WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
கல்நெஞ்சுடன் எகிப்து ஆட்சியை ஒபாமா பாதுகாக்கிறார்
Bill Van Auken
8 February 2011
Use this version to print | Send
feedback
எகிப்தை நோக்கிய ஒபாமா நிர்வாகத்தின்
சிடுமூஞ்சித்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கை
திங்களன்று நியூயோர்க் டைம்ஸ் பத்தியாளரான ரோஸ்
டூதட்டிடம் இருந்து பிரமாதமான பாராட்டைப் பெற்றது.
“யதார்த்தவாதி ஒபாமா” என்கிற தலைப்பிலான டூதட்டின் கட்டுரை
வலதுசாரி விமர்சனப் பார்வையில் ஒபாமாவை வெளிப்படையாய்
பாதுகாத்து எழுதப்பட்டிருந்தது.
“கைதிக் கொள்கை முதல் ஆளில்லா விமானத்
தாக்குதல்கள் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான ஏறக்குறைய ஒவ்வொரு
முனையிலும் ஒபாமா நிர்வாகமானது 9/11க்கு பின் ஜோர்ஜ் புஷ்
பற்றிக் கொண்ட அதிகாரங்களைப் பராமரித்து வருகிறது இன்னும்
விஸ்தரித்தும் கூட வருகிறது” என்று அந்த பத்தி கூறுகிறது.
“சர்வதேச விவகாரங்களை நோக்கிய நிர்வாகத்தின்
ஒட்டுமொத்த அணுகுமுறையும் புஷ் நிர்வாகத்தின் கொண்டலிசா
ரைஸ்-ராபர்ட் கேஸ் கட்டத்தின் தொடர்ச்சியாய் தோன்றுவதாக”க்
குறிப்பிட்ட டூதட் “எகிப்திய நெருக்கடிக்கான ஒபாமாவின்
பதிலிறுப்பு அவரது ஒட்டுமொத்த அயலுறவுக் கொள்கை பார்வையையும்
திண்மைப்படுத்தியிருப்பதாக” ஏற்புடன் சேர்த்துக் கொண்டார்.
ஃபாக்ஸ் நியூஸ் போன்றவர்களிடமிருந்தான
விமர்சனத்தை நிராகரித்த டூதட் கூறினார்: “முபாரக்கை அகற்ற
வேண்டும்,
அதே சமயத்தில் அவரது இராணுவ உதவியாளர்கள் தான்
மேலிடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகத்தின்
உண்மையான இலக்கு என்பது தெளிவாய் இருக்கிறது. ஒபாமாவின் வெள்ளை
மாளிகை தனது பாதையைச் சரியாகத் தொடர முடிந்ததென்றால்,
ஜனநாயகத்திற்கான எந்தத் திறப்பும்,
சிஐஏவின் சித்திரவதைக்காய் கைதிகள்
நாடுகடத்தப்படும் திட்டத்தில் தனது ஒத்துழைப்பிற்காக
அமெரிக்காவில் நன்கு அறியப்பட்ட எகிப்தின் முன்னாள் ஜெனரலும்
உளவுத் துறைத் தலைவருமான ஓமர் சுலைமான் போன்ற ஒரு உள்ளூர் ஆள்
மூலமாகக் கவனத்துடன் அரங்கேற்றம் செய்யப்படுவதாய் இருக்கும்.
இது மென்மையாய் குழைந்து கொண்டிருக்கும் நடவடிக்கையல்ல.
இரும்பு நெஞ்சத்துடன் கையாள்வது.”
இந்த பார்வைகள் கணிசமாய் சரியானவை. இதில் ஒபாமா
நிர்வாகத்தின் கொள்கை என்பது எது?
80 மில்லியன் மக்கள் கொண்ட இந்த பழம்பெரும்
நாட்டில் கெய்ரோ,
அலெக்சாண்ட்ரியா,
சூயஸ் மற்றும் சிறு நகரங்களைப் பற்றியுள்ள
எழுச்சிகள்,
அமெரிக்க கொள்கை மற்றும் நலன்களுடன்
ஒத்திசைவின்றி இருக்கும் ஒரு ஆட்சியைத் தூக்கியெறிவதற்கு
அமெரிக்காவிற்கும் சிறப்புரிமை பெற்ற சமூகத் தட்டுகளுக்கும்
இடையிலான ஒருங்கிணைப்புடன் நிகழ்த்தப்படுகிற வண்ணப் “புரட்சி”
ஒன்றின் பாகம் அல்ல.
இதற்கு நேரெதிராய் எகிப்திய எழுச்சி உழைக்கும்
வர்க்கத்தாலும் அதன் கோரிக்கைகளாலும் (இன்றைய எகிப்தை
குணாதிசயப்படுத்தும் அம்சங்களாய் ஆகியிருக்கும் பெரும்
வேலைவாய்ப்பின்மை,
வியாபகமான வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வின்
அவலட்சண மட்டங்களுக்கு முடிவு கோருபவை) தான் ஆதிக்கம்
செலுத்தப்பட்டு வந்துள்ளது. இது மத்திய கிழக்கில் புவி
மூலோபாயரீதியாக அதிமுக்கியமானதொரு பிராந்தியத்தில்
அமெரிக்காவின் மிகுந்த மதிப்புமிக்க நெடுங்கால ஏவல் அரசுகளில்
ஒன்றை ஆழமாய் ஆட்டம் காணச் செய்துள்ளது.
எகிப்திய நிகழ்வுகள் தொடர்பான விடயத்தில் ஒபாமா
நிர்வாகம் தத்தளிப்பதாய் சில ஊடகங்கள் வருணித்துள்ளன. அதன்
கொள்கை “கலவையான செய்திகளை”க் கொண்டிருப்பதாகவும்
“நடுக்கடலில்” நிற்பது போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளதாகவும் அவை
கூறின.
முபாரக் ஆட்சி ஸ்திரமாய் உள்ளதாய் வெளியுறவுச்
செயலர் ஹிலாரி கிளின்டன் விவரித்தது மற்றும் துணை ஜனாதிபதி ஜோ
பிடேன் சர்வாதிகாரியைப் புகழ்ந்தது ஆகிய நிலையில் இருந்து
நிர்வாகம்,
ஒரு சில நாட்களுக்குப் பின்னர்,
ஆர்ப்பாட்டக்காரர்களின் பக்கம் நிற்பதாக ஒபாமா
அறிவித்தது மற்றும் ஒரு உடனடியான மற்றும் “ஒழுங்குமுறையான
இடைமாற்ற”த்திற்கு அவர் அழைப்பு விடுத்தது (இது ஊடகங்களில்
முபாரக்கின் இராஜினாமாவிற்கான ஒரு அழைப்பாக பரவலாய்
பொருள்விளக்கமளிக்கப்பட்டது) என்கிற நிலைக்குச் சென்றது.
இதனைத் தொடர்ந்து இந்த மாற்றத்திற்கான காலம் “நேற்று” என
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரின் சார்பில்
அறிவிக்கப்பட்டது.
அதன்பின்,
வார இறுதி சமயத்தில்,
பிராங்க் விஸ்னரிடம் இருந்தான பொது அறிக்கை
வெளிவந்தது. கெய்ரோவுக்கான முன்னாள் தூதரான இவர் முபாரக்குடனான
பேச்சுவார்த்தைக்குத் தூதராய் ஒபாமா நிர்வாகத்தால் நியமனம்
செய்யப்பட்டிருந்தார்
மூனிச்சில் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் பேசிய
விஸ்னர் அறிவித்தார்: “வருங்காலத்தை நோக்கிய பாதையை
தீர்மானிக்கையில் ஜனாதிபதி முபாரக் மிக முக்கியமானவராய்
இன்னும் திகழ்ந்து வருகிறார்.” “இந்த மாற்றங்கள் நிகழ்ந்தேறிக்
கொண்டு செல்ல அவர் பதவியில் நீடிப்பது அவசியமாகும்” என்று அவர்
சேர்த்துக் கொண்டார்.
விஸ்னர் தனிப்பட்ட கருத்தைக் கூறியதாகவும் தனது
கருத்துகளுக்கு முதலில் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்புதல்
பெற்றிருக்கவில்லை எனவும் வெளியுறவுத் துறை உடனடியாகப்
பதிலிறுப்பு செய்தது. நிர்வாகம்,
ஜனநாயகம் குறித்த தனது மோசடியான
வாய்ச்சவடால்களுக்குப் பின்னால்,
உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை
வெளிப்படையாகக் கூறக் கூடிய துணிச்சல் விஸ்னருக்கு இருக்க
முடிந்தது என்பதில் வருத்தமுற்ற அதே சமயத்தில்,
எவரொருவரும் அவரது அறிக்கையின் உள்ளடக்கத்தை
மறுக்கவில்லை. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ராபர்ட்
கிப்ஸ் விஸ்னரின் கருத்தைப் பிரதிபலிப்பதற்கு சற்று
நேர்த்தியானதொரு இன்னொரு வழியைக் கண்டார். இந்த பிரச்சினை “ஒரு
நிகழ்முறை பற்றியது தனிநபர் பற்றியது” அல்ல என்று அறிவித்தார்.
மத்திய கிழக்கு முழுவதிலுமான ஒடுக்குமுறை
மற்றும் பிற்போக்கிற்கான ஒரு முக்கியக் கோட்டையாக எகிப்தினைப்
பராமரிக்க உறுதிபூண்ட அமெரிக்க நிதிய உயரடுக்கு மற்றும் அதன்
அரசு எந்திரத்தின் அடிப்படையான நலன்கள் தான் நிர்வாகத்தின்
கூற்றுகளிலான பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் ஒன்றுபடுத்துகிறது.
விஸ்னரை நிர்வாகம் தூதுக்குத் தெரிவு செய்தது
ஒரு தவறு அல்ல. முபாரக் ஆட்சியின் தலைவிதியில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் கொண்டிருக்கும் ஆழமான அக்கறையின் உருவடிவமான
மனிதர் தான் அவர். ஒரு அமெரிக்கத் தூதராக இருந்ததில் இருந்து
பின்,
முபாரக் மற்றும் எகிப்திய ஆட்சியைத் தனது
மதிப்புமிக்க வாடிக்கையாளர்களாய் கருதும் பேட்டான் போக்ஸ் (Patton
Boggs)
என்கிற ஜனநாயகக் கட்சியுடன் இணைப்பு கொண்ட ஒரு தரகு
நிறுவனத்தில் முக்கிய நபராய் அவர் மாறினார்.
வருடந்தோறும் எகிப்திய ஆட்சிக்கு வழங்கப்படும்
1.3 பில்லியன் டாலர் அமெரிக்க இராணுவ உதவியில் எந்த பிசிறும்
ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது என்பது இந்த நிறுவனம்
வழங்கி வரும் சேவைகளில் ஒன்று. இந்த பெருந்தொகைகள் எல்லாம்
நேராக எகிப்தின் இராணுவ மேலிடத்தின் பைகளுக்கோ முபாரக்கின் பல
பில்லியன் டாலர் வங்கிக் கணக்குகளுக்கோ சென்று விடுவதில்லை. 30
ஆண்டுகளுக்கு முன்பாய் முபாரக் ஆட்சிக்கு வந்ததில் இருந்து
அமெரிக்கா வழங்கியுள்ள மொத்த 60 பில்லியன் டாலர் உதவியில் பாதி
அமெரிக்காவின் முக்கிய இராணுவ ஒப்பந்ததாரர்களிடம் தான்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இலாபங்களின் ஒரு கணிசமான
பங்கிற்கு இந்த உதவித் தொகுப்பையே நம்பியுள்ளனர் (இந்த
உதவியின் அளவு இஸ்ரேலுக்கு அடுத்தபடியாய் இரண்டாமிடத்தில்
உள்ளது).
இவ்வாறு,
சென்ற ஆண்டு எகிப்திய விமானப் படைக்கு 20
F-16 போர்
விமானங்கள் வழங்குவதற்கு லாக்ஹீட்-மார்டின் (Lockheed-Martin)
நிறுவனம் 213 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை வென்றது. கூரிய
ஏவுகணைகளை எகிப்துக்கு வழங்க ரேதியான் (Raytheon)
நிறுவனத்திற்கு 26 மில்லியன் டாலர் கிட்டியது. எகிப்திய
இராணுவத்திற்கு அபாச்சி ஹெலிகாப்டர்கள் தயாரிக்க போயிங் சென்ற
ஆண்டில் 22.5 மில்லியன் டாலர்களைப் பெற்றது. அனைவரும் அறிந்த
பெயர்கள் மற்றும் இராணுவ வளாகத்திற்குள் மட்டுமே பரிச்சயமான
பெயர்கள் என இரண்டு வகையிலுமான ஒப்பந்ததாரர்களின் பட்டியல்
இவ்வாறு நீண்டு கொண்டே செல்லும்.
இந்த பெரும் அமெரிக்க நிறுவனங்களின் இலாப விகித
நோக்கங்களின் அதே தன்மை கொண்ட ஒன்று தான் எகிப்தில் ஒபாமா
நிர்வாகத்தின் நோக்கமும். எகிப்திய இராணுவத்தின் செல்வாக்கின்
கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு அடிமை சேவகம்
செய்கிற ஒரு ஆட்சியை அதிகாரத்தில் வைத்திருக்க அது
தீர்மானத்துடன் உள்ளது.
அந்த வகையில்,
அது தன் கவனத்தை,
முபாரக் சமீபத்தில் தனது துணை ஜனாதிபதியாய்
நியமித்த,
வெகுகாலம் இராணுவ உளவுத் துறையின் தலைவராய்
இருந்து வந்த,
ஓமர் சுலைமானை நோக்கி அதிகமாய்
திருப்பியுள்ளது. கிளின்டன் நிர்வாகத்தின் கீழ்
ஆரம்பிக்கப்பட்டு புஷ் நிர்வாகத்தின் கீழ் விஸ்தரிக்கப்பட்ட
“அசாதாரண கைதிகளை நாடுகடத்தும் திட்ட”த்திற்கு ஒரு அனுபவம்
வாய்ந்த சித்திரவதையாளராக தனது சேவைகளை வழங்கி அமெரிக்காவின்
நம்பிக்கையை சுலைமான் சம்பாதித்து வைத்துள்ளார்.
“ஒழுங்குமுறையான மாற்ற”த்திற்கான மாலுமியாக
சுலைமானை நிர்வாகம் ஆதரிக்கிறது என்பதை ஹிலாரி கிளின்டன் வார
இறுதியில் மூனிச்சிற்கான தனது பயணத்தின் போது தெளிவாக்கினார்.
சுலைமானைப் படுகொலை செய்வதற்கு முயற்சி நடந்ததாய் ஒரு அறிக்கை
கூறியிருந்தது பற்றியும் (அது போலியானது என்பது பின்னர்
நிரூபணமானது) சினாயில் ஒரு எண்ணெய்க் குழாய் வெடிகுண்டு
வைத்துத் தகர்க்கப்பட்டதாய் வந்த கூற்றுகள் குறித்தும் அவர்
தனது கவலைகளை வெளியிட்டார். அதாவது அவர் கூற வந்த விடயம்
தெளிவாய் புரிந்தது: எகிப்தின் “ஜனநாயக இடைமாற்ற”த்திற்கு கொலை
மற்றும் சித்திரவதை விடயங்களில் எந்தவித அசூயையும் கொண்டிராத
ஒரு இரகசிய போலிஸ் தலைவரின் வலிமையான கரம் அவசியமாய் உள்ளது.
நியூயோர்க் டைம்ஸில்
புகழப்பட்ட இந்த ’இரும்பு நெஞ்சத்துடனான யதார்த்த அரசியல்’
என்பதன் அர்த்தம் கெய்ரோவிலும் மற்ற எகிப்திய நகரங்களிலும்
இரத்தம் சிந்துவது தவிர்க்கவியலாதது என்பதாகும். ஏனெனில் ஒரு
ஊழலடைந்த ஒடுக்குமுறை ஆட்சியைத் தொடரச் செய்வதற்கான அமெரிக்க
ஆதரவுடனான முயற்சியை தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்த்து
நிற்கின்றனர்.
இத்தகைய கொள்கைகள் டைம்ஸின்
பக்கங்களிலும் மற்றும் பரவலாய் ஊடகங்களிலும் மற்றும் அரசியல்
ஸ்தாபகங்களிலும் வெளிப்படையாகப் பாதுகாத்துப் பேசப்படுகின்றன
என்பது அமெரிக்க அயலுறவுக் கொள்கையின் குற்றவியல் தன்மையையும்
பிற்போக்கான தன்மையையும் பேசுவதுடன் மட்டும் நிற்கவில்லை.
அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள்ளாக ஜனநாயக உரிமைகளுக்கான எந்த
பிரதிநிதித்துவமும் இல்லாதிருப்பதன் அறிகுறியாகும் இது.
வருவாய் பகிர்வை அளப்பதற்குப் பயன்படும் கினி
குணக (Gini
coefficient)
அடிப்படையில் எகிப்தை விடவும் ஏற்றத்தாழ்வு கணிசமாய் அதிகம்
கொண்ட ஒரு நாட்டின் தலைமேல் உட்கார்ந்து கொண்டிருக்கும் வோல்
ஸ்ட்ரீட் பில்லியனர் இராஜாக்கள்,
பரந்த வேலைவாய்ப்பின்மை,
பெருகும் வறுமை,
சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மக்களின்
நலன்களையும் கோரிக்கைகளையும் முழுக்க கண்டும்காணாதிருக்கும்
ஒரு அரசாங்கம் ஆகிய நிலைமைகள் அமெரிக்காவிற்குள்ளும் இதேபோன்ற
எழுச்சிகளைக் கட்டவிழ்த்து விடும் என்கிற அச்சத்தில்,
எகிப்திய தொழிலாளர்களின் பரந்த புரட்சிகர
எழுச்சியை உள்ளுணர்வு உந்தித் தள்ள வெறுக்கின்றனர்.
|