World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

NATO raid kills two dozen Pakistani soldiers

நேட்டோத் தாக்குதலில் இரண்டு டஜன் பாக்கிஸ்தானிய சிப்பாய்கள் கொலை

By Keith Jones
28 November 2011
Back to screen version

சனிக்கிழமை அதிகாலை நடந்த ஓர் அமெரிக்க வான் தாக்குதலில் ஆப்கானிய எல்லையிலிருந்து சுமார் 1.5 மைல்கள் (2.5 கிலோமீட்டர்) தொலைவிலிருந்த இரண்டு இராணுவச் சாவடிகளைத் தாக்கியபோது அங்கிருந்த 25 பாக்கிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையேயுள்ள உறவுகள் கிட்டத்தட்ட முறிந்துபோகும் கட்டத்திற்கு வந்துள்ளது.

போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இத்தாக்குதலை பாக்கிஸ்தானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதியான மஹ்மண்ட் மாவட்டத்திலுள்ள சலாலா கிராமத்தில் இருக்கும் இராணுவச் சாவடிகள்மீது நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகளில் ஆழமடைந்துள்ள நெருக்கடியை இந்த வான் தாக்குதல்கள் தீவிரப்படுத்தியுள்ளனஇந்த நெருக்கடி பகுதியான அளவில் அமெரிக்க இராணுவம் பலமுறை பாக்கிஸ்தானுக்குள் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி குருதி கொட்டும் ஊடுருவல்களை மேற்கொள்வதால் தூண்டப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானின் இராணுவம் மற்றும் அரசாங்கம் சனிக்கிழமை தாக்குதலைக் கண்டித்தன; இதைத் தூண்டுதலற்ற எதிரான நடவடிக்கை என்று கூறியுள்ளன. பாக்கிஸ்தானின் இராணுவப் படைகளின் தலைவரான ஜெனரல் அஸ்பக் பர்வேஸ் கியானி, சலாலா தாக்குதலில் கொல்லப்பட்ட 24 சிப்பாய்களுக்கு நடத்தப்பட்ட இராணுவ உடல்களின் அடக்க நிகழ்ச்சிப் பிரார்த்தனைகளுக்கு தலைமை தாங்கினார்.

சனிக்கிழமை மாலை பாக்கிஸ்தானியப் பிரதம மந்திரி யூசப் ராசா கிலானி விடுமுறையிலிருந்து அவசரமாகத் திரும்பி வந்து தன் காபினெட்டின் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தானுக்குப் பாக்கிஸ்தான் வழியே அனுப்பப்படும் நேட்டோ விநியோகங்களைத் தற்காலிகமாக நிறுத்தும்படி சனிக்கிழமை வான் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்கு முன் இடப்பட்ட உத்தரவு காலவரையறையற்று இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் அமெரிக்க அதிகாரிகள் பலுசிஸ்தானிலுள்ள விமானத்தளம் ஒன்றைக் காலி செய்யுமாறும் கேட்டுள்ளது; மேலும் அமெரிக்க அதிகாரிகள் இங்கிருந்துதான் CIA பாக்கிஸ்தானுக்குள் பிரிடெட்டர் டிரோன் தாக்குதல்களை நடத்துகிறது. அமெரிக்கா/நேட்டோ/ISAF (நேட்டோ தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புப் படை) ஆகியவற்றிலுள்ள அனைத்து திட்டங்கள், செயற்பாடுகள், ஒத்துழைக்கும் ஏற்பாடுகள், இராஜதந்திர, அரசியல், இராணுவ, உளவுத்துறை அனைத்து பிரிவுகளிலும், அனைத்தையும் முழுமையாக மீண்டும் ஆராய்ந்து, பரிசீலிக்கும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது. நேற்று ஒரு தொலைப்பேசி உரையாடலில் பாக்கிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி கேர் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனிடம் பாக்கிஸ்தான் முழுவதும் படர்ந்துள்ள ஆழ்ந்த சீற்ற உணர்வை தெரிவித்தார். இத்தாக்குதல்கள் முற்றிலும் ஏற்கத்தக்கவை அல்ல என்று கேர் கூறியுள்ளார். சர்வதேச சட்டம் மற்றும் மனித உயிர்களின்பால் முழு அவமதிப்பையும் இவை நிரூபிக்கின்றன, பாக்கிஸ்தானிய இறைமையை முற்றும் மீறிய செயல்கள் என்றும் அவர் கூறினார். மக்கள் எதிர்கொண்டுள்ள விதம் உணர்வுகள் பொங்கிய நிலையில் உள்ளன, பாக்கிஸ்தானிய இறைமை மீறப்படுவதற்கு ஆழ்ந்த வெறுப்பு வெளிப்படுதலைப் பிரதிபலிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஞாயிறன்று அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆப்கானிஸ்தான் அதன் நிலப்பகுதியை பாக்கிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் காபூலிற்கு பாக்கிஸ்தான் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் Bonn னில் நடக்கவுள்ள அமெரிக்க ஆதரவில் நடக்கும் முக்கிய மாநாட்டைத் தான் புறக்கணிக்கக்கூடும் என்றும் பாக்கிஸ்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு மின்னஞ்சல் பேட்டியில், அமெரிக்காவில் முன்னாள் பாக்கிஸ்தானியத் தூதராக இருந்த மலீஹா லோதி, நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவு மிக சறுக்கிவிடும் தன்மையில் இப்பொழுது உள்ளது. ஒரு பிளவிற்கு வெகு அருகே இருப்பதாகக் கூட கூறுமுடியும்.

இத்தாக்குதல் வருத்தத்திற்குரியது என்று அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகள் கூறினர். கிளின்டனும் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, அமெரிக்க-பாக்கிஸ்தானிய பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இஸ்லாமாபாத்துடனான உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில், வாஷிங்டன் நேட்டோவிற்குப் பொருட்களை அனுப்பும் பாதைகளை திசைமாற்றும் முக்கிய முயற்சியை எடுத்துள்ளபோது, ஆப்கானிஸ்தானிலுள்ள போரிடும் நேட்டோ படைகளுக்கான விநியோகங்களில் 40% பாக்கிஸ்தானில் தரை மூலம் கைபர் கணவாய் அல்லது சாமன் எல்லை வழியே இன்னமும் அனுப்பப்படுகின்றன.

அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகள் கொடுத்துள்ள தகவல்களின்படி, BBC, மற்றும் நியூயோர்க் டைம்ஸ் ஆகியவை ஆப்கானிஸ்தானுக்குள் செயல்படும் அமெரிக்கச் சிறப்புப் படைகள் பாக்கிஸ்தான் எல்லைப் புறத்தில் இருந்து தாக்குதல்கள் வந்திருப்பதை எதிர்கொள்ள வான் தாக்குதல்கள் தேவை என்று கூறியதாகத் தெரிவித்துள்ளன.

பாக்கிஸ்தானிய இராணுவம் இரட்டை சலாலா எல்லைச் சாவடிகளில் இருந்து தாக்குதல் ஏதும் தொடரப்படவில்லை என்று மறுத்து, அவைகள் இருக்குமிடம் அமெரிக்க, நேட்டோப் படைகளுக்கு நன்கு தெரியும் என்றும் வலியுறுத்தியது.

அமெரிக்க இராணுவ-உளவுத்துறைப் பிரிவுகளுடன் நெருக்கமான உறுவுகளைக் கொண்டு, பாதுகாப்புப் பகுப்பாய்வை சிறப்பாக மேற்கொள்ளும் நிறுவனமான Stratfor பாக்கிஸ்தானிய இராணுவத்தின் சலாலா தளம் கணிசமான அளவுடையது எனக் கூறியுள்ளது. பாக்கிஸ்தானிலுள்ள தன் ஆதாரங்கள் அமெரிக்காவும் நேட்டோவும் அதன் இருப்பிடம் பற்றிய தகவல்களை நீண்ட காலத்திற்கு முன்னரே பெற்றுள்ளன என்றும் இத்தளம் முன்பு நேட்டோ அதிகாரிகளால் பார்வையிடப்பட்டது என்றும் கூறியுள்ளது.

மனித உயிரைப் பற்றிச் சிறிதும் மதிப்புக் கொடுக்காமல், மீண்டும் சர்வதேசச் சட்டத்தை மீறி பாக்கிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த பென்டகன் முடிவு எடுத்தது என்பது தெளிவு.

உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் ஒரு முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடு என்று கருதும் பாக்கிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கிட்டத்தட்ட இந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து உறவுகள் நிலையான நெருக்கடிக்கு உட்பட்டுள்ளன.

முதல் வெளிப்பாடு ரேமண் டேவிஸ் விவகாரம் ஆகும்; இதில் அமெரிக்கா பாக்கிஸ்தானிய அரசாங்கத்தை மிரட்டி, விசாரணை இல்லாமல் லாகூர் சந்தை ஒன்றில் இரு பாக்கிஸ்தானிய இளைஞர்களைச் சுட்டுக்கொன்ற CIA செயற்பாட்டாளர் ஒருவரை விடுவிக்கச் செய்தது.

அதன்பின் மே மாதத் துவக்கத்தில் அமெரிக்க இராணுவம் பாக்கிஸ்தானுக்குள்ளே வெகுதூரம் நுழைந்து ஒசாமா பின் லேடனை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் வெளிப்படையான உத்தரவுகளையொட்டிக் கொன்றது. இதன்பின் பாக்கிஸ்தானிய நகரம் ஒன்றில் பின் லேடன் இருந்ததைக்காட்டி, தாலிபனுக்கு எதிரான எழுச்சி எதிர்ப்புத் தாக்குதல்களை நடத்துமாறு பாக்கிஸ்தானிடம் தன் கோரிக்கைகளை வலிமையாக எடுத்துரைத்தது.

இக்கோடைகாலம், அமெரிக்க காங்கிரஸ் பாக்கிஸ்தானுக்குக் கொடுத்துவந்த இராணுவ உதவி-பொருளாதார வளர்ச்சிப் பொதியில் மூன்றில் ஒரு பகுதியைத் தற்காலிகமாக நிறுத்தியது. அமெரிக்கக் கோரிக்கைகளுக்குப் பாக்கிஸ்தான் போதிய அளவு இணக்கமாக இல்லை என்ற காரணம் கூறப்பட்டது. சமீபத்திய வாரங்களில் உறவுகள் இன்னும் அழுத்தம் பெற்றன. அமெரிக்காவில் பதவியிலிருந்து ஓய்வுபெறும் கூட்டுப்படைகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லென் பாக்கிஸ்தானிய உளவுத்துறைக்குள் இருக்கும் சில கூறுபாடுகளை ஹக்கனி வலையமைப்புடன் பிணைப்புக்கள் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அந்த அமைப்பு தாலிபனுடன் பிணைப்புடைய போராளிக்குழுவாகும், அது ஆப்கானிஸ்தானில் பல அமெரிக்க, நேட்டோ படைகள்மீது வெற்றிகரத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பாக்கிஸ்தானை இன்னும் இறுக்கிக் கட்டும் வகையிலான முயற்சியில், வாஷிங்டன் பாக்கிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தபோதிலும், இன்னும் IMF கடன்களை அது பெறுவதற்குத் தான் உதவாது என்று கூறிவிட்டது.

அமெரிக்காவிற்கு எதிராக உள்ள நிலையில், பல தசாப்தங்கள் நீடித்த வாடிக்கையாளர்-புரவலர் உறவுகளைப் பென்டகனுடன் கொண்ட பாக்கிஸ்தானிய அரசாங்கமும் இராணுவமும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு விரோதப்போக்கு காட்டும் மக்களைத் திருப்தி செய்ய முயல்கின்றன. ஆப்கானியப் போர், இடைவிடாத அமெரிக்க மிரட்டல், அமெரிக்க ட்ரோன் தாக்குதல்கள் என்று வறிய கிராம மக்கள்மீது ஏவுகணைகள் பொழியப்படுதல் மற்றும் பாக்கிஸ்தான் மீது கொண்டுள்ள அரைக் காலனித்துவத் தளை பல தசாப்தங்களாக இருப்பது, பாக்கிஸ்தான்மீது தொடர்ச்சியான பல இராணுவச் சர்வாதிகாரங்களைச் சுமத்தியது ஆகியவை குறித்து ஆழ்ந்த சீற்றங்கள் உள்ளன.

ஆனால், பாக்கிஸ்தானிய உயரடுக்கின் பெருகிய முறையில் வாஷிங்டனுடனான உறவுகள் சிதைந்து வருவது கீழிருந்து வரும் சீற்றத்தை வெளிப்படுத்தும் முறையிலான முயற்சி என்பதைவிடக் கூடுதலான தன்மையைக் கொண்டுள்ளது

ஆப்கானிஸ்தானை மத்திய ஆசியாவின் எரிசக்தி செழிப்புடைய பகுதிக்கு முன்தளமாக மாற்றும் அமெரிக்க முயற்சி மற்றும் பாக்கிஸ்தானின் மற்றொரு முக்கிய நட்பு நாடான சீனாவைக் கட்டுப்படுத்தி அதன் முயற்சிகளைத் தகர்க்க நினைக்கும் உந்துதல் ஆகியவை பாக்கிஸ்தானிய ஆளும் வர்க்கத்தின் நலன்களைத் தீவிரமாக அச்சுறுத்துகின்றன. பெரும்பாலும் அமெரிக்கத் தூண்டுதலில், இஸ்லாமாபாத் பல தசாப்தங்களாக ஆப்கானியப் போர்களில் ஆழ்ந்துவிட்டது; 1980 களில் காபூலில் சோவியத் ஆதரவுடைய ஆட்சிக்கு எதிராக இஸ்லாமியவாத வலதுசாரிக் கெரில்லாக்களை அது 1980களில் இருந்து ஆதரித்ததிலிருந்து இது நடைபெறுகிறது. பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானை ஒரு நட்பு நாடாகவும் இந்தியாவுடனான போட்டியில் மூலோபாய ஆழத்தன்மை உடைய பகுதியாகவும் பயன்படுத்த முற்பட்டது.

ஆனால் அமெரிக்கா அதன் முந்தைய இஸ்லாமிய நட்பு நாடுகளுடன் உறவைத் துண்டிக்கக் கட்டாயப்படுத்தியது மட்டும் இல்லாமல், இந்தியாவை ஆப்கானிஸ்தானில் இன்னும் கூடுதலான பங்கைச் செலுத்தவும் ஊக்கம் கொடுத்தது; இதில் இராணுவப் பொலிஸிற்கான பயிற்சியும் அடங்கும். கடந்த மாதம் காபூலும் நியூ டெல்லியும் ஒரு மூலோபாயப் பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

காபூலிலுள்ள கைக்கூலி ஆட்சியை மாற்றி அமைக்கும்போது அமெரிக்கா தன்னை ஓரம் கட்ட முயல்வதாக இஸ்லாமாபாத் அஞ்சுகிறது. காபூல் மாற்றம் அமெரிக்கத் திட்டங்களின்படி தற்பொழுதைய ஆப்கானியப் போரின் விரிவாக்கம் மற்றும் ஆப்கானியர்கள் பெரும் படுகொலைகளினால் உளச்சோர்வு அடையும்போது சாதிக்கப்படலாம் என்பதாகும்; அதைத்தொடர்ந்து எழுச்சியாளர்களுடன் சமாதானப் பேச்சுக்கள் ஏற்படும்.

பாக்கிஸ்தானிய உயரடுக்கின் நிலைப்பாட்டில் இருந்து இதையும் விட ஆபத்து தருவது, இந்தியாவைத் தீவிரமாக சீனாவிற்கு மாற்றுக் கனமாக இருத்த அமெரிக்கா கொண்டுள்ள தீவிரத்தன்மைதான். உலக அணுசக்திக் கட்டுப்பாட்டு முறைக்குள் அமெரிக்கா இந்தியாவிற்குப் பிரத்தியேகமான அந்தஸ்தைப் பேச்சுக்கள் மூலம் அளித்துள்ளது: இந்த அந்தஸ்து குறிப்பாக பாக்கிஸ்தானுக்கு மறுக்கப்பட்டுவிட்டது. இதன்படி இந்தியா சிவிலிய அணுசக்தி வணிகத்தில் நேரடியாக ஈடுபட முடியும். இது புது டெல்லியை அதன் உள்நாட்டு அணு ஆயுத வளர்ச்சித் திட்டத்திற்கு குவிப்புக் காட்ட உதவும். வாஷிங்டன் இந்தியப் பெருங்கடலில் முக்கிய பங்கை இந்தியா ஆற்றுவதற்கு ஊக்குவிக்கிறது; இதற்காக சில நவீன ஆயுத முறைகளையும் அளித்துள்ளது.

இதை எதிர்கொள்ளும் வகையில், பாக்கிஸ்தான் சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளது; இது வாஷிங்டனுடன் கூடுதலான மோதலுக்குத்தான் வகை செய்கிறது.

அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே தீவிரமாகும், வெடிப்புத் தன்மையுடைய பிளவு அமெரிக்க இப்பொழுது உலக அரசியலில் காணப்படும் சட்டத்திற்குப் புறம்பான தீ வைக்கும் பங்கிற்குத்தான் உதாரணமாக உள்ளது.