WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஏகாதிபத்தியமும் கேமர் ரூஜ் வழக்குகளும்
Mike Head
17 December 2011
use this version to print | Send
feedback
தற்பொழுது கம்போடியத் தலைநகர் ப்நோம் பென்னில்
நடந்து கொண்டிருக்கும் முன்னாள் கேமர் ரூஜ் ஆட்சித் தலைவர்கள்
பற்றிய விசாரணையின் இதயத்தானத்தில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த
மூடிமறைப்புத்தான் உள்ளது.
1975-79 கேமர் ரூஜ் அச்சுறுத்தும் ஆட்சி
மற்றும் வெகுஜனக் கொலைகளுக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்
நடப்பதும் ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கும் இந்நிகழ்வு
கம்போடியப் பேரழிவின் அடித்தளத்தில் இருந்த, எல்லாவற்றிற்கும்
மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பை மறைக்கும் வகையில்
வடிவவைமைக்கப்பட்டுள்ளது. மூன்று மில்லியன் வியட்நாமியர்
கொல்லப்பட்ட வியட்நாம் போரின் போது வாஷிங்டன் கம்போடியாவை
அழித்தது.
ECCC (Extraordinary Chambers in the Courts of
Cambodia)
எனப்படும் கம்போடிய நீதிமன்றங்களின் விஷேட
பிரிவில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நான்கு கேமர் ரூஜ்
தலைவர்கள் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைச் சுமந்து
நிற்கின்றனர். 1998ல் மரணமான உயர்மட்ட கேமர் ரூஜ் தலைவர் பொல்
போட் இல்லாத நிலையில், விசாரணை நடத்தும் குழு இருபதாம்
நூற்றாண்டின் உறைய வைக்கும் அத்தியாயங்களில் ஒன்றிற்குப்
பிரத்தியேகமாக அவர்களை பொறுப்பேற்க வகைக்க முயல்கிறது.
விசாரணையின் முதல் பகுதியில் இவர்கள் மக்களை
நகர்ப்புறத்தில் இருந்து கிராமப்புறத்திற்குக் கட்டாயமாகச்
செல்ல வைத்த குற்றத்திற்கு உட்படுகின்றனர். இதில் கிட்டத்தட்ட
ஒரு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். அதே
எண்ணிக்கையில் மக்கள் பட்டினி, நோய், கூடுதல்பணிச் சுமை
ஆகியவற்றால் இறந்துபோயினர்.
இன்று வரை பொல் போட்டின் ஆட்சி வழமையாக அநேகச்
செய்தி ஊடகங்களில்
“கம்யூனிஸ்ட்”
என்று
முத்திரையிடப்பட்டுள்ளது. இதைவிட கொடூரமான திரிப்பு ஏதும்
இருக்க முடியாது. 1920களின் இறுதியில் லியோன் ட்ரொட்ஸ்கியின்
இடது எதிர்ப்பாளர்கள் நசுக்கப்பட்டதும், சோவியத் ஒன்றியத்தில்
ஸ்ராலினிசத்தின் சீரழிவு ஏற்பட்டதின் விளைவுதான் கேமர் ரூஜ்
இன் தோற்றமாகும். பொல் போட்டும் அவரைப் பின்பற்றியவர்களும்
கேமர் மக்கள் புரட்சிக் கட்சியில் இருந்து வெளிப்பட்டவர்கள்.
கேமர் மக்கள் புரட்சிக் கட்சி
“தனியொரு
நாட்டின் சோசலிசம்”
என்னும் ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தனத்
தேசியவாத வேலைத்திட்டத்தைத்தான் பின்தொடர்ந்தது.
இளவரசர் நோரோடோம் சிஹனௌக்கின்
காலனித்துவத்திற்கு பின்னான அரசாங்கத்தின் பொலிஸ் அடக்குமுறையை
எதிர்கொண்டு, கட்சித் தலைவர்கள் நாட்டுப் புறங்களுக்கு 1963ல்
தப்பியோடினர். விவசாயிகளின் பிற்போக்கான பிரிவினரை நோக்கி
திரும்பி, ஒரு ஆதிகால விவசாயிகளை அடித்தளமாக கொண்ட ஒரு
சமூகத்தைத் தோற்றுவிக்கும் முன்னோக்கை ஏற்றுக்கொண்டனர். இதில்
பணம், கலாச்சாரம் மற்றும் நகரப்புற வாழ்க்கையின்
பிறகூறுபாடுகள் ஆகியவை அகற்றப்பட்டிருக்கும்.
வியட்நாம் போரின் ஒரு பகுதியாக 1960களின்
கடைசிப் பகுதியில் கம்போடிய மக்கள்மீது அமெரிக்க இராணுவம்
கட்டவிழ்த்த காட்டுமிராண்டித்தனத்தின் விளைவை ஒட்டித்தான்
இத்தகைய இயக்கம் 1975ல் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது.
1969க்கும் 1973க்கும் இடையே அமெரிக்கப் படைகள் கம்போடியா மீது
532,000 டன் குண்டுகளை வீசின. இது இரண்டாம் உலகப் போர்க்காலம்
முழுவதும் ஜப்பானில் வீசப்பட்ட டன்களைப் போல் மூன்று மடங்கு
அதிகம் ஆகும்.
காங்கிரசின் ஒப்புதல் இல்லாமல் அமெரிக்க
ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மற்றும் தேசியப் பாதுகாப்பு
ஆலோசகர் ஹென்ரி கிசிஞ்சரால் இரகசியமாகத் தொடக்கப்பட்ட நிலையில்
இது உலக வரலாற்றில் மிக தீவிர அடர்த்தியான குண்டுத்தாக்குதல்
ஆகும். இவற்றில் இறந்தவர்கள் 600,000 இனை விட அதிகமாக
இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1970ம் ஆண்டு வெள்ளை மாளிகையும்
CIA
யும் நடுநிலையாக நிற்பதாக காட்டிக்கொண்டு
வாஷிங்டனுக்கும் ஹனோய்க்கும் இடையே தந்திர உத்தியை கையாள
நினைத்த சிஹனௌக்கை அகற்ற ஆட்சிச்சதிக்கு ஏற்பாடு செய்தன;
ஜெனரல் லோன் நோல் தலைமையில் ஒரு இராணுவ சர்வாதிகாரம்
நிறுவப்பட்டது. ஒரு மாதம் கடந்தபின், நிக்சன் 20,000 அமெரிக்க,
வியட்நாமியத் துருப்புக்கள் கம்போடியா மீது படையெடுக்கும்
என்று அறிவித்தார்.
அமெரிக்கக் குண்டுத்தாக்குதல், மற்றும் லோன்
நோல் இன் இராணுவ ஆட்சி நடத்திய மிருகத்தன உள்நாட்டுப்
போரினாலும் கம்போடிய சமூகம் சிதைந்தது. நாட்டின் ஏழு மில்லியன்
மக்களின் இரண்டு மில்லியன் பேர் வீடிழந்தனர். அரிசி உற்பத்தி
80% சரிந்தது, பொருளாதார வாழ்க்கை உடைத்து நொருக்கப்பட்டது.
இத்தகைய நிலைமைகளின் கீழ்த்தான் 1970ல்
5,000க்கும் குறைவாகக் கொண்டிருந்த பொல் போட்டின் படைகள்,
70,000 பேர் நிரம்பிய இராணுவமாக வளர்ந்தது. படையினர் ஏப்ரல்
1975ல் அமெரிக்க கைப்பாவை லோன் நோலின் ஆட்சி இறுதியில்
வீழ்ச்சியடைந்தபின் ப்னோம் பென்னைக் கைப்பற்றினர். இது தென்
வியட்நாமில் அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரம் இறுதியில்
வீழ்ச்சி அடைவதற்குச் சற்று முன் நடைபெற்றது.
அழிவில் ஆழ்ந்திருக்கும் ஒரு நாட்டை எதிர்கொண்ட
நிலையில், நகரங்களுக்கு உணவு வழங்க விருப்பமற்ற நிலையில்,
கேமர் ரூஜ் முழு நகர மக்களையும் கிராமப்புறத்தில் கிட்டத்தட்ட
அடிமைத் தொழிலைச் செய்வதற்கு வெளியேறும்படி உத்தரவிட்டது.
இத்தகைய ஆழ்ந்த தொழிலாளர்-விரோத ஆட்சி சோசலிசத்தைவிட
பாசிசத்துடன்தான் பொதுவான தன்மைகளைக் கொண்டிருந்தது.
“கொலை
வயல்கள்”
என்னும் அச்சுறுத்தல் வெளிப்பட்ட நிலையில்,
வாஷிங்டன் அதன் ஆதரவை கேமர் ரூஜிற்கு அளித்து, வியட்நாமிய
செல்வாக்கை எதிர்க்கும் வழிவகையாகக் கண்டது. கம்போடியாவில்
இனவழி வியட்நாமியர்கள் மீதான தாக்குதல் டிசம்பர் 1978ல்
வியட்நாமியப் படையெடுப்பு ஒன்றைத் தூண்டியது. அது கேமர்
ரூஜ்ஜிடம் இருந்து பிரிந்த ஹுன் சென்னுடைய பிரிவை ஆட்சியில்
இருத்தியது. அவர் கம்போடியப் பிரதமரானார்.
இதற்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்க
ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகம் மறைமுகமாக வியட்நாம்
மீதான பாரிய சீன இராணுவத் தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்து,
சீனாவுடன் இணைந்து செயல்பட்டு பொல் போட்டிற்கு எதிரான
எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. வியட்நாமிற்கு
எதிரான பனிப்போரில் பொல் போட்டை வாஷிங்டன் மதிப்புடைய நட்பு
அமைப்பாகக் கருதியது. கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
Zbigniew Brzezinski
பின்னர் ஒப்புக் கொண்டது:
“சீனர்களை
பொல் போட்டிற்கு ஆதரவு கொடுக்கமாறு நான் ஊக்கம் கொடுத்தேன்....
பொல் போட் ஒரு இழிந்தவர். நாம் ஆதரவு கொடுத்திருக்கக் கூடாது,
ஆனால் சீனா கொடுக்க முடியும்.”
1980கள் முழுவதும் அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள்
மற்றும் சீனா கேமர் ரூஜ்ஜை கம்போடியாவின் சட்டபூர்வமான
அரசாங்கம் என்று தொடர்ந்து அங்கீகரித்தன. 1997 வரை
தொடர்ச்சியாக பதவிக்குவந்த அமெரிக்க அரசாங்கங்கள் பொல் போட்
மற்றும் அவருடைய சகாக்களை விசாரணைக்கு உட்படுத்தும்
நடவடிக்கைகளைத் தடுத்தன.
வாஷிங்டனுடைய முன்ஈடுபாடு, பெய்ஜிங் மற்றும்
ஹுன் சென்னினால் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதாவது எந்த
விசாரணையும் அவற்றின் கம்போடியப் பெருஞ்சோகத்தில் இருந்த
பங்குகளை ஆராய்தலை தடுக்க வேண்டும் என்பதாகும். 2006 ல்
கம்போடிய நீதிமன்றங்களின் விஷேட பிரிவு
–ECCC-
நிறுவப்படுவதற்குப் பல ஆண்டுகள் முன்பு பேச்சுக்கள் நடைபெற்றன.
அதில் உயிரோடிருக்கும் கேமர் ரூஜ் தலைவர்கள் மீது மட்டுமே அது
கவனம் காட்ட வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டன. .
ப்னோம் பென்னில் கூண்டில் நிற்பவர்களில்
1970களின் கொடூர நிகழ்வுகளுக்குப் பொறுப்பானவர்களில்
கிசிஞ்சர், கார்ட்டர் மற்றும் ப்ரெஜெஜின்ஸ்கி ஆகியோரும்
அடங்குவர். எல்லாவற்றிற்கும் மேலாக கம்போடிய மக்களுக்கு
நடைபெற்றது, அவர்களுடைய மூலோபாய மற்றும் வணிக நலன்களை
தொடர்வதற்கு முக்கியச் சக்திகள் சுதந்திரம் ஜனநாயகம் என்னும்
பதாகைகளை இழிந்த முறையில் காட்டிக்கொண்டு மில்லியன் கணக்கான
மக்களை குருதி கொட்டும் போர்கள், காட்டுமிராண்டித்தனம்
ஆகியவற்றில் ஈடுபடுத்த தயாராகவுள்ளன என்னும் ஒரு
எச்சரிக்கையாகும்.
இன்று, மோசமாகிக் கொண்டிருக்கும் உலகப்
பொருளாதார நெருக்கடி மற்றும் சீனாவுடன் மோதலுக்காக ஒபாமா
நிர்வாகம் ஆக்கிரோஷமான உந்துதல் கொண்டு ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் தன் மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்த
நிற்கையில், இந்த ஆபத்துக்கள் முன்னைக்காட்டிலும்
கூடுதலாகத்தான் உள்ளன. 21ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில்,
அமெரிக்கா வியட்நாமிலும் கம்போடியாவிலும் செய்த வரலாற்றுத்
தன்மை வாய்ந்த போர்க்குற்றங்கள் மீண்டும் ஈராக்கிய சமூகத்தைக்
குண்டுத்தாக்குதல் மூலம் பேரழிவிற்குக் கொண்டுவந்ததில்
மறுபதிப்பைக் கண்டன. அதேபோல் தற்பொழுது குருதி கொட்டும்
ஆப்கானிய ஆக்கிரமிப்பு, பாக்கிஸ்தானுக்குள் அதன் விரிவாக்கம்
மற்றும் எண்ணெய் வளமுடைய லிபியாவில் இராணுவ ஆட்சியை இருத்தியது
ஆகியவற்றிலும் எதிரொலிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் குற்றத்தன்மை
இன்னும் அப்பட்டமாக வந்துள்ள நிலையில், வியட்நாம் போர்,
கம்போடியாவில் அதன் விரிவாக்கம் ஆகியவற்றை ஒருகாலத்தில்
எதிர்த்த மத்தியதர முன்னாள் தீவிரவாதிகள், ஒபாமா நிர்வாகத்தை
இப்பொழுது தழுவி, ஏகாதிபத்தியத்துடன் தங்கள் சமரசத்தைக் கொண்டு
லிபிய, ஆப்கானிய போர்களுக்கு ஆதரவு கொடுத்து, ஈராக்கில்
அமெரிக்க பிரசன்னம் தொடர்ந்து இருப்பது குறித்தும் மௌனமாக
உள்ளனர். இந்தத் தட்டுக்கள் கேமர் ரூஜ் விசாரணை குறித்தும்
மௌனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடிய பெருஞ்சோகத்தின் அழிக்கமுடியாத
படிப்பினை இந்தோசீன, ஆசிய, சர்வதேசத்தொழிலாள வர்க்கத்தின்
ஒன்றுபட்ட போராட்டத்தின் தேவை என்பதுதான். அது ஒன்றுதான்
போருக்கும் முதலாளித்துவச் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி
வைக்கக்கூடிய ஒரே சக்தி ஆகும். அதற்கு உலக ட்ரொட்ஸ்கிசக்
கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள்
கட்டமைக்கப்பட வேண்டும். அது ஒன்றுதான் ஏகாதிபத்தியம் மற்றும்
ஸ்ராலினிசத்தின் பெரும் குற்றங்களை அம்பலப்படுத்துவதுடன்
தெளிவுபடுத்திவருகின்றது. |