World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

FBI raids on antiwar activists: A frontal assault on democratic rights

போரெதிர்ப்பு செயலர்கள் மீது FBI சோதனைகள்: ஜனநாயக உரிமைகள் மீது நேரடித் தாக்குதல்

Patrick Martin
27 September 2010

Back to screen version

ஒபாமா நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாக்கவேண்டும் எனக்கருதும் அனைவரும் வெள்ளியன்று காலை FBI ஆல் வீடுகள் சோதனைக்கு உட்பட்ட போர் எதிர்ப்பு பாலஸ்தீனியச் செயலர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இச்சோதனைகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் போர்களுக்கும், உலகம் முழுவதும் நடத்தப்படும் கொள்ளைமுறை வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவு வேண்டும் என்று அமெரிக்க மக்களை நம்ப வைக்க முடியாத நிலையில் உள்ள அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையான அரசியல் எதிர்ப்பைக் குற்றம்சார்ந்த தன்மை உடையதாக மாற்றுவதற்கு நகர்கிறது என்னும் எச்சரிக்கையாகும்.

சனிக்கிழமை சிக்காகோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், Joe Losbaker, Stephanie Weiner என இலக்கு வைக்கப்பட்ட இருவர் சோதனைகள் பற்றிய விவரங்களைக் கூறினர். 20 FBI முகவர்கள் அவர்கள் வீடுகளைச் சூறையாடினர்; 30 பெட்டிகளுக்கும் மேலாக ஆவணங்கள், கடிதங்கள், தனிப்பட்ட உடைமைகள் என்று நாற்பது ஆண்டுகளாக இருந்தவற்றை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். சோதனை செய்த வீடுகள் பலவற்றில் FBI முகவர்கள் கணினிகளையும் கைத்தொலைபேசிகளையும் எடுத்துச்சென்றுவிட்டனர்.

எந்த “பயங்கரவாத அச்சுறுத்தலும்” இல்லை என்பதற்கு நிரூபணமாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் இலக்கு வைக்கப்பட்டவர்களில் பலர் கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு அடுத்த மாதம் வருமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டனர். வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றது, அங்கு வெளிப்படையான அரசியல், தொழிலாளர் குழுக்களை சந்தித்தது பற்றி குறிப்பாக அவர்கள் வினாவிற்கு உட்படுத்தப்படுவர் என்பது வெளிப்படை.

செப்டம்பர் 24 சோதனைகளில் இலக்கு வைக்கப்பட்டவர்கள் குண்டுகளை சேகரித்து வைத்துள்ள பயங்கரவாதிகள் அல்லர். மாறாக இந்த அரசியல் செயல்வாதிகளின் “ஆயுதங்கள்” துண்டுப்பிரசுரங்கள், கோஷ அட்டைகள், செய்தித்தாட்கள் மற்றும் இணையத்தளத் தகவல்கள் ஆகியவைதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திரப்பாதை சோசலிச அமைப்பின் (Freedom Road Socialist Organization-FRSO) உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள்; இது FIGHT BACK என்னும் செய்திக் கடிதத்தை வெளியிடுகிறது.

FRSO விலும் பார்க்க சோசலிச சமத்துவக் கட்சி முற்றிலும் மாறான அரசியல் முன்னோக்கைக் கொண்டுள்ளது. 1960, 1970 களின் மாவோயிச மாணவர் குழுக்களில் FRSO அதன் வேர்களை கொண்டுள்ளதுடன், இலத்தின் அமெரிக்கா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் அடக்கப்பட்ட நாடுகளில் பலவித முதலாளித்துவ தேசியத் தலைமைகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது. ஆனால் சோசலிச சமத்துவக் கட்சியோ FRSO மற்றும் அதன் உறுப்பினர்கள் அரசாங்க அடக்குமுறைக்கு எதிராகக் கொண்டிருக்கும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பிற்கு தயக்கமின்றி ஆதரவைக் கொடுக்கிறது.

அரபு-அமெரிக்க நடவடிக்கை வலைப் பின்னல் (Arab-American Action Network) என்னும் அமைப்பின் ஆதரவாளர்கள், உறுப்பினர்களுக்கும் நாம் ஆதரவு கொடுக்கிறோம். இவர்களுடைய வலைத் தளம் தன்னை ஒரு அடித்தளமான அமைப்பு என்றும் “சாதகமான சமூக மாற்றத்திற்கு தீவிரமாக செயல்புரியும் திறனை கொண்டு சிக்காகோ பகுதியில் அரபு சமூகத்தை வலுப்படுத்த முயல்கிறது” என்று விவரித்துக் கொள்கிறது. 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் பல அரபு-அமெரிக்க மற்றும் இஸ்லாமிய அறக்கட்டளைகள் மற்றும் சமூகக் குழுக்களை சூனிய வேட்டையாடி புஷ் நிர்வாகம் அழித்தது. ஒபாமா நிர்வாகமும் இந்த பிற்போக்குத்தன மரபைத் தொடர்கிறது.

அரசியல் வேறுபாட்டின் மீது நடத்தப்படும் இந்த அப்பட்டமான தாக்குதலுக்கு பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் உடந்தையாக இருப்பதையும் சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. மின்னியாபொலிஸ், சிக்காகோ ஆகியவற்றிற்கு வெளியே இச்சோதனைகள் பற்றி அதிக செய்திக் குறிப்புக்கள் வரவில்லை. உதாரணமாக நியூ யோர்க் டைம்ஸ் உட்பக்கங்களில் ஒரு சிறிய கட்டுரையைத்தான் இச்செய்தியைப் புதைத்தது. தொலைக்காட்சிகளும் ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்தபின் எடுத்துள்ள மிக அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கை பற்றி குறிப்பிட சிறிது நேரம் கூட ஒதுக்கவில்லை.

FBI செய்தித் தொடர்பாளர் ஒருவர் இச்சோதனைகள் லெபனானில் ஹெஸ்பொல்லா, பாலஸ்தீன விடுதலைக்கு போராடும் மக்கள் முன்னணி, கொலம்பியா புரட்சிகர ஆயுதமேந்திய படைகள் (FARC) ஆகியவை உட்பட பல பயங்கரவாத அமைப்புக்களுக்கு “பொருள் உதவி” வழங்குவது, முயலுவதற்கு சதி செய்யும் நோக்கத்தைக் கொண்டவர்களை இலக்கு கொண்டுள்ளன என்றார். ஆனால் பயங்கவரவாதிகளுடன் எந்தப் பிணைப்பும் இருந்ததாக இச்சோதனைகளில் சான்றுகள் கிடைக்கவில்லை.

The Humanitarian Law Project v. Holder வழக்கில் அமெரிக்க தலைமை நீதிமன்றம் அளித்துள்ள முன்னோடியை FBI பயன்படுத்த முற்பட்டுள்ளது என்பது வெளிப்படை. இந்தப் பிற்போக்குத்தன தீர்ப்பில், ஜூனை மாதம் அளிக்கப்பட்டதில், உயர் நீதிமன்றம் துருக்கியில் போராடிக்க கொண்டிருக்கும் ஒரு குர்திஸ் தேசியவாத கெரில்லாக்குழுவான PKK, மற்றும் இலங்கையில் உள்நாட்டுப் போரில் தமிழ் தேசியவாத அமைப்பான LTTE க்கு “பொருள்சார் ஆதரவு” கொடுத்தல் பயங்கரவாதத்திற்கு உதவுதல் என்பதை உறுதிபடுத்தியிருந்தது.

அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தனிநபர்கள் கெரில்லாப் போருக்கு இராணுவ அல்லது தொழில்நுட்ப உதவி எதையும் கொடுக்கவில்லை. சிலர் PKK கெரில்லாப் போர்முறையில் இருந்து துருக்கியில் தேர்தல் அரசியலுக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தினர் (வடக்கு அயர்லாந்தில் கிளின்டன் நிர்வாகத்தின் கீழ் அயர்லாந்து குடியரசு இராணுவம் செய்தது போல்). மற்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போர் நிறுத்தக்காலத்தில் 2004 ஆசிய சுனாமிக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு பேரழிவு உதவி எப்படிப் பெறுவது என்பது பற்றி ஆலோசனை தெரிவித்திருந்தனர்.

PKK மற்றும் LTTE இரண்டும் அமெரிக்க உள்த்துறை அமைச்சால் “பயங்கரவாத” இயக்கங்கள் என்று முத்திரையிடப்பட்டன; ஏனெனில் அவை வாஷிங்டனுடன் நட்புக் கொண்ட அரசாங்கங்களுக்கு எதிராகப் போரிட்டன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரான அரசாங்கங்களுடன் போராடும் இதே போன்ற அமைப்புக்கள் அவர்கள் தந்திரோபாயங்களும் இதேபோல் இருந்தாலும் அவ்வாறு முத்திரையிடப்படவில்லை.

HOLDER முன்னோடி 1980களில் நடைமுறையில் இருந்திருந்தால் அமெரிக்காவில் இருந்த இனப்பாகுபாடு எதிர்ப்பாளர்களை கைது செய்யப்பட்டு “பொருள்சார் ஆதரவு” கொடுத்ததற்காக கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டிருப்பர். ஏனெனில் ரேகன் நிர்வாகம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் நெல்சன் மண்டேலாவை “பயங்கரவாதிகள்” என்று முத்திரையிட்டிருந்தது.

உலக சோசலிச வலைத் தளம் Holder முடிவின் போது எழுதியது: “இந்தவாரத் தீர்ப்பு அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள்மீது நடத்தப்படும் தாக்குதலில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் தலைமைநீதி மன்றம்-முதல் தடவையாக-அமெரிக்க அரசாங்கம் அல்லது அதன் நட்பு நாடுகள் உலகில் எங்கிருந்தாலும் அவற்றின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புக்களுக்கு ஆதரவு தரும் அமெரிக்கக் குடிமக்களை விசாரணைக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கும் தன்மையைக் கொடுத்துவிட்டது.” (பார்க்கவும் “Supreme Court backs use of terrorism law against free speech” ).

புஷ் நிர்வாகத்தின் நீதித்துறை “பொருள்சார் ஆதரவு” என்னும் குற்றங்களைக் கொண்டு வந்தது. ஒபாமாவின் நீதித்துறை இதை தலைமை நீதிமன்றத்தில் ஒரு வெற்றிகரமான முடிவிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த உண்மை குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கும் அமெரிக்க மக்களுடைய ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் என்று வரும்போது அவற்றிற்கு இடையே உள்ள தொடர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

செப்டம்பர் 24ம் தேதித் தாக்குதல்கள் நீதித்துறையின் தலைமை ஆய்வாளர் FBI முறையற்று Quakers, Catholic Worker, Thomas Merton Center, Greenpeace, People for Ethical Treatment of Animals ஆகிய அமைப்புக்கள் உட்பட அமைதிக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடும் அமைப்புக்கள்மீது “பயங்கவரவாத விசாரணைகளை” தொடக்கியுள்ளது என்று ஒப்புக் கொண்ட உள் அறிக்கை ஒன்றை வெளியிட்ட 4 நாட்களில் வந்துள்ளது.

9/11 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்த பின்னரான ஒரு தசாப்தம் பொலிஸ்-அரசாங்க அதிகாரங்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுவதை கண்டுள்ளது. இது இருகட்சி ஆதரவும் பெருமளவில் அமெரிக்க நாட்டு பற்றுச்சட்டம் (PATRIOT Act) இயற்றப்படுதலில் தொடங்கி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தோற்றுவிக்கப்படுதல், வடக்கு கட்டுப்பாட்டு தலைமையகம் அமைக்கப்பட்டது, குவாந்தனாமோ வளைகுடா கொடும் முகாம்கள் நிறுவப்பட்டது, இரகசிய CIA சித்திரவதைச் சிறைகள் நிறுவப்பட்டது, இராணுவம்/உளவுத்துறை அமைப்புக்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவற்றால் கூடுதலான அதிகாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் தொடங்கியதில் வளர்ந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த நடவடிக்கைகள் அல் குவைதா மற்றும் அதன் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுவோருக்கு எதிராக என்று அறிவிக்கப்பட்டாலும், இவற்றின் முக்கிய இலக்கு அமெரிக்க மக்கள்தான் என்று தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் நிதியப் பிரபுத்துவத்திற்கு அதன் சலுகைகளுக்கும் செல்வத்திற்கும் உண்மையான அச்சுறுத்தல் சிறு அளவிலான இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளிடம் இருந்து இல்லை என்றும், அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்துதான் என்பது நன்கு தெரியும். பொருளாதார, சமூக நெருக்கடி ஆழ்ந்துள்ள நிலைமையில், ஆளும் உயரடுக்கு கீழிருந்து சமூக எதிர்ப்பு வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. அரசாங்க இயந்திரம் முறையாக அடக்குமுறையைக் கையாள்வதற்கு அது தயாரிப்புக்களை நடத்துகிறது.

ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் பங்கு பொலிஸ் அரசாங்க அதிகாரங்களைக் கட்டமைப்பில் உள்ளது, தொழிலாள வர்க்கம் முழு அரசியல் நடைமுறை மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ முறைக்கு எதிராக சுயாதீனமாக திரட்டப்பட வேண்டிய தேவையை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அது ஒன்றுதான் போரை நிறுத்துவதற்கும் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாப்பதற்குமான அடித்தளமாகும்.