WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lanka: Telecom trade union betray the struggle
இலங்கை: டெலிகொம் தொழிற்சங்கம் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது
W.A. Sunil
14 August 2011
use
this version to print | Send
feedback
இலங்கையில்
ஐந்து நாட்கள் தொடர்ந்த வேலை நிறுத்தம் உட்பட கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலமாகத்
தொடர்ந்த டெலிகொம் (எஸ்.எல்.டீ.) ஊழியர்களின் போராட்டம், தொழிசங்கத்துக்கும்
நிர்வாகத்துக்கும் இடையில் தொழில் ஆணையாளர் முன்னிலையில் ஆகஸ்ட் 10 அன்று
கைச்சாத்திடப்பட்ட
“புரிந்துணர்வு
உடன்படிக்கையின்”
பின்னர் இடை நிறுத்தப்பட்டது. தொழிற்சங்கம் உடன்பட்ட ஒப்பந்தத்தில்
தொழிலாளர்களின் 10 கோரிக்கைகளில் ஒன்றுக்குக் கூட எதிர்பார்த்த தீர்வு
கிடைக்கவில்லை.
டெலிகொம்,
மின்சார சபை மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தில் தொழிலாளர்கள்
எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினையை சுட்டிக்காட்டி, கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான
ஒரு வேலைத் திட்டத்தை முன்வைத்த சோசலிச சமத்துவக் கட்சி, தொழிற்சங்க தலைவர்களால்
தயார் செய்யப்பட்டு வந்த காட்டிக்கொடுப்பைப் பற்றி முன்கூட்டியே எச்சரித்திருந்தது.
(பார்க்க: இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்) இந்த
எச்சரிக்கை முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தந்தி
தொடர்பாடல் அதிகாரிகளின் சங்கம், தகவல் மற்றும் தந்தி அனைத்து ஊழியர்கள் சங்கம்
மற்றும் அனைத்து இலங்கை டெலிகொம் ஊழியர்கள் சங்கம் உட்பட 21 சங்கங்களின்
கூட்டமைப்பே இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு அழைப்புவிட்டிருந்தது.
இலங்கை
சுதந்திர தபால் மற்றும் தந்தி சேவை சங்கம், இலங்கை டெலிகொம் பாவனையாளர் சேவை
மற்றும் சமாந்தர சேவை சங்கம் உட்பட அரசாங்கத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் இந்த
எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக இருந்தன. ஆயினும் அந்த சங்கங்களில் இருந்து
குறிப்பிடத்தக்க அளவு உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர்.
கம்பனிக்கு
ஆதரவை வெளிப்படுத்திய தந்தி தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், ஆகஸ்ட் 5
அன்று டெலிகொம் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள
சங்கங்களுக்கு எதிராக
“கடுமையான
நடவடிக்கை”
எடுக்குமாறும், எதிர்ப்பில் பங்குபற்றிய டெலிகொம்முடன் இணைந்த மேன்
பவர் சொலுஷன் நிறுவனத்தில் (எம்.பீ.இ.எஸ்.) இணைத்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை
வெளியேற்றுமாறும் கேட்டுக்கொண்டது.
தொழிலாளர்களின் போராட்டத்தை தகர்ப்பதற்காக அரசாங்கமும் டெலிகொம் நிர்வாகமும்
ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டன. தொழிற்சங்கத் தலைவர்கள் மூவரையும்
செயற்பாட்டாளர்கள் 10 பேரையும் வேலை இடை நிறுத்தம் செய்த டெலிகொம் நிர்வாகிகள்,
வேலை நிறுத்தத்தை ஆரம்பித்த ஆகஸ்ட் 5ம் திகதியில் இருந்து ஏனைய வேலைத் தளங்களின்
ஊழியர்களுக்கும் கொழும்பு தலைமையகத்துக்குள் நுழைவதை தடை செய்தனர். அன்றே அவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை டெலிகொம் வளாகத்துக்குள்
நுழைவதை தடுக்கும் உத்தரவு ஒன்றையும் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்
பெற்றுக்கொண்டனர்.
தொழிற்சங்கங்களின் துரோகத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் அலட்சியம் செய்து 8,000
பேர் கொண்ட தொழிற் படையில் 6,000 பேர் வரை போராட்டத்தில் பங்குபற்றியதன் மூலம்,
தமது உரிமைகளுக்காக போராடுவதற்கு டெலிகொம் ஊழியர்கள் மத்தியில் காணப்படும்
உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் உணவு கொடுப்பனவை ரூபா 25,000 வரை அதிகரி, ஒப்பந்த
அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியமனம் வழங்கு, எம்.பீ.இ.எஸ்.
நிறுவனத்தை அகற்றி அதன் ஊழியர்களை டெலிகொம் நிறுவனத்தில் இணைத்துக்கொள், சம்பள
முரண்பாடுகளை அகற்று, வேலை வாய்ப்பில் 50 சதவீதத்தை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு
ஒதுக்கு மற்றும் நிர்வாக அதிகாரிகளின் இரகசிய சம்பள முறையை அம்பலப்படுத்து போன்றவை
போராட்டத்தின் பிராதன கோரிக்கைகளாகும்.
போக்குவரத்து மற்றும் உணவு கொடுப்பனவை 12,000 வரை அதிகரிக்கவும், எதிர்காலத்தில்
வேலை வாய்ப்பை நிரப்பும் போது நூற்றுக்கு 50 வீதம் ஊழியர்களின் பிள்ளைகளில்
“தகமை
உள்ளவர்களுக்கு”
வழங்கவும், எஞ்சிய 50 வீதத்தில் எம்.பீ.இ.எஸ். ஊழியர்களுக்கு
முன்னுரிமை வழங்கவும் மற்றும் சம்பள முரண்பாடு, பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு
சம்பந்தமாக தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்கவும் மட்டுமே
நிர்வாகம் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளது. அத்தகைய ஒரு குழு, கம்பனிக்கு ஆலோசனை
செய்யும் கூட்டுத்தாபனவாத கைப்பொம்மையாகவே செயற்படும். எம்.பீ.இ.எஸ். நிறுவனத்தை
அகற்றுவது மற்றும் அதன் ஊழியர்களை டெலிகொம் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளும்
கோரிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த
ஒப்பந்த தொழிலாளர்களே போராட்டத்தில் பங்குபற்றிய மிகவும் வறிய பகுதியினராவர். இந்த
ஊழியர் ஒருவரின் சராசரி மாத சம்பளம் ரூபா 15,000 ஆகும். அது டெலிகொம் ஊழியர்
ஒருவரின் சம்பளத்தை விட பாதிக்கும் குறைவாகும். எம்.பீ.இ.எஸ். தொழிலாளர்களின்
எதிர்ப்பை தணிப்பதற்காக அந்த கம்பனி வெளியிட்ட சுற்று நீரூபத்தில் அவர்களின்
சம்பளத்தில் நூற்றுக்கு 10 வீத அதிகரிப்பது அரசாங்க விடுமுறை நாட்களில் மேலதிக
நேரத்துக்கான கொடுப்பனவை இரட்டிப்பாக்குவது உட்பட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட
நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேவை இடை
நிறுத்தம் செய்யப்பட்ட தகவல் மற்றும் தந்தி அனைத்து ஊழியர் சங்கத்தின் தலைவர்
ஜீ.பி. குருசிங்க மற்றும் தந்தி தொடர்பாடல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும்
செயலாளர், டி.பீ. உபாலி திசாநாயக்க மற்றும் எல்.பி.ஆர்.எல். நிஸ்ஸங்க ஆகிய மூவரும்,
போராட்டத்தில் பங்குபற்றுமாறு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தமை போன்ற
நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக, நிர்வாகத்திடம் எழுத்து மூலம் மன்னிப்புக்
கோரவும், சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்ட தினங்களை சம்பளம் உள்ளடங்கிய விடுமுறை
நாட்களாக ஏற்றுக்கொள்ளவும் உடன்பாடு காணப்பட்டுள்ளமை, சங்கத் தலைவர்களின் அடிபணிவை
அம்பலப்படுத்துகிறது. நிர்வாகத்தின் வேட்டையாடலுக்கு வழிவகுக்கும் விதத்தில்,
எதிர்ப்பு இயக்கம் நடந்த காலத்துக்குள் வேறு ஊழியர்
“விஷமத்தனமான”
வேலையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்க நடவடிக்கை
எடுக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரிகளின் சம்பள முறையை
அம்பலப்படுத்துவதை கைவிடுவதற்கும் சங்கத் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.
போராட்டத்தை
கைவிட்டாலும் வேட்டையாடல் தொடர்ந்தும் நடக்கின்றது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட
தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என எம்.பீ.இ.எஸ். அதிகாரிகள்
குறிப்பிட்டிருந்தாலும், பணி அவசியத்துக்காக என கூறி, இப்போதே பல ஊழியர்கள் பல்வேறு
இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள்
இன்னமும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்தாலும், டெலிகொம் நிறுவனம் பிரமாண்டமான இலாபம்
பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதற் பாதியில் டெலிகொம்
நிறுவனத்தின் தூய இலாபம் ருபா 2.44 பில்லியன்களாகும். அது கடந்த ஆண்டை விட
நூற்றுக்கு 77 வீதமான அதிகரிப்பாகும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை தாங்க முடியாத
சுமை என சுட்டிக் காட்டினாலும், டெலிகொம் நிர்வாகம் நிர்வாக அதிகாரிகளுக்கு
பிரமாண்டமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை கொடுக்கின்றது. அவர்களது போக்குவரத்து
மற்றும் உணவு கொடுப்பனவு மட்டும் மாதத்துக்கு ரூபா 110,000 முதல் 200,000
வரையாகும்.
டெலிகொம்
போராட்டத்தை ஏனைய தொழிலாளர்களிடம் இருந்து தணிமைப்படுத்தி காட்டிக்கொடுப்பதை
தொழிற்சங்கத் தலைவர்களே தயார் செய்தனர். போராட்டத்தை சூழ ஏனைய தொழிலாளர்களின்
ஒத்துழைப்பை அணிதிரட்டுவதற்கு சங்கத் தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே காலத்தில் தோன்றியுள்ள மின்சார சபை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின்
போராட்டங்கள் அத்தகைய ஒரு ஐக்கியத்துக்கான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது என்று
சுட்டிக் காட்டிய போதிலும், அவர்கள் அதைச் செய்யவில்லை.
தொழிற்சங்க
தலைவர்கள், டெலிகொம் ஊழியர்களின் போராட்டத்தை கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு அன்றி,
தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்ட எதிர்ப்பை தணித்து இல்லாமல் ஆக்குவதற்காகவே
அழைப்பு விடுத்தனர்.
உலக சோசலிச
வலைத் தளத்துடன் பேசிய பல டெலிகொம் ஊழியர்கள், சங்கத் தலைவர்களின் காட்டிக்கொடுப்பு
சம்பந்தமாக தமது சீற்றத்தை வெளிப்படுத்தினர். எம்.பீ.இ.எஸ் நிறுவனத்தின்
தொழில்நுட்பட ஊழியர் இவ்வாறு குறிப்பிட்டார்:
“எங்களது
கோரிக்கைகளுக்காக தொடர்ந்தும் தொழிற்சங்கம் போராடும் என் நாம் எதிர்பார்த்தோம்.
ஆனால் நிர்வாகிகளின் ஒடுக்குமுறையின் எதிரில் சங்கங்கள் பின்வாங்கின. போராட்டத்தின்
ஆரம்பத்தில், கோரிக்கைகளை வெல்லாமல் போராட்டத்தை நிறுத்துவதில்லை என சங்கத்
தலைவர்கள் கூறினர். இந்த சங்கங்களுடன் எதிர்காலத்தில் எந்தவொரு போராட்டத்தையும்
முன்னெடுக்க முடியும் என எனக்கு நம்பிக்கை இல்லை. பலரது கருத்தும் அதுவே.”
சங்கத்
தலைவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக, தாம் அதிருப்தியடைந்திருப்பதாக ஒரு டெலிகொம்
பெண் ஊழியர் கூறினார்.
“ஊழியர்களுக்கு
எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சங்கம் உடன்படுவதன் மூலம், ஊழியர்கள்
வேட்டையாடப்படுவதற்கு அவர்கள் இடம் கொடுத்துள்ளது போலவே தெரிகின்றது. சில சங்கங்கள்
போராட்டத்தில் ஈடுபடுவதை நிராகரித்துள்ளதால் ஊழியர்கள் தைரியமிழந்தனர். நிர்வாகிகள்
பலமடைந்தனர்,”
என அவர் கூறினார்.
டெலிகொம்
தொழிற்சங்க தலைவர்கள் இந்தக் காட்டிக்கொடுப்பை தயார் செய்தது தனியாக அல்ல; அதற்காக
அவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை கூர்மையிழக்கச் செய்து கலைத்து விடுவதில்
நிபுணர்களான, தொழிற்சங்க மகா சம்மேளனம் (டீ.யூ.சி.) என்ற தொழிற்சங்க முகாமின்
தலைவர்களை உதவிக்கு அழைத்துக்கொண்டனர். இலங்கை வங்கி ஊழியர் சங்கம், சுகாதார சேவை
தொழிற்சங்க கூட்டமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல சங்கங்கள் இந்த
கூட்டமைப்பில் அடங்குகின்றன. முன்னாள் இடதுசாரிகளில் நவசமசமாஜக் கட்சியும் அதன்
தொழிற்சங்கமும் இந்த டீ.யூ.சி. சம்பந்தப்பட்ட தொழிற்சங்க காட்டிக்கொடுப்புகளுக்கு
இடது போர்வையை வழங்குகின்றது.
டீ.யூ.சி.
செயலாளர் சமன் ரத்னபிரிய, 9ம் திகதி நடந்த மறியல் போராட்டத்தில், டெலிகொம்
போராட்டத்தை சூழ பத்தாயிரக் கணக்கான அரச மற்றும் தனியார்துறை தொழிலாளர்களை
அணிதிரட்ட தான் தயார் என அறிவித்தார். இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர்
அமரபால கமகே, அரசாங்கம் தனியார்துறைக்காக கொண்டுவரத் தயாரான ஓய்வூதிய சட்டத்தை
“தோற்கடித்த”
எமக்கு டெலிகொம் போராட்டத்தை வெற்றிகொள்வது எப்படி என்பது தெரியும்
என தெரிவித்தார். அவர்களது வாய்ச்சவடால்களின் பின்னர் 24 மணித்தியாலத்துக்குள்,
டெலிகொம் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது.
விற்பனைச்
சந்தையில் தீவிரமான போட்டியை எதிர்கொண்டுள்ள டெலிகொம் நிறுவனத்தின் இலாப நலன்கள்
மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்டு இராஜபக்ஷ அரசாங்கத்தினால்
அமுல்படுத்தப்படுகின்ற தொழிலாளர் விரோத பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டத்துடன்
டெலிகொம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மோதுகின்றன. அதேபோல், டெலிகொம் நிர்வாகிகளும்
இராஜபக்ஷ அரசாங்கமும் நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டம், உலக முதலாளித்துவத்தின்
நிகழ்கால நெருக்கடியினுள் சகல நாடுகளிலும் உள்ள அரசாங்கங்களால்
நடைமுறைப்படுத்தப்படும், நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது
சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளின் பாகுமாகும். டெலிகொம்மிலும் ஏனைய இடங்களிலும்,
தொழிற்சங்கங்கள் இந்த வெட்டுக்களை தொழிலாளர்கள் மீது திணிக்கும் கருவிகளாக
மாறியுள்ளன.
டெலிகொம்
நிர்வாகத்தின் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்து நிறுவனத்துக்குள்
“சிறந்த
நிர்வாகத்தை”
ஏற்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை வெற்றிகொள்ள
முடியும், என தொழிற்சங்க தலைவர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரம், இந்த சங்கங்கள்
முதலாளித்துவ நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள விதத்தை வெளிப்படுத்துகின்றது.
நிறுவன
நிர்வாகிகளுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அழுத்தம் கொடுக்கும் வரம்புக்குள்
நின்றுகொண்டு, இன்று தொழிலாளர்களால் எந்தவொரு கோரிக்கையையும் வெற்றி கொள்ளவும்,
கடந்த காலத்தில் போராடிப் பெற்ற உரிமைகளை காத்துக்கொள்வதும் முடியாது.
இராஜபக்ஷ
அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாளர்களால்
தொழில், சம்பளம், வாழ்க்கை நிலைமகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
அது
சமூகத்தில் ஒரு சில செல்வந்தர்களதும் சர்வதேச மூலதனத்தினதும் தேவைகளை அன்றி,
தொழிலாளர்களதும் பெரும்பான்மை வெகுஜனங்களதும் பொருளாதார, சமூக மற்றும் ஜனநாயக
அபிலாஷைகளை இட்டு நிரப்பக்கூடிய, திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதார வேலைத்
திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை
ஆட்சிக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்ட, அனைத்துலக சோசலிச முன்னோக்கினால்
வழிநடத்தப்படும் அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும்.
தமது
போராட்டங்களின் படிப்பினைகளை டெலிகொம் தொழிலாளர்கள் ஆழமாக கிரகித்துக்கொள்ள
வேண்டும். தமது உரிமைகளை வெற்றிகொள்வதற்கான உண்மையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு
உள்ள பிரதான தடை தொழிற்சங்கமே ஆகும். தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து
பிரிந்து தமது போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கை குழுக்களை
ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும்.
சோசலிச
சமத்துவக் கட்சி,
“வளர்ச்சியடையும்
தொழிலாளர் போராட்டங்களுக்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்”
என்ற தலைப்பில் ஆகஸ்ட் 22 அன்று மாலை 4 மணிக்கு, கொழும்பு பொது நூலக
கேட்போர் கூடத்தில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில்
இந்த முன்னோக்கு பற்றி கலந்துரையாடப்படும். அதில் பங்குபற்றுமாறு டெலிகொம் மற்றும்
ஏனைய தொழிலாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். |