World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Egyptian uprising grows despite regime’s reform gestures

எகிப்தில் சீர்திருத்த சைகைகள் காட்டப்பட்டாலும் எழுச்சி பெருகுகிறது

By Barry Grey
1 February 2011

Back to screen version

திங்களன்று பத்தாயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவிலும் மற்ற எகிப்திய நகரங்களிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் இராஜினாமாவைக் கோரியும் அவரது சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் செவ்வாயன்று கெய்ரோவின் தரிர் சதுக்கம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை நோக்கி மில்லியன்கணக்கானோரின் பேரணி ஒன்றுக்கு ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வெகுஜனங்களின் தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதை தரிர் சதுக்கத்தில் இருந்த ஒரு ஆர்ப்பாட்டக்காரரின் குரல் வெளிப்படுத்தியது. “மக்களுக்கு பயம் தொலைந்து போய் விட்டது என்று அந்த மனிதர் கூறியதை கார்டியன் செய்தித்தாள் மேற்கோளிட்டிருதது.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கம் இரயில் பாதைகளை மூடி தலைநகருக்கு வந்துசேரவிடாமல் முட்டுக்கட்டை போட முயன்ற நிலையிலும், நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் செவ்வாய் போராட்டத்திற்கு கெய்ரோவுக்குள் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. நான்காவது நாளாக இணைய சேவையும் சில அலை பேசி சேவைகளும் மூடப்பட்டிருந்தன.

சீர்திருத்தத்திற்கானமுறையான கோரிக்கைகளை வாயடைப்பதற்கு படைவலிமையை பயன்படுத்தப் போவதில்லை என்று இராணுவம் உறுதியளித்திருந்தாலும், அது துருப்புகளையும் டாங்கிகளையும் மிகப் பெரிய அளவில் களமிறக்கியுள்ளது. கெய்ரோவின் மையத்தில் தடையரண்களை அமைத்துள்ளதோடு தரிர் சதுக்கத்திற்கான வழிகளின் மீது கட்டுப்பாட்டை ஸ்தாபித்துள்ளது. அலெக்சாண்ட்ரியாவில், ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைகளுக்கு மேலாக துருப்புகள் உண்மையான துப்பாக்கி ரவைகளைப் பயன்படுத்தி சுட்டன.

அத்துடன் திங்களன்று, அரசாங்கம் அல் ஜசீரா மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அதன் கெய்ரோ அலுவலகம் மூடப்பட்டதோடு அதன் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

முபாரக் ஆட்சி, ஒபாமா நிர்வாகத்தின் நெருக்குதலின் கீழ், சீர்திருத்தத்திற்கும் வெகுஜனப் பொருளாதார மற்றும் அரசியல் துன்பங்களுக்கு பதிலிறுப்பு செய்யவும்  விருப்பமுற்றுள்ளதைப் போலக் காட்டிக் கொள்வதற்கு செய்யும் நடவடிக்கைகளை பெரும்பான்மையான மக்கள் மறுதலித்திருப்பதையே ஏழு நாட்கள் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னரும் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதென்பது காட்டுகிறது. திங்களன்று, புதிதாக துணை ஜனாதிபதியாக நியமிக்கப் பெற்றிருக்கும் முன்னாள் உளவுத் துறைத் தலைவரான ஓமர் சுலைமான், எதிர்க் கட்சிக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த தனக்கு முபாரக் உத்தரவிட்டிருந்ததாக அரசுத் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

சென்ற நவம்பர் மாதத்து பாராளுமன்றத் தேர்தலில் (இத்தேர்தல் ஒரு மோசடியாகவே பரவலாய் கருதப்பட்டது, ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி (NDP) 93 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது) மீறல்கள் நடைபெற்றதாய் அரசியலமைப்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்திருந்த மாவட்டங்களில் புதிய தேர்தல்களுக்கான சாத்தியம் இருப்பதை சுலைமான் அறிவித்தார்.

அதே நாளில், ஒரு புதிய கேபினட்டும் அறிவிக்கப்பட்டது. முந்தைய கேபினட்டில் தப்பியவர்களும் முபாரக் ஆட்சியிலும் தேசிய ஜனநாயகக் கட்சியிலும் நெடுங்காலமாய் இருந்து வருபவர்களும் தான் இந்த கேபினட்டின் பெரும் பகுதியாக இருந்தனர். ஆயினும் ஆட்சிக்கு எதிரான வெகுஜனக் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக சில மாற்றங்களும் இருந்தன.

இதில் குறிப்பிடத்தக்கது வெறுப்பைச் சம்பாதித்திருந்த உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற ஜெனரலான மகமூத் வஜ்தி நியமிக்கப்பட்டது. மிருகத்தனமாய் போலிஸ் படை பயன்படுத்தப்பட்டதன் விளைவாக முபாரக்குடன் சேர்த்து அல் அட்லியும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் குறிப்பான இலக்காயிருந்துள்ளார்.

முந்தைய நிதி அமைச்சரான பெட்ரோஸ் காலியும் நீக்கப்பட்டார். இவர் சென்ற தசாப்தத்தில் எகிப்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பிளவு இன்னும் அதிகரிக்கக் காரணமாய் அமைந்த தனியார்மயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் ஆகிய தாராளச் சந்தைக் கொள்கைகளுடன் தொடர்புபட்டிருந்தார். முற்றுமுதலான வறுமை அளவு 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 16.7 சதவீதத்தில் இருந்து 19.6 சதவீதமாய் அதிகரித்திருந்ததாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அந்த காலகட்டத்தில், கெய்ரோவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் கணிசமான அளவில் பெருகியிருந்தன. செல்வந்தர்கள் நகரின் புறநகர்ப்பகுதிகளில் சுவர் எழுப்பிக் கொண்ட சமுதாயங்களாய் நகர்ந்து விட, வறுமைப்பட்ட மற்றும் வேலையில்லாத தொழிலாளர்களின் பெரும் எண்ணிக்கையிலானோர் சேரிகளில் வாழும்படி விடப்பட்டிருந்தனர்.

இந்த வணிக-ஆதரவுக் கொள்கைகள் முபாரக்கின் மகனான கமால் உடனும் சம்பந்தப்பட்டிருந்தன. இவர் கடந்த வாரத்தில் புரட்சிகர நிகழ்வுகள் தொடங்கும் வரை தனது 82-வயது தந்தைக்குப் பின் ஆட்சியில் அமரவிருந்தவராக இருந்து வந்தார்.

இந்த எழுச்சியின் கீழமைந்த அடிப்படையான வர்க்கப் பிரச்சினைகள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன, அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் பலம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. சூயஸின் ஒரு தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் ஞாயிறன்று வேலைநிறுத்தத்தில் இறங்கியதோடு காலவரையற்ற தேசியப் பொது வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்த செய்தியை சிட்னி மார்னிங் ஹெரால்டு வெளியிட்டிருந்தது.

நியூயோர்க் டைம்ஸ் திங்களன்று ஒரு கவலை தோய்ந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதன் தலைப்புவர்க்கப் போராட்டம் வெடித்ததால் உயரடுக்கினரது பகுதிகள் தாக்கப்பட்டன” (“Elite Areas Attacked as Class War Explodes”). அப்பத்திரிகை எழுதியது: “ ”பின், வெள்ளி இரவு, போலிசார் திடீரென எகிப்தின் முக்கிய நகரங்களில் இருந்து வெளியே வந்து விட்டனர், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பதட்டம் வெடித்தது.”

அந்தக் கட்டுரை மேலும் சொல்லியது: “வெள்ளிக்கிழமை நடந்த சூறையாடல் சம்பவங்களுக்குப் பின் நகருக்கு நெருக்கத்தில் இருந்த புதிய செல்வந்தர்களும் பழைய செல்வந்தக் குடும்பங்களும் வார இறுதிக் காலத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர்.”

அமெரிக்காவும் மற்ற வெளிநாட்டு அரசாங்கங்களும் எகிப்தில் இருந்து தங்களது குடிமக்களை மொத்தம் மொத்தமாய் வெளியே கொண்டுவரத் தொடங்கின. கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைப் பாதுகாக்க பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்கள் கொண்ட கடற்படைப் பிரிவினை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்தது.

வெகுஜன இயக்கத்தை தீவிரவாதமாய்க் காட்டுவதற்கும் அதனை அடக்குவதற்கும் (சென்ற வாரத்தில் போலிஸ் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 138 முதல் 150 வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது, ஆனால் உண்மை எண்ணிக்கை இதனையும் விட அதிகமாய் இருக்கலாம்) செய்யப்பட்ட ஆரம்பகட்ட முயற்சிகளைத் தாண்டி அது அகலப்பட்டும் ஆழப்பட்டும் வரும் நிலையில், எகிப்திய முதலாளித்துவ அரசு புரட்சியால் மூழ்கடிக்கப்படலாம் என்கின்ற கவலை எகிப்திலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்குள் பெருகி வருகிறது.

எகிப்திய அரசைக் காப்பாற்றுவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு ஒபாமா நிர்வாகம் தான் முன்னிலை கொடுக்கிறது. இராணுவத்தின் ஆதிக்கம் இருந்தாலும் குறைந்தபட்சம் ஆரம்ப காலத்திலேனும் சில ஜனநாயக அலங்காரங்களைக் கொண்ட ஒரு புதிய கைப்பாவை அரசாக மாற்றுவது, அதே சமயத்தில் எகிப்திலுள்ள முதலாளித்துவ ஆட்சி சார்ந்திருக்கக் கூடிய இராணுவ மற்றும் பாதுகாப்பு முகமைகளைப் பலப்படுத்துவது என்கிற இரு தட மூலோபாயத்தை ஒபாமா நிர்வாகம் முன்னெடுக்கிறது.

வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவம் அணிதிரட்டப்பட வேண்டியிருப்பதை அமெரிக்காவும் எகிப்திலுள்ள அதன் ஏவலர்களும் ஒரே சமயத்தில் நன்கு புரிந்து கொள்கின்றனர். ஆனால் ஒரு வெற்றிகரமான எதிர்த்தாக்குதலுக்கு சரியான சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதை (வெகுஜனங்களைச் சிதறடித்துக் குழப்புவது மற்றும் துருப்புகளின் சார்புத்தன்மையை உறுதி செய்வது) உறுதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது.

முபாரக்ஒழுங்கான வகையிலும்” “அமைதியாகவும் வெளியேறவும், செப்டம்பரில் திட்டமிடப்பட்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவும் வலியுறுத்துகிற அறிக்கைகள் திங்களன்று உலகெங்கிலுமான உத்தியோகப்பூர்வ ஸ்தலங்களில் இருந்து பாய்ந்து வந்தன. ஐரோப்பிய ஒன்றியமும், தனித்தனியான ஐரோப்பிய அரசாங்கங்களும் மற்றும் அரபு லீக்கும் வெள்ளை மாளிகையை முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றம் முபாரக் இருக்க நடைபெறுமா அல்லது இல்லாமல் நடைபெறுமா என்கிற கேள்வியை திறந்தநிலையில் விட்டு விடும் வகையில்சீர்திருத்தத்திற்கான தங்களது அழைப்புகளின் வார்த்தைகளை அமைத்தன.

ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்தும் அரபு முதலாளித்துவத்திடம் இருந்தும்ஒழுங்கு மற்றும்அமைதிக்கான இந்த அழைப்புகளுடன் சோசலிசப் புரட்சியை எதிர்ப்பதற்கு நம்பக் கூடிய அத்துடன் எகிப்திய முதலாளித்துவ அரசையும் மற்றும் ஏகாதிபத்திய நலன்களையும் பாதுகாக்கின்ற எகிப்துக்குள்ளான எதிர்க்கட்சிகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளும் கைகோர்த்துக் கொண்டன.

எதிர்க்கட்சிகளுக்கும் எகிப்தின் இராணுவத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்குவதற்கான தனது நபராய் அமெரிக்க அரசாங்கம் முகமது எல் எல்பரடெயைய் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அரசிற்கும் உள்ளே கருத்தொருமிப்புக்கு வகைசெய்யும் நம்பகமான ஊதுகுழலாய் எப்போதும் திகழ்ந்து வரும் அமெரிக்க ஊடகங்கள் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இந்த முன்னாள் தலைவரை வெளிப்படையாக ஊக்குவித்து வருகின்றன.

எகிப்திய எதிர்க்கட்சிகள் எல்பரடெயின் பின் ஐக்கியப்பட்டு நிற்பதாக தலைப்புச் செய்திகளை நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இரண்டுமே முதல் பக்கத்தில் வெளியிட்டன. அணுசக்திக் கழகத்தின் தலைவராக இருந்த போது ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் விவகாரத்திலும் ஈரானிய அணு ஆயுதத் திட்டங்கள் விவகாரத்திலும் அமெரிக்காவின் கூற்றுகளுக்கு வழிமொழிய மறுத்து விட்டவர் என்பதால் எல் எல்பரடெய் உடன் அமெரிக்காவுக்கு பேதங்கள் இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் அவர் எகிப்து முதலாளித்துவத்தின் நன்கறிந்த பிரதிநிதி என்பதோடு புரட்சிக்கும் எதிரானவர்.

பிபிசிக்கு திங்களன்று அளித்த நேர்காணல் ஒன்றில், முபாரக் இராஜினாமா செய்துஇராணுவத்தின் ஒத்துழைப்புடனான தேசியத் தீர்வு அரசாங்கம் ஒன்று அந்த இடத்தில் அமர்த்தப்படுவதற்கான தனது அழைப்பை எல் எல்பரடெய் மீண்டும் வலியுறுத்தினார். அமெரிக்காவுடனான எகிப்தின் இராணுவ உறவு மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவு ஆகியவை உள்ளிட்ட முபாரக் சர்வாதிகாரத்தின் அடிப்படையான உள்நாட்டு மற்றும் அயலுறவுக் கொள்கைகளைத் தொடருகின்ற ஒரு இராணுவச் செல்வாக்குடனான அரசாங்கத்திற்கான சூத்திரமாகும் இது.

சென்ற வாரத்தில் முதல் பெரும் ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் தான் வியன்னாவில் உள்ள தனது வீட்டில் இருந்து எகிப்திற்குத் திரும்பியவரான எல் எல்பரடெயை ஆர்ப்பாட்டம் செய்யும் வெகுஜன மக்கள் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர். அவர் செல்வந்தர்களின் பிரதிநிதி என்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமாய் தொடர்புபட்டவர் என்றும் அவருக்குச் சரியான முத்திரையளிக்கின்றனர்.

திங்களன்று வெளிவந்த தகவல்களின் படி, இராணுவத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமையேற்க எல் எல்பரடெயை தேர்வு செய்வதுகுறித்து எதிர்க்கட்சிகளிடையே எந்த உறுதியான ஒற்றுமையும் இல்லை. எல் எல்பரடெயை நிராகரிப்பதற்கு அரபு தேசியவாத கராமா கட்சியை ராய்டர்ஸ் மேற்கோள் காட்டியது. எதிர்க்கட்சிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக எல் எல்பரடெயை ஆக்கும் விடயத்தில் இஸ்லாமிய சகோதரர்களும் (Muslim Brotherhood) பின்வாங்குவதாய் தோன்றுகிறது என்று அது எழுதியது.

இதுநாள் வரை அதன் இஸ்லாமியக் கண்ணோட்டங்களுக்காக அமெரிக்காவால் கண்டிக்கப்பட்டு வந்ததும் ஒரு அரசாங்கவிரோத சக்தியாக முபாரக்கால் கண்டனம் செய்யப்பட்டு வந்ததுமான இந்த இஸ்லாமிய சகோதரர்கள் (Muslim Brotherhood) அமைப்பிற்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தைகளும் நடந்தேறி வருகின்றன. இந்த அமைப்புடன் அமெரிக்கா தொடர்பில் இருந்ததாய் கூறப்படுவதைத் திங்களன்று மறுத்த ஒரு வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஆனால் பேச்சுவார்த்தைகளைத் தொடக்குவதற்கான நிபந்தனைகளின் பட்டியலை வெளியிட்டார். அந்த அமைப்பு சட்டத்தின் படி நடப்பதற்கும், வன்முறையைத் தவிர்ப்பதற்கும், ஒருஜனநாயக நிகழ்முறையின் பாகமாக இருப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கும் உறுதிமொழிகளை அளிக்க வேண்டும் என்றார் அவர்.

அந்த மாலையன்று என்பிசி நைட்லி நியூஸ் நேர்காணல் ஒன்றில் கெய்ரோவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் (Muslim Brotherhood) அமைப்பின் தலைவர் ஒருவர் பேசுகையில், தமது அமைப்பு அமைதிவழியானது, தீவிரவாதவழி செல்லாதது, அத்துடன்அமெரிக்காவுடன் இணைந்து வேலை செய்யக் கூடியது என்று அந்த செய்தியாளரிடம் உறுதியளித்தார்.

தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளிடையேயான அதன் கூட்டாளிகளுக்கும் ஒபாமா நிர்வாகத்திடமோ அல்லது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் எந்த பிரிவிடமுமோ (அதன் ஜனநாயகக் கன்னைகளாகக் கூறப்படுபவை உட்பட) எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை என்பது அதிமுக்கிய அம்சமாகும். ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கும் மற்றும் சோசலிசத்திற்குமான புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே வேலைகளுக்கான, ஜனநாயக உரிமைகளுக்கான மற்றும் சமத்துவத்திற்கான வெகுஜன இயக்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியும்.