WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lanka: Former Tamil detainees speak to
the WSWS
இலங்கை:
முன்னாள் தமிழ் கைதிகள்
WSWS
உடன் பேசினார்கள்
By our correspondent
6 January 2011
Back to
screen version
உலக சோசலிச
வலைத் தளம் அண்மையில் பல தடுப்பு நிலையங்களில் இருந்து விடுதலையான பல தமிழ்
கைதிகளுடனும் அதே போல் இலங்கை இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் இன்னமும்
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுடனும் பேசியது. அவர்கள் முகாங்களுக்குள்
உள்ள ஒடுக்குமுறை நிலைமைகளை மட்டும் விவரிக்கவில்லை, மாறாக அவர்கள் தடுத்து
வைக்கப்பட்டிருந்ததே அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமை மீறலாகும் என
வலியுறுத்தினர்.
2009 மே
மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து, இராணுவமானது
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 280,000 தமிழ் பொது மக்களை
பிரமாண்டமான “நலன்புரி
கிராமங்களில்”
அடைத்து
வைத்தது. இந்த கிராமங்கள் முற் கம்பிகளால் சூழப்பட்டிருப்பதோடு ஏறத்தாழ ஒரு
சிறைக்கூடமாக இராணுவ சிப்பாய்களால் நடத்தப்படுகிறது.
“புலி
சந்தேகநபராக”
குற்றஞ்சாட்டப்பட்ட எவரும் கண்காணாத இடத்தில் தனியாக தடுத்து
வைக்கப்பட்டனர். இராணுவ புலனாய்வு அதிகாரிகள் முகாங்களில் உள்ள இளம் ஆண்கள் மற்றும்
பெண்களை விசாரித்து மேலும் பல “புலி
சந்தேகநபர்களை”
அதன் இரகசிய சிறைகளுக்கு இழுத்துச் சென்ற நிலையில், இந்த எண்ணிக்கை
12,000 ஆக அதிகரித்தது. இந்த நடவடிக்கையின் குறிக்கோள் எந்தவொரு எதிர்ப்பையும்
அல்லது கருத்து வேறுபாடுகளையும் அச்சுறுத்தி மௌனமாக்குவதேயாகும்.
புணர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, இராணுவம் சுமார்
11,696 பேரை புலி “சந்தேக
நபர்களாக”
தடுத்து வைத்திருந்ததாகவும், இதுவரை 5,586 பேர் மட்டுமே
விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் திங்களன்று ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
கடந்த செம்பெட்ம்பரில், சர்வதேச ஜூரிகள் சபையானது இலங்கையை அநேகமாக ஒரு உள்நாட்டு
ஆயுத மோதலில் உலகிலேயே ஒரு பிரமாண்டமான வெகுஜன தடுப்பு நிலையத்தை வைத்திருக்கும்
நாடு என வகைப்படுத்தியது.
இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட மற்றும் தற்போது அதன் இரகசிய சிறைகளில்
வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை பற்றி சுயாதீனமான மதிப்பீடுகள் எதுவும்
கிடையாது. இத்தகைய நிலையங்களில் உள்ளே உள்ள நிலைமைகள் பற்றியும் பெருமளவில்
வெளியில் தெரியாது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இந்த முகாங்களுக்கு செல்ல
அனுமதி கிடையாது. சித்திரவதைகள், சட்டத்துக்கு புறம்பான கொலைகள் மற்றும்
“காணாமல்
ஆக்குவதில்”
இலங்கை பாதுகாப்பு படைகள் இழிபுகழ் பெற்றவையாகும்.
பொலனறுவைக்கு அருகில் வெலிகந்தையில் உள்ள
“புணர்வாழ்வு
முகாமில்”
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியின் உறவினருடன் உலக சோசலிச
வலைத் தள (WSWS)
நிருபர்கள் பேசினர்.
இத்தகைய தனியான நிலையங்கள் காட்டுக்குள்
17
மீட்டர் நீளமான நூற்றுக்கணக்கான கூடாரங்களை அமைத்து
நிர்மானிக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூடாரங்கள் ஆறு அறைகளாக பிரிக்கப்பட்டு ஒரு அறையில் ஐந்து
பேர் வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம் முற்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதோடு
ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் காவல் செய்கின்றனர் என அந்த நபர் விளக்கினார்.
ஒரு சில
கைதிகளுக்கே தூங்குவதற்கு பாயும் தலையணையும் உள்ளதாக அந்த உறவினர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கைதிகளுக்கு ஒரு துண்டு சவர்க்காரமும் ஒரு சிறிய பக்கட் சம்போவும்
ஒரு பக்கட் பற்பசையும் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு மூன்று வேளையும் சோறு
சாப்பிடக் கிடைத்தாலும் அது போதாததோடு அது தரங்கெட்டதுமாகும். துணிகள் மற்றும் ஏனைய
தேவைகள் அவர்களது குடும்பங்களால் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர்களும் மனைவிமாரும்
மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
ஒரு
முன்னாள் கைதி முகாமுக்குள் நடக்கும் ஆட்சியை விவரித்தார். தடுத்து
வைக்கப்பட்டுள்ளவர்கள் திட்டமிடப்பட்ட சிங்கள தேசியவாத கருத்துப் போதனைகளுக்கு
அடிபணியவும் கொழும்பு அரசாங்கத்துக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தவும்
நெருக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு நாள் காலையும், கைதிகள் ஒரு பிரார்த்தனை
நிகழ்வுக்கும் தேசிய கொடி ஏற்றும் வைபவத்துக்கும் சமூகமளிக்க வேண்டியிருப்பதோடு
நாட்டுக்கு எதிராக செயற்பட மாட்டோம் என சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும். பின்னர்
துயரார்ந்த பண்ணை தொழிலாளி செய்வது போல், முகாமை துப்புரவு செய்யும் அன்றாட வேலையை
தொடங்க வேண்டும்.
வெலிகந்த
முகாமில், மரக்கறி மற்றும் சோளம் வளர்க்கும் பெரும் பண்ணைகளில் கைதிகள் வேலை
செய்யத் நெருக்கப்படுகிறார்கள். பின்னேரம் அவர்கள் வந்த பின்னர் கடுமையான உடல்
சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
“அரசாங்கமும்
முகாம் அதிகாரிகளும் எங்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள்”
என இன்னுமொரு முன்னாள் கைதி
WSWSக்குத்
தெரிவித்தார்.
வெலிகந்த
தடுப்பு முகாமில் உள்ள ஒரு கைதியின் மனைவி விளக்கியதாவது:
“நான்
அவரை திருமணம் முடிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னதாக எனது கனவர் புலிகளின்
உறுப்பினராக இருந்துள்ளார்.
அதில் இருந்து விலகிய பின்னர் புலிகளுக்கும் அவருக்கும் தொடர்பு
இல்லை.
எங்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
மூத்தவளுக்கு எட்டு வயது.
மெனிக்பார்மில்
[தடுப்பு
நிலையம்]
அவரை கைது செய்து பாதுகாப்பு படையினர் விசாரணையின் பின்னர் அவர்
விடுவிக்கப்படுவார் என கூறினர்.
ஆனால் அவர் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.
யுத்தத்தின்
போது தமது வீடு மற்றும் உடமைகளை இழந்ததையடுத்து அந்த மனைவி தனது நான்கு மகள்மார்
மற்றும் தாயுடனும் ஒரு சிறிய கூடாரத்தில் வாழ்கின்றார்.
“என்னிடம்
பணம் இல்லாததால் கடந்த இரண்டரை மாதங்களாக என்னால் எனது கனவரை பார்க்க போகமுடியாமல்
போய்விட்டது,”
என அவர் கூறினார்.
“அங்கு
செல்வதற்கு எனக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது (45 அமெரிக்க டொலர்) வேண்டும்.
ஐ.சி.ஆர்.சி. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இருவருக்கு 4,000 ரூபா கொடுத்தது. பயணம்
செய்வதற்கு அது போதாது. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சென்று அங்கு
ஒரு நாள் தங்க வேண்டும். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர்களும்
மனைவிமாரும் ஒன்று சேர்ந்து வெலிகந்தைக்கு செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்வார்கள்.
முழு பயணத்துக்கும் ஐந்து நாட்கள் தேவை.”
அவரது கணவரை
இராணுவத்தினரோ அல்லது பொலிசாரோ விசாரிக்கவில்லை மற்றும் அவர் மீது எந்தவொரு
குற்றத்துக்கும் குற்றஞ்சாட்டப்படவில்லை.
“அவரிடம்
இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கடிதம் ஒன்று கிடைக்கும். தமிழ் தேசிய
கூட்டமைப்போ அல்லது வேறு எந்தவொரு அரசியல் கட்சியோ இவர்களை விடுதலை செய்வதற்கு
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,”
என அந்த மனைவி முறைப்பாடு செய்தார்.
யுத்தத்தின்
போது புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட முதலாளித்துவக் கட்சியான தமிழ் கூட்டமைப்பு,
கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு நுழைவிடத்தை தேடுவதோடு இந்த கைதிகளை விடுதலை
செய்வதற்கு எந்தவொரு பகிரங்க பிரச்சாரத்தையும் முன்னெடுக்கவில்லை. இந்தக் கைதிகள்
மீது குற்றஞ்சாட்டப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டு நீதி
அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுடனும் தமிழ் கூட்டமைப்பு
கலந்துரையாடுவதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்
WSWSக்கு
கடந்த வாரம் தெரிவித்தார்.
அந்த
கலந்துரையாடல்களில் எந்த பயனும் இல்லை. தமிழ் கூட்டமைப்பு மேலதிக நடவடிக்கைகளை
எடுக்கவுமில்லை.
ஒரு நடுவயது
குடும்பப் பெண் WSWS
உடன் பேசினார். அவரது கணவர் வவுனியா முகாமில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார். “யுத்த
காலத்தில் ஒரு புறம் புலிகளிடம் இருந்தும் மறுபுறம் இராணுவத்தின் தாக்குதல்களில்
இருந்தும் தப்புவதற்கு முயற்சித்தோம். யுத்தத்தின் போது நான் எனது கணவரை விட்டுப்
பிரிந்தேன். யுத்தத்தின் கடைசி நாள் ஷெல்வீச்சுக்களில் அவர் காயப்பட்டு பின்னர்
இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார் என்பதை பின்னரே தெரிந்துகொண்டேன்.”
அவரது
வாழ்க்கை நிலைமை பயங்கரமானது. “நாங்கள்
கடும் வறுமையில் வாழ்கின்றோம். இப்போது நாங்கள் உறவினர் ஒருவரின் வீட்டில்
வாழ்கின்றோம். சில சமயம் கடும் பசியில் இருப்போம். பணம் இல்லாததால் எனது கணவரை பல
மாதங்களாக போய் பார்க்க முடியாமல் உள்ளது,”
என அவர் கூறினார். கைதிகளை விடுலை செய்ய தமிழ் கட்சிகள் எதுவும்
செய்யாததையிட்டும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு அவர்களின் முயற்சிகள் பற்றியும்
அவர் கோபத்தை வெளிப்படுத்தினார்.
2006ல்
தொழில் ஒன்றைத் தேடி வன்னி சென்றபோது தான் யுத்தத்தில் அகப்பட்டதாக அண்மையில்
விடுதலைபெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கூறினார். புலிகள் அவரை இராணுவப்
பயிற்சி எடுக்குமாறு பலாத்காரப்படுத்தினர்.
“சில
பயிற்சிகளின் பின்னர் அவர்கள் என்னை மோதலுக்கு அனுப்பினர். எனது காலில் பெரும்
காயம் ஏற்பட்டதோடு ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. எனக்கு மூன்று மாதங்களாக
புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டது [புலிகளின்
கட்டுப்பாட்டு பகுதியினுள்]. அப்போது இலங்கை படைகள் ஆஸ்பத்திரி மீது நடத்திய ஷெல்
தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.”
கடைசி
தாக்குதல்களின் போது அவர் இராணுவத்திடம் சரண்டைந்தார்.
“அவர்கள்
என்னை ஜூன் 14 அன்று ஏனையவர்களுடன் சேர்த்து வவுனியாவில் இராமநாதன் முகாமுக்கு
கொண்டு சென்றனர். நான் உண்மையை சொன்னால் இராணுவம் என்னை விடுவித்துவிடும் என
நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னை வெலிகந்த முகாமுக்கு கொண்டு சென்றதோடு அண்மையில்
விடுதலை செய்யப்படும் வரை ஒன்றரை வருடங்களாக என்னை அங்கு வைத்திருந்தனர்.”
“புலிகள்
மக்களின் விடுதலைக்காக போராடுகிறார்கள் என நினைத்து அவர்களுக்கு ஆதரவளித்தோம். அது
ஒரு முதலாளித்துவ அமைப்பு என்பதையிட்டு எமக்கு அபிப்பிராயம் இல்லை. அமெரிக்கா
தமிழர்களுக்கு உதவி செய்யும் என புலிகள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால்
அந்த நம்பிக்கை யதார்த்தமாகவில்லை. உங்களது கருத்துக்கள் எனக்கு புதியவை.
முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஐக்கியப்படுவது நல்லது.
அந்த ஐக்கியம் யுத்தத்தால் சேதப்படுத்தப்பட்டிருந்தாலும் அதை மீண்டும்
கட்டியெழுப்புவது அவசியமாகும்,”
என அவர் குறிப்பிட்டார்.
கால்
நூற்றாண்டுகால யுத்தத்தின் போது, விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்துவைக்க
அனுமதிக்கும் கொடூரமான அவசரகாலச் சட்ட அதிகாரங்கள் மற்றும் பயங்கரவாத தடைச்
சட்டங்களின் கீழ் ஆயிரக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் பாதுகாப்பு படையினரால்
தடுத்து வைக்கப்ட்டார்கள். 30 பெண்கள் உட்பட யுத்தம் முடிவதற்கு முன்னதாக
தடுத்துவைக்கப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக இன்னமும் சிறையில்
உள்ளனர். பலாத்காரமாக பெற்றுக்கொண்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே தன்னை
தடுத்து வைத்திருப்பதற்கான ஒரே சட்ட அடிப்படை என 1997ல் கைதுசெய்ப்பட்ட ஒரு கைதி
கடந்த மாதம் பி.பி.சி. க்குத் தெரிவித்திருந்தார்.
தமிழ்
கைதிகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் திட்டமிடப்பட்டு மீறப்படுவது ஒட்டு
மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு எச்சரிக்கையாகும். ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை
திணிக்கின்ற நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எந்தவொரு எதிர்ப்பையும்
நசுக்க இத்தகைய வழிமுறைகளை பயன்படுத்த தயங்காது. |