World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US prepares for military intervention in Somalia

சோமாலியாவில் இராணுவ தலையீட்டிற்கு அமெரிக்கா தயாராகிறது

6 August 2011
Susan Garth

Back to screen version

சோமாலியாவில் பசி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு மனிதாபிமான அக்கறை என்ற போலிச்சாக்கில் ஒரு புதிய இராணுவ தலையீட்டிற்கு ஒபாமா நிர்வாகம் தயாரிப்பு செய்கிறது. முதலைகண்ணீர் கலந்த ஒரு பிரச்சாரத்தோடு அந்த போக்கிற்கு உடந்தையாய் இருக்கும் ஊடகங்கள், அங்கே ஆழமடைந்துவரும் நெருக்கடிக்கு குற்றஞ்சாட்டப்படும் இஸ்லாமிய அல்-ஷாபாப் இயக்கத்தைத் கண்டித்துக்கொண்டு அமைதியின்மையுடன் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன.

பெங்காசி மக்களைப் படுகொலைகளிலிருந்து காப்பாற்றும் அழைப்புகளோடு லிபியாவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு நடவடிக்கையைப் போன்றே, இப்போது, சோமாலியாவில் பசியில் தவிக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக என்ற பெயரில் ஆப்ரிக்காவில் ஒரு புதிய தலையீட்டிற்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இது மக்களை ஏமாற்றும் ஓர் எரிச்சலூட்டும் செய்கையாகும்.

வெளியுறவு விவகாரங்கள் குறித்த அமெரிக்க கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படி, அல்-ஷபாப் ஏறக்குறைய 10,000 போராளிகளைக் கொண்டுள்ளது. அதன் மிக விசுவாசமான துருப்புகளில், ஒருசில நூறு போராளிகள் மட்டுமே இருக்கக்கூடும். தேசிய பயங்கரவாத-எதிர்ப்பு மையத்தின் தகவல்படி, அதற்கு அல்கொய்தாவுடன் எந்த தொடர்பும் கிடையாது.

இருந்தபோதினும் அமெரிக்க அதிகாரிகள் தற்போதைய பஞ்சத்திற்கு இந்த அமைப்பைக் குறை கூறுகின்றனர். “அல்-ஷபாப்பால் அதன் மக்களுக்கு எதிராக நடத்திவரும் இரக்கமற்ற பயங்கரவாதம் ஏற்கனவே மிகவும் ஒரு கொடூரமான நிலைமைக்குள் திரும்பியுள்ளது; அது இன்னும் மோசமடையும் என்று தான் எதிர்பார்க்க முடியும்.” இது கடந்தவாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்ததாகும்.

உண்மையில், அமெரிக்க ஆதரவுடனான இடைக்கால மத்திய அரசாங்கத்தின் (Transitional Federal Government – TSG) கட்டுப்பாட்டில் இல்லாத சோமாலியாவின் ஏனைய பகுதிகளுக்கு வாஷிங்டன் உதவிகளை மறுத்தது. அதாவது, உதவி ஒருசில சதுர மைல் பகுதிகளுக்குள் மட்டுமே அளிக்கப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது. “சோமாலியாவில் உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; ஏற்கனவே அல்-ஷபாப் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லா பகுதிகளிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, சுமார் 60 சதவீத மக்கள் அல்-ஷபாப் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களில் உள்ளார்கள்.” இது இலண்டனின் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமெரிக்க உதவிகளுக்கான துணை நிர்வாகி டோனால்ட் ஸ்ரைன்பேர்க் குறிப்பிட்டதாகும்.

பசியையும், பஞ்சத்தையும் பொதுமக்களுக்கு எதிரான யுத்த ஆயுதங்களாக பயன்படுத்தும் வாஷிங்டன் நோக்கத்தின் ஒரு தெளிவான அறிக்கை இதைவிட ஒருவருக்கு கிடைக்காது. சுமார் 3.7 மில்லியன் மக்கள் சோமாலியாவில் பஞ்சத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்; அவர்களின் 2.8 மில்லியன் மக்கள், இடைக்கால மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அல்லாத அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளனர். சோமாலியாவின் பெரும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் அளிக்க முயலும் எந்தவொரு அமைப்பும், ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு பொருட்களை வழங்கிவரும் குற்றச்சாட்டு அபாயத்திற்குள்ளாகக்கூடும்.

ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு உதவுவதால் அவ்விடங்களில் வாழும் தாய்மார்களுக்கும், ஊட்டச்சத்தற்ற குழந்தைகளுக்கும் வழங்கிவரும் அதன் உணவு வினியோக திட்டங்களை, உலக உணவு திட்டம் (World Food Programme) நிறுத்த 2009இல் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. பஞ்சம் நிலவும் பகுதிகளாக அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக எந்த பகுதிகளை அறிவித்துள்ளதோ, அங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுப்பொருள் உதவி மறுக்கப்பட்டுள்ளது.

தெற்கு சோமாலியாவில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட வலயம் அறிவிக்கப்பட வேண்டுமென அமெரிக்க கூட்டாளியான அண்டைநாடான உகாண்டாவின் ஜனாதிபதி யூவேரி முசெவெனி அழைப்புவிடுத்துள்ளார்.

ஆனால், எப்படியிருந்தபோதினும், அல்-ஷபாப்பிடம் எவ்வித ஆகாயபலமோ அல்லது தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளோ கூட இல்லை. இளம்பருவ சிறுவர்களாக இருக்கும் அதன் போராளிகளில் பெரும்பாலானவர்களால் சுமையேற்றும் வண்டிகளை மட்டும் தான் ஓட்ட முடியும்.

ஒரு விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட வலயத்தின் நோக்கம், தலையீடு செய்வதற்கு ஒரு வழியைத் தயாரிப்பதன்றி வேறொன்றுமில்லை. விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட வலயம் உருவாக்க வேண்டுமென்ற முறையீடு வாஷிங்டனிடமிருந்து வருவதைவிட பிராந்திய சக்திகளிடமிருந்து வந்தால் அதை பெண்டகன் வரவேற்கும் என்று ஆபிரிக்காவிற்கான அமெரிக்க படைக்கு, AFRICOM, தலைமையேற்றிருக்கும் ஜெனரல் கார்டர் F. ஹம் தெளிவுபடுத்தினார். லிபியா மீது விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட வலயத்தைக் கொண்டு வர வேண்டுமென அரேபிய லீக் வலியுறுத்தியதைப் போல, ஆபிரிக்க ஒன்றியம் இந்த திட்டத்திற்கு அழைப்புவிடுக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அது ஒரு போலியான கொடியின் கீழ் நடக்கும் ஓர் அமெரிக்க இராணுவ நடவடிக்கையாக இருக்கும்.

AMISOM என்றழைக்கப்படும் அமெரிக்க ஆதரவுடனான ஆபிரிக்க ஒன்றிய துருப்புகள், சமீபத்தில் தான் அல்-ஷபாப் போராளிகளுக்கு எதிராக ஒரு பெரும் தரைவழி தாக்குதலைத் தொடுத்திருந்தது. தெற்கு சோமாலியாவின் ஜெடோ பிராந்தியத்தில் உள்ள எல்வாக் நகரத்திற்கு அருகிலுள்ள மொகடிஷுவில் அந்த கொடூரமான சண்டை நடந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

சோமாலியாவிற்குள் ஊடுருவி தாக்குதலை நடத்த ஏற்கனவே அமெரிக்காவிடமே திறன் உள்ளது. இந்த ஆண்டின் ஜூனில் அது ஆளில்லா விமானத்தைக் கொண்டு ஒரு படுகொலை தாக்குதல் நடத்தியது. முன்னதாக அது சந்தேகத்திற்குரியவர்களை கொல்ல அல்லது சிறைபிடிக்க ஹெலிகாப்டர்களில் சிறப்பு படை துருப்புகளை தரையிறக்கியது. மொகடிஷிவில் உள்ள ஒரு புதிய CIA தளத்திலிருந்து, சோமாலியா கடல்பகுதியில் ரோந்துவரும் கடற்படை கப்பல்களைக் கொண்டு அல்லது டிஜிபுட்டிக்கு அருகில் அது கொண்டிருக்கும் இராணுவ தளத்திலிருந்து அதனால் தாக்குதல்களை நடத்த முடியும்.

அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா முறையிடும் அல்-ஷபாப் தான் அமெரிக்காவிற்கு ஒரு பிரதான இராணுவ அச்சுறுத்தலாக முன்வைக்கப்படுகின்றது. உள்நாட்டு பாதுகாப்பு குழுவின் அவைத்தலைவர் பீட்டர் கிங், அல்-ஷபாப் "நம்முடைய உள்நாட்டிற்கு ஒருபெரும் அச்சுறுத்தலாகும்" என்று குறிப்பிட்டிருந்தார். அது சோமாலி-அமெரிக்கர்களை பயங்கரவாதத்திற்கு அணிதிரட்டுவதாக அவர் முறையிடுகிறார்.

நியூயோர்க் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் செயல் இயக்குனர் கெரென் கிரீன்பெர்க். Guardian இதழில் எழுதுகையில் கிங்கின் கூற்றுக்களுக்கு சவால் விடுத்தார். இதுவரை ஒரேயொரு சோமாலி-அமெரிக்கர் மட்டும் தான் பயங்கரவாதம் சம்பந்தமான குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.  அதுவும் அவருக்கு அல்-ஷபாப்புடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று அப்பெண்மணி குறிப்பிட்டுக் காட்டினார்.

தற்போதைய பஞ்சத்திற்கு வாஷிங்டன் காட்டும் விடையிறுப்பு, Operation Restore Hope நினைவூட்டுகிறது. ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த போது, அவரது ஆட்சிகாலத்தின் கடைசி தருணத்தில், டிசம்பர் 5, 1992இல், பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக என்ற பெயரில் 30,000 அமெரிக்க துருப்புகள் சோமாலியாவிற்குள் அனுப்பப்பட்டன.

அப்போது அல்-ஷபாப் அங்கே கிடையாது. அந்த உணவுப்பொருள் விநியோகத்திற்கு சயித் பேய்ர் ஆட்சியின் பொறிவிலிருந்து உருவான "யுத்த பிரபுக்களிடமிருந்து" (war lords) அச்சுறுத்தல்கள் எனப்பட்டவை வந்ததாக கூறப்பட்டது. சோவியத் ஆதரவுடனான எத்தியோப்பிய ஆட்சிக்கு எதிராக இராணுவ சர்வாதிகாரி பேய்ரை 1977இல் இருந்து அமெரிக்கா ஆதரித்து வந்தது. 1991இல், வாஷிங்டன் பேய்ரை கைவிட்டதுடன் அவருடைய ஆட்சி பொறிந்தது. அப்போதிருந்து சோமாலியாவில் எந்த நிலையான அரசாங்கமும் அமையவில்லை.

ஜனாதிபதி பில் கிளிண்டன் தொடர்ந்த நடவடிக்கைகள் இன்னும் அதிகப்படியாக பகிரங்கமாகவே ஓர் ஆக்கிரமிப்பாக தொடர்ந்தது. 1994இல், மொகடிஷுவில் ஓர் அமெரிக்க கருப்பு ஹாவ்க்-ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதிலிருந்த உறுப்பினர்களின் உடல்கள் தொலைக்காட்சி காமிராக்கள் முன்னர் காட்டப்பட்ட பின்னர், சோமாலியாவிலிருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்பப்பெற அவர் நிர்பந்திக்கப்பட்டார்.

Operation Restore Hope காலனித்துவப்படையெடுப்பின் ஒரு புதிய கட்டத்தை எடுத்துக்காட்டியது. அப்போது சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான அமெரிக்க தொழிலாளர் கழகம் "மனிதாபிமான தலையீடு" என்று கூறப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தது. அது எழுதியதாவது: “யுத்த கப்பல்கள், ஜெட் யுத்தவிமானங்கள் மற்றும் தாக்கும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் உதவியோடு, பத்து ஆயிரக்கணக்கான துருப்புகளை, இறக்கிவிடுவதென்பது சோமாலிய மக்களின் இறையாண்மையை மூர்க்கத்தனமாக மீறுவதாகும். அது ஆப்ரிக்காவில் மட்டுமல்ல, மாறாக உலகம் முழுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வெளிப்படையாக காலனிய சிறைப்பிடித்தலுக்கு திரும்புவதைக் குறிக்கிறது.”

அப்போதிருந்து, எண்ணெய் மற்றும் ஏனைய மதிப்புமிக்க மூலப்பொருட்கள் நிறைந்த ஒரு கண்டமான ஆபிரிக்காவிற்கான ஒரு புதிய போட்டியின் மத்தியில் விளங்கும் அந்த நாட்டில் (சோமாலியாவில்) வாஷிங்டன் அதன் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும், அதன் தோல்வியை மாற்றியமைக்கவும் தீர்மானமாக உள்ளது. சோமாலியா, உலக வர்த்தகத்திற்கான கடல் மற்றும் விமான போக்குவரத்தின் சந்தியில் அமர்ந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 90 வர்த்தக விமானங்கள் அதன் விமான எல்லையைக் கடந்து செல்கின்றன. வளைகுடாவில் இருந்து எண்ணெய் எடுத்துச்செல்வதற்கான கடல்வழியும் அமைந்துள்ளது. வட ஆபிரிக்காவும் அதன் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. சீனா போன்ற அதன் எதிரிகளுக்கு எதிராக அமெரிக்கா அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்க வேண்டுமானால், சோமாலியாவின் கட்டுப்பாடு அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

1994 அதன் தோல்வியிலிருந்து, வாஷிங்டன் வெவ்வேறு தந்திரோபாயங்களை கையாள கற்றுக்கொண்டுள்ளது. ஆபிரிக்காவில் அதிகளவில் அது மறைமுக துருப்புகளைப் பயன்படுத்தி வருகிறது. டிசம்பர் 2006இல், சோமாலியா மீது எத்தியோப்பியா தாக்குதல் நடத்த அமெரிக்கா உதவியது. அது இடைக்கால மத்திய அரசாங்கத்தை ஒரு கைப்பாவை ஆட்சியாக நிறுவியது. எத்தியோப்பியா துருப்புகள் திரும்பப்பெறப்பட்ட போது, அதன் இடத்தில் AMISON வந்தது. AMISONஇல் பெரும்பான்மையாக இருக்கும் உகாண்டா மற்றும் புரூண்டி துருப்புகள், அமெரிக்க இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு, நவீன ஆயுதங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருந்த போதினும், இத்தகைய ஏகாதிபத்திய சதிகளின் திருப்பங்கள் இருந்தபோதினும், 1992-1994 சோமாலியா தாக்குதல் பற்றிய Workers Leagueஇன் குணாம்சப்படுத்தல், தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. பால்கன் பிரதேசங்களிலும், மத்திய ஆசியாவிலும், பாரசீக வளைகுடா மற்றும் ஆபிரிக்காவிலும் மனிதாபிமான நோக்கங்கள் என்ற வேஷம் என்பதனைவிட அதிகமாக, ஏகாதிபத்திய சாகசங்கள், தாக்குதல்கள் மற்றும் யுத்தங்கள் தொடர்ந்துள்ளன. மற்றொரு கொடூரமான தலையீட்டிற்கு வழிவகுக்கும் விதத்தில் சோமாலியாவில் நிலவும் பரிதாபகரமான பஞ்சத்தைக் குறித்த மக்களின் அக்கறையைத் திரிக்க முயலும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்களும், இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும்.