WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
The French New Anti-Capitalist Party and the anti-burqa campaign
பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியும் பர்க்கா-எதிர்ப்புப் பிரச்சாரமும்
By Anthony Torres and Alex Lantier
15 September 2010
Back
to screen version
சமீபத்திய வாரங்களில், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தொடர்ச்சியான தீவிர ஜனநாயக-எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இவற்றுள் ரோமாக்களைத் துன்புறுத்தி நாடு கடத்துதல், இளம் “குற்றவாளிகளின்” பெற்றோர்கள் மீது விசாரணை நடத்துதல், குடியேறியவர்களுக்குப் பிரெஞ்சு குடியுரிமையை மறுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டமிடப்பட்டுள்ள சட்டம் ஆகியவைகள் அடங்கியுள்ளன.
இக்கொள்கைகள் கடந்த ஆண்டு சார்க்கோசி ஆரம்பித்த பர்க்காவைத் தடை செய்யும் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த இனவெறி கொண்ட முஸ்லிம்-எதிர்ப்பு உந்துதல், சோசலிஸ்ட் கட்சி (PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவற்றின் ஒப்புதலுடன் ஆரம்பிக்கப்பட்டு மத உரிமைகள் மற்றும் சட்டரீதியான ஆட்சிக்கு எதிராக அரசாங்கத்தின் வன்முறைத் திருப்பம் ஒன்றையும் ஆரம்பித்தது.
அனைத்துப் பிரெஞ்சு அரசியல் கட்சிகளும், “இடது” என்று அழைக்கப்படுபவை உட்பட, இந்த ஜனநாயக-எதிர்ப்புத் தாக்குதலுக்குப் பெரும் பொறுப்புக் கொண்டவை. பல விதங்களிலும் இதற்கு அவைகள் ஆதரவைக் கொடுத்துள்ளன.
புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியும் (NPA) அதன் சொந்தவழியில் இதில் பங்கு பெற்றது. சட்டம் பற்றிச் சில மேம்போக்கான குறைகளைக்கூறும் கட்டாயத்திற்கு உட்பட்டாலும் பர்க்கா-எதிர்ப்புப் பிரச்சாரத்தில் உள்ள அடிப்படை மூலக்கருத்தை ஏற்று, சார்க்கோசியின் இனவெறி, சட்டம்-ஒழுங்குக் கொள்கைகளுக்கு ஒரு கொள்கை ரீதியான எதிர்ப்பை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
சார்க்கோசியின் பர்க்கா மற்றும் தேசிய அடையாளம் பற்றிய உரை ஜூன் 2009ல் நிகழ்த்தபட்டது. NPA வலைத் தளத்திற்கு ஆண்டு இறுதி வரை இந்த விடயத்தைப் பற்றிக்கூற அவகாசம் தேவைப்பட்டது. இரு கட்டுரைகளை மட்டுமே வெளியிட்டது. இவை தடைபற்றிய விவாதத்தில் NPA பங்கு பெறாது என்று மட்டுமே அறிவித்தன.
''தேசிய அடையாளம்: வெறுப்பூட்டும் சார்க்கோசியிசம்'' “National Identity: Nauseating Sarkozyism”என்ற தலைப்பில் டிசம்பர் 10, 2009 ல் வெளியிட்ட கட்டுரையில் NPA எழுதியது: “தேர்தல் தந்திரோபாயத்திற்கும் அப்பால், ‘தேசிய அடையாளம் குறித்த பெரும் விவாதம்’ வெட்கம் கெட்ட இனவெறி மற்றும் வெளிநாட்டவருக்கெதிரான கடும் வெறுப்பிற்குச் சான்றாக உள்ளது. “விவாதம்” என்ற போலிப் பெயரில் நடக்கும் இதில் நாம் பங்குபற்றும் பேச்சுக்கு இடமில்லை.”
இந்த முட்டாள்த்தனமான அறிவிப்பானது NPA ஆனது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை பற்றிச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை என்பதை விட அதிகமாகவே அதைப்பற்றி தெரிவிக்கிறது. இக்கட்சி அரசாங்கம் இனவெறிக்கு ஊக்கம் கொடுக்கிறது என்று கூறியபின்னர் NPA தான் அது ஒரு போலி விளையாட்டு என அற்பமாக கருதும் பிரச்சாரத்திற்கு எதிராக தலையிடாது என்று அறிவித்துள்ளது.
2009 ல் மற்றொரு பர்க்கா பற்றிய “Internationalists and Proud of It” என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சார்க்கோசி அறிவித்த “தேசிய அடையாளம்” பற்றிய பிரச்சாரத்தை எதிர்ப்பதாக அது கூறியது. பர்க்கா-எதிர்ப்புச் சட்டத்துடன் அரசாங்கம் “தன்னுடைய நோக்கங்களுக்காக ஒரு சில நூறு பெண்களைத் திரித்துக் கூற முற்பட்டு, அவர்களை அரக்கத்தனமாக சித்தரித்து, அவர்களை வீட்டிற்குள் முடங்கியிருக்குமாறு செய்துள்ளது. இதற்கு மாறானதுதான் அவர்கள் வெளியே வர அனுமதிக்கத் தேவையான சமூக மைய ஆதாரங்கள், இலவசக் கல்விக்கான வாய்ப்பு போன்றவற்றை அளிப்பதுப்படும். அதாவது சமூக மைய ஆதாரங்கள், இலவசக் கல்விக்கான வாய்ப்பு போன்றவற்றை அளிப்பது….”
NPA யின் “சர்வதேசியவாதம்” எனப்படுவது முற்றிலும் உள்ளடக்கம் எதுவுமற்றதாகும். பிரெஞ்சு முதலாளித்துவ அரசுக்கு தெளிவற்ற சமூகக் கொள்கைகளை பரிந்துரைப்பதுடன் தன்னை மட்டுப்படுத்திக்கொள்கிறது. உத்தியோகபூர்வ ”இடது”களான கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் திறமையுடன் செயல்படும் PS மற்றும் PCF என்பவற்றின் அரசோ அவற்றை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சாரத்திற்கு அதன் எதிர்ப்பு இல்லாததை மூடிமறைக்கும் வகையில் இது ஒரு பெண்ணியல்வாதக் நிலைப்பாட்டை எடுத்தது. மே 19, 2010ல் ''முழு முக்காடு: ஒரு திறமையற்ற வார்த்தைஜால சட்டம்'' (“The Full Veil: An Inefficient an Demagogic Law’) என்ற தலைப்பில் NPA எழுதியது: “பர்க்காவும் நிக்காப்பும் இப்பொழுது ஒரு அடிப்படைவாதிகளின் வேலைத்திட்டத்தின் இதயத்தானத்தில் உள்ளவை. இது எப்படியும் எமது மதிப்புகளுக்கு முரணானவை. ஆனால் பெண்கள் தங்களை விடுதலை செய்துகொள்வதற்கு தமது விருப்பப்படி தமது உடலை பயன்படுத்திக்கொள்ள பெண்கள் ஒன்றாக சேர்ந்து போராடுவதே முதலும் முற்றிலுமான ஒன்றாகும்''.
இச்சூத்திரம் பரந்த அளவில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் இணைந்து போகிறது; பிந்தையது அதன் பர்க்கா எதிர்ப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில், பெண்கள் தங்கள் தனிச் சுதந்திரத்தை செலுத்தும் உரிமையைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. NPA அத்துடன் ஒரு பரிந்துரையை, பெண்கள் “ஒன்றாக” ப் போராட வேண்டும் என்று சேர்த்துக் கொள்கிறது-NPA யின் மந்திரம் முக்கியமாக அதன் வர்க்க உள்ளடக்கம் இல்லாத் தன்மையினால் வெளிப்படுகிறது.
அரசாங்கத்தின் இனவெறிப் பிரச்சினை எழுப்பும் வர்க்கப் பிரச்சினைகள் குறித்து NPA கருத்துக் கூற முடியாதுள்ளது. பிரெஞ்சு அரசாங்கத்தில் இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகள், குறிப்பாக பல பெண்களும் பர்க்கா அணியும் ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஆக்கிரமிப்பில் இது கொண்டுள்ள பங்கு அல்லது ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் பொருளாதார நெருக்கடியின் போது கடந்தகால சமூக தேட்டங்கள் மீது நடத்திய நேரடித் தாக்குதல்கள் போன்றவற்றை செயல்படுத்த அவை முஸ்லிம் எதிர்ப்பு இனவெறி வாதத்தை தொழிலாளர்களை பிரிப்பதற்கான ஒரு வழிவகை என்று ஊக்கம் அளிக்கின்றனர்.
இந்த அடிப்படைப் பிரச்சினைகளில் NPA ஆனது ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டுடன்தான் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
பர்க்கா-எதிர்ப்புப் பிரச்சாரத்தின் தொடக்கம் ஈரானில் பசுமைப் புரட்சி என்று கூறப்பட்டதுடன் இணைந்த நேரத்தில் வந்தது. ஈரானில் பசுமை புரட்சியானது அமெரிக்க, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆதரவைப் பெற்று, ஜூன் 2009ல் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட் வெற்றி பெற்றதை மாற்ற முற்பட்டது. “பசுமை” புரட்சியை ஆதரித்த விதத்தில், NPA தன்னை வாஷிங்டன் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகத்தின் பக்கம் இருத்திக் கொண்டது, ஈரானிய வாக்காளர்களின் பெரும்பான்மைக்கு எதிராகவும் இருத்திக் கொண்டது.
PS மற்றும் PCF ஆகியவற்றுடன்-2001ல் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் பங்கு பெறுவதற்கு பிரான்ஸ் அதன் துருப்புக்களை அனுப்பியபோது அரசாங்கத்தில் பங்குகொண்ட கட்சிகள்-- பேச்சுவார்த்தைகளுக்குத் தயாரித்துக் கொண்டிருந்த அதன் தேர்தல் உடன்பாடுகள் மூலம், NPA அமைதியாகத் தனக்கு ஆப்கானியப் போர் குறித்துக் கொள்கை சார்ந்த எதிர்ப்பு ஏதும் இல்லை என்பதைக் காட்டியுள்ளது.
உண்மையில், பிரான்சில் NPA யினால் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பப்லோவாதப் போக்கானது போரை ஆதரிக்கிறது. இதற்கு மிகவும் வெளிப்படையான உதாரணம் NPA உடைய இத்தாலிய ஒத்துழைப்பாளர்கள் சினிஸ்ட்ரா கிரிடிகாவைச் சுற்றிக் கூடியதுதான். அவர் 2007ல் ஆப்கானியப் போருக்கு ஆதரவு கொடுத்து வந்த ரோமானோ ப்ரோடி அரசாங்கத்திற்கு நம்பிக்கைத் தீர்மானத்தில் ஆதரவளித்து வாக்குப் போட்டார்.
அதே நேரத்தில் NPA செப்டம்பர் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸின் திவாலுக்குப் பின்னர் பொருளாதாரப் புத்துயிர்ப்பிற்காக ஏற்கப்பட்ட திட்டத்திற்கு தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் பிரச்சாரத்தையும் முடிவு செய்தது. PC மற்றும் PCF, இன்னும் முதலாளித்துவத்தின் ஏனைய “இடது” கட்சிகளுடன் தன்னைச் சேர்த்துக் கொண்ட முறையில், அது PS ன் தேசியச் செயலாளர் மார்ட்டின் ஒப்ரி முன்வைத்த பொருளாதார மீட்புத் திட்டத்திற்கு மறைமுகமான ஆதரவைக் கொடுத்தது.
விளைவுகள் தொழிலாளர்களுக்கு பேரழிவைக் கொடுத்தன. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ “இடது” கட்சிகளை தொழிலாளர்களின் சீற்றத்தை திசை திருப்பவும் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் வங்கிகளை பிணை எடுப்பிற்கான “மீட்புத் திட்டம்” கொள்கை அளவில் ஏற்பதற்கும் எலிசே நம்பியிருந்தது.
மீட்புத் திட்டத்தால் பேரழிவிற்கு உட்பட்டிருந்த கார்த் தொழில் பிரிவில் குவிப்புக் காட்டியிருந்த தொழிலாளர்களின் போராட்டங்களை பொறுத்தவரை NPA பங்கு பெறாமல் நின்றுவிட்டது. அதன் செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெஸன்சநோ “NPA, பிரான்சில் பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்ட 15 நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சேர்த்து “ஒரு NPA முறையீட்டை” கொடுக்க முடியும். ஆனால் NPA பொதுவாக அப்படி செயற்படுவதில்லை.” என்று விளக்கினார்.
வேறுவிதமாகக் கூறினால், NPA ஆனது தொழிற்சங்கங்கள் செயல்படுத்திய காட்டிக் கொடுப்பிற்கு எந்த எதிர்ப்பையும் முன்வைக்கவில்லை.
2009 இலையுதிர்காலத்தில், NPA ஆனது பர்க்கா மற்றும் தேசிய அடையாள விவாதத்தில் பங்கு பெற மறுத்த நேரத்தில், அது மார்ச் 2010 பிராந்தியத் தேர்தல்களின் வடிவமைப்பிற்குள், பர்க்கா-எதிர்ப்பு விவாதத்தைத் தொடக்கிய கட்சிகளுடன் உடன்பாடு காண பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்றது. ஒவ்வொரு பிராந்தியமாக NPA இடது முன்னணியுடன் பேச்சுக்களை நடத்தியது. அது PCF மற்றும் Jean-Luc-Melenchon உடைய இடது கட்சியில் இருக்கும் முன்னாள் PS உறுப்பினர்களுடன் குழுவாக இருந்தது. PCF Andre Gerin மற்றும் PS உடன் பர்க்கா பற்றிய சட்டத்திற்கான குழுவில் பங்கு பெற்றிருந்தது என்ற உண்மையையும் மீறி இருந்த நிலையாகும். இது பிற்போக்கு நடவடிக்கைக்கு ஒரு “இடது” மறைப்பைக் கொடுப்பது ஆகும்.
NPA இறுதியில் 15 பிராந்தியங்களில் தன்னுடைய வேட்பாளர் பட்டியலைக் கொடுத்தது. மூன்று பகுதிகளில் இடது முன்னணியுடன் கூட்டாகப் பிரச்சாரம் நடத்தியது, 15 பிராந்தியங்களில் மூன்றில் இடது கட்சியுடன் பிணைந்தது. அவற்றில் PS மற்றும் PCF ஒரு கூட்டாக நின்றன.
ஏனைய “இடதில்” இருந்து அதிக இடைவெளி இல்லை என்று நிரூபித்த பின்னர், NPA சார்க்கோசியின் முஸ்லிம்-எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு என்று போலியாகக் காட்டும் வகையில் ஒரு அடையளத்தை கொடுத்தது. தென் பிரான்ஸில் Vaucluse பகுதியில் தலை மறைப்பு அணிந்த ஒரு முஸ்லிம் வேட்பாளர் இல்ஹம் மௌசைட்டை வேட்பாளராக நிறுத்தியது. இந்த முடிவு கட்சிக்குள்ளே பெரும் விவாதத்தைத் தூண்டியதுடன், மௌசைட் ஒரு வேட்பாளராக நிற்கும் உரிமைக்கு எதிராக குரோதம் நிறைந்த செய்தி ஊடகப் பிரச்சாரத்தையும் கண்டது.
மௌசைட்டின் வேட்பு மனு பிரான்ஸில் பெண்கள் பர்க்கா அணியும் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. பெண்ணியல்வாதக் கருத்துக்களான அரசாங்கம் அதன் பிற்போக்குத்தன பர்க்கா-எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு ஒரு போலியான முற்போக்கு முகப்பைக் கொடுக்கிறது என்ற கருத்தைத்தான் மீண்டும் மீண்டும் அவர் கூறினார்.
உண்மையில் NPA பெண்கள் பர்க்கா அணிவதை வெறித்தனமாகக் கண்டித்திருந்தது. NPA உறுப்பினரான, பாரிஸ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் Josette Trat, பர்க்காவை பெண்கள் அணிவது பற்றி எழுதினார்: “இத்தகைய இறப்புப் பறவைகளைக் காணும்போது நாம் அதிர்ச்சி அடையலாம், கொதித்து எழலாம். முழு மறைப்பு அங்கி மனித கௌரவத்திற்கு தாக்குதல் கொடுக்கும் என்று நம்பலாம் (நாம் நம்புகிறோம்). ஆடவருக்கும் பெண்டிருக்கும் இடையே சமத்துவம் வேண்டும் என்று நம்பலாம், இது வாழ்வின் சாதாரண செயல் என்று எடுத்துக் கொள்ளப்படக்கூடாது.” ஆயினும்கூட பர்க்கா அணிவதைத் தடை செய்யும் சட்டம் ஜனநாயக உரிமைகள் மீது ஒரு தாக்குதல் என்றுதான் ட்ராட் மதிப்பிட்டார்.
NPA க்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மார்ச் மாத பிராந்தியத் தேர்தல்களுக்குப் பின்னர், கட்சிக்குள் மௌசைடை எதிர்த்துக் குறைகூறல்கள் கிளம்பின. அவர் ஏப்ரல் மாதம் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தங்கள் வேட்பாளரையே தாக்குவது உட்பட, அனைத்து அடிப்படை அரசியல் பிரச்சினைகளிலும் ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாடுகளை ஏற்றபின், NPA அதன் “சர்வதேசியவாத” ப் பார்வையைத் தக்க வைக்கும் போலித்தனத்தில் சிறுபிள்ளைத்தன உத்திகளில் இறங்கியது.
“தேசிய அடையாளம் (2): மட்டமான பிரச்சினையில் ஐந்து தேர்ந்த விடைகள்” என்ற அறிக்கையில் NPA அதன் வாசகர்களை “பிரான்சை இழிவுபடுத்தவும்” என்று ஊக்கம் கொடுத்தது. “பிரான்சை இழிவுபடுத்துதல், அதுவும் நமக்கு நினைவுறுத்திக் கொள்ளும் வகையில் நாட்டுப்பற்று எதிர்ப்பு ஒன்றும் Brassesns, Renaud [நடைமுறை எதிர்ப்பு காட்டும் நாட்டுப் பாடகர்கள்] உடைய சொத்து அல்ல என்ற விதத்திலும், ஒரு பேச்சு சுதந்திரம், சுதந்திர உரிமையை மீண்டும் வெற்றி பெறுவதிலும், சூனிய வேட்டையின் முதல் இலக்குகளாக இருந்தும் மாறுபட்ட கருத்தைக்களைக் கொள்ளும் தைரியம் மிகுந்த ஆடவர் பெண்டிருடன் ஒற்றுமையைக் காட்டும் விதத்தில் குற்றச்சாட்டுதலுக்கு எதிரான துணிவையும் கொண்டிருப்போம்.”
இது ஒரு அயோக்கியத்தன பொய் ஆகும். நாட்டுப்பற்று எதிர்ப்பு, சர்வதேசியவாதம் அல்லது ஒரு பாசாங்குத்தன சிந்தனை உரிமை இவற்றினால் வழிநடத்தப்படுவது என்பதற்கு முற்றிலும் மாறாக, NPA பிரெஞ்சு முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு ஏற்ப தன் அரசியல் சார்பைச் சீரமைத்துள்ளது.
NPA இன் முக்கிய உறுப்பினர்களுக்கு பர்க்காத் தடைக்கு கொள்கையளவில் எதிர்ப்பு ஏதும் கிடையாது. மே 2ம் தேதி Le Parisian ல் வந்த பேட்டி ஒன்றில் அது செய்தித் தொடர்பாளர் பெஸன்சநோவை “பொது இடங்களில் மறைப்பு அங்கி அணிந்தால் 150 யூரோக்கள் அபராதம் விதிப்பது முறையானதா” என்று கேட்டது. அதற்கு பெஸன்சநோ விடையிறுத்தார்: “இதில் பிரச்சினை என்பது அபராதம் இல்லை. இதை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதுதான். பர்க்கா பெண்கள் அடக்குகிறது. ஆனால் எந்தச் சட்டமும் போதுமான திறனைக் கொண்டிருக்காது, முறையாக இருக்காது. இதில் எவர் அதிக வெற்றி பெறுவர்? வலது தீவிரவாதிகளும் மத அடிப்படைவாதிகளும்தான்.”
ஒரு சட்டத்தை அதற்கு ஆதரவு கொடுத்து அதில் இருந்து பயனடையும் அரசியல் சக்திகளில் இருந்து ஒரு சட்டத்தை பிரிப்பதாகக் கூறும் நிலைப்பாடு ஒழுங்கற்றது, பிற்போக்குத்தனமானது. இந்தப்பதில் மூலம் பெஸன்சநோ தனக்கு நவ-பாசிச சட்டத்தின் மீது கொள்கைரீதியான எதிர்ப்பு இல்லை, தந்திரோபாய எதிர்ப்புத்தான் உள்ளது என்பதை குறிப்புக் காட்டுகிறார். இதிலிருந்து பயனடைவது தேசிய முன்னணியே தவிர NPA அல்லது முதலாளித்துவ “இடதோ'' அல்ல. இது அவருடைய கட்சி, மற்றும் பிரான்சில் உள்ள அனைத்து ஸ்தாபனமயமான கட்சிகளின் ஜனநாயக-விரோத பின்வாங்கல் செய்யும் அரசியல் நிலைநோக்கை பற்றித்தான் அதிகம் தெரிவிக்கிறது. |