WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
ஐரோப்பியத் தலைவர்கள் பிரான்ஸின் ரோமா வெளியேற்றம் பற்றி விமர்சனங்களை ஒதுக்குகின்றனர்
By Alex Lantier
17 September 2010
Use
this version to print | Send
feedback
நேற்றைய ஐரோப்பிய ஒன்றிய பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஐரோப்பிய அதிகாரிகளும் அரசாங்கத் தலைவர்களும் ஐரோப்பிய நீதித்துறை ஆணையர் விவியன் ரெடிங் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஏராளமான ரோமாக்களை வெளியேற்றியது குறித்த விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளினர்.
பிரான்ஸ் ஏற்கனவே 8,000 ரோமாக்களை ருமேனியாவிற்கு திருப்பிய அனுப்பிவிட்டது. தென் கொரியாவுடன் ஒரு தடையற்ற வணிக உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்து, பாக்கிஸ்தானிய பொருட்களுக்கு காப்புவரிகளையும் தற்காலிகமாக அகற்றியபின், உச்சிமாநாடு அதன் கூட்டத்தில் பெரும்பாலும் ரோமாப் பிரச்சினை பற்றிக் கவனம்காட்டியது.
செவ்வாயன்று சார்க்கோசியின் கொள்கையை “இனவழி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறது” என்று ரெடிங் கண்டனம் தெரிவித்திருந்தார். நாஜி ஆக்கிரமிப்பின்போது பிரான்சின் விச்சி (Vichy) அரசாங்கத்தின் கொள்கையாக இருந்த ரோமாக்களை அகற்றியதுடனும் பாசிச இனவழித் தூய்மைப்படுத்துதலுடனும் இதை அவர் உட்குறிப்பாக ஒப்பிட்டதுடன், “இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா இத்தகைய நிலைமையை காணாது என்றுதான் நான் நினைத்திருந்தேன்” என்றும் கூறியிருந்தார்.
மற்ற அங்கத்துவ நாடுகளின் இதே போன்ற இனவெறிக் கொள்களைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளே அவற்றை மூடிமறைக்கும் விருப்பத்தைக் கொண்டிருக்கும் எவ்வித அரசியல் கணிப்புகள் இதைத்தூண்டியிருந்தாலும், ரெடிங்கின் அறிக்கை மில்லியன் கணக்கான மக்களில் கவலைகளைத்தான் வெளிப்படுத்தியிருந்தது.
இனவழிச் சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் பிரான்சின் முன்னைய போக்கிற்கு திரும்புதல் பாரிய அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இக்கொள்கையோ பரந்த அளவில் தொழிலாளர்களால் எதிர்க்கப்படுகிறது. பிரான்ஸ் இனவழித் தூய்மை கொள்கையை இலக்காகக் கொண்டுள்ளது என்பது ஒரு விளக்கம் பற்றிய பிரச்சினை அல்ல, அரசாங்க ஆவணங்களால் நிறுவப்பட்டுள்ள உண்மையாகும்.
பிரெஞ்சு அரசாங்கத்தின் பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி Brice Hortefeux கொடுத்திருந்த கசியவிடப்பட்ட உத்தரவிற்கு ரெடிங் விடையிறுப்பைத் தந்தார். அந்த உத்தரவு பரந்த அளவில் சுற்ற்றிக்கைக்கு விடப்பட்டிருந்தது, Le Figaro பத்திரிகையின் வலைத் தளத்திலும் பதிப்பிக்கப்பட்டிருந்தது. (பார்க்கவும்:
http://www.lefigaro.fr/assets/pdf/circulaire-hortefeux.pdf ).
“சட்டவிரோத முகாம்களை காலி செய்வதற்கான துல்லியமான இலக்குகளை குடியரசின் ஜனாதிபதி ஜூலை 28ம் தேதி நிர்ணயித்திருந்தார்: 300 முகாம்கள் அல்லது சட்டவிரோத குடியிருப்புக்கள் 3 மாதங்களில் அகற்றப்பட வேண்டும். அதில் ரோமாக்களுடையது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.” என்று அது ஆரம்பித்திருந்தது.
இத்தகைய இழிந்த ஆவணச்சான்று, ரெடிங்கின் விமர்சனங்கள் பற்றி ஐரோப்பிய தலைவர்களுக்கு நெருக்கமான பிரிவினர் காட்டிய எதிர்ப்பையும் மற்றும் அதேபோல் பின்னர் ரெடிங்கே அவற்றை ஒதுக்கியதிலும் முக்கிய சாட்சியமாகின்றது.
ரெடிங் தன் அறிக்கையை வெளியிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே ஐரோப்பிய ஆணையம் அதன் விமர்சனங்களை பின்வாங்கத் தொடங்கியது. புதனன்று ஐரோப்பிய ஆணையின் தலைவர் ஜோசே மனுவல் பரோசோ, ரெடிங் கருத்துப் பற்றி “தவறான உணர்தல்” ஏற்பட்டுள்ளது என்றார். ஆஸ்திரிய ஜனாதிபதி ஹென்ஸ் பிஷ்ஷரை சந்தித்த பின்னர், அவர், “ரெடிங் இரண்டாம் உலகப் போரின்போது நடந்தவற்றிற்கும் தற்போதைய காலத்திற்கும் இடையே ஒரு சமாந்தரமான தன்மையை நிறுவ விரும்பவில்லை” என்றார்.
புதனன்று “பிரச்சினையில் இருந்து கவனத்தை உறுதியாகத் திருப்பும் விளக்கங்கள் பற்றித் தான் வருந்துவதாக” ரெடிங் கூறினார். எவ்விதத்திலும் “தான் இரண்டாம் உலகப் போர் மற்றும் இன்றைய பிரெஞ்சு அரசாங்கத்தின் செயல்களுக்கு இடையே சமாந்தரமான தன்மையை நிறுவ முற்படவில்லை” என்றும் சேர்த்துக் கொண்டார்.
நேற்றைய உச்சிமாநாட்டில், சார்க்கோசி தான் வெளியேற்றங்களை தொடர இருப்பதாக தன் உரையில் அறிவித்தார், “சட்டவிரோத முகாம்களை அங்கு எவர் இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து அகற்றுவோம்.” என்று அவர் கூறினார்.
மற்ற ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்து தான் ஆதரவைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டு, “நாடுகள், அரசாங்கங்களின் தலைவர்கள் மொத்தமாக ஒருவர் இப்படிப்பேசியது ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது, அதுவும் நம் சக நாட்டினர்களை அனைவரையும் ஆழ்ந்து புண்படுத்தும் விதத்தில் வரலாற்றுக் குறிப்புக்களைக் கூறியிருப்பது” என்றார்.
புதனன்று ஆரம்பத்தில் சார்க்கோசி எதிர்கொண்டவிதம் இன்னும் கூடுதல் ஆத்திரமூட்டும் தன்மையைக் கொண்டிருந்தது, ரோமாக்களை ரெடிங்கின் தாய்நாடான லுக்சம்பேர்க்கிற்கு கடத்தும் திட்டத்தை முன்வைத்தது. ஆளும் கன்சர்வேடிவ் UMP கட்சியின் செனட்டர் பெர்நார்ட் சிடோ கருத்துப்படி சார்க்கோசி “இந்த விடயத்தில் பிரான்ஸ் வெட்கப்படுவதற்கு ஒன்றும் செய்யவில்லை, ரோமாக்களை எடுத்துக்கொள்ள லுக்சம்பேர்க் விரும்பினால், எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறியதாகத் தெரிகிறது.
ஐரோப்பிய விவகாரங்களுக்கு பிரான்சின் இளநிலை மந்திரியான Pierre Lellouche ரெடிங்கின் கருத்துக்கள் “ஐரோப்பாவை நிறுவியவற்றுள் ஒன்று, ஒரு பெரிய நாட்டைப் பற்றிக் கூறுவது உகந்தது அல்ல” என்றார். ஒரு வானொலிப் பேட்டியில் அவர் “2010 பிரான்ஸை விச்சியின் ஆட்சிப் பிரான்ஸுடன் ஒப்பிடுவது முற்றிலும் ஏற்கத் தக்கது அல்ல.” என்றார்.
மற்ற ஐரோப்பிய அரசாங்கங்களும் ரெடிங்கின் கருத்துக்களை ஒதுக்கின. ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், “திருமதி ரெடிங்கின் தொனி, எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கொடுத்த வரலாற்று ஒப்புமை, மிகவும் பொருத்தமற்றதாகும்” என்றார்.
ஜேர்மனிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஷ்ரெபான் ஷைபேர்ட், “இனவழிச் சிறுபான்மையினரிடம் பாகுபாடு காட்டப்படுவது” அனுமதிக்கப்படுவது இல்லை என்றாலும், ரெடிங் கொடுத்த அறிக்கைகள் போன்றவை, “ஒழுங்கிற்குட்பட்ட தொனியில் இருந்தால்தான் இன்னும் பயனுடையதாக இருக்கும்” என்றார்.
சார்க்கோசிக்கு மிக வலுவான ஆதரவு இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியிடம் இருந்து வந்தது; “நான் ஐரோப்பாவில், G8ல், G20ல் நிக்கோலோ சார்க்கோசிக்கு ஆதரவு தருகிறேன்” என்ற தலைப்பில் Le Figaro விற்கு ஒரு முழுப்பக்கப் பேட்டியை அவர் கொடுத்திருந்தார். “பொது அறிக்கைகளைக் கொடுத்திருப்பதற்கு முன்னதாக திருமதி ரெடிங் இப்பொருள் பற்றி பிரெஞ்சுத் தலைவர்களிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
இத்தாலியின் நீண்ட கடலோரப் பகுதிகள் “திருட்டுத்தனமான குடியேறல்களுக்கு” குறிப்பிடத்தக்க அச்சறுத்தலை கொண்டுள்ளன என்றும் பிரான்ஸுடன் சேர்ந்து ஐரோப்பாவில் கடுமையான குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தரத் தான் விரும்புவதாகவும் பெர்லுஸ்கோனி சேர்த்துக் கொண்டார். “பிரான்ஸும் இத்தாலியும் இணைந்து செயல்படுவது ஐரோப்பாவிற்கு ஒரு விழிப்பு கொடுக்கும், பிரச்சினையை ஒரு பொதுக் கொள்கை மூலம் சமாளிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் விளக்கினார்.
ஒரு பரந்த பிரெஞ்சு-இத்தாலிய கூட்டுழைப்பிற்கான வாய்ப்பையும் பெர்லுஸ்கோனி வெளிப்படுத்தினார். பிரான்ஸ் நிபுணத்துவம் பெற்றுள்ள அணுசக்தி ஆற்றல் “எங்கள் உற்பத்திச் செலவுகளை 30 சதவிகிதம்” குறைக்கும் என்றார். “பிரான்சிற்கும் இத்தாலிக்கும் இடையே நல்ல உறவுகள் இருப்பதுதான் கிரேக்கத்திற்கு ஐரோப்பிய பிணை எடுப்பு ஏற்கப்பட்டதை செய்ய முடிந்தது” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். இப்பிரச்சினைகள் பாரிசில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிராங்கோ-இத்தாலி உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டன. (பார்க்கவும்
“Franco-Italian summit makes strategic deals, calls for bailout of Greece ”)
இஸ்ரேலுக்கு ஆதரவு, ஈரானிடத்தில் இருப்பாதாகக் கூறப்படும் அணுசக்தித் திட்டத்திற்கு எதிரான பரந்த பொருளாதாரத் தடைகளை விரைவுபடுத்துவதில் பிரெஞ்சு-இத்தாலிய ஒற்றுமைக்கு ஆதரவு ஆகியவற்றை வெளியிட்ட விதத்தில் பெர்லுஸ்கோனி பேட்டியை முடித்துள்ளார்.
நாஜி-விச்சி சகாப்தத்துடன் சமாந்தரமான தன்மை இல்லை என்று முக்கிய அரசியல்வாதிகள் கூறுவது அப்பட்டமான நேர்மையற்ற, தவறான கருத்துக்கள் ஆகும். இரு சகாப்தங்களுக்கு இடையே உள்ள வெளிப்படையான சமாந்தரமானதன்மை தற்போதைய வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பைத் தூண்டும் என்னும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் கவலைகளைத்தான் அவை பிரதிபலிக்கின்றன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் போருக்குப்பிந்தைய கால அழுகிய தன்மையை இவை வெளிப்படுத்தும் என்றும் அவை அஞ்சுகின்றன. குறிப்பாக மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவம் நாஜிக்களுடன் ஒத்துழைத்ததில் சூழ்ந்துள்ள தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகள் பற்றி.
இனவழி இலக்கு வைத்து வெளியேற்றும் சார்க்கோசியின் கொள்கை, முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வுகளை தூண்டிவிடுதல் என்று 1930களுக்குப் பின்னர் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே நடத்தப்படுவது தவிர்க்கமுடியாமல் பாஸிஸ்ட்டுக்கள் வெளிநாட்டவர்களையும் யூதர்களையும் 1920,1930 களில் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குப் பலிகடாங்கள் ஆக்கியதைத்தான் நினைவுபடுத்துகிறது. அது இறுதியில் ஏராளமான யூதர்கள், ரோமாக்கள், மில்லியன் கணக்கான மற்றவர்களை படுகொலைக்கு வகை செய்தது.
பிரெஞ்சு ஜனாதிபதியின் பர்க்கா தடைக்கு வந்துள்ள எதிர்ப்பை மௌனப்படுத்தும் வகையில் விச்சி காலத்திற்குப்பின் பயன்படுத்தபடாத கொள்கையான குடியுரிமை பெற்றுள்ளவர்களுக்கு குடியுரிமை இரத்து செய்யப்படும் என்ற அச்சுறுத்தல் 1940 களுக்கு இணையாக உள்ளது என்று முக்கியமான அரசியல்வாதிகள் மற்றவர்களிடம் இருந்து பகிரங்கமான விரோதப் போக்கையும் பொது அறிக்கைகளையும் தூண்டியுள்ளது. CNRS, National Centre for Scientific Reseasrch உடைய தலைவர் பாட்ரிக் வீல் பிரெஞ்சு தொலைக்காட்சி TF1 இடம் குடியுரிமை அகற்றுவதற்கான சட்டத்தை இயற்றுதல் என்பது “அணுவாயுத விருப்பம் போல்” என்றார். இதை விளக்குகையில், “வரலாற்றளவில் இது போர்க்காலத்தில்தான் செய்யப்படும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியுரிமைப் பிரச்சினை பெரும் எச்சரிக்கையுடன்தான் கையாளப்படுகிறது” என்றார்.
இப்பிரச்சினை செய்தி ஊடகத்திலும் விவாதிக்கப்பட்டது. ஜூலை 31ம் தேதி பிரான்சின் முக்கிய ஏடான Le Monde குடியுரிமை அகற்றுதல் பற்றிய சார்க்கோசியின் திட்டங்கள் பற்றிய குறைகூறல்களை மேற்கோளிட்டு விளக்கியது: “பிரான்சில், ஜூலை 22, 1940ல், 1927ல் இருந்து குடியுரிமை கொடுக்கப்பட்ட 50,000 பேர் உரிமையை பரிசீலிக்க ஆணையம் ஒன்றை விச்சி அரசாங்கம் தோற்றுவித்தது. கிட்டத்தட்ட 15,000 பேர், 40% யூத இனத்தவர், ''கடந்த காலத் தவறு சரி செய்யப்படுவதன்” பெயரில் தங்கள் குடியுரிமைகளை இழந்தனர்.”
நாஜிக்களுடன் ஒத்துழைத்த காலம் பற்றி விவாதிக்க இது அனுமதிக்கவில்லை என்றாலும், பிரெஞ்சு அரசியல் நடைமுறை பிரச்சினை மீண்டும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பற்றி கவலை கொண்டு, சில நேரம் அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியுள்ளது. சமீபத்தில் பிரெஞ்சு செய்தி ஊடகம் தொழில்துறை மந்திரி எரிக் வோர்த் இவருடைய ஓய்வூதியக்குறைப்பு சட்டத்தைக் குறைகூறிய தேசிய சட்டமன்றப் பிரதிநிதி Catherine Coutell க்கு விடையிறுக்கும் வகையில் அவரை “ஒத்துழைப்பாளர்” என்று கண்டித்தார்.
வோர்த்தோ UMP பொருளாளர் என்ற முறையில் 2007 சார்க்கோசியின் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி திரட்டும்போது பில்லியனர் லிலியன் பெத்தென்கூரிடம் இருந்து பாரிய தொகைகளைப் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு நிதிஊழல் பிரச்சாரத்தின் மையத்தில் உள்ளார். பெத்தென்கூரின் பெரும் செல்வம், வாசனைப் பொருட்கள் பெருநிறுவனம் L’Oreal உரிமையாளர் என்னும் முறையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பறிமுதல் செய்யப்படுவதில் இருந்து தப்பியது. 1930, 1940 களில் அவருடைய குடும்பம் பிரெஞ்சு ஆளும் வர்க்த்தின் பெரும்பகுதி இருந்தது போல் பாசிசத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தது. இவை அனைத்தும் பகிரங்க வரலாறு ஆகும். |