World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama backs bloodbath in Egypt

எகிப்தில் இரத்த ஆறு பாய்வதை ஒபாமா ஆதரிக்கிறார்

Bill Van Auken
3 February 2011

Back to screen version

கெய்ரோவின் தரிர் (விடுதலை) சதுக்கத்திலும் மற்றும் எகிப்தின் மற்ற இடங்களிலும் ஏராளமானோர் உயிரிழக்கவும் ஆயிரக்கணக்கானோர் காயமுறவும் காரணமான அரசு வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கான முழு அரசியல் மற்றும் தார்மீகப் பொறுப்பும் ஒபாமா நிர்வாகத்திற்குரியதாகும்.

ஒபாமாவுக்கும் முபாரக்கிற்கும் இடையே அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையானதாக வர்ணித்த நீளமான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து தான் சீருடை அணியாத இரகசிய போலிசாரின் தலைமையிலான ஆயுதமேந்திய கூட்டத்தினாலும் மற்றும் ஹோஸ்னி முபாரக்கின் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கூலிக்கும்பல்களாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள் நிகழ்ந்தேறின. அடுத்த அக்டோபர் வரை பதவியில் நீடிக்கவிருப்பதான தனது நோக்கத்தை முபாரக் தொலைக்காட்சியில் அறிவித்த உரைக்குப் பின்னர்தான் அந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்திருந்தது.

அதன்பின் தனது தொலைக்காட்சி உரையை வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி எகிப்திய இராணுவத்தைப் புகழ்ந்தார். மாற்றம் நடந்தாக வேண்டும் என்பதை முபாரக் புரிந்துகொண்டதாய் உறுதிபடத் தெரிவித்த ஒபாமா எகிப்தில் ஒரு ஒழுங்குமுறைப்பட்ட வகையிலான மாற்ற த்திற்கு அழைப்பு விடுத்தார். சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த வெகுஜனங்கள் பற்றி கபடநாடகத்துடன் புகழ்ந்துரை பாடிய ஒபாமா அறிவித்தார்: இந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிந்தைய நிலையை நிர்வகிப்பதில் எகிப்திய மக்களுக்கு உதவ அவசியமான உதவியை அளிக்க நாங்கள் தயாராய் உள்ளோம்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆர்ப்பாட்டங்கள் முடிந்து விட்டன. இனி எகிப்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பை அமெரிக்க வெளியுறவுத் துறையிடமும் எகிப்திய இராணுவத்திடமும் விட்டு விட்டு வீதிகளைக் காலி செய்யுங்கள் என்பதே.

ஒபாமா முபாரக்கிடம் சொல்லியதாய் வெள்ளைமாளிகை கூறுவது எதுவாய் இருந்தாலும், எகிப்திய ஜனாதிபதி ஒரு தெளிவான செய்தியைப் பெற்று விட்டார். அது என்னவென்றால் வெகுஜனங்கள் அவரது சலுகையை ஒப்புக் கொள்வதற்கும் தங்களது கிளர்ச்சிகர சவாலை தளர்த்தவும் ஒப்புக்கொள்ள மறுத்தால், தனது இராணுவத்தைக் கொண்டான சர்வாதிகாரத்தை மீட்சி செய்வதற்கும் கெய்ரோ, அலெக்சாண்டிரியா, சூயஸ் மற்றும் எகிப்து முழுவதிலுமான மற்ற மாநகரங்கள் மற்றும் நகரங்களின் வீதிகளில் இருந்து அம்மக்களை விரட்டியடிப்பதற்கு அப்பட்டமான வன்முறையை பயன்படுத்துவதற்கும் அமெரிக்காவிடமிருந்தான பச்சைக் கொடி இவருக்கு காட்டப்பட்டு விட்டது.

அமெரிக்கா பதிலடியை தூண்டிவிடக்கூடும் என்று முபாரக் அஞ்சியிருந்திருப்பாரேயானால் அவரால் கத்தி, கம்பு, ஈட்டி, பெட்ரோல் குண்டுகள் கொண்டும் மற்றும் குதிரை மற்றும் ஒட்டகம் கொண்டும் தாக்குதல் நடத்துவதற்கு ஆயிரக்கணக்கில் கூட போலிசாரையும் குற்றவாளிகளையும் திரட்டியிருக்க முடியாது.

அத்துடன் அவர் பயப்படுவதற்கும் ஒன்றுமிருக்கவில்லை என்பதை இன்றைய சம்பவங்கள் காட்டின. வெள்ளை மாளிகையும் வெளியுறவுத் துறையும் வன்முறைக்கு வருந்தி உத்தியோகப்பூர்வ அறிக்கைகளை (யார் பொறுப்பு என்பதே ஏதோ தெளிவின்றி இருப்பதைப் போல கூறப்பட்டு) வெளியிட்ட அதே நேரத்தில் ஒபாமாவின் ஊடகச் செயலரான ராபர்ட் கிப்ஸ், முபாரக் ஒரு சர்வாதிகாரியா என்கிற கேள்விக்கு பதிலளிக்க குறிப்பாய் மறுத்தார். அத்துடன் எகிப்திய ஆட்சிக்கு வருடாந்திரம் வழங்கப்படும்  நாட்டின் இராணுவ மற்றும் ஒடுக்குமுறைப் படைகளுக்குச் பெரும்பங்கு செல்லும் 2 பில்லியன் டாலர் அமெரிக்க உதவியை  நிறுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்பதையும் அவர் தெளிவாக்கி விட்டார்.

அதேபோல் முபாரக் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்காவிடம் இருந்து எதுவும் கோரப்படவில்லை. ஒபாமா நிர்வாகம் அவர் வெளியேற வேண்டும் என்று விரும்புகிறதா என்கிற கேள்விகளுக்கு அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஜோர்ஜியா உக்ரைன் போன்ற நாடுகளில் அமெரிக்க ஆதரவு ஆட்சிகளை அமர்த்தும் நோக்கத்துடன் பல்வேறு வண்ணப் புரட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டபோது அமெரிக்காவுக்கு இத்தகைய தயக்கம் எதுவும் இருந்திருக்கவில்லை என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டும். ஆயினும் எகிப்திலோ விடயம் முற்றிலும் வேறாய் இருக்கிறது. பல தசாப்த கால ஊழல் மற்றும் அடக்குமுறை ஆகியவற்றுடன் சேர்ந்து பரந்த சமூக ஏற்றத்தாழ்வுகள், ஆழமுறும் வேலைவாய்ப்பின்மை மற்றும் அழுத்தும் வறுமை ஆகியவையும் ஒன்றுசேர்ந்து அரபு உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைக் கூட்டாளியும் மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்க நாட்டத்தின் அச்சாணி என உலகளாவியப் புகழ் பெற்றதுமான ஒரு நாட்டில் வெகுஜனப் புரட்சிகர எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.

வார இறுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரான ஹில்லாரி கிளிண்டன் கூறியது போல, எகிப்திய ஆட்சி அமெரிக்கக் கூட்டாளியாக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் சேவை செய்துள்ளதோடு ஏராளமான சவால்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முயற்சியில் ஒரு முக்கிய சொத்தாகத் திகழ்ந்து வந்துள்ளது. அதன் எதிரிகளைச் சித்திரவதை செய்வதன் மூலமும் கொல்வதன் மூலமும் தான் இந்த ஸ்திரத்தன்மையை செயல்படுத்தவும் இந்த சவால்களை ஒடுக்குவதற்கும் அது முனைந்தது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாயினும் வாஷிங்டனில் இது எந்த மனத்தடுமாற்றங்களையும் தோற்றுவிக்கவில்லை.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் முபாரக்கிற்குள்ள ஆதரவு புதனன்று வெளியான நியூயோர்க் டைம்ஸ் தலையங்கத்தில் ஒரு அருவெருப்பான வெளிப்பாட்டைக் கண்டது. அதில் அமெரிக்காவுக்கான தலையாட்டியை ஒரு பெருமிதமிக்க தேசியவாதி என வருணிக்கப்பட்டிருந்தது.

எகிப்து விடயத்தில் அமெரிக்காவின் கவலை ஒரு உண்மையான ஜனநாயகத்தைக் கொண்டுவருவது தானே அன்றி ஜனநாயகம் என்று அழைக்கப்பட்டுக் கொண்டு ஈரானில் நாம் கண்டது போன்ற ஒன்றிற்கு இட்டுச் செல்லக் கூடிய ஒன்று அல்ல என்று கிளிண்டன் தனது அறிக்கையில் கூறிக் கொண்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு ஜனநாயகத்திற்கான தனித்த தகுதிவகையாக இருப்பது மக்களின் விருப்பம் கிடையாது, மாறாக அமெரிக்க நலன்களுக்கு அடிபணிவது தான்.

ஒபாமா நிர்வாகம் எவ்வாறு இத்தகையதொரு உண்மையான ஜனநாயகத்தை ஊக்குவிக்கிறது? முதலாவதாய், எகிப்திற்கான முன்னாள் தூதர் பிராங்க் விஸ்னரை அந்நாட்டிற்கான தூதுவராகத் தெரிவு செய்தது. என்ரோன் மற்றும் ஏஐஜி (Enron, AIG) ஆகிய இரண்டு நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இடம்பெற்றிருந்த அனுபவம், மிக முக்கியமானதாய், எகிப்துக்கான அமெரிக்க தூதராக இருந்ததில் இருந்து அமெரிக்காவில் முபாரக் மற்றும் அவரது ஆட்சியின் சார்பிலான தரகராய் வேலை செய்பவராக உயர்ந்தது ஆகியவை விஸ்னரின் ஜனநாயக நற்சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ளவை.

இந்த வருட இறுதியில் தேர்தல் நடந்து முடியும் வரை முபாரக் ஜனாதிபதி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது, அதாவது எகிப்தின் சர்வாதிகாரி தனது தொலைக்காட்சி உரையில் உறுதியளித்த அதே அம்சம் தான், ஒபாமாவிடம் இருந்து விஸ்னர் சுமந்து சென்றிருக்கும் செய்தி. எகிப்திய மக்கள் முபாரக்கின் சலுகையை ஏற்றுக் கொள்ள மறுத்தால், அப்போது அவர் அவசியப்படும் வழிகளின் மூலம் தனது அதிகாரத்தை செலுத்துவதற்கு அமெரிக்காவின் ஆதரவு அவருக்கு உண்டு என்கிற செய்தியையும் அநேகமாய் அவர் வழங்கியிருப்பார்.

அதே சமயத்தில் ஒபாமா நிர்வாகம் அமெரிக்கா இராணுவத்தின் மீதும் எகிப்திய இராணுவத் தலைமையுடன் அது கொண்டிருக்கும் உறவுகளின் மீதும் கூடுதலாக சார்ந்துள்ளது. அமெரிக்க படை இணைத் தலைவர்களின் தலைவரான அட்மிரல் மைக் முல்லன், புதனன்று தனது எகிப்திய சகாவுடன் பேசினார். ஒரே வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். அமைதிக்குத் திரும்புவதை உறுதி செய்ய அந்த மூத்த எகிப்திய அதிகாரியிடம் தான் வலியுறுத்தியதாய் அவர் கூறினார். உள்முகமாகவும் சூயஸ் கால்வாய் பகுதி முழுவதிலும் தங்களது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எகிப்திய இராணுவம் திறமைபெற்றுள்ளதில் முல்லன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக பெண்டகன் கூறியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ராபர்ட் கேட்ஸ் செவ்வாயன்று எகிப்திய பாதுகாப்பு அமைச்சரான முகமது உசைன் தந்தாவி உடன் பேசினார் (இதுவும் ஒரே வாரத்தில் இரண்டாவது தடவை). அதே நேரத்தில் ஹில்லாரி கிளிண்டன் நீண்ட காலம் முபாரக்கின் இராணுவ உளவுத் துறைத் தலைவர், சித்திரவதைப் பிரிவுத் தலைவரும், சென்ற வாரம் துணை ஜனாதிபதியாக முபாரக்கால் நியமிக்கப்பட்ட உமர் சுலைமானிடம் பேசுவதும் ஒரேதாக நிகழ்ந்தது.

இந்த விவாதங்கள் எதைச் சுற்றி வருகின்றன? பெண்டகன் எகிப்தினுள் சுமார் 700 ஆட்களைக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் இராணுவத்தால் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் அதற்கு முழுதாய்த் தெரியும். புதனன்று தரிர் சதுக்கத்தை இரகசிய போலிசார் மற்றும் ஆட்சியின் கூலியாட்கள் கொண்ட பெருங் கூட்டத்திற்குத் தாக்குதல் நடத்த திறந்து விட்டு கெய்ரோவில் இராணுவம் ஆற்றியிருக்கக் கூடிய பாத்திரம் கேட்ஸ், முல்லன் மற்றும் இதர அமெரிக்க இராணுவ ஆட்களால் முன்கூட்டித் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.    

எகிப்தில் ஒழுங்குமுறையான மாற்றம் குறித்து அமெரிக்காவில் என்னவிதமான யோசனைகள் இருந்தாலும் அவை ஒட்டுமொத்தமாய், எகிப்திய இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிற அத்துடன் கிளர்ச்சி இயக்கத்தை நொறுக்குகிற அமெரிக்க-ஆதரவுடனான ஒரு ஆட்சியைப் பராமரிப்பதற்கு கீழ்ப்பட்டவையாகவே இருக்கின்றன. வெள்ளை மாளிகையில் நடந்து வரும் அவசரகால தேசியப் பாதுகாப்பு குழு   கூட்டங்களில் பங்கேற்ற ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதைப் போல, அமெரிக்கா வெளிப்படையாகச் சொல்லாதது என்னவென்றால் அது (எகிப்தின்) தளபதிகளுக்குப் பின்னால் தனது பலத்தை நிறுத்துகிறது. அதன் இலக்கு, உள்ளபடியான நிலையைப் பராமரிப்பதற்கு சாதகமாய் நிலைமையைக் கொண்டு வருவது, அதாவது முபாரக் அகன்று விடுவார், மற்றபடி தொடர்ச்சி தான் இருக்கும், மாற்றம் இராது என்பதான நிலை.

இதுதான் கிளிண்டன் உபதேசிக்கும் உண்மையான ஜனநாயகம். எகிப்திய வெகுஜன மக்களின் எழுச்சியை நசுக்குவதன் மூலம் தான் இது சாதிக்கப்பட முடியும். தேர்தல்கள் நடப்பதாய் இருந்தால், அமெரிக்கா தேர்தல்களின் முடிவை நிர்ணயிக்க முடியும் நிலையைக் கொணர்ந்து, எகிப்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமெரிக்க ஆதரவு கைப்பாவை அரசாங்கம் ஒன்றின் வெற்றி உறுதி செய்யப்படுவதான நிலையில் தான் அவை நடத்தப்படும்.

எகிப்திய மக்கள் தங்களது உண்மையான அபிலாசைகளை வாக்குப் பெட்டியில் வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவார்களேயானால் அது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஒரு அடிமையைப் போன்றிருக்கும் நாட்டின் பாத்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.  சென்ற ஆண்டில் பியூ உலகளாவிய மனோநிலைத் திட்டம் (Pew Global Attitudes Project) நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், மக்களில் வெறும் 17 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்க கொள்கை மீது ஆதரவாய் கருத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவை நோக்கிய பெரும் குரோத அளவைப் பதிவு செய்ததில் இது பாகிஸ்தானுக்கு நிகரான அளவாகும். மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமாய் அமெரிக்க ஆதரவுடனான சர்வாதிகாரமும் அமெரிக்காவால் ஆதரவளிக்கப்பட்ட பொருளாதார தடையில்லா வணிகக் கொள்கைகளும் வாழ்க்கைத் தரங்களை அழித்து விட்டிருக்கும் நிலையில் மக்களின் இக்கருத்து அதிகம் ஆச்சரியமளிக்கவில்லை. வன்முறைக்கு ஒபாமா நிர்வாகத்தின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற போதிலும், எகிப்து செல்வதற்கு அது காட்டும் ஒழுங்குமுறையான மாற்றத்திற்கான பாதை இரத்தம்சிந்தல் இல்லாமல் முன்னெடுக்கப்பட முடியாது. இது ஏற்கனவே துவங்கி விட்டிருக்கிறது.

எகிப்தின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்தபட்ட மக்கள் ஆரம்பித்த புரட்சிகரப் போராட்டம் தவிர்க்கவியலாமல், சர்வாதிகாரத்திற்கான பிரதான ஆதரவு அடித்தளமாய் விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு மோதலுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. நடப்பு சொத்து உறவுகளை சோசலிசரீதியில் மாற்றுவது மற்றும் அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவது ஆகியவற்றுக்கான போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த போராட்டத்தில் வெற்றி காணப்பட முடியும்.

எகிப்தின் தொழிலாளர்கள் இத்தகையதொரு போராட்டத்திற்கான ஆதரவை  தேசிய முதலாளித்துவத்தின் சுயபாணி ஜனநாயகவாதிகளிடம் காண முடியாது. மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் அமெரிக்காவின் தொழிலாளர்களிடையேயும் மட்டுமே காண முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் பாதுகாக்கப்படுகிற சர்வதேச சோசலிச முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டுவது தான் மிகவும் அவசரத் தேவையான கடமையாகும்.