World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan: Report lifts veil on military and intelligence apparatus’ savage repression in Balochistan

பாக்கிஸ்தான்: பலோசிஸ்தானில் இராணுவ உளவுத்துறை அமைப்பின் காட்டுமிராண்டித்தன அடக்குமுறை பற்றிய மறைப்பை அறிக்கை அகற்றுகிறது

By Ali Ismail 
11 August 2011


Back to screen version

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW) கடந்த மாதக் கடைசியில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று பாக்கிஸ்தானின் இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புக்கள் நாட்டின் மிற வறிய மாநிலமான பலோச்சில் பிரிவினவாதிகள் மற்றும் தேசியவாதிகளை நசுக்குவதற்கு பயன்படுத்தும் மிருகத்தன, மனிதத் தன்மையற்ற தந்திரோபாயங்கள் பற்றி பேரழிவு தரும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

பலோசிஸ்தானில் பரந்த அளவில் மக்களைக்காணாமற்போய்விடச் செய்யும் பழக்கம் உள்ளதை 132-பக்க அறிக்கை ஆவணமிட்டுக் காட்டுகிறது; பாக்கிஸ்தானின் தீய பாதுகாப்புப் படைகள் எப்படி கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகளை நீண்டகாலமாக இடருறும் பலோச் மக்களை அடிபணியவைக்க அச்சுறுத்துல் வகையில் ஈடுபடுகிறது என்றும் காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை PPP தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் இழி செயற்பாடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் ஆகும்; அது எவ்வாறு பலோசிஸ்தானிலும் மற்ற இடங்களிலும் சிறிதும் அச்சமின்றிக் கொடூரங்களைப் பாக்கிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து செய்கின்றன என்றும் கூறுகிறது.

நாங்கள் சித்திரவதை செய்யலாம், கொலை செய்யலாம் அல்லது உங்களைப் பல ஆண்டுகள் காவலில் வைத்திருக்கலாம்”: பலோசிஸ்தானில் பாக்கிஸ்தான் பாதுகாப்புப் படைகள் குடிமக்களைக் கட்டாயமாக காணாமற் செய்துவிடுகிறது.” என்ற தலைப்பில் உள்ள இந்த அறிக்கை நூற்றுக்கணக்கான பேர்களுடன் நடத்திய பேட்டிகளின் அடிப்படையில் உள்ளது; இதில்காணாமற்போயிருப்பவர்களின் உறவினர்கள், இரகசியமாக காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள், உள்ளூர் மனித உரிமைச் செயலர்கள் மற்றும் பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படையினர் நடத்திய கடத்தல்கள், கொலைகள் ஆகியவற்றில் இருந்து வக்கீல்கள், சாட்சிகள் ஆகியோர் அடங்குவர். ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் செயலர்கள் மற்றும் செய்தியாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வுகள் பாக்கிஸ்தானின் பாதுகாப்புப் படைகள், குறிப்பாக உளவுத்துறை அமைப்புக்கள், பலோச் தேசிய இயக்கத்தில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இனவழி பலோச்சுக்களை கட்டாயமாகக் காணமற்போகச் செய்வது பற்றிய இலக்கைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன என்று அறிக்கை கூறுகிறது. மக்கள் பல நேரமும் தங்கள் பழங்குடி தொடர்பிற்காக இலக்கு கொள்ளப்படுகின்றனர்; குறிப்பாக பாக்கிஸ்தானின் ஆயுதப் படைகளுடன் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மோதலில் ஈடுபட்டிருந்தால்.

சமீபத்திய ஆண்டுகளில் இப்படி எத்தனை பேர் கட்டாயப்படுத்தி காணாமற்போக வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றித் துல்லியமாகத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் காணாமற்போய்விட்டனர் என்று பலோச் தேசியவாதிகள் கூறுகின்றனர்.

சில நிகழ்வுகளில் உளவுத்துறை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மறைந்து விட்ட குடும்ப உறுப்பினர்களைத் தேடி அலையும் பலோச்சிகளிடம் கடத்தலுக்கான தங்கள் பொறுப்பை ஒப்புக் கொண்டுள்ளனர். காணாமற்போய்விட்டவர்களின் உறவினர்கள் பாக்கிஸ்தானின் உளவுத்துறை அமைப்புக்களை அதிகம் குறைகூறுவதுடன் FC எனப்படும் எல்லைப்புறப் படைப்பிரிவும் தங்களுக்குப் பிரியமானவர்களைக் கடத்தியதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். பலோச் குடியரசுக் கட்சி (BRP), பலோச் தேசிய முன்னணி (BNF), பலோச் தேசியக் கட்சி (BNP) மற்றும் பலோச் மாணவர் அமைப்பு (ஆசாத்) (BSO-Azad) ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட கடத்தப்பட்டவர்களில் பலர் பின்னர் தென்படுவதே இல்லை.

அடக்குமுறை, பாகுபாடு ஆகியவற்றில் பலோசிஸ்தான் தேசிய எழுச்சி வேர்களைக் கொண்டிருக்கையில், இக்குழுக்கள் எதுவும் சாதாரண பலோச்சிஸ்ட்டுக்களின் நலன்களை வெளிப்படுத்தவில்லை. அவற்றின் பிற்போக்குத்தன தேசிய சார்பு பாக்கிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் தொழிலாளர்கள், உழைப்பாளிகளுக்கு அழைப்புவிடுவதை இயலாமற் செய்துள்ளது. பல பலோச் தேசியவாதக் குழுக்கள் பஞ்சாபி-எதிர்ப்பு, பஷ்டுன்-எதிர்ப்பு ஆகிய உணர்வுகளை பலோசிஸ்தானில் வளர்த்து, பஞ்சாபிகள் மற்றும் மாநிலத்தில் வாழும் பிற பலோச்சி அற்றவர்களுக்கு எதிரான வகுப்புவாதத் தாக்குதல்களை நடத்துகின்றன. இத்தகைய குழுக்களின் வலதுசாரித் தன்மை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் ஆதரவைப் பெறும் பெருகிய வெளிப்படையான முயற்சிகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தை குறுகிய வகுப்புவாதப் பிரிவினை மூலம் 1947ல் பாக்கிஸ்தான் நிறுவப்பட்டதில் இருந்தே, பலோசிஸ்தானில் ஐந்து தேசியவாத எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய எழுச்சி 2004ல் இருந்து நடக்கிறது. 2005ம் ஆண்டு முக்கியமான பலோச் தேசியவாதிகளான நவாப் அக்பர் கான் பங்டி மற்றும் மீர் பலாண் மார்ரி ஆகியோர் பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு ஒரு 15 அம்ச அறிக்கையை அளித்து, மாநிலத்தின் ஆதாரங்களைக் கூடுதலாகக் கட்டுப்பாடு கொள்ளும் உரிமையை நாடினர்; இராணுவத் தளங்கள் மாநிலத்தில் அமைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரினர். பாக்கிஸ்தான் இராணுவம் பக்டியை அவருடைய மறைவிடக் குகையில் பொறியில் சிக்க வைத்துக் கொன்றபின் இப்பூசல் தீவிரமாகியுள்ளது.

பாக்கிஸ்தானின் மேற்கு-கோடி மாநிலமான பலோசிஸ்தான் கிட்டத்தட்ட நாட்டின் நிலப்பரப்பில் 45% த்தைக் கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் பாலைவனப் பகுதியான பலோசிஸ்தானில் மக்கள் அதிகம் வாழவில்லைமொத்த மக்கட்தொகையில் 5% தாம் இங்கு வசிக்கின்றனர். பலோசிஸ்தானில் வாழும் எட்டு மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் கிராமப்புற பகுதியில் வாழ்கின்றனர். மாநிலத்தில் மிக அதிக இனவழிக்குழுவை பலோச் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அதிகம் பேசப்படும் மொழி பலோச்சி ஆகும்; ஆனால் பஷ்டுன் மக்களும் கணிசமாக உள்ளனர்; குறிப்பாக பலோசிஸ்தானின் வட மாவட்டங்களில். மாநிலத்தின் மக்கட் தொகையில் 30% தங்கள் முதல் மொழியாக பஷ்டூனைக் கூறுகின்றனர்.

மாநிலத்தின் மிகத் தொலைவில் உள்ள கிழக்குப் பலோசிஸ்தானில் நாட்டின் செழிப்பு மிக்க இயற்கை ஆதாரக் குவிப்புக்கள் (பெரும்பாலும் இன்னும் எடுக்கப்படாதவை) உள்ளன; இவற்றில் எண்ணெய், எரிவாயு, தாமிரம் மற்றும் தங்கம் ஆகியவை உள்ளன. கிழக்குப் பலோசிஸ்தான்பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கும் உள்ளூர் பழங்குடி உயரடுக்கினருக்கும் இடையே அதிகாரத்திற்கான போராட்டம் மிக வெளிப்படையாக உள்ள பகுதி என்று அறிக்கை குறிக்கிறது.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானத்திற்கு இடையே பலோசிஸ்தான் மூலோபாய வகையில் அமைந்துள்ளது; ஆப்கானிஸ்தனத்தில் உள்ள அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளுக்கு பொருட்களை வழங்கும் பாதையில் மிக முக்கியமானதாக உள்ளது. இந்த மூலோபாய நிலையும், மாநிலத்தில் பெரிய இயற்கை வளங்களும் இதை முக்கிய முதலாளித்துவ சக்திகளின் தீவிர போட்டிக்கு இலக்காக மாற்றியுள்ளனகுறிப்பாக அமெரிக்கா, சீனா இவற்றிற்கு இடையே; இவை இரண்டும் இப்பகுதியின் மீது மேலாதிக்கம் கொண்டு அதன் இருப்புக்களை சுரண்ட முற்படுகின்றன. மே மாதம் சீனா, தெற்கு பலோசிஸ்தானில் உள்ள க்வடாரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரேபிய கடல் துறைமுக வசதியின்மீது கட்டுப்பாடு கொள்ளலாம் என்ற கருத்தை பாக்கிஸ்தான் முன்வைத்தது. இத்துறைமுகம் நீண்ட காலமாக அமெரிக்க மூலோபாய நலன்களின் குவிப்பாக உள்ளது; இதற்குக் காரணம் மத்திய கிழக்குத் தரைப்பகுதியில் இருந்து மேற்கு சீனாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை அனுப்புவதற்கான திறனை இது கொண்டுள்ளது; அதையொட்டி சீன மலாக்கா ஜலசந்தி மற்றும் பிற கடன்நெரிக்கும் கட்டங்களை கடந்துவிட முடியும். க்வடார் துறைமுகம் கட்டமைக்கப்படுவதற்கான நிதியை சீனா கொடுத்துள்ளது; இது இறுதியாக ஒரு சீனக் கடல்படைத் தளமாக மாறும் திறன் உடையது என்று அமெரிக்க மூலோபாயவாதிகள் பல முறை எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

இயற்கை ஆதாரங்களில் பலோசிஸ்தான் செழிப்பைக் கொண்டிருந்தாலும், இப்பகுதி பாக்கிஸ்தானின் மிக வறிய, குறைந்த வளர்ச்சி உடைய மாநிலமாகத்தான் உள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 27% 2010ம் ஆண்டு ஊட்டச்சத்து இல்லாத நிலையில்தான் இருந்தனர். மாவட்டத்தின் மக்கட்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர்தீவிர கல்வி வறுமையினால் கஷ்டப்படுகின்றனர்; இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான கல்வியைத்தான் இவர்கள் பெற்றுள்ளனர்.

மாநிலத்தின் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் குறிப்பாக அதன் பலோச் ஆதிக்த்திற்குட்பட்ட மத்திய, தெற்குப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிக்கின்றனர்; வாழ்க்கை நடத்தப் போதுமான வாய்ப்புக்கள் அநேகமாக இல்லை. கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்வசதி இன்னும் தொடர்பு வழிவகைகள் ஆகியவற்றை அவர்கள் பெற்றிருக்கவில்லை.” என்று கராச்சித் தளம் உடைய ஆங்கில மொழி நாளேடான டான் கூறியுள்ளது. “அவர்களில் பலர் நவீன கழிப்பறை பற்றியோ, கழிவுநீர் அகற்றும் முறை பற்றியோ, குழாய் நீர் பற்றியோ கேள்விப்பட்டது கூடக் கூடியாது. அவர்களுடைய வறிய வீடுகள் மோசமாக நடத்தப்படும் அகதிகள் முகாமில் இருக்கும் தற்காலிக காப்பிடங்களைப் போல்தான் உள்ளன; அவர்களுக்கு என இருக்கும் உடைமைப் பொருட்கள் போரில் சிதைந்துள்ள ஆபிரிக்க நாடு ஒன்றின் உள்ள சொத்துக்கள் இல்லாத மக்களின் நிலை போன்றதுதான்.”

இத்தகைய இழிந்த சமூக நிலைமைகள் கூட்டாட்சி அரசாங்கத்தின் பல தசாப்தங்கள் தொடர்ந்த தவறுகள், புறக்கணிப்புக்கள் ஆகியவற்றின் விளைவு ஆகும். இவை சாதாரண பலோச்சிகளிடையே வெறுப்புணர்வைத் தூண்டி உள்ளூர் பலோச்சி உயரடுக்கினர் இடையே தேசிய உணர்வையும் வளர்த்துள்ளன.

பலோசிச்சிஸ்தானில் போராளித்தனம் உள்ளூர் தாதுப்பொருள், நிலத்தடி எரிபொருள் இருப்புக்களை கூட்டாட்சி பாக்கிஸ்தானிய அரசாங்கம் பயன்படுத்த முற்படுவது குறித்த இனவழி பலோச் சீற்றத்தினால் எரியூட்டப்படுகிறது. இதைத் தவிர, மாநிலத்தில் ஏராளமான படைகளை நிறுத்தியிருப்பது, பேர்சிய வளைகுடா முகத்துவாரத்தில் க்வடார் ஆழ் துறைமுகத்தை பலோச்சி இல்லாத தொழிலாளர்கள் மூலம் கட்டமைத்தது ஆகியவை பற்றிய சீற்றமும் உள்ளது என்று மனித உரிமைகள் அமைப்பான HRW இன் அறிக்கை கூறுகிறது.

பாக்கிஸ்தானின் வரலாற்றில் தேசிய முதலாளித்துவம் நாட்டின் தொழிலாளர்கள், உழைப்பாளிகளின் ஜனநாயக உரிமைகளை மிதித்து வந்துள்ளது. ஆட்சியின் சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகளும் இராணுவ-உளவுத்துறை அமைப்புக்களும் வாடிக்கையாக நாடு இராணுவத் தலைமையின்கீழ் இல்லாத காலங்களிலும் தனிநபர்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலைச் செய்கின்றன. ஆனால்பாதுகாப்புப் பிரிவினர் கட்டாயமாகப் பலரைக் காணாமற்போகுமாறு செய்வது என்பது ஒப்புமையில் சமீபத்திய நிகழ்வுகள் ஆகும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உண்மையில், பாக்கிஸ்தான் 2001ல் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியப் படையெடுப்பு, ஆப்கானிய ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து மனித உரிமைகளை மீறுவதில் ஒரு புதிய சகாப்தத்தில்தான் நுழைந்துள்ளது. அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் கீழ் பாக்கிஸ்தான் ஒரு மூலோபாயப் பின் வாங்கலைச் செய்தது; காபூலில் இருந்து தாலிபன் ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்று, ஆப்கானிஸ்தான் மீது புதிய குடியேற்ற வகைப் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்கு தளவாட வகையில் ஆதரவையும் கொடுத்தது. முஷரப்பின் கீழ் பாக்கிஸ்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாடு கடந்த சித்திரவதைக்கான இடங்களைக் கொடுத்தது. மேலும் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான, சாதாரண பாக்கிஸ்தானியர்கள்கூட பாதுகாப்புப் படைகளால் கடத்தப்பட்டு அமெரிக்காவிடம் பணத்திற்காக ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் பலர் இன்னும் காணாமற்போனவர்கள் பட்டியலில்தான் உள்ளனர்; அவர்களுடைய திகைப்புடன்கூடிய குடும்பங்கள் அவர்கள் நிலைமை பற்றிக் கவலையுடன் செய்தியை எதிர்பார்க்கின்றனர்.

தாலிபானுடன் தொடர்புடைய போராளிகள் என்று சந்தேகப்பட்டவர்களை தொடக்கத்தில் இலக்கு கொண்ட பாக்கிஸ்தானிய அதிகாரிகள் விரைவில் இந்த சட்டவிரோத, மிருகத்தன வழிவகைகளை பலோச் தேசியவாதிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தினர்.

பாக்கிஸ்தானின் இராணுவ மற்றும் ஆட்சித்துறைத் தலைவர்களின் ஆதரவில் நம்பிக்கை பெற்ற அளவில், பலோச்சிஸ்தானில் உள்ள பாதுகாப்புப் படையினர் பலோச் மக்களை நண்பகலிலேயே, பலமுறையும் கூட்டம் நிறைந்த பொது இடங்களில், பலர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கடத்தத் தொடங்கினர். HRW அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கடைகள், ஓட்டல்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பணியிடங்கள் ஆகியவற்றில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட பாதிப்பாளர்கள் அடங்கியுள்ளனர்.

பலோச் தேசியவாதக் குழுக்களில் தொடர்புடைய இளம் குழந்தைகள் அல்லது அத்தகைய குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்த உறவினர்களை தங்கள் இலக்காகப் பாதுகாப்புப் படையினர் கொண்டது அவர்களுடைய இரக்கமற்ற தன்மையை நிரூபிக்கிறது. அறிக்கை கூறுகிறது: “மார்ச் 5, 2010 அன்று ஹுட்டா மாவட்டத்தில் உள்ள இஸ்மெயில் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களான 14 வயது நசிபுல்லா லான்கவோவும், 12 வயது அப்துல் வகீதும் லாங்கோவின் சித்தப்பா அப்துல் மஜித் லாங்கவோ கொலையுண்டது பற்றி விசாரிக்க தொடங்கியவுடன் காணாமற்போய்விட்டனர்.” பலோச் தேசிய முன்னணியில் ஒரு தீவிர உறுப்பினரான அப்துல் மஜித் எல்லைப்புறப் படைப்பிரிவின் சாதாரண உடையில் இருந்த நபர்களாலும் பல சாட்சிகளுக்கு முன்னே சில நாட்களுக்கு முன்புதான் எவருடைய அழைப்பின் பேரிலேயோ வீட்டின் கதவைத் திறந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். “கொன்ற மனிதர்கள் அப்துல் மஜித்தின் உடலையும் வீட்டில் இருந்த பல உடைமைகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். கிராமத்தில் எழுந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்து சடலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது; ஆனால் உடைமைகள் கொடுக்கப்படவில்லை.”

அவர்கள் குடும்பத்தின் கருத்துப்படி நசிபுல்லா லாங்கவோ மற்றும் அப்துல் வஹீத் என்னும் சிறுவர்கள் எல்லைப் புறப் படையினரிடமும் பொலிசாரிடமும் சென்று நசிபுல்லாவின் சித்தப்பாவிற்கு என்ன ஆயிற்று எனக் கேட்டு, அவருடைய உடைமைகளை மீட்க முற்படுவதற்குச் சில நாட்கள் முன்பு சென்றிருந்தபோது பட்டப்பகலில் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.

பஷ்டுன் ஆதிக்கத்திற்குட்டபட்ட வடமேற்கு பழங்குடிப் பகுதிகளில் இருப்பதைப் போலவே, பாக்கிஸ்தானிய இராணுவம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகள் சிந்திரவதை, நீதித்துறையை மீறிய கொலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேசியவாதிகளை இரக்கமின்றி அடக்கவும் உள்ளூர் மக்களை மிரட்டவும் செய்கின்றன.

சித்திரவதை வகைகளில் பல நேரம் அடித்து உதைத்தல், பலமுறையும் தடிகளாலும், தோல் பெல்ட்டுக்களாலும் தாக்குதல், காவலில் உள்ளவர்களை தலைகீழாகத் தொங்கவிடுதல், உணவு, உறக்கம் இவற்றை மறுப்பது ஆகியவை அடங்கியிருந்தன என்று  HRW அறிக்கை கூறுகிறது.

ஒரு மருத்துவரும் பலோச் குடியரசுக் கட்சியின் பொதுச்செயலருமான பஷிர் அசீமை HRW பேட்டி கண்டது; அவர் 2009ல் அவர் கடைசிமுறையாகச் சட்டவிரோதக் காவலில் இருந்தபோது பொறுத்துக் கொள்ளவேண்டிய கொடூரமான சித்திரவதையை துல்லியமாக விவரித்தார்: “அறையில் தரை சீரில்லை. அழுக்கடைந்த பூச்சுத்தான் இருந்தது; சிறுநீர் கழிப்பதற்கு ஒரு பிளாஸ்டிக் போத்தல்தான். அவர்கள் மற்றொரு விசாரணைக்கு என்னை அழைத்துச் சென்றனர். தலைகீழாக என்னைத் தொங்க விட்டு, எங்களுக்கு யார் நிதியளிக்கின்றனர் எனக் கேட்டனர்; போராளிகள் எங்குள்ளனர் என்று கேட்டனர். இதைத்தொடர்ந்த நாட்களிலும் அவர்கள் பல வகைகளில் என்னைச் சித்திரவதை செய்தனர். என்னுடைய நகங்களுக்கு இடையே ஊசிகளைக்குத்தினர்; என் முதுகின் மீது நாற்காலி ஒன்றை வைத்து அதன்மீது உட்கார்ந்தனர்; 48 மணிநேரத்திற்கு ஒருவர் நடக்க முடியாமல் நிற்கும் இடமே கொண்டுள்ள அறையில் வைத்தனர். என்னை அவர்கள் வெளியே கொண்டுவந்தபோது, என்னுடைய கால்கள் வீங்கியிருந்த நிலையின் நான் சரிந்து தரையில் மயக்கம் அடைந்து விழுந்துவிட்டேன்.”

மறைந்து விட்ட உறவினர்கள், பல மாதங்களாக அல்லது ஆண்டுகளாகக் காணாமற்போய்விட்டவர்கள், காவலில் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்ற அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் பெருகிய சான்றுகள் உள்ளன.” என்று அறிக்கை கூறுகிறது. உள்ளூர் குழுக்கள் சமீபத்திய மாதங்களில் 180 சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர்; அவற்றில் பெரும்பான்மையானவை ஆண்களுடையது. உளவுத்துறைப் பிரிவு (ISI) எல்லைப் படைத் துணைப் பிரிவின் ஒத்துழைப்புடன் கடத்தப்பட்டவர்கள் இவற்றில் பெரும்பான்மையினராக இருக்கக்கூடும்.

பலோச் மாணவர் அமைப்பான ஆசாத்தின் ஆதரவாளரான 14 வயது மகம்மது கான் ஜோஹைப்பின் குண்டுக்கள் துளைத்த உடலும் அக்டோபர் 20, 2010ல் குஜ்டரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது. “பலோச் மனித உரிமைகள் ஆர்வலர்களின் கருத்துப்படி, ஜோஹைப்பின், எல்லைப் பிரிவு துருப்புகள் ஜூலை 2010ல் அவரைக் கடத்தியிருந்தனர்.” என உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

கடத்தல்கள், கைதுகள் ஆகியவற்றிற்குச் சாட்சிகளான பல விடுதலை அடைந்த காவலில் வைக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தகவல் கேட்டாலோ, நீதி கேட்டாலோ ஆபத்து விளையும் என்று அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் குழுவினால் தலைமை நீதிமன்றத்திற்கு கட்டாயப்படுத்திக் காணாமற்போன 200 நபர்கள் பற்றிய விசாரணை ஒன்று, 2007ல் சமர்ப்பிக்கப்பட்டது, 99 நபர்கள் எங்கு உள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் வெளிவர உதவி, இராணுவம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளின் பங்கு இக்கடத்தல்களில் இருந்தது பற்றியும் உயர்த்திக் காட்டியது. தலைமை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் காணாமற்போயிருப்பவர்களைக் கண்டுபிடித்து அதைச் செய்தவர்களைத் தண்டிப்பர் என்று சில பலூச்சியர்களிடையே நம்பிக்கைகள் வளர்ந்தன. ஆனால் முஷாரப், தலைமை நீதிபதி உட்பட பல நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்: இது இத்தகைய வழக்கில் நீதித்துறைச் செயற்பாட்டைத் தவிர்க்கும் நோக்கத்தினால் ஓரளவு உந்துதல் பெற்றது; ஆனால் முக்கியமாக அவர் அந்த ஆண்டு பின்னர் நடக்க இருந்த போலித்தேர்தலில் நீதிபதிகள் அங்கீகாரமளிக்க மாட்டார்கள் என்று அஞ்சியதுதான் காரணம்.

பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியாளராக 1999ல் இருந்து 2008 வரை இருந்த ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் கீழ் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் சீர்குலைந்தது. என்று HRW அறிக்கை கூறுகிறது. “பலோசிஸ்தானுக்கு 2005, 2008ல் அவர் வருகை புரிகையில் நடந்த இரு படுகொலை முயற்சிகள் பலோச் தேசியவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உதவின; இராணுவ உளவுத்துறை (MI), அதன் மாநிலத்தில் உள்ள முக்கியபிரிவு ஆகியவை இதை மேற்கொண்டன. இந்நடவடிக்கைகள் இறுதியில் ஆகஸ்ட் 2006ல் செல்வாக்கு மிகுந்த பழங்குடித் தலைவர் நவாப் அக்பர் புக்டி மற்றும் அவருடைய நெருக்கமான ஆதரவாளர்கள் 35 பேரைக் கொலை செய்ய வகை செய்தன.”

2008ல் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சி (PPP) தலைமையில் பொதுஅரசாங்கம் பதவிக்கு வந்தபின் நம்பிக்கைகள் மீண்டும் மலர்ந்தன. PPP கட்சித் தலைவர்கள் உதட்டளவு ஆதரைவைத்தான் மாநில சுய ஆட்சிக்கு அளித்தனர்; பல தொடர்ச்சியான அரைகுறை நடவடிக்கைகள் மூலம் பலோச்சிஸ்தானில் உள்ள சமூக நிலைமைகளை முன்னேற்றுவதாக உறுதியளித்தனர்; அதில் உள்ளூராட்சி அதிகாரங்களுக்குக் கூடுதலான ஆதார-தொழில்துறை வருமானம் மற்றும் வளர்ச்சிக்குக் கூடுதலான நிதி ஆகியவை இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இக்குறைந்த நடவடிக்கைகள்கூட பலோச் தேசியவாத தலைவர்களால் நிராகரிக்கப்பட்டன; தங்கள் அடிப்படைக் குறைகளைத் தீர்க்க இவை போதாது, கூடுதலான மாநிச் சுயாட்சிக்கும் இவை போதா என்று அவர்கள் கூறினர். மாநிலத்தில் இருந்த சமூக அடையாளங்கள் 2008ல் இருந்து சிறிது கூட முன்னேறவில்லை.

மேலும் PPP அரசாங்கம் கட்டாயமாகக் காணாமற்போகும் நிகழ்வுகளைத் தடுக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுத்துவிட்டது. “தேசிய அரசாங்கம் இந்த அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளியிடுவதற்கு ஏதும் செய்யவில்லை என்று HRW உடைய ஆசியப் பகுதி இயக்குனரான ப்ராட் ஆடம்ஸ் கூறியுள்ளார். “ஜனாதிபதி அசிப் அலி ஜர்தாரி அனைத்தும் ஒதுக்கப்பட்டுவிடலாம் என்று நினைத்துவிட முடியாது.” என்றார்.

HRW அறிக்கை, இகழ்ச்சியுடன் பாக்கிஸ்தானிய இராணுவத்தால் உதறித்தள்ளப்பட்டுவிட்டது. “இது ஒரு ஒருதரப்பு அறிக்கை, அறிக்கை கூறும் முடிவுரையை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அத்தர் அப்பாஸ் கூறினார்.

பலோச் மக்களின் குறைகள் முற்றிலும் நெறியானவை என்றாலும், அவர்களின் நலன்களைக் காப்பதாகக் கூறும் பல தேசியவாத மற்றும் பிரிவினைக் குழுக்களும் பல கொடுமைகளுக்கு பொறுப்பைக் கொண்டுள்ளன. எரிவாயுக் குழாய்கள், இருப்புப் பாதை, மின்விசை இணையங்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவதைத் தவிர, பலோச் தேசியவாதிகள் இனவழி உந்துதல் கொண்ட குறுகிய நோக்குக் கொலைகளையும் செய்துள்ளனர், குறிப்பாக குவெட்டாவில் இவர்களுடைய முக்கிய இலக்குகள் பெரும்பாலும் சாதாரண பஞ்சாபி மற்றும் பஷ்டூன்கள் ஆவர்; அவர்களைகுடியேறியவர்கள் என்று இவர்கள் ஏளனப்படுத்துகின்றனர். பஞ்சாபியர்களுக்கு சொந்தமான வணிகங்கள் மற்றும் பள்ளிகள் மாநிலம் முழுவதும் தாக்கப்படுகின்றன. பல கல்வியாளர்கள் இன அடிப்படை என்ற ஒரே காரணத்தினால் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர் மற்றும் கொலை செய்யப்படுகின்றனர். குறைந்தபட்சம் 100,000 மக்கள் 2008ல் இருந்து வகுப்புவாத வன்முறையை ஒட்டி பலோசிஸ்தானை விட்டு ஓடிவிட்டதாக நம்பப்படுகிறது.

BRP, BNF போன்ற தேசியவாதக் குழுக்களின் முன்னோக்கு எவ்வகையிலும் பலோச்சித் தொழிலாளர்கள், உழைப்பாளிகளின் நலன்களை வெளிப்படுத்தவில்லை. மாறாக அது ஒரு சிறு பழங்குடி உயரடுக்கின் முன்னோக்காகும். அடக்குமுறையை அகற்றுதல், வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலைமையை பலோசிஸ்தான் மற்றும் நாடு முழுவதும் அகற்றுவது என்பது மத, இனப் பிளவுகளை கடந்து தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களை புரட்சிகரமாக அணிதிரட்டுவது மற்றும் அவர்களை ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கில் ஆயுதபாணியாக்குவதன் மூலம்தான் முடியும்.