World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

NATO’s puppet regime in Libya falls apart

லிபியாவில் நேட்டோவின் கைப்பாவை ஆட்சி வீழ்ச்சியடைந்தது

Peter Symonds
13 August 2011

Back to screen version

இந்த வாரம் பெங்காசியை மையமாக கொண்ட லிபிய எதிர்ப்பின் ஒட்டுமொத்த மந்திரிசபையும் கலைக்கப்பட்டமை, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் லிபியா மீது திணிக்க விரும்புகிற ஆட்சியின் ஜனநாயக-விரோத, கோஷ்டி-பிளவு குணாம்சத்தை அம்பலப்படுத்தி உள்ளது. மக்கள் ஆதரவில்லாததால் லிபிய தலைவர் மௌம்மர் கடாபியை வெளியேற்றும் முயற்சியில் ஓர் இராணுவ நடவடிக்கையில் திக்குமுக்காடி நிற்கும், தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்ட இடைக்கால தேசிய குழு (TNC), வன்மையான உள்மோதல்களில் அகப்பட்டுள்ளது.

ஜூலை 28இல் அவ் அமைப்பின் இராணுவ தலைவர் ஜெனரல் அப்தெல் பதாஹ் யூனிஸ் விளக்கமேதுமின்றி படுகொலை செய்யப்பட்ட பின்னர், திங்களன்று இடைக்கால தேசிய குழுவின் செயற்குழுவைக் கலைப்பதாக அதன் தலைவர் அப்துல் முஸ்தபா ஜலீல் உத்தரவிட்டார். இடைக்கால தேசிய குழுவின் பிரதம மந்திரி என்று அழைக்கப்படும் மஹ்முத் ஜிப்ரீல் மட்டும் தான் அடுத்த மந்திரிசபையை ஏற்படுத்த தக்க வைக்கப்பட்டுள்ளார். சீர்குலைவின் மற்றொரு அறிகுறியாக, பரவலாக இடைக்கால தேசிய குழுவின் பதாகையின்கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு தன்னிச்சையான போராளிகள் குழுக்களின் உறுப்பினர்கள் குழுவாக அல்லாமல் தனித்தனியாக இடைக்கால தேசிய குழுவின் ஆயுதபடைகளுடன் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டுமென ஜலீல் வலியுறுத்தினார்.

நீதி கோரிவரும் யூனிஸ் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும்  மற்றும் பலம்வாய்ந்த ஓபெய்தி பழங்குடியினரின் கோரிக்கைகளினாலும் மற்றும் பெப்ரவரி 17 கூட்டணியிடமிருந்து வரும் அழுத்தங்கள்கீழ் ஜலீல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த பெப்ரவரி 17 கூட்டணி என்பது, இடைக்கால தேசிய குழுவிற்குள் அதிகமாக இஸ்லாமியவாதிகள் செல்வாக்கு பெற்றுவருவதை விமர்சிக்கும் லிபிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் ஒரு மதசார்பற்ற குழுவாகும். மந்திரிசபை கலைக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டவுடன், ஒரு இடைக்கால தேசிய குழுவின் செய்தி தொடர்பாளர், யூனிசின் படுகொலைக்கு இட்டுச்சென்ற நிர்வாக முறைகேடுகளுக்கு" மந்திரிசபை தான் பொறுப்பு என்றார்.

கசப்பான பரஸ்பர குற்றச்சாட்டிற்குரியவொரு விஷயமாகி உள்ள யூனிஸின் கைது மற்றும் படுகொலைக்கு எந்த உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவர் பெங்காசி எதிரணிக்கு மாறுவதற்கு முன்னர் கடாபியின் உள்துறை மந்திரியாக இருந்தார். அத்தோடு சிறப்புப்படை துருப்புகளும் அவர் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தன.

1990களின் மத்தியில் எழுந்த ஓர் இஸ்லாமிய எழுச்சிக்கு ஜெனரல் (யூனிஸ்) காட்டிய காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்குப் பழிதீர்க்கவும், மற்றும் இடைக்கால தேசிய குழுவின் இராணுவ பிரிவுகளை அவருடைய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும் அவருடைய முயற்சிகளைத் தடுக்கவும் அவர் ஓர் இஸ்லாமிய போராளிகள் குழுவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று யூனிஸிற்கு நெருக்கமானவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் அல்கொய்தாவோடு நெருக்கமுடைய லிபிய இஸ்லாமிய போராளிகள் குழு (LIFG) ஆகியவற்றின் வழிவந்தவை உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், புரட்சிகர படைகளின் கூட்டு (Union of Revolutionary Forces) என்றழைக்கப்படும் இடைக்கால தேசிய குழுவின் கட்டுப்பாடற்ற இராணுவக்குழு குடையில், முக்கிய இடத்தில் உள்ளன.

கனடாவின் Globe and Mail இதழில் கடந்தவாரம் வெளியான ஒரு கட்டுரை, தம்மைத்தாமே "ஒரு மிதவாதி" என்று கூறிக்கொள்ளும் மொஹம்மத் புஷித்ரா தலைமையிலான இஸ்லாமிய படைகளின் அதிகரித்துவரும் அட்டூழியங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. முஸ்லீம் சகோதரத்துவம், மதகுரு இஸ்மாயில் அல்-சலாபி தலைமையிலான பெப்ரவரி 17 மாவீர்ர்கள் படைப்பிரிவு, மற்றும் இன்னும் ஏனைய பல இஸ்லாமிய மதக்குருக்களை அவருடைய வலையமைப்பு உட்கொண்டிருக்கிறது. Globe and Mail இதழுக்கு புஷித்ரா அளித்த நேர்காணலில், கடாபிக்கு பிந்தைய லிபியாவில் அவர் ஓர் இஸ்லாமிய அரசியலமைப்பை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், தற்போது தோஹாவில் இருக்கும் இஸ்மாயிலின் சகோதரர் ஷேக் அல்-சலாபியை ஜனாதிபதியாக இருத்த அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

யூனிஸ் படுகொலைக்கு ஓர் இஸ்லாமிய போராளிக்குழுவைக் குற்றஞ்சாட்டாத இஸ்மாயில் அல்-சலாபி, கடாபியின் புல்லுருவிகளைக் குற்றஞ்சாட்டி இருந்தார். இடைக்கால தேசிய குழுவிற்குள் கோஷ்டி பதட்டங்கள் கூர்மைப்பட்டிருக்கும் நிலையில், அவருடைய படைப்பிரிவுகள் டஜன் கணக்கான "கடாபியின் விசுவாசிகளைச்" சுற்றி வளைத்துள்ளன. சந்தேகத்திற்கிடமின்றி "கடாபியின் விசுவாசிகளில்" அரசியல் எதிர்ப்பாளர்களும் உள்ளடங்கி உள்ளனர். இன்றைய நிலைமையில், ஓர் ஒருங்கிணைந்த இராணுவ படைக்குள் ஒன்றிணைய உத்தரவிடும் இடைக்கால தேசிய குழுவின் கட்டளைக்குக் கீழ்படிய எந்தவொரு போராளிக்குழுவும் கூட தயாராக இல்லை.

யூனிஸ் படுகொலையில் இருக்கும் மூன்றாவது காரணியாக, கேள்விக்குரிய இராணுவ நபரான கலீபா ஹிப்டர் உள்ளார். இவர் CIA உடன் நீண்டகால கூட்டு வைத்திருந்த ஒரு முன்னாள் லிபிய இராணுவ தளபதியாவார். இடைக்கால தேசிய குழுவின் இராணுவப்பிரிவு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதில் இவர் யூனிஸ் உடன் மோதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளரா இல்லையா என்பதற்கப்பால், இடைக்கால தேசிய குழுவில் ஹிப்டரின் பிரசன்னம், பெங்காசியில் நடக்கும் இழிந்த சூழ்ச்சிகளில் பல்வேறு மேற்கத்திய உளவுத்துறைகளும் ஈடுபட்டுள்ளன என்பதை உறுதி செய்கிறது.

யூனிஸ் படுகொலைக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரியாக இருந்த இடைக்கால தேசிய குழுவின் ஜனாதிபதி ஜலீலே கூட, என்ன நடந்ததென்பதற்கு எந்த விபரங்களையும் கூறவில்லை. அனைத்திற்கும் மேலாக, இஸ்லாமியர்கள், கடாபியின் முன்னாள் அதிகாரிகள், CIA ஆதரவாளர்கள் மற்றும் ஒன்றிணைந்த சாகசக்கார்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்கள் என அவருடைய பலமற்ற கூட்டணியின்  கட்டுப்பாட்டை வைத்திருக்க, அவர் தம்முடைய ஒட்டுமொத்த "மந்திரிசபையையும்" கலைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

லிபியாவில் நேட்டோவின் குண்டுவீச்சு பிரச்சாரத்திற்கு உற்சாகமூட்டும்-தலைவர்களாக நடந்துகொண்ட அமெரிக்க பேராசிரியர் ஜூவான் கோல் போன்ற தாராளவாதிகள் மற்றும் அனைத்து போலி இடது அமைப்புகள் ஆகியோருடன் சேர்ந்து ஒபாமா நிர்வாகத்தின் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் நாசகரமான குற்றத்தன்மையே இதிலிருந்து வெளிப்படுகிறது. நேட்டோவால் லிபியாவில் நிறுவப்பட்ட ஒரு இடைக்கால தேசிய குழுவின் ஆட்சியானது, கடாபி தலைமையிலான ஆட்சியைப் போலவே குறைந்தபட்சம் ஊழல் நிறைந்த மற்றும் ஒடுக்குமுறை ஆட்சியாகவே இருந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் இடைக்கால தேசிய குழுவை  இராஜாங்கரீதியில் அங்கீகரித்திருந்த போதினும் கூட, இடைக்கால தேசிய குழுவின் ஜனநாயக-விரோத மற்றும் கூலிப்படை குணாம்சம் மிகவும் வெளிப்படையாக வெளிப்பட்டுள்ளது. யூனிஸ் படுகொலையைத் தொடர்ந்து வந்த கோஷ்டி உட்சண்டைகளுக்கு இடையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய நாடுகளும் லிபிய தூதரகங்களை கடாபியின் எதிர்ப்பாளர்கள் வசம் ஒப்படைத்துள்ளன. ஆனால் அதேவேளையில் அதே சக்திகள், அவற்றின் பெங்காசியிலுள்ள கருத்துமுரண்பட்ட கைப்பாவைகள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கவும், அவற்றிற்கு நிதியுதவி வழங்கவும், லிபியாவின் வெளிநாட்டு நிதியியல் சொத்துக்கள் மீது ஓர் இறுக்கமான பிடியை வைத்துள்ளன.

இடைக்கால தேசிய குழு போன்றவொரு குழுவிற்கு ஆதரவளிக்கும் நேட்டோ சக்திகளின் முடிவானது, லிபியாவில் பொதுமக்களைப் பாதுகாக்கும் அல்லது ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கத்தில் அவற்றின் தலையீடு இல்லை, மாறாக அவற்றின் மூலோபாய மற்றும் பொருளாதார விருப்பங்களை முன்னெடுப்பதே ஆகும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. லிபியாவின் கணிசமான எண்ணெய்வள ஆதாரவளங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது மற்றும் அப்பிராந்தியத்தில் எழும், அனைத்திற்கும் மேலாக எகிப்தில் எழும், புரட்சிகர போராட்டங்களை ஒடுக்கவும், கட்டுப்படுத்தவும் வடக்கு ஆபிரிக்காவில் ஒரு நுழைவுத்தளத்தை உருவாக்குவது ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

கடாபி எக்கணமும் வீழ்வார் என்று பல மாதங்களாக நேட்டோ மந்திரிமார்கள் பறைசாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இடைக்கால தேசிய குழுவின் இராணுவ முயற்சிகள் ஒரு ஸ்தம்பிதநிலைக்கு வந்த பின்னர், திரிப்போலியில் எழும் ஓர் எழுச்சி அல்லது அவருடைய ஆட்சியின் உட்கூறுகளால் கடாபிக்கு எதிராக ஏற்படும் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த ஊகங்களுக்கு கவனம் திசைதிரும்பியது. கடாபி அதிகாரத்தில் அவருடைய பிடியைத் தக்க வைத்துள்ள நிலையில், பெங்காசியில் உள்ள இடைக்கால தேசிய குழு தற்போது இன்னும் அதிகப்படியாக தடுமாறி வருகிறது. அனைத்திற்கும் மேலாக, யூனிஸ் படுகொலை, கடாபியின் விசுவாசிகள் மத்தியில் இடைக்கால தேசிய குழுவை தோற்கடிக்க இன்னும் அதிகப்படியான நம்பிக்கையைத் தூண்டிவிடும்.

இடைக்கால தேசிய குழுவின் செயற்குழு கலைக்கப்பட்டதற்கு விடையிறுப்பாக, “பிரதிபலிப்பு" மற்றும் "புதுப்பிப்புக்கு" ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை ஓர் அறிக்கை வெளியிட்டது. இத்தகைய சாந்தமான குறிப்புகள், இடைக்கால தேசியக் குழுவின் ஜனாதிபதி ஜிப்ரிலுக்கும், அவருடைய அணிக்கும் வாஷிங்டன் அளிக்கும் தொடர்ச்சியான ஆதரவையே பிரதிபலிக்கின்றன. அதேவேளை அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஐயத்திற்கிடமின்றி, Globe and Mail குறிப்பிட்டதைப் போல, புஷீத்ராவைச் சுற்றியுள்ள இஸ்லாமிய குழு உட்பட, ஏனைய அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

பெங்காசியில் நடக்கும் சூழ்ச்சிகளும், உட்சண்டைகளும் நேட்டோ இராணுவத்தின் லிபிய தலையீட்டில் உள்ள நவ-காலனித்துவ குணாம்சத்தை எடுத்துக்காட்டவே உதவுகின்றன. கடாபிக்கும், அவருடைய முதலாளித்துவ எதிர்ப்பாளர்களுக்கும் எதிராக லிபியாவிலும், அப்பிராந்தியத்திலும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே தற்போதைய அரசியல் முட்டுச்சந்திற்கு ஒரு முற்போக்கான பாதையை அளிக்கக்கூடும்.