WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் : மத்திய
கிழக்கு :
ஈராக்
ஈராக் குறுங்குழுவாதப் போரை நோக்கிச் செல்கிறது
By James Cogan
22 December 2011
use this version to print | Send
feedback
அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பானது ஈராக்கிற்கு
ஜனநாயகத்தை அளித்துள்ளது என்று கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம்
கூறியவை ஞாயிறன்று கடைசி அமெரிக்கத் துருப்புக்கள் நாட்டை
விட்டுவிலகுமுன் சிதைந்துபோனது.
உத்தியோகபூர்வ படைகள் திரும்பப்பெறல் நடந்து
நான்கு தினங்களுக்குள், நாட்டின் அரசாங்கத்திற்குள்
எப்பொழுதும் அழுத்தம் நிறைந்திருந்த ஷியைட்-சுன்னி பிளவுகளின்
உறவுகள் குறுங்குழுவாதம் மற்றும் புவியியில்சார் வழிகளில்
வெளிப்படையாக முறிந்துபோனதுடன், அண்டைய அரசுகளை ஈர்த்தல்
அல்லது அமெரிக்கப் படைகள் திரும்பவருவதை நியாயப்படுத்த
பயன்படுத்தக்கூடிய உள்நாட்டுப் போர் ஒன்று மூள்வதற்கான
வாய்ப்பையும் உருவாக்கியது.
பாராளுமன்றத்தில் மேலாதிக்கம் செலுத்தும்
ஷியைட் கட்சிகளின் கூட்டணி ஒன்றின் தலைவரான பிரதம மந்திரி நூரி
அல்-மாலிகி, சுன்னியைத் தளமாகக் கொண்ட ஈராக்கியா கூட்டமைப்பு (Iraqiya alliance)
கட்சிகளால் சர்வாதிகாரத்தை நிறுவ
முயற்சிக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டார். கடந்த
வெள்ளியன்று, ஈராக்கியாவின் ஷியைட் பெரும்பான்மை பாராளுமன்ற
உறுப்பினர்கள் சுன்னி துணைப் பிரதமர் சலே முட்லக்கிற்கு எதிராக
மாலிகி அவர்
“ஒரு
சர்வாதிகாரி”
என முத்திரையிட்டார் எனக் கூறி நம்பிகையில்லாத்
தீர்மானம் கொண்டுவந்தபின் மன்றத்தை புறக்கணித்தனர். ஞாயிறன்று
மாலிக்கின் கட்டுப்பாட்டின் கீழுள்ள உளவுத்துறைப் பிரிவுகள்
சுன்னி துணை ஜனாதிபதி தரிக் அல்-ஹஷேமி அமர்ந்திருந்த
விமானத்தில் ஏறி அவருடைய மெய்க்காவலர்கள் ஏழு பேரை பயங்கரவாதக்
குற்றங்களின் கீழ் இழுத்துச் சென்றனர்.
திங்களன்று ஹஷேமிக்கு எதிராகவே ஒரு கைது ஆணை
பிறப்பிக்கப்பட்டது; மாலிகியைப் படுகொலை செய்யும் முயற்சி
என்று குற்றம் சாட்டப்படுவது உட்பட பல தொடர்ச்சியான குண்டுத்
தாக்குதல்களின் பின்னணியில் அவர் இருந்தார் எனக் கூறப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட அவருடைய மெய்க்காவலர்களில் மூன்று பேர்
நேரடித் தொலைக்காட்சியில் காட்டப்பட்டனர்; ஹஷேமியின்
உத்தரவின்பேரில் பயங்கரவாத நடவடிக்கைகளை செயல்படுத்தியதை
அவர்கள் ஒப்புக்கொண்டனர் எனக் காட்டப்பட்டது. ஈராக்கின் மூன்று
வட மாநிலங்களில் ஒன்றான தன்னாட்சி கொண்ட குர்திஷ்ப் பகுதியில்
ஹஷேமி தஞ்சம் நாடியுள்ளார்; அங்கு அதிகாரிகள் அவர்
கைதுசெய்யப்பட்டு பாக்தாத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்னும்
நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டனர்.
இதன் விளைவு தேசிய தேர்தல்களை அடுத்து டிசம்பர்
2010ல் தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்று அமெரிக்க அழுத்தத்தினால்
நிறுவப்பட்ட அரசாங்கம் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர்
உண்மையாகச் சரிந்துபோய்விட்டது. மாலிகி பிரதம மந்திரிப்
பதவியைத் தக்க வைத்துக் கொண்டார், ஆனால் மூன்று முக்கிய
ஷியைட், சுன்னி மற்றும் குர்திஷ் முகாம்கள் ஒவ்வொன்றும்
அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் என்னும் முறையில் அரசாங்க
அமைச்சரகத்தைப் பெற்றன. ஹஷேமிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டபின், சுன்னி மந்திரிகள் இனித் தங்கள் கடமையை
செய்யமாட்டார்கள் என்று ஈராக்கியா கூட்டமைப்பு அறிவித்தது.
ஹஷேமிக்கு எதிரான நடவடிக்கை கடந்த சில
மாதங்களில் சதாம் ஹுசைனின் பாத் கட்சியிலிருந்த முன்னாள்
நூற்றுக்கணக்கான முக்கிய முன்னாள் சுன்னி உறுப்பினர்களை
அரசாங்கத்தை அகற்றத் திட்டமிடுகின்றனர் என்ற
குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டதை அடுத்து வந்துள்ளது.
கடாபி ஆட்சியானது அமெரிக்கப் படைகள் நீங்கியதும் ஒரு சுன்னி
எழுச்சி ஏற்படுவதற்கு ஆதரவு கொடுத்தனர் என்ற தகவல் அமெரிக்க
சார்புடைய முன்னாள் லிபிய இடைக்காலத் தலைவர் மஹ்முத்
ஜிப்ரியிடம் இருந்து கிடைத்ததாக மாலிக் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாயன்று ராய்ட்டர்ஸுக்குக் கொடுத்த பேட்டி
ஒன்றில், அலைபோன்ற கைதுகளைக் கண்டித்தும், தொலைக்காட்சியில்
வந்த ஒப்புதல் வாக்குமூலங்கள்
“தயாரிக்கப்பட்டவை”
என முத்திரையிட்டும், மாலிகியை ஹுசைனுடன்
ஒப்பிட்டு, உட்குறிப்பாக உள்நாட்டுப்போரைத் தடுப்பதற்கு
வெளித்தலையீட்டிற்கு ஈராக்கியாவின் தலைவர் அயத் அல்லாவி
முறையிட்டார்.
“இத்தகைய
சர்வாதிகார ஆளும் வழிகளால் சர்வாதிகாரம் மீண்டும்
வந்துவிடக்கூடும் என நாங்கள் அஞ்சுகிறோம்”
என்றார் அல்லாவி.
“எல்லா
சிவப்புக் கோடுகளையும் மாலிகி கடந்து விட்டார், ஈராக்
இப்பொழுது மிக, மிகத் தீவிர, மிகக் கடின நிலையை
எதிர்கொள்ளுகிறது... ஈராக்கிய மக்கள் அரசியல் வழிவகையில்
நம்பிக்கையை இழந்து, குறும்குழுவாதம் வெற்றிபெற்றுவிடுமோ
என்பதுதான் என்னுடைய அச்சம். சர்வதேச சமூகமும் பிராந்தியமும்
தலையிட்டு நல்லுணர்வு ஏற்படவில்லை என்றால், ஈராக் ஒரு பெரிய
மோதலை நோக்கிச் செல்லுகிறது.”
குர்திஷ் தலைவர் மசுத் பர்ஜானி நிலைமையை
“ஒரு
ஆழ்ந்த நெருக்கடி”
என்று அறிவித்தார். ஷியைட் மற்றும் சுன்னி முகாம்களையும்
சமாதானப்படுத்தும் முறையில் அவர்,
“நாம்
பயங்கரவாத இயக்கத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது,
பொறுத்துக் கொள்ளவும் கூடாது; ஆனால் அதே நேரத்தில்
பாதுகாப்புப் படைகள் அரசியல் நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தப்படக்கூடாது”
என்று கூறினார்.
இத்தகைய சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள் என்னும்
பனிமூட்டத்திற்கு இடையே, இன்னும் அடிப்படையான பிரச்சினைகள்தான்
எழுச்சிபெறும் அழுத்தங்களில் உள்ளன.
வெற்றுத்தன ஈராக்கிய உயரடுக்கின் ஒவ்வொரு
பிரிவும் அமெரிக்க ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்து அதையொட்டி
விளைந்துள்ள சமூகப் பேரழிவிற்குப் பொறுப்பைக் கொண்டது ஆகும்.
இவைகள் இந்த ஆண்டு மத்திய கிழக்கு முழுவதும் வெளிப்பட்டுள்ள
இயக்கங்களுக்கு ஒப்பான மக்கள் எதிர்ப்பு வெடித்து
எழுந்துவிடுமோ என்று அஞ்சுகின்றன. ஈராக்கின் மேற்கு எல்லையில்
உள்ள சிரியாவில் அசாத் ஆட்சிக்கு எதிரான எழுச்சி மிகப் பெரும்
கவலைகளைத் தூண்டிவருகிறது. மில்லியன் கணக்கான
பெருந்திகைப்பிலுள்ள, வறிய, ஒடுக்கப்பட்டுள்ள ஈராக்கியத்
தொழிலாளர்களும் நகர்ப்புற வறியவர்களும், சிரியாவிலுள்ள ஒரு
மில்லியன் ஈராக்கிய அகதிகள் உட்பட, நிகழ்வுகளினால்
அரசியமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆளும் உயரடுக்குகளினால் சமூக அதிருப்தியைப்
பிற்போக்குத்தன திசைகளில் திருப்புவதற்கு குறுங்குழுவாதம்
பயன்படுத்தப்படுகிறது.
Anbar, Nineveh, Salahaddin
மற்றும்
Diyala
என்னும் முக்கிய சுன்னி மாநிலங்களில், உள்ளுர்
அமைப்புக்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து குர்திஷ் பிராந்தியம்
அனுபவிக்கும் அதே தன்னாட்சியைக் கோருகின்றன; பிந்தைய பகுதி தன்
பாதுகாப்புப் படைகள், வரவு-செலவுத் திட்டம் மற்றும்
வெளியுறவுகளில் தானே கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. கடந்த வாரம்
தியாலா மாநில அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தன்னை சுயாட்சிப்
பிரிவு என அறிவித்துக்கொண்டது; ஷியைட் ஆதிக்கத்திலுள்ள
பாக்தாத் அரசாங்கம் தனது பணிகளுக்கும் மறுகட்டமைப்பிற்கும்
போதிய நிதியளிக்காததால் இம்முடிவு என்றும் கூறியது.
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுதம்
தாங்கிய எதிர்ப்புக் காலத்தில், சுன்னிப் பகுதிகளில் தளம்
கொண்டிருந்த பல எழுச்சி அமைப்புக்களால் தன்னாட்சி
எதிர்க்கப்பட்டது. நடைமுறையில் நாட்டைப் பிரிவினை செய்தல்
என்பது இப்பொழுது சுன்னி உயரடுக்கினால் மக்கள்மீது
கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் வழிவகையாகக்
காணப்படுகிறது; இது பாக்தாத்திற்கு தேசிய எண்ணெய் வருமானத்தின்
மீது கூடுதல் பங்கைக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கும்
மற்றும் அண்டை நாடுகளுடன் தங்கள் உறவுகளைப் பிணைத்துக்
கொள்ளவும் உதவும். சுன்னித் தீவிரவாதிகள் மாலிகி அரசாங்கத்தை
ஈரானிலுள்ள ஷியையிட்டைத்தளமாகக் கொண்ட ஆட்சியின் கைப்பாவை எனக்
கண்டிக்கின்றனர்; சௌதி அரேபியா, ஜோர்டான் மற்றும் பிற அரபு
நாடுகளுடன் நெருக்கமான உறவுகள் தேவை என அழைப்புக்
கொடுக்கின்றனர்.
தங்கள் பங்கிற்கு மாலிகியும் மற்ற ஷியைட்
கட்சிகளும் பெரும்பான்மை மக்கள் கொண்ட ஷியைட்டினரிடையே
அமெரிக்கப் படைகள் விலகிவிட்டது மீண்டும் ஷியைட் எதிர்ப்புச்
சர்வாதிகாரத்தை, ஹுசைனுடையதைப்போல் மறுபடியும் நிறுவ வேண்டும்
என்னும் சுன்னிச் சதித்திட்டம் ஒன்றுடன் வந்துள்ளது என்ற
அச்சத்தைத் தூண்டியுள்ளன. சுன்னிப் பகுதிகளில் தன்னாட்சிக்கான
அழைப்புக்கள் அமெரிக்க உந்துதல் பெற்ற ஈரான் மற்றும் அதன்
பிராந்திய நட்பு அமைப்பு சிரிய பஷார் அசாத் ஆட்சிக்கு எதிரான
பிரச்சாரத்தின் பின்னணியில் நடைபெறுகின்றன.
அசாத் அரசாங்க எதிர்ப்புக்களை அடக்குவது
குறித்த பிராந்தியக் கண்டனங்களுக்கு ஆதரவைக் கொடுக்க மாலிகி
குறிப்பாக மறுத்துள்ளார். அசாத் அரசாங்கம் சரிந்தால், அதற்குப்
பதிலாக இன்னும் கடுமையான ஈரானிய ஆட்சி விரோத அமைப்பு வரும்,
அதற்கு துருக்கி மற்றும் சௌதி அரேபியாவின் ஆதரவு இருக்கும்,
அது குறுங்குழுவாத சுன்னி இயக்கங்களின் தளத்தைக் கொள்ளும்;
அவைகளோ மேற்கு ஈராக்கிலுள்ள சுன்னிக் கட்சிகள் மற்றும்
பழங்குடி மக்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்கின்றன.
பிரிட்டனின் கார்டியனில் டிசம்பர் 20
திகதி வந்துள்ள கட்டுரை ஒன்று சிரிய எல்லையை ஒட்டிய
Anbar
மாநிலத்திலுள்ள பெரும் துலைமி பழங்குடித் தலைவர் அலி ஹடெம்
சுலைமானை மேற்கோளிட்டுள்ளது. அவர் மாலிகி அரசாங்கத்திற்கு
எதிராக
“மக்கள்
போருக்குத் தயாரிப்புக்களைக் கொண்டுள்ளனர்”
என்று எச்சரித்தார்; மேலும் ஈராக்கி சுன்னிப் போராளிகள்
சிரியாவிற்குள் நுழையக்கூடும், அசாத்-எதிர்ப்பு இயக்கத்திற்கு
உதவக்கூடும் என்றும் ஒப்புக் கொண்டார்.
“அசாத்
போய்விட்டால், குறைந்தப்பட்சம் எங்களுடைய முதுகுகள்
பாதுகாப்பாக, குறிப்பாக
Anbar
மாநிலத்திலிருக்கும்... இது அரபு
பேர்சியனுக்கு
(ஈரானுக்கு) எதிராக என்பதாகும்”
என்று அப்பட்டமாகக் கூறினார்.
குறுங்குழுவாதப் போர் ஆபத்து என்பது கணிசமாக
உள்ளது. தியாலாவில் ஷியைட் போராளிகள், மொக்டடா அல்-சதருக்கு
விசுவாசம் காட்டுபவர்கள், தன்னாட்சி அறிவித்தலுக்கு எதிரான
ஆர்ப்பாட்டங்களை எதிர்த்துச் சாலைகளைத் தடுப்பிற்கு
உட்படுத்தினர். பாக்தாத்தில் ஈராக்கிய இராணுவத்திலுள்ள ஷியைட்
துருப்புக்கள் அதிக சுன்னி மக்கள் உள்ள புறநகர்ப்பகுதிகளில்
முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு வெளியே
நிறுத்தப்பட்டுள்ளன.
எல்லாப் பின்னணியிலுள்ள குடிமக்களும் குருதி
கொட்டும் புதிய சூழல் என்னும் அச்சம் குறித்துப் பெருகிய
முறையில் கவலைப்பட்டுக் கொண்டு வாழ்கின்றனர். அமெரிக்க
ஆக்கிரமிப்பு வேண்டுமென்றே தூண்டிவிட்ட குறுங்குழுவாத வன்முறை
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்தது; குறிப்பாக 2006
க்கும் 2008க்கும் இடையே; கிட்டத்தட்ட 4.7 மில்லியன் என
மதிப்பிடப்பட்டுள்ள ஈராக்கியர்களை அவர்களுடைய வீடுகளில்
இருந்து வெளியேற்றியது.
ஈராக்கிய போக்குகள் வாஷிங்டனால் தீவிரமாகக்
கவனிக்கப்படுகின்றன. அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பிடென்,
மாலிகி மற்றும் ஈராக்கிய பாராளுமன்றத்தின் தலைவரிடம்
தொலைபேசியில் செவ்வாயன்று பேசியதாகக் கூறப்படுகிறது.
“அனைத்து
பிரிவுத் தலைவர்களும் தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க ஒன்றாகக்
கூடிப் பேச வேண்டும் என்று”
அழுத்தம் கொடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
ஒரு குறுங்குழுவாதத்தைக் கொண்ட உள்நாட்டுப்போர் வெடித்தால்,
குவைத், பஹ்ரைன் மற்றும் பிற வளைகுடா நாடுகளில்
நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத்
துருப்புக்கள் மீண்டும் ஈராக்கிற்கு அமெரிக்க மூலோபாய,
பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கு அனுப்பி வைக்கப்படலாம்.
|