World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A socialist program for public sector workers in Sri Lanka

இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்

By the Socialist Equality Party (Sri Lanka)
8 August 2011

 Back to screen version

இலங்கையில் வாழ்க்கை தரம் மற்றும் வேலை நிலைமைகள் சீரழிந்து வருவதற்கு எதிராக இலங்கை தொலைத் தொடர்பு, மின்சார சபை மற்றும் அரசாங்க பல்கலைக்கழகங்கள் உட்பட பொதுத்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மத்தியில் போராட்டங்கள் வெடிக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பல ஆண்டுகளாக தொழிற்சங்கங்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், இப்போது தோன்றியுள்ள இத்தகைய போராட்டங்கள், தமது நலன்களுக்காக போராடுவதற்காக முழு தொழிலாள வர்க்கமும் கொண்டுள்ள ஆழமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களது இந்த போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குகிறது. அதே சமயம் சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை ஆட்சிக்கு கொண்டுவரவல்ல ஒரு முன்நோக்கின் அடிப்படையில், அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செயவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வெல்ல முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

* நிர்வாகத்துடனான சமரசத்துக்காக தொழிற்சங்கம் நடத்திய முயற்சி தோல்வியுற்றதை அடுத்து, ஸ்ரீலங்கா டெலிகொம் (எஸ்.எல்.டீ.) ஊழியர்கள் சம்பளம் மற்றும் நிலைமைகள் தொடர்பாக தமது போராட்டத்தை ஆகஸ்ட் 2 அன்று மீண்டும் ஆரம்பித்தனர். செவ்வாய்க் கிழமையிலிருந்து இரு தினங்களாக சுகயீன விடுமுறை பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், வியாழக் கிழமை கொழும்பில் மறியல் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

மாதாந்த போக்குவரத்து மற்றும் உணவு கொடுப்பனவை 25,000 ரூபா வரை உயர்த்துதல், எஸ்.எல்.டீ.யின் துணை நிறுவனங்களுக்கு மன் பவர் சொலுஷன் நிறுவனத்தின் (எம்.பீ.எஸ்.சி.) ஊடாக ஆட்சேர்க்கும் முறைமையை நிறுத்தி, எம்.பீ.எஸ்.சி. ஊழியர்களையும் எஸ்.எல்.டீ.யில் இணைத்துக்கொள்ளல், எதிர்கால நியமனங்களில் 50 சதவீதத்தை சேவையில் இருப்போரது பிள்ளைகளுக்கு ஒதுக்குதல், ஊழியரது சம்பள வேறுபாடுகளை அகற்றல் என்பன எஸ்.எல்.டீ. ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ளடங்கியுள்ளன.

தொலைத் தொடர்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரச்சினையை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறி, தொலைத்தொடர்பு தொழிற்சங்க கூட்டமைப்பு (டீ.டீ.யூ.ஏ.) மூன்று வாரங்களுக்கு முன் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நிறுத்தியிருந்தது. எவ்வாறெனினும், நிர்வாகம் அவர்களது கோரிக்கைகளை நிராகரித்ததுடன், எஸ்.எல்.டீ. தனியார் நிர்வாகத்தில் இருப்பதால் அதில் தலையீடு செய்ய அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியது. பல காலத்துக்கு முன்னரே எஸ்.எல்.டீ. தனியார்மயப்படுத்தப்பட்டு இருந்தாலும், அரைவாசிப் பங்கை அரசாங்கம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

நிர்வாகம் போக்குவரத்து மற்றும் உணவு கொடுப்பனவை மாதம் 11,250 ரூபா வரை அதிகரிக்கவும், எதிர்கால நியமனங்களில் அதன் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 50 சதவீதம் ஒதுக்குவதற்கும் மட்டுமே இணக்கம் தெரிவித்திருந்த்து. எல்லாவற்றுக்கும் மேலாக, எஸ்.எல்.டீ. ஏற்கனவே ஊழியர்களுக்கு எதிரான தண்டனையளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

* பத்து மாத காலமாக எஞ்சியுள்ள சம்பளத்தை கொடுக்கக் கோரி 1,500 க்கும் மேற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் கடந்த 29ம் திகதி கொழும்பு தலைமைக் காரியாலயத்தின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் வடக்கு கிழக்கில் இருந்து வந்திருந்த தமிழ் பேசும் ஊழியர்களும் அடங்குவர். தொழிற்சங்கங்களது மட்டுப்படுத்தப்பட்ட அழைப்புக்கிணங்கி ஆகஸ்ட் 3 அன்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சுகயீன விடுமுறை இட்டு வேலைக்கு செல்வதை தவிர்த்து இருந்தனர்.

பல மாதங்கள் நீடித்த பிரச்சாரத்தின் பின், 2009 நவம்பர் மாதம் மின்சாரசபை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருப்பினும் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு என்று கூறி அரசாங்கம் பத்து மாதகால சம்பளத்தை பலாத்காரமாக நிறுத்தி வைத்திருந்தது.

எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பீ.) சார்ந்த மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் தலைமையிலான மின்சார சபை தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டமைப்பு, தொழிற்சங்க நடவடிக்கையை புதுப்பிக்க அழைப்பு விடுத்தது. தமது ஏனைய அரசாங்கத் துறை தொழிற்சங்க சமதரப்பினரைப் போலவே, இந்த தொழிற்சங்க கூட்டமைப்பும், 2009ல் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளித்ததோடு, அந்த மோதல்களின் பொருளாதார சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தின.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களிடையே அதிருப்தி வளர்ச்சியடைந்த நிலையில் பல்கலைக்கழக தொழிற்சங்கம் ஆகஸ்ட் 4 அன்று மறியல் போராட்டம் ஒன்றை நடத்தியது. சம்பள அதிகரிப்பு, சம்பள முரண்பாடுகளை அகற்று, இலவச கல்வியை தனியார்மயப்படுத்துவதை நிறுத்து, போன்ற கோரிக்கைகளை அவர்கள் உள்ளடக்கியிருந்தனர்.

இதே கோரிக்கைகளை முன்வைத்து 2007 ஏப்பிரலில் 15 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஜே.வி.பீ. தலைமையிலான அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி எந்தவொரு கோரிக்கையையும் வெற்றிகொள்ளாமல் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டு, டசின்கணக்கான ஊழியர்களை வேட்டையாடுவதற்கு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு வழியமைத்துக் கொடுத்தது.

தொழிலாளர்களின் போராட்டம் இவ்வாறு மீண்டும் தலைதூக்குவதானது, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத் தர சீரழிவு சம்பந்தமாக குவிந்துவரும் எதிர்ப்பின் பாகமாகும்.

மே மாதம், 40,000க்கும் அதிகமான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தை மென்மேலும் வெட்டிச் சாய்க்க அரசாங்கம் கொண்டுவர முயற்சித்த ஓய்வூதிய சட்டத்துக்கு எதிராக தொழிற்சங்கங்களையும் மீறி போராட்டத்தில் இறங்கினர். அவர்களது போராட்டத்தை வன்முறையில் நசுக்கிய பொலிசார், ஒரு தொழிலாளியை கொன்று நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தினர். சுதந்திர வர்த்தக வலைய மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் தொழிற்சங்கம் (FTZGSWU) உட்பட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அணிதிரட்டவோ அல்லது பாதுகாக்கவோ எதுவும் செய்யவில்லை.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நூற்றுக்கு 200 சதவீத சம்பள உயர்வு கோரி மூன்று மாத காலமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். எவ்வாறெனினும்  கொடுப்பனவுகளில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகரிப்பினை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனம் (FUTA) ஜூலை 22 அன்று போராட்டத்தை காட்டிக்கொடுத்தது.

இப்போது போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்கள் இரு அடிப்படை விடயங்களில் கவனமாக அக்கறை செலுத்த வேண்டும்.

முதலாவது, உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் விளைவாக, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கம் தாம் முன்னர் வெற்றிகொண்ட நன்மைகளுக்கு எதிராக உலகம் பூராவும் தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. உலக முதலாளித்துவமானது 1930களின் பின் இதுவரை காலமும் எதிரக்கொள்ளாத பாரிய நெருக்கடிக்குள் கடந்த மூன்று ஆண்டுகளாக மூழ்கிப் போயுள்ளது. சர்வதேச வங்கியாளர்களும், சர்வதேச நாணய நிதி போன்ற அவர்களது முகவர்களும் இந்த வீழ்ச்சியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சம்பளம், ஓய்வூதியம், தொழில், சமூக நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நன்மைகளை கூட்டுத்தாபன கும்பல்கள் ஒரு சமூக எதிர்ப் புரட்சியினுள் கடுமையாக வெட்டிக் குறைப்பதற்கு எதிராக தொழிலாளர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகள் ஊடாக இலங்கை அரசாங்கத்தாலும் இதே போன்ற தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைத்தல் மற்றும் கல்வியை தனியார்மயமாக்குவது போன்ற சந்தை சார்பு சீர்திருத்தங்கள் இதில் அடங்கும்.

அதன் வர்த்தக-சார்பு கொள்கைகள் மீதான தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் சகித்துக்கொள்ளத் தயாரில்லை என்பதை அரசாங்கம் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் மீதான கொடூரமான தாக்குதல் மூலம் எடுத்துக் காட்டியுள்ளது.

இரண்டாவதாக, தொழிற்சங்களும் அவற்றின் அதிகாரிகளும் தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக அவர்கள் அரசாங்கத்தினதும் கூட்டுத்தாபன கும்பல்களதும் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவை மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்கு அழைப்பு விடுப்பது தொழிலாளரிடையே வளரும் அதிருப்தியை தணியச் செய்து, எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் தடுப்பதற்கே ஆகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் மற்றும் அது பாதுகாக்கின்ற இலாப முறைமைக்கும் எதிரான ஒரு நனவுபூர்வமான அரசியல் போராட்டம் இன்றி சம்பளம், ஏனைய நன்மைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராட முடியாது என்பதே கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களின் போராட்டங்களில் நிரூபிக்கப்பட்ட பிரதான படிப்பினையாகும்.

அத்தகைய எந்தவொரு அரசியல் போராட்டத்துக்கும் எதிராக, அரசாங்கத்துக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் பயனற்ற அழுத்தங்களை கொடுப்பதில் ஈடுபடுவதன் மூலம் தொழிலாளர்களால் தமது உரிமைகளை பேணிக்கொள்ள முடியும் என்ற மாயையை தொழிற்சங்கங்கள் பரப்புகின்றன. அவர்களது பிரச்சாரங்கள் பிரதானமாக கறுப்பு அங்கி அணிதல், கறுப்பு பட்டி அணிதல் அல்லது சுகயீன விடுமுறை எடுத்தல் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட அடையாள எதிர்ப்புக்களாகவே உள்ளன.

தமது அடிப்படை உரிமைகள் மற்றும் நிலைமைகளை காப்பதற்கு, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் மற்றும் அவர்களது முன்னாள் இடதுசாரி ஆதரவாளர்களில் இருந்தும் பிரிந்து, தமது போராட்டத்தை முன்கொண்டு செல்லும் பொருட்டு புதிய அமைப்புகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் சகல வேலைத் தலங்களிலும் தமது அங்கத்தவர்களது நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, அக்குழு ஊடாக பொதுவான தொழில்சார் மற்றும் அரசியல் நடவடிக்கையில் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி ஆலோசனை தெரிவிக்கின்றது.

ஆயினும், போர்க்குணம் மிக்க செயற்பாடுகள் மட்டும் போதாது. ஒரு புதிய அரசியல் வேலைத் திட்டம் அவசியமாகும். தொழிலாளர்களால் சீர்திருத்தவாத அல்லது தேசியவாத முன்நோக்குடன் தமது வர்க்க நலன்களை காப்பாற்ற முடியாது. பொருளாதாரத்தை ஒரு சில செல்வந்தர்களது நலனுக்காக அன்றி, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு ஏற்றவாறு முழுமையாக மறு ஒழுங்கு செய்வது அவசியமாகும். அத்தகைய சோசலிச வேலைத் திட்டம், வங்கிகள் மற்றும் பெரும் தொழிற்துறைகளை தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கும். தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, விவசாயிகளதும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களதும் கூட்டுடன் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகளை அமுல்படுத்த முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோக்கை கற்று, இந்த வேலைத் திட்டத்துக்காக போராடுவதற்கு அவசியமான வெகுஜனப் புரட்சிகர கட்சியாக அதை கட்டியெழுப்ப இணையுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.