World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Senate votes burqa ban into law

பிரெஞ்சு செனட் பர்க்கா தடையை சட்டமாக்குவதற்கு வாக்களிக்கிறது

By Kumaran Ira
20 September 2010

Back to screen version

சில இஸ்லாமிய மகளிர் பொது இடங்களில் அணியும் முழு முகத்தை மறைக்கும் அங்கிகள் பர்க்கா அல்லது நிகப் போன்றவற்றைத் தடை செய்யும் சட்டத்திற்கு செப்டம்பர் 14ம் தேதி பிரெஞ்சு செனட் வாக்களித்தது. இச்சட்டம் மிகப் பெரிய பெரும்பான்மையான 246-1 என்ற கணக்கில் இயற்றப்பட்டது.

பர்க்கா அணிவதைத் தடைசெய்யும் முடிவு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் முழு அரசியல் நடைமுறையின் ஆதரவுடனும் எடுக்கப்பட்டது; இது சட்டத்தின் ஆட்சிக் கொள்கையை மீறிவதும் ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலின் ஒரு பகுதியும் ஆகும்.

கடந்த வாரம் சார்க்கோசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையே ரோமாக்களை இலக்கு வைத்து பிரான்ஸ் வெளியேற்றி வருவதை ஒட்டி நடக்கும் பூசல் பற்றிச் செய்தி ஊடகம் கொடுக்கும் தகவலை செனட் பர்க்காத் தடை செய்துள்ள வாக்களிப்பு பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஐரோப்பிய நீதித்துறை ஆணையர் விவியன் ரெடிங் சார்க்கோசியின் ரோமாக்களுக்கு எதிரான கொள்கை “இனவழி நிலைப்பாடுகளின் அடிப்படையில் ஒரு பாகுபாடு ஆகும்” என்று குறைகூறியிருந்தார்.

நாஜி ஆக்கிரமிப்பின்போது ரோமாக்கள் வெளியேற்றப்பட்டதுடன் உட்குறிப்பாக ஒப்புமை காட்டிய விதத்தில் அவர் மேலும் கூறியதாவது: “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா இத்தகைய நிகழ்வைக் காணாது என்றுதான் நான் நினைத்திருந்தேன்.”

இப்பொழுது தெளிவாகியுள்ளதுபோல், பர்க்காமீதான தடை உத்தியோகபூர்வ பிரெஞ்சு அரசியலில் பாசிச சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் இனத்தூய்மை பற்றி தீவிர மாற்றத்திற்கான ஒரு அரசியல் கருவியாகும்.

சட்டத்தின்படி, பிரான்சில் பர்க்கா அல்லது நிகம் அணியும் மகளிர் 150 யூரோக்கள் அபராதம் செலுத்த நேரிடும், அதைத்தவிர குடியிரிமை வகுப்புக்களில் கலந்து கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படுவர். ஒரு முழு முக மறைப்பை ஒரு பெண் அணியுமாறு கட்டாயப்படுத்துவதாகக் கருதப்படும் எந்த நபரும் 30,000 யூரோக்கள் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

தடைக்கு எதிரான ஒரே வாக்கு ஒரு வலது சாரி செனட் உறுப்பினர் Louis Giscard d’Esting னால் போடப்பட்டது. இது முதலாளித்துவ “இடதின்” சார்க்கோசியின் பர்க்காத் தடைக்கு உடந்தையாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது—குறிப்பாக PS எனப்படும் சோசலிஸ்ட் கட்சி, PCF எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை. 116 PS செனட்டர்களில் 46 பேர் தடைக்கு ஆதரவாக வாக்களித்தனர், மற்றவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. கட்சி உத்தியோகப்பூர்வமாக முழுத் தடைக் கொள்கையையும் பாராட்டியது; ஆனால் சார்க்கோசியின் சட்டம் பற்றிய அரசியலமைப்புத் தன்மை பற்றி சில எதிர்ப்புக்களை எழுப்பியுள்ளது.

பிரெஞ்சு அதிகாரிகள் பர்க்காத் தடை மகளிர் உரிமைகளையும் மதசார்பற்ற தன்மையையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகப் பிரதிபலிக்கிறது என்று கூறுகின்றனர். சட்டத்தை முன்மொழிகையில் பிரெஞ்சு நீதித்துறை மந்திரி Michele Alliot-Marie வனப்புரையாக அறிவித்தார்: “குடியரசில் ஒரு மறைக்கப்பட்ட முகத்தில் வசிப்பது என்பது, இது கௌரவம், சமத்துவம் பற்றிய பிரச்சினை ஆகும். நம் குடியரசுக் கொள்கைகளை மதிப்பது பற்றிய பிரச்சினையாகும் இது.”

அவர் மேலும் கூறினார்: “முழு முக மறைப்புக்கள் தனிநபர் அடையாளத்தைச் சமூக அடையாளத்துடன் கரைத்துவிடகிறது. இது நம்முடைய பிரெஞ்சு சமூக ஒருங்கிணைப்பு மாதிரியை வினாவிற்கு உட்படுத்துகிறது; நம் ஒருங்கிணைப்போ நம் சமூக மதிப்புக்களை ஏற்பதின் தளத்தைக் கொண்டுள்ளது.”

உண்மையில் Alliot-Marie உடைய கருத்துக்கள் மதசார்பற்ற தன்மைக் கோட்பாட்டை நிராகரிப்பதாகத்தான் உள்ளன. சமயப் பிரச்சினைகளில் அரசாங்கம் நடுநிலை வகிப்பது என்பதற்கு முற்றிலும் மாறாக, சார்க்கோசி அரசாங்கம் மகளிரை அவர்கள் சமய வழக்கங்களைக் கைவிட்டு சில சமூக வழக்கங்களை ஏற்கும் கட்டாயத்திற்கு உட்படுத்துகிறது; அப்பொழுதுதான் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியும். இவ்விதத்தில் ஒரு மிகச்சிறிய பர்க்கா அணியும் சிறுபான்மையினரை இலக்கு வைப்பது, பிரான்ஸில் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம் பெண்களில் 2000 பேரை என்பது, இனவெறி, முஸ்லிம் எதிர்ப்பு உண்ரவுகளைத் தூண்டும் தன்மையில் திட்டமிட்ட முயற்சி ஆகும்; இது தொழிலாளர் வர்க்கத்திடையே உள்ள அதிருப்தியை திசை திருப்பும் நோக்கத்தைக் கொண்டது.

ஐரோப்பியக்குழுவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலும் சட்டத்தைக் குறைகூறும் வகையில் இத்தடை “வெளிப்பாட்டு உரிமை, மகளிர் சமய உரிமைகள் ஆகியவற்றை மீறுகிறது” என்று கூறியுள்ளன.

தடையின் சட்டவிரோதத் தன்மையை உட்குறிப்பாக ஒப்புக் கொள்ளும் விதத்தில் செனட் மற்றும் தேசியச் சட்டமன்றம் (சட்டமன்றத்தில் கீழ்பிரிவு) ஆகியவற்றின் தலைவர்கள் சட்டத்தை அரசியலமைப்புக் குழுவிடம் செனட் வாக்கெடுப்பிற்குப் பிறகு அனுப்பியுள்ளனர். “அரசியலமைப்புடன் இயைந்துள்ளதா என்பதை உறுதியற்ற தன்மை ஏதும் பாதிக்கக் கூடாது என்பதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது” என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பர்க்கா மீதான தடை அரசியலமைப்பிற்கு முரணானது என்பது நன்கு அறியப்பட்டுள்ளதுதான். மார்ச் மாதம் அரசாங்கக் குழு முழு முக மறைப்பின்மீதான தடை “மறுக்க முடியாத சட்ட அடிப்படையின் ஆதரவைப் பெறும் எனக்கூறுவதற்கு இல்லை” என்று ஒரு ஆலோசனைத் தீர்ப்பை வழங்கியது.

செனட் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில் ஒரு பர்க்காத் தடையை இயற்றும் முதல் ஐரோப்பிய நாடு என்று பிரான்ஸ் ஆகிறது. ஜூலை மாதம் இது தேசியச் சட்டமன்றத்தின் பெரும் ஆதரவைப் பெற்றது—அடுத்த வசந்த காலத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.

இதேபோன்ற பர்க்கா-எதிர்ப்புச் சட்டங்கள் ஐரோப்பா முழுவதும் தயாரிப்பில் உள்ளன. இத்தாலியல் Northern League –சில்வியோ பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் கூட்டணிப் பங்காளிக் கட்சி—செப்டம்பர் 17ம் திகதி தான் இத்தாலியப் பாராளுமன்றத்தில் பிரெஞ்சுத் தடையின் ஒரு பிரதியை கொடுக்க இருப்பதாக அறிவித்தார். நார்த்தர்ன் லீகின் பாராளுமன்றப் பிரிவின் தலைவரான மார்க்கோ ரெகுசோனி அறிவித்தார்: “பிரெஞ்சுத் துவக்க முயற்சியை நாங்கள் வலுப்படுத்த விரும்புகிறோம்.”

ஏப்ரல் மாதம் பெல்ஜிய நாட்டு பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் பர்க்காமீதான தடைக்கு ஒப்புதல் கொடுத்தது. அணிந்தால் 25 யூரோக்கள் அபராதம் மற்றும் ஏழு நாட்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் வாக்கெடுப்பிற்குப் பிறகு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, இன்னுமும் எந்த அரசாங்கமும் அமைக்கப்படாததால் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

PS, PCF மற்றும் PS ன் மத்தியதர வகுப்பு ஆதரவாளர்கள் போலி இடது NPA—புதிய முதலாளித்தவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை சார்க்கோசியின் ஜனநாயக விரோதப் பிரச்சாரத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

பர்க்காவை தடை செய்யும் திட்டம் துவக்கத்தில் ஒரு PCF பிரதிநிதி Andre Gerin ஆல் மேற்கொள்ளப்பட்டது. பர்க்கா “பிரான்ஸ் நிலப்பகுதியில் வரவேற்பைக் கொண்டிருக்கவில்லை” என்று சார்க்கோசி அதே மாதம் பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில் அறிவித்த பிறகு, அவர் ஒரு பாராளுமன்றக் குழுவை தடையைச் சுமத்தும் வாய்ப்பு பற்றி ஆராய்வதற்கு ஒரு குழுவை நியமித்தார். இக்குழுவிற்கு கெரின் தலைமை தாங்கினார், PS அதில் பங்கு பெற்றது.

பர்க்கா-எதிர்ப்புப் பிரச்சாரம் சார்க்கோசிகற்கு குடியேறுபவர்கள்மீது இன்னும் பிற்போக்குத்தனத் தாக்குதல்கள் நடத்த ஒரு முன்னோடியாயிற்று; இறுதியில் முழுத் தொழிலாளர் வர்க்கத்தின்மீதும் தாக்குத் நடத்த முன்னோடியாயிற்று. அவர் பர்க்கா எதிர்ப்பு உந்துதலைத் துவங்கியவுடன், சார்க்கோசி ஒரு “தேசிய அடையாள” பிரச்சாரத்தைத் துவக்கினார்: இது புதிய பாசிச மற்றும் தேசியவாத உணர்விற்கு முறையிட்டது.

இது இன்னும் பரந்த அளவில் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் நடத்த முன்னோடியாயிற்று அதில் பொலிஸ் அல்லது பொது அதிகாரிகளுக்கு எதிராக தண்டிக்கப்பட்டிருந்த ஒரு குடியுரிமை பெற்ற நபரின் பிரெஞ்சு குடியுரிமை அகற்றப்படும் அச்சுறுத்தலும் அடங்கி இருந்தது. இக்கொள்கைகள் பின்னர் பிரான்ஸின் வறிய குடியேறியவர் புறநகர்ப்பகுதிகளில் பொலிஸ் வன்முறைக்கு மக்கள் காட்டி எதிர்ப்பின்பால் இயக்கப்பட்டது.

அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின்மீது கூடுதலான தாக்குதல்களை நடத்தும் திட்டத்தில் பள்ளிக்கு வராத குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு சமூக நலன்களை அகற்றுதல், வயதிற்கு வராத குழந்தைகள் பொலிசைத் தாக்கியதாகக் கூறப்படும் நிகழ்வுகளுக்குப் பெற்றோர்கள் குற்றம் சார்ந்த தன்மை உடையவர்கள் என்ற பொறுப்பை பெறுவர் என்பதும் அடங்கும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக சோசலிச வலைத் தளம் ஆகியவற்றை தவிர வேறு எந்த கட்சி அல்லது பதிப்பகமும் பர்க்கா எதிர்ப்புப் பிரச்சாரம் முன்னிறுத்தும் ஆபத்துக்களைப் பற்றி எச்சரிக்கவில்லை.

PS, PCF இரண்டுமே இதற்குத் தீவிர உடந்தைதான். நடவடிக்கைக்கு பல தெளிவற்ற குறகூல்களை பேசினாலும், தடைக் கொள்கைக்கு தளமாக பெண்ணின உரிமைகளைக் காத்தல் என்று கூறவதும் நடவடிக்கையின் ஜனநாயக விரோதப் பொருளுரையை ரத்து செய்துவிட முடியாது.

கடந்த வசந்த காலத்தில் Le Parisien NPA செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸநோவை “பொது இடங்களில் மறைப்பை அணிபவர்கள் மீது 150 யூரோக்களை சுமத்துவது என்பது “நியாயமானதா” என்று வினவப்பட்டார்.

பெசன்ஸநோ விடையிறுத்தார்: “இதில் பிரச்சினை என்பது அபராதம் அல்ல. அரசியல் வாதிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதான். பர்க்கா மகளிரை அடக்குகிறது; ஆனால் எவ்வித சட்டமும் திறமையற்றதும் நியாயமற்றதாகவும் இருக்கும். இதில் பெரும் வெற்றி எவருக்கு? தீவிர வலதில் உள்ளவர்களுக்கும் சமய அடிப்படைவாதிகளுக்கும்தான்.”

தடைக்குத் தான் கொள்கையளவில் எதிர்ப்புக் காட்டவில்லை, ஒரு தந்திரோபாய எதிர்ப்புத்தான் என்பதையும் பெசன்ஸநோ குறிப்புக் காட்டினார்.

ஜனவரி மாதம் WSWS எழுதியது: “மக்கள் கருத்தை மீறி, அரசியலமைப்பு முறை எதிர்ப்புக்களைப் பொருட்படுத்தாமல் அளிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமய வழிவகைகளுக்கு எதிரான அரசாங்கப் பாகுபாட்டை நெறிப்படுத்துவது என்பதின் வெளிப்பாடு வெளிப்படையாக ஜனநாயக விரோத ஆட்சி வகைகளுக்கு மாறுதல் என்பதைத்தான் குறிக்கிறது.”

இப்பகுப்பாய்வு பின்னர் நடந்த நிகழ்ச்சிகளால் முற்றிலும் உறுதியாகிறது—அதிலும் குறிப்பாக பிரான்சில் ரோமா மக்களுக்கு எதிராக நடக்கும் வெறித்தன வேட்டையின் மூலமாக.