World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: The Left Party' s new programme

ஜேர்மனி இடது கட்சியின் புதிய வேலைத் திட்டம்

By Sven Heymann and Peter Schwarz 
1 August 2011

Back to screen version

அக்டோபர் மாதம் ஏர்ஃபோர்ட்டில் நடக்க உள்ள அதன் மாநாட்டில் நிறைவேற்றுவதற்காக இடது கட்சியின் நிர்வாகக் குழு ஒரு வரைவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

2007 கோடையில் நிறுவப்பட்ட இக்கட்சி இதுவரை ஒரு முறையான வேலைத்திட்டத்தைக் கொண்டிராததோடு, “வேலைத் திட்டரீதியான முக்கிய புள்ளிகளைமட்டும்தான் கொண்டிருந்தது. ஒரு வேலைத் திட்டம் பற்றிய உடன்பாடு அரசியல் காரணங்களுக்காக நீண்டகாலமாக ஒத்திப்போடப்பட்டு இருந்தது. இந்த வேலைத் திட்ட ரீதியான தெளிவின்மை இடது கட்சியினுள்  பல அரசியல் போக்குகளை ஒன்றுபடுத்த உதவியுள்ளது.

முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிசக் கட்சியின் வழித்தோன்றலான ஜனநாயக சோசலிசக் கட்சியையும் (PDS) மேற்கு ஜேர்மனில் சமூக ஜனநாயகக் கட்சியின் விட்டோடிகளுடனும், WASG (வேலைக்கும் சமூக நீதிக்குமான தேர்தல் மாற்றீடு) உடைய தொழிற்சங்க நிர்வாகிகளையும் ஒன்றாக இடதுகட்சி கொண்டுவந்தது. இதில் பல முன்னாள் குட்டி-முதலாளித்துவஇடதுமற்றும் தீவிரவாத அமைப்புக்களும் உள்ளன. இக்கட்சி பல வண்ணங்களையும்தான் காட்டி வருகிறது. உள்ளூராட்சி மற்றும் மாநில அரசாங்கங்களில் அதிகாரம் செலுத்தியிருந்த பழைமைவாத அரசியல்வாதிகளுடன், இது புரட்சி மற்றும் கம்யூனிசம் எனக்கூறிக்கொள்ளும் (வார்த்தைகளில் மட்டும்) போக்குகளையும் கொண்டுள்ளது.

இதற்கிடையில், இடது கட்சி முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் இணைந்த பகுதியாவும் ஆகிவிட்டது. மத்திய பாராளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் இருப்பதுடன் 16 மாநில பாராளுமன்றங்களில் 13ல் இடம் பெற்றுள்ளது. இது பேர்லின் மாநில அரசாங்கத்தை அமைத்துள்ளதுடன் பிரண்டன்பேர்க்கிலும் சமூக ஜனநாயகக் கட்சியுடன் இணைந்துள்ளது. இதைத்தவிரவும் அதிக மக்கள் கொண்ட வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் இது சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்துவருகிறது. நகரசபை மட்டத்தில் இடதுகட்சி மிக நெருக்கமாக சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் செயல்படுகிறது. சில இடங்களில் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடனும்(CDU) செயல்படுகிறது. எதிர்காலங்களில் மத்திய ஆட்சி மட்டத்தில் அரசாங்கத்தில் பங்குபெறுவது பற்றியும் நிராகரிக்கவில்லை.

இச்சூழ்நிலையில், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக்க வேண்டும் என்று இடது கட்சி மீது அழுத்தம் பெருகிவருகிறது. இதைச் செய்வதற்குத்தான் அது புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. முதலாளித்துவத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களினால் மறைக்கும் வகையில், சீர்திருத்த உறுதிமொழிகள் மற்றும் இன்னும் சிறந்த சமூகத்திற்கான கோரிக்கைகளைக் கொண்ட இந்த 80 பக்க ஆவணம் தற்பொழுதுள்ள சமூகஅமைப்புமுறை, அதன் சட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது.

வரைவு வேலைத்திட்டத்தின் முன்னுரைஒரு மாறுபட்ட பொருளாதார, சமூக முறை: ஜனநாயக சோசலிசம்என்பதற்கு அழைப்பு விடுகிறது; பொருளாதாரமும் அரசியலும்பெரும்பாலான மக்களின் முக்கிய தேவைகள் மற்றும் நலன்களில்முக்கியத்துவம் கொண்டிருக்க வேண்டும் என்றும், “அமைப்புமுறையில் ஒரு மாற்றம் தேவை, ஏனெனில் சமத்துவமின்மை, சுரண்டுதல், விரிவாக்கம் மற்றும் போட்டியைத் தளமாகக் கொண்டுள்ள முதலாளித்துவம் இந்த இலக்குகளுடன் இயைந்து இருக்கவில்லைஎன்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆவணத்தை இன்னும் படிக்கையில், அது முதலாளித்துவத்தின் அனைத்து முண்டுதூண்களான முதலாளித்துவ அரசியலமைப்பு, முதலாளித்துவ சொத்து உறவுகள், ஏன் சர்வதேச நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கும் ஆதரவு தருகிறது என்பது நன்கு புலனாகும்.

இடது சீர்திருத்தத் திட்டங்கள்சமூக மாற்றத்திற்கான நடவடிக்கைகள்என்ற தலைப்பில் இது அரசியலமைப்பு, அரசாங்கம் ஆகிவற்றிற்கான அதன் அடிபணிவை அறிவிக்கிறது: “ஜேர்மனியக் கூட்டாட்சிக் குடியரசு ஜனநாயகமானதாகவும், ஒரு சமூக உரிமைகள் உள்ள அரசாகவும் இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. சோசலிச அரசு என்பது பற்றிய குறிப்பு எதையும் காணவில்லை.

வேலைத்திட்ட குழுவில் இருந்த முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் உள்ள வல்லுனர்கள், இந்த வார்த்தைப்பிரயோகங்களின் வேறுபாடுகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிவர். ஜனநாயக அரசமைப்பு என்பது ஒரு முதலாளித்துவ அரசாகும். இது பெரும்பாலான மக்களுடைய நலன்களுக்கு எதிரான அடித்தளத்தைக் கொண்ட முதலாளித்துவத்தின் நலன்களையும் சட்ட உறவுகளையும் பாதுகாக்கும். ஆனால் ஒரு சோசலிச அரசு என்பது முதலாளித்துவத்தின் விருப்புகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்து முதலாளித்துவ சொத்துமுறையை அகற்றும்.

இன்னும் மேலதிகமாக படிக்கையில், வரைவு வேலைத்திட்டம் ஒரு நெருக்கடியற்ற, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் சமாதானமுறையிலான முதலாளித்துவம் என்பது சாத்தியமல்ல.” “முதலாளித்துவம் வெற்றிகொள்ளப்பட வேண்டும்என்று அது அழைப்பு விடுகிறது. ஆனால் அது தற்பொழுது உள்ள சமூக ஒழுங்கிற்குள் படிப்படியான சீர்திருத்தங்கள் மூலம் அடையப்பட வேண்டும். “அதிகார உறவுகளுக்குள் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களின் விளைவுகள் இன்னும் கூடுதலான ஜனநாயக சோசலிச மாற்றங்களுக்கான ஆரம்ப நிலைமைகளை தோற்றுவிக்கும்என்று வேலைத்திட்டம் கூறுகிறது.

சமூக ஜனநாயக சீர்திருத்த வேலைத்திட்டங்களில் இருந்து இது ஒன்றும் மாறுபட்டது அல்ல. இவ்வகையில், வரைவு வேலைத்திட்டம் ஒரு பழைய பொருட்களின் சந்தையைப் போல்தான் உள்ளது. இங்கு மிகவும் பழமையான அல்லது காலம் கடந்துவிட்டது எனக்கருதப்பட்டதாலோ பொருளாதார ஜனநாயகம், ஊழியர்கள் உடைமை மற்றும்தொழிலாளர்கள் இணைந்து நிர்வாகத்தில் இருப்பதுபோன்ற சீர்திருத்தக் கருத்துக்கள் ஏதும் இல்லை.

நடைமுறையில் இத்தகைய சமூக ஜனநாயக சீர்திருத்த உறுதிமொழிகள் எப்பொழுதும் நிதியச் சந்தைகள் மற்றும் ஏற்றுமதித் தொழில்துறையின் ஆணைகளுக்குத்தான் வழிவிட்டுள்ளன. இதனால் சீர்திருத்தம்என்ற வார்த்தையே சமூக முன்னேற்றம் என்ற பொருளை இப்பொழுது தருவதில்லை; சமூகப் பிற்போக்குத்தனம் என்றுதான் உள்ளது. இப்படித்தான் ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தை மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படல், மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதுகள் உயர்த்தப்படல் ஆகியவை உள்ளன.

இது இடது கட்சிக்கும் பொருந்தும். பேர்லின் செனட்டில் (மாநில அரசாங்கம்) பத்து ஆண்டுகள் ஆட்சி நடத்துகையில் இடது கட்சி வரைவு வேலைத்திட்டத்தில் அது இப்பொழுது உறுதி கொடுத்துள்ளதற்கு முற்றிலும் எதிரிடையானவற்றைத்தான் செய்துள்ளது. பில்லியன் கணக்கில் நிதியளித்து ஊக வணிகர்களை அது மீட்டது, பொதுத்துறையில் வேலைகள் மற்றும் ஊதிய வெட்டுக்களைச் சுமத்தியது, பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், மழலைகள் பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றிற்கான நிதியங்களைக் குறைத்து, அரச வீட்டுத்திட்டம் மற்றும் நீர் விநியோகிக்கும் நிறுவனங்களை நிதிய முதலைகளுக்கு விற்றது.

இன்னொரு பகுதியில் வரைவு வேலைத்திட்டம் வெளிப்படையாக முதலாளித்துவச் சொத்து உரிமைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது. “ஐக்கியத்தின் அடிப்படையில் உள்ள ஒரு பொருளாதாரத்தில், அரசாங்க, நகரசபை, தனியார், சமூக, கூட்டுறவு மற்றும் பிற சொத்து வடிவங்கள் என்ற முறையில், பல வகைச் சொத்துரிமைகளுக்கு இடம் அளிக்க வேண்டும். வரைவு வேலைத்திட்டம் பலவித சொத்து உரிமை வடிவங்கள்தான்ஜனநாயக சோசலிசத்தின்அடிப்படை என்று முன்வைக்கிறது. இது முதலாளித்துவத்திற்கு முற்றிலும் மாறானது என்று கூறப்படுகிறது.

உண்மையில் முதலாளித்துவத்தின் கீழ் அத்தகைய பலவித சொத்துடமை வடிவங்கள் எப்பொழுதுமே இருந்துள்ளன. அரசாங்கம் முதலாளித்துவ பொருளாதாரம் முழுவதும் செயல்படுவதற்கு தவிர்க்க இயலாது எனக்கருதினால் பொருளாதாரத்தின் சில பிரிவுகளைத் தன் பொறுப்பின்கீழ் எடுத்துக் கொள்ளும் அல்லது நீண்டகால முதலீடுகள் சிலவற்றிற்குத் தேவை என்றாலும் எடுத்துக் கொள்ளும். சமீபத்திய நிதிய நெருக்கடியில் Hypo Real Estate (HRE) நெருக்கடியின் போது நடந்தது போல் அவற்றின் இழப்புக்கள் மற்ற வங்கிகளின் இலாபங்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தன என்றால் அவற்றை எடுத்துக்கொண்டது.

இழப்புக்களை தேசியமயமாக்கும் இத்தகைய செயற்பாடுகள் ஒன்றும் சோசலிசத்துடன் தொடர்பு கொண்டவை அல்ல. முதலாளித்துவத் தேசியமயமாக்குதல் பொருளாதார வாழ்வு சந்தை விதிகளுக்கு அடிபணியச்செய்யப்படுவதை மாற்றாததுடன், முதலாளிகளின் இலாபக் கோரிக்கை விதிகளுக்கு அடிபணியச்செய்யப்படுவதையும் மாற்றுவதில்லை. மாறாக, அவை முதலாளிகள் இலாபம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் உதவுகின்றன.

சமூக சமத்துவமின்மையை கூட வரைவு வேலைத்திட்டம் பாதுகாக்க முற்படுகிறது: “வருமானத்திலும் செல்வத்திலும்  சமூக சமத்துவமின்மை ஒவ்வொருவரும் செய்யும் வேறுபட்ட மட்டங்களாலான செயற்பாட்டை அடித்தளமாகக்கொண்டிருந்தாலும் மற்றும் அதேபோல் சமூகப் பணிகளின் நிர்வாகத்திற்குத் தேவையான ஊக்க உந்துதல்கள் இருந்தாலும்  மட்டுமே நியாயப்படுத்தப்பட முடியும்என்று அது கூறுகிறது. இத்தகைய அறிக்கை தடையற்ற சந்தை ஆதரவு தாராளவாத ஜனநாயக் கட்சியின் (FDP) திட்டத்திலும் காணப்பட முடியும்.

முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் அரசியலமைப்பிற்கு தமது அடிபணிவை கொடுத்துள்ளதைத்தவிர, இடதுகட்சி வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ தொடர்புடையவற்றில் ஆளும் வர்க்கத்திற்கு நம்பகத்தன்மை கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கும் பல கருத்துக்களையும் வரைவு வேலைத்திட்டம் கொடுக்கிறது. இதுவரை இடது கட்சி நேட்டோவை நிராகரித்தது, வெளிநாட்டில் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டியது மற்றும் பாஸ்தீனியத்திற்கு எதிரான இஸ்ரேலின் கொள்கைகளைக் குறைகூறியது ஆகியவை மத்திய அரசாங்கத்தில் இக்கட்சியை ஏற்படாதற்கு முக்கிய தடைகளாக இருந்துள்ளன.

இப்பொழுது இந்த வரைவு வேலைத்திட்டம் இஸ்ரேலின் நிலையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதைக் பாதுகாப்பதற்கான கட்சியின் உறுதியையும் கூறுகிறது. இப்பிரச்சினைகள் பற்றி காசாவிற்கு உதவிப் பொருட்கள் எடுத்துச் சென்ற கப்பல்களில் சில கட்சி உறுப்பினர்கள் தொடர்பு கொண்டிருந்தபோது அவர்கள் யூத எதிர்ப்பாளர்கள் எனப் பல செய்தி ஊடகத்தினரால் குறிக்கப்பட்டபோது, மோதல்கள் இருந்தன. கட்சித்தலைவர் கிரிகோர் கீஸி இறுதியாக கட்சி உறுப்பினர்கள் இஸ்ரேலை விமர்சிக்கும் அத்தகைய செயல்களில் இனி பங்குபெறக்கூடாது என உறுதியளித்துள்ளதுடன் வரைவு வேலைத்திட்டத்தில் இஸ்ரேலிய நாட்டிற்கான ஆதரவும் கொடுக்கப்பட்டுவிட்டது.

நேட்டோ கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் வரைவு வேலைத்திட்டத்தில் உள்ளது. ஆனால் திட்டம் அதற்குப் பதிலாக ரஷ்யாவுடன் இணைந்த ஒரு கூட்டுப் பாதுகாப்புத் திட்டம்,” தேவை எனக் கூறியுள்ளது. எனவே இந்தகூட்டுப் பாதுகாப்பு முறை (இராணுவக் கூட்டு என்பதை அழகுபடுத்திக்கூறும்) அடிப்படையில் உறுதிசெய்யப்படுவதுடன், ரஷ்யாவுடன் ஏற்கனவே பல துறைகளில் உள்ள ஒத்துழைப்புக்களுடன் இது மற்றும் ஒரு சிறிய நடவடிக்கை என்பதும் புலனாகும்.

நேட்டோ கூட்டிற்குள் பெருகிய அழுத்தங்கள் உள்ள நிலையில் ரஷ்ய சார்பு மனப்பாங்கு இடது கட்சியிடம் உள்ளது விரைவில் மற்ற கட்சிகளின் ஆதரவையும் பெறும். கிழக்கு ஜேர்மனியில் வேர்களைக் கொண்ட இடது கட்சியின் ரஷ்யாவுடனான தொடர்பு கொண்ட பல இழைகள் அப்பொழுது முக்கிய பங்கைப் பெறும்.

வரைவு வேலைத்திட்டத்தில் ஒரு முழுப்பத்தியும்.நா.சீர்திருத்தம் வலிமைப்படுத்தப்படல்என்பது பற்றி உள்ளது. பெரும் சக்திகளின் திருடர்களின் சமையலறைஉலகிலுள்ள நாடுகள், சமூகங்களுக்கு இடையே சமாதானமான உணர்வுகள் நன்கு புரிந்து கொள்ளப்படுவதற்கு மிக முக்கியமான நிறுவனம்என்று அழைக்கப்படுகிறது.

பெருகிய முறையில் லிபியாவில் சமீபத்தில் நடந்தது போல் ஐ.நா.  “பாதுகாக்கும் பொறுப்பு என்ற மறைப்பில் ஏகாதிபத்திய போர்களை நியாயப்படுத்துவதால், இடதுகட்சிக்கு இராணுவச் செயற்பாடுகளை இந்த இடத்தில் இருந்து ஆதரிப்பதற்கான ஒரு சிறிய முன்னோக்கிய அடியாகும். ஒரு அமைதிவாதக்கட்சி என்பதில் இருந்து போர் ஆதரவுக்கட்சி என்று மாறும் அதன் பயணத்தில், பசுமைவாதிகளின் முதல் அடியெடுப்பு கூட ஐ.நா.கட்டுப்பாட்டின் கீழ்சமாதான நடவடிக்கைகள்படைகளால் எடுக்கப்படுவதற்கு ஆதரவு கொடுத்தல் என்பதாகத்தான் இருந்தது.

ஜேர்மனிய இராணுவம் கலைக்கப்பட வேண்டும் என்று இடதுகட்சி குரல் கொடுக்கவில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, கட்சியின் பாதுகாப்பு பிரிவுச் செய்தித்தொடர்பாளர், ஜான் வன் ஆக்கன் இடதுகட்சி நாட்டின் இராணுவப் படைகள் ஆக்கிரமிப்புப் படையாக இல்லாமல் விளங்க வேண்டும் என்பதில் உறுதி என்று கூறினார். 2001ல் இருந்து ஆப்கானிஸ்தான் போர், உத்தியோகபூர்வமாகசமாதானம், மற்றும் மறுகட்டமைப்புப்பணிஎன்று வரையறுக்கப்படுவது இடதுகட்சியின் இத்தகைய நிலைப்பாட்டுடன் ஒத்திருக்கும்.

வரைவு வேலைத்திட்டத்தில் சில நீண்ட பத்திகள் பெண்ணுரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி உள்ளன. இங்கு இடது கட்சி பசுமைவாதிகளின் அரசியல் செல்வாக்கையொட்டி வலதிற்கு நகர்கின்ற குட்டி முதலாளித்துவ அடுக்குகள் சிலவற்றைத் திருப்தி செய்ய முயல்கின்றது.

இந்த புதிய கட்சி வேலைத் திட்டம் அநேகமாக ஏர்ஃபோர்ட்டில் வழக்கமான இரண்டாந்தர பிரச்சினைகள் பற்றிச் சூடுபிடிக்கும் விவாதங்களுக்குப் பின்னர் ஏற்கப்படும். இது இடது கட்சி இன்னும் வலதிற்கு மாறுகிறது என்பதைத்தான் குறிக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே அமைப்பின் பெயர் ஒரு ஏமாற்றுத்தனம்தான். பெயரைத்தவிர, இக்கட்சியில் இடதுசாரித்தனம் ஏதும் இல்லை. இதன் முன்னோடி அமைப்பு PDS 1989/90 ல் கிழக்கு ஜேர்மனிய ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை இயக்கி முதலாளித்துவ மீட்பு, மறு ஒன்றிணைப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பின்னர் அது கிழக்கு ஜேர்மனியில் நடைபெற்ற பொருளாதார சமூகச்சரிவிற்கு எதிரான எழுச்சியைக் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக் கொள்ள முற்பட்டது.

WASG என்பது முன்னாள் சமூக ஜனநாயக் கட்சி -SPD- மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளால் தோற்றுவிக்கப்பட்டது; அவர்கள் சமூக ஜனநாயக் கட்சி தொழிலாள வர்க்கத்திடையே ஹார்ட்ஸ்சீர்திருத்தங்களினால்கட்டுப்பாடு கொள்ளும் திறனை இழக்கும் என அஞ்சினர்.

இப்பொழுது ஏழு தசாப்தங்களில் முதலாளித்துவம் மிக ஆழ்ந்த நெருக்கடியை முகம் கொடுக்கையில், ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பாரிய தாக்குதல்கள் இருக்கையில், கட்சியும் அதன் வேலைத்திட்டமும் முதலாளித்துவ நாடு, அதன் அரசியல் அமைப்பு ஆகியவற்றை பாதுகாக்க உறுதியளித்து, தம்மை உத்தியோகபூர்வ ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் செய்துள்ளன.

இடது கட்சிக்குள் தீவிரமாக இயங்கும் சோசலிச மாற்றீடு (SAV), மார்க்ஸ் 21, கம்யூனிஸ்ட் அரங்கு இன்னும் பல போலி இடது போக்குகள் இந்த தந்திரோபாயத்திற்கு ஆதரவு கொடுக்கும். அவை வரைவு வேலைத்திட்டத்தில் உள்ள ஏதேனும் ஒருமுற்போக்கு கருத்தை சுட்டிக்காட்டி வேலைத்திட்டத்தினதும் இடது கட்சியின் வலதுசாரி நிலைப்பாட்டை திசைதிருப்ப முயற்சிக்கும்.

உண்மையில் போர், சமூக சீரழிவு, சுரண்டுதல், முதலாளித்துவம் ஆகியவற்றை எதிர்ப்பதற்கு இடதுகட்சி மற்றும் அதன் குட்டி முதலாளித்துவ இணைப் பிரிவுகளுடன் முறித்துக் கொள்ளுவது அவசியம் ஆகும். தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர, அதாவது சுயாதீன, சர்வதேச சோசலிசக் கட்சியைக் கட்ட வேண்டும். நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவு என்ற முறையில் சோசலிச சமத்துவக் கட்சி அத்தகையதொரு கட்சி ஆகும்.