World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

IMF-ILO conference warns of political upheavals

IMF-ILO மாநாடானது அரசியல் எழுச்சிகள் குறித்து எச்சரிக்கிறது

Richard Phillips
28 September 2010

Back to screen version

உலகெங்கிலுமுள்ள ஆளும் வட்டாரங்களை வாட்டும் சமூக மற்றும் அரசியல் எழுச்சி குறித்த அச்சமானது சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவற்றின் சமீபத்திய கூட்டு மாநாட்டில் தெளிவாக வெளிவந்துள்ளது. இம்மாநாடு உலகளவில் மோசமடைந்துவரும் வேலையின்மை மற்றும் வறுமை நிலை குறித்துப் பரிசீலித்தது.

வேலைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய ஆணையாளரான Lazlo Andor நோர்வேயில் திங்களன்று மாநாட்டில் 2010 ஆண்டு வேலையின்மையை பொறுத்த வரை “மோசமான ஆண்டு” என்று குறிப்பிட்டார். “நாம் சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால் 2011 இன்னும் மோசமான ஆண்டாக சமூக ஒருமித்த நிலைப்பாட்டில் மாறிவிடக்கூடும்” என்று அவர் எச்சரித்தார். வேறுவிதமாகக் கூறினால், ஆண்டோரின் அச்சம் வெகுஜன வேலையின்மை வர்க்கப் போராட்டங்களையும் அரசியல் நெருக்கடிகளையும் அடுத்த ஆண்டு ஏற்படுத்திவிடக்கூடும் என்பதுதான்.

மாநாட்டில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் முழு விபரங்களை தெரிவிக்கின்றன. இப்பொழுது 210 மில்லியன் தொழிலாளர்கள் உலகெங்கிலும் வேலையின்றியுள்ளனர்—இது வரலாற்றிலேயே மிக அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை ஆகும். கடந்த 3 ஆண்டுகளில் 34 மில்லியன் உயர்ந்துள்ளது. உலகில் 80 சதவிகித மக்கள் எந்தவித சமூகநலத் திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள் அல்லது உலக தொழிலாளர் தொகுப்பில் 40 சதவிகிதம் தங்களையோ தங்கள் குடும்பங்களையோ பாதுகாக்கும் அளவிற்கு நாள் ஒன்றிற்கு 2 டொலர் என்ற வறுமை நிலையை விட அதிகம் சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

ஆண்டோர் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளுக்கு குறிப்பாக கவலையளிப்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களில் பெருகிய வேலையின்மை நிலை இருப்பதுதான். அமெரிக்காவில் உத்தியோகபூர்வ வேலையின்மை 7.5 மில்லியனில் இருந்து 15 மில்லியனுக்கும் மேல் உயர்ந்துவிட்டது (இதில் பாதிக்கு மேல் நீண்டகால வேலையின்மைப் பிரிவில் வரும்). இந்த அளவு பெருமந்த நிலை காலத்திற்குப் பின்னர் வந்ததில்லை. ஐரோப்பா முழுவதிலும் இப்பொழுது 23 மில்லியனுக்கும் மேலானவர்கள் வேலையின்மையில் உள்ளனர்— இது 2007ல் இருந்து 36 சதவிகிதம் அதிகம் ஆகும்.

IMF தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கூட்டத்தினரிடம் உலக நிதிய நெருக்கடியானது “வேலையின்மை என்ற வீணடைந்த பூமியை” கொண்டு வந்துள்ளது என்றார். ஒரு வேலை பெறுவது என்பது “பல நேரமும் வாழ்வா சாவா” என்ற பிரச்சினையாகிவிட்டது என்றும் உயரும் வேலையின்மை வன்முறை மோதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.

முக்கிய பேச்சாளர்களில் ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபடெரோ, கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ ஆகியோரும் இருந்தனர். இருவருடைய அரசாங்கங்களும் ஏற்கனவே IMF ஆணைப்படி இயக்கப்படும் அவர்களுடைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் எதிர்கொண்டுள்ளனர். ஜாபடெரோ பார்வையாளர்களுக்கு நீண்ட கால வேலையின்மை நீடித்தல் என்பது “அவநம்பிக்கைத்தன நெருக்கடியை” தோற்றுவித்து ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களிடம் “நம்பிக்கையின்மையை” ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்தார்.

ஆளும் வர்க்கங்கள் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தீவிரமாக சரியும் வாழ்க்கைத் தரங்கள் தோற்றுவிக்கும் பெரும் சமூக மற்றும் அரசியல் அழுத்தங்கள் பற்றி நன்கு அறிந்துள்ளனர். ஸ்தாபன அரசியல் கட்சிகள் மீதான விரோதப் போக்கு சமீபத்தில் பிரிட்டன், ஆஸ்திரேலிய மற்றும் சுவீடன் நாட்டு தேர்தல்களில் வெளிப்பட்டு தொங்கு பாராளுமன்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி நவம்பர் மாதம் வரவிருக்கும் காங்கிரஸ் தேர்தல்களின் பெரும் இழப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. எதிர்ப்புக்களும் வேலைநிறுத்தங்களும் ஐரோப்பாவில் மட்டும் இல்லாமல் மிக அதிகம் சுரண்டப்படும் ஆசியப் பகுதிகளிலும்—வங்களாதேசம் மற்றும் கம்போடியாவில் ஆடைத் தொழிலாளர்களிடையே, சீனாவில் கார்த் தொழிலாளர்களிடையே— தோன்றியுள்ளது.

மாநாட்டு ஆவணமானது வேலைகள் வெட்டுக்களால் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களிடையே அரசியல் தீவிரத்தனத்திற்கான திறனை அதிகரித்துள்ளதை உயர்த்திக் காட்டுகிறது. 2009ல் மட்டும் உலகெங்கிலும் வேலைகிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியன் என்று உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் இளைஞர்களின் வேலையின்மை உத்தியோகபூர்வமாக 40 சதவிகிதம் எனப் பதிவாகியுள்ளது. இத்தாலி, சுவீடன் மற்றும் பிரான்சில் அவை இப்பொழுது 25 சதவிகிதமாகவும், இங்கிலாந்து, அமெரிக்காவில் 20 சதவிகிதமாகவும் உள்ளன.

ஆவணம் எச்சரிப்பதாவது: “தனிப்பட்ட வேலையின்மை அனுபவம் என்பது எதிர்மறைக் கருத்துக்களாக ஜனநாயகத்தின் திறன் குறித்ததாக மாறிவிடும், ஒரு முரட்டுத்தனமான தலைவர் தேவை என்ற விருப்பத்தையும் அதிகரிக்கும்…. [இது] வேலையின்மையை அனுபவிக்காத தனிநபர்களிடையேயும் விரிவாகும், நாட்டில் உயர் வேலையின்மை பெருகும் தன்மையில் இருப்பவர் அனைவரிடையேயும் தோன்றும். எனவே நீண்ட கால, உயர்ந்த அளவு வேலையின்மை என்பது இருக்கும் ஜனநாயகங்களின் உறுதிப்பாட்டிற்கு இடர்களைப் பிரதிபலிக்கிறது.

மில்லியன் கணக்கான இளைஞர்கள்—வேலையின்மையில் இருந்தாலும், இல்லாவிடினும்— பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் நடைமுறைக் கட்சிகள் செல்வம் கொழிக்கும் பெருநிறுவன மற்றும் நிதிய மேற்தட்டினர்களுக்கு ஒரு திரையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று தான் காண்கின்றனர். அத்தகைய அதிருப்தி வங்கிகளுக்கு எதிராகச் சாடும் தீவிர வலது கட்சிகளால் பயன்படுத்தப்படக்கூடும். ஆனால் “முரட்டுத் தலைவர்கள்” பற்றிப் பேசுகையில், ஆளும் மேற்தட்டினர்கள் உண்மையில் அச்சப்படுவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே புரட்சிகர உணர்வுகள் எழுச்சி பெறுவதுதான். அதேபோல் இலாபமுறையை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் உண்மையான சோசலிசக் கட்சிகள் பற்றித்தான்.

முதலாளித்துவம் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகள் தொழிலாள வர்க்கத்தினருக்கு எந்தவிதத் தீர்வுகளையும் அளிக்க இயலாத நிலைமை மாநாட்டு விவாதத்தில் இருந்த வறிய தன்மையைத்தான் பிரதிபலித்தது. வேலையில்லாதவர்கள் குறித்துக் கவலைப்படுவதுபோல் பிரதிநிதிகள் காட்டிக் கொண்டனர் என்பது உண்மைதான். ஆனால் இதே IMF அதிகாரிகள், அரசாங்கத் தலைவர்கள், பெருநிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஆகியோர் தாம் கடந்த இரு ஆண்டுகளாக வேலைகள் இல்லாத “வீணான பூமி”யைத் தோற்றுவித்த பொறுப்பைக் கொண்டவர்கள் ஆவார்கள்.

திட்டங்களைப் பொறுத்தவரை, மாநாட்டின் இறுதி அறிக்கையானது “வேலைகளைத் தோற்றுவிக்கும் வளர்ச்சி, “வறுமையில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு நிலை” ஆகியவற்றிற்கு உழைப்பதாக உறுதிமொழி கூறியுள்ளது—இதே கட்டத்தில்தான் பெருநிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கிறது, அரசாங்கங்கள் வரவு-செலவுத் திட்ட செலவுகளைக் குறைக்கின்றன. “சமூக உரையாடல்”, இன்னும் சிறந்த “முத்தரப்பு தீர்வுகள்” தேவை என்றும் இது அழைப்பு விடுத்துள்ளது—அதாவது தொழிற்சங்கங்களானது அரசாங்கங்கள் மற்றும் பெருவணிகத்துடன் சிக்கன நடவடிக்கை செயற்பட்டியலுக்கு கூடுதலான ஒத்துழைப்புத் தரவேண்டும் என.

இரு தசாப்தங்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்ததை சூழ்ந்திருந்த முதலாளித்துவ வட்டாரங்களில் இருந்த வெற்றிகர நினைப்பிற்கு இடையே வர்ணனையாளர்கள் 1989 ஐ “அற்புத ஆண்டு”, சோசலிசம் மடிந்ததைக் குறிக்கும் அற்புதங்கள் நிறைந்த ஆண்டு என்றனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம், மட்டும்தான் ஸ்ராலினிசத்தின் சரிவானது தேசியத்தை தளமாகக் கொண்ட வேலைத்திட்டங்களின் முடிவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி குறித்து ஆழமாக முன் கூட்டி எச்சரித்தது.

ஐரோப்பிய ஆணையாளர் ஆண்டோரின் அறிக்கை, அடுத்த ஆண்டு “சமூக ஒழுங்கு நிலைப்பாட்டில் மோசமானதாக இருக்கலாம்” என்பது முதலாளித்துவ வர்க்கங்கள் ஆயுதங்கள் ஏந்துவதற்கு கொடுக்கப்படும் அழைப்பாகும். ILO-IMF பேச்சுக்களானது மாநாட்டில் “ஜனநாயகத்தை” எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் பற்றி எப்படி இருந்தாலும், ஆளும் உயரடுக்குகள் பாராளுமன்றத்திற்கு புறம்பான ஆட்சியில் தங்கள் வழிவகைகளைக் கொண்டு சந்தைச் சார்பு உடைய கொள்கைகளை சுமத்தவும், அதிகாரத்தின் மீது தங்கள் பிடிகளை இறுக்குவதற்கும் தயங்காதவை.

முதலாளித்துவமும் அதன் பிரதிநிதிகளும் தங்கள் நலன்களுக்கு மோசமாகும் உலகப் பொருளாதார நெருக்கடி கொடுக்கும் ஆபத்து குறித்து அதிகம் அறிவர். தொழிலாள வர்க்கம் தன்னுடைய சொந்த அரசியல் எதிர்த்தாக்குதலுக்கான தயாரிப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கில், இலாபமுறையை அகற்றி, திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதார முறை நிறுவப்படுவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.