World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

The death of North Korea’s Kim Jong-il

வட கொரியாவின் கிம் ஜோங்-இல் காலமானார்

By Peter Symonds
20 December 2011
Back to screen version

நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-இல்லின் மரணம் சர்வதேசச் செய்தி ஊடகத்தில் தலையை சுற்றச்செய்யும் அளவிற்கு வெள்ளமென கட்டுரைகளை வெளிவர வைத்துள்ளது. இவை பியோங்யாங் ஆட்சியை பகுத்தறிவற்றது, முட்டாள்த்தனமானது எனக் கூறுவதுடன், வடகிழக்கு ஆசியாவின் உறுதிப்பாட்டிற்கு ஆபத்தான அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கள் இராணுவங்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளன.

வடகொரியத் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு ஸ்ராலினிச ஒடுக்குமுறை அரசுக்கு ஜோங்-இல்லின் தலைமை தாங்கியதுடன், ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவ உயரடுக்கின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால் இப்பிராந்தியத்தின் நீடித்த அழுத்தங்களுக்கான முக்கிய பொறுப்பு அமெரிக்காவின் மூர்க்கரமான கொள்கைகளில்தான் உள்ளது. இதுதான் 1953 கொரியப் போர் முடிந்ததில் இருந்து வட கொரியாவை ஸ்திரமற்றதாக்க பலமுறையும் முயன்றுள்ளது.

கொரியப் போரே வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள், தெற்கே உள்ள வாஷிங்டனின் கைப்பாவை பாசிச ஆட்சி உட்பட, நடத்திய பெரும் ஏகாதிபத்தியக் குற்றம் ஆகும். வட கொரியா எனப்படும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசிற்கு எதிராக மட்டுமல்லாது எல்லாவற்றிற்கும் மேலாக 1940 சீனப்புரட்சி மற்றும் பெய்ஜிங்கிலுள்ள மாவோயிச ஆட்சி ஆகியவற்றிற்கு எதிராக இயக்கப்பட்டது. போர் நாட்டில் பல போர்வடுக்களையும் சிதைவுகளையும் கொடுத்துள்ளதுடன், மூன்று மில்லியன் மக்கள் இறந்துள்ளதுடன், இன்னும் பலர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர். வாஷிங்டன் தீபகற்பத்தை போருக்குப் பின் செயற்கையாக பிரித்துள்ளது நிலைத்திருக்கிறது.

1994ல் அவருடைய தந்தை கிம் II சுங் இறந்தவுடன், தீபகற்பத்தை மீண்டும் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்த அமெரிக்காவுடனான மோதலுக்கு நடுவே, வட கொரியாவின் உயர்ந்த தலைவராக கிம் ஜோங்-இல் இருத்தப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ்ஷும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த பில் கிளின்டனும் வட கொரியாவின் அணுசக்தித் திட்டங்களை பியோங்யாக்கின்மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தும் வழிவகையாகக் கொண்டு ஆட்சியின் உருக்குலைவை முன்கூட்டியே கொண்டுவர முயன்றனர்.

1991ல் இதன் முக்கிய ஆதரவு நாடான சோவியத் ஒன்றியம் சரிந்ததை அடுத்து வட கொரியா மோசமான நெருக்கடியைத்தான் எதிர்கொண்டது. அணுவாயுதப் பரவா உடன்பாட்டில் (NPT) அது கையெழுத்திட ஒப்புக்கொண்டது. இதற்குப் பதிலாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் செயல்படுத்தியிருந்த முடக்கிவிடக்கூடியப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்படும், நாட்டிற்கு இராஜதந்திர அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக மீண்டும் மீண்டும் அமெரிக்கா வட கொரியாவை பல உடன்பாடுகளில் கையெழுத்திட அச்சுறுத்தியது, ஆனால் பதிலுக்கு பியோங்யாங் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதற்கு முடிவைக் கொண்டுவர கணிசமான நடவடிக்கைகள் எதையும் எடுக்க மறுத்துவிட்டது.

வட கொரியாவில் யோங்ப்யோனில் உள்ள சிறிய சோதனை அணுவாயுதக் கூடத்தினை நிறுத்துவது குறித்து 1994ல் மீண்டும் மோதல் ஏற்பட்டது. கிளின்டன் நிர்வாகம் அணுசக்திக்குத் தேவையான அளவிற்குப் புளூட்டோனியித்தை இந்த உலைக்கூடம் வழங்கும் என்று குற்றம் சாட்டியது. தன்னுடைய இராணுவத் தலைவர்கள் பேரழிவு விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரித்த பின் கிளின்டன் பின்வாங்கிய பின்தான் இராணுவ மோதல் தவிர்க்கப்பட்டது. பியோங்யாங்குடன் ஓர் உடன்பாட்டைக் காண முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரை அவர் அனுப்பிவைத்தார்.

கார்ட்டரின் பயணத்திற்குச் சிறிது நாட்களில் கிம் II சுங் இறந்து போனார். உடன்பாடு காணப்பட்ட வடிவமைப்பு என்று அழைக்கப்பட்டதற்கு கிம் ஜோக் இல் இறுதிவடிவம் கொடுத்து, அதன் அணுசக்தி நிலையங்களை மூடவும், இறுதியில் கலைத்துவிடவும் ஒப்புக் கொண்டார். இதற்கு ஈடாக எரிபொருள் எண்ணெய் மற்றும் எரிசக்தி உலைக்கூடங்களை எதிர்பார்த்தார். அதையும்விட முக்கியமாக நாட்டின் இராஜதந்திர, பொருளாதாரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலைக்கு முடிவு வரும் என்றும் எதிர்பார்த்தார். வட கொரியா அதன் அணுசக்தித் திட்டங்களை நிறுத்திவைத்தது, ஆனால் அமெரிக்கா உடன்பாட்டின் தன் பங்கைச் செயல்படுத்தவே இல்லை.

தென் கொரியாவில் 1998ல் ஜனாதிபதியான கிம் டே-ஜுங் அவருடைய சூரிய வெளிச்சக் கொள்கையின்கீழ்” (“Sunshine Policy”) இரு கொரியாக்களுக்கும் இடையே சமாதானத்திற்கான வாய்ப்பைக் காட்டினார். வடகொரியா ஒரு குறைவூதியத் தொழிலாளர் ஊற்றாக இருக்கும் என்ற கருத்தில் வட கொரியாவைத் திறக்க முற்பட்ட தென்கொரியப் பெருநிறுவன உயரடுக்கின் பிரிவுகளை அவர் பிரதிபலித்தார். கிம் ஜோங்-இல்லைப் பொறுத்தவரை, இக்கொள்கை சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின் வட கொரியாவில் நிலவிய ஆழ்ந்த பொருளாதாரச் சரிவிற்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என்ற கருத்து இருந்தது. இரண்டு கிம்களும் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட ஜூன் 2000 பியோங்யாங் கூட்டத்தில் கை குலுக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகார செயலர், மாடலீன் ஆல்பிரைட் வட கொரியத் தலைநகரக்கு கிளின்டன் நிர்வாகத்தின் இறுதி நாட்களில் சென்றார்.

ஆனால் 2000ம் ஆண்டில் கின் டே ஜுங்கிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்ட சூரியவெளிச்சக் கொள்கையைச் சூழ்ந்திருந்த பெரும் ஆர்வம் விரைவில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியில் இருத்தப்பட்டபோது கரைந்து போயிற்று. புஷ் நிர்வாகம் கொரியா பற்றிய அமெரிக்கக் கொள்கையை பரிசீலனைக்கு உட்படுத்தி, இராஜதந்திர தொடர்பு வரக்கூடும் என்ற வாய்ப்பை நிறுத்தி, திறமையுடன் உடன்பாடு காணப்பட்ட வடிவமைப்பு கிழித்தெறியப்பட்டது. எரிபொருள் எண்ணெய் விநியோகங்கள் நிறுத்தப்பட்டன, ஆரம்பிக்கவேபடாத உறுதிமொழி கொடுக்கப்பட்ட எரிசக்தி உலைக்கூடங்கள் கைவிடப்பட்டன. 2002ன் முற்பகுதியில் புஷ் வட கொரியா மீது தாக்குதல்களைத் தொடக்கி, ஈரான் மற்றும் ஈராக்குடன் அது தீமையின் அச்சு என்பதின் ஒரு பகுதியாகும் என்றும் அறிவித்தார்.

புஷ்ஷின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் முக்கியமாக வட கொரியா அல்லது அதன் அணுசக்தித் திட்டங்கள் பற்றியது அல்ல. முதலில் அவை சீனாவிற்கு எதிராக இயக்கப்பட்டவை. புஷ் சீனாவை தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மூலோபாயப் போட்டி நாடு என்று அறிவித்திருந்தார். வேண்டுமேன்றே அழுத்தங்களை விரிவுபடுத்தி, வாஷிங்டன் பெய்ஜிங்கின் மரபார்ந்த நட்பு நாடுகளில் ஒன்றை, அதன் எல்லையில் மூலோபாயவகையில் இருந்ததை மிரட்டினார். அதே நேரத்தில், தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு போக்குவரத்து, குழாய்த்திட்டம் ஆகியவற்றிற்காக வட கொரியாவைத் திறந்துவிடலாம் என்னும்  சீன, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் பொருளாதாரத் திட்டங்களிலும் குறுக்கிட்டது.

புஷ்ஷின் நடவடிக்கைகள் வட கொரியாவில் ஒரு பிரதிபலிப்பை தோற்றுவித்ததில் வியப்பு ஏதும் இல்லை. 2002ல் அமெரிக்கா இந்நாடு ஒரு இரகசிய யுரேனிய அடர்த்தித் திட்டத்தைக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியவுடன், பியோங்யாக்  அணுவாயுத பரவா உடன்படிக்கையில் இருந்து விலகி, நாட்டில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி ஆய்வாளர்களை வெளியேற்றி, அதன் நிறுத்திவைத்த  அணுநிலையங்களை மீண்டும் தொடக்கியது. இதன் விளைவு ஒரு தசாப்தமாக கொரியத் தீபகற்பத்தில் மோதலும் அழுத்தங்களும்தான். ஆறு நாடுகள் பேச்சுக்கள் மூலம் வடகொரிய அணுசக்தித் திட்டங்களைப் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறுத்த முயலும் சீனாவின் முயற்சிகள்தான் நிலையை நிதானமாக்கின. பேச்சுவார்த்தைகளுக்குப் பெரும் முணுமுணுப்புடன்தான் அமெரிக்கா ஒப்புக் கொண்டது. ஏனெனில் ஈராக்கின் மீதான படையெடுப்பு ஒரு புதைகுழியாக மாறியிருந்ததுடன், அமெரிக்க உலகின் மற்றொரு பகுதியின் உடனடியாக ஒரு போரைத் தூண்டிவிடும் நிலையிலும்  இருக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒபாமா நிர்வாகம் கொரியத் தீபகற்பத்தில் நெருக்கடியை குறைக்கவில்லை, மாறாக அவற்றைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆறு நாடுகள் பேச்சுக்களை மீண்டும் தொடக்கும் பெய்ஜிங்கின் முயற்சிகளுக்கு அது முட்டுக்கட்டை போட்டு, ஒருதலைப்பட்சமாக பேச்சுக்களில் இருந்து வெளிப்பட்டிருந்த உடன்பாட்டின் விதிகளையும் மாற்றியது. கடந்த ஆண்டு கடைசியில், அமெரிக்கா தென் கொரிய லீ ம்யுங் பாக்கின் வலதுசாரி அரசாங்கத்துடன் சேர்ந்து, வட கொரியாவிற்கு அருகே கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தியது. இது தென் கொரியத் தீவு ஒன்றின்மீது பீரங்கிக் குண்டு ஒன்று விழுந்தது என்று பியோங்யாக்கின்மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து நிகழ்ந்தது. வட கொரியா பதிலடி ஏதேனும் கொடுத்தால் அது அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவ நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என்றும் ஒபாமா நிர்வாகம் எச்சரித்தது.

வடகொரியாவுடனான கடந்த ஆண்டின் அமெரிக்க மோதல் ஒபாமா நிர்வாகத்தின் பரந்த மூலோபாய முதலிடம் கொண்ட கொள்கையான சீனப் பொருளாதாரத்தையும் மூலோபாயச் செல்வாக்கினையும் மத்திய கிழக்கில் இருந்து ஆசிய பசிபிக் வரை குழிபறிப்பதன் ஒரு கூறுபாடுதான். பதவிக்கு வந்ததில் இருந்தே, ஒபாமா ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸுடன் இராணுவக் கூட்டுக்களை வலுப்படுத்தியுள்ளது. இந்தியா, இந்தோனிசியா மற்றும் சிங்கப்பூருடன் நெருக்மான மூலோபாய உறவுகளை அமைத்துள்ளது, கிழக்கு ஆசிய உச்சிமாநாடு போன்ற பிராந்திய அரங்குகளில் ஆக்கிரோஷமாகத் தலையீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டுக் கடைசியில் வட கொரியாவுடன் ஒரு போர் அபாயத்தை காண ஒபாமா விருப்பம் கொண்டிருந்தது ஆசியப்பிராந்தியத்தில் அவருடைய நிர்வாகத்தின் மூலோபாயக் குவிப்பின் பொறுப்பற்ற தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இதில் பல உறுதியற்ற வெடிப்புத்தன்மையுடைய பிரச்சினைகள் உள்ளன. மேலும் இது வட கொரியாவின் புதிய தலைவராக கிம் ஜோங்-இல்லின் இளம், அனுபவமற்ற மகன் கின் ஜோங்-உன் பதவியில் இருத்தப்படுவதின் மூலம் வெளிப்படும் வாய்ப்பு பற்றியும் அமெரிக்கச் செய்தி ஊடகம் மற்றும் வெளியுறவு வட்டங்களில் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் இருக்கும் முக்கியத்துவத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. பியோங்யாங்கில் அரசியல் ஸ்திரமயற்ற தன்மையைத் தோற்றுவித்தல் அல்லது பயன்படுத்துதல் என்னும் ஒபாமா நிர்வாகத்தின் முயற்சி சீனாவுடன் மோதலை விரைவில் விரிவாக்கும் சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது. 

வட கிழக்கு ஆசியாவில் உறுதியற்ற தன்மை, பதட்டம் ஆகியவற்றிற்கு வட கொரியா மூலகாரணமாக இருக்கவில்லை. ஒபாமா நிர்வாகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க நிலையை அதன் இராணுவ வலிமையை பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் ஆக்கிரோஷ நடவடிக்கைகளில் இருந்துதான் முக்கிய ஆபத்து வருகிறது.