World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil :செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்காLethal crackdown in Bahrain is “Made in the US”Further unrest in Yemenபஹ்ரைனில் நடக்கும் கடுமையான மரணத் தாக்குதல் “அமெரிக்கத் தயாரிப்பு” ஆகும்யேமனில் கூடுதலான அமைதியின்மை
By
David Walsh வியாழன் அதிகாலை (கிட்டத்தட்ட 3.20 மணிக்கு) பஹ்ரைன் தலைநகரான மனாமாவின் மையத்தில் பலர் உறங்கிக் கொண்டிருக்கும்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பொலிசார் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதல், குறைந்தது ஆறு அல்லது அதற்கும் மேலானவர்களின் உயிரைக் குடித்ததுடன் டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்தியதோடு 60 பேரைக் காணாமற்போகவும் செய்துள்ளது. அதிக அளவில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கியதுடன் நூற்றுக்கணக்கான பொலிசார் கூட்டத்திற்குள் புகுந்து, தடியடி நடத்தி, துப்பாக்கிகளினால் சுட்டனர். வாஷிங்டனுக்கு பஹ்ரைன் கொண்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் மற்றும் பஹ்ரைனின் உளவுத்துறை மற்றும் இராணுவக் கருவிகள் அமெரிக்காவுடன் கொண்ட நெருக்கமான பிணைப்புக்களையும் கருத்திற்கொள்ளும்போது, இக்கொலைக்காரத் தாக்குதல் ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் முழு ஒப்புதலுடனும் ஒருவேளை வலியுறுத்தலின்பேரிலும் கூட நடந்திருக்கும் என்பதை நம்பப் போதுமான காரணம் உள்ளது. அசோசியேட்டட் பிரஸ்ஸின் ஹடில் அல்-ஷலச்சி, அதிகாலைத் தாக்குதலை விபரிக்கையில், “திடீரென்ற தாக்குதலில் பொலிசார் எதிர்ப்பாளர்களின் முகாம்களைக் கிழித்தெறிந்து, உள்ளே இருந்த ஆண்களையும் பெண்களையும் அடித்து சிலரை வேட்டைத் துப்பாக்கிகளினால் பறவைகளைக் கொல்லும் தோட்டாக்களைப் பயன்படுத்தித் தாக்கினர்” என்று கூறியுள்ளார். பொலிசார் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் வந்தனர் என்று ஒரு எதிர்ப்பாளர் CNN இடம் கூறினார். “நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என்று அனைவரும் இருந்தனர். திடீரென அவர்கள் எங்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டை வீசி, பறவை சுடும் தோட்டக்கள் மூலமும் தாக்கினர்” என்றார். “கலகமடக்கும் பொலிஸ் பிரிவு சதுக்கத்தைச் சுற்றி வளைக்கையில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர், திணறினர், நிலைகுலைந்தனர்” என்று நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது. 44 வயதான மருத்துவர் சதக் அல்-இக்ரி AP இடம் தான் நோய்வாய்ப்பட்ட எதிர்ப்பாளர்களைக் கவனித்துக் கொண்டிருக்கையில் பொலிசார் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர் என்றார். “தான் கட்டிப்போடப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் மற்றவர்களுடன் ஒரு பஸ்ஸில் எறியப்பட்டதாகவும் அவர் கூறினார். “என்னை அவர்கள் கடுமையாக அடித்ததில் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. என் தலையில் இருந்து நிறைய இரத்தம் வழிந்த வண்ணம் இருந்தது. நான் ஒரு மருத்துவர், மருத்துவர் என்று கூச்சல் போட்டேன். ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை.” “தானும் பஸ்ஸில் இருந்த மற்றவர்களும் நெடுஞ்சாலைப்பாலம் அருகே இறக்கிவிடப்பட்டோம், ஆனால் அடிப்பது குறையவில்லை என்று அல் இக்ரி கூறினார். இறுதியில் தான் மயக்கம் அடைந்துவிட்டதாகவும் ஆனால் ஒரு பொலிஸ் அதிகாரி “அவரை அடிப்பதை நிறுத்துங்கள், அவர் இறந்துவிட்டார். அவரை அங்கு அப்படியே நாம் விட்டுவிடுவோம்” என்று கூறியதைக் கேட்டேன் என்றார். மனாமா மருத்துவமனைகள் வரிசையாகக் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்தது. பலரும் மோசமான காயங்களைப் பெற்றிருந்தனர். AP யின் அல்-ஷல்ச்சி கூறியது: “பொலிஸ் வேட்டைத் துப்பாக்கித் தோட்டாக்களினால் ஏற்பட்ட காயங்களினால் இறந்து போன ஒருவரின் உடல் துளைக்கப்பட்டிருந்தது. செவிலியர்கள் ஆண்களையும் பெண்களையும் தூக்குப்படுக்கைகளில் கொண்டு வந்தனர். அவர்களுடைய தலைகளில் இருந்து இரத்தம் கொட்டிய வண்ணம் இருந்தது, கைகள், தோள்கள் பெரும் காயப்பட்டிருந்தன, முகங்கள் சிராய்த்திருந்தன. நுழைவாயிலில் கறுப்பு அங்கிகளால் மூடப்பட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதனர்.” சலமனியா மருத்துவமனையில் (இங்குதான் பல இறந்தவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்), “முற்றிலும், சிறிதும் கட்டுப்படுத்தமுடியாத பெருங்குழப்பம்” நிலவியது என்று CNN உடைய நிக் ரோபர்ட்சன் தெரிவிக்கிறார். அல் ஜசீரா கூறியது: “நோயாளிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினரும் அடங்குவர். இவர்கள் காயமுற்றோரைக் கவனிக்கையில் பொலிசாரால் தாக்கப்பட்டனர்.” வியாழக்கிழமை பிற்பகுதியில் பஹ்ரைன் அதிகாரிகள் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று அறிவித்து நகரத்தின் “முக்கிய பகுதிகள்” தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகக் கூறினர். பல டஜன் ஆயுதமேந்திய வாகனங்கள் பேர்ல் ரவுண்டபௌட்டில் நிலைநிறுத்தப்பட்டன. அதுதான் முன்பு எதிர்ப்புக்காரர்கள் முகாமிட்டிருந்த இடம் ஆகும். மனாமாவில் பல பகுதிகளில் அவ்வப்பொழுது மோதல்கள் நடத்தன என்ற தகவல்கள் வந்துள்ளன. கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்கள் பல இடங்களில் நடத்தப்பட்டன. மருத்துவமனைக்கு வெளியே இருந்த கூட்டம் பஹ்ரைன் ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்களில் முன்பு இருந்தவற்றைவிட இன்னும் போராளித்தனமாகவும் சமரசத்திற்கு இடமின்றியும் இருந்தன என்று செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. ஒப்புமையில் அணிவகுப்புக்கள் முன்பு அமைதியாக இருந்தன. “அவர்கள் எங்களை அடக்கி வைக்கலாம் என்று நினைக்கின்றனர், ஆனால் நாங்கள் இன்னும் கோபம் அடைந்துள்ளோம்” என்று மக்கி அபு தக்கி AP இடம் கூறினார். இவருடைய மகன் பொலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார். “நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கலிபாவிற்கு இறப்பு, கலிபாவிற்கு இறப்பு” என்று கூச்சலிட்டனர் என்று டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது. பஹ்ரைனின் அதிகாரிகள் பல இறப்புக்கள் குறித்து மன்னிப்புக் கோரும் நிலையில் இல்லை. அதேபோல் வியாழன் காலை உயிரைக் குடிக்கக்கூடிய காயங்களை ஏற்படுத்தியது பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. அன்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு மந்திரி கலிட் அல் கலிபா மனாமாவின் மையச் சதுக்கத்தில் நடந்த இறப்புக்கள் “வருந்தத்தக்கவை” என்றாலும் அடக்குமுறை தேவை என்றார் என AP கூறுகிறது. ஏனெனில் “எதிர்ப்பாளர்கள் சுன்னி ஆட்சியின் கீழுள்ள ஷியைட் பெரும்பான்மை நாட்டை சோவினிச விளிம்பிற்கு இட்டுச் செல்லுகின்றனர், நாட்டை துருவப்படுத்த முற்படுகின்றனர்” என்று அவர் கூறினார். உண்மையில் பஹ்ரைனின் எதிர்ப்பு அலைகளில் குறிப்பிடத்தக்க கூறுபாடுகளில் ஒன்று பல நோக்கர்களால் கூறப்பட்டுள்ளது—அதாவது இச்சிறு தீவு நாட்டில் அரசாங்க எதிர்ப்புக் காட்டும் ஷியைட்டுக்களும் சுன்னிகளும் ஐக்கியத்துடன் உள்ளனர் என்பதே அது. பொது உறவுகளை ஒரு புறம் ஒதுக்கினால், ஒபாமா நிர்வாகம் பஹ்ரைன் ஆட்சிக்கு முழு ஆதரவைக் கொடுக்கிறது. நிகழ்விற்குப்பின் வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் வாடிக்கையாக கூறும் பாசாங்குத்தன கருத்துக்கள் “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்துகிறோம் என்பது அமெரிக்க அரசாங்கம் இவ்விஷயத்தில் கொண்டுள்ள குற்றம் சார்ந்த பங்கில் இருந்து திசைதிருப்பும் முயற்சி என்று உதறித்தள்ளப்படலாம். ஜனாதிபதி பாரக் ஒபாமா ஒரு பெயரளவு கண்டன அறிக்கை கூட உத்தியோகபூர்வ வன்முறை பற்றி, எகிப்து நிகழ்ச்சிகள் போது வெளியிட்டது போன்றவற்றைக்கூட வெளியிடவில்லை. பென்டகன் செய்தித் தொடர்பாளர், கர்டன் டேவ் லாபான், பொலிஸ் தாக்குதலுக்கு பின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க இராணுவத்தின் முக்கிய நிலைப்பாடு பற்றிக் குறிப்பிட்டார்: “நீண்ட கால நட்பு நாடு, அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தாயகம் என்ற முறையில் பஹ்ரைன் ஒரு முக்கிய பங்காளி ஆகும். எமது அலுவலகம் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார். இது தொடர்புடைய இந்த வார மற்றொரு நிகழ்வில், அனைத்து எண்ணெய் வளமுடைய இப்பிராந்தியத்தில் கடற்படை மேலாதிக்கத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், ஈரான் இரு போர்க்கப்பல்களை எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியே அனுப்பும் திட்டங்கள் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் இருந்து கண்டனங்களைத் தூண்டியதோடு, கூடுதலான எச்சரிக்கை மிகுந்த அறிக்கைகளை ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து தூண்டியது. இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி அவிக்டர் லிபர்மன் தன்னுடைய நாடு “இந்த ஆத்திரமூட்டல்களை எப்பொழுதும் புறக்கணித்துக் கொண்டு இராது” என்று எச்சரித்தார். அமெரிக்க வெளிவிவகார அலுவலக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரௌலி புதன்கிழமையன்று அமெரிக்கா இரு ஈரானியக் கப்பல்களையும் கண்காணிப்பதாக கூறினார். பின்னர் ஈரானிய அரசாங்கம் கடந்து செல்ல வேண்டும் என்னும் தன் விருப்பத்தை சூயஸ் கால்வாய் அதிகாரத்திடம் இரத்து செய்தது. அமெரிக்கா மற்றும் மேலைத்தேய செய்தி ஊடகத்தினர் பலமுறையும் சமீப நாட்களில் பஹ்ரைனில் அரசியல் கொந்தளிப்பு என்பது ஏகாதிபத்தியத்தின் பூகோள-அரசியல் நலன்களுக்கு ஆபத்து என்பதைப் பிரதிபலிக்கிறது என்று எச்சரித்துள்ளனர். இவை அடக்குமுறைக்குத் தூண்டுதல் போல்தான் உள்ளன. CNN.Com ல் உள்ள அலன் சில்வர்லெய்ப் பெப்ருவரி 17 அன்று வெளிப்படையாக அதைக் கூறுகையில் “பஹ்ரைன் ஒரு சிறு தீவுக்கூட்ட நாடு, சூடான அரசியல் வனப்புரை உறையும் இராணுவ உண்மையைச் சந்திக்கிறது. வாஷிங்டனைப் பொறுத்தவரை, இந்தச் சிறிய பேர்சிய வளைகுடா முடியாட்சி, மத்திய கிழக்கில் ஜனநாயகத்திற்கான ஆதரவு இறக்கும் இடமாக இருக்கலாம். ஆனால் இதையொட்டி அமெரிக்க இராணுவச் சக்திக்கு ஏற்படும் இழப்பு, அரசர் ஹமத் பின் இசா அல் கலிபாவின் வீழ்ச்சியை தொடரக்கூடியது கணக்கிலடங்காமல் இருக்கும்” என்றார். American Enterprise Institute ன் மைக்கேல் ரூபினை மேற்கோளிட்டுள்ளார் சில்வர்லேயிப். அவர் பஹ்ரைன் “பேர்சிய வளைகுடாவில் நம் மிக முக்கியமான மூலோபாய சொத்து” என்று விவரித்தார். மேலும் ஒபாமா நிர்வாகம் “பஹ்ரைனில் நடக்கும் கலகங்கள் பற்றி அதிகம் பேசவில்லை, ஏனெனில் இந்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது நம் நலன்களுக்குச் சிறிதும் இயைந்து வராது.” அமெரிக்க வெளிவிவகார அலுவலகக் கருத்துப்படி, 2011 ஜனவரி பின்னணிக் குறிப்பில் “அமெரிக்க இராணுவம் பஹ்ரைனுக்கு 2000த்தில் இருந்து 1.41 பில்லியன் டொலர் இராணுவ தளவாடங்களை விற்பனை செய்துள்ளது” என்று கூறுகிறது. டிசம்பர் 2000த்தில் அமெரிக்கத் தகவல் ஆவணம் ஒன்று, விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டது (கார்டியனில் பெப்ருவரி 15 ல் வெளியிடப்பட்டது), பஹ்ரேன் தேசிய பாதுகாப்பு அமைப்பு “வாடிக்கையாக உயர்தர உளவுத்துறைத் தகவலை பகிர்ந்து கொண்டு கூட்டுச் செயற்பாடு வாய்ப்புக்களை அமெரிக்கப் பிரிவுகளுடன் கொள்ள முற்படுகிறது” எனக்கூறியுள்ளது. இத்தகவல் ஆவணம் BNSA இயக்குனர் ஷேக் கலிபா பின் அப்துல்லா அல் கலிபா “தன்னுடைய அமெரிக்க உளவுத்துறையுடன் மற்றவை அனைத்தையும் விடச் சிறிதும் நாணமின்றி உயர்ந்த முறையில் வைத்துள்ளார். அவருடைய முக்கிய லெப்டினட்டுகள் அமெரிக்க தொடர்பு பங்காளிகளுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். எப்பொழுதும் கூட்டுறவிற்கு புதிய வழிவகைகளைக் காண்கிறார்” என்றும் தெரிவிக்கிறது. இத்தகைய ஒத்துழைப்பின் நடைமுறை விளைவுகள் வியாழன் காலையில் சலமனியா மருத்துவமனை மற்றும் அதன் பிரேதக்கிடங்கில் காணப்பட முடியும். யேமனில் கூடுதலான வன்முறை மோதல்கள் இதற்கிடையில் வியாழனன்று யேமனில் எதிர்ப்புக்கள் இன்னும் தீவிரமாயின. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஆதரவுடைய ஜனதிபதி அலி அப்துல்லா சலேயசை எதிர்த்து தொடர்ந்து ஏழாம் நாளாக தெருக்களுக்கு வந்தனர். தலைநகர் சானாவில் அவர்கள் கற்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த அரசாங்க சார்பு கூட்டங்களால் மீண்டும் தாக்கப்பட்டனர். யேமனின் தென்பகுதித் துறைமுக நகரான ஏடெனில் பொலிசார் பல ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இருந்த கூட்டத்தை நோக்கிச் சுட்டு குறைந்தது ஒருவரைக் கொன்று,10 பேரைக் காயப்படுத்தினர். நியூஸ் யேமன் தகவலின்படி, மன்சௌரா மாவட்ட ஆர்ப்பாட்டம் சலே பதவியில் இருந்து இறங்க வேண்டும், ஊழல் அதிகாரிகள் நாட்டை விட்டு ஓட வேண்டும் என்று கோரியது. “அடக்குமுறையை எதிர்ப்போம், ஊழல் வேண்டாம் என்போம், ஆட்சியின் வீழ்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்” எனக் கூட்டம் கோஷமிட்டது என்று ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது. தென்மேற்கு யேமனிலுள்ள டைசில் ஆயிரக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சலேக்கு எதிராக அணிதிரண்டு பெப்ருவரி 18 “சீற்ற தினமாக” கடைப்பிடிக்கப்படும் என்று உறுதி பூண்டனர் என்று நியூஸ் யேமன் அறிவித்துள்ளது. “ஆட்சி வீழ்க, அடக்குமுறையாளர்கள் ஒழிக” என்று கூட்டம் கூச்சலிட்டது. சானா நகர மையப் பகுதியில் சலே எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சலே ஆதரவுக் குழுவினரால் வன்முறைத் தாக்குதலுக்கு உட்பட்டனர். அவர்களில் சிலர் துப்பாக்கி வைத்திருந்தனர். “எதிர்ப்பாளர்கள் கற்களை வீசிக் கொண்டனர், கோஷங்களை முழக்கினர், தெருவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க போராட்டம் மூண்டது. டயர்களுக்கும் குப்பைத் தொட்டிகளுக்கும் தீ வைத்தனர், பெரும் புகை மண்டலம் எழும்பியது. பல முறை துப்பாக்கிகள் ஆகாயத்தை நோக்கி சுடப்பட்டன. ஆனால் பொலிசாரோ, பாதுகாப்புப் படையினரோ பெரும் குழப்பத்தை நிறுத்த அங்கு இல்லை.” கிட்டத்தட்ட 40 பேர் காயமுற்றனர்” என்று வாஷிங்டன் போஸ்ட் தகவல் கொடுத்துள்ளது. அப்துல்லா ஹாசன் என்னும் 32 வயது வேலையில்லா இளைஞர், தெரு மோதலில் காயமுற்றவர் கருத்துக்களையும் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது. “அலி அப்துல்லா சலே பதவியிறக்கப்பட வேண்டும்… அரசாங்கம் தன் மக்களையே தாக்குகிறது.” அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களின் எதிரிகளுக்கு ஆட்சியினால் பணம் கொடுக்கப்படுகின்றது அல்லது தலைநகருக்கு சலே சார்பு பழங்குடித் தலைவர்களால் அழைத்து வரப்படுகின்றனர் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். சானாவில் மாணவர் எதிர்ப்பாளர் சலா அப்துல்லா ராய்ட்டர்ஸிடன், “நாங்கள் இந்த ஆட்சி கவிழும் வரை ஓயமாட்டோம். பல காலம் பொறுமையாக இருந்துவிட்டோம்” என்றார். |
|