WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Continental workers in France pressured into voting for wage cuts
பிரான்சில் கொன்டிநென்டல் தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்களுக்கு வாக்களிக்க அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர்
By Pierre Mabut and Antoine Lerougetel
24 September 2010
Back to
screen version
செப்டம்பர் 13ம் திகதி Continental Automotive பிரான்சின் 2,500 தொழிலாளர்களில் 52 சதவிகிதத்தினர் 8 சதவிகித ஊதியக் குறைப்பை ஏற்பதற்கும் ஆண்டு வருமான இழப்பான 5,000 யூரோக்களுக்கும் வாக்களித்தனர். இதற்கு ஈடாக அவர்கள் தொழிலாளர்களுக்கு 2015 வரை வேலை உத்தரவாதம் கொடுத்துள்ளனர். ஆனால் இத்தகைய உத்தரவாதங்கள் அதிக மதிப்பைக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் கடந்த காலத்தில் கொன்டிநென்டல் அவற்றைப் புறக்கணித்துள்ளது—குறிப்பாக இரு ஆண்டுகளுக்கு முன் 2007ல் Clairoix மூடப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தும் அது ஆலையை மூடியது.
இப்புதிய உடன்பாட்டின்படி தற்காலிக, துணை ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100 பேர் வேலைகளை இழப்பார்கள். மேலும் Agence France Presse (AFP) கருத்துப்படி, “2011ல் ஒரு உண்மையான ஊதியத் தேக்கம் ஏற்படும், போனஸ் கொடுப்பனவுகளில் தீவிர குறைப்பு இருக்கும், 2015 ஆண்டு வரை இரு கூடுதல் பணி நாட்கள் இருக்கும்—இதற்கு ஈடாக ஜேர்மனியில் உள்ள கொன்டிநென்டல் தலைமை அலுவலகத்துடன் தொழிலாளர் தொகுப்பை 2015 ஆண்டு வரை தக்க வைத்துக் கொள்வதற்கான உடன்பாடு ஏற்படும்.” இது தானாகவே விலகிச் செல்லும் 150 ஊழியர்கள், நீக்கப்பட்ட 200 தற்காலிக ஊழியர்களை கணக்கில் சேர்க்காது.
துலூஸ், புசென் மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள பாய்க்ஸ் ஆகிய மூன்று ஆலைகளில் உள்ள தன்னுடைய தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது Continental Automotive தன்னுடைய இலாபங்களை உயர்த்துவதற்காக ஊதியங்கள் மற்றும் பணிநிலைமைகள் ஆகியவற்றை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். உலகப் பொருளாதார நெருக்கடியினால் கார்த் தொழிலுக்கு எங்கும் ஏற்பட்டுள்ள போட்டி தீவிரமடைந்துள்ளதற்கு இது விடையிறுப்பாகும்.
நிறுவனமானது மின்னணு முறைகளையும் உற்பத்தி செய்கிறது. ஜேர்மனிக்குச் சொந்தமான சர்வதேச நிறுவனமான கொன்டிநென்டல் டயர்கள் உற்பத்தி கிளை நிறுவனம் ஆகும். அதில் 46 நாடுகளில் 143,000 தொழிலாளர்கள் உள்ளனர். 2009ல் இதன் விற்பனை மதிப்பு 20 பில்லியன் யூரோக்கள் ஆகும். 2009ல் 400 மில்லியன் விற்பனையில் கொன்டிநென்டல் பிரான்ஸ் ஆனது 38 மில்லியன் யூரோக்களை இலாபமாக அடைந்தது. 2010லும் அதன் செயற்பாடுகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வணிக நாளேடான Les Echos கூறுவதாவது: “நிறுவனம் நன்கு செயற்படுகிறது என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும், இத்திட்டம் மூன்று ஆலைகள் தப்பிப் பிழைக்கத் தேவை, குறுகிய காலத்திற்கு என்று இல்லாமல், தொலைநோக்கில். ஏனெனில் ஆலைகள் 2012 மற்றும் 2013 ல் ஆர்டர்கள் பெறுவதில் பெரும் சரிவைக் கண்டுள்ளன.”
செப்டம்பர் 13ம் திகதி துலூஸ் ஆலைக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியிலுள்ள கொன்டிநென்டல் ஆலைகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தாங்களும் இதேபோன்ற நிலையை எதிர்கொண்டிருப்பதாகக் கூறினார்கள். துலூஸ் நிர்வாகம் தொழிற்சங்கங்களிடம் கொன்டிநென்டலின் ஜேர்மனிய ஆலைகள் ஏற்கனவே ஆர்டர்களுக்கான உத்தரவாதங்களைப் பெற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக கூறியது. இது பல ஆலைகளிலும் இருக்கும் தொழிலாளர்களை ஒருவரையொருவர் மோதும் நிலைக்கு தள்ளுவதாகும்—கொன்டிநென்டல் இத்தகைய நம்பிக்கைக்குரிய செயலைப் பலமுறை தொழிற்சங்கங்களுடைய செயலற்ற தன்மை, உடந்தை ஆகியவற்றின் உதவியுடன் செய்துள்ளது.
வாக்கெடுப்பில் 83 சதவிகிதப் பங்கு என்பது பெரும்பாலான தொழிலாளர்கள் நிறுவனத்தின் பெரும்பான்மை தொழிற்சங்கங்கள் விடுத்த புறக்கணிப்பை ஒதுக்கிவிட்டனர் என்பதைத்தான் காட்டுகிறது—அதாவது கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக உள்ள பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாகவுள்ள பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) ஆகியவற்றாலாகும்.
உண்மையில் தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பிற்கு விடுத்த அழைப்பானது நிர்வாக மிரட்டலுக்கு எதிராக தாங்கள் போரிட மறுக்கும் நிலையை மூடிமறைக்கும் கோழைத்தன முயற்சி ஆகும். வேண்டாம் வாக்கு போடவும் என்று குரல் கொடுத்து உலகச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை திரட்டுவதற்குப் பதிலாக, CGT ஆனது தொழிலாளர்களிடம் இழிந்த முறையில் தங்கள் வேலைகள், ஊதியங்கள் பற்றிய விதியை நிர்ணயிக்கும் வாக்கெடுப்பை புறக்கணிக்குமாறு கூறியது.
தற்போதுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு உறுதியான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து சக்திவாய்ந்த எதிர்கொள்ளல் இருக்கும். L’Oreal செல்வச் சீமாட்டி லில்லியன் பெத்தன்கூர் உடன் ஊழல் தொடர்பு இன்னும் பல ஊழல்களினால் நலிந்தும், ஆக்கிரமிப்புக் காலத்தில் நாஜிக்களுடன் பிரெஞ்சு அரசியல் மேற்தட்டினருக்கு ஒத்துழைத்த காலத்தை நினைவூட்டும் இனவெறிக் கொள்கைகளினால் சேதமுற்றிருக்கும் நிலையில் சார்க்கோசி எழுச்சி பெறும் வெகுஜன சீற்றத்தைத்தான் சந்திக்கிறார்.
CGT யின் துலூஸ் ஆலைக்குப் பிரதிநிதியான Olivier Grimoux, செய்தியாளர்களிடம் கூறினார்: “இந்த வேதனை ஒரு சமூகப் பின்னடைவு ஆகும். நாங்கள் இதில் கையெழுத்திடமாட்டோம்.”
இத்தகைய “இடது” போலிப்பேச்சு CGT இப்பொழுது வாடிக்கையாக உழைக்கும் மக்களின் வெகுஜனத் தொகுப்பின் சமூகப் பின்னடைவிற்கு ஒப்புக் கொண்டுவருகிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. CGT யின் தேசிய செயலாளரான பேர்னார்ட் தீபோ சார்க்கோசியுடன் தொடர்ந்து ஒத்துழைத்து ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றை சுமத்தி அரசாங்கமானது வரவு-செலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவும், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உதவியுள்ளார். Grimoux உடைய கையெழுத்தை பொறுத்தவரை, நிர்வாகம் ஊதியங்களைக் குறைக்கும்—அத்துடன் ஆலைகளையும் மூடலாம்— இவர் கையெழுத்து இருந்தாலும், இல்லாவிடினும்.
கொன்டிநென்டல் ஆடோமோடிவ் வாக்கெடுப்பானது செப்டம்பர் 7ம் திகதி 2 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்து அதே அளவு தொழிலளார்கள் சார்க்கோசியின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக அணிவகுத்து நின்ற 6 நாட்களுக்கு பின்னர் வந்துள்ளது. எதிர்ப்புக்களில் கொடுக்கப்படும் ஒரே முன்னோக்கு சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கொடுத்து 2012 தேர்தல்களில் சார்க்கோசியை அகற்றுவது ஆகும். CGT மற்றும் CFDT தலைமையில் நடக்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் “நடவடிக்கை தினங்களின்” நோக்கம் இதுதான்; இதற்கு அனைத்து இடது கட்சிகள், சார்க்கோசிக்கு எதிரான கன்சர்வேடிவ்களுடைய ஆதரவும் உள்ளது. அதில் இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), சோசலிஸட் கட்சி(PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, Jean-Luc Melerchon உடைய இடது கட்சி ஆகியவற்றுடன் முன்னாள் கோலிசப் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய ஆதரவாளர்களும் ஒப்புதல் கொடுக்கின்றனர்.
பிரான்சின் வடக்குப் பகுதியான Clairoix ல் உள்ள கொன்டிநென்டல் டயர்ஸ் இதே தந்திரோபாயத்தைக் கையாண்டு தான் வேலை இழப்புக்கள் என்ற அச்சத்தைக் காட்டியதின் மூலம் தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டுவதற்கு பயன்படுத்தியுள்ளது என்பது கொன்டிநென்டல் ஆடோமோடிவ் தொழிலாளர்கள் நன்கு அறிந்ததுதான். 2007ல் 37ல் இருந்து 40 மணி நேரம் என்ற பணி வாரத்தை அதிகப்படுத்தியதின் மூலம் நிறுவனம் ஊதியங்களைக் குறைத்தது—ஊதிய உயர்வும் கொடுக்கப்படவில்லை. Clairoix லுள்ள அனைத்து 1,120 பணிகளும் தக்கவைக்கப்படும் என்ற உறுதிமொழியும் ஆலை 2009ல் மூடப்பட்டதில் கைவிடப்பட்டது.
Clairoix லுள்ள தொழிற்சங்கங்கள், முக்கியமாக CGT, மத்திய வகுப்பு இடது சந்தர்ப்பவாதிகள் Lutte Ouvriere (LO) மற்றும் NPA ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று, பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு 50,000 யூரோக்கள் விலகுதல் தொகைக்கு ஈடாக ஆலை மூடலை ஒப்புக் கொண்டது. மேலும் ஐரோப்பாவிலுள்ள ஏனைய கொன்டிநென்டல் ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களை இதில் குறுக்கிட அனுமதிப்பதில்லை என்றும் ஒப்புக் கொண்டது. அங்கு எல்லா ஊழியர் குறைப்பு மற்றும் செலவுக் குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆலை மூடலுக்குத் தொழிலாளர்களிடம் அழுத்தம் கொடுத்தது, CGT பிரதிநிதி Xavier Mathieu ஆவார். இவருக்கு ஆலோசனை கூறியது LO ஆகும். இது அனைத்து பிரெஞ்சு முதலாளிகளுக்கும் அனைத்து வேலைகளும் விற்பனைக்கு வந்துவிட்டன என்ற அடையாளம் ஆகும். உள்ளூர் பொருளாதாரங்களில் பல்லாயிரக்கணக்கான வேலைகள் இழப்புக்கள் மற்றும் சமூகங்கள் பேரழிவிற்கு இவற்றினால் உட்படும் என்பது வந்திருத்தும் இந்த நிலைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
தொழிற்சங்கங்களின் உடந்தையுடன் நடத்தப்படும் கார்த் தொழிலின் தொழிலாளர்களுக்கு எதிரான பரந்த தாக்குதலின் ஒரு பகுதிதான் இது. ஜூலை 2010ல் ஜெனரல் மோட்டார்ஸானது Strasbourg ஆலையில் உள்ள தொழிலாளர்கள் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற மூடல் அச்சுறுத்தலால் 10 சதவிகித ஊதிய வெட்டிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டனர்.
தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பெருகிய சீற்றம், இப்பொழுதுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளுக்கு எதிராக ஒரு சோசலிச முன்னோக்கில் வெளிப்பாட்டைக் காண வேண்டும். கொன்டிநென்டல் ஆட்டோமோடிவ் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் பாதுகாக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகளுடன் ஒரு உடைவு தேவையாகும். இதற்கு அனைத்து ஊழியர்களும் சக பிரெஞ்சு, ஸ்பெயின் மற்றும் ஜேர்மனிய கொன்டிநென்டல் தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு நிறுவனத்தில் செலவினக் குறைப்புக்களுக்கு எதிராகவும், சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஜேர்மனியில் அங்கேலா மேர்க்கெல், ஸ்பெயினில் ஜோஸ் லூயி ஜாபடெரோ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அணிதிரள வேண்டும்.
ஐரோப்பாவிலுள்ள அனைத்துச் சமூக ஜனநாயக அரசாங்கங்களும் தொழிலாளர்கள் மீது சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துவதில் கன்சர்வேடிவ்களை விட இரக்கமற்ற தன்மையில் தாங்கள் குறைந்தவை அல்ல என்று தான் காட்டுகின்றன.
வெகுஜன வேலைநிறுத்த நடவடிக்கை ஒரு பொது வேலை நிறுத்தமாக வளர்ந்தால், தொழிலாளர்களை அரசுடன் மோதல் போக்கு வளர்ந்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் தேவையை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் மற்றும் கார் நிறுவனங்கள் நேரடி ஒத்துழைப்பின் விளைவாக ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் (UAW) “இலாபமற்ற” ஆலைகளை மூடுவதற்கு ஆதரவு கொடுத்து ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்களுக்கும் ஆதரவு கொடுப்பதுடன், தன் ஓய்வூதிய நிதிகளை தொழில்துறையில் இலாபம் நிறைந்த பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. இதையொட்டி ஊதியங்கள் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன. இப்பொழுது அதுதான் முன்மாதிரியாக அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.
அமெரிக்காவில், ஜி.எம். தொழிலாளர்கள் இந்தியானாவிலுள்ள இந்தியானாபொலிஸில் எடுத்த முடிவு, இத்தாக்குதலுக்கு எதிராக UAW ல் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்கள் குழுவை நிறுவுதல் என்பது சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். ஆதரவுக்கு அழைப்பு விடுகையில், குழு உறுதிபடுத்தியிருப்பதாவது: “ஆலையில் உள்ள இளைய, வயதான, முழுநேர, தற்காலிக தொழிலாளர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்த வேண்டும், நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்கள் அனைவரையும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு அழைப்பு விடுகிறோம்.” உதியக் குறைப்புக் கோரிக்கைகளை அடுத்து எதிர்பார்த்து நிற்கும் ஏனைய கார் ஆலைத் தொழிலளார்களுக்கும் இந்த அறிக்கையின் பிரதி அனுப்பப்படும் என்று அது தொடர்ந்து கூறியுள்ளது. “பலரும் ஒன்று சேர்தல் வலிமையைத் தரும். இதில் நாங்கள் மட்டும் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தால், நாம் வலிமை பெற்றுள்ளோம் என்பதை அறிவோம்.”
|