World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Fed secretly loaned trillions to big banks

பெரிய வங்கிகளுக்கு பெடரல் ரிசர்வ் டிரில்லியன்களை இரகசியமாக கடனாகக் கொடுக்கிறது

Barry Grey
23 August 2011

Back to screen version

அமெரிக்க பெடரல் ரிசர்வ் போர்ட் கிட்டத்தட்ட இலவசக் கடன்களாக டிரில்லியன் கணக்கான டாலர்களை முக்கிய அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளுக்கு 2007 முதல் 2010 வரை நிதிய நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் இரகசியமாகக் கொடுத்துள்ளது என்று ஞாயிறன்று ப்ளூம்பேர்க் நியூஸில் வந்துள்ள ஒரு கட்டுரை தெரிவிக்கிறது. முன்பு இரகசியமாக வைக்கப்பட்ட பெடரல் ரிசர்வ் ஆவணங்களை ப்ளூம்பேர்க் சுயாதீன விசாரணை நடத்தியதை அடிப்படையைக் கொண்ட இக்கட்டுரை, ”வோல் ஸ்ட்ரீட் பிரபுத்துவம் 1.2 டிரில்லியன் டொலரைக் கடனாகப் பெடரல் ரிசர்விடமிருந்து பெற்றது என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.

தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தொகை சற்றே தவறானது ஆகும்; ஏனெனில் இது வோல் ஸ்ட்ரீட் உயரடுக்கின் மோசமான கடன்களைத் தீர்க்க அமெரிக்க மத்திய வங்கி எடுத்த ஏழு அவசரக்காலத் திட்டங்களின் கீழ் தீர்க்கப்படாத பெடரல் கடன்ககளை ஒரு தினத்தில் மிக அதிகமாகக் கொடுக்கப்பட்டதைத்தான் இது குறிக்கிறது. 1.2 டிரில்லியன் டொலர்கள் என்னும் தொகை திட்டத்தின் செயல்பாட்டின்போது வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகையைவிட சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் குறைவுதான்; வங்கிகள் பலமுறை பெடரலிடம் பெற்ற கடன்களும் இதில் அடங்கும்.

அமெரிக்கக் கருவூலம் தொந்தரவிற்குட்பட்ட சொத்துக்களுக்கான உதவித் திட்டம் (TARP) என்று கூறப்பட்ட முறையில் அளித்த 700 பில்லியன் டொலர்கள் ரொக்கப் பணங்களைவிட தொகைகள் மிகவும் அதிகம் ஆகும். அத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் 10 மிகப் பெரிய வங்கிகள் மொத்தம் 160 பில்லியன் டொலர்களை ரொக்கமாகப் பெற்றன; அதே நேரத்தில் ப்ளூம்பேர்க்  கூற்றின்படி அவை பெடரலில் இருந்து அவசரக்காலக் கடன்களாக 669 பில்லியன் டொலர்களைப் பெற்றன.

இக்கட்டுரை முன்னாள் நீதித்துறை அதிகாரியான ரோபர்ட் லிடனை மேற்கோளிடுகிறது; இவர் 1990களில் சேமிப்புக்கள் மற்றும் கடன் நெருக்கடி பற்றி விசாரணை நடத்திய குழுவில் இருந்தார். “இவை மிகப் பெரிய தொகைகள். அமெரிக்க நிதியப் பிரபுத்துவம் கூட்டாட்சிப் பணம் இல்லாமல் சரிந்துள்ளது எனப் பேசுகிறீர்கள் என்று அவர் கூறினார்.

ப்ளூம்பேர்க் அறிக்கை புஷ் அதன் பின் ஒபாமாவின் கீழ் அமெரிக்க முதலாளித்துவ அரசாங்கம் பொதுப் பணத்தைக் கொள்ளையடித்து நிதிய உயரடுக்கிற்குப் பிணை எடுப்புக் கொடுத்தது என்பது பற்றி அதிக தகவல்களைக் கொடுக்கிறது; அதேபோல் பெரும் தொகைகள் இதில் தொடர்பு கொண்டது பற்றியும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பணம்அதாவது வரிகொடுப்போரின் பணம்தங்கள் ஆடம்பர Ponzi திட்டங்களின் மூலம் நிதியச் சரிவு, பொருளாதாரச் சரிவைத் தூண்டிவிட்ட ஒட்டுண்ணிகளின் செல்வத்தைக் காத்தல் என்று வரும்போது வரம்பு இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்கூட்டியே வீடுகள் விற்பனைக்கு என வந்து வீடுகளை இழக்கும் நிலையில் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்கள் என்று வரும்போது அல்லது வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்தல் என்று வரும்போது ஒட்டுமொத்தமாகபணம் இல்லை என்றுதான் கூறப்படுகிறது.

உதாரணமாக டிசம்பர் 8, 2008ல் அவசரக்கால பெடரல் கடன்கள் 1.2 டிரில்லியன் டொலர்கள் என்று உச்சக்கட்டத்தை அடைந்தது, 4.38 மில்லியன் அமெரிக்க வீடுகளினால் கொடுக்கப்பட இயலாத அசலான 1.27 டிரில்லியன் டொலர்களுக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது என்று ப்ளூம்பேர்க்  கட்டுரை சுட்டிக்காட்டுகிறது; இவ்வீட்டு உரிமையாளர்கள் அடைமானத் தவணைகளைக் கொடுக்க முடியாமல் ஏற்கனவே 2.16 மில்லியன் மதிப்புடைய சொத்துக்கள் முன்கூட்டிய விற்பனையைக் கண்டன.

இப்பொழுது ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலுள்ள பிற அரசாங்கங்களும் அரசாங்கத்தை திவாலாக்கிய மொத்தப் பணத்தையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முற்படுகின்றன. 20ம் நூற்றாண்டு முழுவதும் பாடுபட்டுத் தொழிலாளர்கள் பெற்ற அனைத்துச் சமூக நலன்களும் தகர்க்கப்பட வேண்டும் எனக் கோருகின்றன.

பல மாதங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வேண்டுகோள்கள் விடுத்தபின்தான் ப்ளூம்பேர்க் பெடரல் ஆவணங்களைப் பரிசீலிக்க முடிந்தது; அந்த ஆவணங்களை பெடரல் ரிசர்வு கொடுக்க மறுத்திருந்தது; வழக்குகள் தலைமை நீதிமன்றத்தில் பதிவு என்ற உச்சக் கட்டத்தை எய்தின; ஏனெனில் அம்மன்றம் முக்கிய வோல் ஸ்ட்ரீட் வங்கிகளின் முறையீட்டைக் கேட்க மறுத்தது; இதைத்தவிர கடந்த ஆண்டு Dodd-Frank நிதிய மறுசீரமைப்புச் சட்டம் வேறு இயற்றப்பட்டிருந்தது. அந்த உபயோகமற்ற சட்டத்தின்படி பெடரல் கடன் வாங்குபவர்கள், வாங்கப்பட்ட தொகை குறித்து நிகழ்விற்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் வெளியிடலாம் எனக் கூறியிருந்தது.

பெடரலின் இந்த இரகசியக் கொள்கையில் இரு நோக்கங்கள் இருந்தன. முதலாவது வங்கிகளின் நிதி நிலைமை பற்றி மூடி மறைக்க உதவுவது ஆகும். மிகப் பெரிய ஒற்றை அவசரக்காலக் கடன்களைப் பெற்ற மோர்கன் ஸ்டான்லி, 2008 செப்டம்பர் கடைசியில்அதனிடம் வலுவான மூலதனம், நிதி நீர்த்தல் நிலைமை இருந்தது என்று செய்தி ஊடகத்திடம் கூறியது. அதே நேரத்தில் அதன் ரொக்கம் அனைத்தும் கிட்டத்தட்ட பெடரலிடம் இருந்து கடனாகப் பெற்ற 107.3 பில்லியன் டொலர்களிலிருந்துதான் வந்துள்ளது என்ற உண்மையை மறைத்துவிட்டது.

இரண்டாவது நோக்கம் அமெரிக்க மக்களிடம் இருந்து எந்த அளவிற்கு வங்கியாளர்களுக்கு பொதுப்பணம் திசைதிருப்பப்பட்டது என்பதை மூடிமறைப்பதாகும்.

இப்பொழுது வோல்ஸ்ட்ரீட் சரிவிற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின், அரசாங்கம் பிணை அளித்து மூன்று ஆண்டுகளுக்குப் பின், எந்தத் தீவிர நிதியச் சீர்திருத்தங்களும் செயல்படுத்தப்படவில்லை; எந்த வங்கி ஏகபோக உரிமைகளும் முறிக்கப்படவில்லை. அரசாங்கம் அவற்றைப் பறிப்பது ஒரு புறம் இருக்க, ஒரு பெரிய வங்கி நிறுவனம் கூட குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்படவில்லை; பெருமந்த நிலைக்குப் பின் மிக மோசமான நெருக்கடிக்குப் பொறுப்பான எவரும் கணக்குக்கூறக்கூட கோரப்படவில்லை. மாறாக, வங்கிகள் மிக அதிக இலாபங்களைப் பதிவு செய்துள்ளன; அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியங்கள் பெரிதும் உயர்ந்துவிட்டன; அதே நேரத்தில் வங்கிகளின் இருப்பில் மதிப்பே இல்லாத பல பில்லியன் டாலர்கள் அடைமானப் பாதுகாப்புப் பத்திரங்களும் உள்ளன.

இதே காலத்தில் வெகுஜன வேலையின்மை, ஊதியங்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் நலன்களைப் பெரிதும் குறைப்பதற்குப்  பயன்படுத்தப்பட்டது; அவர்களைச் சுரண்டுவதும் தீவிரமாகிவிட்டது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சமூக சமத்துவமின்மையும் பெருகிவிட்டது.

சமூகத்தை நிதிய உயரடுக்கின் நலனுக்காகக் கொள்ளை அடித்தது, பொருளாதாரப் பேரழிவிற்கு வழிவகுத்த அடித்தளப் பிரச்சினைகள் எதையும் தீர்க்கவில்லை. சமீபத்திய போக்குகள் காட்டியிருப்பதுபோல்உலகப் பொருளாதார வளர்ச்சிச் சரிவு, அமெரிக்கக் கடன்தர மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது, உலகப் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள், ஐரோப்பிய அரசாங்கங்களின் கடன் நிலைமை நெருக்கடி, முக்கிய ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் மீது நிதியச் சந்தைகளின் பெருகிய அழுத்தங்கள் போன்றவைநெருக்கடி இப்பொழுது இன்னும் அழிவுதரும் கட்டத்தில் நுழைந்துவிட்டது.

TARP நிதியில் 45 பில்லியன் டொலர்களைப் பெற்ற பாங்க் ஆப் அமெரிக்கா, அதன் கடன்கள் மீது உத்தரவாதமாக அரசாங்கத்திடம் 300 பில்லியன் டொலர்களையும், பெடரல் நெருக்கடிக் கடனாக 91.4 பில்லியன் டொலர்களையும் பெற்றது, இப்பொழுது மீண்டும் சரிவின் விளிம்பில் ஊசலாடுகிறது. இதன் பங்கு மதிப்பு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைந்துவிட்டது; இம்மாதம் மட்டும் 30 சதவிகிதம் குறைந்துவிட்டது. வங்கியின் பத்திரக் காப்பீடுகளின் விலைகள் கடந்த வாரம் செப்டம்பர் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவதற்கு முந்தைய வாரம் இருந்த உயர்மட்டத்தை அடைந்தது. கடந்த வாரம் பாங்க் ஆப் அமெரிக்கா இந்த ஆண்டு முன்னதாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த 2,500 பேர்களைத் தவிர மற்றும் ஒரு 3,500 பணிநீக்கங்களை அறிவித்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வரவிருக்கும் மாதங்களில் அவ்வங்கி இன்னும்10,000 வேலைகளைக் குறைக்க இருக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சிட்டிகுரூப்பின் பங்குகள் ஜனவரி 2009ல் பெடரல் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் உச்சக்கட்டத்தில் இருந்த தினத்தில் நிலவிய 28 டொலர்கள் ஒரு பங்கிற்கு என்பதைவிடக் குறைவாக விற்பனையாயின.

பெடரல் வோல்ஸ்ட்ரிட்டிற்குக் கொடுத்துள்ள இரகசியக் கடன்கள் நிதியத் துறையைச் சூழ்ந்துள்ள ஊழல் உறவுகளை உயர்த்திக் காட்டுகின்றன; அதேபோல் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவுகள், கடன் தர நிர்ணயிக்கும் அமைப்புக்களுடன் உள்ள ஊழல் உறவுகள் பற்றியும் உயர்த்திக் காட்டுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் செனட்டின் விசாரணைகள் பற்றிய நிரந்தரத் துணைக்குழு மிகப் பெரிய ஆவணத்தை வெளியிட்டு முறையான மோசடி பற்றி தகவல்கள் கொடுத்துள்ளது; அதேபோல் செப்டம்பர் 2008ல் வோல்ஸ்ட்ரீட் சரிவிற்கு வழிவகுத்த குற்றம் சார்ந்ததன்மை பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளது.

அறிக்கையை வெளியிட்ட செய்தியாளர் கூட்டத்தில், குழுவின் தலைவரான செனட்டர் கார்ல் லெவின் (மிச்சிகன், ஜனநாயகக் கட்சி) இந்த அறிக்கைஎப்படி நிதிய நிறுவனங்கள் வேண்டும் என்றே தங்கள் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது, எப்படி கடன் தர நிர்ணயம் செய்யும் அமைப்புக்கள் AAA தரத்தை உயர் இடர் உள்ள பத்திரங்களுக்குக் கொடுத்தன. எப்படி கட்டுப்பாட்டுப் பிரிவுகள் தங்களைச் சுற்றி நடக்கும் பாதுகாப்பற்ற, நெறியற்ற வழக்கங்களைக் கட்டுப்படுத்தாமல் பேசாமல் இருந்தன என்பதைப் பற்றிக் கூறுகின்றது. இந்த இழிந்த நிகழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இழையோடும் நலன்களின் மேல் பெரும் அச்சுறுத்தல்களாகும் என்றார்.

மற்றவற்றுடன், இந்த அறிக்கை விபரமாக எப்படி கோல்ட்மன் சாஷ்ஸ் மற்றும் Deutsche Bank ஆகியவை அடைமானச் சொத்து ஆதரவுடைய பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு தவறான அடிப்படையில் விற்றனர்; அதே நேரத்தில் பத்திரங்கள் தோல்வி அடையும் என அவையே பந்தயம் கட்டின என்றும் ஆவணப்படுத்தியுள்ளது.

அது வெளியிடப்பட்ட அன்றே இந்த அறிக்கை செல்லாப் பொருள் ஆகிவிட்டது; லெவின் உட்பட குழுவில் இருந்தவர்கள் எவரும் ஆவணத்தில் பட்டியிலடப்பட்டுள்ள சட்டவிரோதக் குற்றங்களைப்பற்றி விசாரணை வேண்டும் எனக் கோரவில்லை.

மாறாக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைக் குழு (SEC) கோல்ட்மன் சாஷ்ஸ் மற்றும் துணை முக்கிய அடைமானப் பெருநிறுவனம் Countrywide Financial ஆகியவற்றிக்கு எதிரான உரிமை இயல் வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொண்டுவிட்டது; இதையொட்டி பொது விசாரணைகள் தவிர்க்கப்பட்டன; அவை நிதிய நிறுவனங்கள் அரசாங்கத்தின் உடந்தையுடன் செய்த ஊழல் செயற்பாடுகள் அம்பலமாவது வெளிவராமற் போயின.

வங்கிகளைப் பற்றி மூடிமறைக்கும் அரசாங்கச் செயல்கள் தொடர்கின்றன. திங்களன்று, ப்ளூம்பேர்க் கட்டுரை வந்த மறுநாள், நியூ யோர்க் டைம்ஸ்  ஒபாமா நிர்வாகம் அடைமானப் பத்திரங்கள் விற்பனையில் வங்கி மோசடி பற்றிய அரசாங்க விசாரணைகளை தகர்க்க முற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இக்கட்டுரை நிர்வாகத்தின் அதிகாரிகள் நியூ யோர்க்கின் தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஷ்நீடெர்மன் வோல்ஸ்ட்ரீட் ஆதரவுடைய தவறுகளை முடித்துவிடுதல் என்ற திட்டத்தின் கீழ் வங்கிகள் முன்கூட்டிய விற்பனை பற்றி ஆவணங்களை ஒன்றாகக் காட்டுவது என்ற செயல்பாட்டிற்கு எதிர்ப்பைக் கைவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளது. இத்தீர்வு மாநில அரசாங்கங்கள் வங்கிகளின் மற்ற குற்ற நடவடிக்கைகளை விசாரணை செய்வதைத் தடைக்கு உட்படுத்திவிடும்.

கடந்த வாரம் ஒரு SEC தகவல் அளிக்கும் நிறுவனம் முக்கிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் நடைமுறைகள் பற்றிய விசாரணைகளில் வெளிவரக்கூடிய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அது அழித்துவிட்டது என்று கூறியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

இந்த உண்மைகள், நெருக்கடி ஒன்றும் தற்காலிகமானது அல்லது மனச்சிதைவினால் ஏற்பட்டது அல்ல என்பதைக் காட்டுகின்றன. இது முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வி பற்றிய ஒரு வெளிப்பாடு ஆகும்; இதன் அழுகிய தன்மை பொருளாதார, அரசியல் அளவில் உள்ள சில சமூகக் கூறுகளின் குற்றம் சார்ந்ததன்மை மற்றும் பேராசையின் மொத்த வடிவமாக உள்ளது. இதில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுவதுதான்.