World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Stock market panic deepens euro crisis

பங்குச் சந்தைப் யூரோ நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது

By Peter Schwarz 
6 August 2011

Back to screen version

யூரோப் பகுதி அரசாங்கத் தலைவர்கள் ஜூலை 21ம் திகதி யூரோ நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு நடவடிக்கைப் பொதி பற்றி உடன்பாடு காண்பதற்காகப் பிரஸ்ஸல்ஸில் கூடியபோது, உலக சோசலிச வலைத்தளம் பின்வருமாறு குறிப்பிட்டது.நெருக்கடியை உச்சிமாநாடு தீர்க்கவில்லை, அதை வெறுமே ஒத்திப்போடத்தான் செய்துள்ளது. எனவே யூரோ  மீதான அழுத்தம் அதிகரிப்பது சில காலத்திற்குள் நடக்கும், அரசாங்கத் தலைவர்கள் ஒரு அவசரக்கால உச்சிமாநாட்டை மீண்டும் கூட்டிப் பேசுவர்.”

இந்தக் கணிப்பு உண்மையில் நிகழ்வதற்கு சரியாக இரண்டு வாரங்கள்தான் ஆகியுள்ளன.

வியாழனன்று பங்குச் சந்தைப் பீதி ஏற்பட்ட உடன், யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதி முன் எப்பொழுதைக் காட்டிலும் இப்பொழுது அதிக உறுதியற்றுத்தான் உள்ளது. கிரேக்கம், அயர்லாந்து போர்த்துக்கல் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள நாடுகளைத் தவிர, இப்பொழுது யூரோப்பகுதியில் இரு முக்கிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவை தங்கள் கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் நிதிக்காக பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. ஐரோப்பாவில் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரமான பிரான்ஸ் கூட அதன் அண்டை நாடான ஜேர்மனியைவிட அரசாங்கக் பங்குபத்திரங்களுக்கு மிக அதிக உயர்ந்த வட்டி விகிதங்களைக் கொடுக்க நேரிட்டது.

பல அரசாங்கங்களும் இயங்காநிலையடைந்து, நிதியச் சந்தைகளினால்  மோதலுக்கு தள்ளப்பட்ட நம்பிக்கையின்றிய ஒரு கண்டத்தின் தோற்றத்தைத்தான் ஐரோப்பா வழங்குகிறது. இது உள்ளது. இவ்வகையில் பங்குச் சந்தை பீதியினால் மட்டும் அவைபாதிப்பு அடையவில்லை என்பது உறுதி. ஐரோப்பாவில் பெருகிவரும் தேசிய மோதல்கள் மற்றும்  வரவுசெலவுத்திட்ட மோதல்கள், அமெரிக்காவில் மந்த நிலை வருமோ என்ற அடையாளங்களுடன் சேர்ந்து பங்குச் சந்தையில் பீதிகளை அளிப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளன. இந்த வாரம் மட்டும், இப்பீதி உலகம் மொழுவதும் $2.5 டிரில்லியன் மதிப்புடைய சொத்துக்களை அழித்துவிட்டது. இத்தொகை பிரான்ஸ் நாட்டின் ஓராண்டு பொருளாதார உற்பத்திக்குச் சமம் ஆகும்.

ஜூலை 21ம் திகதி நடைபெற்ற யூரோ உச்சிமாநாட்டிற்குப்பின், ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அரசாங்கப் பத்திரங்களின் இடர் காப்பீடுகள் மீண்டும் உயரத்துவங்கின.  ஐரோப்பிய மீட்பு நிதி EFSF, உடைய அதிகாரங்களை விரிவாக்கக் கூட்டம் ஒப்புக் கொண்டபின்னரும் இந்நிலை நீடிக்கிறது. இந்த அமைப்பு மிக அதிகக் கடனுடைய நாடுகளுக்கு உதவும் என்ற கருத்தில் அமைக்கப்பட்டது.

ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸே லூயி சப்பத்தேரோ முன்கூட்டித் தேர்தல்கள் வரும் என்று அறிவித்தது.  இத்தாலியிப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி பாராளுமன்றத்தின் நடத்திய உரை ஆகியவையும் நிதியச் சந்தைகளை அமைதிப்படுத்த முடியவில்லை. இரு நாடுகளும் பத்து ஆண்டு கடன் பத்திரங்களுக்கு 6% க்கும் மேலான வட்டியைக் கொடுக்க நேரிட்டுள்ளது.

வியாழன் அன்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் பரோசோ 17 யூரோப் பகுதி நாடுகளுக்கு எழுதிய கடிதம் வெளிவந்தபின் இச்சந்தைகளில் பீதி பெருகியது; அக்கடிதத்தில் அவர்  யூரோ உச்சிமாநாட்டில் இரு வாரங்களுக்கு முன்  ஒப்புக்கொள்ளப்ப்ட்டஅனைத்துக் கூறுபாடுகளும் விரைவில் மறுமதிப்பீடு செய்யப்ப வேண்டும் என்று எழுதி, 440 பில்லியன் யூரோ மீட்பு நிதியையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

நிதிக்கு மூன்றில் ஒரு பங்கு திரட்ட வேண்டிய பேர்லினில், பரோசோவின் கடிதம் சீற்றத்துடன் நிராகரிப்பையும் எதிர்கொண்டது. உச்சிமாநாடு முடிந்து இரு வாரங்களுக்குள் மீண்டும் விவாதத்தைத் துவக்குவது சந்தைகளை அமைதிப்படுத்த முடியுமா என்று கூறுவது கடினம்என்று நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள இன்  செய்தித் தொடர்பாளர் கூறினார். நிதிய ஏடான Handelsblatt தன்னுடைய அகந்தையைக் காட்டுவதற்கு இதைவிட மோசமான நேரத்தை பரோசோ தேர்ந்து எடுத்திருக்க முடியாது. இப்பொழுதோ, நிதியச் சந்தைகள் கொந்தளிப்பில் உள்ளன, “நிதானப் போக்கான செயல்கள் வேண்டும், செய்தி ஊடகத்தின் மூலம் எச்சரிக்கை விடும் செய்திகள் கூடாது.” என எழுதியது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் நடத்திய செய்தியாளர் கூட்டம் ஒன்றும் இதேபோன்ற கடின விளைவுகளைத்தான் பேர்லினில் சந்தித்தது. ஜீன் கிளவ்ட ரிஷே ஐரோப்பிய மத்திய வங்கி முன்னதாக பல மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீண்டும் நெருக்கடியினால் தாக்குண்ட நாடுகளின் பிரச்சனைக்குரிய அரசாங்கப் பத்திரங்களை வாங்கவேண்டும் என அறிவித்திருந்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆளும்குழுவிற்குள் கடுமையான விவாதம் இருந்தது. இரு ஜேர்மனிய மற்றும் இரு பிற உறுப்பினர்கள் நடவடிக்கையை நிராகரித்தனர்.

பரோசோ மற்றும் டிஷே உடைய அறிவிப்புக்களுக்கும் அவை தூண்டிவிட்ட முரண்பாடுகளும் சர்வதேசப் பங்குச் சந்தைகள் 2008 நெருக்கடிக்குப் பின் மிக அதிக இழப்புக்கள் என்னும் முறையில் பிரதிபலித்தன. பல அவதானிகள் முந்தைய நெருக்கடி போல் மீண்டும் வரக்கூடும் என்று அஞ்சுகின்றனர்

பிரிட்டனின் கார்டியன் ஏடுநாம் 2ம் கரைப்பை நோக்கிச் செல்லுகிறோமா?” என வினவியது. இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் இருந்த நிலைமையுடன் இதை அது ஒப்பிட்டு சரஜேவோ படுகொலை நடந்து ஒரு மாதத்திற்குள்கூட முக்கிய சக்திகள் இராஜதந்திர முயற்சிகளைக் கைவிட்டு மோதலுக்குத் தயாரானபோதும்கூட, நிதியச் சந்தைகளின் செயற்பாடுகள் வியாழன் அன்று இருந்ததை விடக் குறைந்த குமுறலுடன்தான் இருந்தன.” என எழுதியது.

உண்மையிலேயே ஒரு இரண்டாம் கரைப்பு என்ற நிலை வந்தாலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அரசியல் விருப்பத் தீர்வுகள் இப்பொழுது குறைவு என்று கார்டியன் கூறியுள்ளது. வட்டிவிகிதங்கள் ஏற்கனவே குறைந்துவிட்டன, “1930 களுக்குப் பின் வந்துள்ள மிக ஆழ்ந்த மந்தநிலை மிக நலிவான மீட்பில்தான் உள்ளது. நலிந்து, தடுமாறும் நிலையில் இது எந்தக் கணமும் கைவிடப்படலாம் என்ற அபாயத்தில் உள்ளது.”

பைனான்சியல் டைம்ஸும்ஒரு முழு அளவு கரைப்பு ஏற்படலாம்என்று அஞ்சி, “அத்தகைய நிலை இழுபறியான கோடைகாலத்தை கொந்தளிப்பு நிறைந்த இலையுதிர்காலமாக மாற்றுமா?” என்றும் வினவுகிறது. இதன் பின்உண்மையான பொருளாதாரம் ஒரு குளிர்காலத்தன்மையைத் தோற்றுவிக்குமா?

ஐரோப்பியச் செய்தி ஊடகத்தில் ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்ற அழைப்பிற்குக் குறைவு இல்லை. ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொன்றிற்குச் செல்வதற்குப் பதிலாக தொலைநோக்குடன் செயல்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வெள்ளியன்று ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் ஸ்பெயினின் பிரதம மந்திரி சப்பத்தேரோ ஆகியோர் ஒரு நெருக்கடி மாநாட்டிற்கு அழைப்புவிட ஒப்புக் கொண்டனர். ஆனால் இரு வாரங்களுக்கு முன்பு நடந்த சிறப்பு உச்சிமாநாடு எப்படி நெருக்கடியைத் தீர்க்க முடியவில்லையோ, அப்படித்தான் இதிலும் நேரிடும். இதைத் தொடர்ந்து பல மேலதிக மாநாடுகள் நடந்தாலும் நிலைமை இப்படித்தான் நீடிக்கும்.

முக்கிய ஐரோப்பியத் தலைவர்களின் குறுகிய மனப்பான்மை, தேசிய சுய நலன்களின் வளர்ச்சி, பேர்லின், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் இன்னும் பல தலைநகரங்களுக்கு இடையே இடையறாத மோதல்கள் ஆகியவை பொறுப்பான அரசியல்வாதிகளின் குணநலன்களின் தோல்வியினால் ஏற்பட்டவே அல்ல. ஒரு சார்க்கோசியின் குறுகிய தேசியப் பாங்கு, ஒரு மேர்க்கலிடம் ஐரோப்பியப் பார்வை இல்லாதது ஆகியவற்றினால் மட்டும் இது நிகழவில்லை என்று பற்றி பல அவதானிகள் குறைகூறியுள்ளனர். மாறாக, இவை ஆழ்ந்த சமூக மாற்றத்தில் ஒரு வெளிப்பாடு ஆகும்.

இன்றைய பொருளாதாரச் சமூக வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடும் நிதிய மூலதனத்தின் ஆணைப்படி நடக்கிறது. அதுவோ உற்பத்தி நடவடிக்கைளில்  இருந்து முற்றிலும் விலகி, குறுகிய காலத்தில் இலாபம் அடைய முனைகின்றது. சமூகத் தேவைகளைக் கணக்கில் எடுத்தும் கொள்ளும் எந்த நீண்டகாலக் கொள்கையோ, உள்நாட்டு, சமூகப் பூசல்களைக் குறைக்கும் முயற்சிகளோ இதனால்  இயலாமற் போய்விட்டன.

பழைமைவாதிகள், தாராளவாதிகள், பசுமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் அல்லதுஇடதுஎன்று எந்தக் கட்சிகளாக இருந்தாலும், அவை பெரும் செல்வக்கொழிப்பு உடைய நிதிய உயரடுக்கின் ஆணைகளுக்குத் தம்மை அடிபணியச்செய்துகொண்டுவிட்டன. நெருக்கடிக்கு அவர்களுடைய ஒரே பதில் பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு வழங்குவது என்று ஒரு புறமும், மக்களுடைய நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் புதிய சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது என மறுபுறமும் உள்ளதுஇதன் விளைவுகள் தொடர்ச்சியான சமூகச் வீழ்ச்சியும் அதிகரிக்கும் தேசிய மோதல்களும்தான். சமூகம் பாரிய புரட்சிகரப் போராட்டங்கள், ஆயுதமேந்திய மோதல்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முதல் உலகப் போருக்கு முந்தைய நிலை பற்றி கார்டியன் சமாந்தரமான நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளது, இவ்வகையில், இது காற்றில் இருந்து பறிக்கப்பட்ட கருத்து அல்ல.

எதிர்வரவிருக்கும் மோதல்களுக்குத் தயாரிப்புக்கள் நடத்தப்படுவது தேவையாகும். நிதிய உயரடுக்கின் சக்தி சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தினால் மட்டும்தான் முறிக்கப்பட முடியும். இதற்கு சோசலிசத் திட்டம் ஒன்றும் புதிய கட்சியும் தேவைப்படுகின்றன. இதுதான் சோசலிச் சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நோக்கம் ஆகும்.