World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Two years since the collapse of Lehman Brothers

லெஹ்மன் பிரதர்ஸ் சரிவின் இரு ஆண்டுகளுக்குப் பின்

Nick Beams
15 September 2010

Back to screen version

1930 களின் பெரு மந்த நிலைக்குப் பின் மிகப் பெரிய நிதியப் பொருளாதார நெருக்கடியை தூண்டிய லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்கு இரு ஆண்டுகளுக்கு பின்னரும் உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளத்தில் உள்ள முரண்பாடுகள் எவையும் தீர்க்கப்படவில்லை. மாறாக, அவை இன்னும் கூடுதலான ஆபத்தான வடிவங்களாக உலகெங்கிலும் நெருக்கடிக்கான விலையை தொழிலாள வர்க்கம் கொடுக்க வேண்டும் என்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

லெஹ்மன் சரிவின் சில வாரங்களுள், முழு உலக நிதிய முறையும் சரிவின் விளிம்பில் நின்றது. அமெரிக்க ஜனாதிபதி தொலைக்காட்சியில் தோன்றி, “அமெரிக்க நிதிய முறையின் முக்கிய பிரிவுகள் மூடும் அபாயத்தில் உள்ளன” என்றும் அவசரகால நடவடிக்கைகள் இல்லாவிடின், “அமெரிக்க ஒரு பெரும் நிதிய பதட்டத்திற்குள் ஆழ்ந்துவிடக்கூடும்” என்றும் எச்சரித்தார். 1930 களின் ஆழமான நெருக்கடிக்குப் பின் இது போன்ற நிகழ்வு தோன்றியதில்லை.

அடுத்த மூன்று மாதங்களில் உலக வணிகம், முதலீடு, பங்குச் சந்தை விலைகள் மற்றும் தொழில்துறை உற்பத்தி ஆகியவைகள் அக்டோபர் 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவைத் தொடர்ந்து ஒத்த காலத்தில் ஏற்பட்ட சரிவை விட விரைந்து சரியத் தொடங்கின.

முழு நிதிய முறையின் கரைதல் வரலாற்றில் மிகப் பெரிய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களுக்கு பெரும் பிணை எடுத்தலின் மூலந்தான் நிறுத்தப்பட முடிந்தது. சமூக நிலைமைகளில் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு கோரிக்கையும் “பணம் இல்லை” என்ற பதிலைத்தான் பெற்றது. அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் உலகெங்கிலும் திடீரென நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை ஒதுக்க வழிவகை கண்டன. மொத்தத்தில் மீட்பு நடவடிக்கை கிட்டத்தட்ட 14 டிரில்லியன் டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; அதாவது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதிக்குச் சமம் ஆகும்.

நெருக்கடியை தோற்றுவித்த அதே அமைப்புக்களை தாங்கள் மீட்கிறோம் என்ற உண்மையை எதிர்கொண்ட சீற்றத்தினால் அரசாங்கத் தலைவர்கள் ஒருவித “இடது” தோற்றத்தை எடுத்துக் கொண்டனர். இது மீண்டும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பொறுப்பற்ற முறையில் பேரழிவைத் தோற்றுவித்திருந்த சிலவற்றில், அப்பட்டமான குற்றம் சார்ந்த தன்மையில் செயல்பட்டிருந்த வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதப்பட்டது.

வலதுசாரிப் பிரமுகர்கள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி போன்றவர்கள் முதலாளித்துவ மூர்க்கத்தன செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தனர். ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி கெவின் ருட் ஒரு 7,000 சொற்கள் கொண்ட கட்டுரையை, “புதிய தாராளவாதக் கொள்கையை” கண்டித்து எழுதி சமூக ஜனநாயகமானது முதலாளித்தவத்தை அதனிடம் இருந்தே காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உரிய அளவிற்கு குறைக்கப்படுவதற்கு பதிலாக, வங்கிகள் மீண்டும் பொறுப்பேற்றுவிட்டன. பல ஒன்றுசேர்தல்கள் மற்றும் ஒன்றிணைப்புகளுக்கு பின்னர் அமெரிக்க வங்கிகள் இன்னும் கூடுதலான கட்டுப்பாட்டைப் பொருளாதாரத்தின் மீது செலுத்துகின்றன, அதையொட்டி சரிவிற்கு முன்பைவிடக் கூடுதலாக அரசாங்கத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன.

நெருக்கடிக்கு முந்தைய மட்டங்களைவிட இலாபங்கள் இப்பொழுது அதிகமாகிவிட்டன. பல மில்லியன் டாலர் போனஸ்கள் மீண்டும் வந்துவிட்டன. உலகெங்கிலும் நிதியச் செயல்களை ஒட்டித் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை ஈட்டும் பெரும் செல்வந்தர்களின் பங்குகள் மீண்டும் ஏற்றம் பெற்றுவிட்டன—2009ல் ஒரு சிறு சரிவிற்குப் பின்.

பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு முற்றிலும் மாறாக, வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் தாங்கள் தோற்றுவித்த நெருக்கடியில் இருந்தே இலாபம் பெற்று வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் கோல்ட்மன் சாஷ்ஸினுடைய தலைமை நிர்வாகி Lloyd Blankfein அனைவரும் அறிந்த விதத்தில் தான் “கடவுளின் பணியைச் செய்வதாக” அறிவித்தார். ஆனால் வங்கிகளின் நிலைமையை இறைவனின் குறுக்கீடு ஒன்றும் காப்பாற்றவில்லை. கோல்ட்மன் சாஷ்ஸ் மற்றும் அதைப்போன்ற நிறுவனங்களின் இலாபங்கள் அதிகமானவை, அமெரிக்க பெடரல் ரிசேர்வ் கிட்டத்தட்ட பூஜ்ய வட்டிவிகித்தைக் கொடுத்ததில் இருந்து வந்தது, பின் அதைப் பயன்படுத்தி அமெரிக்க அரசாங்கக் கடன் பத்திரத்திற்கு அதிக வட்டிக்கு நிதியளித்தன.

2008 சரிவிற்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பெரும் பிணை எடுப்புச் செயற்பாடு நெருக்கடியை தீர்க்கவில்லை. இது வங்கிகள் குவித்திருந்த பயனற்ற “நச்சுச் சொத்துக்களை” முதலாளித்துவ அரசுகளுக்கு மாற்றியது. இப்பொழுது இதற்கு விலை கொடுக்கப்பட வேண்டும்…. அது நிதிய மூலதனத்தினால் அல்ல, தொழிலாள வர்க்கத்தினால். இதுதான் உலகம் முழுவதும் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பெருகிய முறையில் அவற்றைச் சுமத்த சர்வாதிகார வழிவகைகள் அபிவிருத்தியடைந்ததின் முக்கியத்துவம் ஆகும்

வங்கிகள் இலாபம் அடைந்த நிலையில், தொழிலாள வர்க்கம் இன்னும் மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் இப்பொழுது வேலையின்மையில் வாடுகின்றனர், அல்லது தகுதிக்கேற்ற வேலையில் இல்லை அல்லது தொழிலாளர் தொகுப்பில் இருந்து நீங்கியுள்ளனர். நீடித்த கால வேலையின்மை என்பது பெருமந்த நிலைக்காலத்திற்கு பின் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஒபாமா நிர்வாகம், நிதிய மூலதனத்தின் ஆணைகளின்படி நடப்பதால் சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுக்கிறது.

பிரிட்டனில் நிதிய ஊகம் மற்றும் அப்பட்ட ஏமாற்றுத்தனத்தின் முக்கிய உலக மையங்களில் ஒன்றான City of Lodon இருக்கின்ற நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் மூன்று தலைமுறைகளில் இல்லாத அளவிற்கு பொதுநலச் செலவுக்குறைப்புக்களை மிகக் கடுமையாக எதிர்கொள்ள இருக்கின்றனர். இத்தாக்குதல் 1980 களில் இழிந்த தாட்சர் அரசாங்கம் செயல்படுத்திய செலவுக் குறைப்புக்களையும் பெரிதும் விஞ்சிவிடும்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தும் 750 பில்லியன் யூரோக்களை வங்கிகள் பிணை எடுப்புக்கு கொடுத்ததை தொடர்ந்து, கடந்த மே மாதம் நிதியச் சந்தைகளானது தொழிலாள வர்க்கம் இதற்கு விலை கொடுக்க வேண்டும் என்று கோரியதை அடுத்து கடும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தி வருகின்றன. இதற்கிடையில் நிதிய நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. கடந்த மாதம் மோர்கன் ஸ்ரான்லி, தீர்ந்துவிட்டது என்பதற்கு முற்றிலும் மாறாக, அரசாங்கக் கடன் நெருக்கடி ஐரோப்பாவுடன் நின்றுவிடாமல் உலகம் முழுவதும் பரவும் என்று எச்சரித்துள்ளது. ஒரு அரசாங்கம் அதன் கடன்களை திருப்பிக் கொடுக்க முடியுமா என்பது பிரச்சினை அல்ல, எப்பொழுது என்பது தான் பிரச்சினை. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் கிரேக்கத்தின் நிதிய உறுதிப்பாடு பற்றிப் புதிய கவலைகள் எழுந்துள்ளன.

திங்களன்று Financial Times ல் வெளியிட்ட கட்டுரையில் வொல்ப்காங் முன்சௌ லெஹ்மன் சரிவிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, ஐரோப்பிய வங்கிமுறையின் “வலுவற்ற தன்மை” தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். “இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் அது பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருப்போம் என்று நான் பந்தயம் கட்டத் தயார். அதன் பொருள் நிதிய நெருக்கடி தொடர்ந்து சென்று கொண்டிருக்கும், குறைந்தது யூரோப் பகுதியிலாவது என்பது ஆகும்.”

கிழக்கில் ஜப்பானிய பொருளாதாரம் ஒரு ஆண்டு பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து மறு ஆண்டும் அதே நிலைக்குச் செல்கிறது. இதற்கு முடிவு தெரியவில்லை. அதே நேரத்தில் பொதுக்கடன் கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவிகிதம் என உயர்ந்துள்ளது.

உலக முதலாளித்துவம் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழைய உள்ளது என்றும், ஏனெனில் சீனா அதற்கு உறுதியளிக்கும் என்று கூறப்படுவதானது சீனப் பொருளாதார வளர்ச்சியே உலகப் பொருளாதாரத்தை நம்பியுள்ளது என்ற உண்மை நிலைப்பாட்டில் முரண்பாட்டிற்கு உட்படுகிறது. 1914ல் உலக முதலாளித்துவம் பெரும் முறிவைக் கண்ட பின்னர் தான், அமெரிக்க பொருளாதாரம் 1920 களில் பெரும் ஏற்றத்தைக் கொண்டது. ஆனால் ஒரு தசாப்தத்தில் அது முடிவுற்றது, ஏனெனில் உலகச் சந்தை சுமத்திய வரம்புகளுள் அது சிக்கியது.

மேலும் சீனாவின் வளர்ச்சி தொடர்ச்சியான புவிசார்-அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அது அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ளது. இம் மோதல்கள் இனி சமாதான முறையில் தீர்க்கப்பட முடியாது. முந்தைய காலத்தில் ஜேர்மனி மற்றும் ஜப்பானின் எழுச்சி எப்படி பிரிட்டன் மற்றும் அமெரிக்காவால் பொறுத்தக் கொள்ள முடியவில்லை என்ற நிலை நான்கு தசாப்தங்களுக்கு குறைவான காலத்தில் இரு உலகப் போர்களுக்கு வழிவகுத்ததோ அதுபோல் தான் இதுவும்.

உலக நிதிய நெருக்கடி வெடித்தபோது, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இது உடனடியாக இரு விளைவுகளைக் கொடுக்கும் என்று எச்சரித்தது.

முதலில் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் வர்க்க உறவுகளை மாற்றியமைக்க முற்பட்டு இன்னும் கூடுதலான வகையில் சர்வாதிகார வகை ஆட்சிக்கு வகை செய்து, இலாப முறையின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்யும். இரண்டாவதாக, ஏகாதிபத்திய சக்திகளிடையே போட்டியும், மோதல்களும் பெருகுகையில் சர்வதேச உறவுகளில் ஒரு “மறு கட்டமைப்பு” இருக்கும் என்றும் கூறியது.

இந்த எச்சரிக்கைகள் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் முழு அரசியல் மேல்கட்டுமானமும் வலதிற்கு மாறியுள்ளது. தொழிலாள வர்க்கமானது, முதலாளித்துவம் மனித குலத்தை தள்ளியுள்ள முட்டுச் சந்திலிருந்து மீட்க வழிவகுக்கும் தனது சொந்த சுயாதீன சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்து, நெருக்கடியை தன்னுடைய நலன்களின் அடித்தளத்தில் தீர்க்காத வரை இந்த நிகழ்ச்சிப்போக்கு தொடர்வதோடு விரைவாகவும் நடந்தேறும்.