World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Christmas of crisis in America

அமெரிக்காவில் நெருக்கடி கிறிஸ்துமஸ்

Patrick Martin
23 December 2011
Back to screen version

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் 2011 ஆனது ஒருபுறம் வெகுஜன வறுமைச் சமூகத்தையும் மறுபுறம் பரந்த செல்வக் குவிப்பு கொண்ட சமூகத்தையும் காண்கிறதுபல்லாயிரக்கணக்கான மில்லியன் மக்கள் வறுமையுடனும் நம்பிக்கையின்மையுடனும் வாழ்கின்றனர், அதே நேரத்தில் ஒரு சில செல்வந்தர்கள் எகிப்திய பாரோக்களோ அல்லது பதினான்காம் லூயி காலத்திய பிரபுத்துவமே கனவிலும் நினைக்கமுடியாத செல்வங்களை அனுபவிக்கின்றனர்.

அரசாங்க நிறுவனங்களும் சமூக சேவைக் குழுக்களும் மனத்தைப் பெருகிய முறையில் அதிர்ச்சியில் ஆழ்த்தும் அலையெனப் பெருகியுள்ள மனிதத் தேவைகள் குறித்த புள்ளிவிபரங்களை ஆவணப்படுத்தியுள்ளன: 50 மில்லியன் அமெரிக்கர்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக்கீழே வாழ்கின்றனர், அதே நேரத்தில் 100 மில்லியன் மக்கள் கிட்டத்தட்ட வறுமை நிலையில் உள்ளனர், மிக வறிய நிலை என்ற ஒரு துரதிருஷ்ட ஆதரவின்மைக்கு அப்பால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாத வருமானத்தில் திணறுகின்றனர்.

கிட்டத்தட்ட 25 மில்லியன் தொழிலாளர்கள் வேலையற்று இருக்கின்றனர், அல்லது தகுதிக்கு மிகக் குறைந்த வேலைகளில் உள்ளனர்; சுகாதாரக் காப்பீடு அற்ற நிலையில் உள்ளனர்; ஏழு அமெரிக்கர்களில் ஒருவர் உணவுத் திட்டத்தின் கீழ் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுய-வேலை பார்க்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 2 மில்லியன்களாக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 6 மில்லியன் வேலையற்றோர் ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

வேலைகள் தொடர்பான நெருக்கடி நிலையாக மோசமாகிவிட்டது; ஒவ்வொரு ஆண்டில் என்று மட்டும் இல்லாமல், ஒவ்வொரு தசாப்தமும் தொடர்ந்த நிலையில். அமெரிக்க முதலாளித்துவம் என்றுமில்லாத அளவிற்கு பெருநிறுவன இலாபங்களையும் செல்வத்தையும் பெரும் செல்வந்தர்களுக்குத் தொடர்ந்து அளித்துவருகிறது, ஆனால் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதில் மிகவும் தகுதி குறைந்த நிலையில் உள்ளது.

மக்கின்சே ஆலோசனையளிக்கும் நிறுவனம் அளித்துள்ள ஆய்வு ஒன்றின்படி, அமெரிக்கப் பொருளாதாரம் 1982 மந்த நிலைக்குப் பின், மீண்டும் மந்த நிலைக்கு முன்பு இருந்த வேலை மட்டங்களுக்குத் திரும்புவதற்கு ஆறு மாதங்கள் பிடித்தது. 1991 மந்தநிலைக்குப் பின், வேலைகள் மீட்பிற்கு 15 மாதங்கள் தேவைப்பட்டன. 2001 மந்தநிலைக்குப்பின் அதற்கு 39 மாதங்கள் ஆயின.

தொழிலாளர் சந்தையில் தற்போதைய சரிவு தொடங்கி ஏற்கனவே கிட்டத்தட்ட 48 மாதங்கள் ஆகிவிட்டன; டிசம்பர் 2007ல்  இருந்ததைவிட 6 மில்லியன் குறைவான மக்களே வேலையில் உள்ளனர். தொடக்கத்தில் மக்கின்சே 2007 வேலை மட்டங்களை மீண்டும் அடைவதற்கு 60 மாதங்கள் ஆகும் என்று கணித்திருந்தது. ஆனால் தற்பொழுதுள்ள வேலைத் தோற்றுவிப்பு மட்டத்தில், குறைந்தபட்சம் 78 மாதங்களாவது, மந்தநிலை தொடங்கியபோது இருந்த 146 மில்லியன் தொழிலாளர்கள் வேலையில் உள்ளனர் என்ற நிலையை அடைவதற்கு ஏற்படும் அதுகூட பொருளாதாரச் சரிவில் இன்னும் ஆழ்ந்த குறைப்புக்கள் ஏற்படவில்லை என்று வைத்துக் கொண்டால்.

இப்படி நீடித்திருக்கும் வெகுஜன வேலையின்மையானது இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் வருங்காலத்தை இருண்டதாகச் செய்யும் சமூக நெருக்கடி ஒன்றிற்கு உந்துதல் சக்தியாகிறது. நான்கு அமெரிக்கக் குழந்தைகளில் ஒன்று உணவுத் திட்டத்தை நம்பியுள்ளது. கிட்டத்தட்ட 1.6 மில்லியன் குழந்தைகள் இந்த ஆண்டு ஏதேனும் ஒரு கட்டத்தில் வீடற்றவர்களாக இருந்தனர். 18 முதல் 24 வயது வரையிலான இளம் தொழிலாளர்களுக்கு வேலையின்மை விகிதங்கள் மந்தநிலை அளவான 20 சதவிகிதத்தையும்விட அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து 25 முதல் 34 வயது வரை இருக்கும் அமெரிக்க ஆண்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இப்பொழுது தங்கள் பெற்றோர்களுடன் வசிக்கின்றனர்.

இதற்கிடையில் தங்கள் வேலைவாழ்வுக்காலத்தின் இறுதியில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை என்று தொழிலாளர் நல ஆராய்ச்சி மையம் (Employee Benefit Research Institute) கூறுகிறது. அனைத்து அமெரிக்கத் தொழிலாளர்களில் 46 சதவிகிதத்தினர் ஓய்வுக்காலத்திற்காக 10,000 டொலருக்கும் குறைவாக சேமித்துள்ளனர், அனைத்துத் தொழிலாளர்களில் 29 சதவிகிதத்தினர் ஓய்வுக்காலத்திற்காக 1,000 டொலருக்கும் குறைவாகத்தான் சேமித்துள்ளனர்.

நான்கு மில்லியன் அமெரிக்கக் குடும்பங்கள் துணை அடைமானக் கடன் நெருக்கடி 2007ல் முதலில் வெடித்தபின், தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 12 மில்லியன் குடும்பங்கள் நிதி வகையில் பேசும்போது நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் உள்ளனர்அடைமானக் கடன் சரிந்துவிட்ட வீடுகள் சந்தையில் வீடுகளின் மதிப்பைவிட அதிகமாகி விட்ட நிலையில்.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் என்று வேறுபாடு இல்லாமல் முழு அரசியல் ஸ்தாபனமும் மக்களின் துயரங்களுக்கு இரக்கமற்ற முறையில் பொருட்படுத்தா நிலையில் உள்ளது. ஒரே ஆளும் உயரடுக்கின் வெவ்வேறு பிரிவுகளுக்காகத்தான் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர்.

அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அடிப்படைச் சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இடருற்று இருக்கையில், நிதியப் பிரபுத்துவம் வேறு ஒரு உலகில் வாழ்கிறது. ஒரு சமீபத்திய உதாரணம் இது குறித்து நன்கு விளக்குகிறது.

இந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸ்  கொடுத்துள்ள தகவல்படி, இப்பிரபுத்துவத்தின் பட்டய உறுப்பினரான முன்னாள் சிட்டிக்குரூப் தலைவர் சாண்டி வீல் மான்ஹட்டிலுள்ள அவருடைய பென்ட்ஹௌஸ் வீட்டை இப்பொழுது 88 மில்லியன் டொலருக்கு விற்றுள்ளார். இதை வாங்கியவர் 22 வயதான எக்டெரினா ரைபோலோவ்லேவா ஆவார் இவர், முன்னாள் சோவியத் உரத்தொழில்துறையில் ஒரு முதலாளியான ரஷ்ய நிதியத் தன்னலக்குழுவின் டிமிட்ரி ரைபோலோவ்லேவ் உடைய மகள் ஆவார்.

இத்தகைய மிகப் பெரிய பணத்தை ஒரு தனிநபர் வீட்டிற்கு சூறையாடுவது என்பது இயல்பாகவே சீற்றத்தையும் வெறுப்புணர்வையும்தான் தூண்டுகிறது. 88 மில்லியன் டொலர்கள் 15 சென்ட்ரல் பார்க் மேற்கில் ஒரு பென்ட்ஹௌஸிற்காக செலவிடப்படுகிறது என்பது நகர்ப்புற போக்குவரத்து அமைப்பின் ஆண்டிற்கான செலவுப் பற்றாக்குறை முழுவதையும் காட்டிலும் அதிகம் ஆகும் ($68 மில்லியன்). அல்லது டெட்ரோயின் நகரின் ஆண்டு வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையையும் விட அதிகம் ஆகும் ($58 மில்லியன்). நியூ யோர்க் நகரப் பள்ளிகளில் ஒரு முழு ஆண்டிற்கான இலவசப் பள்ளி பகல் உணவுகளின் செலவை இது கிட்டத்தட்ட நெருங்குகிறது.

ஒரு நேரடிக் கணக்கின்படி, 88 மில்லியன் டொலர்கள் என்பது சராசரி அமெரிக்க ஆண்டு ஊதியமான 44,000 டொலர்கள் என்பதில் வேலையில்லாத் தொழிலாளர்கள் 2,000 பேருக்கு வேலை அளிக்கக் கூடியது. திரு வீலும் செல்வி ரைபோலோவ்லேவாவும் வேலை தோற்றுவிப்பவர்கள் என்று அமெரிக்க  அரசியல்வாதிகளால் பாராட்டப்படுகையில், பெரும் செல்வந்தர்கள் மீதான வரிகளை உயர்த்துவதற்கு எதிர்ப்புக் காட்டும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர், அவர்கள் ஒன்றும் அந்த அளவிற்கு வேலைகளை அளிக்கவில்லை. ஏதேனும் கூறப்படலாம் என்றால், இழிந்த வகையில் சாரதிகள், வாயிற்காப்போர், பணிப்பெண்கள், பாதுகாவலர்கள் என்று சமூகத்திற்கு ஒரு சாக்கடை போல் இருப்பவர்களின் தேவைக்கு உதவும் பணிகைத் தோற்றுவிக்கின்றனரே ஒழிய, சமூக இலாபத்திற்கு அல்ல.

இத்தகைய சமூக ஆதாரங்கள் வீணடிப்பதை அளப்பதற்கு மற்றொரு அளவு கோல் உள்ளது. தன்னுடைய பயணிகள் காப்பீட்டுப் பேரரசை சிட்டிபாங்குடன் இணைத்த திறனான செயலர் என்று சாண்டி வீல் நன்கு அறியப்பட்டுள்ளார். இதனால் சிட்டிக்குரூப் நிதிய உயர்சந்தைகளில் முதலாவதாகவும், மிகப் பெரியதாகவும் உள்ளது; இத்தகைய நிறுவனங்கள் நிதியப் பணிகளின் ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் செல்வாக்கைக் காட்ட முற்படும், முயல்கின்றன.

1998-99 ல், வீல் குடியரசுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காங்கிரஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின்கீழ் இருந்த வெள்ளை மாளிகை இரண்டையும் கிளாஸ்-ஸ்டீகால் சட்டத்தை அகற்றுவதற்கு ஆதரவு தருவதற்குத் தன் செல்வாக்கு நிறைந்த பிரச்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். அச்சட்டம் பெருமந்த சகாப்த சட்டம் ஆகும். 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவை ஒட்டி இயற்றப்பட்டது, வீல் போன்றவர்கள் தோற்றுவித்த நிதிய எட்டுக்கால் பூச்சி வகை நிதியப் பணிகளைச் சட்டவிரோதம் ஆக்கியிருந்தது.

காங்கிரஸையும் கிளின்டன் நிர்வாகத்தையும் வீல் 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்கினார்; கடந்த மாதம் இவர் விற்ற மான்ஹட்டன் பென்ட்ஹௌசின் விலையை விட அது ஒன்றும் அதிகம் அல்ல.