WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை பாராளுமன்றம் சக்திவாய்ந்த ஜனாதிபதி பதவியை பலப்படுத்த அரசியலமைப்பைத் திருத்துகிறது
By K. Ratnayake
11 September 2010
Use
this version to print | Send
feedback
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் எதேச்சதிகார அதிகாரங்களை பலப்படுத்தி இலங்கை அரசாங்கம் கடந்த புதன் கிழமை அரசியலமைப்பில் பிரதான மாற்றங்களை நிறைவேற்றியது. இதன் மூலம் அவரை காலவரையறை இன்றி ஆட்சியில் இருக்க அனுமதித்துள்ளதோடு நீதித் துறை, பொலிஸ், தேர்தல் ஆணையகம் மற்றும் மத்திய வங்கியின் மீதும் கணிசமான கட்டுப்பாட்டை அவரிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான முழு முன்னெடுப்புகளும் ஜனநாயக விரோதமானவையாகும். இந்த மசோதா மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை மாறாக, அமைச்சரவையே அந்த திருத்தத்தை ஆகஸ்ட் 31 அன்று அங்கீகரித்தது. உயர் நீதிமன்றம் ஒரு நாள் விசாரணையிலேயே இந்த மசோதா “அரசியலமைப்பை ஒத்திருக்கின்றது” என பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்தது. ஒரு “அவசர மசோதாவாக” முன்வைக்கப்பட்ட இதை விவாதிக்க பாராளுமன்றத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே கிடைத்ததோடு திருத்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தியது.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 161 வாக்குகள் இந்த மசோதாவுக்கு சார்பாக கிடைத்தன. இராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 144 பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். பல வாரங்களாக திரைக்குப் பின்னால் நடந்த பேரம் பேசல்களின் மூலம், தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றது. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் யூ.என்.பி. யின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் (ஸ்ரீ.ல.மு.கா.) இருந்து எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதற்காக ஆளுந்தரப்புப் பக்கம் மாறினர்.
புதனன்று, மசோதாவுக்கு எதிராக செயல்முறையில் வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்வதன் பேரில், யூ.என்.பி. பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தது. வாக்களிப்பில் பங்குபற்றுவதன் மூலம் தனது கைகளில் “கறைபூசிக்கொள்ள” விரும்பவில்லை என யூ.என்.பி. போலித்தனமாகக் கூறிக்கொண்டது. உண்மையில், 1978ல் வரையப்பட்ட தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு இருக்கும் பரந்தளவிலான நிறைவேற்று அதிகாரங்களுக்கு யூ.என்.பி. யே பொறுப்பாகும். இதன் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால், தேர்தல் முடிந்து ஒரு வருடத்துக்குள் முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைக்கவும், எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் அபகரிக்கவும் மற்றும் அவசரகால நிலைமையை பிரகடனம் செய்யவும் முடியும்.
இனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் ஆறு உறுப்பினர்களும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த எதிர்ப்பும் மோசடிக்கு சமமானதாகும். மே மாதம் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானதாக முன்னர் இருந்த தமிழ் கூட்டமைப்பு, இப்போது அரசாங்கத்துடன் ஒரு சமரசத்தை எட்ட முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. இராஜபக்ஷவின் உள்நாட்டு யுத்தத்தை ஆதரித்த ஜே.வி.பி., இப்போது சாதாரண மக்கள் மத்தியில் குவிந்துவரும் அதிருப்தியில் இருந்து தலையை காத்துக்கொள்ள பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கின்றது.
புதன் கிழமை கொழும்பு நகரிலும் மற்றும் பாராளாமன்றத்துக்குச் செல்லும் புறநகர் வீதிகளிலும் அரசாங்கம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரையும் பொலிசாரையும் நிறுத்தியிருந்தது. இந்த படைக் காட்சியானது இராஜபக்ஷ அரசாங்கம் எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ளாது என்பதை நினைவூட்டுவதாகும். யூ.என்.பி. ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் பொலிசார் தடுத்தனர்.
இந்த அரசியலமைப்பு திருத்தத்தில் இரு பிரதான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரு ஆறாண்டு காலத்துக்கு வரையறுக்கும் 31 விதியை அகற்றுவதாகும். இந்த வரையறை, ஜனாதிபதியின் நீண்ட விளைவுகள் தரும் நிறைவேற்று அதிகாரத்தை “சோதித்து சமநிலைப்படுத்தும்” உத்தேசத்தில் 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அதை அகற்றுவதன் மூலம், இராஜபக்ஷவால் காலவரையறையின்றி அதிகாரத்தில் இருக்க முடியும்.
அரசியலமைப்புச் சபையை பாராளுமன்ற சபையால் பதிலீடு செய்வதே இரண்டாவது மாற்றமாகும். 2001ல் 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற சபாநாயகரின் தலைமையிலான அரசியலமைப்புச் சபை, பிரதான அரசாங்க மற்றும் நீதித்துறை நியமனங்களை மேற்பார்வை செய்யவும் பொலிஸ், பொதுச் சேவை மற்றும் தேர்தல்களை கண்காணிக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கவும் பொறுப்பாக இருந்தது. அதன் ஒன்பது உறுப்பினர்கள் ஜனாதிபதியாலும் ஆளும் கட்சியாலும் மட்டுமன்றி எதிர்க் கட்சியாலும் நியமிக்கப்படுபவர்களாக இருந்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அரசாங்க இயந்திரத்தை அரசியல்மயப்படுத்துவது சம்பந்தமான பரந்தளவிலான விமர்சனத்தின் மத்தியிலேயே 17வது திருத்தும் அறிமுகப்படுத்தப்பட்டது.
உயர்மட்ட நிர்வாகப் பதவிகளில் பிரதான நெருக்கமான விசுவாசிகளை நியமிக்க தனது பதவியைப் பயன்படுத்திய இராஜபக்ஷ, அரசியலமைப்பை அலட்சியம் செய்ததோடு அரசியலமைப்புச் சபை நியமனத்தையும் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டார். உயர் நீதிமன்றம் சபையை ஸ்தாபிக்குமாறு கட்டளையிட்ட போதும், அவர் அந்த தீர்ப்பை சாதாரணமாக அலட்சியம் செய்தார். இப்போது அவர் தனது நியமனங்கள் மீறமுடியாதது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அரசியலமைப்பை மாற்றியுள்ளார். பாராளுமன்ற சபைக்கு இராஜபக்ஷவே தலைமை வகிப்பார். பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர் கட்சி தலைவர்களும் அவர்களால் பிரேரிக்கப்பட்டவர்களும் உறுப்பினர்களாக இருந்த போதிலும், எந்தவொரு பிரதான நியமனங்களின் போதும் ஜனாதிபதிக்கு அவர்களது “மேற்பார்வை” மட்டுமே தேவை, மற்றும் அவரால் எந்தவொரு எதிர்ப்பையும் நிராகரிக்க முடியும்.
திங்கட் கிழமை தேர்வு செய்யப்பட்ட சில ஊடக ஆசிரியர்களுடன் பேசிய இராஜபக்ஷ, இந்த மாற்றங்கள் ஆட்சி நடவடிக்கைகளை “ஜனநாயகப்படுத்தும்” என கூறிக்கொண்டார். அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் இராஜபக்ஷ, இந்த திருத்தம் “பாராளுமன்றத்தின் செயல்திறனை அதிகரிக்கும்” என்றார். இத்தகைய கருத்துக்கள் வெளிப்படையான பொய்களாகும். இந்த திருத்தங்கள் அதிகாரங்களை ஜனாதிபதியின் கைகளில் குவிக்கின்றன. அடுத்த நாள் நடந்த இன்னுமொரு கூட்டத்தில், “அபிவிருத்தி திட்டங்களை தடையின்றி தொடர்வதே அரசாங்கத்தின் நோக்கம், மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு இடம் கிடையாது” என இராஜபக்ஷ வலியுறுத்தினார்.
இந்த மாற்றத்தை நியாயப்படுத்தும் முயற்சியில், பல அரசாங்க சார்பு “புத்திஜீவிகளின்” கருத்துக்களை அரச கட்டுப்பாட்டிலான டெயிலி நியூஸ் பத்திரிகை வெளியிட்டிருந்தது. இந்த நகர்வை ஒரு “புத்திசாலித்தனமானதாக” பாராட்டிய டாக்டர். டி.சி. இராஜரட்னம் எழுதியதாவது: “அரசியல் ஸ்திரத்தன்மையின் மூலம் பொருளாதார மற்றும் ஜனநாயக வெற்றிகளைக் கண்டமைக்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணமாகும். அரசியல் ஸ்திர நிலைமையின் காரணமாக சிங்கப்பூர் வெற்றிகரமானதாக காணப்படுகின்றது. லி குவான் யூ 1959 முதல் 1990 வரை சிங்கப்பூரின் பிரதமராக சேவையாற்றியுள்ளார்.”
லீ குவான் யூ மற்றும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களின் கீழ் சிங்கப்பூர் ஒரு பொலிஸ் அரசாகவே இயங்கிவந்துள்ளது. தேர்தல் விதிகள், அவதூறுச் சட்டங்கள், ஊடக தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள், மற்றும் ஏனைய பெரும் ஒடுக்குமுறை வழிமுறைகள் மூலம் ஒரு கட்சி ஆட்சிமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு வேலை நிறுத்தம் செய்ய அல்லது ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை கிடையாது. இழிபுகழ்பெற்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்க அனுமதிக்கின்றது.
“தடையற்ற அபிவிருத்தி”, “அரசியல் ஸ்திர நிலைமை”, “சிங்கப்பூர்” மற்றும் “பொருளாதார வெற்றி” பற்றிய குறிப்புகள், இராஜபக்ஷ அரசாங்கம் எங்கு சென்றுகொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறது. பூகோள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை அரசாங்கம் மக்கள் மீது சுமத்துகின்ற நிலையில், அரசியல் எதிரிகளை மட்டுமன்றி தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு சர்வாதிகார விதிகளை அரசாங்கம் அபிவிருத்தி செய்து வருகின்றது.
ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடந்து இரண்டே வாரங்களுக்குள், அரசாங்கம் எதிர் ஜனாதிபதி வேட்பாளரும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவையும் அவரது ஆதரவாளர்கள் பலரையும் அரசாங்கம் கைது செய்தது. பொன்சேகா சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இராணுவ ஜெனரல் என்ற முறையில், பொன்சேகா உள்நாட்டு யுத்தத்தின் கடைசி கட்டத்தை இரக்கமின்றி முன்னெடுத்ததோடு, இருவருக்கும் இடையில் முரண்பாடு வரும் வரை இராஜபக்ஷவின் உள்வட்டாரத்தின் பகுதியாக அவர் இருந்தார்.
யுத்த செலவு மற்றும் தற்போதைய சர்வதேச பொருளாதார பின்னடைவின் காரணமாக இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு பிரமாண்டமான பொதுக் கடன் உள்ளது. அரச கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஏனைய நாடுகளைப் போலவே, சர்வதேச நாணய நிதியம் கடந்த ஆண்டு ஜூலையில் கொடுத்த 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் பிணையெடுப்ப கடனுக்கு நிபந்தனையாக இலங்கை அரசாங்கத்திடமிருந்து சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றது.
இந்த நடவடிக்கையில், 2009ல் பத்து வீதமாக இருந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை இந்த ஆண்டு 8 வீதமாகவும் மற்றும் 2012ல் 5 வீதமாகவும் குறைப்பதும் அடங்கும். இதன் அர்த்தம், வரிச் சுமைகளை அதிகரிப்பது, சம்பள அதிகரிப்பை நிறுத்துதல், புதிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நன்மையை நிறுத்துதல் மற்றும் எண்ணெய் மற்றும் மின் சக்தி கூட்டுத்தாபனங்களை தனியார்மயப்படுத்தல் அல்லது மறுசீரமைத்தலுமாகும். சில சிக்கன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள அதே வேளை, நவம்பரில் முன்வைக்கப்படவுள்ள அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் பெரும் பகுதியை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.
தனது சகோதரர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய இராஜபக்ஷ, இராணுவ உயர் மட்டத்தினர் மற்றும் ஒரு சில சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட தன்னைச் சூழ ஒரு அரசியல்-இராணுவ ஆட்சிக் குழுவை இராஜபக்ஷ கட்டியெழுப்பினார். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த அதே வேளை அரசியல் எதிரிகள் மீது பாய்ந்த இந்த அரசாங்கம், ஊடகங்களை அச்சுறுத்தியதோடு தொழிற்சங்கங்களின் உதவியுடன் தொழிலாள வர்க்கப் போராட்டங்களையும் நசுக்கியது.
சகல எதிர்க் கட்சிகளதும் சீரழிவு மேலும் மேலும் காட்சிக்கு வந்துள்ளது. ஜனநாயக உரிமைகள் மீதான புதிய தாக்குதலை தயார் செய்வதில் இராஜபக்ஷவுக்கு யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உதவினார். கடந்த ஜூலையில், அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு இராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்பார்த்திருந்த விக்கிரமசிங்க அதை ஏற்றுக்கொண்டார். இந்த வாரம் அதே திருத்தத்தை “சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு அடியெடுப்பு” என அவர் பிரகடனம் செய்கின்றார். எட்டு யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் மாறியமை, யூ.என்.பி.க்கும் ஆளும் கூட்டணிக்கும் இடையில் வேறுபாடுகள் இன்மையையே வெளிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக செவ்வாய் கிழமை ஜே.வி.பி. கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, “ஜனநாயகத்துடன் விளையாட வேண்டாம்”, “மக்களின் குரலுக்கு செவிகொடுங்கள்” என இராஜபக்ஷவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதன் ஜனநாயக விரோத செல்வழியை மாற்றாது. 2005ல் இராஜபக்ஷ ஆட்சிக்கு வர உதவி புரிந்து, யுத்தத்துக்கும் தூண்டிய ஜே.வி.பி., இப்போது யுத்தத்தை முன்னெடுத்த ஜெனரல் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), ஸ்ராலினிஸ கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இடது முன்னணி ஆகிய அனைத்தும் ஆளும் கூட்டணியின் பங்காளிகளாக உள்ளன. அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக ஆரம்பத்தில் அரைகுறையான விமர்சனங்களை எழுப்பிய அவை, வேகமாக வழியில் விழுந்து திருத்தங்களுக்கும் வாக்களித்தன. ஜனாதிபதியின் ஆலோசகரான ஜனநாயக இடது முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தனது அணிதிரள்வை நியாயப்படுத்தி, “நாங்கள் அரசாங்க சார்பானவர்கள். ஆனால் திருத்தத்தை எதிர்ப்பவர்கள். இந்த ஜனநாயக விரோத சக்திகள் அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புகின்றன. அவர்களை நாம் அனுமதிக்க முடியாது. நாம் அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார
இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை. இராஜபக்ஷ தனது இனவாத யுத்தத்தை முன்னெடுக்கப் பயன்படுத்திய பொலிஸ் அரச நடவடிக்கையை, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாமல் எழும் எதிர்ப்பை நசுக்குவதற்குப் பயன்படுத்துவதன் பேரில் அதை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
|