World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French day of action: Millions march against pension cuts

பிரெஞ்சு நடவடிக்கை தினம்: ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்த்து மில்லியன் கணக்கானவர்கள் அணிவகுப்பு

By Antoine Lerougetel
25 September 2010

Back to screen version

ஒரு மில்லியனிலிருந்து 3 மில்லியன் மக்கள் —அதிக எண்ணிக்கை தொழிற்சங்கங்களால் கொடுக்கப்பட்டிருந்தது, குறைந்த எண்ணிக்கை பொலிசாரால் கொடுக்கப்பட்டிருந்தது— வியாழனன்று 232 பிரெஞ்சு சிறிய மற்றும் பெருநகரங்களில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வெட்டுக்கள் சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62க்கு உயர்த்தும் மற்றும் அபராதம் இல்லாமல் ஓய்வூதியம் பெறும் உரிமையை ஓய்வு பெறுவோர் தகுதி பெறும் வயதை 65ல் இருந்து 67க்கு உயர்த்தும். இப்பிரச்சனை தொடர்பாக இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது வெகுசன அணிதிரள்வாகும்.

La Croix உடைய மதிப்பீடுகளின்படி, ஓய்வூதியச் “சீர்திருத்தம்” அரசாங்கத்தை ஆண்டு ஒன்றிற்கு தொழிலாளர்களிடமிருந்து 4 பில்லியன் யூரோக்களைப் பறித்துக் கொள்ள அனுமதிக்கும்.

இந்த மாதம் நடைபெற்ற இரு நடவடிக்கைகள் தினங்களும் சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்டவற்றில் மிகப் பெரியவைகள் ஆகும். இது கடந்த ஜூன் மாதம் பங்கு பெற்ற எண்ணிக்கையை விட 40 சதவிகிதம் கூடுதலாக இருந்தது. தொழிற்சங்கங்களின் கூற்றின்படி வியாழனன்று 55 சதவிகித ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 45 சதவிகித இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை. இரயில்வேத் தொழிலாளர்களில் 50 சதவிகிதத்தினர் பணியில் ஈடுபடவில்லை. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, பிரான்சின் 5 மில்லியன் அரசாங்கத் தொழிலாளர்களில் 20 சதவிகிதத்தினர் மருத்துவமனைகள், உள்ளூராட்சிப் பணிகள், கல்வி மற்றும் பிற அரசாங்கத் துறைகளில் வேலைக்கு வரவில்லை.

இந்த அணிவகுப்புக்கள் சார்க்கோசியின் கொள்கைளைகளுக்கு பெருகும் எதிர்ப்பை பிரதிபலித்தன. வாக்குக் கணிப்புக்கள் பொது மக்களிடையே இந்த எதிர்ப்புக்களுக்கு 68 சதவிகிதத்தினர் ஆதரவளித்தனர் என்றும், இது 18-24 வயதுக்குழுவில் 80 என உயர்ந்திருந்தது என்றும் தெரிவிக்கின்றன. 45 சதவிகித மக்கள் நாட்டின் பொருளாதார, சமூக நிலைமை குறித்து “வெறுத்து எழுந்துள்ளனர்” என்று ஒரு கருத்துக் கணிப்பை Liberation மேற்கோளிட்டுள்ளது. 18 சதவிகிதத்தினர் தான் தற்போதைய நிலைமை “நம்பிக்கை தருகிறது” என்றும், 29 சதவிகிதத்தினர் தான் சார்க்கோசிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டும் பெருகும் சீற்றம் நின்றுவிடவில்லை. அது அவர் முஸ்லிம்களை துன்புறுத்துதல் மற்றும் ரோமாக்களை நாடு கடத்தி வெளியேற்றுதல் ஆகியவற்றிற்கும் காட்டப்படுகிறது.

பாரிஸில் 300,000 பேர் அணிவகுத்தனர் மற்றும் மார்சேயில் 220,000 பேர் அணிவகுத்தனர் என்று தொழிற்சங்கங்கள் மதிப்பிட்டுள்ளன. சிறு நகரங்களில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் தெற்கு பிரான்ஸில் நீசில் 35,000 பேர் மற்றும் வடக்கு நகரமான அமியானில் 10,000 பேர் அணிவகுப்புகளில் கலந்துகொண்டனர்.

முந்தைய தினங்களைப் போலவே இந்த நடவடிக்கை தினமும் ஸ்ராலினிச தொடர்புடைய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) மற்றும் சோசலிஸ்ட் கட்சித் தொடர்புடைய பிரெஞ்சு ஜனாநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) ஆகியவற்றினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, “தீவிர இடது” எனப்படும் கட்சிகள், ஏன் முன்னாள் பிரதமர் டொமினிக் டு வில்ப்பனின் கருத்து வேறுபாட்டு கோலிஸ்ட் ஆதரவாளர்களும் ஆதரவு கொடுத்தன.

ஆனால் இந்த எதிர்ப்பு தேசிய சட்டமன்றத்தில் செப்டம்பர் 15ம் தேதி இயற்றப்பட்டு, கன்சர்வேடிவ் ஆதிக்கத்திற்குட்பட்டுள்ள செனட் சீர்திருத்தத்தை மாற்றுவதற்கு திவால் தன்மையுடைய அழுத்தம் கொடுத்தல் என்ற முன்னோக்கை கொண்டது ஆகும். செனட் இச்சட்ட வரைவு பற்றி விவாதம் நடத்துகிறது, அக்டோபர் நடுப்பகுதியில் இது குறித்து வாக்களிக்கவுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டித்திற்கான விருப்பத்திற்கும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அவற்றின் அரசியல் ஆதரவாளர்களின் துரோகக் கொள்கைகளுக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது.

ஆரம்பப் பள்ளிகள் பரந்த அளவில் மூடப்பட்டிருந்தும், தொழிற்சங்கங்களானது பொதுச் சேவைகள் மற்றும் அரசாங்க செயற்பாடுகளை நிறுத்தும் தீவிர முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை. Liberation இது பற்றிக் கூறியதாவது: “ஓய்வு பெறுவதற்கு சட்டபூர்வமாக உயர்த்தப்பட்டுள்ள வயது வரம்பு என்பதிலிருந்து அரசாங்கம் சிறிதும் விட்டுக் கொடுக்காது (ஓரளவிற்குக் கூட)…அரசாங்கத்தின் கொள்கையாக அது போய்விட்டது. தொழிற்சங்கங்கள் இது பற்றி நன்கு அறியும், எனவேதான் அவை காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என்ற இடர்ப்பாதையை மேற்கொள்ளவில்லை. ஒரு மூத்த மந்திரி இதை உறுதிபடுத்தியுள்ளார்: “CGT விரும்பினால் அது போக்குவரத்தை நிறுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்யும் வழிவகை அவர்களிடம் உள்ளது. ஆனால் எலிசே (ஜனாதிபதி அரண்மனை) உடன் உட்குறிப்பான உடன்பாட்டை அவர்கள் கொண்டுள்ளனர். ஜனாதிபதி பின்வாங்க மட்டார் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.”

பாரிஸில் உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் நூற்றூக்கணக்கான தாங்களாகவே தயாரித்த கோஷ அட்டைகளைக் கண்டனர். இவை உத்தியோகபூர்வ தொழிற்சங்கப் பதாகைகளை விட கூடுதல் தீவிரத்தனத்தைக் கொண்டிருந்தன. “ஜனநாயகத்தைத் திருடுபவர்கள்”, “நம் தேசிய குடியுரிமை அடையாளத்தை இழக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் முன்வைப்போம்”, “இனவெறி பிடித்த சார்க்கோசியே-ஓய்வுபெறு”, “67 வயது வரை மனைவியும் தாயாரும் கட்டாயத் தொழில் செய்யும் நிலை வந்துள்ளது” போன்ற வாசகங்கள் இவற்றில் இருந்தன.

ஒரு செவிலியரான ப்ரூட்டஸ் கூறினார்: “ பிரெஞ்சு இடதிற்கு வலதிற்கும் இடையே அதிக வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. என் பார்வையில் அவை அனைத்தும் ஒன்றுதான். அனைவருக்கும் பொதுவான தளத்தை கண்டுபிடிக்க நாம் அவர்களுடன் முறித்துக் கொள்ள வேண்டும்.”

WSWS நிருபர்களிடம் 40 ஆண்டுகள் பணி அனுபவம் உடைய மின்சார வேலைபார்க்கும் ஹசனைப் பேட்டி கண்டனர். சார்க்கோசியின் நடவடிக்கைகளுக்க எதிராக முதல் தடவையாக நடவடிக்கை தினத்தில் தான் பங்கு பெறுவதாக அவர் கூறினார்.

“1971ல் மொரோக்கோவில் இருந்து நான் வந்தேன். அப்பொழுது 19 வயது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.” என்றார் அவர்.

பிரெஞ்சு முதலாளிகள் வலுவான தொழிலாளர்களைத்தான் விரும்புகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். “தேர்ந்தெடுக்கும் பேட்டியின் போது எங்களை கார்ப் பட்டறைக்கு அழைத்துச் சென்றனர் எங்கள் நிர்வாணமாக்கிச் சோதித்தனர். பலரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன்பின் நாங்கள் ஒரு இரயிலைப் பிடித்து ஸ்பெயின் வழியே பிரான்ஸிற்கு வந்தோம்—எனக்கு அப்பொழுது 19 வயது, மிக இளவயது. எனவே பிரான்ஸ் ஒரு சொர்க்கம் போன்றது, சுதந்திரபூமி என்று நான் நினைத்தேன்.”

“மொரோக்கோவில் மக்கள், பிரெஞ்சு மக்கள் அழகிய கார்களையும், சட்டைகளையும் கொண்டுள்ளனர், இங்கு வாழ்வு சுகபோகம் என்று நினைத்தனர். இது ஒரு தவறான தோற்றம் ஆகும்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரான்ஸுக்கு தான் வந்தது பற்றி அவர் நினைவு கூர்ந்தார்: “நாங்கள் உண்மையாவே வெளிநாட்டவராகத்தான் இருந்தோம். வடக்கு ஆபிரிக்காவில் இருந்து அதிகம் பேர் இல்லை. மேலும் நாங்கள் உண்மையான இனவெறியர்களை சந்தித்தோம். பல இழிவான கருத்துக்கள் எங்களைப் பற்றிக் கூறப்பட்டன. கோப்பி அருந்தகச் சொந்தக்காரர் அரேபியர்களுக்கு கொடுக்க முடியாது என்றார். எங்கள் முதலாளி ஒரு இத்தாலியர் எங்களுக்குக் கோப்பி கொடுக்க வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்தினார்.

ஒரு இளைஞராக நிறுவனத்தில் நீண்ட மணி நேரம் உழைத்தபோது அவருடைய முதலாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்று அவர் விளக்கினார். ஆனால் சமீபத்தில் வயது அதிகமாகியுள்ள நிலையில், அவர்கள் அதிக வேலையைக் கோருகின்றனர். ஓய்வூதிய வெட்டு செயலுக்கு வராது எனத்தான் நம்புவதாக அவர் கூறினார்.

சார்க்கோசியின் ரோமா எதிர்ப்பு மற்றும் பர்க்கா-எதிர்ப்பு கொள்கைகள் பற்றியும் அவர் கூறினார்: “இது அழுகிய கொள்கை. அவர் அவருடைய கொள்கையை மறைக்கிறார். [நவ பாசிச] தேசிய முன்னணி (FN) உடன் என்ன வரக்கூடும் என்றாவது எதிர்பார்க்க முடியும். ஆனால் சார்க்கோசி எப்பொழுதும் இன்னும் அதிகம் வேண்டும் என்கிறார்.”

மார்சேயில் WSWS நிருபர்கள் 42 வயதான Jean Francois இடம் பேசினர், அவர் CNRS ல் வேலைபார்க்கிறார்: “நெருக்கடியினால் எனக்கு உடனடிப் பாதிப்பு இல்லை, ஆனால் எந்தக் கொள்கையும் இல்லை.”

“சமூகம் இழிசரிவில் உள்ளது. மக்கள் நலன் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. அரசாங்க வேலைகள் நீக்கப்படுகின்றன. குடியேற்ற எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கும் இடையே பிணைப்பு உள்ளது. அவர்கள் “நெறிதவறிப் பிறந்த குடியேறியவர்கள்” என்று கூறுகின்றனர். இந்த அமைப்பு முறையைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக இவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.”

ஜனாதிபதிப் பதவிக்கு டொமினிக் ஸ்ட்ராஸ் கான் போன்றோர் போட்டியிடும் போது, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சோசலிசக் கட்சி (PS) அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று தான் கருதுவதாக அவர் கூறினார். இப்படித்தான் கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் நடந்துள்ளது என்றார்.

மரம் சீரமைக்கும் தொழிலாளியான Germain கூறினார்: “எல்லைகள் கடந்து நாம் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும். ஒரு புரட்சியை நடத்த வேண்டும். பணம் இருக்கிறது, ஆனால் அவர்கள் எங்களை அதிக நேரம் உழைக்கும்படி வற்புறுத்துகின்றனர்.”

“சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகளை நான் உணர்கிறேன். நம் சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கிறோம், குறிப்பாக பாரிஸ், லியோன் மற்றும் மார்சேய் போன்ற பெருநகரங்களில். ஏதோ மன்னர் ஆட்சிக் காலத்திற்கு மீண்டும் சென்று கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.”

அமியானில் தீபோ, ஜோர்டன், ஜேரிமி, யோகன் மற்றும் ரபேல் ஆகியோர்கள் La Hotoie உயர்நிலைப் பள்ளியில் தொழில்துறைப் பிரிவில் படிக்கும் இளம் மாணவர்கள் வகுப்பிலிருந்து வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் வேலையின்மை பற்றிய தங்கள் அச்சத்தை வெளியிட்டனர். தங்கள் வருங்காலம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கப்பட்டதற்கு ஒருவர்: ‘நீண்ட நேரம் வேலை செய்தல், ஒரு சம்பாத்தியமும் இல்லை.” என்றார்.