World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Egyptian military repeats demands for end to strike wave

எகிப்திய இராணுவம் வேலைநிறுத்த அலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறது

By Patrick O’Connor
16 February 2011

Back to screen version

நாடு முழுவதும் நடைபெறும் தொழிலாளர்கள் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எகிப்தின் ஆளும் இராணுவத் தலைமை ஆணையகம் மீண்டும் நேற்று கோரியுள்ளது.

சமூகம் அவதியுறும் பொருளாதார, சமூக நிலைமைகள் பற்றி இராணுவக் குழு நன்கு அறிந்துள்ளதுஎன்று எகிப்தின் அரச செய்தி அமைப்பான MENA விடம் ஒரு இராணுவ ஆதாரம் கூறியது. “ஆனால் இப்பிரச்சினைகள் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் மற்றும் உற்பத்தி வழிவகைகளை தடுப்பதின் மூலம் தீர்க்கப்பட முடியாது. … அதன் விளைவு பேரழிவைத்தான் கொடுக்கும்” “மக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்யவும் உரிமை உள்ளது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானவை அல்லஎன்ற அவர்இராணுவக்குழுவிடம் ஊழலை உடனே அகற்றக்கூடிய மந்திரக்கோல் ஏதும் இல்லைஎன்றும் சேர்த்துக் கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியில் இருந்து அகற்றப்பட்டபின், அதிகாரத்தை எடுத்துக் கொண்டதிலிருந்து  இராணுவம் அத்தகைய அறிக்கைகளைத்தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகிறது. தளபதிகள் மற்றும் முழு எகிப்திய ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியுறும் இயக்கம் பற்றிய தீவிர அச்சத்தைத்தான் அவை பிரதிபலிக்கின்றன.

முஹம்மது நபிகளின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நேற்று பொது விடுமுறை தினம் ஆகும். ஆயினும்கூட தொழிலாளர்கள் எதிர்ப்புக்கள் தொடர்ந்து வெளிப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த வாரம் முழுவதும் நாட்டின் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கும் கட்டாயத்திற்கு அரசாங்கம் உட்பட்டது. இதற்குக் காரணம் இன்னும் நல்ல ஊதியம், பணிநிலைமைக்காக வங்கித் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தங்கள் ஆகும். அரசத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை ஒன்றின்படி, எகிப்தின் மத்திய வங்கி வேலைநிறுத்தங்கள் முடிக்கப்பட்டுதேசியப் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

சில ஆலைகளில் நடைபெறும் வேலைநிறுத்தங்கள் தொழிலாளர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வுகள் அளிக்கப்பட்டபின் கைவிடப்பட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் பல ஆலைகளும் தொழில்துறை நடவடிக்கையின் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.

MENA செய்தி நிறுவனத்தை மேற்கோளிட்டு வந்துள்ள தகவல்களின்படி, சூயஸ் கால்வாய் தொழிலாளர்கள் நேற்று கால்வாய் நிர்வாகத்தில் இஸ்மைலியா தலைமையகத்தில் ஊதிய உயர்வுகளைக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த நடவடிக்கை மூலோபாய வகையில் முக்கியமான கடல்வழிப் பயணங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. “சூயஸ் கால்வாய் நிர்வாகத்தின் தலைவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்வோம்என்று எதிர்ப்பாளர்களில் ஒருவர் MENA விடம் கூறினார்.

நைல் டெல்டா நகரமான எல் மகல்லா எல் குப்ராவில் அரசிற்குச் சொந்தமான Misr Spinning and Weaving company நிறுவனத்திலுள்ள 24,000 தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் அதிகரிப்புக்கேட்டு காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று ஒரு ஜவுளித் தொழில்துறை வலைத்தளம் தகவல் கொடுத்துள்ளது. எகிப்தின் மிகப் பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனமான அரபா ஹோல்டிங் டென்த் ஆப் ரமடான் சிட்டி என்னுமிடத்திலுள்ள அதன் ஆலைகள் இரு நாட்கள் மூடப்படும், ஏனெனில் குறைந்தது 1,500 தொழிலாளர்கள் நேற்று அங்கு வேலைநிறுத்தம் செய்ததால் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

வேறு சில எதிர்ப்புக்கள், போராட்டங்களைப் பற்றியும் அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டுள்ளது: “நூற்றுக்கணக்கானவர்கள் நடத்திய எதிர்ப்புக்கள் கெய்ரோவிற்கு வெளியே குறைந்தபட்சம் ஏழு மாநிலங்களில் தொடர்ந்தன. இவற்றுள் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொலிசாரும் ஊதியம் பற்றியவையும் உள்ளடங்கும். நைல் டெல்டாப் பகுதியில் மீன்பிடிப்பவர்கள் தலைநகரின் வடக்கேயுள்ள ஏரி ஒன்றில் அவர்கள் மீன்பிடிப்பதற்கு உள்ள தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரினர். தென்கேயுள்ள லக்டர் நகரத்தில் இருக்கும் கரும்பு உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திக்கு அதிக விலைகள் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.”

அதிக ஊதியங்கள் மற்றும் கௌரவமான பணி நிலைமைகளுக்காக எகிப்தியத் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் நாட்டில் இராணுவத்தின் கணிசமான வணிகச் செயற்பாடுகளுக்கு ஒரு நேரடி அச்சுறுத்தல் என்பதோடு, உலக நிதியச் சந்தைகளின் நடவடிக்கைகளுக்கும் ஒரு நேரடி அச்சுறுத்தல் ஆகும்.

கடந்த ஆண்டு கிரேக்கத்தில், எகிப்திலிருந்து மத்தியதரைக்கடலில் நேரே இருப்பதில், சர்வதேச நிதிய மூலதனம் ஒரு அரசாங்கக் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் மிருகத்தனமான தாக்குதல் ஒன்றின் பின்னணியில் இருந்தது. இப்பொழுது எகிப்தியக் கடன் பற்றி நிதிய வட்டங்களில் கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. இவை எகிப்து விரைவில் ஒரு இலக்காகக் கூடும் என்ற அடையாளத்தை காட்டுகின்றன. திங்களன்று எகிப்தின் மத்திய தணிக்கை நிறுவனமான Gawdat El Malt ன் தலைவர் அரச கடன் 184 பில்லியன் டொலர் என்று ஜூன் 2010ல் இருந்ததாக அறிவித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89.5 சதவிகிதம் ஆகும். இதுஒரு பாதுகாப்பான மட்டத்தை விட உயர்ந்ததுஎன்று அவர் எச்சரித்துள்ளார்.

தரம் நிர்ணயிக்கும் நிறுவனமான மூடிஸ் ஏற்கனவே எகிப்தின் அரச கடன் தரத்தின் மதிப்பை ஜனவரி 31 அன்று, முபாரக் அகற்றப்படுவதற்கு 12 நாட்கள் முன்னதாகக் குறைத்துவிட்டது. “அதிருப்தியைக் குறைக்கும் அரசாங்க முயற்சிகளில் ஒரு பகுதியாக நிதியக் கொள்கை தளர்த்தப்படும் வாய்ப்பு வலுவாக உள்ளதுஎன்று மூடிஸ் அறிவித்துள்ளது. “இதையொட்டி பணவீக்க உயர்வு அழுத்தப் பின்னணிகள், நிதியக் கொள்கையை இன்னும் கூடுதலாகச் சிக்கலாக்கும், ஏனெனில் ஊதியங்கள், உதவித் தொகைகள் ஆகியவற்றில் வரவு-செலவுத் திட்டச் செலவினங்கள் கூடுதலாகும் அச்சுறுத்தல் உள்ளது.”

இராணுவ அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் ஆகியவற்றில் 15 சதவிகித அதிகரிப்பிற்கு உத்தரவிட்டுள்ளது. இது வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை, ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.1 சதவிகிதம் என்று இருப்பதை இன்னும் அதிகப்படுத்தும். “இந்த நிலைமை தொடர்ந்து செயல்படுத்துவது பற்றி நான் சந்தேகப்படுகிறேன்என்று கெய்ரோவிலுள்ள Ahram Center for Strategic and International Studies ல் இருக்கும் Abdel-Fattah Eo-Gabali என்னும் நிதியக் கொள்கை வல்லுனர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். “வரவிருக்கும் காலத்தில் நிதியக் கொள்கை மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கும். புரட்சி பற்றிய பெரும் பரபரப்பு முடிந்தவுடன், உண்மை நிலையிலிருந்து பெரும் தாக்குதலை காண நேரிடும்என்றார் அவர்.

நிதியச் சந்தைகளிடமிருந்து கடினச் சொற்களை பெற்றுள்ள இராணுவத்தின் குறைந்தபட்ச சலுகைகள் கூட தொழிலாளர் வர்க்கத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த வாரம் கெய்ரோவில் நடைபெற்ற சில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில், புதிதாகத் தோன்றியுள்ள சில தொழிலாளர்அமைப்புக்கள் குறைந்தபட்சம் 1,200 எகிப்திய பவுண்டுகள் (அமெரிக்க $205) தேவை என்று கோரும் பதாகைகளைக் கொண்டிருந்தன என்று BBC குறிப்பிட்டுள்ளது. இந்த நிதி எகிப்திய பொதுத்துறையில் திறமை பெற்றவர்களுடைய தற்பொழுதைய சராசரி ஊதியத்தைப் போல் இரு மடங்கு ஆகும்.

தன் ஆட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை இராணுவம் முடுக்கிவிட்டுள்ளது. முபாரக்கின் மிருகத்தனப் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் தளபதிகள் உள்துறை அமைச்சரகத்தின் பொதுப் பாதுகாப்பு இயக்குனர் அட்லி பயெட்டைப் பணிநீக்கம் செய்துள்ளனர். அதே போல் கெய்ரோவில் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் இஸ்மெயில் எல் ஷேரையும் பணிநீக்கம் செய்துள்ளனர். முபாரக் குடும்பம் மற்றும் அவருக்கு நெருக்கமான எடுபிடிகள் சேகரித்து வைத்துள்ள பெரும் செல்வத்தை மீட்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இவை பல பில்லியன் டாலர்கள் மதிப்புடையவை என்று கூறப்படுகின்றன.

எகிப்தின் இராணுவ அரசாங்கம் பத்து நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படாத எட்டு நீதித்துறை வல்லுனர்களால் ஒரு புதிய அரசியலமைப்பு இயற்றப்பட வேண்டும் என்று உத்ததரவிட்டுள்ளது. குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பீல்ட் மார்ஷல் மஹ்மத் ஹுசைன் தன்தவி என்னும் ஆயுதப் படைகளில் முபாரக்கின் பழைய வலதுகரமாக விளங்கியவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர் புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதை தானே மேற்பார்வையிடுகிறார். நேற்று நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்திற்கு தன்தவி தலைமை வகித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியான தரீக் அல்-பிஷ்ரி, குழுவின் முறையான தலைவர் ஆவார். இதில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சோபே சலேயும் உள்ளார். இந்த நியமனம் இராணுவ அரசாங்கத்திற்கு இஸ்லாமியவாதிகளின் ஆதரவு பற்றிய மற்றொரு அடையாளம் ஆகும். நேற்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு புதிய அரசியலமைப்பு அதை அனுமதித்த பின் ஒரு அரசியல் கட்சியை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல்கள் நடத்தப்படும் போது ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து உத்தியோகபூர்வஎதிர்ப்புப்போக்குகளும்முஸ்லிம் சகோதரத்துவம், மகம்மது எல்பரடெயின் மாற்றத்திற்கான தேசிய அமைப்பு, Wafd  மற்றும் Tagammu ஆகியவைஇராணுவம் போலவே தொழிலாள வர்க்கத்திடம் விரோதப் போக்கைக் காட்டுகின்றன. ஆரம்பத்தில் எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் தைரியமாக முபாரக்கின் பாதுகாப்புப் படையினருக்கு சவால் விடுத்தபோது, ஒதுங்கியிருந்த இவை இப்பொழுது விரைவில் புரட்சிகர இயக்கத்தை முடிவிற்கு கொண்டுவரும் நம்பிக்கையில் உள்ளனர்.

பல இளைஞர்களை தளமாகக் கொண்ட அமைப்புக்கள், முபாரக் எதிர்ப்புக்களை ஒருங்கிணைக்க உதவியவையும் இராணுவத்தின் பங்கு பற்றிய போலித் தோற்றங்களுக்கு ஆக்கம் கொடுக்கும் வகையில் உதவி வருகின்றன. “ஏப்ரல் 6” இயக்கத்தின் வலிட் ரஷிட் நியூ யோர்க் டைம்ஸிடம் அவருடைய அமைப்பின் சில உறுப்பினர்கள் அரசியலமைப்பு இயற்றும் குழுவிற்கு ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளத பற்றி கவலை கொண்டனர், ஆனால்இறுதியில் அவருடைய சுதந்திரத் தன்மை பற்றித் திருப்தி அடைந்தனர்என்று கூறினார் 

அல் அஹ்ரமின் கருத்துப்படி, “ஏப்ரல் 6” ன் மற்ற பிரதிநிதிகள் இராணுவத்திடம் திங்களன்று தாங்கள் தேர்தல்கள் 9 முதல் 12 மாதங்களுக்கு முன்பு நடத்தப்படுவதை விரும்பவில்லை என்று கூறினர்.

இராணுவத்தின் செயற்பட்டியலுக்கு எதிர்ப்புக்கள் வெளிவரும் அடையாளங்கள் காணப்படுகின்றன. நேற்று புதிதாக அமைக்கப்பட்டதொழில்தேர்ச்சியாளர்கள் கூட்டணி”—மருத்துவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், அறிவாளிகள் ஆகியோரின் புதிய அமைப்புக்களைக் கொண்டதுபுதிய அரசியலமைப்பு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால் முடிவெடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாளில் வந்த கட்டுரை ஒன்று, “எகிப்திய இராணுவம் புரட்சியைக் கடத்த முற்படுகிறது என்று செயற்பாட்டாளர்கள் அஞ்சுகின்றனர்என்று இளைஞர் குழுக்கள் கூட்டணியில் பெயரிடப்படாத உறுப்பினர் கருத்தை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது. “எங்கள் கோரிக்கைகளை செயல்படுத்துவதாக இராணுவம் வெளிப்படையாகக் கூறுவது அதற்குப் பொருத்தமாக இருக்கலாம், ஆனால் இந்த வழிவகையில் எங்களுக்கு ஏன் இடம் அளிக்கப்படவில்லை? எங்களில் பலர் இப்பொழுது நன்கு சிந்திக்கப்பட்டுள்ள ஒரு திட்டம் இராணுவத்தால் படிப்படியாகச் செயல்படுத்தப்படுகிறது என்று உணர்கிறோம். அவர்கள் இருக்கும் அரசியல் பொருளாதார நிலையைக் கெட்டிக்காரத்தனமாக பயன்படுத்துகின்றனர். இந்நபர்கள் மூலோபாயத் திட்டமிடுவதில் சிறந்த வல்லுனர்கள், பழைய ஆட்சியின் சில கூறுபாடுகள், எதிர்ப்பிற்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் சில கூறுபாடுகள் ஆகியவற்றின் உதவியுடன் அவர்கள் தெளிவற்ற முறையில் பார்த்தால் ஜனநாயகம் போல், ஆனால் உண்மையில் தங்கள் சலுகைகளை வேரூன்ற வைக்கும் ஒரு முறையைத்தான் வளர்க்க முயல்கின்றனர்என்றார் அவர்.

ஒபாமா நிர்வாகம் இராணுவ ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, நிதியச் சந்தைகளின் ஆணைகளைச் செயல்படுத்தி, எகிப்தின் மூலோபாய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டைத் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு வலதுசாரி அரசாங்க மாற்றமாக வருவதற்கு மேற்பார்வையிட்டு வருகிறது. “இதுகாறும் நாம் காண்பவை முன்னேற்றமாக உள்ளனஎன்று ஜனாதிபதி ஒபாமா நேற்று அறிவித்தார். “பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள இராணுவக்குழு இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் கொண்டுள்ள உடன்பாடுகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கும் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையும் வெளிவிவகார செயலகமும்மதச் சார்பற்ற அரசியல் கட்சிகள் எழுச்சிக்கு ஊக்கம் தரும்வடிவமைப்பு கொண்ட திட்டங்களுக்குக் கூடுதல் நிதியளிக்கும் வழிவகைகளை விவாதிக்கின்றன. ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர், மன்ற வெளியுறவுக்குழு உறுப்பினர் ஹோவர்ட் பெர்மன் National Democratic Institute, International Republican Institute மற்றும் National Endlowment for Democracy என்னும் அமைப்புக்களுக்கு நிதியளிக்குமாறு கோரியுள்ளார். இந்த அமைப்புக்கள் பல அமெரிக்க சார்பு அரசாங்கங்களை வண்ணப்புரட்சி என்று அழைக்கப்பட்டவற்றின் மூலம் பால்கன் பகுதிகளிலும் மத்திய ஆசியாவிலும் முன்னாள் புஷ் நிர்வாகத்தின் கீழ், நிறுவுவதில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தன.