World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Full support to Wisconsin workers!

விஸ்கான்சன் தொழிலாளர்களுக்கு முழு ஆதரவு!

Patrick Martin
19 February 2011

Back to screen version

கூலிகள், நலன்கள், பணியிட நிலைமைகள், ஜனநாயக உரிமைகளின் சீரழிவுக்கு எதிரான விஸ்கான்சின் அரசு தொழிலாளர்களின் போராட்டத்தில், அனைத்து உழைக்கும் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக முன்வர வேண்டுமென உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவ கட்சியும் அழைப்பு விடுக்கிறது.

விஸ்கான்சன் ஆளுநர் ஸ்காட் வால்கரும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் சட்டமன்றமும் கூலிகளை வெட்ட, மருத்துவ நலன்களை சுருட்ட, மற்றும் ஓய்வூதியங்களுக்கு குழிபறிப்பதையும் நோக்கி நகர்ந்து வருகிறது. அதேவேளையில் அரசுத்துறை தொழிலாளர்கள்மீது ஒரு சட்ட கவசத்தைத் திணித்தும், கூலிகள் உட்பட அனைத்தின்மீதும் கூட்டு பேச்சுவார்த்தை உரிமைகளை பறித்தும், பணவீக்க விகிதங்களுக்கு அதிகமாக எந்தவிதமான கூலி உயர்வும், அரசு முழுவதிலுமான வெகுஜன வாக்கெடுப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் கோருகிறது.

ஆனால் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கொழுத்த சம்பளங்கள் அல்லது வங்கிகள் மற்றும் பெரிய வியாபாரங்களுக்கு அளிக்கப்படும் எதிர்பாரா இலாபங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அல்லது முதன்மை காப்பீட்டு தரகராக உள்ள சிட்டி குழுமம் தலைமையில், அரசு பத்திரங்கள் வெளியீட்டைக் கையாளும் நிதியியல் நிறுவனங்களுக்கோ அங்கே எந்தவித வரம்புகளும் இல்லை. ஆளுநரால் கோரப்பட்ட "தியாகங்கள்" உழைக்கும் மக்களுக்கு மட்டும் தான் பொருந்துகிறது: உண்மையில், விஸ்கான்சினைச் சேர்ந்த பெருநிறுவனங்களுக்கு வரிவெட்டுக்களை அளிப்பதற்காகவே, வால்கர் அரசின் பற்றாக்குறையை அதிகரிக்க செய்துள்ளார்.

விஸ்கான்சினைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட இந்த கடுந்தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவர்கள் அரசு தலைமைச்செயலக வளாகங்களுக்கு வெளியில், தினந்தோறும் மாடிசன் நகரைச் சுற்றி அணிவகுத்து வருவதுடன், மாநிலம் முழுவதிலும் போராட்டங்களையும், வெளிநடப்புகளையும் அரங்கேற்றினர்.

விஸ்கான்சன் அரசு தொழிலாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், தீயணைப்புத்துறையினர், மற்றும் ஏனைய உள்ளாட்சித்துறை தொழிலாளர்களோடு சேர்ந்து, தனியார்துறை தொழிலாளர்கள், பல்கலைக்கழக மற்றும் மேல்நிலை பாடசாலை மாணவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களும் இதில் இணைந்துள்ளனர். அவர்கள், அரசுத்துறை தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் நாசமாக்கப்படுவது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திலும் நாசகரமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதை மிகச் சரியாக உணர்ந்துள்ளனர்.

அரசு தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க, விஸ்கான்சனில் அனைத்து தொழிலாளர்களும் இணைந்த ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்வதன் மூலமாக, இந்த வர்க்க ஐக்கியம் தீவிரப்படுத்தப்பட்டு, சாத்தியப்படும் அளவிற்கு பரந்தமட்டத்தில் விரிவாக்கப்பட வேண்டும். இதுபோன்றவொரு போராட்டத்தை நடத்த, பொதுத்துறை மற்றும் தனியார்துறை தொழிலாளர்களையும், அவர்களோடு பணியிடங்களிலும், பாடசாலைகளிலும் மற்றும் அண்டையவர்களையும் ஒன்றுதிரட்டும் வகையில், புதிய அமைப்புகளும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் சாமானிய நடவடிக்கை குழுக்களும் அவசியப்படுகின்றன.

இந்த போராட்டம், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் அளிப்பதன் மூலம், இந்த சட்டமசோதாவை தாமதிக்கவோ அல்லது தடுக்கவோ முயலும் அம்மாகாண AFL-CIO அல்லது ஆசிரியர்களின் சங்கம் WEACஆல் முன்னெடுக்கப்படும் முன்னோக்கிற்குப் பின்னால் திரும்பிவிட, தொழிலாள வர்க்கம் அனுமதிக்க கூடாது. சம்பள மற்றும் நலன்களின் வெட்டுக்களை ஏற்றுக்கொள்ளலாம் என்கிற தொழிற்சங்க தலைவர்களால் எடுக்கப்படும் நிலைப்பாட்டை தொழிலாளர்கள் கண்டித்து, எதிர்க்க வேண்டும்.

சாமானிய தொழிலாளர் தரப்பில் காட்டப்படும் இயற்கையான மற்றும் மனப்பூர்வமான எதிர்ப்பிற்கும், வெளியேறும் எச்சசொச்சங்களில் தங்களின் சொந்த பாத்திரம் மற்றும் வருவாய் பாதுகாக்கப்படும் வரைக்கும், மற்றும், சலுகைபடைத்த அதிகாரத்துவத்தின் சம்பளங்களும், மேற்படி வருவாய்களும் பாதுகாக்கப்படும் வரைக்கும், வெட்டுக்களுக்கு ஆதரவு அளிக்கும் தொழிற்சங்க அதிகாரிகளின் நிலைப்பாடு மற்றும் வீராவேசத்திற்கு இடையில் ஒரு பரந்த சமூக பிளவு உள்ளது.

இந்நிலையில் விஸ்கான்சன் மாகாண தொழிலாளர்கள் சங்க தலைவர் மார்டி பெய்ல் நேற்று கூறியது: “நம்முடைய அரசின் வரவு-செலவு கணக்கைச் சமப்படுத்த உதவும் வகையில் முன்மொழியப்பட்ட நிதியியல் சலுகைகளை நடைமுறைப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் கூட்டு பேச்சுவார்த்தையில் இடம்பெறுவதற்கான எங்கள் உரிமைகள் மறுக்கப்படக்கூடாதுநான் மீண்டும் சொல்கிறேன், அதில் எங்கள் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது.” எவ்வாறிருப்பினும் எல்லா சலுகைகளுக்கும் ஒருவர் உடன்படுகிறார் என்றால், பின் பேச்சுவார்த்தைகளுக்கு அங்கே என்ன இருக்கிறது? என்றவொரு கேள்வியை மட்டும் தான் இது முன்னிறுத்துகிறது.

வெட்டுக்கள் செய்வதற்கான அரசாங்கத்தின் பொருளாதார காரணங்களுக்கு சங்கங்கள் உடன்படுவதாகவும், அதை ஏற்று கொள்வதாகவும் மாடிசனில் வெள்ளியன்று நடந்த பேரணியில் AFO-CIO தலைவர் ரிச்சார்ட் ட்ரும்கா அறிவித்தார். அவர்களுக்கு யார் அந்த உரிமையை அளித்தது? அதிகரித்துவரும் பணவீக்க நிலைமைகளின்கீழ் அல்லது மருத்துவ மற்றும் ஓய்வூதிய திட்டங்களை சுருட்டுவதை முகங்கொடுத்துவரும் நிலைமைகளின்கீழ், தங்களின் இப்போது கிடைக்கும் சம்பளங்களைக் கொண்டு சமாளிக்க போராடி வரும் தொழிலாளர்களுக்காக ட்ரும்கா பேசவில்லை. மாறாக, சிக்கன மற்றும் கூலி வெட்டுக்களுக்கான பெருநிறுவன மற்றும் அரசாங்க கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களாக தொழிற்சங்கங்களை மாற்றியிருக்கும், அந்த பெரும் சம்பளம் பெறும் ஐந்தாவது வரிசை அதிகாரிகளுக்காக அவர் பேசுகிறார்.

தொழிலாள வர்க்கம் அதன் அளவிலா சமூக சக்தியை வெளிப்படுத்தும் மற்றும் ஆளுநர் வால்கர் போன்ற அதிதீவிர-வலது அரசியல்வாதிகளின் பலவீனங்களையும், ஒதுங்கிக் கொள்வதையும் அம்பலப்படுத்தும் ஒரு கட்டுப்படுத்த முடியாத வெடிப்பை தடுப்பதே, விஸ்கான்சனில் ட்ரும்கா & கம்பெனியின் முக்கிய நோக்கமாகும். வின்கான்சனில் பெரும்பான்மை மக்கள் அரசு தொழிலாளர்களுக்கு அனுதாபமாக உள்ளனர் என்பதுடன், ஒரு தொடர்ச்சியான மற்றும் நிலையான போராட்டத்தில் அவர்கள் உதவுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய ஓர் எதிர்ப்பை, என்னவிலை கொடுத்தாவது தடுக்க வேண்டிய ஒரு பேரழிவாக AFL-CIO பார்க்கிறது.

ஜனநாயக கட்சியின் மாயங்களை பெரிதுபடுத்தி காட்டுவதன் மூலமும், அரசை விட்டு வெளியேறியும், ஒரு சிறுபான்மையை நிலையை ஏற்படுத்தியும், சட்டமன்றத்தை தற்காலிகமாக முடக்கிய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு சண்டையை பாராட்டியும், வால்கர் நிர்வாகத்திற்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டத்திலிருந்து தொழிலாளர்களை திசைதிருப்புவதே AFL-CIOஇன் நோக்கமாகும். நீதிமன்றங்களில் ஒபாமா நிர்வாகத்திடம் முறையீடு செய்யலாம், மற்றும் இறுதியாக 2012 தேர்தல்களில் ஜனநாயக கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் என்று கூறி பொங்கிவரும் வேலைநிறுத்த போராட்டத்தை அது நிறுத்த கோரும்.

எவ்வாறிருந்த போதினும் ஜனநாயக கட்சி உள்ளாட்சி அளவிலும், மாநில அளவிலும், மத்திய அளவிலும் தொழிலாளர்கள் மீது ஒரேமாதிரியான தாக்குதல்களைத் தான் நடத்தி வருகிறது என்பது தான் உண்மையாக உள்ளது. விஸ்கான்சன் தொழிலாளர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் அவர்கள் மாநிலத்தில் மட்டும் நடப்பதில்லை, மாறாக அது நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் நடந்து வருகிறது. நியூயோர்க், வடக்கு கரோலினா, இலினாய்ஸ் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள ஜனநாயக கட்சி ஆளுநர்களும் வேலைகளைக் குறைத்தும், வேலைநிறுத்த உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளைத் தாக்கியும், கூலிகள் மற்றும் ஓய்வூதியங்களில் இதேபோன்ற வெட்டுக்களைச் செய்ய கோரி வருகின்றனர்.

ஒபாமாவை பொறுத்த வரையில், மத்திய அரசு தொழிலாளர்கள் நியமனத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கி வைத்து, பணிமுதிர்வு மற்றும் வேலை பாதுகாப்பு ஆகியவற்றின் தாக்குதலில் அரசு பாடசாலை ஆசிரியர்களை இலக்காக்கி, அவர் ஏற்கனவே ஆளுநர் வால்கருடன் அவருடைய வர்க்க ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டிவிட்டார். வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பு, செல்வந்தர்களுக்கு அளித்த வரி வெட்டுக்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய யுத்தங்கள் ஆகியவற்றால் உருவான பற்றாக்குறையை சமாளிக்க, ஜனநாயக சமூக செலவுகளை வெட்டுவதன் மூலமாக உழைக்கும் மக்களிடமிருந்து அந்த பணத்தைச் சுரண்டியெடுக்கும் ஒரு வரவு-செலவு கணக்கை ஒபாமா இப்போது முன்மொழிந்து வருகிறார்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலிருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஜனநாயக கட்சியினர் வெட்டுக்களை நடைமுறைப்படுத்த தொழிற்சங்கங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவார்கள், அதுவே குடியரசு கட்சியினர் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்தே பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள். இந்த வித்தியாசங்கள், தொழிற்சங்க அதிகாரிகளின் வருமானங்கள் மற்றும் தனிச்சலுகைகளைப் பணயமாக கொண்டிருப்பதால், அவர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் இறுதி விளைவோ ஒரேமாதிரியாக தான் இருக்கிறது.

வேலைகள், கூலிகள், நலன்கள், மற்றும் ஜனநாயக உரிமைகளின் அழிவுக்கு எதிரான ஒரு நிஜமான போராட்டத்தின் முதல் தேவை, அந்த இரண்டு பெரு வணிக கட்சிகளுடனும், அதாவது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியுடன், உடைத்துக் கொள்வதாகும் என்பதை விஸ்கான்சன் தொழிலாளர்களும், நாடுமுழுவதிலும் அவர்களை ஆதரிப்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய மக்கள் கட்சியைக் கட்டியெழுப்புவதில், ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரையும்அதாவது தொழிலாளர்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர், முதியோர் என அனைவரையும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுதிரட்ட வேண்டும்.

விஸ்கான்சனில் ஆர்ப்பாட்டம் செய்துவரும் பல தொழிலாளர்கள், விரட்டப்பட்ட எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கோடு வால்கரை ஒப்பிட்டு, பதாகைகளை ஏந்தியுள்ளனர். அவர்கள் கடந்த மாத வாக்கில் எகிப்திய தொழிலாளர்களால் நடத்தப்பட்டதைப் போன்ற சக்திவாய்ந்த மற்றும் சுதந்திரம் அளிக்கும் ஒரு போராட்டத்தை நடத்தும் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் இந்த இயற்கையான அறிகுறியை வெளிப்படுத்தும் ஓர் ஆழமான புறநிலை உண்மையும் அங்கே உள்ளது.

எகிப்திய தொழிலாளர்களை போலவே, விஸ்கான்சினில் உள்ள தொழிலாளர்களும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி மற்றும் உடைவால் போராட்டத்திற்குள் தூண்டப்பட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களைப் போலவே இவர்களும், இதுவரையில், வெற்றிக்கு அவசியமான அமைப்புகளோ, தலைமையோ, அரசியல் வேலைத்திட்டமோ இல்லாமல் இருக்கின்றனர். சோசலிச சமத்துவ கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் மட்டும் தான், அவசியமான புரட்சிகர மாற்றீட்டைக் கட்டியெழுப்ப ஒரு சர்வதேச அடித்தளத்தில் வேலை செய்து வருகிறது.