World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Article sheds light on the fabrication of charges against Strauss-Kahn

ஸ்ட்ராஸ்-கானிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டது குறித்து புதிய தகவல்களை கட்டுரை எடுத்துக்காட்டுகிறது

By Patrick Martin
30 November 2011
Back to screen version

New York Review of Books வெளியிட்டுள்ள நீண்டகால விசாரணைச் செய்தியாளர் எட்வர்ட் ஜே எப்ஸ்ரைன் எழுதியுள்ள நீளமான கட்டுரை, நியூயோர்க் நகரப் பொலிஸ் கடந்த மே மாதம் போலியான கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை ஒட்டி சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கைது குறித்துப் புதிய தகவல்களை காட்டுகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் தலைமை உளவுத்துறை ஆலோசகர் உட்பட உயர்மட்ட பிரெஞ்சு அரசாங்க அதிகாரிகளால் அறியப்பட்டிருந்த நிலையில் இக்கைது ஒரு பொறியில் அகப்பட வைக்கத் திட்டமிட்டிருந்த செயலாக இருந்திருக்கக்கூடும் என்று கட்டுரை கருத்துத் தெரிவிக்கிறது.

அந்த நேரத்தில் ஸ்ட்ராஸ்-கான் பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னணி வேட்பாளராக நியமனம் பெறவிருந்ததுடன், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல்களில் கருத்துக் கணிப்பில் சார்க்கோசியை விட முன்னணியிலும் இருந்தார். இவர் கைதுசெய்யப்பட்டதானது அவர் IMF நிர்வாக இயக்குனர் பதவியை இராஜிநாமா செய்ய வழிவகுத்து, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சற்றே வலிமை குறைந்த வேட்பாளர் PS தலைவர் பிரான்சுவா ஹோலண்டை தேர்ந்தெடுக்க வைத்தது.

எப்ஸ்ரைனின் கட்டுரையில் மிகவும் குறிப்பிடத்தக்க கூறுபாடு அவருடைய விசாரணை எந்த அளவிற்குத் வெளிப்படையாகாமல் இருந்தது என்பதுதான். இதுபற்றி எந்தவித பரபரப்புப் புதிய தகவலும் கொடுக்கப்படவில்லை, எந்தப் புதிய, எதிர்பாரா சாட்சியமும் இல்லை, நீதிமன்ற, பொதுச் சான்றுகள் என்று கிடைக்கக்கூடியவற்றில் இருந்து கவனமாகத் தொகுத்துக்கூறப்பட்டுள்ள உண்மைகள்தான் இருக்கின்றன. இந்த அடிப்படையில், எப்ஸ்ரைன் ஸ்ட்ராஸ் கானினால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறும், தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் ஆடம்பர ஹோட்டலான சோபிடெல்லில் உள்ள பணிப்பெண் நபிசாடௌ டயல்லோ கூறியுள்ள விவரங்களுக்கும் சான்றுகளின் அடிப்படையில் காணப்படும் உண்மைகளுக்கும் இடையே உள்ள பல முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

எப்ஸ்டின் ஒரு அனுபவமிக்க புலனாய்வுப் பிரிவு நிருபர் ஆவார்; Lee Harvey Oswald  தனியே செயல்பட்ட ஒரு கொலைகாரர் என்ற வாரன் குழுவின் கருத்துக்களை மறுத்த Inquest என்ற ஜோன் எப். கென்னடியின் படுகொலை குறித்த, கிட்டத்தட்ட புத்தக அளவு உள்ள அவருடைய பகுப்பாய்வு இருந்த காலம் வரை அவர் அனுபவம் நீண்டுள்ளது. ஆனால் நியூ யோர்க் ரிவ்யூ ஆப் புக்ஸில் அவர் எழுதியுள்ளது, ஸ்ட்ராஸ்-கான் விவகாரத்தில் நியூயோர்க் டைம்ஸ் அல்லது எந்தத் தொலைக்காட்சி இணையமும் விரும்பியிருந்தால் உண்மையைதேடி செய்திருக்கக்கூடியதைப் போலத்தான் செய்துள்ளார்.

இச்செய்தி ஊடக்கங்கள் பல வாரங்கள் கற்பழிப்பு நடந்ததாகக் கூறப்பட்ட வழக்கு குறித்து சூனிய வேட்டையில் முன்னின்றன; நியூ யோர்க் மாவட்ட அரசாங்க வக்கீலின் அலுவலகம் டயல்லோவின் குறிப்புக்களிலுள்ள மிகப் பெரிய முரண்பாடுகளை மறைப்பது இயலாது என்று தெரியவந்தபின், வழக்கு இறுதியில் சரிந்துவிட்டது. டைம்ஸோ அல்லது இணையங்களோ இன்னும் எப்ஸ்டின் கட்டுரை குறித்துத் தகவல் கொடுக்கவில்லை; ஆனால் சில குறிப்புக்கள் ஆன்லைனிலும் கேபிள் சேவைகளிலும் வந்துள்ளன.

மே 14, 2011 அன்று நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாக எப்ஸ்டின் காலவரிசைப்படுத்தியுள்ளார்இது அறை நுழைவு அட்டைகளாக ஊழியர்கள், விருந்தினர்கள் பயன்படுத்தியது, கைபேசிச் சான்றுகள், சில கண்காணிப்பு காமெராக்களில் பதிவாகியுள்ள நேரக்குறிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராஸ் கான் மற்றும் டயல்லோவிற்கும் இடையேயான பாலுறவு டயல்லோ ஸ்ட்ராஸ்கானின் ஹோட்டல் அறையில் நுழைந்த 12.06 மணிக்கும் அவர் தன் மகள் காமிலேக்குத் தொலைபேசி மூலம் பேசிய நேரமான 12.13 மணிக்கும் இடையே இருந்த 7 நிமிட இடைவெளியில்தான் நடந்திருக்க முடியும்.

இக்கட்டுரை, ஹோட்டலின் ஆண் ஊழியர் ஒருவர், ஸ்ட்ராஸ் கானின் அறையில் நுழைவதற்கு நுழைவு அட்டையை டயல்லோ பயன்படுத்தியதற்கு ஒரு நிமிடம் முன்னதாகத்தான் பயன்படுத்தினார் என்று குறிப்பிடப்டுகிறது. இதையொட்டி பாலியல் தாக்குதல் இன்னும் நம்பகத்தன்மைக் குறைப்பிற்கு உட்படுகிறது. இந்த ஊழியர், சையத் ஹக் அறைப் பணியில் ஈடுபட்டு, அங்கிருந்து உணவுத்தட்டுக்களை அகற்றிக் கொண்டிருந்தார். நுழைவு அட்டைகள் ஓர் அறையில் நுழைதல், மற்றும் வெளியுறுதல் நேரத்தை மட்டுமே பதிவு செய்வதால், டயல்லோ அறையினுள் வந்தபோது அவர் அங்கு இருந்தாரா, அல்லது பாலியல் தாக்குதல் நடந்தபோது இருந்தாரா என்று அறியமுடியவில்லை. ஸ்ட்ராஸ் கானின் வக்கீல்களுடன் பேசுவதற்கு ஹக் மறுத்துவிட்டார்.

பக்கத்து அறை எண் 2820 ன் நுழைவு அட்டைச் சான்றுகள் குறித்து எப்ஸ்டின் கவனத்தைக் குறிப்பிடுகிறார்; ஸ்ட்ராஸ்-கான் அறைக்குச் செல்வதற்கு முன்னும்கற்பழிப்பு நடந்தது எனக் கூறப்பட்டதற்குப் பின்னும், அந்த அறையில் டயல்லோ நுழைந்திருந்தார்--இதற்குப் பின்னர்தான் அவர் ஹோட்டல் பாதுகாப்புப் பிரிவினரிடம் தான் தாக்குதலுக்கு உட்பட்டதை கூறியது என்று விசாரணை வக்கீல்களிடம் அவர் அறிக்கைகளைக் கொடுத்திருந்தார்; அதன் மூலம் டயல்லோ பலமுறையும் நிகழ்விற்கு முன்னும் பின்னும் 2820 எண் அறைக்கு அவர் சென்றது குறித்து பொய்கள் கூறியுள்ளார். நுழைவு அட்டைச் சான்றுகள் ஆராயப்படும் வரை இது நடந்துள்ளது.

பல முறை 2820 அறைக்கு நுழைந்தது குறித்து டயல்லோ மறைத்த செயல்களைவிளக்க முடியாதவை என்று வக்கீல்கள் விபரித்துள்ளனர்; இப்படிச் சென்றது குறித்து அவர் குறிப்பிட்டிருந்தால், குற்றக்காட்சி தேடுதல் சோதனையின் ஒரு பகுதியாக அந்த அறை சோதிக்கப்பட்டிருக்கும் என்று வக்கீல்கள் வழக்கை தள்ளுபடி செய்யும் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

டயல்லோவின் முரணான குறிப்புக்களைப் பார்க்கையில், DSK உடன் தொடர்பிற்கு முன்னும் பின்னும் அவர் அறைக்குச் சென்றார், பிந்தைய செல்கை குறித்து பெரும் நடுவர் மன்றத்தில் அவர் கூறிய பிரமாணச் சாட்சியத்தில் அருகில் இருந்த 2820 அறையில் என்ன நடந்தது என்பது பற்றிக் கூறவில்லை என்பதுதான் நாம் உண்மையிலேயே அறிய முடியும். இப்பொழுதும்கூட DSK உடன் தொடர்பு கொண்டதற்கு முன்னும் பின்னும் 2820ல் வேறு எவரேனும் இருந்தனரா, அல்லது பொலிஸ் வருவதற்கு முன்னர் இருந்தனரா, 2820 ல் நுழைந்ததைப் பற்றி கூறவேண்டாம் என்று யாரேனும் வலியுறுத்தினரா என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை.

அடுத்த அறை ஸ்ட்ராஸ்-கானுக்கு எதிரான பொறி நடவடிக்கைக்குக் கட்டுப்பாட்டுத் தளமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் தெளிவான உட்குறிப்பு ஆகும். நடந்ததாகக் கூறப்படும்தாக்குதலுக்கு முன்னும் பின்னும் அவரை வழிநடத்தியவர்களுடன் டயல்லோ பேசியிருக்க வேண்டும். அன்று 2820ல் யார் தங்கியிருந்தார் என்பதை சோபிடெல், அந்தரங்கக் காரணங்கள் எனக்கூறி, வெளியிட மறுத்துவிட்டது.

டயல்லோவை இயக்கி நடவடிக்கையை செய்தவர்கள் பிரான்சின் சார்க்கோசி நிர்வாகத்துடன் தொடர்பு உடையவர்கள் என்ற கருத்தை எப்ஸ்டின் தெரிவிக்கிறார். ஓட்டலின் பாதுகாப்பு இயக்குனர் ஜோன் ஷீஹன் கற்பழிப்பு குறித்து தகவல் கொடுக்குமாறு கூறப்பட்டபோது, அவர் சோபிடெலின்  பிரெஞ்சு உரிமை நிறுவனமான ACCOR இருக்கும் பகுதியின் குறியீட்டு எண்ணான 646 ஐக் கூப்பிட்டார்!

Accor ல் இருக்கும் ஷீஹன் உடைய தலைமை அதிகாரி, René-Georges Querry ஒரு முன்னாள் உயர்மட்ட பிரெஞ்சுப் பொலிஸ் அதிகாரி ஆவார்; “அவர் Ange Mancini ல் இருந்து பொலிசாருடன் நெருக்கமாக உழைத்தவர், இப்பொழுது ஜனாதிபதி சார்க்கோசியின் உளவுத்துறைகள் குறித்த ஒருங்கிணைப்பாளர் ஆவார். ஷின் 646 எண்ணிற்குத் தொலைபேசி அழைப்பு செய்தபோது, பாரிசில் ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தார்; அங்கு அவர் ஜனாதிபதி சார்க்கோசியின் சிறப்பு ஒதுக்கிடத்தில் அமர வைக்கப்படுவார் என்று எப்ஸ்டின் எழுதுகிறார்.

இச்சங்கிலித் தொடர் தொடர்புகளில் இருந்து ஸ்ட்ராஸ்-கானின் கைது பற்றிய விபரங்கள் நேரடியாக பிரெஞ்சு ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் எளிதில் முடிவாகக் கொள்ளலாம்.

ஷீஹன் Accor ல் சேவியர் கிராப் என்னும் சற்றே கீழ்மட்ட பாதுகாப்பு அதிகாரியைக் கூப்பிட்டிருக்கலாம் என்றும் எப்ஸ்டின் தெரிவிக்கிறார்; சேவியர் ஸ்ட்ராஸ்-கானைகீழிறக்கிய நிகழ்வில் தானும் தொடர்பு கொண்டதாக தன் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பெருமை பேசிக்கொண்டது வெளிப்பட்டபோது, அவருடைய நிறுவனத்தால் பின்னர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

.ஹோட்டலின் பொறியியலாளர் பிரியன் இயர்வுட் மற்றும் ஒருவகைப் பாதுகாப்பு முகவராக இருந்திருக்கும் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடைய நடவடிக்கைகள் குறித்த அசாதாரண சான்றுகள் பற்றி எப்ஸ்டினின் கட்டுரை குறிப்பிடுகிறது; இவர்கள் இருவரும் வீடியோப் பதிவில் நபிசாடௌ டயல்லோ பாதுகாப்பு அலுவலகத்திற்கு அவர் தாக்குதலைப் பற்றித் தகவல் கூறச் செல்லும்போது உடன் இருந்தவர்கள். ஒரு மணி நேரத்திற்குப்பின், பாதுகாப்பு அலுவலகம் பொலிசிற்கு 911 எண்ணில் தொலைபேசித் தொடர்பு கொண்டனர்இந்தத் தாமதம் மிக விந்தையானது, விளக்கம் கூறமுடியாதது என்று எப்ஸ்டின் குறிப்பிடுகிறார்.

உத்தியோகபூர்வமாக வழக்கில் பொலிசாரை வரவழைத்து, ஸ்ட்ராஸ் கான் பொது இழிவுபடுத்தல், அவமானத்திற்கு உட்படுதலை உருவாக்கிய 911 க்கு தொலைப்பேசி அழைப்பு முடிந்து இரண்டு நிமிடங்களுக்குப் பின், இயர்வுட்டும், அடையாளம் தெரியாத நபரும் ஒரு பாதுகாப்பு வீடியோப் பதிவில் ஒருவரை ஒருவர் ஐந்து விரல்களையும் உயர்த்திக் கைகளைத் தட்டிக் கொண்டது தெரிகிறது; ஸ்ட்ராஸ் கானின் வக்கீல்கள் இச்செயலை ஒரு வெற்றிக்களிப்பு நடனம் என்று கூறுகின்றனர். அவர்கள் எதைக் கொண்டாடுகின்றனர்?

இந்த வழக்கில் வேறு சில கூறுபாடுகளும் வினாக்களை எழுப்புகின்றன என்று எப்ஸ்டின் கூறுகிறார். சார்க்கோசியின் உதவியாளர்கள் அவருடைய சொந்த மின்னஞ்சல் தகவல்களைப் படித்துவருவதாக ஸ்ட்ராஸ் கானுக்கு அன்று தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. தன்னுடைய IMF Blackberry உடைய தொழில்நுட்பப் பகுப்பாய்வை அவர் கேட்டிருந்தார். பின்னர் பிளாக்பெர்ரி கைத்தொலைபேசி மறைந்துவிட்டது. அதன் இருப்பிடத்தை காட்டும் GPS அடையாளம்காட்டி அன்று  பிற்பகல் 12.51 க்கு முடிவு அடைந்துவிட்டது. அது பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை..

கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவச் சிகிச்சை கொடுப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதம் மற்றொரு புதிர் ஆகும். “ஒரு மிருகத்தனமான, நீடித்த பாலியல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியபின், உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என்பது விளங்கிக் கொள்ள முடியாத செயல் ஆகும். ஆனால் பிற்பகல் 1.31 வரை, ஷீஹனிடம் இருந்து தகவல் கிடைத்துப் பல நிமிடங்கள் வரை, பாதுகாப்பு அதிகாரிகள் 911 அழைப்பைச் செய்யவில்லை. கிட்டத்தட்ட தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டதற்கு 4 மணி நேரம் முடியும் வரை, பிற்பகல் 3.57க்கு அவர் St.Luke மருத்துவமனைக்கு வரவில்லை.

 

எப்ஸ்டின் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்துமே ஸ்ட்ராஸ்-கான் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் முடிவு, பின்னர் செய்தி ஊடகம் வழக்கு பற்றிக் காட்டிய பரப்பு ஆகியவற்றை வினாவிற்கு உட்படுத்துகின்றன. அந்த நேரத்தில் WSWS சுட்டிக் காட்டியதுபோல், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்படுதல் உட்பட பல அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஆபத்திற்கு உட்பட்டன.

 

அரசாங்க வக்கீல்களின் பிரிவு சான்றுகள் எதுவும் ஆராயப்பட்டுப் பொதுநிலையில் ஆய்வு செய்யப்படுவதற்கு முன்னரே ஸ்ட்ராஸ்கான் மீது குற்றம்சாட்ட விரைந்தனர். அதையொட்டி அவருடைய அரசியல் அழிவு சாதிக்கப்பட்டது. அந்த இலக்கு IMF இயக்குனரின் உலகப் பொருளாதாரக் கொள்கையுடன் முரண்பட்டிருந்த ஒபாமா நிர்வாகத்தாலும், பிரான்சின் சார்க்கோசி நிர்வாகத்தாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது;

 

பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் அந்த நோக்கத்தையொட்டித் திரட்டப்பட்டது, அத்துடன் குட்டி முதலாளித்துவஇடது வெளியீடுகள் நேஷன் முதல் சோசலிஸ்ட் வேர்க்கர்ஸும் திரட்டப்பட்டன; இதைத்தவிர, இதைத்தவிர, கடைசியாக இல்லை என்றாலும், ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உள் விவரகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஓர் இழிந்த பாலியல் அவதூறும் பயன்படுத்தப்பட்டது.

 

சார்க்கோசி, ஒபாமா அல்லது எந்த பிற முதலாளித்துவ அரசியல்வாதியிடமிருந்தும் வேறுபட்டிராத பெருவணிகத்தின் பிரதிநிதிதான் ஸ்ட்ராஸ் கான் ஆவார். அத்தகைய தனிநபருக்கு எதிராக இத்தகைய மிருகத்தன நடைமுறைச் செயல், புனையப்பட்ட வழக்கு போன்றது மேற்கொள்ளப்படுமானால், ஸ்ட்ராஸ் கானுக்கு உள்ளதுபோல் மில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் மிக அதிகச் செலவாகும் சட்ட ஆதரவு இல்லாத தொழிலாள வர்க்கத்தின் தனிநபர்களுக்கு எதிராக ஆளும் உயரடுக்கு எதைத்தான் செய்யாது என்பதுதான் இப்பொழுது செய்யப்பட வேண்டிய எச்சரிக்கை ஆகும்.?