World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Mass protests sweep Israel

இஸ்ரேல் முழுவதும் அதிகரித்துவரும் வெகுஜன எதிர்ப்புக்கள்

By Jean Shaoul
29 July 2011

Back to screen version

இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாகுவின் சீர்திருத்தங்கள் பற்றிய உறுதிமொழிகள் இருந்தபோதிலும்கூட, டெல் அவிவ் மற்றும் ஜெருசெலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயர்ந்த வீட்டு வாடகைகளுக்கு எதிராக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வாடகை உயர்வுகள் குறித்த எதிர்ப்புக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தொடங்கின. வீடுகள் பற்றாக்குறை மற்றும் மிக அதிக வாடகைகளை எடுத்துக்காட்டும் வகையில் நாடு முழுவதும் கூடார நகரங்கள் தோன்றியுள்ளன. பொதுவாக ஒரு மத்தியதர வர்க்கத்தினரின் எதிர்ப்பாக டெல் அவிவின் மைய ரோத்ஸ்சைல்ட் பொலிவார்டில் தொடங்கிய எதிர்ப்புக்கள் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் கையேற்கப்பட்டது. அது இஸ்ரேல் முழுவதும் நகரங்கள் பலவற்றிலும் உள்ளூர் மக்களை உள்ளடக்கிய கூடார நகரங்களை நிறுவியுள்ளது.

இந்த எதிர்ப்புக்கள் இளைஞர் குழுக்கள், தீவிர மரபார்ந்த ஹரேடி இயக்கம், மகளிர் அமைப்புக்கள், கடந்த வசந்தக் காலத்தில் வேலைநிறுத்தம் செய்த சமூகப்பணியாளர்கள் என்று பல பிரிவுகளின் பிரதிநிதிகளிடத்தில் இருந்தும் ஆதரவைப் பெற்றன. அத்துடன் மருத்துவர்களும் பல வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுப்புறச் சிறுநகர்களில் அணிவகுப்பாளர்களுடன் பெடௌவின் பழங்குடி மக்களும் சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஹாரெட்ஸ் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பு இஸ்ரேலிய மக்களில் 87% கூடார நகர் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் எனக் காட்டுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று அநேக இளைஞர்களை கொண்ட 40,000 பேர் ரோத்ஸ்சைல்ட் பொலிவர்டில் உள்ள கூடார நகரத்தில் இருந்து டெல் அவிவ் அருங்காட்சியகம் வரை அணிவகுத்துச் சென்றனர். கடந்த பல ஆண்டுகளில் இத்தகைய பெரிய அரசியல் அணிவகுப்பு நடந்தது இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள்முறையான வீடுகள் தேவை, நியாயமான வாடகைகள் வேண்டும்”, “மக்களிடத்தில்தான் அதிகாரம் உள்ளது”, “இத்தலைமுறை வீட்டுவசதியைக் கோருகிறதுஎன்று கோஷங்களை முழக்கினர். ஆர்ப்பாட்டத்தில் சிலர் நெத்தன்யாகு இராஜிநாமா செய்யவேண்டும் எனக் கோரினர்.

அரசாங்கம் நிலச்சொத்துச் சந்தையில் தலையிட்டு விலைகள் குறைக்கப்பட வேண்டும், வாடகைக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், கட்டிடம் கட்டுவோர் தங்கள் கட்டுமானத்திட்டங்களில் வாடகை செலுத்தக்கூடிய வீட்டுவசதியை சேர்க்க வேண்டும் எனப் பேச்சாளர்கள் அழைப்பு விடுத்தனர். நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை காப்லான் மற்றும் இபின் கிவிரோல் தெருக்களில் இருந்து கட்டாயமாகப் பொலிஸ் அகற்ற முற்பட்டபோது மோதல்கள் எழுந்தன. “சட்டவிரோதமாகக் கூடியதற்காக” 11 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

2008ல் இருந்து சராசரி அடுக்குமாடி வீட்டின் விலைகள் 55 சதவிகிதமும், வாடகைகள் 27 சதவிகிதமும் அதிகரித்துள்ளன. இவை ஊதிய உயர்வுகளை விட மிக, மிக அதிகமாகும்.

1993 ஓஸ்லோ ஒப்பந்தங்களை தொடர்ந்து, தொழிற்கட்சி, லிகுட் அல்லது கடிமா என்று தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இஸ்ரேலில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாறாக மேற்குக்கரை, காசா மற்றும் கோலன் குன்று ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புக்களுக்கு இஸ்ரேலியர்கள் குடியேறுவதற்கு ஊக்கம் அளித்தன. இது சுற்றுப்புறப் பகுதிகளில் புதிய வாடகை செலுத்தக்கூடிய வீடுகளுக்கு பற்றாக்குறைக்கு வகை செய்து விலைகளையும் வாடகைகளையும் உயர்த்திவிட்டது. சமீபத்திய சொத்துமதிப்புக் குமிழ் முக்கிய பகுதிகளில் வீடுகளின் விலைகள் வானளாவச் சென்று விட்டதைத்தான் காட்டுகிறது.

டெல் அவிவ் பகுதிக்குள் கட்டுமானப் பணிகளில் மூன்று சதவிகிதம்தான் கடந்த தசாப்தத்தில் அரசாங்க வீடுகளுக்கு என இருந்தது. 2006 முதல் 2009 வரை ஒரு அரசவீட்டுக் கட்டுமானம் கூட கட்டப்படவில்லை.

எதிர்ப்புக்களுக்கு இருந்த அதிகூடிய ஆதரவு இந்த வாரம் முன்னதாக போலந்திற்குச் செல்வதாக இருந்த நெத்தன்யாகுவின் திட்டத்தை இரத்து செய்ய வைத்துவிட்டது. செவ்வாயன்று நெத்தன்யாகு எதிர்ப்புக்கள்நியாயமானவைஎன்று ஒப்புக்கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, இளம் திருமணம் செய்து கொண்டவர்கள், மூத்த இராணுவத்தினர், மாணவர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு வீடுகள் கட்டுவதற்காகவும் பிற சீர்திருத்தங்களுக்கும் உறுதிமொழி வழங்கினார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குறிக்கப்பட்ட நிலங்களில் இயலக்கூடிய வீடுகளை விற்பனைக்கும் வாடகைக்கும் கட்டுவதற்காக அரசாங்கம் 50% நிதி உதவியளிக்கும் என்று அவர் கூறினார். மேலும் பொதுப் போக்குவரத்துச் செலவுகள் குறைக்கப்படும் என்றும், வணிகச் சொத்து உடையவர்கள் தங்கள் கட்டிடங்களை வசிக்கும் இடங்களாக மாற்றுவதற்கும் உதவியளிக்கப்படும் என்றும் கூறினார். இன்னும் 18 மாதங்களுக்குள் 50,000 புதிய வீட்டு கட்டிடங்கள் கிடைத்துவிடும், இதில் மாணவர்களுக்காக 10,000 கட்டிடங்கள் இருக்கும் என்றும் கூறினார். இத்திட்டங்கள் வெற்றி பெற்றாலும்கூட, உடனடியாக நிவாரணம் ஏதும் கிடைக்காது.

இந்த எதிர்ப்புக்கள் அவநம்பிக்கையான நிலைமையை எதிர்கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்களால் எரியூட்டப்படுகின்றன; அதே நேரத்தில் சமூக சமத்துவமின்மை முன்னோடியில்லாத மட்டத்தை அடைந்துவிட்டது. ஜெருசெலம் போஸ்ட் இந்த வீட்டுத்துறை பற்றிய எதிர்ப்புக்கள்  “அநீதி என்னும் கடலில் ஒரு துளி போன்றவைதான்என்று கூறியுள்ளது; இதைத்தவிர உணவுப் பொருட்கள் விலையேற்றம், வாழ்க்கைத்தர உயர்வுகள், குறைந்த ஊதியப் பிரச்சினைகள் ஆகியவையும் உள்ளன. அட்வா அமைப்பினால் இஸ்ரேல் பற்றிச் சுருக்கமாகஎன்ற தலையங்கத்துடன் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய அறிக்கை, இந்த நெருக்கடி அமைப்புமுறையிலேயே உள்ளடங்கியுள்ளது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

அதிக அரசாங்கச் செலவுகளை கொண்ட ஒரு தேசியரீதியாக கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பொருளாதாரம் என்ற நிலை என்பதில் இருந்து 1985ல் சந்தைச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவான திருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒரு புதிய வணிக உயரடுக்கை, 20 முக்கிய குடும்பங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிதிய அமைப்புகளின் ஆதிக்கத்தைக் கொண்டுவந்துள்ளது. இவை டெல் அவிவ் பங்குச்சந்தைகளில் பதிவாகியுள்ள நிறுவனங்களில் கால்பகுதிமீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த்தோடு, மேலும் முக்கிய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், உயர்தொழில்நுட்பத் தொழில்கள், பணிகள், சொத்து தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் கால்பகுதிக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. பெரும்பாலான முதலீடு டெல் அவிவைச் சுற்றித்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

உலகின் பில்லியனர்களில் 16 பேர் இஸ்ரேலியர்கள் ஆவர். அவர்கள்தான் இப்பெருநிறுவனங்களின்மீது கட்டுப்பாட்டை உடையவர்கள், 25 மிகப் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகள் 2010ம் ஆண்டில் சராசரி ஊதியத்தைப் போல் 90 மடங்கு அதிக ஊதியங்கள் கொடுக்கப்பட்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதங்கள் இருப்பதால், பொருளாதாரப் புள்ளி விவரங்கள் காகித அளவில் நல்லது போல் தோன்றுகின்றன. 2009ம் ஆண்டு இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிமனிதனுக்கு $29,500 என இருந்தது. இது இஸ்ரேலை 34 பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பிலுள்ள –OECD-  நாடுகளில் 24வது இடத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் OECD நாடுகளில் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலை உள்ள நாடுகளில் மிக அதிகம் இருப்பவற்றுள்ளும் ஒன்றாக இருக்கிறது.

இஸ்ரேலின் புதிய தொழில்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3% என இருக்கும் இராணுவத்தின் செலவுத் தேவைகளுக்கு ஏற்ப வளர்க்கப்படுபவை. இது அவற்றின் உரிமையாளர்களுக்கு பாரிய சொத்துக்களைத் தோற்றுவித்துள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான மக்களை ஓரம் கட்டிவிட்டது. இத்தொழில்கள் தொழிலாளர் தொகுப்பில் 10%க்கும் குறைவானவர்களைத்தான் வேலையில் அமர்த்தியுள்ளன. இத்தொழில்களில் ஊதியங்கள் ஒப்புமையில் மாதம் ஒன்றிற்கு $5,150 என உயர்ந்து உள்ளன. இது சராசரியைவிட மிக உயர்ந்தது ஆகும்.

இஸ்ரேல் பெரும்பாலும் ஒரு குறைவூதியப் பொருளாதாரம் ஆகும். 75% தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு $1,700 அல்லது அதற்கும் குறைவாகத்தான் ஊதியம் பெறுகின்றனர். ஊதியங்கள் 2000ம் ஆண்டில் தேசிய வருமானத்தில் 68% என்பதில் இருந்து 2010ல் தேசிய வருமானத்தில் 63% என்று குறைந்துவிட்டன. இது மாதம் ஒன்றிற்கு NIS இல்(இஸ்ரேலின் நாணயம்) 976 இழப்பு என்பதற்குச் சமம் ஆகும்.

இஸ்ரேலிய சமூகம் பிளவுகளை அதிகமாகக் கொண்டுள்ளது. மிஜ்ரஹி யூதர்கள் என்றழைக்கப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இருந்து வந்துள்ள யூதர்கள், ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்களான அஷ்கென்ஜிகளைவிட 40% குறைவாக வருமானம் ஈட்டுகின்றனர். அவர்கள்வளர்ச்சியடையும்சிற்ரூர்களின் சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர்; அங்கெல்லாம் மிக அடிப்படைச் சமூக வசதிகள்கூடக் கிடையாது; பள்ளிகளிலும் அவர்கள் அதிக நலன்களைப் பெறவில்லை.

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்கள் நிலைமை இன்னும் மோசமானது. நகர்ப்புற இஸ்ரேலிய பாலஸ்தீனியர்கள் மிஜ்ரஹி யூதர்களை விட 30% குறைவாகவும், அஷ்கெனஜி யூதர்களைவிட 50% குறைவாகவும் வருமானம் ஈட்டுகின்றனர். “அங்கீகரிக்கப்படாதகிராமக்கள் என அழைக்கப்படுபவற்றில் உள்ளவர்களான தெற்கே உள்ள பெடௌன்கள் இன்னும் மோசமான நிலையில் உள்ளனர். அக்கிராமங்களுக்கு சாலைகள், நகரசபை கட்டுமானங்கள் மற்றும் கல்வி போன்ற அரசாங்கச் சேவைகள் கிடையாது.

மிகுந்த மரபுநெறியில் வாழும் ஹரேடிம் யூதர்கள், மிக அதிக வறுமை விகிதத்தில் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு மிகவும் குறைந்த அளவு வேலைகள் கிடைப்பதுதான். சமயக் கல்வி அமைப்புக்களில் பதிவு செய்துள்ளவர்கள் அரசாங்கத்தின் நிதியுதவியில் வாழ்கின்றனர். மற்ற வறியவர்களின் குழுக்களில் கிட்டத்தட்ட 100,000 என்ற எண்ணிக்கையான முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் எதியோப்பியாவில் இருந்து வந்த யூதக் குடியேறியவர்கள் உள்ளனர்.

இறுதியாக பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்குப் பதிலாக வேலைசெய்ய கொண்டுவரப்பட்ட 300,000 குடியேறிய தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் வயதானவர்களை பராமரிக்கும் பிலிப்பினை சேர்ந்த மகளிர் ஆவர். சீன மற்றும் ருமேனியத் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலில் பணிபுரிகின்றனர். ஆபிரிக்கர்கள் விருந்தோம்பும் பிரிவில் பணிபுரிகின்றனர். அரசாங்க கண்காணிப்பாளர்கள் இஸ்ரேலின் குறைந்தபட்ச தொழிற்சட்டங்களை புறக்கணிக்கும் நாணயமற்ற முதலாளிகளை பற்றிக் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

தொழிற்சங்கக் கூட்டமைப்பான ஹிஸ்டட்ருட் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார  நிலைமையை பாதுகாக்க சிறு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த ஆண்டு மட்டும் நடக்கவிருந்த பல பொது வேலைநிறுத்தங்களை அது நிறுத்திவிட்டது. இப்பொழுது தொழிலாளர்களும் இளைஞர்களும் நிலைமையை இனியும் பொறுத்துக் கொள்ள மறுக்கும் நிலையில், ஹிஸ்டட்ருட் தலைவர் ஓபர் ஐனி இவ்வியக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள முயல்கிறார். அதை நசுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம் ஆகும்.

நெத்தன்யாகு பேச்சுக்களை நடத்துவதற்கு உடன்படாவிட்டால், உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகளின் ஆதரவுடன் ஆகஸ்ட் 1ம் தேதி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஐனியின் ஒரே நோக்கம் அரசாங்கத்துடன் எப்படியும் இணக்கமாகப் போய்விடுதல் என்றுதான் உள்ளது. “அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் தனக்கு இல்லை என்பதை அவர் ஒரு வானொலிப் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்ற மத்தியக் கிழக்கு, வட ஆபிரிக்கப் பகுதிகளில் இருந்து வேறுபட்டது என்று பெருமுயற்சியுடன் தோற்றுவிக்கப்பட்டுள்ள கட்டுக்கதையை இப்பெருகும் சமூக இயக்கம் தூளாக்கிவிட்டது. இஸ்ரேலில் உள்ள சமூக நெருக்கடி இப்பிராந்தியம் முழுவதும் நடைபெறும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. மேலும் இஸ்ரேலிய மக்களின் ஆழ்ந்த சமூகக் குறைகள் மற்றும் வறிய நிலையினால் இது எரியூட்டப்படுகிறது.

எகிப்து, துனிசியாவில் ஆரம்பித்த வெகுஜன இயக்கங்களைப் போல், இங்கும் இப்பொழுது வர்க்கப் பிரச்சினைகள் வெளிப்பட்டு வருகின்றன. அடிப்படைப் பிரச்சினை பெருவணிக உயரடுக்கின் நலன்களை என்று இல்லாமல், தொழிலாளர்களின் நலன்களை எடுத்துக்கூறும் ஒரு சுயாதீன அரசியல் முன்னோக்கு விரிவாக்கப்பட வேண்டும் என்பதுதான். இதன் பொருள் ஹிஸ்டட்ருட் முன்வைக்கும் அரசாங்கத்தின்மீது அழுத்தம் என்பதை நிராகரித்து, இஸ்ரேலில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்த முன்வைக்கப்படும் தேசிய உணர்வுகளை நிராகரிப்பதும், பிராந்தியம் முழுவதிலும் உள்ள தங்கள் சகோதர சகோதரித் தொழிலாளர்களிடம் இருந்து இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் நிராகரிப்பதுதான்.