World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Fatal police shooting sparks riot in north London

வடக்கு லண்டனில் பொலிஸ் துப்பாக்கிச்சூடு கலவரத்தை ஏற்படுத்துகிறது

By Julie Hyland 
8 August 2011

Back to screen version

வியாழனன்று பொலிசாரால் 29 வயதான, நான்கு பேருக்கு தகப்பனாரான மார்க் டுக்கன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து எழுந்த எதிர்ப்புக்களால் சனிக்கிழமை இரவு வடக்கு லண்டனில் டோட்டன்ஹாமில் கலகம் வெடித்தெழுந்தது.

தான் திருமணம் செய்து கொள்ள இருப்பவரைச் சந்திக்க மாலையில் டுக்கன் ஒரு டாக்சியில் சென்று கொண்டிருந்தபோது பொலிஸ் அதைத் தடுத்து நிறுத்தியது. CO 19 எனப்படும் சிறப்பு ஆயுதங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்திருந்த அதிகாரிகள், ஆயுதம் ஏந்தக்கூடாது பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து வந்து, “முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த நடவடிக்கை என விளக்கப்பட்டதில் செயல்பட்டனர்

இதைத் தொடர்ந்த நிகழ்வுகள் பற்றி முரண்பட்ட தகவல்கள் வந்துள்ளன. டுக்கன் சுடத் தொடங்கினார், தோட்ட மிகக் குறுகிய அளவில் ஒரு அதிகாரியின் மீதான இலக்கைத் தவற விட்டது, அதிகாரி தற்காப்பிற்குச் சுட்டார் என்று பொலிசார் கூறுகின்றனர். ஆனால் நேரில் பார்த்த சாட்சியங்கள் தரையில் கிடக்கும்போது டுக்கன் சுடப்பட்டார் என்று கூறுகின்றனர். அவர் உடனடியாக இறந்து போனார்.

டுக்கன் திருமணம் செய்து கொள்ள இருந்த செமோனி வில்சன், அவரிடம் இருந்து அவர் இறப்பதற்குச் சற்று முன்னர் ஒரு தகவல் செய்தியை பெற்றதாகக் கூறினார். “சுமார் 6 மணியளவில் அவர் தன்னுடைய ப்ளாக்பெர்ரியில் இருந்துகூட்டாட்சிப் போலிசார் என்னைத் தொடர்கின்றனர் என்ற செய்தியை அனுப்பினார். அவ்வளவுதான். அதுதான் எவருமே அவரிடம் இருந்து பெற்ற கடைசித் தகவல்.”

அவருடைய சகோதரர் ஷாவுன் ஹால், மார் ஒருகுடும்ப மனிதர் எனக் குறிப்பிட்டு, அவர் பொலிஸ் மீது துப்பாக்கியைக் காட்டி சுட்டார் என்னும் கூற்றுக்கள்அபத்தமானவை என்றார். மார்க் ஒன்றும் அத்தகைய நபரல்ல. பொலிசை நோக்கிச் சுடக்கூடிய அளவிற்கு அவர் முட்டாளல்ல. இது அபத்தமாகும்.”

டுக்கன் ஏன் சுடப்பட்டார் என்பது பற்றி பொலிசிடம் இருந்து தாங்கள் எந்த விளக்கத்தையும் பெறவில்லை என்று குடும்பம் கூறுகிறது. அவருடைய கொலை IPCC எனப்படும் சுயாதீன பொலிஸ் புகார்க்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு அதிகாரமற்ற அமைப்பாகும், முக்கியமாக பொலிஸ் மிருகத்தனம் பற்றிய சான்றுகளை மூடிமறைப்பதுதான் இதன் நோக்கமாகும்.

சனிக்கிழமை பிற்பகல், குடும்பமும் நண்பர்களும் டோட்டன்ஹாம் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு எதிர்ப்பை நடத்தினர். பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றுமார்க் டுக்கனுக்கு நீதி தேவை என்று கோரினர்.

இந்த எதிர்ப்பு அமைதியான முறையில் இருந்தது என்று பொலிசார் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் பல மணி நேர எதிர்ப்புக்களுக்குப் பின், கிட்டத்தட்ட இரவு 8.30 மணிக்கு இளைஞர் குழு ஒன்று தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் கார்களைத் தாக்கத் தொடங்கியது என்று பொலிஸ் கூறுகின்றனர்.

பொலிஸ் அதிகாரியின் கைத்தடியால் ஒரு இளம் பெண் எதிர்ப்பாளர் தாக்கப்பட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டன என்று பிற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பெண், செய்தியாளர்களிடம் கூறினார்: “இது ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் என்றுதான் தொடங்கியது. போன வாரம் பொலிசார் ஒரு இளைஞரை இங்கு கொன்று, என்ன நடந்தது என்பது பற்றி பொய்யும் கூறினர். கொல்லப்பட்டவர் துப்பாக்கியை எடுத்து அதிகாரியை கொலை செய்ய முற்பட்டார் என்றனர், ஆனால் ஆயுதமேந்திய பொலிசாருக்கு எதிராக அவர் அவ்வாறு செய்திருக்கமாட்டார். அவரை அவர்கள் மோசமாகக் கொன்றிருந்த தன்மை அவருடைய தாயாரால் கூட அவரை அடையாளம் காண முடியவில்லை.”

பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட 500 பேர் பொலிசாருடன் நடந்த மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்; இது டோட்டன்ஹாம் முக்கிய வீதியின் நடுவே நடைபெற்றது.

டுக்கன் கொலையுண்டதின் பின் பதட்டங்கள் அதிகமாக இருந்தன என்பது தெரிந்திருந்தும் தாங்கள் பின் நடந்தது பற்றி முற்றிலும் தயாரிப்பற்ற நிலையில் இருந்தோம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

அத்தகைய கூற்று, தலைநகரின் இழிந்த TSG எனப்படும் வட்டார ஆதரவுக் குழுஅவசர திட்டங்களின் ஒரு பகுதியாக நிறுத்தி வைக்கப்பட்டது என்ற உண்மையில் நம்பகத்தன்மையை இழக்கிறது. TSG அதிகாரிகள்தான் ஒரு நிரபாரிதியாக நின்றிருந்த இயன் டோம்லின்சன் மீதான தாக்குதலிலும், G20 உச்சிமாநாட்டுத் தலைவர்கள் ஏப்ரல் 2009ல் லண்டனில் கூடியபோதும், தொடர்பு கொண்டிருந்தனர். அவர் அதன் பின் சீக்கிரம் இறந்துபோனார். மற்றொரு TSG அதிகாரி அதே ஆர்ப்பாட்டங்களில் தேவையற்ற தாக்குதல்களை ஒரு பெண் எதிர்ப்பாளர் நிக்கோலா பிஷர் மீது நடத்தியது வீடியோ காட்சியாக உள்ளது. தாக்குதல் பற்றிய வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும்கூட, அரசாங்க குற்றவிசாரணை அலுவலகம் அவர்மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படமாட்டாது என கூறிவிட்டது.

மேலும் மெட்ரோபொலிடன் பொலிசார் மாலையில் சீக்கிரமாக ஒரு Gold Command அமைப்புப் பிரிவை நிறுவும் அளவிற்குத் தயாரிப்புக் கொண்டிருந்தனர்இம்முறை பெரிய செயற்பாடுகளின்போதுதான் பயன்படுத்தப்படும்; அதில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாத நிகழ்வுகளும் அடங்கும்.

நூற்றுக்கணக்கான கலகப் பிரிவு பொலிசார் மற்றும் வாகனங்களும் அப்பகுதிக்கு விரைந்து நிரம்பியிருந்தன. இத்துடன் குதிரைப் பொலிஸ் படை, மற்றும் தலைக்கு மேல் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவையும் துணைக்கு இருந்தன.

எங்களுக்கு பதில் வேண்டும்”, “எவருடைய தெருக்கள்? எங்கள் தெருக்கள், என்ற கோஷங்களை பொலிசாருக்கு எதிராக எழுப்பி, ஒரு கூட்டம் கூடியது

பார்வையாளர்கள்மீது குதிரைப்படை பொலிசார் தாக்குதல் நடத்தியதாகச் சில தகவல்கள் கூறுகின்றன; இது ஒரு பீதியை ஏற்படுத்தியது: அது இந்த ஆண்டுத் தொடக்கத்தில் லண்டனில் மாணவர்கள் எதிர்ப்புக்கள் மீது நடத்திய இதேபோன்ற தாக்குதல்களுக்கு ஒப்பாக இருந்தது.

ஞாயிறு காலை வரை கலகம் தொடர்ந்தது; பொலிஸ் கார்கள், ஒரு பயணிகள் பஸ் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, பொலிசார் கற்கள், முட்டைகள், பாட்டில்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்டனர் என்ற தகவல்கள் வந்துள்ளன.

இதுவரை கிட்டத்தட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 29 பேர் காயமுற்றனர் எனத் தெரிகிறது.

அக்டோபர் 1985ல் டோட்டன்ஹாமில் வெடித்த கலகங்களுடன் பல விமர்சகர்கள் இந்நிகழ்வின் இணைவாகக் காண்கின்றனர். இப்பொழுது போலவே அப்பொழுதும் உடனடிக்காரணம் பொலிஸ் மிருகத்தனம் ஆகும். அந்த ஆண்டு அக்டோபர் 5ம் திகதி, டோட்டன்ஹாம் பொலிசார் வேலையின்மையில் இருந்த 24 வயது கறுப்பு இளைஞனான பிளாயிட் ஜெரெட்டை ஒரு காரை அவர் திருடினார் என்ற சந்தேகத்தில் காவலில் வைத்தனர்.

இதன் பின் பிளாயிட்டின் தாயார், 49 வயது சிந்தியா ஜெரெட்டின் வீட்டில் ஒரு சோதனை நடத்தினர்; அவ்வீடு ப்ராட்வாட்டர் பண்ணை வீடுகள் தொகுப்பில் உள்ளது; அதில் திருமதி ஜெரட் சரிந்துவிழுந்து இதயப் பாதிப்பினால் இறந்துபோனார். பொலிசார் திருமதி ஜெரட்டை வழியில் இருந்து அப்புறப்படுத்த தள்ளியதால் அது அவர் சரிந்துவிடக் காரணமாயிற்று என்று குடும்பம் கூறியது. நிகழ்வு நடந்த 15 நிமிடங்களுக்குள் அவர் இறந்து போனார்.

டோட்டன்ஹாம் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே சீற்றமடைந்த எதிர்ப்புக்கள் நடைபெற்றன. ப்ராட்வாட்டர் பண்ணை பொது வீட்டுத் தொகுப்பு முற்றுகைக்கு உட்பட்டு, கலகப் பிரிவுப் பொலிசாரால் சூழப்பட்டது. அவை தடுப்புக்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவற்றை எதிர்கொண்டன. தொந்திரவுகளின்போது ஒரு பொலிஸ் அதிகாரி ஒரு பெரிய கத்தியால் குத்துண்டு கொலையுண்டார்.

வின்ஸ்டன் சில்கோட், மார்க் பிரைத்வெயின் மற்றும் எங்கின் ரகிப் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு 1987ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விசாரணை ஒன்றில் பொலிஸ் அதிகாரியின் இறப்பை ஒட்டித் தண்டனை பெற்றனர். பின்னர் அவர்கள் மீதான தண்டனைகள் மேல் முறையீட்டின் 1991ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டன, ஒப்புதல் வாக்குமூலங்கள் தயாரிக்கப்பட்டவை என்பதை குற்றத் தடயங்கள் உறுதி செய்த பின் இந்நடவடிக்கை வந்தது.

டோட்டன்ஹாம் கலகங்கள் 1980கள் முழுவதும் இங்கிலாந்தில் பல நகரங்களில் பாதித்த தொடர் எழுச்சிகளின் ஒரு பகுதியாகும். ப்ராட்வாட்டர் பண்ணை மோதல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டனில் பொலிசார் 37 வயது மேற்கு இந்தியத் தாயார் செரி க்ரோஸ் மீது சுட்டதை அடுத்து இளைஞர்கள் வெடித்தெழுந்தனர். பொலிசார் அவருடைய மகன் மைக்கேலைத் தேடி அவர் வீட்டைச் சோதனையிட்டபோது அவர் காயப்படுத்தப்பட்டார். திருமதி க்ரோஸ் இடுப்பிற்குக்கீழே பாரிச வாயுத்தாக்குதலால் முடங்கிப் போனார். திருமதி க்ரோஸைச் சுட்ட அதிகாரி டுக்லான் லவ்லாக் பின்னர் இத் தீயவகைக் காயம் ஏற்படுத்திய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வுகளைத் தூண்டிய பொலிஸ் வன்முறை வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் என்று பிரிட்டனில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மீதான தாட்சர் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் தாக்குதலுடன் பிரிக்க முடியாமல் பிணைந்திருந்தன.

1985 பதட்டங்கள் ஒராண்டு காலம் நீடித்திருந்த சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தோல்வியுற்றுச் சில மாதங்களுக்குப் பின் வெடித்தது; வேலைநிறுத்தத்தின்போது தேசியமயமாக்கப்பட்ட சுரங்கத் தொழில்துறையை தாட்சர் அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான வேலையிழப்புக்களுடன் கூட தகர்க்க முற்படுகையில் கடுமையான மோதல்கள் எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸிற்கும் இடையே ஏற்பட்டன.

80 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய சிக்கன நடவடிக்கைத் திட்டங்கள் என்று இப்பொழுது கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்கிராட்டுக்கள் கூட்டணி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுபவை தாட்சர் முயற்சித்தவற்றை அற்பமாக்கியுள்ளன. மேலும் இத்தாக்குதல்கள் தொழிலாளர்களும் இளைஞர்களும் மூன்று தசாப்தங்களில் தாங்கள் பெற்ற தேட்டங்கள், சலுகைகள் எலும்பளவு குறைக்கப்பட்ட நிலையில், பெரும் செல்வந்தர்களும் சர்வதேச நிதியளிப்பாளரும் பெரும் செல்வத் தரத்தைக் கொண்டிருக்கும் நிலையில் வந்துள்ளன.

உள்ளூர் மக்களைப் பேட்டி காண்கையில் டெலிகிராப்பின் ராப் சாங்கேஸ், “கலகம் எப்படியும் வந்துவிடும் என்று நீண்டகாலமாகவே பலரும் கருதியிருந்தனர்; இது மார்க் டுக்கன் சுடப்பட்டதின் விளைவு மட்டும் அல்ல. ‘வெடிப்பொருட்களின் குவிப்பு எரியூட்டக் காத்திருந்தது, அக்கொலை ஒரு குச்சி பற்ற வைத்தது போல்தான் என்று ஒரு பெண்மணி கூறினார். “திக்கற்று நிற்கும் இளைஞர்களின் பெருந்திகைப்புற்ற செயல் இது. அவர்களில் பலரும் NEET யில் உள்ளனர் (கல்வி, வேலை, பயிற்சி எதிலும் இல்லை); அவர்களால் எழுதப்படிக்க முடியாது, இழப்பதற்கு அவர்களிடம் ஒன்றும் இல்லை.”