசியில் ஒரு பொறியியல் வல்லுனராக இருக்கும் மஹ்மத் எல்-பெர்க்கவி அல் ஜசீராவிடம் நகரத்தில் ஒருபடுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றார்.

AFP பல உள்ளூர் ஆதாரங்களிலிருந்து சேகரித்துள்ள எண்ணிக்கைத் தகவலின்படி, குறைந்தபட்சம் 41 பேராவது செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் முதலில் வெடித்ததில் இருந்து உயிரிழந்துள்ளனர். லிபிய அதிகாரிகள் நாட்டின் மேற்குப் பகுதி அமைதியாக உள்ளது எனக்கூறுகின்றனர். ஆனால் தலைநகர் ட்ரிபோலி உட்பட மற்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் பற்றியத் தகவல்கள் வந்துள்ளன.

யேமன்

மற்றொரு அமெரிக்க நட்பு நாடான யேமனும் நேற்று பெருகிய எதிர்ப்புக்களை அடக்குவதற்கு கடுமையான வன்முறையைப் பயன்படுத்தியது. இது ஞாயிறு வெடித்த அமைதியின்மையிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை 10 என ஆக்கியுள்ளது. ஆட்சிக்கு எதிர்ப்புக் காட்டும் ஆர்ப்பாட்டத்தினர் கொந்தளிப்பு நிறைந்த டாயேஸ் நகரத்தில் வெள்ளியன்று கையெறி குண்டால் தாக்கப்பட்டனர். இதில் இருவர் இறந்துபோனார்கள். தெற்கு நகரமான ஏடெனில் பல பகுதிகளில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன, நான்கு பேர் கொல்லப்பட்டனர், குறைந்த பட்சம் 27 பேர் காயமுற்றனர். தலைநகர் சானவிலும் மோதல்கள் வெடித்தன. ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நான்கு பேர் காயமுற்றனர் என்று சாட்சிகளும் செய்தியாளர்களும் கூறுகின்றனர். செய்தியாளர்கள் அடி, உதை தாக்குலுக்கு உள்ளானார்கள்.

நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வாராந்திர முஸ்லிம் பிரார்த்தனைக்குப் பின் மைய டேயஸுக்கு வந்து ஜனாதிபதி அலி அப்துல்லா சலே அகற்றப்பட வேண்டும் என்று கோரிய நிகழ்வில் கையெறி குண்டுத் தாக்குதல் நடந்தது. கையெறிகுண்டு எதிர்ப்பாளர்கள் மீது அரசாங்க எண்கள் பொதித்த ஒரு காரில் இருந்து வீசியெறியப்பட்டது என்று ஒரு உள்ளுர் அதிகாரி AFP யிடம் கூறினார்.

சானாவில் பல செய்தியாளர்கள் ஆளும் பொது மக்கள் காங்கிரஸ் (GPC) ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தடிகளும், கோடரிகளும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன என்று AFP நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் மாணவர்களைக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வாரந்தர முஸ்லிம் பிரார்த்தனைக்கு பின்னர் குழுமியிருந்தனர். “ஆட்சி அகற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அவர்கள் கோஷமிட்டனர்.

சௌதி அரேபியா, குவைத், ஜோர்டான்

அமைதியின்மை சௌதி அரேபியா மற்றும் குவைத்திலும் பரவியது, மீண்டும் மற்றொரு முக்கிய அமெரிக்க ஆதரவுடைய அரசான ஜோர்டனில் வெளிப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். அரசர் அப்துல்லா நிதிய மாவட்டத்திலும் தலைநகர் ரியாத்தில் அரசர் சௌத் பல்கலைக்கழகத்திலும் சௌதி அரேபியாவிலுள்ள வெளிநாட்டு கட்டிடத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்கள் அவர்களுடைய ஊதியங்கள் அல்லது கூடுதல் பணிநேர ஊதியங்கள் கொடுக்கப்படவில்லை என்பதற்காக வேலைநிறுத்தம் செய்தனர் என்று அரப் நியூஸ் கூறுகிறது.

குவைத்தில் குறைந்தபட்சம் 1,000 நாடற்ற அரேபியர்கள் குவைத் நகரத்திற்கு வடமேற்கே ஜஹ்ரா என்னும் இடத்தில் குடிமை உரிமை கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையொட்டி பொலிசார் டஜன் கணக்கானவர்களை கைது செய்தனர். எண்ணிக்கை குறிப்பிப்பிடாத காயமுற்ற எதிர்ப்பாளர்களை ஏற்றிய அம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. அதன்பின் பாதுகாப்புப் படையினர் அவ்விடத்தில் இருந்து அகன்றனர். பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க புகைக் குண்டுக்கள், தண்ணீர் பீய்ச்சுதல் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். குவைத்தில் ஏறக்குறைய 100,000 நாடற்ற அரேபியர்களுக்கு குடியுரிமைத் தகுதி இல்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜோர்டானில் தடியை வீசிய வண்ணம் வந்த குண்டர்கள் தலைநகர் அம்மானில் அரசாங்கத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாய்ந்தனர். அதிகாரத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வேண்டும் என்ற அழைப்பு விடுத்தபின் கலைந்து சென்றுகொண்டிருந்த அணிவகுப்பின் மீது குண்டர்கள் தாக்கியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி மாத நடுப்பகுதியிலிருந்தே பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களுக்காக அழைப்புக் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசர் இரண்டாவது அப்துல்லா அவருடைய முழு மந்திரிசபையையும் கடந்த மாதம் நீக்கினார். இது எதிர்ப்புக்களைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது. ஆனால் அவர் அரசரின் எடுபிடிகளில் ஒருவரான மரௌப் பக்கிட்டை புதிய பிரதம மந்திரியாக நியமித்தது பலருக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலான பக்கிட் 2005ல் இருந்து அவர் தேர்தல்களில் தில்லுமுல்லுகளை அப்பட்டமாகச் செய்தபோது 2007 ல் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்ட அவரை ஜோர்டானின் பிரதம மந்திரியாக நியமித்துள்ளார்.

ஜோர்டானிலுள்ள நிலைமை எதிர்ப்புக்களுக்கு உந்துதல் கொடுக்கும் தீர்க்கமுடியாத சமூக நெருக்கடிக்கு உதராணமாக உள்ளது. இங்கு வேலையின்மை விகிதம் அதன் 6 மில்லியன் மக்களிடையே மிக அதிகமாக உள்ளது. அவர்களுள் பெரும்பான்மையினர் 25 வயதிற்கும் குறைவானவர்கள். அனைவரும் உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வினால் பெரும் அவதிக்கு உட்பட்டிருப்பவர்கள், பிராந்தியங்களின் ஆட்சிகளில் எவையும் உலகில் பிறபகுதிகளில் காணப்படுவது போலவே, அனைத்தும் இன்னும் மோசமான சமத்துவமற்ற சமுதாயத்தை வழிநடத்துபவை மக்களின் பொருளாதார, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வழியமைக்கவில்லை.