World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Social tensions worsen as south of Sudan votes for secession

தெற்கு சூடான் பிரிவினைக்கு வாக்களித்திருக்கையில் சமூக அழுத்தங்கள் மோசமடைகின்றன

By Ann Talbot
7 February 2011

Back to screen version

சூடான் தலைநகரான கார்ட்டுமில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதையடுத்து இந்த வாரம் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹ்லிய பல்கலைக்கழக மாணவரான ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மஹ்மத் அப்துல்ரஹ்மான் பொலிசாரால் தாக்கப்பட்ட பின் ஞாயிறன்று இறந்து போனார்.

தென் கார்ட்டும் அல் கலக்லா மாவட்டத்தில், ஜாக்சன் சதுக்கத்தில் புதிய எதிர்ப்புக்கள் தொடங்கின. மற்றும் செவ்வாயன்று அல் நீலீன் பல்கலைக்கழகத்திலும், வியாழன் அன்று கார்ட்டுமிற்கு தென் மேற்கில் 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னரிலும் நடந்தன. எல் ஒபிட், கொஸ்டி சிறு நகரங்களிலும் மற்றும் கீஸிரா மாநிலத்திலுள்ள பகுதிகளிலும் மற்றய எதிர்ப்புக்கள் நடந்தன என்று தகவல்கள் வந்துள்ளன.

மூன்று முன்பு அறியப்பட்டிராத குழுக்களான “Spark”, “Youth for Change” மற்றும் “We are Fed Up” என்பவற்றால் இந்த எதிர்ப்புக்கள் சமூக இணையத் தளத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடு செய்தவர்கள் இருக்கும் எதிர்க் கட்சிக் குழுக்களுடன் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும், அவை 1989ல் கட்டாய ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி ஒமர் ஹசன் அல் பஷீரின் அரசாங்கத்துடைய கொள்கைகளுக்கு ஒரு நம்பிக்கையான மாற்றீட்டைக் கொடுக்கத் தவறிவிட்டன என்றும் கூறுகின்றன.

“Yourth for Change”, பேஸ்புக்கில் கொடுத்துள்ள அறிக்கை கூறுகிறது: “துனிசியாவில் நம் சகோதரர்கள் நல்ல பணியைச் செய்துள்ளனர். அவ்வாறுதான் எகிப்தில் நம் சகோதரர்களும் செய்துள்ளனர். நாம் செய்ய வேண்டிய நேரமும் இப்பொழுது வந்துள்ளது.”

ஏற்பாடு செய்துள்ளவர்கள், “இது இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான அழைப்பு என்பதைத் தெளிவாக்க விரும்புகிறோம்என்றும் கூறியுள்ளனர்.

அதிகமாகிவிட்ட வாழ்க்கைச் செலவினங்கள், ஊழல், பாகுபாட்டுடன் கூடிய செயல்கள், வேலையின்மை மற்றும் ஆளும் சக்தியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகத்தான்இந்த எதிர்ப்பு என்றும் கூறியுள்ளனர்.

ஆட்சியை எதிர்க்கும் இந்த எதிர்ப்பிற்கு விடையிறுப்பு விரைவாகவும், இரக்கமற்றதாகவும் இருந்தது. பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன. வளாகங்களைச் சுற்றி ஆயுதமேந்திய குழுக்கள் ரோந்து சென்று, மாணவர்களை அடித்துவருகின்றன என்று தகவல்கள் வந்துள்ளன. சீருடை அணியாத பாதுகாப்புப் பிரிவினர் எதிர்ப்பாளர்களை அடையாளம் காட்டமுடியாத கார்களில் ஏற்றிச் சென்றுவிடுகின்றனர். காவலிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் சிலர் மின்சார அதிர்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறை  செய்தி ஊடகத்தை எதிர்ப்புக்கள் பற்றித் தகவல் கொடுப்பதைக் கடினமாக்கியுள்ளது. AFP செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் ஞாயிறன்று எதிர்ப்புக்கள் பற்றித் தகவல் சேகரிப்பவர்களில் கைது செய்யப்பட்ட 10 செய்தியாளர்களில் ஒருவர் ஆவார். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிலர் அல்-மயதன் பத்திரிகையை சேர்ந்தவர்கள், இது சூடானிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தது. அல்-மயதன் பிரதிகள் சில பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அல்-சஹபா மற்றும் அஜ்ரஸ் அல்ஹுரியா ஆகிய செய்தித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு தசாப்தங்களாக நடைபெற்று வரும் அல்-பஷிரின் ஆட்சி எகிப்து மற்றும் வட ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்ப்புக்களைத் தோற்றுவித்துள்ள அதே உலக வழிவகைகளினால்தான் உறுதிக்குலைப்பைக் கண்டுள்ளது. ஆளும் உயரடுக்கு தன்னை சமீபத்திய ஆண்டுகளில் கொடுரமான முறையில் செல்வ கொழிப்பு உடையதாக செய்துகொண்டுள்ளது. வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையேயுள்ள பிளவை பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகப்படுத்தியுள்ளது. சூடானின் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக பஷிரைச் சுற்றியுள்ள தன்னலக்குழுவை அடைகிறது. தெற்கிலுள்ள சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தின் (SPLA) தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை அவர்களுக்கும் ஒரு பங்கைக் கொடுக்கிறது. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வுகள் சமூக பதட்டங்களை உடைந்துவிடும் புள்ளிக்கு கொண்டு வந்துள்ளன.

நாட்டின் தெற்குப் பகுதி அமெரிக்க ஆதரவுடன் பிரிந்து செல்ல இருப்பது சூடானில் பொருளாதார நிலைமைகளின் மீது தீவிர பாதிப்பைக் கொடுத்துள்ளது. வாக்காளர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் சமீபத்திய வாக்குப் பதிவில் பிரிவினைகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஜூலை மாதம் ஒரு புதிய அரசு அமைக்கப்படவுள்ளது.

சூடானின் எண்ணெய் வயல்களில் பெரும்பாலானவை தெற்கு சூடான் என அழைக்கப்படவுள்ள பகுதியில் உள்ளன. கார்ட்டும் அரசாங்கத்தின் வருமானத்தில் பாதி எண்ணெயில் இருந்து வருகிறது. இது விரைவில் வேறு ஒரு நாட்டிற்குச் சென்று விடும். சூடானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் கட்டாயத்திற்கு கார்ட்டும் உட்படுத்தப்பட்டு, ஒரு சிக்கனத் தொகுப்பு நடவடிக்கையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசிற்குச் சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும், சர்க்கரை மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகைகள் குறைக்கப்படும், இறக்குமதிகள் குறைக்கப்படும். இச் சிக்கனத் திட்டம் தான் சமீபத்திய எதிர்ப்புக்களுக்கு ஊக்கம் அளித்துள்ளன.

சூடானின் பொருளாதாரப் பிரச்சினைகள் கார்ட்டும் அரசாங்கத்தை கைகளில் தொப்பியுடன் வாஷிங்டனை இரங்குவதற்கு நாட வைத்துள்ளன. வெளியுறவு மந்திரி அலி கர்ட்டி அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பொருளாதாரத் தடைகளை அகற்றுவது, சூடானைபயங்கரவாத நாடுகள்என்ற பட்டியலில் இருந்து அகற்றுவது ஆகியவை பற்றி விவாதித்தார். துணை வெளிவிவகார செயலர் ஜேம்ஸ் பி. ஸ்டீன்பெர்க் மற்றும் சூடானுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் ஸ்காட் க்ரேஷன் ஆகியோர் இந்த வாரம் கார்ட்டுமுக்கு வந்து இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவிக்க சாலை வரைபடம் தயாரித்தனர். அதில் டார்பர் சமாதானப் பேச்சுக்கள் மற்றும் தெற்குப் பிரிவினை ஆகியவை அடங்கும்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் சூடானைத் தொடர்ந்து வைப்பதற்குக் காரணம் எதையும் நாங்கள் காணவில்லை, அதே போல் பொருளாதாரத் தடைகளையும் தொடர வேண்டிய தேவை இல்லைஎன்று அல்-பஷீரின் ஆலோசகரான சலா கோஷ் கூறினார்.

கோஷ் சூடானின் தேசியப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் தலைவர் ஆவார். கார்ட்டும் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே பகிரங்க மோதல் இருந்தபோதிலும் கூட, அவர் CIA, FBI மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக உழைத்துள்ளார். அமெரிக்கா ஈராக்கிய எழுச்சி பற்றி உளவு பார்ப்பதற்கு அவர் உதவியுள்ளார். மேலும் சூடானிய உளவுத்துறை சோமாலியாவில் CIA உடைய கண்களும் காதுகளுமாகச் செயல்படுகிறது. அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் ஆட்சி மாற்றம் ஒரு உடனடி அச்சுறுத்தல் அல்ல என்று தான் கருதுவதாகத் தெரிவித்தார்.

இப்பகுதியில் இறுக்கமான அரசியல் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதில் அமெரிக்காவும் அல் பஷீர் அரசாங்கமும் பொது அக்கறை கொண்டுள்ளன என்பதை கோஷ் அறிந்துள்ளார். அதேபோல் கீழிருந்து சவால் ஏதும் வராமல் தடுப்பதும் பொது அக்கறை என்பதை உணர்ந்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் பரவிக் கொண்டிருக்கும் எழுச்சி கார்ட்டுமிற்கு வலுவாகப் பேரம் பேசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது என்பது அவரது கணக்கீடாகும்.

SCP எனப்படும் சூடானிய கம்யூனிஸ்ட் கட்சி, PCP எனப்படும் மக்கள் காங்கிரஸ் கட்சி, NUP எனப்படும் தேசிய உம்மாக் கட்சி மற்றும் DUP எனப்படும் ஜனநாயக ஐக்கியக் கட்சி அனைத்துமே மக்கள் எழுச்சி மூலம் பஷிர் அரசாங்கத்தை வீழ்த்தச் சதி செய்கின்றன என்று அவர் கூறுகிறார். உண்மையில் இந்த உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு மூலோபாயம் பற்றி உடன்பாடு காணமுடியாதுள்ளனர். அவற்றுள் பலவும்  ஜூலை மாதம் தெற்கு பிரிந்து சென்றபின் புதிய வடக்கு அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட முடியும். அதன்பின் அவை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை மக்கள் மீது சுமத்த உதவும். ஏற்கனவே மக்கள் இதைப்பற்றி எதிர்ப்பு அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சூடானில் வளர்ச்சி பெற்றுவரும் மக்கள் இயக்கம் உத்தியோகபூர்வ எதிர்த்தரப்பையும் ஒபாமா நிர்வாகத்தைப் போன்றே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. புதிய அமெரிக்க ஆதரவுடைய தெற்கில் வரவிருக்கும் அரசானது பிராந்தியம் முழுவதும் பரவிவரும் எழுச்சியில் இருந்து ஒன்றும் விலக்குப் பெற்றிருக்கப்போவதில்லை. வாக்கெடுப்பு மற்றும் பிரிவினை ஆகியவை இன்னமும் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு வெற்றி என்றே காட்டப்படுகின்றன. ஆனால் வெளிப்பட்டுள்ள எதிர்ப்புக்கள் அமெரிக்கத் திட்டங்களில் குறுக்கீடு செய்யக்கூடும்.

அமெரிக்க காங்கிரசின் வெளியுறவு விவகாரங்கள் குழுவின்  மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஹோவர்ட் பெர்மன், சூடானில் ஒபாமா கொண்டுள்ள அணுகுமுறையைப் பாராட்டியுள்ளார். வாக்கெடுப்பு வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து அவர், “ஜனாதிபதி ஒபாமாவின் கடின உழைப்பின் விளைவுகளையும், அமெரிக்க இராஜதந்திர சிறப்புச் செயற்பாட்டின் விளைவுகளையும் காண உள்ளோம்என்றார்.

இப்படித் தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளுதல் தெற்கு சூடானிலுள்ள இழிந்த நிலைமைகளை மூடி மறைக்கிறது. அப்பகுதி கிட்டத்தட்ட பிரான்சின் அளவைக் கொண்டுள்ளது. ஆனால் 100 கி.மீ. சாலைகள்தான் நன்கு போடப்பட்டுள்ளன. இவற்றுள் பாதி சீனா பொறுப்பிலுள்ள எண்ணெய் வயல்களில் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி இன்னமும் அளவை கூட செய்யப்படாதது ஆகும். ஹெலிகாப்டர் மூலம்தான் அடையப்பட முடியும். எழுத்தறிவற்ற தன்மை எங்கும் படர்ந்துள்ளது. ஆட்சித்துறை ஊழியர்கள் என்று புதிய அரசை நடத்த இருப்பவர்களிடமும் இதே நிலைதான். ஆண்டிற்கு மொத்தமே 500 பெண்கள்தான் ஆரம்ப கல்வியை முடிப்பதாகக் கருதப்படுகிறது.

சூடானின் மத்திய வங்கியின் துணைக் கவர்னரான எலிஜா மலோக் ஆலெங் ஒரு நிதானமான எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார்: “அரசு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே சரிந்து கொண்டிருக்கிறதுஎன்றார் அவர். “…உங்களில் சிலர் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாடு கொள்ளுவீர்கள். நீங்கள் பெரும் சக்தியைக் கொள்ளுவீர்கள். தங்கள் கணக்குகளில் மில்லியன்கள் கொண்டவர்களை நாங்கள் ஏற்கனவே அறிவோம்….துனிசியா, கெய்ரோவில் நடப்பது இங்கும் எளிதில் நடக்கலாம்.”

வறுமையைத் தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை மக்களுக்கு என்றாலும், புதிய அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் காந்த சக்தி போல் உள்ளது. Economist கூறியுள்ளதுபோல், “தெற்கு சூடானில் பெரும் பகுதிகள் வரவேற்கும் வகையில் செழிப்பாக உள்ளன. தானியங்கள், கரும்பு, கோப்பி மற்றும் தேயிலை பயிரிட விவசாயிகளால் முடியும் மற்றும் வெப்ப மண்டலப் பகுதியின் பழவகைகளை தகர அடைப்புகளில் அடைக்கும் தொழிலும் செய்ய முடியும்.”

பரந்த அளவில் தங்கம், பித்தளை, இரும்புத் தாதுப் பொருட்களும், 6.7 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் ஆகியவை இருப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க நிறுவனங்கள் கார்ட்டும் ஆட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் இன்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தெற்கு பிரிந்தவுடன், அவை இந்த வனப்பான வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்பொழுது சீனா தெற்குப்புறமுள்ள எண்ணெய் வயல்கள் மீது ஆதிக்கம் கொண்டுள்ளது. சூடானின் எண்ணெயில் 50 முதல் 60 சதவிகிதம் வரை இறக்குமதி செய்துகொள்கிறது. புதிய அரசு தோற்றுவிக்கப்பட்டவுடன், முந்தைய ஒப்பந்தங்கள் அனைத்தும் மறு உடன்பாட்டிற்கு வரும். அமெரிக்க நிறுவனங்கள் சூடானின் ஆதாரங்களைப் பற்றி எடுக்க முடியும். சீனா பெயரளவிற்கு பிரிவினை வாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுத்தாலும், அது அமெரிக்கப் போட்டியை வரவேற்காது.

இதைத்தவிர, ஜேர்மனிய எஃகு நிறுவனமான Thyssen-Krupp தெற்கத்திய தலைநகரான ஜுபாவிலிருந்து வடக்கு உகண்டாவிலுள்ள குலுவிற்கு இரயில் பாதையை அமைக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளதுஇதன் துணை நிறுவனமான Gleistechnik அமெரிக்க நிறுவனம் Ayr Logistics, ரஷ்ய நிறுவனம் MosMetgrostroy இவற்றுடன் இணைந்த பெரிய இணைப்புடன் தொடர்பு கொண்டுள்ளது. இப்பாதை தெற்கு எண்ணெய் வயல்களுக்கு ஒரு மாற்றீட்டுப் பாதையைக் கொடுக்கும். தெற்கு சூடான் சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட பகுதியாகும். இதன் எண்ணெய் அனைத்தும் இப்பொழுது செங்கடலிலுள்ள சூடான் துறைமுகம் என்னும் வடக்கேயுள்ள பகுதி மூலம் தான் அனுப்பப்படுகின்றன.

மற்றொரு குழாய்த் திட்டம் கட்டமைக்கப்படும் வரை, கார்ட்டும் அதன் ஏகபோக உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும். கோஷின் மெத்தனத்திற்கு ஐயமின்றி இதுவும் ஒரு காரணி ஆகும். ஆனால் வாஷிங்டன் கார்ட்டுமுடன் இன்னும் நட்புறவை வளர்ப்பதற்கு மாறாக இது தவிர்க்க முடியாமல் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே ஒரு மோதலைத் தோற்றுவிக்கக்கூடும். விக்கிலீக்ஸின் தகவல் ஆவணங்கள் அமெரிக்கா SPLA க்கு டாங்குகள் மற்றும் பிற கனரக ஆயுதங்களை அளித்து வருவதாகவும் அவை அந்நாட்டை அமெரிக்கச் சார்புடையதாக இப்பிரந்தியத்தில் மாற்ற உதவும் என்றும் கூறுகின்றன.

ஏற்கனவே ஆயுதமேந்திய மோதல்கள் தொடங்கிவிட்டன. வடக்கு நைல் மாநிலத்தில் மலக்கல் என்னும் சிறு நகரில் பல நாட்கள் மோதல்கள் நடந்தன. அவற்றில் 20 பேர் இறந்து போயினர். இறந்து போனவர்களில் இருவர் குழந்தைகள். குறைந்தபட்சம் 24 பேர் காயமுற்றனர். வடக்குப் பகுதிப் போராளிகள் தங்கள் கனரக ஆயுதங்களைத் தெற்குப் படையினரிடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்டதை அடுத்து இம்மோதல் தோன்றியது. வடக்குப் போராளிகள் தங்கள் கனரக ஆயுதங்களை பின்னால் எல்லைப் பகுதியாக வரக்கூடிய இடங்களுக்கு எடுத்துச் செல்லுகின்றனர். இருதரப்பினரும் புதிய உள்நாட்டுப் போருக்கு ஆயத்தமாகின்றனர்.